தொடுவானம் 59. அன்பைத் தேடி

This entry is part 9 of 25 in the series 15 மார்ச் 2015

மிகுந்த மன வேதனையுடன்தான் வேரோனிக்காவிடம் விடை பெற்றேன். ஒரு வேளை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டால் எங்களுடைய பிரிவு நிரந்தரம் என்பது எனக்கு நன்கு தெரிந்தது. அதே வேளையில் நான் மனது வைத்தால் இவளுக்காக இலக்கியம் படிக்கலாம்.அனால் ஒரு பெண்ணுக்காக மருத்துவப் படிப்பை விட்டுக் கொடுப்பதா? இந்த இக்கட்டான சூழலில் மருத்துவம் பயிலும் வாய்ப்பு கிடைக்கிறதா என்பதைப் பார்த்தபின்பு ஒரு முடிவு எடுக்கலாம் என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டேன்.
ஒரு பெண்ணை விட்டுப் பிரிந்துபோகவேண்டும் என்பதற்காகவே அப்பா என்னை மருத்துவம் படிக்கவேண்டும் என்று தமிழகம் அனுப்பியுள்ளார். அங்கு ஒருத்தி நான் மருத்துவம் பயின்று திரும்புவேன் என்று காத்துள்ளாள். ஆனால் இங்கு ஒருத்தி மருத்துவம் பயின்றால் பிரிந்துபோவோம் என்று கவலை கொள்கிறாள்! இவள் இலக்கியம் படிக்கச் சொல்கிறாள். மருத்துவம் பயின்றாலும் இலக்கியத்தின் மேல் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். மருத்துவம் கிடைக்காத சூழலில் வேண்டுமானால் இலக்கிய படிப்பில் சேரலாம் என்பதில் உறுதியாகவே இருந்தேன். ஆனால் இதை நான் வெரோனிக்காவிடம் கூறவில்லை.
இப்போதெல்லாம் இரயில் பிரயாணம் எனக்கு சாதாரணமாகிவிட்டது. தாம்பரம் இரயில் நிலையத்தில் ” ஹிக்கின்பாத்தம் ” புத்தகக் கடை உள்ளது. அங்கு எனக்குப் பிடித்தமான நாவல் ஒன்றை வாங்கிக்கொள்வேன். இரவுப் பயணத்தின்போது விளக்கொளி மங்கலாக இருந்தபோதும் தூக்கம் வரும் வரை படித்துக்கொண்டிருப்பேன்.
பிரயாணத்தின் போது பக்கத்தில் உள்ளவர்கள் பேச்சு கொடுப்பார்கள்.பேச்சு வாக்கில் அவர்களில் பெரும்பாலோர், ” சார் என்ன ‘ காஸ்ட் ‘ ? ” என்று கேட்பார்கள். அது எனக்கு கோபத்தை உண்டுபண்ணும்.சாதிகளை நம்புபவர்கள் முட்டாள்கள் என்ற எண்ணம் கொண்டவன் நான்.அது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் நான் கோபத்தை அடக்கிக்கொண்டு , ” எனக்கு சாதி இல்லை.” என்பேன். அது எப்படி என்று கேட்பார்கள். ” சாதி என்பது தமிழ் நாட்டில் வாழும் உங்களுக்குதான். நான் சிங்கப்பூரிலிருந்து இங்கு படிக்க வந்துள்ளேன். அங்கு எங்களுக்கு சாதிகள் கிடையாது. சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி பாடியதை நாங்கள் ஏற்று ஒற்றுமையுடன் தமிழன் என்ற உணர்வுடன் வாழ்கிறோம். ” என்று நான் சொல்வதைக் கேட்டு திகைப்பார்கள். அதன் பின்பு நான் புத்தகத்தில் மூழ்கிவிடுவேன்.
நான் கல்லூரியில் படிப்பு முடித்து வந்ததை அறிந்த கிராமத்து மக்கள் மகிழ்ச்சி கொண்டனர்.அம்மாவுக்கு ஒரே பெருமை! அதைவிட கோகிலத்துக்கு தலை கால் புரியவில்லை. இனிமேல் நான் கிராமத்தில்தான் இருப்பேன் என்று எண்ணிவிட்டாள். அடிக்கடி வீட்டுக்கு வருவதும் போவதுமாகவே இருந்தாள்.
வழக்கம்போல் பால்பிள்ளை காலையிலும் மாலையிலும் தூண்டில்களுடன் வந்து விடுவான். தோட்டத்து குப்பை மேட்டில் மண் புழுக்கள் சேகரிப்பான். நாங்கள் கையில் தூண்டிலுடன் குளத்தங்கரை அல்லது ஆற்றங்கரைக்கோ சென்று விடுவோம். குளத்தங்கரை என்றால் கோகிலம் கட்டாயம் பலமுறை வந்துவிடுவாள்.தண்ணீர் கொண்டு செல்லும் சாக்கில் அங்கேயே நேரத்தைக் கழிப்பாள்.யாரும் இல்லாதபோது பேசுவாள்.
” மெட்ராசில் இருந்த போது என் ஞாபகம் வந்ததா? ” .என்பாள்.
” நான் பரீட்சைக்காக படித்துக் கொண்டிருந்தேன்.உன்னையே நினைத்துக் கொண்டிருந்தால் எப்படி படிப்பது? ” என்பேன். நான் அங்கு வெரோனிக்காவின் நினைவில் இருந்தேன் என்று எப்படி சொல்வது? அவள் கொண்டுள்ள மகிழ்ச்சியை நான் கெடுக்க விரும்பவில்லை.
” எனக்கு அப்படி இல்லை. எப்போதும் உங்கள் நினைவுதான். எப்போது வருவீர்கள், பார்த்து பேசலாம் என்று காத்திருந்தேன். உங்களுக்குதான் என் மேல் ஆசை இல்லை.” கோபம் கொண்டது போல் பேசுவாள்.
” நான்தான் சொல்லிவிட்டேனே? நீ மணமானவள். அடுத்தவனின் மனைவி. நீ அவனுக்குதான் சொந்தம். என் மீது இப்படி ஆசை வைப்பது தவறு என்பதை? ” முன்பு சொன்னதை மீண்டும் சொல்வேன்.
” நானும்தான் முன்பே உங்களிடம் சொல்லிவிட்டேனே. அவன் மீது எனக்கு ஆசை வரலை. என் ஆசையெல்லாம் உங்கள் மேல்தான்.அது ஏன் என்று தெரியலை. நான் முழுசாக உங்களுக்கு சொந்தமாக வேண்டும்.” முழுதாகச் சொந்தம் என்பதின் பொருள் எனக்குப் புரிந்தது.அவள் தன்னுடைய உள்ளத்துடன் உடலையும் எனக்குத் தர தயாராகிவிட்டாள்!
” அதுதான் முடியாது என்று சொல்லிவிட்டேனே? ஆனால் உன்னிடம் பேசுவது பிடிக்குது. பேசுவதில் தவறில்லைதான்.”
” அது போதும் எனக்கு. உங்களுடன் பேசுவது கூட எனக்கு போதும்தான். என்னிடம் பேசாமல் இருந்து விடாதீர்கள். அப்புறம் எனக்கு பைத்தியம் பிடித்து விட்டால் நீங்கள்தான் காரணம் .ஆவீர்கள்! ” அது கேட்டு நான் நிலை குலைந்தேன்.
ஒரு முடிவுக்கு வந்தேன். கோகிலத்திடம் அளவோடு பேசுவது.அவளுக்கு அதுதான் மகிழ்ச்சி எனில் அப்படியே தொடர்வது. ஒரு வேளை அது தவறான முடிவாகவும் இருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் அதுவே சரியான முடிவாகத் தெரிந்தது.கடைசி வரை அவள் எதிர்பார்ப்பது தவறு என்று சொல்லிக்கொண்டே இருப்பது. அதன் பின்பு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விடலாம்.
அவள் அன்பைத்தானே தேடி என்னிடம் வருகிறாள்? ” அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ” என்று வள்ளுவர் சொல்லியுள்ளாரே! இது அடுத்தவன் மனைவி மீது கொள்ளும் அன்பு. அவள் மாற்றான் தோட்டத்து மல்லிகை. அதில் மணம் வீசினாலும் சிக்கல் உள்ளது. ” பிறன் மனை நோக்காத பேராண்மை ” என்று இன்னொரு குறளில் வள்ளுவர் கூறியுள்ளதும் எனக்கு தெரிந்ததுதான். அவளை நான் அவ்வாறு காமத்தோடு பார்க்கவில்லையே? ஒரு பெண் அன்புக்காக ஏங்குகிறாள்.அந்த அன்பை மட்டும் தருவதில் என்ன தவறு என்று நான் எண்ணிக்கொண்டேன். அனால் ஒரு பெண்ணிடம் செலுத்தும் அன்பில் நம்மை அறியாமலேயே எப்படியோ காமம் கலந்துவிடுகிறதே! அது எப்படி என்பது எனக்குத் தெரியவில்லை. அவள் காமத்துடன் கூடிய காதலை எதிர்பார்த்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்.
தனிமையில் இருந்தபோது வாங்கி வந்த நாவல் படிப்பது, பால்பிள்ளையுடன் தூண்டில் போடுவது, வயல் வெளிக்கு நிலங்களைப் பார்க்கச் செல்வது, என்று நேரம் கழிந்தது. வெரோனிக்காவின் நினைவும் அவ்வப்போது வரும். அனால் அது பெரும் கவலை தரவில்லை. அவள் எங்கு போய்விட்டாள்? சென்னையில்தானே இருக்கிறாள். பார்க்கவேண்டும் என்றால் தாம்பரம் சென்று அத்தை வீட்டில் தங்கி பார்த்துவிட்டு வரலாம் ஆனால் அப்படி அவசரம் ஏதும் இல்லை.
அண்ணன் அண்ணி இருவரும் கள்ளக்குறிச்சி அருகில் முடியனூர் என்ற கிராமத்தில் வாடகை வீட்டில் இருந்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் அரசு பள்ளிகளில் வேலை கிடைத்துவிட்டது. அண்ணன் அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த நாகலூர் என்ற இன்னொரு கிராமத்து கழக உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார்.அண்ணி முடியனூர் துவக்கப் பள்ளியில் ஆசிரியையாக நியமணம் பெற்றிருந்தார். என்னை அங்கு வந்து கொஞ்ச நாட்கள் தங்கிவிட்டுச் செல்லுமாறு அண்ணன் கடிதம் எழுதியிருந்தார்.
அவர்களுடன் தங்கி இருப்பதும் நல்லதுதான், அவர்களுடன் இன்னும் நெருக்கமாகலாம் என்று தோன்றியது.இன்னும் அவர்களுடன் பேசும்போது ஒருவித கூச்சமே மேலோங்கியது. அண்ணியிடம் கொஞ்சம் கூச்சம் குறைந்திருந்தது.சென்ற முறை கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது அவருடன் நிறைய பேச முடிந்தது. ஆனால் அண்ணனுடன் இன்னும் சரியாக பேச முடியவில்லை.அத்துடன் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட்டால் விடுமுறைகளின் போதுதான் செல்ல முடியும்.
அம்மாவிடம் அது பற்றி சொன்னபின் பிரயாண ஏற்பாடுகள் செய்தேன்.இரண்டு வாரங்களுக்கான துணிமணிகளை பிரயாணப் பையில் வைத்துக்கொண்டேன்.அண்ணனுக்கு அம்மா முறுக்கு செய்துத் தந்தார். அவருக்கு முறுக்கு அதிகம் பிடிக்குமாம். சிங்கப்பூரில் நான் முறுக்கு சாப்பிட்டு பழக்கம் இல்லை. அது எனக்கும் பிடித்திருந்தது. அம்மா நன்றாக முறுக்கு செய்வார். அவருக்கு உதவி செய்ய கோகிலம் வந்து விட்டாள். சிரிக்க சிரிக்க பேசிக்கொண்டு, உரக்க உரக்க சிரித்துக்கொண்டு, வாய்ப்பு கிட்டும்போது என்னையும் பார்த்துக்கொண்டு அவள் உதவினாள். ஒரு பெண்ணுக்கு ஆசை என்றால் அதை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறாள்!
நான் அண்ணன் வீட்டுக்கு செல்வது அவளுக்குத் தெரிந்ததும் முகம் வாடியது. அதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்காக நான் போகாமல் இருப்பதா? இரண்டு வாரத்தில் திரும்பி வந்து விடுவேன் என்று அவளுக்கு சமாதானம் சொன்னேன் – குளத்தங்கரையில். அவள் கண் கலங்கினாள். பெண்களுக்கு எங்கிருந்துதான் இப்படி கண்ணீர் வருகிறதோ? எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று நான் சொல்ல மாட்டேன். எனக்கு எல்லாம் புரிந்தது. இந்த உறவு அன்பில் துவங்கி விபரீதமாக மாறாமல் இருந்தால் சரி என்று மனதை தேற்றிக்கொண்டேன்.பெண்ணின் மனம் ( அது கிராமத்துப் பெண்ணாக இருந்தாலும் சரி படித்த பட்டணத்துப் பெண்ணாக இருந்தாலும் சரி ) மிகவும் மென்மையானது என்பது புரிந்தது. அதில் மணமான பெண்கூட விதிவிலக்கல்ல என்பதும் தெரிந்தது. பெண் மீது அன்பு கொண்டு அவளை எப்போதும் மகிழ்ச்சியாகவே வைத்திருப்பதும் சிரமமானது என்பதும் தெரிந்தது.
இந்த முறை பேருந்தில் பிரயாணம் மேற்கொள்ள வேண்டும். நான் சிதம்பரத்திலிருந்து விருத்தாசலம் சென்று அங்கிருந்து வேப்பூர் செல்லவேண்டும். அங்கிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் பேருந்தில் ஏறி முடியனூர் கிராமத்தில் இறங்க வேண்டும்.ஆக மூன்று பேருந்துகள் மாறி செல்லவேண்டும். பரவாயில்லை. பல ஊர்களைப் பார்க்கலாம் என்று உற்சாகமாகவே புறப்பட்டேன்!

( கனவுகள் தொடரும்…)

Series Navigationதிருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்புநிழல் தரும் மலர்ச்செடி
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

4 Comments

  1. Avatar
    இலக்கியா தேன்மொழி says:

    நானும்தான் முன்பே உங்களிடம் சொல்லிவிட்டேனே. அவன் மீது எனக்கு ஆசை வரலை. என் ஆசையெல்லாம் உங்கள் மேல்தான்.அது ஏன் என்று தெரியலை. நான் முழுசாக உங்களுக்கு சொந்தமாக வேண்டும்.”//

    Looking forward to see how you are going to continue with this
    Mr. Johnson

  2. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள இலக்கியா தேன்மொழி,தொடுவானம் உங்களைக் கவர்வது குறித்து மகிழ்ச்சி. இது சிக்கலான சூழ்நிலைதான். மணமான ஒரு புதுப் பெண் கணவனைப் பிடிக்கவில்லை , அந்த கல்லூரி மாணவனுக்கு தான் முழுதுமாக சொந்தமாக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாள்.இதைத் தமிழ்ச் சமுதாயம் நிச்சயமாக ஏற்காது. அனால் அதுதானே அன்று நடந்தது! அவன் அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு மருத்தவக் கல்லூரியின் நேர்முகத் தேர்வுக்கு செல்கிறான்.இடம் கிடைக்குமா இல்லையா என்பது வேறு.ஆனால் இடம் கிடைக்காவிட்டால் இலக்கியம் பயில அவன் சென்னைக்கு மீண்டும் செல்லத்தான் [போகிறான். பாவம் அவள்! என்ன செய்யப்போகிறாள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்ப்போமே! கதையை ஆழ்ந்து படிப்பது தெரிகிறது. பாராட்டுகள்….அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  3. Avatar
    இலக்கியா தேன்மொழி says:

    ஒருவர் எழுதும் எழுத்தில் அவர் யார் என்பது புலனாகும்…
    உங்கள் எழுத்து உங்களைப் பற்றி சொல்கிறது ஜான்சன் அவர்களே…

  4. Avatar
    Dr.G.Johnson says:

    உண்மைதான் இலக்கியா தேன்மொழி. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல் படைப்பாளர்களின் அழகும் அவர்கள் எழுதும் படைப்புகளில் பிரதிபலிக்கும்தானெ? என்னதான் கற்பனையாகவும் புனைவாகவும் எழுதினாலும் அவர்களின் உண்மை நிலையும் எப்படியாவது வெளியில் தோன்றவே செய்யும். உங்களுடைய கருத்துக்கு நன்றி இலக்கியா தேன்மொழி……அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply to இலக்கியா தேன்மொழி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *