அலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம்

This entry is part 26 of 46 in the series 26 ஜூன் 2011

திலகபாமா

அன்புள்ள நிஷாந்த்

நீ நலமாயில்லை அல்லது நலமாயிருப்பதாய் நம்புவதாய் எழுதிய கடிதத்திலிருந்து எனது பதில் துவங்குகின்றது. உன் எழுத்துக்கள் நடுங்குவதைக் கண்ணுற்ற நான் அதைத் தவிர்க்கவே இக்கடித்தை எழுதுகின்றேன்.
எல்லாரும் குழந்தைகளை யசோதைக்கு கண்ணன்போல் கடவுளே வாய்த்தாலும் நாகரீகத்திற்கு துல்லிய இயந்திரமாய் பழக்கிய காலத்தில் நான் உனை காடுகளை முகரவும் தூரத்து ஆபத்தில் காலடிச் சுவட்டை வாசிக்கவும் காற்றில் மிதந்து வந்த தேனின் வாசத்தைப் பற்றிக் கொண்டு பூக்களிடம் சேகரிக்கவும் கற்பித்தவள்

சிங்கங்களின் தேசம் முயல்களின் தேசம் என மற்றவர்கள் பிரித்து வைத்த காலகட்டத்தில் நெருக்கடியில் வாழ்ந்து கொண்டு ஒவ்வொன்றின் ஒவ்வொருவரின் பெறுமானமும் பெருமதிப்பும் வேறு வேறானவை அதற்கான புரிதலே வாழ்க்கை எனவும் சொல்ல முயற்சித்தவள். இன்று நீ காடுகளின் இளவரசனாய் பதினாறாம் வயதில் முடி சூடுவதை கண்டு மகிழ்ந்தவள். பால் வேறுபாடுகளற்று பழக முடிந்தவன், பால் வேறுபாடுகளோடு வாழ நேரும் சந்தர்ப்பங்களைப் போதிக்க வேண்டிய தேவை வந்த போது எனை விட நீ அதிர்ந்தாய்

ஆம் பதினாறு வயதில் மீண்டும் பள்ளியில் பெண்களோடு உனது படிப்பு காலங்கள் அமைந்த போது நான் கவலைப் படவில்லை. ஏனெனில் ஆண் பெண் வேறு பாடுகளற்று எப்பவும் நேசிக்க கற்றுத் தந்திருந்ததாக நம்பியிருந்தேன். ஆம் நீயும் அதுவரை அப்படித்தானிருந்தாய்.
உனது 12 வயது அத்தை மகன் அத்தையை பேருந்தில் இன்னொரு ஆண் பக்கத்தில் உட்காருவதை தவிர்க்கச் சொன்ன போது , நீயும் நானும் எனது நண்பர்களும் பயணிக்க நேர்ந்த சம்பவத்தை நினைவு கூறாமல் இருக்க முடியவில்லை. மூவர் அமரும் அந்த ஆட்டோவில் உன்னை எங்களிருவருக்கு இடையில் அமரச் சொன்ன போது நீ ஓர இருக்கைதான் எனக்கு வேண்டும் என்ற போது , உனது அத்தை மகன் போல சமூகம் கற்றுத் தந்த பேதங்களை பதிய விடாது இயல்பாய் இருக்கின்றாய் என்று மகிழ்ந்தேன். ஆணிடம் இருந்து விலகி இருக்கக் கற்ற போலித்தனம் இயல்பாய் இருந்து கொள்ள எனைக்கூட அனுமதிக்கவில்லையே என்று முதலில் வருத்தப் பட்டேன்.
நண்பர் என்ற அடிப்படையிலிருந்து எனையுமறியாமல் ஆண் நண்பர் என மனம் வாசித்துக் கொண்டிருந்ததை கடக்க உதவிய தருணங்கள் அவை.
ஆனால் முதல் பருவத் தேர்வு முடிந்து நீ விடுமுறைக்கு என்னோடு வந்து இருந்த போது உன் மனம் என்னோடு சொல்லாமல் சில சந்தோசங்களை அனுபவித்துக் கொண்டிருந்ததை உணர்ந்தேன்.
நீ எப்பவும் தனிமை விரும்பினாய்
பேசுவதைக் குறைத்துக் கொண்டாய்
நான் பார்க்காத நேரத்தில் சிரித்தும் மகிழ்ந்தும் கொண்டாய்
(பார்க்கவில்லை என நம்பிய நேரத்தில்
தடாலென்று ஒரு பொழுது உனது மகிழ் உலகத்திலிருந்து மீண்டு வந்தாய்.
நீ ஒரு பெண்ணின் புன்னகைகளை சேகரிக்கத் தொடங்கிய போது எனது அம்மாவும் தெரு முக்கில் நான் பார்க்கக் காத்திருந்த வாலிபனும் நினைவில் வராமல் இல்லை.
வந்த போது உனக்குக் கடிதம் எழுதினேன். புன்னகைகளை பத்திரப் படுத்திக் கொள் அதன் உற்சாகம் உனக்கு படிக் கட்டாக இருக்கட்டும் என்று.

சொல்ல மறந்தும் மறுத்தும் போன ஒன்றுண்டு. இப்புன்னகைகள் வெயிலும் மழையும் சந்திக்கின்ற போது வந்து போகின்ற வானவில். வானவில் என்றதும் மறைந்து விடுமோ என்று கவலைப் படாதே. வாழ்வில் எல்லா சம்பவங்களும் உணர்வுகளும் வானவில் தான். அதை தரிசிப்பவன் பாக்கிய சாலி. நீ பாக்கியசாலி பலபேர் அதை பார்ப்பதே இல்லை அவர்களின் அவசர நெருக்கடியில் தரை பார்த்தே நடந்து போய் விடுகின்றனர். சிலர் தூறுகின்ற மழையில் நனையப் பயந்து ஒதுங்கி விடுகின்றனர். சிலர் அடிக்கின்ற வெயிலைக் குறை சொல்லிய படியே கடந்து போய் விடுகின்றனர். காட்டின் அரூபச் சுவைக்கு பழக்கப் பட்ட நீதான் வானவில். வண்ணம் தோன்றிய வினாடியில் மழை வெயில் சூழல் எல்லாம் தாண்டி உணர்ந்து கொண்டாய் புன்னகையை அதன் சுகத்தை, அது உனக்குள் செய்யும் மாய வித்தையை
நானும் அதே புன்னகைகளை சேகரித்திருக்கின்றேன். உனது ஆச்சி வீட்டில் எனக்கென்று இருந்திருந்த இன்றும் இருக்கின்ற மர அலமாரியில் அதன் ஈரச் சுவடுகளை நீ உணரலாம்
ஆனால் எனது புன்னகைகள் தவறுகளாகப் பார்க்கப் பட்டன. எனது நீள கூந்தலுக்குள்ளும் செருகிய தாவணிக்குள்ளும் புதைத்து வைக்க நிர்பந்திக்கப் பட்டேன். நானோ தடைகள் வருகின்ற போது கடந்து கொண்டே இருப்பேன்.ஆண் உடைந்து விடுவான் என நம்பியதால் நேசம் விளைவித்தவனிடம் ஆசை விளைவித்து விடக் கூடாது என நானே பலமுறை புதைந்து கொண்டேன்.
அதனால்தான் நீ புண்னகைகளை சேகரித்த போது மகிழ்ந்தேன். நுண்ணுணர்வு கொண்டவன் என்று.
அரூபமாய் இருந்த உணர்வுகளை , நண்பனாய் பெண்ணோடும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றும், ஆணாக எதிர்பார்த்து உடையக் கூடாதென்றும் உணர்த்தக் கடமைப் பட்டுக் கடிதம் எழுதினேன்.நீயோ என் கடித்திற்கு முன்பாகவே பதில் எழுதி வைத்திருந்தாய்.
சரி உன்னோட கேள்வி பால்ய கால புன்னகைகளை அம்மா என்னசெய்தாள் என்று

வாழ்க்கை என்பது நான் ஆசைப் பட்டது என்பது மட்டுமல்ல என் எதிராளி ஆசைப்படுவதும் நிராகரிப்பதும் கூடத்தான். என் எதிராளியின் பலமும் பலவீனமும் கூடத்தான் . நான் சேகரித்த புன்னகையின் சுகம் என் எதிராளியின் பலவீனங்களை குறை சொல்ல விடவே இல்லை. ஆனால் பலங்களை மட்டும் பலன்களாக அடையவே எல்லாரும் விரும்புகின்றனர். என் குடும்பமும் கூட
அவர்கள் ஆணாக எப்பவும் என்னிடம் எதிர்பார்க்கும் போதும் நான் பெண்ணாக முதன் முதல் அடையாளம் கண்ட வானவில் தந்த புன்னகையை எனைச் சுற்றிய அரணாக்கிக் கொண்டேன்.
நினைவு தெரிந்த நாளிலிருந்து காடுகளிடையே வளர்ந்தவள் முகம் பிரதி பலிக்கும் கண்னாடிச் சன்னலும் பயிற்றுவிக்கப் பட்ட முட்டாள்களின் நகரத்திலும் வாழ நேர்ந்ததை அனுபவமாகவே எடுத்துக் கொள்ள புன்னகைகள் கற்றுக் கொடுத்தது.
உன் பள்ளித் தோழிகள் இருவரை இரு வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்த சம்பவம் நினைவில் வருகின்றது.
பொருட் காட்சியில் சந்தித்த உனது ஆரம்ப கால பள்ளித் தோழியுடன் நீயும் நானும் அணுகிய போது அவள் அம்மாவின் கண்களில் என் தாயின் கலவரத்தைப் பார்த்தேன் பாவமாயிருந்தது.
அதுவரை அண்ணன்களின் அருகாமையையே தவிர்க்கப் போதித்தபடி இருந்த என் அம்மா முதன் முதலாய் ஒரு சாவு வீட்டில் வந்திருந்த மாமா பையனிடமிருந்து எனை ஒளிக்கப் பாடுபட்டது இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகின்றது. இயல்பாகப் பழகியிருந்தால் சாதாரணமாக முடிந்து விட்டிருக்கக் கூடிய விசயம், என் புன்னகைகளை சேகரிப்பவனாய் அவனை மாற்றியதையும் உணர்ந்திருந்தேன்.என் அம்மாவின் தவிப்பு உணர்ந்து , அவன் உணர்வை புரியாதவளாய் கடந்து போய்க் கொண்டே இருந்தேன்.ஆனால் நானும் என் மடியில் புன்னகைகளை ஒளித்திருந்தேன் என்பதே உண்மை
என் அம்மாவின் அன்றைய தவிப்பு உனது தோழியின் தாயிடமும் கண்ட போது உனக்கு புரிய வைக்க முடியுமென்று நம்பி நான் உனது பழைய மாணவர்களை சந்திக்க பள்ளி போவதை தள்ளிப் போட்டேன்
என் அம்மா எனை ஒளித்ததும் நான் உனை தடுத்ததும் ஒன்றல்ல என்று நீ புரிவாய் என்று நம்புகின்றேன்.
இன்னுமொரு சம்பவம் என் தவிர்த்தலை இயல்பு என புரிய வைக்கும்
தற்போதைய பள்ளித் தோழியை அவரது தந்தையுடன் நாம் உணவு விடுதியில் சந்தித்த போது நான் உனை மேசையில் உடன் அமர அழைத்தேன். நீ மறுத்து விட்டாய். . நீ மறுத்து வெளியே ஓடிப் போனாய். உன் நண்பர்கள் என காரணம் சொன்னாய் இணைந்து உணவு விடுதியில் அமர்ந்திருப்பதை உனது நண்பர்கள் கேலி செய்யக் கூடும் உனை கூசச் செய்யும் விதமாக எனப் புரிந்து கொண்டேன். பேதங்களற்று உணரத் தொடங்கி விட்ட நீ பேதங்களோடு வாழ்கின்ற உலகத்திற்கு முன்னால் எப்படி நகர வேண்டும் என்றும் உணர்ந்து கொண்டாய்
சரி மற்றவர்களை விடுவோம் நம் இருவருக்கிடையில் வருவோம்
நீ தனிமையை விரும்பிய காலத்தில் உன் புன்னகைக்கு காரணமானவள் பற்றி உன் இயல்பான பேச்சிலேயே புரிந்து கொண்டேன். ஆனால் நீ எனக்கு சொன்னாய் இது உனது கப்போர்டு அதை திறக்க வேண்டாம் என்று. உனது அந்தரங்கங்களை புரிந்தேன்( புரிந்து கொள்ள முயன்றேன்) நிஷா. நீ எனை நண்பனாய் உணர்ந்த போதும் உனக்கென்று அந்தரங்கம் இருக்குமென்று நம்பினேன். அதில் அத்து மீறி நுழைய விருப்பப் படவில்லை. நீ சொல்லாமலேயே புரிந்து கொண்டேன் என்று காண்பிப்பது உனை நிர்வாண அதிர்ச்சிக்கு ஆளாக்கும் என்பதால் விலகியே உன்னோடு இருந்தேன்.ஆம் இது என்னை விட இனி உனக்கான உலகத்திற்கு நான் விடுகின்ற வெற்றிடம்.
இன்று அரூபமாய் உன்னிடம் இருக்கின்ற புன்னகைகளை ரூபமாயும் நீ சந்திக்க உன்னோடவே தூக்கிக் கொண்டு போக விரும்பினால் காடுகளிடை பழக்கப் பட்ட நீ நகரங்களிலும் வாழப் பழகனும். உன் எதிராளியின் வேர்கள் நகரத்திலிருக்கிறது நிஷா. நகரத்திற்கு வந்து காடுகளின் ஆத்ம ருசியை அவளுக்குள் ஊட்டும் போது காட்டின் குளிரோடும் நகரின் கதகதப்போடும் உன் வாழ்வு இனிக்கும்
உனது கடிதம் போல நானும் என் தந்தையிடம் எனது புன்னகை மந்திரங்களை நண்பனாய் பகிர்ந்த போது அதிர்ந்தேன்.எங்களது இருதரப்பு புன்னகை மட்டுமே என் தந்தையின் பார்வையில் போதுமானதாக இல்லை வாழ்வியல் அடிப்படையிலிருந்து அவன் நிராகரிக்கப் பட்டான். எனைப் போஷிக்க முடியாதவனெனறு நான் எப்பவும் அவனிடமிருந்து தூரமாக வைக்கப் பட்டேன். காடுகளோடு பழகிய நான் அதன் ஆத்ம ருசியை காட்டத் தயாராக இருந்த போது அதை ஏற்றுக் கொள்ளும் திட தோள் அவனிடமில்லாது போயிற்று.
என் திருமண மேடையின் எதிரில் என் புன்னகை அமர்ந்திருக்கப் பார்த்து மகிழ்ந்த போது அரூபமாகவே புன்னகைகளை தூக்கிக் கொண்டு பயணிப்பது சாத்தியமென்று விளங்கிற்று . வாழ்க்கையில் நீர் போல காற்று போல புன்னகை நிறமற்றும் உடலற்றும் இருந்ததால் எல்லா கூட்டுக்கும் அதுவானது. என் புன்னகைகளின் விதைகளை எதிரியிடமும் ஒவ்வொரு நண்பனிடமும் கூட இன்று விதைத்து விடுகின்றேன். எனை அவர்களுக்கானவளாய் ஆக்கிவிடாதபடிக்கு வியாபித்த படியே நகர மகிழ்ச்சி எனக்கும் அவர்களுக்குமானதாயிற்று.
இந்த அனுபவத்தில் உன் புன்னகைகள் முகிழ்க்கக் தொடங்கிய போது உன் தோள்களின் திடமேற்ற உன் மீது திணித்தல்களை சொடுக்கினேன். பூத்த புன்னகைகள் காயாகி கனியாகிற போது நீ விளைகிற நிலமாக இருந்தே ஆக வேண்டும். இப்பொழுது நகரத்திற்கு பழக்குகின்ற அம்மாவாக நீ அடையாளமிட்டு வருத்தப் பட்டாய்.
இல்லை உன்னை நகரத்திற்கு பழக்க முடியாது , நல்லதுமில்லை என நானறிவேன். காடு காடாகவே தொடர்ந்து இருப்பதில்லை. அது நகரமாதலே அதன் உயிர்ப்பு உன் காட்டின் விதையை நகரத்தில் விதைத்து விட சொல்லித் தருகின்றேன். என் தந்தையை இரண்டு வருடம் வெறுத்தது போல் எனை வெறுக்காதே எனது தந்தை என்னிலிருந்து புன்னகையை விலக்கினார். நான் உன் காதலைக் கையேந்த உனை வலுவாக்க முயற்சித்தேன்
இக்கடிதம் என் செய்கைகளின் மொழி சொல்லும் மௌனத்தின் வலி சொல்லும் . மகளாயிருந்தவள் மகனை வழி நடத்தும் விதம் சொல்லும்.
காடுகளைப் சுவாசிக்கப் பழகியவன் பாதையில் நிலமும் வானும் நீரும் கூட வரும், வளரும். எல்லாவற்றையும் சுவைக்கும் திறம் பெறுவாய். சமூகமோடு இணைந்து அதுவாக நீயாகாது அதை நகர்த்துவதே வாழ்வு
மகிழ்வோடு வாழ்ந்து போனான் என்பதை விட
மகிழ்வோடு வாழ வைத்தும் போனான் என்பதும் வாழ்வு

இக்கடிதம் உன்னில் என்ன மாற்றம் விளைவிக்கும் என யூகம் செய்து விட முடியவில்லை. ஏனெனில் நீ ஏற்கனவே இருக்கின்ற உலகின் படிமம் அல்ல. புதிய வார்ப்பு. புதிய அறிவியல் கண்டு பிடிப்பு போல
என் ஆத்ம முயற்சிகளின் விளைவுகள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள எப்பவும் தூங்காத கண்களுடன் அலைவுறுகின்றேன்
ஒரு நாள் உன் மடி எனை உறங்கச் செய்யுமா நிஷா
இவ்வுலகின் புதிய ஆண்மகனை தந்து விட்டேன் என்ற திருப்தியோடு

அம்மாவாகவும் இருக்க
ஆசைப்படும் நண்பன்
தீபா

Series Navigationகாகித முரண்விளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்
author

திலகபாமா

Similar Posts

Comments

  1. Avatar
    ramani says:

    Love, like truth, is a pathless path. One has to tread to make his own path. Experiments of “Bio-chemistry” in the lab of life offers myriads of patterns of fancies. Jungle may be perceived as unpolluted but it has its own laws. It is ironic that the shadow of concrete culture is fast spreading into the jungle. In the end, it is inevitable to feel that the Mother’s artistically written persuasive missive is the other side of What was cruelly forced on the mother.

Leave a Reply to ramani Cancel reply

Your email address will not be published. Required fields are marked *