நினைவுகளின் சுவட்டில் – (87)

This entry is part 3 of 45 in the series 26 பிப்ரவரி 2012

இல்லஸ்ட்ரேட்டட் வீகலி ஆஃப் இந்தியா எனக்குப் பரிச்சயம் ஆகி நான் படிக்கத் தொடங்கியபோது சி.ஆர்.மண்டி என்பவர் அதன் ஆசிரியராக இருந்தார். பொதுவான அரசியல் சமூகம் பற்றிய கட்டுரைகளும் அது சம்பந்தமான படங்கள் நிறைந்தும் அதில் இருந்தன. அது போக, இந்தியாவில் அப்போது தெரியவந்த ஓவியர்களின் ஓவியங்களூம் அவ்வப்போது முழுப்பக்க அளவில் அதில் வந்தன.

அது மாத்திரமல்ல.இன்னம் இரண்டு விஷயங்கள் வீக்லியை ஒரு பகுதி மக்களின் அபிமான பத்திரிகையாகவும் ஆக்கின. ஒன்று அதில் அந்தக் காலத்து ஆனந்த விகடனில் வந்து கொண்டிருந்த ,கல்கிக்குப் பிடிக்காது போய் பிரச்சினைக்கு காரணமாகிய குறுக்கெழுத்துப் போட்டி போன்ற (Crossword Puzzle) சமாசாரமும் வீக்லியில் வந்து கொண்டிருந்தது. இரண்டாவது ஒவ்வொரு வாரமும் ஒரு பக்கம் முழுவதும் பிரசுரமான புதுமணத் தம்பதிகளின் படங்கள். தம்பதிகளின் பெயர்களுடன். இது இப்போது பைத்தியக் காரத்தனமாகத் தோன்றலாம். ஆனால் அன்று இது மிகுந்த வரவேற்பைப் பெற்றதாக இருந்திருக்க வேண்டும்..

சில. வருடங்களுக்குப் பிறகு ஏ. எஸ். ராமன் என்பவர் அதன் ஆசிரியரானார். இதே வீக்லி மூலமாகத் தான் ஏ.எஸ் ராமன் ஒரு கலை விமர்சகர் என்பதும் வாசகர்களுக்கு பரிச்சயமாகியிருந்தது.. அவர் ஆசிரியத்வத்தில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியின் குணமே மாறியது. இந்தியாவின் அப்போதைய முன்னணி ஓவியர்கள் சிற்பிகளது படைப்புகளின் படங்கள் மட்டுமல்லாது அவை பற்றியும் அவர்கள் படைப்புகள் பற்றியும் விரிவாகப் பேசும் கட்டுரைகளும் வெளிவந்தன. இது எனக்கு கூடுதல் உற்சாகத்தைத் தந்தது. அது முடிந்த பிறகு இந்திய சங்கீதக் கலைஞர்களைப் பற்றி விரிவான கட்டுரைகள். பின்னர் கர்னாடக சங்கீதக் கலைஞர்களைப் பற்றி. மதுரை மணி,அய்யர், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை,திருவாடு துறை ராஜரத்தினம் பிள்ளை செம்மங்குடி சீனிவாசய்யர், ஜி.என்.பி, எம்.எஸ் சுப்பு லக்ஷ்மி என்று இப்படி நிறைய வரிசையாக கட்டுரைகள் வந்தன. ஏ.எஸ் ராமனின் ஆசிரியத்வத்தில் கர்நாடக சங்கீத கலைஞர்களை வடநாட்டு வாசக தளத்தில் பிராபல்யப் படுத்தும் காரியத்தை வீக்லி என்னும் ஒரு பம்பாய் பத்திரிகை தான் செய்தது. தமிழ் நாட்டு ஆங்கிலப் பத்திரிகைகள் எதுவும் செய்யவில்லை. வட நாட்டு பத்திரிகைகளைப் பற்றிப் பேசவே தேவையில்லை. அத்துடன் அனேக சமயங்களில் விசேஷ சிறப்பிதழ்களும் வீக்லியில் வெளிவந்தன. ஒவ்வொரு சிறப்பிதழும் ஒரு கலையைப் பற்றியதாக இருக்கும். ராஜஸ்தானி சிற்றோவியங்கள் ,பரத நாட்டியம், கதக், பெங்காளி ஸ்கூல் ஆஃப் ஆர்ட் என்று இப்படி. இன்னம் ஒன்று கூட எனக்கு நினைவுக்கு வருகிறது. காஞ்சி சங்கராச்சாரியாரைப் பற்றி அவரது சிறுவயதிலிருந்து அன்று வரைய அவரது ஆன்மீகப் பயணத்தை பற்றி மிக விரிவான கட்டுரை ஒன்றும் நிறைய படங்களுடன் வெளி வந்தது. யெஹூதி மெனுஹினின் சென்னை விஜயம் பற்றிய கட்டுரையில் மெனுஹின் ”ஜெயராமன் (லால்குடி) எங்கே?,” என்று கூட்டத்தில் தேடிய செய்தியும் அதில் இருந்தது நினவுக்கு வருகிறது.

இவற்றை நான் வெகு வருஷங்கள் தில்லி வந்த பிறகு கூட சேர்த்து வைத்திருந்தேன். ஆனால் தில்லியில் ஒரு வாடகை வீட்டில் நிலையாக ஒரு வருடம் இருக்க முடியாது. ஹோட்டல்களில் தங்கியிருந்த (1956 – 1974) இருபது வருட கால, மாறி மாறி பல ஹோட்டல்களில் தங்கியிருந்த, ஒற்றை அறையில் மூவரோடு பகிர்ந்து கொண்ட, வாசத்தில் கூட பத்திரமாக இருந்தவை, பின் குடும்பத்தோடு வாழ்ந்த ஒற்றை அறை வாசத்தில் எங்கோ எப்போதோ மறைந்து விட்டன. மார்க் என்னும் கலைக்கேயான பத்திரிகையில் வரும் விசேஷ இதழ்கள் போலத்தான் இருந்தன வீக்லியில் ஏ.எஸ் ராமன் பதிப்பித்த சிறப்பு இதழ்களும். சி. ஆர்.மண்டி காலத்தில் பிரபலமாகியிருந்த “திருமண தம்பதிகள் புகைப்படங்களும், குறுக்கெழுத்துப் போட்டிகளும்” ராமன் வந்ததும் மறைந்துவிட்டன.

அப்போது தான் ஒரு பத்திரிகை ஆசிரியத்வத்தின் சிறப்பையும் மகத்வத்தையும் அறிந்து கொண்டேன். ஒரு பத்திரிகையின் குணத்தை நிர்ணயிப்பது அதன் ஆசிரியர் கொண்டுள்ள பார்வையையும் அவரது செயல் முனைப்பையும் சார்ந்தது என்று எனக்கு ஏ.ஸ். ராமன் செயல் பாட்டிலிருந்து தெரிய வந்தது. அவருக்கு முன்னால் இருந்த வீக்லி, அவரது ஆசிரியத்வத்தின் வீக்லி, பின்னர் எம்.வி. காமத்,. அவரது காலம் ஏதும் விசேஷத்வம் கொண்டதில்லை.

அதன் பின் எழுட்பதுகளில் என்று நினைவு குஷ்வந்த் சிங்.அவரது ஆசிரியத்வத்தில அவரது ஒரு பக்க ஒரு பல்புக்குள் அடைபட்டுக் காணும் குஷ்வந்த் சிங்கின் காலமும் (With Malice Towards none) அவருக்கே முத்திரையாகிப் போன பாலியல் ஜோக்குகளும் வரும். அதில் அவர் தம் சக சீக்கியர்களையே கிண்டல் செய்வார். அவர் காலத்தில் வீக்லியின் வாசகப் பெருக்கம் ஒரு உச்சியை அடைந்தது. அவர் ஆசிரியத்வ காலத்தில் தான் ஒரு வருடம் பாரதி தாசனுக்கு சாகித்ய அகாடமி பரிசு கிடைத்தது. குஷ்வந்த் சிங் எல்லா மொழிகளிலும் அவ்வருடம் சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர்கள் பற்றி கட்டுரைகள் எழுதச் சொல்ல, பாரதி தாசன் பற்றி எழுத எனக்குக் கடிதம் வந்தது. எம். கோவிந்தனின் சமீக்‌ஷா பத்திரிகையில் மௌனி பற்றி ஒரு கட்டுரையும் அவர் கதை ஒன்றின் ஆங்கில் மொழிபெயர்ப்பும் நான் எழுதியிருந்தது அவர் கண்ணில் பட்டு என்னை பாரதி தாசன் பற்றி எழுதக் கேட்டு கோவிந்தனின் மேற்பார்வையில் எனக்கு கடிதம் வந்தது. நானும் எழுதி அனுப்பினேன். மற்ற மொழிகளிலிருந்து வந்தவை எல்லாம் ஒரு இதழில் பிரசுரமாகியிருந்தது .நான் எழுதியதைத் தவிர. நான் குஷ்வந்த் சிங்குக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். நான் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் எழுதட்டுமா என்று நான் கேட்டேனா?. என்னை எழுதச் சொல்லிவிட்டு பின் தமிழை மாத்திரம் போடாமல் விட்டதற்கு என்ன காரணம்?. இப்படி ஏமாற்றும், சொல் தவறும் சீக்கியருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? இப்படி வாக்குத் தவறிய மாஸ்டர் தாராசிங்குக்கு அம்ரித்சர் குருத்வாராவில் பாத்திரம் கழுவவும் செருப்புக்களைக் காவல் காக்கவும் கட்டளையிட்டு தண்டனை கொடுத்த பஞ்ச் பியாரேக்களுக்கு நான் உங்களைப் பற்றி எழுதினால் என்ன ஆகும்? “ என்று எழுதினேன்.
அவரிடமிருந்து, ஒரு சின்ன கடிதம் மூன்று நான்கு வரிகளே கொண்டது. “ உங்கள் கட்டுரை வெகு நீளமாக இருந்ததால் சேர்க்க முடியவில்லை சீக்கிரம் வரும் இதழ் ஒன்றில் அது பிரசுரமாகும்.” அவ்வளவு தான். என் சீற்றத்தை அவர் கண்டுகொள்ளவில்லை. கட்டுரை பிரசுரமானது.தான். அதைப் பார்த்த முரசொலி மாறன் அவர் பாணியில் எனக்கு பதிலடி கொடுத்திருந்தார். ஒரு தமிழ் பத்திரிகையில். எது? என்று இப்போது நினைவில் இல்லை. அப்போது நான் விடுமுறையில் சென்னையில் இருந்தேன், கசடதபற குழுவினர் சந்திக்கும் ஞானக்கூத்தன் அறையில். முரசொலி மாறன் எழுதியிருப்பதாகப் பார்த்து எனக்குச் சொன்னது ஞானக் கூத்தன் என்றும் எனக்கு நினைவு. .

குஷ்வந்த் சிங்க் பொறுப்பேற்றிருந்த வருடங்களில் வீக்லியின் விற்பனை எக்கச் சக்கமாகக் கூடியதாகச் சொல்லப்பட்டது. காரணம் அதில் தவறாது வெளிவந்து கொண்டிருந்த Pin up girls படங்கள் என்றும் கேலி பேசப்பட்டது. அவருக்குப் பின் கடைசியில் வந்த ப்ரீத்தீஷ் நந்தி தான் கடையை மூடச் செய்தவர் என்று நினைக்கிறேன்

.இப்படி ஒருவர் பின் ஒருவராக வந்த ஆசிரியர்களின் அணிவகுப்பையும் அவ்வப்போது வீக்லியின் குணமாற்றத்தையும் கண்ட பிறகு தான் ஒரு பத்திரிகையின் குணத்தை நிர்ணயிப்பது அதன் ஆசிரியப் பொறுப் பேற்பவர் என்ற தெரிவு எனக்கு ஏற்பட்டது.

அந்த சமயத்தில் இன்னொரு மாற்றமும் அன்றைய சூழலில் ஏற்பட்டது. பி.வி. கேஷ்கர் என்னும் ஒரு மராட்டியர் Information and Broadcasting மந்திரியாக மத்திய அமைச்சரவையில் வந்து .சேர்ந்தார். அவர் வந்ததும் ரேடியோ ஒலிபரப்பில் நிகழ்ச்சிகளில் கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமாற்றங்களைக்கொணர்ந்தார். அன்னாட்களில் ஆல் இந்தியா ரேடியோவைக் கேட்பாரை விட இலங்கை வானொலியைக் கேட்பார் தான் அதிகம். இருந்தனர் இலங்கையிலிருந்து நேயர் விருப்பம் என்ற நிகழ்ச்சி தான் மூலை முடுக்கெல்லாம் எந்த ரேடியோ பெட்டியிலிருந்தும் இரைச்சலிட்டுக் கொண்டிருந்தது. வீடோ கடைத்தெருவோ, ஹோட்டலோ எங்கும். சென்னை, திருச்சி ரேடியோவைக் கேட்பாரில்லை. இலங்கை ரேடியோவிலிருந்து எப்போதும் சினிமா பாட்டுக்கள் தான் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கும். இந்தப் பாட்டை விரும்பிக் கேட்ட நேயர்கள் என்று, ”விருத்தா சலத்திலிருந்து ராமகிருஷ்ணன், அவர் குடும்பத்தினர் செங்கல்ப்பட்டிலிருந்து மூத்து சாமி,யும் அவர் நண்பர்கள் வடிவேலு, ரங்கசாமி, வீரண்ணன் ஆகியோர், சேலத்திலிருந்து பழ்னியப்பன், அவர் சகோதரி செண்பகம்…….” என்று இப்படி இந்த பெயர்கள் ஊர் அவர் குடும்பத்தினர் என்றொரு நீண்ட பட்டியலே ஒவ்வொரு பாட்டுக்கும் வாசிக்கப்படும். எனக்குத் தெரிந்து தன் பெயர் சொல்லப்படுவதைக் கேட்க ஆவலோடு காத்திருக்கும் கூட்டதையும் பார்த்திருக்கிறேன். தன் பெயர் சிலோனிலும் தெரிந்திருக்கக் கேட்கும் பரவசம் இருக்கிறதே, அது தனிதான். இந்த நிகழ்ச்சியை அந்நாட்களில் நடத்தி வந்தவர் ஒரு மயில்வாஹனனோ என்னவோ. அப்படித்தான் பெயர் நினைவில் பதிந்திருக்கிறது.

இது பற்றி பி.வி. கேஷ்கர் வரும் வரை யாரும் கவலைப் படவில்லை. சீனப் பொருட்கள் கொட்டிக்கிடப்பதைப் பற்றி நம்மில் யாரும் கவலைப் படுகிறார்களா? ஆனால் கேஷ்கர் மராத்திச் சூழலிருந்து வந்தவர். சாஸ்தீரீய சங்கீதத்தில் ரசனை மிகக் கொண்டவர். அவர் சிலோன் ரேடியோவின் பாமரத்தனமான வணிக. ஆக்கிரமிப்பைச் சகித்துக்கொள்ளமுடியாதவராக மத்திய அமைச்சரவில் அவர் ஒருவர் தான் இருந்திருக்கிறார். இந்த வணிக ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள பல புதிய திட்டங்களைக் கொண்ர்ந்தார். ஒன்று விவித் பாரதி என்ற மெல்லிசை ஒலிபரப்புக்கான அலைவரிசை அதில் மெல்லிசைப் பாட்டுக்களே ஒலிபரப்பாகும் .இரண்டு, எல்லா ரேடியோ நிலையங்களிலும் சாஸ்த்ரீய சங்கீதம் ஒன்று National Programme of Music அது சனிக்கிழமையோ என்னவோ ஒவ்வொரு வாரமும் கர்நாடக சங்கீதமும் ஹிந்துஸ்தானி சங்கீதமும் மாறி மாறி தேசம் முழுதும் உள்ள எல்லா ரேடியோ நிலையங்களிலிருந்தும் ஒலிபரப்பாகும். இதன் மூலம் தேசம் முழுதும் இரண்டு சங்கீத வடிவங்களுக்கும் பரிச்சயமும் ஞானமும் பரவ வழி ஏற்படுத்தப்பட்டது. சாஸ்திரீய சங்கீதத்துக்கும் அது சார்ந்த மெல்லிசைக்கும் ரேடியோ நிலயங்களில் உள்ளே நுழைய கதவுகள் திறந்தன். பின் வருடங்களில் இலங்கையின் மயில்வாஹனன் போல் இங்கும் ஒரு அமீன் சயானி என்பவர் தனக்கே யான ஒரு விசித்திர பாணி குரலுடன் அகில இந்திய பிராபல்யம் பெற்றார். .பி.வி. கேஷ்கரின் இந்த புதுமைகள். பாமரத்தனத்திற்கும் வணிக ஆக்கிரமிப்பிற்கும் எதிராக இருந்தது மக்களுக்கு எதிரான, தனிமனித விருப்புக்களைத் தன் யதேச்சாதிகாரப் போக்கால் மக்களின் மீது திணிப்பதாக பெரும் எதிர்ப்புப் பிரசாரப் புயலைக் கிளம்பியது. அது சுலபத்தில் அடங்கவில்லை. ஆயினும் பி.வி. கேஷ்கரின் திட சங்கல்பத்தாலும் மன உறுதியாலும் இது ரேடியோ ஒலிபரப்பின் குணத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. இந்த National Programme of Music தான், பி.வி. கேஷ்கரின் பாமர சலசலப்புக்கு அடங்காமல் மன உறுதியோடு இருந்த காரனத்தால் தான் அது நிலை பெற்று, பின்னர் தொலைக்காட்சி தொடங்கியபோது இந்தியா முழுதும் ஒரே சமயம் ஒளிபரப்பாகும் National Programme of Dance- க்கும் வழிவகுத்தது. அதற்கு ஏதும் எதிர்ப்பு எழவில்லை. விரும்பாதவர்கள் கேட்பதில்லை, பார்ப்பதில்லை ஆனால் எதிர்ப்புப் பிரசாரம் ஏதும் தேசீய நடன நிகழ்ச்சிக்கு இருக்கவில்லை. .

Series Navigationஅ. முத்துலிங்கம் – ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்பேரதிசயம்
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *