முதல் மரியாதை தமிழில்  ஒரு செவ்வியல் திரைப்படமா ?

author
1
0 minutes, 3 seconds Read
This entry is part 6 of 13 in the series 11 ஏப்ரல் 2021

 

நடேசன் –  அவுஸ்திரேலியா

 

——————————————————————————

இளமைக்காலத்தில்  இயக்குநர் பாரதிராஜாவின்  முதல் மரியாதை திரைப்படத்தை   பார்த்தபோது,  என்னைக் கவர்ந்தது என்னவென்றால்,   அக்காலத்தில்  சிவாஜி ரசிகனாக இருந்த  எனக்கு   மத்திய வயதான ஒரு வருக்கு  இளம் பெண்ணில் ஏற்பட்ட காதல் ஒரு புதுமையாகவிருந்தது.   இது நல்ல திரைப்படமென்ற நினைவே மனதிலிருந்தது.

சமீபத்தில்  அதனை  தமிழின் செவ்வியல் படம் எனக்குறிப்பிட்டு  பலர் எழுதியதைப் படித்தபின்பு,  மீண்டும் பார்ப்போம் எனச் சமீபத்தில் பார்த்தபோது இந்தப்படம் புரட்சியானதோ புதுமையானதோ அல்ல,  படு பிற்போக்கு வாதத்தை வெளிக்கொணருகிறது என நினைக்க வைத்தது  .

ஒருகாலத்தில் எகிப்தியர்களிடையே அண்ணன் தங்கையைத் திருமணம் செய்யும் வழக்கிருந்தது . எகிப்திய இளவரசன் துட்டன்காமன் இளமையில் இறந்ததற்கும் அதையே காரணம் எனச் சொல்வார்கள் . தூய இரத்தம் ஒன்றுடன் ஒன்று கலக்கவேண்டும் என்பதால் இப்படியான திருமணங்கள் நடந்தன.  பல ஐரோப்பிய அரச குடும்பங்களிலும் இப்படியான  திருமணங்கள் நடந்தன.

நெருங்கிய சொந்தங்கள் ஒன்றாவதால்   பல பாரம்பரிய   நோய்கள் வரும் . இரத்த உறையாமை (Haemophilia) நோய்  ருஷ்ய ஜார் மன்னனின் நிறமூர்த்தத்திலிருந்து  அவரது ஒரே மகனுக்கு ( Prince Alexei Romanov)  வந்தது . இதனாலே   ஜாரின் மனைவி,  அலக்சாண்டிரியா, சாமியாரான  ரஸ்புடீனை  வைத்தியத்திற்காக வரவழைக்கிறார்.   அங்கு  ரஸ்புடீனின் செல்வாக்கு  வளருகிறது.  ஜார் நிக்கோலாய்க்கு  எதிராக அவதூறு  பேசப்படுகிறது.   இதனால் அதிருப்தியடைந்த சிலரினால் ரஸ்புடீன் கொலை செய்யப்படுகிறார்.

இது ஜார்  மன்னன் தனது முடியைத் துறப்பதற்கு ஒரு காரணமாகிறது.  இந்த நோயின்  ஆரம்பம் பிரித்தானியாவின் விக்ரோரியா மகாராணியாவார்.

சகோதரியின் மகளைத் திருமணம் செய்யும் தென்னிந்திய வழக்கம் நீல இரத்த விடயமாக நாம் எடுத்துக்கொள்ளாதபோதும்,   சாதியை விட்டு வெளியே திருமணம் நடக்கக் கூடாது,  நிலபுலன்கள் வெளியாரிடம் செல்லக்கூடாது என்ற நிலவுடைமை சிந்தனையில்  உருவாகியது.

தென்னிந்தியாவில்  சில சாதிகளிடம் ஆணிலும் பல வயது வித்தியாசமாக இருந்தாலும் அக்கா மகளைக் கட்டும் பழக்கத்தை மிக இறுக்கமாக கடைப்படிகிறார்கள். இது அதிகமாக  நிலங்களை  வைத்திருக்கும் சாதிகளிடமே காணப்படுகிறது  .

இந்தப்  பழக்கம் உள்ளக கலப்பை ஏற்படுத்துவது மட்டுமல்ல மனோரீதியாகவும்  இலகுவானதல்ல . நெருங்கிய உறவுப்பெண்களில் காமமேற்படாத ஒரு சிந்தனை மனிதக் குலத்திற்கு பொதுவானது.  இது இப்படியான கலப்புகளைத் தவிர்ப்பதற்கே.   பன்னிரண்டு பதின்மூன்று வருடங்கள் அக்காவின் மகளாக தோள்மீதும் மார்மீதும் போட்டு வளர்த்த ஒரு குழந்தை பூப்படைந்ததும் மனைவியாகக் கொண்டு உடலுறவில் ஈடுபடுவது இலகுவான காரியமல்ல . ஆனால் பணம் –  காணி எனச்  சொத்திற்காகச் செய்யவேண்டிய கட்டாயம் சமூகத்தால் ஒவ்வொரு ஆண்மீதும் பெண்மீதும் திணிக்கப்படுகிறது .

இப்படியான பழக்கங்கள் சமூகத்தில் சில தேவைகளுக்காக இருக்கலாம். அவற்றைத் தனிமனிதரால் அல்லது கலைஞர்களால் மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது.   ஆனால் குறைந்த பட்சம் அதைக் கொண்டாடாது விடுவது நல்லதல்லவா?

முதல் மரியாதை திரைப்படத்தில்  ஒரு   மாமனின் மகளை அதுவும் வேறு ஒரு ஆணைக் காதலித்து கருவுற்றபின்பும்  அவளை  அந்த  மாமனுக்காக மணமுடிப்பதே கதையின் மையம் . இந்த மையம் முற்போக்கானதா? கொண்டாடப்பட வேண்டியதா? இதுவே எனது கேள்வியின் ஆதார சுருதி ?

அடுத்தது  இருபது வருடங்களுக்கு மேலாக உடலுறவில்லாது குடும்பம் நடத்தும் ஒருவராகக் கதாநாயகன் சித்திரிக்கப்படுகிறார்.  இதனை இயற்கையான ஒரு விடயமாக என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

அதில் சிவாஜி கணேசனது நடிப்பையோ  ராதாவின் நடிப்பையோ  எவரும் குறை சொல்லமுடியாது.  சிவாஜி பாறாங்கல்லைத் தூக்கிக் காட்டும் அந்த காட்சி மிகவும் நுண்மையானது . ஆனால் தனது ஆண்மையை நிரூபிக்க நினைக்கும் மத்தியவயது ஆண் அது வரையும் தனது ஆண்மையைப் புளிக்க வைத்துப் புரை போட்டார் என்பது நம்பமுடியாதது.

இவை  எல்லாவற்றையும் விடக் கடைசியில் வரும்  பாத்திரமாக  சத்தியராஜ் எங்கிருந்தோ சிறையிலிருந்து வருகிறார். அதுவும் தனது பழைய காதலியைத்தேடி. இப்படியான ஒருவர் வருவதற்கு முன்பு குறைந்த பட்சம் ஏதாவது  ஓரிடத்தில் சத்தியராஜை  ( Foreshadow)காட்டியிருக்க வேண்டும் .

“  ஒரு  ஆயுதத்தைக் காண்பித்தால்,  அது பாவிக்கப்படவேண்டும் . அதேபோல் புதிதாக ஒன்றை இறுதியில் கொண்டுவருவது  பார்ப்பவர்களை ஏமாற்றுவதற்கு சமமென  ரஸ்சிய, நாடக சிறுகதையாளர்  அன்ரன் செக்கோவ்  சொல்லியிருக்கிறார். 

இயக்குநர் பாரதிராஜா ,  இத்திரைப்படத்தில்  அதனைத்  தவற விட்டதாகவே  எனக்குத் தோன்றுகிறது . சத்தியராஜால் பிரச்சினை உருவாகிவிடும் என்பதற்காக ராதா   அவரை ஆற்றில் வைத்து கொலை செய்வதும் நம்பமுடியாததாக  இருக்கிறது.

கிராமங்களில் உள்ள சாதிக் கட்டுமானம் நிலஉடமை போன்றவற்றைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் எடுத்த வலுவற்ற கதையாக  முதல் மரியாதை  எனக்குத் தெரிந்தது. படத்தின் வெற்றி,  நடிப்பு ,  இசை என்பனவற்றோடு காதலற்ற வாழ்வை வாழ்பவர்கள்,  தங்களுக்குள் இசைக்கும் சோககீதத்தைச் சிவாஜி கணேசன் –  ராதாவாக , மனதில் இசைப்பதால் படம் வெற்றி பெற்றது.

தமிழ்ப் படங்களின் நாயகர்களே இப்படியான மக்களின் மனக்கொதிப்பை ஆற்றுபவர்கள்.   ஒருவிதத்தில் ஜெயகாந்தனின்  சினிமாவுக்குப்போன சித்தாளில்  கணவனது நெஞ்சில் முகம் புதைத்து எம்ஜிஆருக்கு முத்தங் கொடுப்பது போன்றதே . தமிழ்ப் படங்களின் பிரதான ஃபோர்முலாவே இதை வைத்துச் சுழல்கிறது

இப்படியான  அசட்டுத்தனமான கரு . குறிப்பிட்ட நில மக்கள் , அவர்கள் சார்ந்த நிலப்பரப்புக்கப்பால் புரிந்துகொள்ளமுடியாதது.

திரைத்துறைக்கு மட்டுமல்ல,  இது இலக்கியத்திலுமுள்ளது.  இந்த விடயத்தை சில காலத்துக்கு முன்பு நாவல்கள் குறித்து  நான்  எழுதியதை மீண்டும் பார்க்கமுடிகிறது

கிட்டத்தட்ட ஐம்பது வருடத்திற்கு முன்பாக எழுதப்பட்ட  செம்மீன்,  நீலகண்டபறவையைத்தேடி,  அம்மா வந்தாள் மற்றும்  சம்ஸ்கார ஆகிய நான்கு    நாவல்களும் அந்தந்த மொழிகளில் சிறந்தவை என்பதுடன் அழகான மொழிபெயர்ப்பையும்  கொண்டவை. இவற்றை வாசிப்பது மிகவும் சுகமான அனுபவம்.

இந்த நான்கு கதைகளும் எடுத்துக்கொண்ட கருக்களை  இந்தியாவின் கலாச்சாரத்திற்குள் இருப்பவர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். இந்தியப் பாரம்பரியத்தைப் புரியாத ஒருவரால் நீலகண்டப்பறவையைத்தேடி நாவலில்  வரும் மாலதியின் அவலத்தைப் புரிந்துகொள்ள முடியாது.

செம்மீனில்,  கற்புடன் பெண்கள் இருந்தால்தான் மீன்பிடிக்கச் சென்ற மீனவக் கணவர்கள் உயிருடன் திரும்புவார்கள் என்பது அர்த்தமில்லாத விடயமாகத் தெரியும்.

 யு . ஆர். ஆனந்த மூர்த்தியே அக்கிரகாரத்தவர்களது மூடநம்பிக்கைகளை நகைச்சுவையாக்கும்போது, மற்ற அன்னியர்களால் எப்படி இதனை  வலுவான சிக்கல் எனப் புரிந்து கொள்ளமுடியும்?

அன்னியன் ஒருவனுடன் உறவுகொண்டு குழந்தைகளைப் பெற்று வாழ்ந்த பாவத்தை தனது மகனில் கழுவுவதற்கு  – அவன் வேதம் படிப்பதால் தீர்க்கமுடியும் என்ற அசட்டுத்தனமான முடிச்சை இந்திய நாவலில் மட்டுமே பார்க்கமுடியும்.

இதை நாம் கூட ஏற்போமா?

நவீன இந்திய இலக்கியங்களில் இருக்கும் பலமின்மை பண்டைய இந்திய இலக்கியங்களில் இருக்கவில்லையே?

சகுந்தலையினதோ, பாஞ்சாலியினதோ அல்லது சீதையின் பாத்திரத்தையோ புரிந்துகொள்ள இந்திய கலாச்சாரம் தெரியத் தேவையில்லை .

அதேபோல் இராவணனது தன்மை, அருச்சுனனது வீரம் , மற்றும் திருதராட்டினனது புத்திர பாசம் மனித குலத்திற்குப் பொதுவானவை.

மனித சமூகத்தின் மாறாத அடிப்படை விழுமியங்களான பொறாமை , ஆசை,  காமம், அதிகாரம் , நட்பு என்பவை எக்காலத்திற்கும் பொதுவானவை. மாறாதவை. அவைகளே காலத்தைக் கடந்து நிற்கும். ஆனால், பிற்காலத்தில் வந்த நம்பிக்கைகள், சாதி, சம்பிரதாயங்கள், மற்றும் மதச் சடங்குகளுடன் கலந்து முரண்பாடுகளை நாவலில் மட்டுமல்ல திரைத்துறையிலும்  கட்டமைக்கும்போது முழு கலைவடிவமுமே பலமற்றுப் போகிறது.

இப்படியான போக்கு தொடர்ந்தும் வருகிறது.

காரணம்????

பாரதிராஜா போன்றவர்களுக்கு இவை புரியாதவையா ?

—0—

Series Navigationபூராம்  கவிதைகள்உலக வர்த்தக சூயஸ் கால்வாய் கடல் மார்க்கப் போக்கு ஒருவாரம் தடைப் பட்டது.
author

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    திரு.நடேசன் எழுப்பும் கேள்வி நியாயமானவை. இது தாமதமாகப் பேசப்பட்டாலும் வலுவானதே. படம் பொய்த்துப்போன மத்தியவயது காதலை முதன்மைப் படுத்திய பாடலும் ,இசையும்,காட்சியின் பின்னணியும் நேர்த்தியாக அமைந்ததே பாடத்தின் வெற்றிக்கான காரணம். இதேபோல, நிலபிரபுத்துவத்தை, சாதியத்தை பெருமைபடுத்தி எடுத்த பல படங்கள் தோல்வி அடைந்தன.தேவர்மகன் என்ற படம் கூட எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. தமிழ் மக்கள் சாதியபிமானத்தை தூக்கி எறிந்தனர்.பாச ,நேசத்தை ஆதரித்தனர்.

Leave a Reply to jananesan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *