கிம்பர்லிகளைக் காணவில்லை

This entry is part 23 of 27 in the series 29 செப்டம்பர் 2013
நான் தேடியது அன்று திடீரென்று கிடைத்தது.
நைந்த என் பழைய கால் சட்டை.
வார் (பட்டை) வைத்து தைத்தது.
வால்கள் அறுந்து கிடக்கின்றன.
ஒரு தீபாவளிக்கு அது புது ஆடை.
எண்ணெய்ப்பிசுக்குடன் அதற்குள் இருந்து
அன்று ஊசி வெடி வெடித்தது
இன்னும் ஊசிப்போகவில்லை.
அந்த துணியில் என் சரித்திர வாசனை.
பழுப்பு நிறம் இப்போது வெளிறியிருந்தது.
ஆற்றங்கரைக்கல்லில்
அந்த வாரைப் பிடித்துக்கொண்டு
அடித்து அடித்து துவைத்து
கசக்கி வைத்து விட்டு
சில முக்குளிகள் போட‌
அந்த முட்டளவு ஆழத்தில்
படுத்துக்கிடப்பேன்.
பாய் போல ஆறு கிடப்பதும்
அதில் புரண்டு குளிப்பதும் சுகம் தான்.
மறுபடியும் கசக்கி வைத்திருந்த‌
கால் சட்டை ஞாபகம் வந்துவிடும்.
மறுபடியும் அதை அடி அடியென்று அடித்து
அப்புறம் அலசி பிழிந்து
படிக்கல் மூலையில் அழுக்குப்படாமல்
வைத்து விட்டு
மறுபடியும் ஆற்றில் “விரால்”பாய்வேன்.
இவ்வளவும்
அம்மணத்தில் தான்.
அம்மணத்தின் மணம் தெரியாமலேயே..
பிஞ்சு வாழ்க்கையின் வாசனை அது.
அன்றொரு நாள்
என் சேக்காளியோடு
செப்பு விளையாட்டு.
வண்ண வண்ணமாய் கடைந்த‌
சின்ன சின்ன சட்டிகள்.
ஆப்பைகள்.தட்டுகள்.
அம்மிக்கல் திருவைகள் எல்லாம் தான்.
சமைத்து விட்டாளாம்.
ஆப்பையில் கிண்டினாள்.
நான் குத்தவைத்து உக்காந்திருந்தேன்,
தட்டு வைத்தாள்.
“சாப்பிடலாம் வா..”
குச்சியில் செருகி சின்னஞ்சிறிதாய்
செய்திருந்த ஆப்பையை
சிவப்பும் பச்சையுமாய் செய்திருந்த
அந்த சின்ன சருவச்சட்டியில்
கிளறி கிளறி
என் முன்னே உள்ள‌
இன்னொரு மஞ்சள் வண்ண கடைசலின்
சிறு தட்டில்
சோறு போட்டாள்.
சுடுதா?
பிஞ்சுவிரல்களை
விசிறியாக்கினாள்.
சோறும் இல்லை.பசியும் இல்லை.
அங்கே பாவனை மட்டுமே நிஜம்.
“டேய்..சம்மணம் போட்டு உக்கார்.
எல்லாந்தெரியுது!”
வெடிச்சிரிப்பு செய்தாள்.
குட்டைக்கவுனில்
சில சமயம் அவளும் தான்
அப்படியெல்லாம் உக்காந்திருக்கிறாள்.
எனக்கு ஒண்ணும் வெளங்கல.
இப்படி
நான் சிரிக்கணும்னு கூட தோணல.
சின்னஞ்சிறிசுகளாய்
அந்த சிற்றில் விளையாட்டில் கூட
அவள் உருவில்
மாயமாய் ஒரு சின்னக்கிருஷ்ணன்
தன் சின்ன கீதையில்
காட்டிய விஸ்வரூபமா அது?
கன்னத்தில் குழிவிழ‌
கண்கள் கருந்திராட்சையின்
ஈர நைப்புடன் சிமிட்டிக்கொள்ள‌
அவள் சிரித்துக்கொண்டிருந்தாள்.
சீ சீ என்று சொல்லிக்கொண்டே!
குமுக்கு சிரிப்பு.
ஏன்?
அது கெட்ட வார்த்தையாம்.
கெட்ட வார்த்தைகளிலிருந்து தான்
வாழ்க்கையின்
நல்ல அர்த்தங்கள் ஆரம்பிக்கின்றன‌
என்று
இனிப்பாய் இப்படியொரு
வெடிப்பூ.சிரிப்பா?
அந்த
எட்டு ஒன்பது வயதுக்கு
எட்டுமா “எட்டுத்தொகையின்”
கலிப்பாக்களும் அகப்பாக்களும்?
மின்னல் பூசாத‌
மூளி வானச் சித்திரங்கள் அவை.
“அந்த வினாடிகள்”
பெருங்கடலில் கரைந்து கிடக்கின்றன.
இந்த துளிகளை
வைரமுத்து சொன்னது போல்
எந்தக்கடலில் தேடுவது?
உள்ளத்தின் தூய்மையான‌
அந்த துள்ளல்களை
எங்கே தேடுவது?
துடிப்புகளை மட்டுமே
வாரி வாரிக்குவித்து
சம்பாதித்துக்கொண்டிருக்கிறோம்.
வாழ்க்கைக்கு இன்னும்
சுரங்கம் வெட்டிக்கொண்டு தான்
இருக்கிறோம்.
“கிம்பர்லி”களை இன்னும்
காணவில்லை.
============================================ருத்ரா
Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 26கதிரியக்கம் இல்லாத அணுப்பிணைவு மின்சக்தி அதிவிரைவில் விளக்கேற்றும்.
author

ருத்ரா

Similar Posts

2 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ஞானக் கவிஞர் ருத்ரா,

    ///உள்ளத்தின் தூய்மையான‌
    அந்த துள்ளல்களை
    எங்கே தேடுவது?
    துடிப்புகளை மட்டுமே
    வாரி வாரிக்குவித்து
    சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம்.
    வாழ்க்கைக்கு இன்னும்
    சுரங்கம் வெட்டிக்கொண்டு தான்
    இருக்கிறோம்///

    புதையல் தேடி ஏமாறுகிறோம்,
    பூமியில்
    புதைந்து புழுதியாய் மீண்டும்
    புழுவாகிறோம்.

    சிந்திக்க வைக்கும் சித்தரின் வரிகள்,
    பாராட்டுகள் ருத்ரா.

    சி. ஜெயபாரதன்

  2. Avatar
    ருத்ரா இ.பரமசிவன் says:

    பாராட்டுக்கு மிக்க நன்றி
    விஞ்ஞானத்தமிழ் வித்தகர் அவர்களே

    வாழ்க்கை காய்த்தபின்
    பழம் நினைவுகளே பழங்கள்.
    சுருள் கம்பி கடிகாரத்தில்
    முறுக்குகள் நின்றவுடன்
    காலம் காலமாகி விடுகிறது.
    வெளியேயோ
    காலம் சென்றுகொண்டே தான்
    இருக்கிறது.
    நம் உடன் வந்த‌
    தோல் சுருக்கங்களுக்கும்
    எலும்பு தேய்வுகளுக்கும்
    எண்ணெய் போட்டுக் கொள்கிறோம்
    இப்படி ரீவைண்ட் செய்துகோள்ளுவது மூலம்.
    இப்போது
    கட கடத்த கவலைச்சத்தங்கள்
    யாழ் மீட்டுகின்றன.
    ஆயிரம் ஆயிரம் தேன்சிட்டுகளின்
    ரீங்கார அதிர்வுகளில்…
    நம் மன ஊர்திகளில்.. நிகழும்
    குவாண்டம் டெலிபோர்டேஷன்கள் இவை.

    இப்போதாவது
    அந்த ஈடன் தோட்டத்திற்கு சென்று
    பழத்தைத் தொடாமல்
    அந்த பாம்புக்குப் புது
    பாடம் புகட்டிவிட்டு வருவோம்.

    நோஸ்டால்ஜியா என்பதும்
    நம்மிடமே நாமே இயக்கிக்கொள்ளும்
    “விண்ணுலவி”க்கலம் தான்.

    அன்புடன் ருத்ரா

Leave a Reply to சி. ஜெயபாரதன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *