தொடாதே

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

sivakumar

“எங்கடா ஸ்ரீ, நம்ம நந்துவை ரெண்டு நாளா காணோம்?”

ஸ்ரீதரைப் பார்த்துக் கோரஸாக கேள்வி கேட்டார்கள் நண்பர்கள்.

 

நந்து என்கிற நந்தகோபால், பாலா என்கிற பாலகுமாரன், ஸ்ரீ என்கிற ஸ்ரீதர் , ஜெய் என்கிற ஜெய்சங்கர், பாரி என்கிற பாரிவள்ளல் ஐந்து பேரும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு. ஐவரும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும், நந்தகோபாலுடன் ஸ்ரீதர்க்கு  நெருக்கம் அதிகம்.

 

“அந்தக் கொடுமையை ஏண்டா கேக்குறீங்க? ரெண்டு வருஷமா நம்ம காலேஜ் ப்யூட்டி சிந்துஜாவை லவ் பண்றான்; ஆனா சொல்லத் தைரியம் இல்ல; ஒன் சைடு லவ்வு ! ‘ஃபைனல் இயர் வந்திருச்சு, இதுக்கு மேல வெய்ட் பண்ணாதடா, சீக்கிரம் சொல்லிடு’ன்னு நான்தான் அவனுக்கு அட்வைஸ் பண்ணினேன். ஒருவழியா தைரியம் வந்து, போன வெள்ளிக்கிழமை ரோஜாப்பூ வாங்கிட்டுப் போயி அவகிட்ட நீட்டி, ‘ஐ லவ் யூ’ சொல்லியிருக்கான்.

 

‘நந்து-சிந்து ஆஹா என்ன பொருத்தம்!  இதில்

எத்தனை பேருக்குக் கண்ணில் வருத்தம்? இதை

நினைந்து பார்த்தாலே மண்ணில் சொர்க்கம்; அதில்

இணைந்திருப்போமே என்றும் நீயும் நானும்’னு

 

காதலைக் கவிதையாப் படிச்சிருக்கான். இவனைப் புடிக்கலைனா டீசன்ட்டா ‘நோ’ சொல்ல வேண்டியதுதானே அவ? வாய்க்கு வந்தபடி திட்டியிருக்கா. ‘உன் மொகரையைக் கண்ணாடியில பாக்கறதே இல்லையா’ன்னு கேட்டிருக்கா. ‘உனக்குச் சரியான ஜோடி எங்க வீட்டு வேலைக்காரி பாப்பாள்தான்; பேரு கூட ரொம்ப பொருத்தம் கோப்பால்-பாப்பாள்’னு கிண்டல் அடிச்சிருக்கா. நொந்துபோய் ரெண்டு நாளா அழுதுகிட்டே இருக்கான். என்னாலேயே சமாதானப்படுத்த முடியலைங்கடா. எப்படியும் நாளைக்கு வந்திடுவான்னு நெனக்கிறேன்” என்று ஸ்ரீதர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான் நந்தகோபால்.

 

அப்படி ஒன்றும் விகாரமானவன் இல்லை அவன். அழகு குறைவானவன், அவ்வளவுதான். வெள்ளை நிறம்; ஐந்தரை அடி உயரம்; அதற்கேற்ற பருமன். தலையிலும், உடலிலும் தேவைக்கு அதிகமான முடி. முன் பற்கள் அவற்றின் எல்லையைத் தாண்டி முன்னே வந்ததால், மேல் தாடை கொஞ்சம் முன்புறம் நீண்டு இருந்தது. வெளிப்புறத் தோற்றம்தான் இப்படியே தவிர, அவன் பழகுவதற்கு மிகவும் இனியவன். அவன் குரல் மிகவும் மெலிதானது. வார்த்தைகளை நிறுத்தி நிறுத்தி ஏற்ற இறக்கம் கொடுத்துப் பேசுவான். நகைச்சுவை உணர்ச்சி அதிகம். அது அவன் பேச்சில் நிறையவே தெரியும்; ஆனால் யார் மனதும் புண்படியான நகைச்சுவை இல்லை.

 

“ஸாரிடா நந்து !“

““இதுக்காக ஏண்டா கவலைபடற? உன் அருமை அவளுக்குத் தெரியல”

“பெரிய கிளியோபாட்ரான்னு நெனப்பு அவளுக்கு; விட்டுத் தள்ளு!”

“மோசமான எவங்கிட்டயாவது மாட்டிகிட்டு கதறப்போறா பாரு!”

“கண்டிப்பா இவளை விட நல்லவளா ஒருத்தி உனக்குக் கெடைப்பாடா”

 

நண்பர்களின் ஆறுதல் எதுவும் அவன் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.

 

“இல்லடா, யோசனை செஞ்சுப் பார்த்தேன். லவ்வர் ஹீரோ கணக்கா இருக்கணும்னு நெனைக்கறா அவ; அதில தப்பில்லைன்னுதான் தோணுது. ஆனா என்னை அவமானப்படுத்தியிருக்க வேணாம். அதுதான் வருத்தமாப் போச்சு. இனிமே எவகிட்டையும் ப்ரோபோஸ் பண்ணப் போறதில்லை. என்னைப் புடிச்சிருக்கின்னு எவளாவது தானே வந்து சொல்லட்டும். அப்பத்தான் காதல், கல்யாணம் எல்லாம். வாங்கடா, கிளாசுக்குப் போகலாம்” என்று வகுப்பை நோக்கி நடந்தான் நந்தகோபால்.

 

இரண்டு நாட்களாக அழுது கொண்டிருந்தவனா இவன் என்று அதிசயமாக இருந்தது அவர்களுக்கு. அவனுடைய நகைச்சுவை உணர்ச்சிதான் இதற்குக் காரணமாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. எந்தப் பிரச்சினை என்றாலும் அதிலிருந்து எப்படியாவது வெளிவரத் தெரிந்து வைத்திருக்கும் நந்தகோபாலை வியந்தவண்ணம் நண்பர்கள் நால்வரும் அவனைப் பின்தொடர்ந்தனர்.

 

அதற்குப்பின் பட்டப்படிப்பு முடியும்வரை நந்தகோபாலிடம் யாரும் அவன் காதலைப் பற்றிப் பேசவேயில்லை. வேறு எந்தப் பெண்ணும் தானாக வந்து அவனிடம் ‘ஐ லவ் யூ’ சொல்லவில்லை. படிப்பு முடிந்து, ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டு, விருந்து சாப்பிட்டு, ‘டச்சில இருடா’ என்று ஒருவரை ஒருவர் தழுவி, மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண் வாங்கிக்கொண்டு, பிரிந்தார்கள்.

 

நந்தகோபால் முதுகலைப் படிப்பில் சேர்ந்தான். இவன் இரண்டாண்டு படிப்பை முடிப்பதற்குள் மற்ற நால்வருக்கும் வெவ்வேறு இடங்களில் வேலை கிடைத்து, அவர்களின் திருமணமும் நடந்து முடிந்தது. எல்லாருடைய திருமணத்துக்கும் சென்று பரிசுப் பொருள் கொடுத்து வாழ்த்திவிட்டு வந்தான். அவன் படித்துக் கொண்டிருந்ததால், அவனுக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை என்பதைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை. கடைசியாகக் கல்யாணம் ஆன ஸ்ரீதர்  மட்டும், “நந்து! நீ வேலைல சேர்ந்ததும் நல்ல பொண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கடா” என்று அக்கறையுடன் சொன்னான்.

 

பத்து வருடங்கள் ஓடிவிட்டன; இடையிலே யாரையும் நேரிலே சந்திக்கும் வாய்ப்பு அதிகம் நந்தகோபாலுக்குக் கிடைக்கவில்லை. அமைந்த சில வாய்ப்புகளையும் அவன் தவறவிட்டான். அவனுக்கேற்ற பெண் கிடைக்காததனால் திருமணமாகாமலே இருந்தான். அதனால், அவரவர் மனைவி, குழந்தைகளுடன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் தனியனாய் கலந்துகொள்ளத் தயக்கமாக இருந்தது. அவனுடைய குடும்பம் என்பது அவனும், உடல்நலக் குறைவுடைய அவனுடைய அம்மாவும் மட்டும்தான். அவளைத் தனியே விட்டுவிட்டு எங்கும் போக விரும்பாததும் ஒரு காரணம். போன வருடம் அவன் அம்மா இறந்து போனாள்.

 

தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவனுக்கு இப்போது அரசுக் கல்லூரியில் பேராசிரியர் வேலை கிடைத்து, திருச்சிக்குப் பயணித்துக் கொண்டிருக்கிறான். ஸ்ரீதரும் திருச்சியில்தான் இருந்தான். இந்தியன் வங்கியில் காசாளர் வேலை. மனைவி சித்ரா, ஐந்து வயது மகள் ரம்யா. நண்பனையும், அவன் குடும்பத்தையும் நேரில் சந்திக்கப் போகிறோம் என்ற உணர்வே அவனுக்குச் சந்தோஷமாக இருந்தது.

 

திருச்சி சந்திப்பில் வந்து இறங்கியதும் “நந்தூ………….” என்று கையை ஆட்டி வரவேற்றான் ஸ்ரீதர். கொஞ்சம் மாறியிருந்தான். முன்னால் வழுக்கை; வயிற்றில் தொப்பை; உடம்பில் கொஞ்சம் சதை போட்டிருந்தான். அவனுடைய குரலை வைத்துதான் நந்தகோபால் ஸ்ரீதரை அடையாளம் கண்டு கொள்ளவேண்டியிருந்தது. வெளியே வந்து, ‘பாங்கர்ஸ் காலனி’யில் இருந்த அவன் வீட்டுக்கு, ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றான். குழந்தை ரம்யாவுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டறிந்து, அந்த சாக்லேட்டும், பிஸ்கட்டும் போகும் வழியிலேயே கடையில் வாங்கிக் கொண்டான் நந்தகோபால்.

 

ஸ்கூட்டரை வீட்டுக்கு வெளியே நிறுத்தும்போதே, “அப்பா வந்தாச்சு !“ என்று கத்தியபடியே வாசலுக்கு ஓடி வந்தாள் ரம்யா. கதவைத் திறந்து மகளை அணைத்துத் தூக்கிக் கொண்டான் ஸ்ரீதர். “வெல்கம் டு அவர் ஹவுஸ்!” என்று வரவேற்று உள்ளே நுழைந்தவனைப் பின்தொடர்ந்தான் நந்தகோபால். பெட்டியைக் கீழே வைத்துவிட்டு, தான் வாங்கி வந்தவைகளை ரம்யாவின் கைகளில் கொடுத்தான். அப்பாவின் பிடியிலிருந்து இறங்கி, சமையல் அறையிலிருந்த  அம்மாவிடம் ஓடினாள் அவள்.

 

“வாங்க ! பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு” – அறையை விட்டு வெளியில் வந்து வரவேற்றாள் சித்ரா. “கைகால் அலம்பிட்டு வாங்க; நேரமாச்சு, சாப்பிடலாம்” என்று மறுபடி சமையலறைக்குள் நுழைந்தாள். இருவரும் கால் கழுவி வருவதற்குள் சாப்பாட்டு மேசையில் எல்லாவற்றையும் எடுத்து வைத்திருந்தாள். சுடச்சுட சாப்பாடு. முடிந்ததும் இருவரும் ஹாலில் வந்து அமர்ந்தார்கள். ரம்யா மெல்ல வந்து, நந்தகோபாலின் எதிரில் இருந்த சோபாவுக்குப் பின்னால் மறைந்து நின்று, தலையை மட்டும் நீட்டிப் பார்த்தாள். இவனும் அவளிடம் விளையாட எண்ணி கைகளால் முகத்தை மறைத்துக் கொண்டு, இரண்டு விரல்களின் இடைவெளியில் அவளைப் பார்த்தான். உடனே அவள் சோபாவுக்குப் பின்னால் முழுதும் மறைந்தாள். இவனும் முழுதுமாக முகத்தை மூடிக் கொண்டான். மறுபடி தலைநீட்டல்; மறுபடி விரல் இடைவெளி. மூன்றாவது முறை இவன் முகத்தை மூடிக் கொண்டதும், அவள் அம்மாவிடம் ஓடிவிட்டாள்.

 

“அம்மா, நீ சொன்னது கரெக்ட்தாம்மா; இந்த அங்கிள் கொஞ்சம் மங்க்கி மாதிரிதான் இருக்கார். நான் செஞ்சதெல்லாம் அப்பிடியே திருப்பி செஞ்சார்” என்று அம்மாவிடம் ரம்யா கிசுகிசுத்ததும், “மெதுவாப் பேசுடி; அவர் காதில விழப்போறது”  என்று சித்ரா அவளை அடக்கியதும் இவனுக்குத் தெளிவாகவே கேட்டது. ஒரு குழந்தை, தன்னைக் குரங்குடன் ஒப்பிட்டதைவிட, தன்னைப் பற்றி இப்படி ஒரு அபிப்ராயத்தைக் குழந்தை மனதில் முன்கூட்டியே விதைத்த கொடுமையை நினைத்துதான் அவனுக்கு வருத்தமாக இருந்தது. அவனின் முக மாறுதலையும், வாட்டத்தையும் ஸ்ரீதர் கவனித்துவிட்டான்.

 

“நந்தூ, தப்பா நெனைச்சிக்காதடா. ஏதோ தெரியாம சொல்லியிருக்கா. ரம்யா! இங்க வா!” என்று மகளை அழைத்தவன், “இது என்னோட டியரஸ்ட் ஃபிரெண்ட்; இப்படி எல்லாம் பேசலாமா? அங்கிள்கிட்ட ஸாரி கேளு” என்றான்.

 

“ஸாரி அங்கிள்! உங்கள எனக்குப் புடிச்சிருக்கு” என்று சொல்லிக் கொண்டே அருகில் வந்து, கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு உள்ளே ஓடினாள் ரம்யா. நந்தகோபாலுக்கும் ரம்யாவைப் பிடித்துப் போனது.

 

ஞாயிறுதோறும் ஸ்ரீதர் வீட்டுக்கு நந்தகோபால் வருவது வழக்கம் ஆயிற்று. ஸ்ரீதரைப் போலவே ரம்யாவும் நந்தகோபாலுக்கு நெருக்கமானாள். அவன் வீட்டுக்கு வருகை தரும் நாட்களும் அதிகரித்தன. சித்ரா, அவனை ‘அண்ணா’ என்று உபசரிக்கத் தொடங்கினாள்; ரம்யா, அவனை ‘மாமா’ என்று கொஞ்சினாள். வருடங்கள் ஓடினாலும் அவனுக்குத் தகுந்த பெண் கிடைக்காமலே வாழ்க்கை தொடர்ந்தது. இடையிடையே வந்த ஓரிரண்டு வரன்களும், இவனுடைய அழகைக் குறைகூறி மறுத்துவிட்டனர். ஒவ்வொரு முறையும் அவன் மறுக்கப்படும்போது ஏற்படும் வேதனை அவனால் தாங்க முடியவில்லை. திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே நந்தகோபாலுக்கு வெறுப்பாய் இருந்தது. அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகவே ஆகிவிட்டவனுக்கு இப்படியே இருந்து விடலாம் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. அதனால் ஸ்ரீதரும், சித்ராவும்  அவன் திருமணத்தைப் பற்றி எந்தப் பேச்சும் எடுப்பதைக் கைவிட்டார்கள்.

 

ஏழு வருடங்கள் ஓடின. தனது இந்த நிம்மதியான வாழ்க்கையில் தடுமாற்றம் வரும் என்று கனவில்கூட நந்தகோபால் நினைத்துப் பார்த்ததில்லை. ரம்யா பெரியவளானாள். ஸ்ரீதரின் வீட்டிலே உறவினர் கூட்டம். மகிழ்ச்சி வெள்ளம். விஷயம் அறிந்ததும், ரம்யாவுக்குப் பட்டுப்பாவாடை, தாவணி, தங்கத் தோடு, இனிப்பு வாங்கி வந்து தன்னுடைய பரிசாகக் கொடுத்தான் நந்தகோபால். வாழ்த்துகள் சொல்லிக் கிளம்பினான். உறவினர்கள் திரும்பிச் செல்லும் வரை அங்கே போகாமல் இருந்தான். ஐந்து நாட்கள் கழித்து ஸ்ரீதர் வீட்டுக்குச் சென்றான்.

 

அன்று ஞாயிற்றுக்கிழமை. வழக்கமான உற்சாகத்துடன் ஸ்ரீதர் வரவேற்றான். சித்ராவும், “வாங்கண்ணா! பார்த்து அஞ்சு நாளாச்சு. வந்தவங்க எல்லாம் ஒவ்வொத்தரா கிளம்பிப் போய் நேத்துதான் ஃப்ரீயா ஆனது வீடு. பேசிட்டிருங்க, ரம்யாவுக்கு எண்ணைக் குளியல்; தலைக்குத் தண்ணி ஊத்திட்டு இருந்தேன்; இதோ வந்திடறேன்” என்றுக் குளியலறைப் பக்கம் சென்றாள்.

 

குளித்துமுடித்து, புது உடை அணிந்து வெளியே வந்த ரம்யா, ஓடி வந்து, நந்தகோபாலின் இரு கைகளையும் பற்றிக்கொண்டு, அவனுடைய இரு கன்னங்களிலும் முத்தமிட்டாள். சந்தோஷத்தின் மிகுதியில், நந்தகோபாலும் அவளைக் கட்டி அணைத்து, உச்சந்தலையிலும், நெற்றியிலும், கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டான்.

 

“ரம்யா, அப்பறம் ரெண்டு பேரும் கொஞ்சலாம்; மொதல்ல கொல்லப்பறம் போய் தலையை உலர்த்து!” என்று சத்தம் போட்டாள் சித்ரா. அதில் கொஞ்சம் கோபமும் கலந்திருப்பது போல உணர்ந்தான் நந்தகோபால். “இருங்க மாமா, தலையைக் காய வச்சிட்டு வரேன்” என்று பின்புறம் சென்றாள் ரம்யா.

 

கையில் காப்பி எடுத்துவந்து நந்தகோபாலிடம் கொடுத்த சித்ரா, “அண்ணா, தப்பா நெனச்சிக்கக் கூடாது; அவ இப்ப கொழந்தை இல்ல. அதனால, இந்த கட்டிப் புடிக்கறது, முத்தம் குடுக்கறது எல்லாம் இனிமே வேண்டாமே! நான் அவளுக்குப் பக்குவமா புத்தி சொல்றேன், நீங்களும் கவனமா இருங்க” என்றாள்.

 

நந்தகோபாலுக்கு, கட்டிவைத்துச் சாட்டையால் அடித்தாற் போலிருந்தது.

 

“சிஸ்டர், நான் அவளை என் பொண்ணு மாதிரிதானே பார்க்கிறேன். அவளும் அப்படித்தான் என்னை நெனைக்கறா. உங்களுக்கும் தெரியும். என்னைத் தப்பாப் பார்க்கலாமா? ஒரே நாளிலே என்னை இப்படி அன்னியமாக்கிட்டீங்களே!” என்று சோகமானான்.

 

“ஐயோ, உங்களைத் தப்பா சொல்லலைண்ணா ! மத்தவங்க எதுவும் சொல்லிடக் கூடாதேன்னுதான் ஒரு முன்னெச்சரிக்கயா அப்படிச் சொன்னேன். உங்களுக்கு இன்னும் கல்யாணம் வேற ஆகல இல்லையா, கேட்கவே வேணாம்; வம்பு பேச ஆரம்பிச்சிடுவாங்க” என்று கூடுதலாக ஒரு காரணத்தையும் கண்டுபிடித்துச் சொன்னாள் சித்ரா.

 

“கரெக்ட்தான். நேரமாச்சு, நான் கெளம்பறேன்” என்று பதிலுக்குக் காத்திராமல் கிளம்பிச் சென்றான். அந்த வாரம் முழுக்க இவர்களைப் பார்க்க வரவில்லை. ‘அதுவும் நல்லதற்குதான்’ என்று, இவர்களும் அவன் வராததற்காக எதுவும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. கவலைப்படவுமில்லை. ஆண்களிடம் இனி  எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று ரம்யாவுக்குச் சொல்லித் தரவேண்டும் என்று நினைத்திருந்தவள், அதை மறந்தே போனாள்.

 

அடுத்த ஞாயிறு காலையில் நந்தகோபால் வந்தான். முகத்தில் பெருமிதம். உள்ளே நுழைந்ததுமே, “டே ஸ்ரீ! குட் நியூஸ் கொண்டு வந்திருக்கேன். சிஸ்டர், நீங்களும் இங்க வாங்க” என்று உரத்த குரலில் உற்சாகம் ததும்பப் பேசினான். “அடுத்த மாசம் பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை எனக்குக் கல்யாணம்!” என்றான். இருவரும் ஆச்சர்யத்துடன், “கங்க்ராஜுலேஷன்ஸ்!” என்று கூவினார்கள். ஸ்ரீதர்  கை குலுக்கினான். வீட்டில் ரம்யா இல்லை. தோழி வீட்டுக்குச் சென்றிருந்தாள்.

 

“வெள்ளிக்கிழமை பன்னிரண்டு மணிக்கு ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ்ல கல்யாணம்; நீங்க ரெண்டு பேரும் என் பக்க சாட்சி. சனிக்கிழமை சாயங்காலம் ‘அர்ச்சனா’ல ரிசப்ஷன்” என்றவன், சித்ராவைப் பார்த்து, “என்ன சிஸ்டர், இனிமே நான் வந்து ரம்யாவைப் பார்த்துக் கொஞ்சறதில உங்களுக்கு ஒண்ணும் அப்ஜக்ஷன் இல்லையே?” என்று சொல்லி வரவேற்பு அழைப்பிதழைக் கொடுத்தான்.

 

அடுத்த பத்து நாட்களும் அவன் வரவில்லை. சித்ரா, தான் சொன்ன ஒரு வார்த்தை இந்த அளவுக்கு நந்தகோபாலின் மனதில் தைத்து விட்டதை நினைத்து வருந்தினாள். இருந்தாலும், அவன் திருமணம், அதனால் இப்போது முனைப்பாய் நடப்பது மகிழ்ச்சியாய் இருந்தது.

 

பத்தாம் தேதி பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றபோது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. மணமகள் கமலா கணவனை இழந்தவள் என்பதும், ஏழு வயதில் ‘சத்யா’ என்ற ஒரு மகள் உண்டு என்பதும், அப்போதுதான் தெரிய வந்தது. ஒரு விதவைக்கு வாழ்வளித்தது சரியென்றாலும், தான் சொன்ன வார்த்தையினால் நந்தகோபால் அவசரமாக எடுத்த முடிவு இது என்று எண்ணும்போது சித்ராவுக்குத் தொண்டை அடைத்து, மனதில் வலித்தது. சாட்சிக் கையெழுத்துப் போட்டு, மணமக்களை வாழ்த்தி, தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று விருந்து வைத்தாள்.

 

சனிக்கிழமை, பரிசுப் பொருளுடன் மூவரும் வரவேற்புக்குச் சென்றார்கள். நந்தகோபாலும் கமலாவும் மாலையணிந்து, மகள் சத்யாவுடன் மேடையில் நின்றிருந்தார்கள். ஸ்ரீதர், சித்ரா, ரம்யா மூவரும் மேடையேற வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது.

 

அவர்கள் முறை வந்ததும், ரம்யா வேகமாக முன் சென்று, நந்தகோபாலுக்குச் சரமாரியாக முத்தம் கொடுத்துக் கைகுலுக்கினாள். பிறகு அவன் மனைவியின் கையைக் குலுக்கி, “கங்க்ராஜுலேஷன்ஸ்! நான் ரம்யா! நீங்க ரொம்ப லக்கி ஆன்டீ” என்று முத்தமிட்டாள்.

 

பின்னால் வந்த சித்ராவுக்குக் கோபமாக வந்தது. நந்தகோபாலை எச்சரித்தது போல, ரம்யாவிடமும் எதுவும் புத்தி சொல்லாதது இப்படி ஆகும் என்று அவள் நினைக்கவில்லை.

 

“ஹி, ஹி, இவ எப்பவும் இப்படித்தான் ஈஷிக்குவா” என்று சமாளித்து, பரிசுப் பொருளைக் கொடுத்து, கைகுலுக்கி, கூட நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். இத்தனை அமர்க்களத்திலும், அந்தப் பெண் சத்யா எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தது, வித்தியாசமாய் இருந்தது. அவள் கன்னத்தை புன்னகையுடன் லேசாகத் தடவிக் கொடுத்துவிட்டுக் கீழே இறங்கினார்கள்.

 

அன்று இரவு. நந்தகோபாலும், கமலாவும் தனிமையில்.

 

“உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லலாமா? மொதல் நாளே இவ இப்படிப் பேசறாளேன்னு நீங்க கோபப்படக் கூடாது” என்ற பீடிகையுடன் பேச ஆரம்பித்தாள் கமலா.

 

“உங்க ஃபிரண்ட் பொண்ணு வந்துதே, அது என்னங்க அப்ப்பிடிச் செய்யுது? வெளி ஆம்பளைங்களத் தொடாம எட்டி நின்னு எப்பிடிப் பழகணும்னு தெரியவேண்டாம்? அவ அம்மா சரியா வளக்கலைங்க. மறுபடி அவங்க வீட்டுக்குப் போனா அவ அம்மாகிட்ட சொல்லி வையுங்க, இப்படியே இருந்தா பொண்ணு கெட்டுப் போயிடும்னு.  என் பொண்ணு சத்யாவைப் பாருங்க. எப்படி வளர்த்திருக்கேன். இப்பவே எப்படி அமைதியா இருக்கா! இவளும் இன்னும் அஞ்சு வருஷத்தில சமைஞ்சிடுவா. அதுக்கப்புறம் ஹாஸ்டல்ல விட்டுடலாம்னு இருக்கேன், சரிதானே? நீங்க என்ன சொல்றீங்க” என்று அவளின் முடிவுக்கு அவனையும் யோசனை கேட்பது போலத் தன் முடிவைச் சொன்னாள்.

 

“சத்யா நல்ல பொண்ணுதான். அதுக்காக ரம்யாவை எதுவும் சொல்லாதே. அஞ்சு வயசிலிருந்து அவளைத் தெரியும் எனக்கு. என் அம்மாவைத் தவிர எந்தப் பொண்ணும் எங்கிட்ட சகஜமாப் பழகாத போது, ரம்யா மட்டும்தான் பாசத்தைப் பொழிஞ்சா. அவளை என் மகளா, என் அம்மாவாகத்தான் நெனைக்கறேன். சத்யா உனக்கு மட்டுமில்ல, எனக்கும் மகள்தான். அதனால, எப்போதும் நம்மோடயே இருக்கட்டுமே. நாளைக்கு அவகிட்ட நான் இதுபத்திப் பேசறேன். இப்போ தூங்கலாமே” என்று விளக்கணைத்தான் நந்தகோபால்.

 

அடுத்த நாள் காலை கண்விழிக்கும்போது, பக்கத்தில் கமலா இல்லை. வீட்டுக்கு யாரோ வந்திருந்தார்கள். யாராயிருந்தால் என்ன? அவளாக வந்து எழுப்பும் வரை படுத்திருக்கலாம் என்று நினைத்தான். வெளியே பேச்சு கேட்டது.

 

“நீ சொல்றதெல்லாம் சரிதான் கமலா. நல்ல மனுஷனாத்தான் தெரியறார். இருந்தாலும், வேற ஆம்பளைதானே! எந்த அளவுக்கு நம்ப முடியும்? சொந்த அப்பாவா? வேட்டியில ஈரம் இருக்கறவரைக்கும், ஒக்காந்தா மண்ணு ஓட்டத்தான் செய்யும். பேப்பர்லயும், டீவீயிலையும்  வர நியூஸ் எல்லாம் பார்த்தா, யாரையும் நம்ப முடியாது போல இருக்கு இந்தக் காலத்திலே. அதனால சத்யா வயசுக்கு வரவரைக்கும் வெய்ட் பண்ணாதே! ஏதாவது சாக்கு போக்கு சொல்லி, இப்பவே அவளை ஹாஸ்டல்ல சேர்த்துடு. அதுதான் அவளுக்கும் நல்லது, உனக்கு இனிமே ஏதாவது பொறந்தா, அதுக்கும் நல்லது. கைவேலை இருக்கு. நான் அப்புறமா வரேன்”

 

“ஆமாம், போயிட்டு வாங்க; அவரும் எந்திருச்சிருவார்” என்று வாசல் கதவைத் தாளிடச் சென்ற கமலா, படுக்கையறையிலிருந்து வேகமாய் வெளியே வந்த நந்தகோபாலை, “குட் மார்னிங்!” என்று தொட்டு நிறுத்தினாள்.

 

அவளைப் பிடித்துக் கீழே தள்ளிய நந்தகோபால், வெறிபிடித்த பைத்தியக்காரன் போல, “தொடாதே! தொடாதே! தொடாதே!” என்று கத்திக் கொண்டே திறந்திருந்த வாசல் வழியே, லுங்கி அவிழ்வதுகூடத் தெரியாமல், அம்மணமாய் வெளியே ஓடினான்.

_________________________________________________________________________________________

 

 

Series Navigationதாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்கமலா இந்திரஜித் கதைகள்நோ செண்டிமெண்ட்ஸ் மம்மி!முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லைமருமகளின் மர்மம் – 12நவீன அரபு இலக்கியம் : எச்.பீர்முகமது நூல் அறிமுகம்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 42
author

எஸ். சிவகுமார்

Similar Posts

Comments

Leave a Reply to வில்லவன்கோதை Cancel reply

Your email address will not be published. Required fields are marked *