மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மர்ம மரணமும் மக்களாட்சி மாண்பின் மிகப் பட்டவர்த்தனமான படுகொலையும்

This entry is part 6 of 16 in the series 20 செப்டம்பர் 2020

_ லதா ராமகிருஷ்ணன்

ஜூன் மாதம் 14ஆந் தேதி காலை பதினோறு மணியளவில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அறையை அவருடைய வீட்டுப் பணியாட்களில் ஒருவர் தட்டியபோது அவர் திறக்கவில்லை என்றும் , கம்ப்யூட்டர் பூட்டைத் திறக்கும் பணி தெரிந்தவரை அழைத்து பூட்டைத் திறக்கச்சொல்லிப் பார்த்தபோது உள்ளே சுஷாந்த் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததாகவும், கூறப்பட்டது. சுஷாந்த் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தது அவருடைய உடலை இறக்கியதாகக் கூறப்படும் பித்தானி மட்டுமே. தகவலறிந்து வந்த மும்பைக் காவல்துறை பார்த்தமாத்திரத்தில் அதைத் தற்கொலை என்றது. சுஷாந்த் சிங்கிற்கு மனச்சோர்வு நோய் உண்டென்றும் சுஷாந்த் மனநோயாளி என்றும் காரணம் கூறியது. மும்பை திரைப்படவுலகைச் சேர்ந்த மகேஷ் பட், கரன் ஜோகர் என பலரும் மனநோயின் பேராபத்துகள் குறித்துக் கட்டுரைகள் எழுதி சுஷாந்த் சிங்கிற்கு மும்முரமாக அஞ்சலி செலுத்தி முடித்தனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் அவர் இறப்பதற்கு ஒரு வார காலம் முன்பு வரை live-in-relationship இல் வாழ்ந்துவந்த ரியா சக்ரபர்த்தி என்ற இளம் நடிகை ஜூன் 8ந் தேதி பகல்பொழுதில் சுஷாந்த் சிங்கை விட்டுப் பிரிந்தார். அன்றிரவு ஏதோவொரு விருந்துநிகழ்வில் சுஷாந்த் சிங்கின் செயலர் திஷா பதினான்காம் மாடியிலிருந்து குதித்துத் தொற்கொலை செய்துகொண்டார்(என்று மும்பை காவல்துறை சொல்லுகிறது). அதுமுதல் சுஷாந்த் ‘அவர்கள் என்னையும் விடமாட்டார்கள்’ என்று சொல்லிக்கொண்டேயிருந்ததாக அவரோடு 8ந்தேதி முதல் 12ந்தேதி வரை இருந்த அவருடைய சகோதரி மீதுவும் இன்னும் சில நண்பர்களும் அவர் 14ந்தேதி இறந்த பின் ஊடகங்களில் தெரிவித்தார்கள்.

இந்த இரு மரணங்களும் தற்கொலையல்ல என்றும் கொலை என்றும் இதுபோன்ற கொலைகள் மும்பைத் திரைப்படவுலகில் இதற்குமுன்பும் நடந்தேறி  (ஜியா கான் என்ற இளம் நடிகையின் மரணம்போல்)  தற்கொலையாக்கப்பட்டு எந்த விசாரணையு மின்றி முடித்துவைக்கப்பட்டிருக்கின்றன என்றும் ரிபப்ளிக் தொலைக்காட்சியில் செய்திகள் தொடர்ந்து வெளியாக ஆரம்பித்தன. இந்தித் திரைப்பட உலகின் முன்னணி நடிகை கங்கனா ராவட் மும்பைத் திரைப்படவுலகில் திறமைகளை முன்னுக்கு வரவிடாமல் தடுக்கும் நபர்களையும் குழுக்களையும் குறித்து விரிவாகப் பேட்டியளித்தார். மகேஷ் பட் போன்றவர்கள் எப்படி, எதனால் சுஷாந்த் சிங்கின் மரணத்தை, இன்னும் சிலரின் இறப்புகளை மனநோய் காரணமாய் நிகழ்ந்துவிட்ட தற்கொலைகளாகப் பகுப்பதில், முடிவுசெய்வதில் முனைப்பாக இருக்கிறார்கள் என்று தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். மும்பைத் திரைப்படவெளியில் புதிதாக வரும் திறமைகளை ஓரங்கட்டுவதில் அங்குள்ள ‘வம்சாவளியினர்’ முனைப்பாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். மும்பைத் திரைப்படவுலகில் போதைப்பொருட் களின் புழக்கம் மிக அதிகம் என்று சுட்டிக்காட்டினார். சுஷாந்த் சிங் மரணம் தற்கொலையல்ல என்று கூறினார்.

 சுஷாந்த் சிங் மரணத்தை மும்பை காவல்துறை தற்கொலையாக முடித்துவைக்கப் பார்த்ததும், அந்த மரணம் குறுத்து FIR போடாததும், இந்த வருட பிப்பரவரி மாதத்திலேயே தன் மகனின் உயிருக்கு ஆபத்திருப்பதாக சுஷாந்தின் 74 வயது தந்தை (பாட்னாவில் வசிக்கும்) மும்பைக் காவல்துறைக்குத் தகவல் அனுப்பியும் அதை ஓரங்கட்டியது மும்பைக் காவல்துறை என்ற விவரமும், இத்தகைய மர்ம மரணங்களாகப் பகுக்கப்படும் உடலங்கள் மும்பை கூப்பர் மருத்துவமனைக்கே எடுத்துசெல்லப்பட்டு அங்கே தற்கொலைகளாகப் பகுக்கப்படுவதும் வெளியாயிற்று. 

ரியா சக்ரபர்த்தி சுஷாந்த் சிங்கின் பணத்தை நிர்வகித்துவந்ததும், அவருக்கும் அவருடைய தம்பிக்கும் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பிருப்பதும் தெரியவந்திருக்கிறது. ஆனால், ரியா, போதைப்பொருள்களையெல்லாம் சுஷாந்த் சிங்கிற்கே வாங்கியதாக ‘வாய்கூசாமல்’ இறந்தவர் மீது எல்லாப் பழியையும் போடுகிறார். சுஷாந்த் ஐந்து உளவியல் மருத்துவர்களிடம் சிகிச்சைபெற்றுவந்ததாகக் கூறுகிறார். சுஷாந்துடன் ஆறுவருட காலம் வாழ்ந்த இன்னொரு நடிகை அங்கிதாவும் சரி, சுஷாந்தை நெருக்கமாக அறிந்தவர்களும் சரி, அவர் போதைப்பொருட்களின் பிடியில் இருந்தவரல்ல, இருக்கக்கூடியவரல்ல என்று அடித்துக்கூறுகிறார்கள். போதைப்பொருட்கள் அவரறியாமல் அவருக்குத் தரப்பட்டிருக்கின்றன என்கிறார்கள். மனநோய் இருந்தால் ஒரே சமயத்தில் ஐந்து மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவார்களா என்ன என்கிறார்கள். மனநோய்க்கான மருந்தும், போதைப்பொருளும் சேர்த்துத் தரப்பட்டால் மரணம் நிச்சயம் என்கிறார்கள். [சுனந்தா புஷ்கரின் மரணம் அப்படித்தான் நிகழ்ந்தது என்றும் அந்த இறுதி மருத்துவ அறிக்கை தில்லி காவல்துறையால் ஓரங்கட்டப்பட்டது என்றும் இப்போது தகவல் கிடைத்திருப்பதாக ரிபப்ளிக் தொலைக்காட்சி தெரிவிக்கிறது].

சுஷாந்த் இறந்திருந்த நிலையும் அந்த அறையில் காணக்கிடைத்த சில விஷயங்களும் அது தற்கொலையில்லை என்று காட்டுவதாகக் கூறப்படுகிறது. தடயவியல் நிபுணர்கள் அவருடைய கழுத்தில் இருக்கும் கயிற்றுத்தடயங்கள் தற்கொலைக்கானவையல்ல என்று சுட்டிக்காட்டுகிறார்கள். சுஷாந்த் வீட்டிலிருந்தவர்கள் தரும் விவரங்கள் முரண்படுகின்றன. இறந்தபின் வெகு தாமதமாகவே அவருடைய உடல் போஸ்ட் மார்ட்டத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது என்று தெரிகிறது. இத்தனை காலதாமதமாகக் கிடைக்கும் ‘Viscera Report’ இல் அவர் வயிற்றில் வேறு ஏதேனும் விஷப்பொருள் கலந்திருந்தால் அது தெரிய வராது என்று சுட்டிக்காட்டுகிறார்கள் மருத்துவ நிபுணர்கள். Viscera Report’ஐ மறுஆய்வு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.  

ஆனால், பாட்னாவிலிருந்து வந்த காவல்துறை விசாரணைக் குழுவின் தலைவரை மும்பை அரசு கொரோனா குவாரண்ட்டைன் செய்து விசாரணை செய்யவிடாமல் தடுத்தது. மும்பையில் இறந்தவர் தொடர்பான விசாரணை மும்பையில்தான் நடக்கவேண்டும் என்று வலியுறுத்தியது. அதை தாமதப்படுத்தியதற்கு எந்தக் காரணமும் தரவில்லை. வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இன்று சிபிஐக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

சுஷாந்த் சிங்கிற்கு நீதி கிடைக்கவேண்டும் என்று உலகெங்கும் எழுந்த முழக்கத்திற்கு காரணகர்த்தாக்கள் என ரிபப்ளிக் தொலைக்காட்சி மற்றும் நடிகை கங்கனா ராவட் மீது மும்பை அரசின் கோபம் பலவகையிலும் வெளிப்படுகிறது. மும்பையிலுள்ள கங்கனா ராவட்டின் கோடிக்கணக்கான பெறுமானமுள்ள அலுவலகக் கட்டிடம் விதிமீறிக் கட்டப்பட்டிருக்கிறது என்ற பெயரில் சட்டப்படியான எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படாமல் இடித்துநொறுக்கப்பட்டிருக்கிறது.

மும்பையில் நடக்கும் அக்கிரமங்களைப் பற்றி அவர் கூறியதற்கு மும்பை மக்களை அவர் அவமதிக்கிறார் என்று சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவட் தொண்டர்களை உசுப்பிவிட்டுக்கொண்டிருக்கிறார். கங்கணாவின் கட்டிடம் இடிக்கப் பட்டது மும்பை முனிசிபாலிட்டியின் முடிவு – அதற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என்று கைகழுவுகிறார்கள். ஆனால், இந்த வழக்கு குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, உச்சநீதிமன்றம் போன்ற அமைப்புகள் மேற்கொள்லும் நடவடிக்கைகள் எல்லாமே மத்திய அரசின் அரசியல் சார் நடவடிக்கைகள் என்று கூறுகிறார்கள்.

திரு. உத்தவ் தாக்கரேயின் ஆட்சி குறித்து விமர்சனம் செய்யும் கேலிச்சித்திரம் ஒன்றைத் தன் நண்பர்களுக்கு அனுப்பிய முன்னாள் கப்பற்படை அதிகாரி ஒருவர் சிவசேனா தொண்டர்களால் பட்டப்பகலில் வீட்டுவாசலிலேயே தாக்கப்பட்டிருக் கிறார்கள். தொண்டர்களின் உணர்ச்சிவசப்பட்ட செய்கை அது என்று தட்டிக் கொடுக்கப்படுகிறது. செய்தி சேகரிக்கச் சென்ற ரிபப்ளிக் தொலைக்காட்சி நிரூபர் அனூஜை சிறையிலடைத்திருக்கிறது. அவருக்கு வழக்கறிஞரை அணுகும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு எப்படி செய்திகளுக்கான தகவல்கள் கிடைக்கின்றன என்று கேட்டு அவர் சித்திரவதைப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஓய்வுபெற்ற கப்பற்படை அதிகாரி தாக்கப்பட்டதற்கு முப்படைகளைச் சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், இண்டியா டுடே போன்ற ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிரூபர் கைதுசெய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு ஐந்து நாட்களுக்கும் மேலாக சித்திரவதை செய்யப்படுவதைக் கண்டித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. மாறாக, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சிறையிலடைக்கப்பட்டுள்ள ரியா சக்ரவர்த்திக்கு ஆதரவாய் பேசிக்கொண்டிருக்கிறது. சுஷாந்த் மனநோயாளியே என்று மறைமுகமாய் நிறுவும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. டைம்ஸ் நவ் தொலைக்காட்சி ஊடகமும் சுஷாந்த் வழக்கில் பல விவரங்களைத் திரட்டித் தந்திருக்கிறது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகப் பகுக்கப்பட்டிருக்கும் ரியா சக்ரவர்த்திக்கு ஆதரவாய் ‘அவர் வங்காளப் பெண்’ என்று வங்காளத்தில் காங்கிரஸாரும், ரியா பெண்ணென்பதால் ஆணாதிக்கவாதிகள் அவரைக் குற்றவாளியாக்கிவிட்டதாக மும்பைத் திரைப்படவுலகைச் சேர்ந்த பெண்களும் ஒரு மர்ம மரணத்தின் உண்மையறியும் தேடலை ஆண் – பெண் பாலின ஏற்றத்தாழ்வாக்கிக் கொண்டிருக் கிறார்கள். நல்லவேளையாக, ’டைம்ஸ் நவ்’வில் நாவிகா குமாரும், பத்மஜா ஜோஷியும் இந்த விஷயத்தை நியாயமாக அணுகுகுறார்கள்.

சமூகத்தின் நடந்தேறும் அநியாயங்கள் கட்சி சார்ந்து அணுகப்படுவதும், நியாய அநியாயங்கள், மனித உரிமைகள், பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், வெளிப்பாட்டுச் சுதந்திரம் எல்லாமே ஒரு தரப்பினர் பேசினால்தான் சரி, இன்னொரு தரப்பினர் பேசினால் அதை எதிர்க்கவேண்டியது என்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் அவலமான நிலையை சமூகத்தின் நான்காம் தூண் மேற்கொள்வதும், ஆட்சியதிகாரத்தில் இருந்தால் நாம் எதைவேண்டுமானாலும் செய்யலாம், கேட்பாரில்லை என்று மும்பை அரசு நினைப்பதும் கொரோனாவைக் காட்டிலும் அவலமாய் அச்சுறுத்துகின்றன.

  •  
Series Navigationமுள்அதோ பூமி
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *