சாத்தானும் சிறுமியும் _ ‘யூமா வாசுகி’யின் கவிதைத் தொகுப்பு _ வாசக நோக்கில்

This entry is part 17 of 18 in the series 14 ஜூலை 2013

 

முனைவர். கோ.   கண்ணன்,

இணைப் பேராசிரியர்,

தமிழ்த் துறை,

அரசு கலைக் கல்லூரி, தருமபுரி.


”கவிதைக்குள் ஓவிய அனுபவமும், ஓவியம் வரைதலில் கவிதை அனு பவமும் பின்னிப் பிணைந்து கிடப்பதாக இப்பொழுது என்னுள் ஒரு புரிதல்  விளைந்துள்ளது. கவிஞரை முதல்முதலில் நான் சந்தித்தபொழுது ஓவியத்தை பார்வையற்றோரால்  அனுபவித்துப் புரிந்துகொள்ள முடிவதில்லையே என்ற என் ஏக்கத்தை வெளிப்படுத்தி னேன். ஆனால் இந்த கவிதை அனுபவம் அந்த ஏக்கத்துக்கு வடிகாலாக அமைந்துள் ளதாகத் தோன்றுகிறது. என் மனத் திரையில் ஓர் கவிதை ஓவியக் காட்சி படுத்தப் பட்டதில் முழு நிறைவு ஏற்படுகிறது.


உள்ளத்தில் உள்ளது கவிதை

இன்பம் உருவெடுப்பது கவிதை

_ என கவிதைக்கு விளக்கம் தருவார் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்கள். தேசிய கவி பாரதியோ, ’

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டானால்

வாக்கினிலே ஒளி உண்டாகும்’

என மொழிவார். மேல் சுட்டிய கவிஞர்தம் கூற்றினுக்கு ஒப்ப புதுக்கவிஞர் யூமா வாசுகி அவர்களின் ‘சாத்தானும் சிறுமியும்’ என்னும் கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகளும் இதயத்தின் ஆழத்திலிருந்தே எழுதப்பட்டவை. கவிஞர் தன் எழுது கோலை  அன்பு மையால் நிரப்பி, மென் சொற்களையே தேடித் தொகுத்து, வாசக மனங்கள் நெகிழும் வண்ணம் இந்த தொகுப்பை ஆக்கியுள்ளார்.

கவிஞர் சல்மாவின் ’இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்னும் புதினத்தை வாசிப்பாளர் ஒருவரை வாசித்து உதவக் கேட்டபொழுது  அந்த வாசிப்பாளர் புதினத் தலைப்பை தப்பர்த்தம் செய்துகொண்டு வாசிக்க மறுத்ததோடு என்னிடம் கோபித்தும் கொண்டார். இந்தப் புதினத்தை வாசிக்கவே முடியாதோ என நான் வருந்திக்கொண்டிருந்த நிலை யில், என் அதிர்ஷ்டம் கவிஞர் ப. வெங்கடேசன் புதினத்தை ஒரு முறைக்கு இரு முறை வாசித்து உதவினார். சல்மாவின் புதினத்தில் காணப்படும் வார்த்தை களுக்குள் சிக்காதவாசகரை நெகிழச் செய்யும் ஏதோ ஒரு மெல்லிய சோக இழை அந்தப் புதினம் முழுக்க இழையோடுவதை வாசக நிலையில் என்னால் உணர முடிந்தது. அவ்வண் ணமே

யூமாவின் “சாத்தானும் சிறுமியும்” என்ணும் தலைப்பு ஏதோ ஒருவித மிரட்சியைத் தந்தாலும் தொகுப்பிலுள்ள அத்தனைக் கவிதைகளையும் வாசிக்கும்பொழுது ஒரு தேர்ந்த இசைக் கலைஞர்  சிவரஞ்ஜனி,  சாமா, துவஜவந்தி, ஹுஸைனி, முகாரி, பைரவி  உள்ளிட்ட ராக ஸ்வரக் கோவைகளை வயலின்கொண்டோ  புல்லாங்குழல் கொண்டோ வாசித்திட, அதனைக் கூர்ந்து கேட்கும் நுட்பமான இசை ரசிக மனம் பெறும் அனுபவ சோக இழைவை,  வலியை தம் கவிதைகள் வழியாகவே வாசக மனங்களில் இடம் பெறச் செய்கிறார் கவிஞர்.

தொகுப்பில் இடம் பெற்றுள்ள அத்தனைக் க்கவிதைகளும் குழந்தைகள் பற்றிய கவிதைகள்; சொல்லப் போனால், வாசகரையும் இழந்துவிட்ட குழந்தைமை காலத்தை நோக்கி பயணிக்கத் தூண்டும் கவிதைகள்.

தொகுப்பின் முதல் கவிதையான மீனாவைப் பற்றிய கவிதையில்

பத்து வயதுகூட நிரம்பாத மீனா பக்கத்து வீட்டில் வேலைக்காரியாகப் பாடுபடுகிறாள். அரைத்த மாவு நிரம்பிய வாளியை எங்கிருந்தோ சுமக்க முடியாமல் கொண்டு வரு பவளாக, அகாலத்தில் வந்த எஜமானரின் வாகனத்தைப் போர்த்த மிகப் பெரிய தார்ப் பாயை இழுத்து வருபவளாக,  பெரிய நீர்க் குடத்தைத் தரையில் வைத்து வைத்து நகர்த்தி வருபவளாக, வலிமையற்ற தன் சிறிய கைகளால் அக் குடும்பத்தின் துணி களை நிதானமாகத்துவைக்கிற சிறுமியாக, கவிஞர் கண்ட அந்த மீனாவோடு    தம் தங்கையாயிருந்து திருவிழா களித்து பரிசுகளுடன் திரும்புவதாய், கையில் சுவையுணவுத் தட்டுடன் நிலாச்சோறு சாப்பிட வரும் சிறிய மகளாக, அவளின் ஒரே உற்ற தோழனாயிருந்து வெகுமதிகளைச் சுமந்து அவள் பின் செல்லும் வாஞ்சையும், நேசமும் கற்பனையில் மட்டுமே கவிஞருக்கு சாத்தியப்படுகிறது.

ஆனால் அனுமதி மறுக்கப்பட்டு இரவில்

தாழிட்ட கதவருகில் அழுதுகொண்டிருந்தாள்.

கற்பனையல்லாது நிஜத்தில்

நான் அவளுக்குச் செய்ததெல்லாம்

‘உன்னைப் பற்றி எப்போதாவது எழுதுவேன் மீனா’

என்று என் குறிப்பு நோட்டில் அந்த இரவில் எழுதி வைத்ததுதான். என அமைந்த வரி கள் மூலம் எதார்த்த உலகின் நிதர்சன வாழ்வும் கையற்று வருந்தும் மனிதாபிமா னம்  மிக்க ஒரு கவிஞரின் உள்ளக்கிடக்கையும் கவிதை வழியாகப்  புலப்படுகிறது. நம்மையும் மீனாவைப் போன்ற சிறுமியருக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்? என்கிற கேள்வியால் தனி மனிதன் அல்லது சமூகத்தின் மனசாட்சி உலுக்கப்படுகிறது.

வீட்டுச்சுவர்களில் குழந்தைகள் கிருக்கும்போது பெரியோரும் பெற்றோரும் கண்டிப்பது இயற்கை. ஆனால் ஓவியரான கவிஞரோ அந்தக் கிறுக்கல்களைக் கொண்டாடவேண் டும் என்கிறார் தம் கவிதையில்.  அவரது  கவிதை வரிகள்:

வீடுகளில் வெள்ளையடித்து மறைக்கப்படுகின்ற

அவர்களின் கிறுக்கல்களை

என் சுவர்களில் தோன்றச் செய்யும் மந்திரம்தான் என்ன!

என கவிஞர்  கேட்பதன்மூலம் குழந்தைகளின் கிறுக்குதல் போன்ற செயல்களைத் ரசிப்புக் கண்ணோட்டத்தோடு அணுகவேண்டும் என்பதான கருத்து புதுமையான அணு குமுறையாகும். கை நீட்டி யாசிக்கும் குழந்தைகள், மதுக் கடையில் பணி செய்யும் சிறுவர்கள், நோவிற் துவண்ட குருத்துடல்கள், புறக்கணிக்கப்பட்ட பெற்றோரற்ற குழந்தைகள்,

என பாதிக்கப்பட்ட அத்தனை வகை குழந்தைகளதுமான மீட்புக்காகவும், ஐயோ,  ஏங்குகிறது கவி மனம். செயல்முறைக் கற்றல் என்ற வீட்டுப் பாட திட்ட பணிகள் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் சுவை கூட்டுவதற்கு பதிலாக சுமை ஏற்று வதாகவே பல பெற்றோரும் கருதுதல் நடப்பியல் உண்மை. ஆனால் சாத்தானும் சிறுமியும் என்ற நூல் தலைப்புக் கவிதை சிறந்த சொல்லோவியக் கவிதை எனத் தோன்றுகிறது. இந்தக் கவிதையில்  ஓவியருக்கும் சிறுமியான உமாவுக்கும் இடையி லான அனுபவமே நவீன பாணி ஓவியமாக என்னால் உணரமுடிகிறது. கவிதைக்குள் ஓவிய அனுபவமும், ஓவியம் வரைதலில் கவிதை அனுபவமும் பின்னிப் பிணைந்து கிடப்பதாக இப்பொழுது என்னுள் ஒரு புரிதல்  விளைந்துள்ளது.

கவிஞரை முதல் முதலில் நான் சந்தித்தபொழுது ஓவியத்தை பார்வையற் றோரால்  அனுபவித்துப் புரிந்துகொள்ள முடிவதில்லையே என்ற என் ஏக்கத்தை வெளிப்படுத்தினேன். ஆனால் இந்த கவிதை அனுபவம் அந்த ஏக்கத்துக்கு வடிகாலாக அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது. என் மனத் திரை யில் ஓர் கவிதை ஓவியக் காட்சி படுத்தப் பட்டதில் முழு நிறைவு ஏற்படு கிறது.

தீராத கணக்கு என்ற கவிதை முத்தாய்ப்புக் கவிதை. மன சாட்சி உள்ள  மனிதரின் மனசை கவிஞர் இந்த கவிதையால் கீறி ஒரு ரண சிகிச்சையே செய்துவிடுகிறார்.

எதையோ நினைத்தபடி

எங்கோ சென்றுகொண்டிருக்கும்போது

சட்டென்று உன் குழந்தையுடன் வழிமறித்து

பிச்சை என்று கேட்டாய்.

தெய்வமே அந்தக் குழந்தை

என்னமாய்ச் சிரித்தது…

அதற்கு மாறாக நீ என்

சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கலாம்.

ஓரிரவில் சாக்கடையோரம்

கொசுக்கள் குதறும் வதையில்

துடித்துப் புரளும் குழந்தையைக் காட்டி

அய்யா என யாசித்தாய்.

உறக்க மயக்கத்தில் அழச் சக்தியற்று அது

எவ்வளவு ஈனமாய்ச் சிணுங்கியது…

அதற்குப் பதில் நீ என்னை

அடித்துப் பிடுங்கியிருக்கலாம்.

பஸ்ஸ§க்குக் காத்திருக்கும் கூட்டத்திடையில்

உன் குழந்தை என் கால்களைத் தொட்டு

கை மலர்த்தும்படிச் செய்தாயே,

பரிதாபமாய் முகம் காட்ட அது அப்போது

எவ்வளவு பாடுபட்டது…

அதைவிடவும் நீ என்னை

முகத்தில் உமிழ்ந்து கேட்டிருக்கலாம்.

இறுகிய முகத்தின் கண்ணீர் தடத்துடன்

அநாதைக் குழந்தையை அடக்கம் செய்யவென்று

இரந்து நிற்கிறாய் இன்று.

புவி சுமக்க முடியாத பாரமாக இது

எவ்வளவு அமைதியாகக் கிடக்கிறது….

அய்யோ அய்யோ என்று

பதறி அழிந்தபடியே

ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து

உன்னைக் கடந்து போகிறேன்.

தாயே என்னைக் கொன்று பழி தீர்க்க

ஏன் உனக்குத் தெரியவில்லை?

என்பது போன்ற கேள்விகளில் உள்ள நியாயத்தால் கவிதையின் ஒரே ஒரு வார்த்தை யைக் கூட நம்மால் மறுதலிக்க முடிவதில்லை.

டீக்கடைத் தொட்டி முன் குருவிக் குஞ்சுகள் என்ற கவிதையில்  புத்தக மூட்டைப் பையைச் சுமக்கும் சிறுவனை கை விட்டுச் செல்லும் நடத்துனரின் கீழ்மை சுட்டப்படுகிறது. நடத்துனர்களுக்கு பள்ளிக் குழந்தைகளும் மாற்றுத் திறனாளிகளும் பொது  சமுதாயத்தின் அங்கங்கள்தான், அவர்களுக்காகவும்தான் அரசு பேருந்துகள் விடப்படுகின்றன  என்ற மனோபாவம் என்று வருமோ அவர்களுக்கும் அவர்களின் குழந்தை களுக்கும்தான் வெளிச்சம்!?

மொத்தத்தில்,  சாத்தானும் சிறுமியும் என்ற இந்த கவிதைத் தொகுப்பு பாதிக்கப் பட்ட குழந்தைகள், உழைக்கும் சிறுவர் சிறுமியர், கைவிடப்பட்ட குழந்தைகள், கை ஏந்தும் தாயோடுள்ள குழந்தைகள் என விளிம்பு நிலை குழந்தைகளுக்கான நியாயத் தைக் கோரும் கவிதைகளாக, குழந்தைகளையும் குழந்தைமையயும் கொண்டாடும் கவிதைகளாக அமைந்துள்ளன.

குழந்தைகளோடான மாறுபட்ட புதிது புதிதான  அனுபவங்களை பெற்ற கவிஞர் அந்த   அனுபவங்களை வாசகருடைய உள்ளங்களுக்கும் தம் கவிதைகள் வழியாக இடம் கடத்துவதே கவிதைத் தொகுப்பின் முழு நிறைவான வெற்றி என்றால் அது மிகை யல்ல.

0

Series Navigationகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 18உமா மகேஸ்வரி கவிதைகள்: ‘இறுதிப் பூ’ தொகுப்பு வழியாக…
author

முனைவர். கோ. கண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *