‘சாதனை அரசிகள்’ தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை

This entry is part 24 of 36 in the series 18 மார்ச் 2012

தன் வலிமை, அறிவு, திறமை, ஆற்றல் இவற்றை வெளிப்படையாக உலகறிய நீரூபிக்கும் பெண்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். உழைப்பும் முயற்சியும் சேராமல் வெற்றி எளிதாக வாய்த்திடுவதில்லை. போற்றப்படும் எல்லாப் பெண்களின் வெற்றிக்கும் காரணிகளாக அவை இருப்பதை மறுக்கவே முடியாது. சிலருக்கு சாதகமான சூழல்கள், குடும்பம் மற்றும் நட்புகளின் ஆதரவு, தட்டத் தட்டத் திறக்கும் வாய்ப்புகள் இவற்றால் ஓடும் களம் அதிக மேடு பள்ளங்களற்று அமைகின்றன. சிலருக்கோ முட்களும், கற்களும், தடங்கல்களும் நிறைந்ததாக இருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் புயலின் சீற்றத்துடனும் அக்னியின் வெம்மையுடனும் பேரலைகளின் ஆவேசத்துடனும் விழுங்கப் பிழக்கும் பூமியின் வேட்கையுடனும் பேரிடியின் ஆக்ரோஷத்துடனும் ஐம்பூதங்களின் துணைபெற்றாற் போல எந்தத் திக்கிலிருந்து வருமென்றே தெரியாது எழும் எதிர்ப்புகளைச் சமாளித்துக் கடக்க வேண்டியதாக இருக்கிறது. இத்தகையோருக்கு தன்னம்பிக்கை, உழைப்பு, முயற்சியுடன் கூடுதலாகத் மனோ தைரியமும், தளராத போராட்ட குணமும் தேவையாகின்றன. ஆதிசக்தியாய் விஸ்வரூபமெடுத்து அப்படிப் ‘போராடி ஜெயித்த பெண்கள்’ பதினேழு பேரையே ‘சாதனை அரசிகள்’ ஆக நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் தேனம்மை.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் காலகாலமாக பெண்களின் வெற்றி மறைக்கப்பட்டே வந்திருக்கிறது. மருத்துவம், மதம், அரசியல், அறிவியல், விஞ்ஞானம், கலை என சத்தமில்லாமல் சாதித்து எந்தக் குறிப்புகளிலும் இடம்பெறாமல் மறைந்து போன பெண்கள் ஏராளமானவர்கள். ‘சரித்திரத்தின் அடிக்குறிப்புகளாகவே பெண்கள் இருந்தார்கள் என்பதை மறுதலித்து சொல்லுகிறார் அமெரிக்க பெண் எழுத்தாளர் சான் ட்ரா சிஸ்னெரோஸ் “அடிக்குறிப்புகளின் அடிக்குறிப்புகளாக இருந்தார்கள்” என்று. சில நூற்றாண்டுகளாக அந்நிலமையில் ஓரளவு மாற்றம் வந்திருக்கிறது என்றாலும் பெண்களின் வாழ்க்கைக் குறிப்புகளை ஆவணப்படுத்துவதில் அக்கறையின்மையும் அலட்சியமும் தொடரவே செய்கிறது. அந்த வகையில் தன் சொந்த முயற்சியில் சரித்திரத்தில் பதினேழு சாதனை அரசிகளை இடம்பெறச் செய்திருக்கிறார் தேனம்மை.

சமகாலத்தில் நம்மிடையே வாழும் உதாரணப் பெண்மணிகளைத் தேடிச்சென்று அவர்களைப் பற்றிய முழுமையான விவரங்களை ‘லேடீஸ் ஸ்பெஷல்’ பத்திரிகையில் ‘போராடி ஜெயித்த பெண்கள்’ என்ற தலைப்பின் கீழ் எழுதி வந்த தொடரின் தொகுப்பே ‘சாதனை அரசிகள்’. இந்த வாய்ப்பைத் தான் வழங்கிய போது “நாலைந்து பேரை வேண்டுமானால் கண்டு பிடிக்கலாம். அதற்கு மேல் முடியுமா தெரியவில்லை” என ஆரம்பத்தில் தயங்கியதாகவும் பின்னர் அடுத்தடுத்து பலரைக் கண்டு பிடித்து சுவைபட எழுத ஆரம்பித்து விட்டதாகவும் நூலின் முன்னுரையில் மகிழ்வுடன் குறிப்பிடுகிறார் பத்திரிகையின் ஆசிரியர் கிரிஜா ராகவன் அவர்கள். ஒவ்வொருவரையும் பேட்டி காணத் தேனம்மை எடுத்துக் கொண்ட சிரமங்களும், உழைப்பும், முயற்சியும் பாராட்டுக்குரியது எனில் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் நூலைத் தந்த வகையில் தானும் ஒரு சாதனை அரசியாக உயருகிறார் தேனம்மை.

மகளிர் தினம் அனுசரிக்கப்பட்ட இம்மாதத்தில், தேனம்மை கொண்டாடிய மகளிரில் சிலரைப் பற்றிய என் சுருக்கமான பகிர்வு உங்களுக்கு நூலை வாசிக்கும் ஆவலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

பதிமூன்று வயதாக இருக்கும் போது ஏற்பட்ட ஒரு நெருப்புக்காயத்தினால் சென்ற வருட டிசம்பர் வரையிலும் 42 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளைச் சந்தித்தவர் ரம்யா தேவி. எம் சி ஏ படித்து பன்னாட்டு மென்பொருள் நிறுவனமொன்றில் ப்ராஜெக்ட் மேனஜராகப் பணியாற்றும் நிலைக்கு உயர்ந்திருக்கும் இவர் தன் தோழி காயத்ரியுடன் சேர்ந்து ஆற்றி வரும் சமூக சேவைகள் எண்ணிலடங்கா. “தன் சாம்பலில் இருந்தே திரும்பத் திரும்ப உயிர்த்தெழும் ஃபீனிக்ஸைப் பார்க்க வேண்டு என்றால் ரம்யா தேவியைப் பார்க்கலாம்” என்கிறார் நூல் ஆசிரியர்.

‘சுயம்புவாக உருவான பெண்’ என ஓய்வு பெற்ற பேராசிரியர் மோகனா சுந்தரம் அவர்களைப் போற்றுகிறார் ஆசிரியர். வசதிகளற்ற ஒரு கிராமத்தில் மாடு மேய்ப்பது உட்பட வீட்டுவேலைகளை செய்தவிட்டு பள்ளிப்படிப்பை முடித்தவர் மேற்படிப்புப் படிக்க குடும்பத்தினருடன் பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. இதையொட்டி குடும்பமே இவருக்கு விஷம் வைத்துக் கொல்லவும் பார்த்திருக்கிறது. விலங்கியல் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கி, பொறுப்பு முதல்வராக ஓய்வு பெற்றவர். ஏராளமான அறிவியல் புத்தகங்களை எழுதியுள்ளார். சமீபத்தில் தன்னைத் தாக்கிய புற்று நோயிலிருந்தும் போராடி மீண்டு வந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காகவும், குழந்தைகள் நலனுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.

சாஸ்திரி பவனில் ஆடிட்டராகப் பணிபுரிகிறார் தலித் பெண்கள் சங்கத் தலைவி மணிமேகலை. நான்கு சகோதரிகள்,ஒரு சகோதரருடன் ஒரே ஒரு அரிக்கேன் விளக்கைச் சுற்றி அமர்ந்து படிப்பதாக இருந்திருக்கிறது பள்ளிப் பருவம். கல்லூரியில் சேரக் கட்டணம் செலுத்தும் வரிசையில் நின்றபோது ‘இவங்க எல்லாம் படிச்சு என்ன செய்யப் போறாங்க’ என ஒருவர் கேட்ட கேள்வியே தன்னை இந்த அளவுக்கு உயர்த்தியதாகக் கூறியிருக்கிறார். பெண் ஊழியர் நலச்சங்கத்தின் தலைவராக இருக்கும் இவர் தலித் பெண்களுக்காகவும் ஒரு நலச் சங்கத்தை உருவாக்கி பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு உதவுவதுடன் சங்கங்களின் மூலமாக இலவச மருத்துவ முகாம்களையும் நடத்துகிறார்.

சென்ற வருடம் செப்டம்பர் ஐந்தாம் தேதி ஜனாதிபதியிடம் சிறந்த ஆசிரியர் விருது பெற்றவர் லூர்து ராணி. 31 வருடங்களாக சிகப்பு அணுக்குறைவுக்காக ஸ்டிராய்ட் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் அதனால் ஏற்பட்ட தீவிர பக்க விளைவுகளை மனபலத்துடன் சமாளித்தபடி மற்ற பலரையும் விடத் தன் பணியைச் சிறப்புற ஆற்றியவர். படிக்க வசதியற்ற மாணவர் பலருக்கு உதவியும் வருகிறார்.

மலைகளில் தேன் எடுத்து வாழும் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் வசந்தி. ஆறாவது குழந்தையாகப் பிறந்து, சொந்தத்தில் தத்து கொடுக்கப்பட்டு, பத்தாம் வகுப்பு முடித்திருக்கையில் மணம் ஆக அதன் பிறகு எம் ஏ வரை படித்திருக்கிறார். தம் இன மக்களுக்கு மாலை நேர வகுப்பாசிரியராகவும், கிராம முன்னேற்ற அதிகாரியாகவும் பணியாற்றி இன்று ‘வானவில் பெண்கள் நலச் சங்கம்’ உட்பட பல கூட்டமைப்புகளை உருவாக்கிப் பல்லாயிரக் கணக்கான பெண்கள் அவற்றின் மூலமாக பயனடையக் காரணமாக இருந்து வருகிறார்.

சாலையோரங்களில் அநாதரவாக விடப்பட்டவர்களைக் காப்பாற்றி சரியான புகலிடங்களில் சேர்ப்பிக்கும் சாருமதி; மாங்குரோ காடுகளில் இறால் வளர்ப்புக் கேடுகளையும், அவற்றின் கழிவுகளினால் உண்டாகும் கேடுகளையும் கண்டுபிடித்த டாக்டர் ஆஸ்வின் ஸ்டான்லி; இந்திய தொழிற்சங்கத்தின் மாநில உறுப்பினராக செயலாற்றும் ஆட்டோ ஓட்டுநர் சாந்தி உட்பட மேலும் பல பெண்களின் சாதனைகளைக் கட்டுரைகளாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.

நூலின் முக்கிய அம்சமே இப்பெண்கள் அனைவரையும் ஆசிரியர் நேரடியாகச் சந்தித்து, அவர்களுடன் நேரம் செலவழித்து, நட்புடன் அளவளாவி, மனம் திறந்து அவர்கள் சொன்ன கதைகளோடு ஒன்றி, வியந்து போற்றி எழுதியிருக்கிறார்.

தடைகளாகவும் எதிர்ப்புகளாகவும் சுற்றிச் சூழும் பிரச்சனைகள் ஒவ்வொன்றிலிருந்தும் மீண்டெழுந்து புடம் போட்டப் பொன்னாக மிளிரும் பெண்மையை உயிர்ப்புடன் சித்தரித்திருக்கும் ஜீவாநந்தனின் அட்டைப்பட ஓவியம் மேலும் சிறப்பு சேர்க்கிறது. எழுத்தாளர் எம் ஏ சுசிலா அவர்களும், செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு அவர்களும் வாழ்த்துரையும் நட்புரையும் வழங்கியுள்ளார்கள்.

நூலில் இடம் பெற்ற பதினேழு பேரும் இலட்சக் கணக்கான பெண்களின் பிரதிநிதிகளாகவே எனக்குத் தோன்றுகிறார்கள். இன்னல்களையும், இடறுகளையும் கடந்து இவர்போலத் தன்னம்பிக்கையுடன் போராடி, தம்மோடு தம்மைச் சுற்றியிருப்பவரையும் உயர்த்திக் கொண்டே செல்லும் பெண்களை அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் அனைவருக்கும் என் மகளிர் தின வாழ்த்துகள்!

மகளிருக்கு மட்டுமின்றி எவருக்கும் தன்னம்பிக்கை தரும் ‘சாதனை அரசிகள்’ சரித்திரத்தின் ஒரு பக்கம். காலம் தேனம்மைக்கு நன்றி சொல்லும்.

**

சாதனை அரசிகள்
பக்கங்கள்:80; விலை:ரூ.50
பதிப்பகம்: முத்துசபா
கிடைக்கும் இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை.
தொலைபேசி எண்கள் : 9940446650

*****

-ராமலக்ஷ்மி

Series Navigationமுன்னணியின் பின்னணிகள் – 32வளவ. துரையனின் நேர்காணல் – 2
author

ராமலக்ஷ்மி

Similar Posts

2 Comments

Leave a Reply to ராமலக்ஷ்மி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *