எலி வளைகள்

author
4
0 minutes, 4 seconds Read
This entry is part 17 of 29 in the series 9 அக்டோபர் 2016

chennai

சோம. அழகு

காலி டப்பாக்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, விதவிதமான வண்ணங்கள் பூசி, ஆங்காங்கே சாளரங்களுக்காகத் துளையிட்டு….. அட! அடுக்குமாடிக் குடியிருப்புகளைத்தான் சொல்கிறேன். சென்னையிலும் உலகமயமாக்கலுக்கு வளைந்து கொடுக்கும் இன்ன பிற பெருநகரங்களிலும் இடப்பற்றாக்குறை காரணமாக ‘இவ்வகைக் குடியிருப்புகள் சகஜம்’ என நியாயம் கற்பிக்க முனையும் போதே, ஏரிகளுக்கும் குளங்களுக்கும் சமாதியாய் இவை எழுவது மனதைச் சமாதானம் செய்வதாய் இல்லை . மேலும் நிறைய இடம் இருக்கும் என் ஊரில் சமீப காலமாக முளைத்துள்ள இந்த அடுக்கி வைக்கப்பட்டுள்ள காலி டப்பாக்களைப் பார்க்கும்போது எனது ஊரிலும் சூரியன் “மேற்கிலிருந்து” எழும்ப ஆயத்தமாகிறதோ எனத் தோன்றுகிறது.

 

இந்த அடுக்குமாடிக் கட்டிடங்களுக்குத் தினுசு தினுசாக விளம்பரம் வேறு. எங்கள் பகுதியில் இருக்கும் ஒரு மட(த்தனமான)ப்பள்ளியின் பெயரைச் சொல்லி அமோக விற்பனை நடைபெறுகின்றது. தனிக்குடியிருப்புகள், வளவுகள் முதலியவற்றைப் பார்க்கும்போது ‘வீடு’ என்று உணரும் மனதிற்கு இந்த டப்பாக்களை எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் ‘கட்டிடம்’ என்பததைத் தாண்டி வேறு எதுவும் தோன்றவில்லை.

 

அன்பு நகரில் இருக்கும் ஹவுசிங் போர்டு குடியிருப்புகள், தெற்கு மவுண்ட் சாலையில் உள்ள குடிசை மாற்று வாரியம் கட்டித் தந்த அடுக்குமாடிக் குடியிருப்பு எனச் சில விதிவிலக்குகள் உண்டு. இந்தச் சில குடியிருப்புகளைக் கடந்து செல்கையில் காணும் காட்சிகள், என் மக்கள் தனித்தீவுகளாகி விடவில்லை என்பதை உணர்த்தி இனம் புரியாத மகிழ்வைத் தரும். ஆச்சி ஒருத்தி எதிர்மாடியில் உள்ள குழந்தையைக் கொஞ்சியது, பெண்கள் கால் நீட்டி அமர்ந்து தானியம் புடைத்துக் கொண்டே பாடு பேசியது, குழந்தைகள் வட்டார வழக்கிலேயே பேசிக் கொண்டு விளையாடியது, முதல் மாடியில் இருக்கும் குடும்பத்தலைவி மாடத்தில் நின்று கொண்டே கீழ் வீட்டுக் குடும்பத்தலைவியிடம் சமையல் குறிப்பு கேட்டது என இயல்பானவை அனைத்தையும் இப்படி எழுதி ரசிக்க வேண்டிய கட்டாயம். கீழ் வீட்டு அக்காவுக்குத் தெரியாத சமையல் குறிப்பா யூ-டியூபுக்குத் தெரியப் போகிறது ? இப்படிப்பட்ட அடுக்குமாடிக்  ‘குடியிருப்புகளைக்’ கொண்ட என் ஊரில் வந்து அடுக்குமாடிக் ‘கட்டிடங்களைக்’ கட்டினால் எனக்குக் கோபம் வராதா என்ன ? என் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் பதினைந்து அடுக்கப்பட்ட டப்பாக்கள் இருக்கின்றன. டப்பாக்கள் பெருகப் பெருக நிலத்தடி நீர் அருகி, மனித மனம் இறுகி, புன்னகைப் பரிமாற்றம் படிப்படியாகக் குறைந்து அறவே நின்றுவிட்டது போன்ற உணர்வு.

 

இதில் வசிப்பவர்களின் உரையாடல்களைக் கொஞ்சம் கேட்டுப் பாருங்களேன். பெரும்பாலும் பள்ளி,கல்லூரிகளின் தரம், மதிப்பெண்கள், வெளிநாட்டு வேலை, பங்குச்சந்தை என வறண்ட பேச்சுக்களாகத்தான் இருக்கும். அடுத்தவர் பிள்ளையைக் கூட அளவாகத்தான் கொஞ்சுவார்கள். அதில்தான் எவ்வளவு செயற்கைத்தனம் ! கொஞ்சுவதற்கும் ஆங்கிலத்தை விட்டால் நம் மொழியில் சொற்களே இல்லை. என்ன செய்வார்கள், பாவம் !!! மேல் வீட்டுக்காரனின் புது காரைக் கூட முகநூலில்தான் ‘லைக்’ செய்வார்கள். பிள்ளைக்குப் பிறந்தநாள் வரும்போது மட்டும் எல்லோர் மேலும் பாசம் பீறிட்டு எழும். பிறந்தநாள் விழாவைச் சுயதம்பட்டம் எனக் கொள்க !

 

அடுக்குமாடிக் குடியிருப்புகளை எலி வளைகளோடு ஒப்பிடலாம். முதற்காரணம், இரண்டிற்கும் புறவாசல் கிடையாது. இரண்டாவது, நேரம் தவறாமை. வளையை விட்டுச் செல்வதிலும் மீண்டும் வந்து அடைவதிலும் நேரத்தைத் துல்லியமாகப் பின்பற்றுபவை எலிகள். தினமும், சரியாக காலை 9 மணிக்கு உயிரிழக்கும் டப்பாக்கள் மாலை 6 மணிக்கு மீண்டும் உயிர்பெறும். காலை 11 மணிக்கு காய்கறி விற்றுக்கொண்டு வரும் பெண்களுக்கு இந்தக் கட்டிடங்கள் ஏமாற்றத்தையே தரும்.

 

மாலை 6 மணியளவில் அரிதிலும் அரிதாக பிள்ளைகளுடன் ‘பார்க்’ எனப்படும் இடத்தில் கூடுவார்கள் தாய்மார்கள். ‘பார்க்’ : ஏண்டா ! நாலு குச்சிக் கம்பை (மரம், செடியாம் !) நட்டு, மிச்ச இடமெல்லாம் சிமெண்ட் பூசி, இரண்டு ஊஞ்சலைத் தொங்கவிட்டா பார்க் ஆகிடுமா ? பிள்ளைகள் விளையாட இடம் இல்லாது மூச்சு முட்டிக் கொண்டு திணற, அம்மாக்களோ சீரியல் கதைகளைப் பேசிக்கொண்டு இருப்பார்கள். இந்த ஒரு விஷயம் மட்டும் எல்லா இடங்களிலும் ஒன்றுதான். என் ஊரில் விஜய் டி.வி சீரியல் என்றால் சென்னையில் ஸ்டார் டி.வி சீரியல். வித்தியாசம் அவ்வளவே !

 

தனி வீடுகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள மரம் செடிகளுக்கு நீர் பாய்ச்சி உயிராய் வளர்த்தெடுப்பார்கள் ஆதலால், தரிசு நிலப்பரப்பு கூட வளமையும் பசுமையுமாய்ச் செழித்திருக்கும். எலிப் பொந்தினுள்          எங்கு மரம் வைப்பது? என்னத்தை வளர்த்தெடுப்பது? பிஞ்சு விரல்களில் மண்ணை ஒட்ட விடாத பெற்றோர்கள், வருங்காலத்தில் பிள்ளைகள் தங்களிடமும் ஒட்டுதல் இல்லாமல்தான் இருப்பார்கள் என்பதை இப்போதே மனதளவில் ஏற்றுக்கொள்ளப் பழகியிருப்பார்கள்.

 

தொ.பரமசிவன் (தொ.ப) அவர்கள் இதற்கு முன் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்வீட்டு நபர் தொ.பவிடம், “நீங்கள்தான் தொ.ப வா ? கமலஹாசனின் அபிமானத்திற்குரிய தொ.பரமசிவனா நீங்கள் ? உங்களைத்தானே பார்த்து விட்டுச் சென்றார் ? நிறைய புத்தகங்கள் எழுதியது நீங்கள்தானா?” என அடுக்கிக் கொண்டே சென்றாராம். இத்தனைக்கும் இரண்டு ஆண்டுகளாக அந்த நபர் அங்குதான் குடி இருந்திருக்கிறார். தொ.ப. அவர்களைக் கீழ் வீட்டுக்காரருக்கு அறிமுகப்படுத்த கமலஹாசன் சென்னையில் இருந்து விமானத்தில் பறந்து வர வேண்டியிருக்கிறது. என்னத்தச் சொல்ல?

 

‘மாற்றம் ஒன்றே மாறாதது; கால மாற்றத்தைப் போல சமூக மாற்றத்தையும் ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும்’ என்னும் ஜென் தத்துப் பித்து வாதங்களை அனைவரும் அறிவோம். எனினும், கேள்வி மற்றும் விமர்சனத்திற்கு உட்படுத்தாத எந்த ஒரு மாற்றமும் விரும்பத்தகாத பின்விளைவுகளுக்கு வித்திடலாம். பன்னாட்டு நிறுவனங்களின் உணவு அரசியல் நமது ஒட்டுமொத்த சமூகத்தின் உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவித்தமை இதற்குச் சான்றாகும். மும்பையில் பரம்பரையாக பரந்த நிலத்தில் தனிவீட்டில் குடியிருப்போரை மிரட்டி அடிமாட்டு விலையில் நிலத்தை எழுதி வாங்கி அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் கட்டிட மாஃபியாக்கள் (Building Mafia) ஏனைய ஊர்களுக்கும் பெருகும் ஆபத்து வெகு தூரத்தில் இல்லை. “ஐம்பது குடும்பங்கள் வாழ வேண்டிய இடத்தில் ஒரு குடும்பமா?” என்ற பொதுவுடைமைச் சித்தாந்தம் வேறு.

 

கொஞ்சம் கொஞ்சமாக என் ஊரும் மண் வாசனையைத் தொலைக்க ஆரம்பித்துவிட்டது. மண் இருந்தால்தானே வாசனை? எங்கே மண்ணைப் பார்த்தாலும் (அது விளைநிலமாக இருந்தால் கூட) சிமெண்ட்டைப் போட்டு கட்டிட அரக்கன்களை நிற்க விட்டால்….? இந்தப் பணப் பேய்களுக்கெல்லாம் மிருகினஜம்போ, கபீம்குபாம்தான் சரி.

தனித்தனியாக சேர்ந்து வாழ்ந்த நாம் சேர்ந்து தனித்தனியாக வாழ எத்தனிப்பது என்ன ஒரு நகை முரண் !

 

 

  • சோம. அழகு
Series Navigationகாமிக்ஸ் – பியூர் சினிமா புத்தக அங்காடிகதை சொல்லி (சென்றவாரத் தொடர்ச்சி) – 3
author

Similar Posts

4 Comments

  1. Avatar
    meenal devaraajan says:

    அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்பதை அட்டகாசமாக விளக்கிவிட்டீர்கள். நிலத்தடி நீர் போய்விடும் என்பது உண்மை. மற்றும் சாக்கடைக் கழிவநீர் சிலசமயங்களில் பொங்கி வழியும் போக இடமின்றி !பொறுத்திருந்து பாருங்கள் !!

  2. Avatar
    கிருஷ்ணன் நல்லபெருமாள் says:

    “எலி வளை ஆனாலும் தனி வளை” என்ற பழமொழியின் தனிமனித உளவியல் சிந்தனைக்குள்தான் இந்த அடுகுமாடிவீட்டு வியாபாரிகள் வெற்றிபெறுகிறார்கள். சென்னையில் ‘எலிவளை’ காலத்தின் கட்டாயம்! பரந்து விரிந்த மற்ற ஊர்களுக்கு என்ன வந்தது? ‘எள்ளுதான் எண்ணைக்குக் காய்கிறது! எலிப்புழுக்கை ஏன் காய்கிறது’ என்ற பழமொழி சிந்தனைப் புதையலிலிருந்து பீறிட்டுக்கொண்டு வெளியே வந்து பல்லை இளித்தது. தனி வீடுகள், மரங்கள், பறவைகள் என்பது சங்க இலக்கியம்போல் அருகிவிடுமோ என்னவோ?

  3. Avatar
    Krishnan Nallaperumal says:

    அடுக்குமாடிக் குடியிருப்புகள் –
    தனித்தனியாக சேர்ந்து வாழ்ந்த மக்கள்
    சேர்ந்து தனித்தனியாக வாழ்வது

    இக்கவிதை தந்த ‘கண்ணதாசன் கவிதை நினை’வும், கவிதை விளைவும்-

    ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி…
    தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்…
    வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் .. வேணியிலே கொதியிருக்கும்
    கையகலம் கதவிருக்கும் காத்து வர வழியிருக்கும்…
    வழி மேலே விழியிருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்…

    பாரதியின் காணி நிலம், கண்ணதாசன் சிறுவீடு
    -கனவாகப் போனதம்மா! கண்ணீரில் கரைந்ததம்மா!
    அடுக்குமாடிக் குடியிருப்பு – அக்கப்போர் தனியிருப்பு!
    தனித்தனியாய் வீடுகட்டி சேர்ந்திருந்தோம் அப்போது
    ஒன்றாக ஓங்கிக்கட்டி தனித்தனியானோம் இப்போது!

  4. Avatar
    தாரா says:

    தீப்பெட்டி குடியிருப்பில் வசிப்பவர்களை கண்டு ஏக்கப் பெருமூச்சு விட்ட காலம் ஒன்று உண்டு. என் சிறு வயதில். எத்தனை அயல்வாசிகள்.எப்போதும் விளையாட தோழர்கள். உணவு பகிர்வு. ..என்றெல்லாம் பொருமியதுண்டு.அப்போது அப்படி எல்லாம் தான் இருந்தது. .அதனால் அந்த ஆசைக்கு அர்த்தமும் இருந்தது. .ஆனால் இப்போதோ நிலைமை தலைகீழ். அடுக்கு மாடி வாழ்க்கை நம்மை தனிமை வாழ்க்கைக்கு இழுத்து செல்லும் முடிவு. *சொந்த காரியம் சிந்தாபாத்* என்று என் பாட்டி நகைச்சுவையோடு கூறியது உண்மையாயுள்ளது. அவரவர் தேவைகளுக்கு மட்டும் அடுத்த வீட்டுகாரரிடம் பேச்சு. இல்லையென்றால் கண்மூடி வாழ்க்கை. எனக்கு தெரிந்த குடும்பத்தில் பெரியவர் ஒருவர் இறந்து போனார்.அபார்ட்மெண்டில் உள்ளவர்கள் அவரது நெருங்கிய உறவினர்கள் வரும் வரை காக்க விடவில்லை. பல்வேறு காரணங்களை கூறி அவ்வீட்டாரை கனத்த இதயத்தோடு மரண சடங்குகளை அவசரமாக முடிக்க வைத்தனர்…பின்னர் தொலைதூரத்தில் இருந்து வந்தவர்கள் வருத்தப் பட்டதை நானறிவேன்…இப்படி அவசரக்காரர்களுக்கு ஏற்ற அடுக்கு மாடி வாழ்க்கை புற்றீசல் போல் எல்லா நகரங்களிலும் ஆக்கிரமித்து வருகின்றது என்பது நிதர்சனமான உண்மை..

Leave a Reply to தாரா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *