நினைவின் நதிக்கரையில் – 2

This entry is part 1 of 44 in the series 30 அக்டோபர் 2011

தீபாவளி எல்லா நாளும் போல மற்றுமொரு நாளே என்று ஆகி வெகு வருடங்கள் கடந்து விட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும், தீபாவளிக்கான சிறுவயது குதூகளிப்பை,கொண்டாட்டத்தை, திரும்பவும் பெற்று விட எங்கோ ஒரு மூலையில் மனம் ஏங்கி கொண்டு தான் இருக்கிறது. திரும்பி செல்லவே முடியாத பாதை எப்போதும் வசீகரமானதே.

சிறுவயதில் தீபாவளிக்கான உற்சாகம், ஊரில் முதல் பட்டாசு கடையாக திறக்கப்படும், சூர்யா வெடிக் கடை(கடல்), திறந்த நாள் முதல் தொற்றிக்கொள்ளும். வருடம் முழுவதும், பட்டாசு விற்கும் ராமையா பிள்ளை கடை ஊரில் இருந்தாலும், அதில் பெரும்பாலும், தேர்தல் வெற்றி, மாப்பிள்ளை ஊர்வலம், மற்றும் கல்யாண சாவு போன்ற சுப காரியங்களுக்காகவே வெடி வாங்கப்பட்டதால், தீபாவளிக்கான வெடி கடையாக அது கருதப்படவில்லை. திறந்த நாள் முதல், வெடிக்கடையில், அண்ணே, வெங்காய வெடி இருக்கா? என்ற சிறியவர்களின் குரல்களும், கடலுனு போட்டு இருக்கே?.திமிங்கில வெடி இருக்கா? என்று மப்பில் லந்து கொடுக்கும் பெருசுகளுமாய் கூட்டம் திரள ஆரம்பித்து விடும்.

ஏறக்குறைய, அந்த ஒரு மாத காலமும், கையில் கிடைக்கும் அல்லது கையில் வந்து போகும் எந்த பணமும், அந்தந்த பணத்தின் மதிப்பிற்கு ஏற்ப, லக்ஷ்மி வெடியாகவோ, டபுள் ஷாட்/செவன் ஷாட்டகவோ(எப்போதும் செவன் ஷாட் வெடியில், இரண்டு அல்லது மூன்று வெடிகள் வெடிக்காது என்றபோதிலும், இது செவன்ஷாட் என்றே அழைக்கப்பட்டு வந்தது.) மட்டுமே கண்ணுக்கு தெரியும். கிடைக்கும் பணத்தை எல்லாம் வெடியாய் மாற்றி, நல்ல வெயிலில் காய வைத்து, சாயங்காலம் ஆனதும், திரும்பவும் மரப்பெட்டியில் எடுத்து வைக்கும் இந்த சடங்கு, நாள்தோறும் நடக்கும். தீபாவளி அன்று நான்கு மணிக்கே எழுந்து

முதலில் ஒரு சரத்தை கொளுத்தி விட்டு தான் எண்ணெய் குளியலே. குளித்து முடித்து, புத்தாடை அணிந்து வெடிக்க வெளியே சென்றோம் என்றால், விடிய விடிய தீபாவளி தான். ஒருவழியாக சுவாரசியமான வெடிகள் எல்லாம் தீர்ந்த பிறகு ,அம்மாவின் அழைப்புக்கு காது கொடுத்து , உள்ளே வந்து , திரி கிள்ளிய வெடி நாற்றம் விரல்களில் மிச்சம் இருக்க, உணவு அருந்துவது ஒரு தனி சுகம். ஒரு பதினோரு மணி வாக்கில், வெறும் பிஜிலி வெடி (ஊசி வெடி) மட்டும் மிச்சம் இருக்க, தீபாவளி முடிந்து போன ஒரு மென்சோகம் மனதை கவ்வும் . யார் வீட்டில் அதிகம் வெடித்தது என்ற அறிவிக்கப்படாதப் போட்டி எங்கள் தெருவில் நிலவியது. இது பெரும்பாலும் வெடித்த குப்பையின் அளவை கொண்டே அறியப்படும்

என்பதால், ராணி காமிக்ஸ் கோடை மலர் கொண்டு சுற்றிய உலக்கை வெடிக்கு நல்ல மவுசு இருந்தது. குப்பைகளை அதிகமாக்க, எதிர் வீட்டு பாபு, பழைய தினத்தந்தி பேப்பர் கட்டினை தனது தங்கையுடன் சேர்ந்து கிழித்து போடுவதாக பரவி இருந்த வதந்தியை பாபுவை,

தவிர அனைவரும் நம்பினார்கள்.

தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பாகவே, வீட்டிற்கு வந்து பலகாரம் போட்டு தரும் ராமசாமி பிள்ளையும் அவருடைய ஆஸ்தான உதவியாளர் ஞானமும், வந்து விட்டால், தீபாவளி ஜுரம் வெகு வேகமாய் உச்சத்தை தொடும். ராமசாமி பிள்ளை, மன்னார்குடியில் இனிப்பகம் வைத்து இருந்தார். அதற்குமுன்பு, வெகு காலம், எங்கள் குடும்பத்தில் வேலை பார்த்தவர். ராமசாமி பிள்ளை போன்று இனிப்பு வகைகள் செய்ய இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும். எவ்வளவு பெரிய சமையல் கலைஞர்களும் சறுக்கி விடும் சமாச்சாரங்கள், ஜாங்கிரி, அல்வா. இவற்றைச்செய்வதில் பிள்ளைக்கு நிகர் அப்போது யாரும் இல்லை. இரவு ஒன்பது மணிக்கு வந்து, ஒரு டோஸ் கும்பகோணம் வெற்றிலை,ரங்கவிலாஸ் புகையிலையுடன் போட்டு கொண்டு, அடுப்பு பற்ற வைத்தார் என்றால் , விடிய விடிய வேலை நடக்கும். காலை ஏழு மணி வாக்கில் குறைந்த பட்சம் நான்கு இனிப்பு வகைகளுடன், அண்டா நிறைய முறுக்கு, மிக்சர் தயார் செய்து விடுவார். எல்லாவற்றையும் ,முடித்த பின்பும் ஆரம்பித்த போது இருந்த அதே உற்சாகம் முகத்தில் இருக்கும். வெகு நாட்களாய் எங்கள் குடும்பத்தில் பழகியவர் பிள்ளை என்பதால், வெகு இயல்பாய் எனது அத்தைகள், சித்தப்பா, பெரியப்பாக்கள் என அனைவரையும் பற்றி கிண்டல் அடிப்பார். அட்டகாச சிரிப்பும், நையாண்டியுமாய் அவர் வேலை செய்வதை பார்ப்பதே ஒரு இனிய அனுபவம். அதை எப்போதும் நான் தவற விட்டதே இல்லை. நான், என் தம்பி , அக்கா என்று அனைவர்க்கும் என்னனென்ன பிடிக்கும் என்று பிள்ளைக்கு தெரியும் என்பதால், எங்கள் அம்மா கொடுக்கும் லிஸ்டில் எப்படியும் அவற்றையும் நுழைத்து விடுவார். மிகஸ்ர்க்கு கொடுத்த கடலைமாவு மீதி இருக்கு, அதான் தம்பிக்கு பிடிக்குமே ..மைசூர் பாக்கு போட்டுறேன் என்பார் . குடும்பமே, இரவு முழுக்க,அவர் பேசுவதை கேட்டு கொண்டு இருக்க சுடச்சுட பலகாரங்களை போட்டு தட்டில் வைத்து டேஸ்டு பார்க்க சொல்லி கொடுத்து கொண்டே இருப்பார் .

பிள்ளை, தனது பேச்சின் இடையிடையே,என்னடா ஞானம்.நான் சொல்றது? என்று தனது உதவியாளரிடமும் கேட்க தவறுவதில்லை.பிள்ளை தான் இப்படி பேசுவாரே தவிர, ஞானம் அதற்கு நேர் எதிர். “ஆமாம்,ஆமா”, அது சரி, “எண்ணெய் காயுது” என்று நான்கு, ஐந்து வாக்கியங்களில் சுருக்கி விடலாம் அவரது பதில்களை.ஞானம், பிள்ளையை விட ஒரு சில வருடங்கள் தான் இளையவர். பிள்ளையை தவிர வேறு யாருடனும் அவரை நான் பார்த்தது இல்லை. ஞானம் இல்லாமல் பிள்ளையும் பலகாரம் செய்ய வந்தது இல்லை. ஒரு வேடிக்கையான கூட்டணி, என்றே எனக்கு தோன்றும். எவ்வளவு பேசினாலும், அந்த பேச்சினால், ஒரு நாளும் பிள்ளை செய்யும் பலகாரம் சுவை கேட்டது இல்லை. ஒருவேளை பேசுவதை நிறுத்தி விட்டால், பலகாரம் சுவை குறைந்து விடுமோ என்று எண்ண தோன்றும் அளவுக்கு ஒரு ஒத்திசைவு.

தனது இளமை காலம் முதல், தனக்கு உதவியாக இருந்தவர் என்பதால், பொதுவாக மிக கண்டிப்பான என் தந்தை, பிள்ளையிடம் மட்டும் தனி அன்பு கொண்டிருந்தார். பலகாரம் செய்யும்போது பிள்ளை, மன்னர்குடியின் பழைய வரலாறு பற்றிப்பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. மேலவீதி ராஜவேலு, புதுசா கார் வாங்கி இருக்காரா? என்று அப்பா வெகு நாட்களுக்கு முன் நடந்த விசயத்தை பற்றி, சமிபத்தில் நடந்தது போல் கேட்பார். வாங்கி இருக்கார் .. என்ன? வாங்கி இருக்கான்னு சொல்லுங்க.நீங்க ப்ளைமௌத் கார்லே வீதிலே போறப்ப, மேல்சட்டை போடாம கார் பின்னாடியே ஓடிவருவான். அடிச்சி விரட்டுவேன் ..சிங்கப்பூர்லே அடிச்ச உண்டி காசு. இப்போ அவன், மினுக்குற மினுக்கு என்ன ?. யாருகிட்டே ? பழைய பவிசு தெரிஞ்சவன் கிட்டயா நடக்கும்? இப்பயும் என்னை பார்த்தா, பயல் பம்மி பதுங்கி தான் போவான். எல்லாம் கால கொடுமை அய்யா. என்பார் பிள்ளை. தான் எதிர்பார்த்த பதில் கிடைத்த திருப்தி , அப்பாவின் முகத்தில் தெரியும். பெரும்பாலும் பழைய கதைகள். அப்பா எலக்சனில் போட்டியிட்டது. எம்.ஜி.ஆர், தி.மு.க வில் இருக்கும் போது, ஊருக்கு அழைத்து வந்தது ..நடிகர் அசோகன் எங்கள் வீட்டுக்கு வந்த போது, பிள்ளை சாப்பாடு பரிமாறியது (மனுஷன், அப்படியே பாலில் பச்சை முட்டைய கலந்துலே குடிப்பார்) என்று எல்லாம் பழைய கதைகள் ..பல முறை கேட்டது தான் என்றாலும் பிள்ளை தனது பேச்சின் முலம் அந்த சம்பவங்களை மீண்டும் நிகழ்த்தி காட்டுவார். பிள்ளை ஒரு சிறந்த கதை சொல்லி. எல்லா கதையும் முடியும் போது, பிள்ளையின் கல்யாணத்திற்கு, அப்பா தனது ஹில்மென் காரை டிரைவர் போட்டு அனுப்பி வைத்ததை பற்றி சொல்வார். அப்போது மட்டும் பிள்ளையின் குரல் சற்று கம்முவதாக எனக்கு தோன்றும்.

பிள்ளைக்கு ஊரின் எல்லா ரகசியங்களும் தெரிந்து இருந்தது . சம்பந்தப்பட்டவர்களே நேரில் வந்து பிள்ளையிடம் சொல்லி செல்வதுண்டோ என்று எண்ண தோன்றும் அளவுக்கு அவை உண்மையாக இருந்தன. ஊரில் புதிதாக முளைத்து இருந்த ஸ்வீட் கடைகளின் தரம் , புதிதாக தோன்றி இருந்த சில பெரிய மனிதர்களின் சிறிய குணங்கள் , என்று புதிய விஷயங்கள் மீது பிள்ளைக்கு கேலியும், ஒருவித ஏளனமும் இருந்தது. என் தந்தை அவற்றை ஏதோ ஒரு விதத்தில் ஆமோதித்து வந்தார் என்றே படுகிறது .எனக்கு என்னவோ, அப்பா, பிள்ளை முலம், தனது தொலைந்து போன இளமை காலத்திற்குள் ஊடுர்வ முயல்வதாகவே தோன்றும்.

கால ஓட்டத்தில், மன்னார்குடியில் மேலும் பல புதிய ஸ்வீட் ஸ்டால்கள் திறக்கப்பட்டன. முற்றிலும் கண்ணாடிகளால் சூழப்பட்டு, கோபுரம் போல அடுக்கப்பட்ட மைசூர் பாக்குகளும், ஜாங்க்ரிகளும் வெகு வேகமாய் விற்பனை ஆயின. தீபாவளி சமயத்தில் தள்ளுபடி வேறு . மிக சிறந்த சமையல் கலைஞரான பிள்ளையால், வியாபாரிகளுடன் போட்டி போட இயலவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக பிள்ளைக்கு, பழைய ஒரு சில நபர்களை தவிர , புதிய வாடிக்கையாளர்கள் இல்லாமலே போனார்கள். இதற்கிடையில், பிள்ளையுடன் ஏற்பட்ட சிறு சண்டையில், அவர் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இதை தாங்கி கொள்ள முடியாத பிள்ளை, குடியில் விழுந்தார். நினைத்தால் கடை திறப்பது, இல்லையென்றால் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டுக்கு வந்து பலகாரம் போடுவதும் நின்று போனது.

 

வருடங்கள் ஓடி விட்ட நிலையில், ஒரு தீபாவளியின் போது, அப்பா இந்த முறை பலகாரம் செய்ய மீண்டும் பிள்ளையை கூப்பிடலாம் என்றார். ஏகமனதாக வரவேற்கபட்டு, பிள்ளையிடம் தெரிவிக்கப்பட்டது. பிள்ளை, சந்தோசமாக ஒத்து கொண்டதாகவும், வழக்கம் போல், இரவே வந்து விடுவதாகவும் சொன்னதாக அனுப்பிய ஆள் வந்து தெரிவித்தார். வீடே பிள்ளையின் வருகைக்கு தயார் ஆனது.

பிள்ளை சொன்ன நாளும் வந்தது. ஆனால், இரவு வெகு நேரமான பிறகும், பிள்ளை வரவேயில்லை. காத்திருந்து, எல்லோரும் நம்பிக்கை இழந்த நேரத்தில், ஒரு வழியாக வந்தார் பிள்ளை. வந்தார் என்பதை விட, அவரது உதவியாளர் ஞானத்தால் , கைதாங்கலாக அழைத்து வரப்பட்டார் என்பதே சரி.

பிள்ளை முட்ட முட்ட குடித்திருந்தார். கண்கள் சொருகி, ஒருஇடத்தில நிலையாக நிற்க இயலாது, தடுமாறினார். பிள்ளையின், மேல்சட்டை விலகிய நிலையில், வேட்டியின் மீது எப்போதும் கட்டி இருக்கும், பச்சை பெல்டை பார்த்தபடி, நான் நின்றிருந்தேன். அவரது கோலத்தை பார்க்க இயலாது அம்மா வீட்டிற்குள் சென்று விட்டார்.

தடுமாறிக்கொண்டிருந்த பிள்ளை, நிற்க இயலாது திண்ணையில் சாய்ந்தார். அய்யா வீட்டுக்கு பலகாரம் செய்ய போகிறோம் என்று தன்னை வர சொல்லிவிட்டு , வீட்டில் குடித்துவிட்டு படுத்து இருந்தார் என்று ஞானம் சொன்னார். இவரால என்னோட வாழ்கையும் நாசமா போய்டுச்சு என்று கோபத்துடன் ஞானம் சட்டென்று சொன்னதை நான் மட்டுமல்ல, அப்பாவும் எதிர்பார்க்கவில்லை. தான் இருந்த நிலையையும் மீறி, அடிபட்டது போல் நிமிர்ந்த பிள்ளை, ஞானத்தை உற்று பார்த்தார். அந்த பார்வையில் இருந்த உணர்வை எனக்கு விவரிக்க தெரியவில்லை.

Series Navigationபடிமங்கள்
author

செந்தில் குமார், டோக்யோ

Similar Posts

Comments

Leave a Reply to swaminathan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *