வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 5

Spread the love

1967 ஆண்டு தமிழக வரலாற்றில் ஓர் திருப்பம்.

சீதாலட்சுமி

செலவத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

காங்கிரஸ்கட்சி அரியாசனத்திலிருந்து கீழிறக்கப்பட்டு திராவிடக் கட்சியை அமர்த்திய ஆண்டு. அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வரானார். அவரிடம் நீதி கேட்டுப் போராடவேண்டிய சூழலில் நான் தள்ளப்பட்டேன். அண்ணாவின் கருணையால் போராட்டம் வென்றது. இது எங்கும் பதியப்படாத ஓர் செய்தி. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனைப் பதிய வேண்டிய கடமை எனக்குண்டு. அது என்ன என்று சொல்லும் முன் பல விஷயங்கள் கூற வேண்டும். அப்பொழுதுதான் பிரச்சனையின் ஆழம் தெரியும். முதலிடம் பெறுவது காந்தி கிராமம். அந்த நாளுக்கு எல்லோரையும் அழைத்துச் செல்ல விரும்புகின்றேன். நம் வாழ்வியலின் வேர்களை அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்
காந்தி கிராமத்தில் பல பணிகள் நடைபெற்று வந்தன. சேவை இல்லம், அனாதைச் சிறுவர்கள் காப்பகம், கல்வி ஸ்தாபனம் போன்றவைகள் இருப்பினும் பல பயிற்சிகள் நடைபெற்று வந்தன. அந்த இடமே ஓர் கிராமம் போன்று பெரியது. சில கட்டடங்கள் தவிர பெரும்பாலும் கூரை வேய்ந்த கட்டங்கள் . கழிப்பறைகள் கிடையாது. வார்தா கக்கூஸ் என்று கூறுவர். அதாவது நாங்களே மலக் குழிகள் வெட்ட வேண்டும். இரண்டு மரப்பலகைகள் போடப்பட்டிருக்கும். சுற்றிலும் தகரங்கள் சுவர்களாக இருக்கும். குழிவெட்டிய மண் குவியல் இருக்கும். கழிவறை உபயோகிப்போர் அந்த மண்ணை அள்ளி மலத்தை மூடிவிட்டு வர வேண்டும். குழி நிறைந்தவுடன் மூடப்பட்டுவிடும். சுற்றுப்புரங்கள் அனைத்தும் சுத்தப்படுத்த அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். பகுதிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும். சேரும் குப்பையை குப்பைக் குழியில் கொட்டுவோம். அதுவே உரக்குழியும் ஆகும் நீளம் அகலம், ஆழம் எங்களுக்குக் குறித்துக் கொடுக்கப்பட்டிருந்தது. மலக் குழியும் குப்பைக் குழியும் ஆறு மாதங்கள் மூடப் பட்டிருக்கும். அக்காலத்தில் அது உரமாகிவிடும்.. அந்த உரத்தை எடுத்து தலையில் சுமந்து கொண்டு வயலில் கொட்டவேண்டியதும் எங்கள் பணியாகும். .

நினைத்துப் பாருங்கள். இப்பொழுது அப்படி செய்யச் சொன்னால் செய்ய மாட்டோம். அன்று எங்களுக்கு அருவறுப்பு வரவில்லை. செய்யும் வேலையில் உயர்வு தாழ்வு பார்க்கவில்லை. எந்த வேலையையும் செய்யும் மனப்பக்குவம் எங்களுக்கு வந்தது. அங்கே சாதிப் பிரிவினைகள் தோன்றவில்லை. அதிகாலையில் எழுந்திருத்தல் மூலம் ஓர் ஒழுங்கு, (அதிகாலையில் எழுந்திருப்பதுதான் எனக்கு கஷ்டமானது. எப்படியோ பழகிவிட்டேன்.) எங்கள் பணிகளை நாங்களே செய்தது உழைப்பின் அருமையை உணர வைத்த பயிற்சி. மேலை நாடுகளில் எந்த வேலையையும் மதிப்பர். .நாம் பல பிரிவினைகளை ஏற்படுத்தி வேலைகளையும் அவர்களிடம் தள்ளி விட்டோம்.

வயலுக்கு நாற்று நடச் சென்றிருக்கின்றோம். அதே போல் களையெடுக்கவும் போயிருக் கின்றோம். அக்காலத்தில் ஜப்பானிய நடவு முறை அறிமுகப்படுத்தப் பட்டிருந்தது. அதைச் சொல்லிக் கொடுக்கத் தெரிய வேண்டும். எனவே முதலில் நாங்கள் வயலில் இறங்கி வரிசையாக நாற்று நட்டோம். .பக்கத்து கிராமங்களுக்குச் சென்று பாதை போடுவது, கட்டட வேலைக்கு உதவி செய்வது போன்ற உடலுழைப்பும் பயிற்சியில் சேர்க்கப்பட்டிருந்தன.

குறிப்பாகச் சொல்லவேண்டிய தகவல் ஒன்று. அன்று நாம் உண்ணும் உணவு சத்தை இழந்து விடாத உணவு. இயற்கை உரத்தில் பயிர்கள். செயற்கை உரம் அதிகம் உபயோகத்தில் இல்லை. சமையல் முறையும் அன்று சத்தானது. காய்களைக் கலந்து போட்டு ஓர் குழம்பு. எண்ணையில் வறுத்து சத்துக்களை நாம் அழிக்க வில்லை. கைக்குத்தல் அரிசி. வீட்டு வைத்தியம் பற்றி குறித்தே ஆக வேண்டும். தலைவலிக்குப் பத்தரைத்து போட்டுக் கொள்ளுவார்கள். வீட்டு வைத்தியம் எளிதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. ஏற்னவே இருக்கும் நல்ல வாழ்வியல் முறைகளசியும் கூறி அதனை மாற்றக் கூடாது என்றும் பயிற்சியில் கூறப்பட்டது. உள்ளூர் மருத்துவச்சி பிரசவம் பார்ப்பார்கள் .கருவிகளைக் கையாளூம் முறை சரியாகத் தெரியாத்தால் பல பெண்களுக்கு செப்டிக் ஆகி மரணம் அடைந்ததுண்டு. எல்லாக் கிராமங்களுக்கும் அரசுப் பணியாளர் போடுவதைவிட அந்த மருத்துவச்சிக்குக் குறைந்த காலம் பயிற்சி கொடுக்கப் பட்டு அதற்குரிய உதவிப் பொருள்களும் தரப்பட்டன.

ஏற்கனவே கிராமங்களில் இருக்கும் நடை முறைகளைப் பார்த்து எவைகளை மாற்ற வேண்டுமோ அவைகளில் மட்டுமே விழிப்புணர்வு ஏற்படுத்தச் சொல்லித் தரப்பட்ட்து.

எதுவும் சரியான முறையில் திட்டம் தீட்டப்பட வேண்டும். அதற்கு முன்னும் பின்னும் ஆய்வுகள் செய்ய வேண்டும். தீட்டிய திட்டங்களைச் செயல்படுத்தும் பொழுதும் அக்கறையுடன் செயல்படுத்த வேண்டும். ஓர் திட்டத்தின் வெற்றி அதைத் திட்டமிடுதலில் மட்டுமல்ல. களத்தில் செயல்படுத்தும் விதத்திலேயே இருக்கின்றது. திட்டமிடுதல் கூட பல விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். இடம், காலம். பொருள், அதில் வரும் குறை நிறை எல்லாம் அலசிப் பார்த்தே திட்ட மிடப்பட வேண்டும். இத்தொடரில் பின்னர் திட்டமிடுதலும் செயல்படுத்துவது பற்றியும் விளக்கமாக்க் கூற இருக்கின்றேன். எனவே இப்பொழுது இது போதும்.
அந்தநாள் வந்திடாதோ என்று ஏக்கத்துடன் பாடத் தோன்றுகின்றது
சுதந்திரம் கிடைத்தவுடன் நாம் நம்மை ஆள ஆரம்பித்தோம். நாட்டில் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி காண விரும்பினோம். எனவே புதிதாகத் திட்டங்கள் தீட்டினோம். அவ்வப்பொழுது கிடைத்த அனுப வங்களுக் கேற்ப மாறுதல்கள் செய்தோம்.

இந்தியாவின் முக்கிய தொழில் விவசாயம். நம் நாட்டில் கிராமங்களும் அதிகம்.. எனவே கிராமங்களில் எல்லா வசதிகளையும் செய்து தர விரும்பினோம். ஓர் பாதை போட வேண்டு மென்றாலும் ஓர் பள்ளிக்கூடம் காட்ட வேண்டுமென்றாலோ, ஏன் கிணறு வெட்டக் கூட நிதி ஒதுக்கிடு செய்யும் பொழுது அரசு அரைப் பங்கு, மக்களின் பங்கு அரைப்பங்கு என்று இருந்தது. மக்கள் பொருளாக முழுமையாகக் கொடுக்க முடியாது. உழைப்பால் அதனை ஈடு கட்டலாம். அதற்குப் பெயர் சிரமதானம்.

பாதை போடுவதானாலும் , உரக்குழி வெட்டுவதில் கூட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி முதல் கடை நிலை ஊழியர் வரை கிராமங்களுக்கு வந்து மண்வெட்டி தூக்குவர். மண், கல்சுமப்பர். ஊரில் பல கட்சிக் கொடிகள் பறக்கும் ஆனால் பொதுப்பணிகள் என்று வந்த பொழுது கட்சிப் பிரிவினைகள் மறைந்து விடும். யாராயினும் ஊரின் பொது வேலைகளில் எந்த வேலை யானாலும் செய்யத் தயங்கியதில்லை.

அந்த ஒற்றுமை எங்கே போயிற்று? பணக்காரன், அதிகாரி என்ற மமதை இல்லாமல் இருந்ததே! எப்பொழுது நமக்கு அந்தஸ்து பேய் பிடித்தது ? கையில் ஒரு அணா இருந்தாலும் நம்மூருக்கு என்று கொடுத்த மனம் வற்றி, நூறு ரூபாய் ஒதுக்கினால் ஒரு அணா மட்டும் ஊருக்கு ஒதுக்கி எல்லாப் பணத்தையியும் பங்கு போட்டுக் கொள்ளும் சுரண்டல் அரக்கன் எப்பொழுது நுழைந்தான்?!. தாம்பத்தியத்திலும் கூடநிழல் படிய ஆரம்பித்து விட்டதே !சொல்லப் பிடிக்கவில்லை. சொல்லாமலும் இருக்கமுடியவில்லை. நாம் ஏன் உணரமாட்டோம் என்றிருக்கின்றோம் ? இதனை எடுத்துச் சொல்வாரைப் பார்த்து எள்ளி நகையாடுகின்றோம். ஆழ்ந்து படித்து சிந்திப்ப தில்லை. நுனிப்புல் மேய்வது போல் பார்வையை ஓட்டி விலகி விடுகின்றோம். பேச்சைக் கேட்கும் மனம் கவனத்துடன் படிப்பதில் அக்கறை காட்டுவதில்லை. யாராவது எழுதினாலும் இத்தகைய எழுத்துக்கள் என்று தெரிந்தால் எழுதுபவன் பைத்தியக்காரன் என்று புறம் தள்ளுகின்றோம். நாம் எங்கே செல்கின்றோம் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட விரும்பவில்லை. இந்த மயக்கத்திலிருந்து விடுபடும் காலம் தெரியவில்லை. மனிதனின் பேராசை, ஊடகத்தாக்கங்கள் இவைகளால் நம் மூளைச் சலவை நடைபெற்று வருகின்றதே, அது கூட உணராமல் ஏதோ ஓர் உணர்வில் உள்ளதை உணராமல் புலம்பிக் கொண்டிருக்கின்றோமே! பிறரைக் குறை சொல்வது இனிக்கின்றது. நம்மை நினைத்துப் பார்க்கக் கசக்கின்றது.

நாம் எல்லோரும் சுயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலக் கட்டம் இது.
நமக்கு ஜனநாயகமும் லாயக்கில்லை. பொது உடைமையும் ஒத்துவராது. சுமை தாங்காமல் என்றோ ஒரு நாள் ஏதோ நடக்கும். வாழ்வோமா அல்லது விழ்வோமா என்று அந்த நாள்தான் முடிவு செய்யும். இது மன வெடிப்பின் வெளிப்பாடு. சித்தத்தை ஒரு முகப்படுத்தி வலிமை சேர்த்த சித்தர்கள் நாடு நாம் வாழும் மண் . நம் சித்தத்தில் மாயையை உட்கார வைத்து மகிழ்ந்து கொண்டி ருக்கின்றோம்.
மனக் கொதிப்பில் பாதையில் எங்கோ போய்விட்டேன். சுதந்திரம் கிடைத்த பத்தாண்டுகள் பரிசோதனைக் களம். 1958 இல் பஞ்சாயத்துராஜ் வந்தது. சிறிது சிறிதாக மாற்றங்கள் நுழைய ஆரம்பித்தன.

நான் பயிற்சி பெற்றது 1956 இல். ஓர் ஊருக்குச் சென்றால், ஓர் வீட்டிற்குச் சென்றால் எப்படி பேச வேண்டும் என்பதையும் கிராமத்தினர் நம்மை ஏற்றுக் கொள்ள வைக்கும் முறைகளையும் கூடச் சொல்லிக் கொடுக்கப்பட்டன..

ஒரு பழக்கத்தில் வாழ்ந்துவிட்டால் அதனை மாற்றிக் கொள்ள மனம் இடம் தருவதில்லை.
மாறிவரும் காலத்தில் சில மாறுதல்களை நாம் ஏற்றுக் கொண்டு முன்னேற வேண்டியிருக்கின்றது. எனவே அதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்த எத்தனை வழிகள் உண்டோ அவைகளை எளிதாகக் கையாளக் கூடியவற்றைக் கற்றுத்தந்தனர். பணியாற்றுபவர்களுக்குக் கூட சலிப்பு வராத வழிகளைக் காட்டினர். கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த பாடமும் காலத்திற்கும் நிற்காது. களத்தில் இறங்கி சோதனைகளுக்குட்பட்டு தெளிவடைய வேண்டும். வாழ்வியலின் அர்த்தத்தை அந்தப் பயிற்சியில் அறிந்து கொண்டோம். தனி மனிதர் தொடர்பு, கூட்டிவைத்துச் சொல்லிக் கொடுப்பது, பயிற்சி முகாம்கள் நடத்தும் விதங்களும் கற்றுத் தரப்பட்டன

மக்கள் தொடர்பு

கல்கத்தாவிலிருந்து தத்தா என்று ஒருவரை வரவழைத்திருந்தார்கள். சாந்தினிகேதனில் கற்றவந்தவர்தான் எங்களுக்கு கலை பயிற்றுனர்.
மின்விளக்கு இல்லாத கிராமம். அதிகாலையில் சென்றால் இருட்டும் நேரத்தில் களைத்துப்போய் வரும் மக்கள். இவர்களை ஈர்க்க வேண்டும். எத்தனை வழிகள்! எளிய முறைகள்! கைவிரலில் பேனாவினால் உருவம் வரைந்து அதைக் கைக்குட்டைத் துணியால் முக்காடிட்டு குட்டி மனிதர்களாக்கிக் கதை வடிவில் சொல்வோம். பொம்மைகள் செய்து பொம்மலாட்டம் மூலம் செய்திகளைத் தெரிவிப்போம். மெலிதான அட்டைகளை உருவங்களாக வெட்டி ஒட்டி கை, கால் அசைத்து கதைவடிவில் பேசுவோம். கதாகாலட்சேபம், வில்லுப்பாட்டு, சினிமாப்பாடல்களின் இராகத்தில் திட்டப்பாடல்கள் எழுதி மேடைக் கச்சேரி செய்வோம். ஓரங்க நாடகம், மேடை நாடகம் போட்டு மக்கள் மனத்தில் தெளிவை உண்டாக்குவோம்.

எல்லோரிடமும் எல்லாத் திறமைகளும் இருக்காது. முடிந்த மட்டும் கற்பார்கள். முறைகளைக் கற்றுக் கொண்டு பிறரைச் செய்ய வைக்கவும் சொல்லிக் கொடுத்தனர்.

மேடைகளில் நிகழ்ச்சி நடக்கும் பொழுது எங்களைப் பார்க்காமல் எங்கள் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களின் முக பாவனைகளைப் பார்த்து மதிப்பீடு செய்வார்கள். குறை காணுமிடங்களைத் திருத்தம் செய்யும் விதமும் கற்றுக் கொடுக்கப்பட்ட்து.

அதிகாலையில் எழுந்திருந்தால் இரவு படுக்கும் வரை சோம்பித் திரியும் படியாக ஒர் மணித்துளி கூட வீணாக்க அனுமதிக்கப்படவில்லை

என்னுடய அனுபவத்தில் அன்றைய காந்தி கிராமத்தில் கண்ட பயிற்சி முறைகளை, ஐந்து மாதம் வாழ்ந்த காலத்தில் கற்றுக் கொண்ட வாழ்வியலை நான் எங்கும் கண்டதில்லை. பல பயிற்சி நிலையங்களில் சிறு சிறு பயிற்சிகள் பெற்றவள் நான். கல்லுப்பட்டியில் ஓரளவு உயர்திரு குருசாமி அய்யா வழிகாட்டலில் நடந்தாலும் அங்கே சில பயிற்சிகளே கற்றுத் தரப்பட்டன. அன்றைய காந்தி கிராமத்தை நினைத்துக் கொண்டு இன்று போய்ப் பார்க்கக் கூடாது. இப்பொழுது அது ஓர் கல்வி நிலையம். அன்று நாங்கள் பயின்ற இடம் ஓர் ஆசிரமம்.

ஒரு காலத்தில் குருகுலங்கள் இயங்கிவந்திருப்பதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கின்றோம்.

ஒரு கதை சொல்கின்றேன்

குழந்தைகளை குருகுலத்தில் விட்டால் குறிப்பிட்ட சில காலம்வரை வீட்டினர் யாரும் குழந்தைகளைப் பார்க்க வரக்கூடாது. குழந்தைகளூம் போக முடியாது. கல்விக் காலம் முடிந்த பின்னரே வெளிச் செல்லலாம்..

அப்படிப்பட்ட காலத்தில் குருகுலகுருஜி ஓர் சிறுவனின் பெற்றோரை வரவழைத்து அவர்கள் பிள்ளையைத் திரும்பக் கூட்டிப் போகச் சொன்னார். அக்காலத்தில் பெற்றோர்கள் ஆசிரியரை மிரட்டுவது கிடையாது.

தயக்கத்துடன் காரணம் கேட்டனர்

உங்கள் மகனுக்கு படிப்பில் கவனம் போய்விட்டது. உணவில் அக்கறை வந்துவிட்டது. எனவே இனி இங்கு தங்க வைக்க முடியாது. அவன் உணவைப் பற்றி மற்ற மாணவர்களிடம் கூற ஆரம்பித்தால் பலரும் கல்வியில் கவனம் இழந்துவிடுவர்.

தகப்பன் திகைத்துப் போய்ப் பார்த்தான். பொதுவாக ஆசிரியர்கள் இந்த அளவு பேசுவதில்லை. ஆனால் அன்று அவர் விளக்கமே கொடுத்தார்

ஆஸ்ரமத்து சமையலில் உபயோகிக்கும் எண்ணை வேப்பெண்ணை. கசப்பு. மனம் ஒன்றில் ஒன்றி இருந்தால் மற்றவைகளில் உணர்வு படராது.சுவையில் மனம் லயித்துவிட்ட்து. தன்னை அவன் இழந்துவிட்டான்.

சிந்தித்துப் பாருங்கள் இது கதையாக இருக்கலாம். ஆனால் வாழ்வியலின் தத்துவமல்லவா?!
ஒரு பறவை மேல் குறிவைப்பவன் குறியைச் சுற்றி கவனம் சென்றால் குறி தப்பிவிடும். அர்ச்சுனன் வில்வித்தையில் தேர்ந்தவனாகத் திகழ்ந்தற்குக் காரணம் இலக்கில் மட்டும் மனம் வைக்க முடிந்தவன்
ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் கவனச் சிதறல்கள் கூடாது. இன்றைய ஊடகத் தாக்கங்களில் இது முடியுமா? இது இன்றைய வாழ்வியல்.

ஓர் பயிற்சியை பற்றி இத்தனை விளக்கங்களுடன் எழுத வேண்டுமா? நான் எதிர்கொள்ளப் போகும் போராட்ட களத்தில் இத்தனையும் நான் சொல்லி வாதிட வேண்டிய கட்டாய நிலை. அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வரான புதிதில் அவருக்கு அரசு இயந்திரத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அறிக்கை கொடுத்த ஆலோசகர் உயர்திரு. முருகேச முதலியார் அவர்கள். முதலில் நான் சந்திக்க வேண்டியது இவரைத் தான். அவரின் கேள்விக் கணைகளுக்கு என் விடைகள் சரியாக அமைய வேண்டும்.

விவாத மேடையை விளக்கமாகக் காட்டப் போவதில்லை.. அரசுப்பணி நிலையில் அவர் மிக மிக உச்ச நிலை. என் பதவி அடிமட்ட நிலை. அந்த உயர்நிலை அதிகாரியைப் பார்க்கவும் பேசவும் அரசு சட்டப்படி தவறு. Protocal .ஆயினும் எப்படியோ முயன்று சந்தித்தேன். மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவரிடம் அவர் அறிக்கையில் பிழை இருக்கின்றது என்று சொல்ல முடியுமா ? பார்க்கவே அனுமதி கிடைக்காது. உடனே என்னை வேலையை விட்டு நீக்கலாம். சாதாரணமாக வெளியேற முடியாது. தண்டனைகளுடன் வெளியேற்றப்படுவேன். ஆனால் பிரச்சனை மிக மிகப் பெரிது. அவர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதில்கள் கூறினேன். எனக்குக் கிடைத்த பயிற்சியும் அனுபவங்களும் என்னை வழிநடத்தியது. அந்த மாமனிதரும் பிரச்சனையின் ஆழத்தைப் புரிந்து கொண்டு உடனே நடவடிக்கை எடுத்தார். அன்று சாய்ந்து வீழ்ந்து அழிந்து போக இருந்த ஆலமரம் பற்றி நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது முக்கியமானவற்றைக் கூறுகின்றேன்
பயிற்சி களம் பார்த்துவிட்டோம். பணிக்களம் பார்க்கப் போகின்றோம். பிரச்சனையின் வலிமையைப் புரிந்து கொள்ள பிரச்சனைக்குரிய நிகழ்வுகளின் காலம், அச்சமயத்தில் அப்பொழுதிருந்த சமுதாயக் கட்டமைப்புகளைப் புரிந்து கொள்ள வேண்டும். இது இந்த நூற்றாண்டு வரலாறு. பல திரைப்படங்களின் கிராம சமுதயத்தைக் காட்டி யிருக்கின்றனர். நானும் இப்பொழுது சில காட்சிகளைக் காட்ட எண்ணி யுள்ளேன். நான் பார்த்தவைகளை, அனுபவங்கள் சிலவற்றை விளக்கப் போகின்றேன். நம் வரலாறு கொஞ்சமாவது நாம் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் என்னைப் பற்றி சில தகவல்களையாவது நான் தெரிவிக்க வேண்டும்.

என்னிடம் இயற்கையாக அமைந்த இயல்புகள், வளர்ந்த சூழ்நிலை, நான் கற்றுத் தேர்ந்த கலைகள், என் அனுபவங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள் பற்றி கூற வேண்டியது என் கடமை. எடுத்துக்காட்டிற்குச் சிலரைப் பற்றி மட்டும் கூறப் போவதில்லை. எனக்கே நேர்ந்த சோதனைகளையும் நான் அவைகளை எப்படி எதிர்கொண்டேன் என்பதையும் வெளிப்படையாகக் கூற விரும்புகின்றேன். எதுவும் கதையல்ல . எல்லாம் நிஜம்.

என் பயணத்தில் காந்தி கிராமப் பயிற்சி முக்கிய இடத்திலுள்ளது. எனக்கு வழிகாட்டியாய் அமைந்தவரும் டாக்டர் திருமதி. செளந்திரம் ராமச்சந்திரன் அவர்கள். இனி வரப் போகும் பயணத்தில் என் மற்ற வழிகாட்டிகளையும் வழித்துணைகளையும் பார்க்கப் போகின்றீர்கள். எங்களைச் செதுக்கிய சிற்பிகள் சாதாரணமாவர்கள் அல்ல. வரலாற்றில் வாழ்கின்றவர்கள்.
இது அரசியல் தொடர் அல்ல. வாழ்வியல் வரலாறு. வாழ்வியலில் ஊடகங்களும் அரசியலும் வந்து செல்லும். இதன் நாயகன் மனம் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். அந்த மனத்தை விரித்துக் காட்டும் ஓர் சமுதாயப் பணியாளர் நான். எனக்கு நானே ஓர் எல்லைக் கோடு போட்டுக் கொண்டிருக்கின்றேன். சில குறைகளைச் சுட்டிக் காட்டுவேன். தனிப்பட்ட யாரையும் சாடமாட்டேன். என் மண்ணின் அமைதி முக்கியம். நம்மை நாம் உணர்ந்து கொண்டால் பல பிரச்சனைகள் நீர்த்துவிடும். அது எளிதல்ல. முயற்சி செய்வது தவறல்ல. நல்ல நோக்கத்தில் பயணம் செல்கின்றது. உடன் வருக.

“புதிய இடத்திற்குப் போக நேர்ந்தால் விஷயம் தெரிந்த வழிகாட்டி ஒருவனுடைய சொற்படி நடக்க வேண்டும்.”

ஸ்ரீ ராமகிருஷ்ணர்

(பயணம் தொடரும்)

Series Navigationவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி ரெண்டு