90களின் பின் அந்தி –

author
0 minutes, 1 second Read
This entry is part 16 of 34 in the series 10 நவம்பர் 2013

ஜெம்சித் ஸமான்

ஒரு ஊசாட்டமும் இல்லை
என் செம் மண் தெருவை
தார் ஊற்றி கொன்றது யார்

90களின் பின் அந்தியா இது

அப்போது காகங்கள் என்றாலும்
தெருவை கலைத்துக் கொண்டிருக்கும்
ராணுவ வீரர்களின் சூ கால்கள்
தெருவின் விரை மீது
ஊன்றி ஊன்றி மிதிக்கும்

ஜீப் வண்டிகளின்
டயர் தடங்களில் நசுங்கிய
கைப் பாவைகளைக் கேட்டு
எந்தக் குழந்தை என்றாலும்
அழுது வடிந்து கொண்டிருக்கும்

முரட்டு துப்பாக்கிகளைக் கண்டு
தெரு நாய்கள் குரைத்து குரைத்து
அச்சம் எழுப்பி
தெருவெல்லாம் கதறி ஓடும்

90-91 களின் அதிகாலை வெண் பனிக்குள்
உடல் கொடுகி விழி நிமிர்ந்து
கைகள் கெஞ்ச ஒவ்வொரு மின் கம்பங்களுக்கும்
உரமாக விதைக்கப்பட்டவர்களின்
குருதி சொட்டிய பரள் மண் துகள்கள்
எங்கள் உம்மாக்களின் கண்களுக்குள்ளும்
விழுந்து கரிக்கும்

ஒரு ஊசாட்டமும் இல்லை
கைகளும் கண்களும்
கறுப்பு துணியால் கட்டபபட்டு
சும்மா கிடந்தது தெரு
மார்பில் இரும்பு துப்பாக்கிகள்
அழுந்தியிருக்கவில்லை

‘நீல’ வானத்தில் பறவைகளின்
சஞ்சாரம் அறவே இல்லை  பின் அந்தி 6.00 மணிக்கு
எங்கள் விளையாட்டு திடல்களில்
யுத்த விதை விழுந்து மண் பிளந்து
வேர் கொண்டு எழுந்த நாட்களில்
ஒன்றா இது

1999ல் பயத்தோடு விளையாடி கழித்த
முன் இரா ஒன்றில்
‘ஜஃபர் மச்சான்’ இனம் தெரியாத
இரண்டு பேரால் சுட்டு கொல்லப்பட்டார்

அவர் மெளத்தாகி கிடந்த
மஞ்சோண்ணா மர நிழல் மட்டும்தான்
அவர் மரணத்திற்கு சாட்சியாய்
இருந்தது

பின் அதையும் கதற கதற
சுட்டு கொன்றுவிட்டார்கள்

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 88 நான் பாடும் கானம் .. ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.நெய்தல் நிலத்து குறுந்தொழில்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *