சோவின் ‘ என்று தணியும் இந்த சுதந்திர தாகம் _ மேடை நாடகம் (நகலச்சு)

This entry is part 14 of 42 in the series 25 மார்ச் 2012

அட(ய்)யும் சக்கை பிரதமனும் கழிக்கா(த்)த கேரளக்காரன் உண்டோ? சோவின் நாடகமும் நையாண்டியும் களிக்காத தமிழ்ப் பாமரன் உண்டோ?

டி.வி. வரதராஜனின் யுனைட்டெட் விஷ¤வல்ஸ் குழு மீண்டும் மேடையேற்றிய நாடகம். கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்குப் பிறகு ( 1971 ) மீண்டும் மேடையேற்றுவதால், தற்கால அரசியல் கிண்டல்கள் ஏதும் இருக்குமோ என்கிற நப்பாசையில், வந்த கூட்டம், கடைசியில் ஏமாந்து திரும்பியது. சோ எதையும் மாற்றவில்லை. மாற்றவும் விடவில்லை. வந்தவர்கள் எல்லாம் பெரும்பான்மை ஐம்பது ப்ளஸ். அதனால் பலமுறை கேட்டது ‘ முச் முச் ‘

தற்கால இளைஞர்களுக்கு, அந்த கால அரசியல் நிலவரம் தெரியாது. சொன்னாலும் புரியாது. அவர்களுக்கு இந்த நாடகம் பிடிக்காது. ஆனால் சென்ற முறை போலல்லாமல், நாரத கான சபை அரங்கு, கிட்டத்தட்ட நிறைந்திருந்தது, சோவுக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்திற்கு ஒரு உரைகல்.

சோவின் நையாண்டியைத் தாண்டி, சோவின் குரலுக்கு, ஒரு விசித்திரமான ஒலி உண்டு. கொஞ்சம் மூக்கடைத்தாற்போல் இருக்கும் மென்மையான குரல். சொல்ல வந்ததை ஆழமாகப் பதிவு செய்ய வேண்டுமென்பதற்காகவே, அவர் அந்தக் குரலை உயர்த்தி உயர்த்தி, ஏறக்குறைய அவர் சன்னமாகப் பேசியே யாரும் கேட்டதில்லை என்று ஆகிவிட்டது. அதேபோல் அவர் குரலில் ஏற்ற இறங்கங்கள், பாவனைகள் எல்லாம் இருக்காது. ஒரே டெசிபல், கிரேசி மோகனைப் போல. ஆனாலும் அந்தக் குரலிலேயே ஒரு நையாண்டி கலந்திருக்கும். சாதாரண வார்த்தை கூட, கிண்டலோ என்று எண்ணி சிரிக்க வைக்கும். அதெல்லாம் அவர் ஏற்ற பாத்திரத்தில் நடித்த வரத ராஜனிடம் மிஸ்ஸிங். போதாதற்கு அசால்டாக நடித்துப் பழக்கப்பட்ட அவருக்கு, நாரதர் பாத்திரத்தைக் கொடுத்து, இடுப்பில் வீணையையும், போதாக்குறைக்கு கையில் டிரான்சிஸ்டரையும் கொடுத்து விட்டார்கள். மனிதரால் அப்படி இப்படி அசைய முடியவில்லை.

நடித்த எல்லோருமே ரொம்பவும் சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார்கள். ஆனால் சோவின் வசனங்களைப் பேசுகிறோம் என்கிற பய உணர்ச்சி, ஒரு டெமொக்கல்ஸ் வாள் போல தலை மேல் தொங்கிக் கொண்டிருப்பதை, என்னால் உணர முடிந்தது. அரசியல்வாதி நல்லதம்பியாக நடித்த ரவிக்குமார் நல்ல நடிகர். ஆனால் அந்தக்கால அம்பியிடம் இருந்த கேஷ¤வல் நடிப்பும் தெனாவெட்டும் அவரிடம் மிஸ்ஸிங். அம்பியின் நடிப்பில் ( சிவாஜிகணேசன், பாலச்சந்தர் பார்க்க விரும்பும் நடிகர் அவர் ) கால் பங்கு கூட இவர் நடிப்பில் இல்லை. மெனக்கெட்டு தேவலோக செட் போட்டிருக்கிறார் வரது. அள்ளுகிறது. ஆனாலும் ஒரே சிம்மாசனம், அதே இருக்கைகள், பின்னணி படுதா மட்டும் எமலோகம், தேவலோகம் என மாற்றிக் காட்டுவது கொஞ்சம் உட்டாலக்கடி தான்.

சுகுமார் ( தேவேந்திரன்), சுயம்பிரகாஷ் ( எமன்), சையத் தஸ்தகீர் ( குபேரன்) என எல்லா நடிகர்களுமே நல்ல தமிழ் பேசி நடித்தது ஒரு ஆச்சர்யம். பழைய நாடகங்களில் எப்படி சொதப்புவார்கள் என்று அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான். சரித்திர நாடகத்தில் ஒரு சௌகரியம். உடை மாற்றும் அசௌகரியம் இல்லை. இருந்த ஒரே பெண் பாத்திரமும் அவ்வையார். அதனால் வெள்ளை உடை, வெள்ளைத் தலை.

பி யூ சின்னப்பாவின் உத்தமபுத்திரனை மீண்டும் நடித்து வெற்றிப்படமாக்க ஒரு சிவாஜி கணேசனால் தான் முடியும். அதேபோல் தான் சோவும். அவரிடத்தை நிரப்ப நடிகர்கள் இல்லை. தேவனை உள்வாங்கி, மாடர்னைஸ் பண்ணியதால், கிரேசி மோகனால் பரிமளிக்க முடிந்தது. சோவின் நாடகத்தை உள்வாங்கி நவீனப்படுத்தியிருக்க வேண்டும். தவறியதுதான் வினை. எப்போதோ சாப்பிட்டது புளியேப்பமாக வந்தால் சுவையாக இருக்குமோ?

ஒரு வசனம் இப்போது சேர்க்கப்பட்டது போல் தெரிகிறது.

‘ அம்மாவுக்கு நல்லவர்களைத்தான் பிடிக்கும் ‘ பலத்த கரகோஷம். ஆனால் அது அவ்வையாரைக் குறிப்பிட்டுச் சொன்னது என்பதுதான் உச்சகட்ட காமெடி.

நாடகத் தொடக்கத்தில் சோ ஒரு பத்து நிமிடம் வீடியோவில் பேசுகிறார். சூப்பர். அதில் அவருக்குக் கிடைத்த கரகோஷத்தையும் சிரிப்பையும் ஒரு அளவாகக் கொண்டால், மொத்த நாடகத்திற்குக் கிடைத்தது அதைவிட கம்மிதான்.

#

கொசுறு

இந்த முறையும் நாரதகான சபையில் மைய வரிசைதான் எனக்கும் அலிபாய்க்கும். ஆனால் அரங்கு ஏகத்துக்கு நிறைந்து விட்டதால், எனக்கு முன்னாலும், அலிக்குப் பின்னாலும் இருக்கைகள்.

சோ மேடைக்கு வந்தார். குழுவினருடன் போட்டோ எடுத்துக் கொண்டார். ஆனால் அதிகம் வாயே திறக்கவில்லை. எதைச் சொன்னாலும், அதற்கு ஒரு அர்த்தம் கற்பிக்கும் கூட்டம் ஒன்று, சுற்றி இருந்தது காரணமாக இருக்கலாம்.

வாசலில் இருக்கும் வுட்லாண்ட்ஸ் ஓட்டலில், சுயசேவைப் பிரிவை எடுத்து விட்டு ஆர்டர் எடுக்கிறார்கள். இரண்டு வரிசை எட்டு டேபிள்கள். 32 சேர்கள். இரண்டு ஆட்கள். ஆர்டர் செய்த ஆனியன் ரவா டேபிளுக்கு வந்தபோது ஆறிய ரவாவாக இருந்தது.

#

Series Navigationதில்லையில் கள்ள உள்ளம்…வெறும் தோற்ற மயக்கங்களோ?
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

  1. Avatar
    punai peyaril says:

    எனக்கு முன்னாலும், அலிக்குப் பின்னாலும் இருக்கைகள்…. :)

Leave a Reply to punai peyaril Cancel reply

Your email address will not be published. Required fields are marked *