பி ஆர் பந்துலுவின் ‘ கர்ணன் ‘ ( டிஜிட்டல் )

0 minutes, 2 seconds Read
This entry is part 27 of 44 in the series 15 ஏப்ரல் 2012

அறுபதுகளில் வந்த படம், சிலரின் அரிய முயற்சியால் டிஜிட்டலாக்கப்பட்டு, வரவேற்பும் பெற்றிருப்பது ஆச்சர்யம். பிரம்மாண்டமும், துல்லிய வண்ணமும் காரணமாக இருக்கலாம். சிவாஜியைப் பற்றி அறியாத, அப்போது பிறந்திராத இளைய தலைமுறை கூட, அவ்வப்போது மெல்லிய சிரிப்பினை வெளியிடுவது, இது ஒரு திரைக்காவியம் என்றே பறை சாற்றுகிறது.
கர்ணன் வெளிவந்த புதிதில் சாந்தி தியேட்டரில் திரையிட்டிருந்தார்கள். பெரிய கட் அவுட்டுகளில், தங்கத் தேர்களில் சிவாஜியும்( கர்ணன்)என் டி ராமாராவும் ( கண்ணன் ) எதிரெதிர் நின்று கொண்டிருக்கும் போஸ், இன்னமும் நினைவில் நிற்கிறது. அதற்குப் போட்டியாக வெளியிடப்பட்ட எம் ஜி ஆரின் ‘வேட்டைக்காரனுக்கு’ இப்போது காணாமல் போயிருக்கும் சித்ரா தியேட்டரில், மலை செட் போட்டிருந்தார்கள். நடுவில் பெரிய எம் ஜி ஆர், சின்ன சாவித்திரி கட் அவுட்ஸ்.
மிகவும் நைய்ந்து போயிருந்த பிலிமிலிருந்து, மீட்டிருக்கிறார்கள் படத்தை என்பது, ஆரம்பக்காட்சிகளில் தெரியும் வெளிச்சப் புள்ளிகளிலும், பிரேம் நடுக்கத்திலும் தெரிகிறது. கொஞ்சம் போன பிறகு, படம் சுதாரித்துக் கொண்டு விடுகிறது. எல்லோரும் மேக்கப் போட்டிருக்கிறார்கள். ஆனாலும் கிருஷ்ணனைத் தவிர, எதுவுமே அன்னியமாகத் தெரியவில்லை. அந்தக் காலத்து கலைஞர்களின் திறமை.
ஒன்றரை மணிநேர ‘ அஸ்தமனம் ‘ படத்தை பார்த்துவிட்டு, மூன்றேகால் மணிநேரம் கர்ணனைப் பார்த்தது எனக்கு ஒரு புது அனுபவம். ஆனாலும் படம் போரடிக்கவில்லை என்பது, ஏ பி நாகராஜனின் திரைக்கதைக்குக் கிடைத்த வெற்றி. முழுவதுமாகப் பாரதத்தைச் சொல்லி போரடிக்கவில்லை. ஆங்காங்கே கதையின் நகர்தலுக்காக, தொட்டுக் கொள்கிறார்கள். நேர்க்கோட்டில் பயணிக்கிறது கதை. இன்றைய படங்கள் போல், அங்குமிங்கும் அல்லாடவில்லை. பல திரையுலக ஜாம்பவான்கள் ஒன்று சேர்ந்த படம் என்பதால், இதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.
சிவாஜிதான் பிரதான பாத்திரம். நடிகர்திலகம் என்பதால் அவரிடமிருந்து கிடைப்பது எதிர்பார்த்துப் போனதுதான். ஆச்சர்யமூட்டுபவர் நடிகையர் திலகம் சாவித்திரி. துரியோதனன் மனைவி பானுமதியாக வரும் அவர், சிறு கண் சிமிட்டல்களிலும், உதட்டுச் சுழிப்பிலும் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறார். இத்தனைக்கும் காட்சியில் சிவாஜியும் அசோகனும் இருப்பார்கள். பந்துலுவின் துல்லிய கவனத்திற்கு “ எடுக்கவோ கோர்க்கவோ “ காட்சி ஒன்று போதும். சிவாஜி கலங்குவதும், அசோகன் ஆற்றுப்படுத் துவதுமான காட்சியில், ஓரத்தில் கலங்கி நிற்கும் சாவித்திரி, கணவனின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ என்கிற அச்சத்தில் இருந்து மெல்ல விலகி, அவன் தன்னைத் தவறாக நினைக்கவில்லை என்கிற ஒரு நிம்மதி வந்ததை, கண்களாலும், சிறு புன்னகையாலும் காண்பிக்கும் இடம் கிளாசிக்.
பிந்தைய காலங்களில் காமெடி பீசாக மாறிப்போன அற்புதமான நடிகர் அசோகன். அவரை சரியாக பயன்படுத்தாதது திரையுலகின் குற்றம்.
வசனம் ( சக்தி கிருஷ்ணசாமி ) ஒரேயடியாக செந்தமிழில் இல்லை என்பது ஆறுதல். பழகு தமிழில், ஆனால் மொழி மணம் மாறாமல் எடுத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.
கருமை நிறக் கண்ணன் இதில் நீலநிறத்தில் வருகிறார். அது ஒன்று தான் நெருடல். ஆனால் தேவுடு நிஜமாக, வந்து நின்றால் கண்ணன் தான். அந்தச் சிரிப்பும், கண் உருட்டலும் வேறு யாருக்கு வரும்? ராமராஜ்ஜியத்தில் ஜூனியர் எப்படி என்று பார்க்கும் ஆவல் தூண்டப்படுகிறது.
குலதெய்வம் ராஜகோபால் ஓரிரு காட்சிகளில் நகைச்சுவைக்காக சேர்க்கப் பட்டிருக்கிறார். ஆனால் எபெக்ட் பூஜ்யம். சிவாஜியும் சாவித்திரியுமே வசனங்களால் போதிய நகைச்சுவையை அளித்து விடுகிறார்கள். குந்தியாக வரும் எம் வி ராஜம்மா கர்ணனை சந்திக்கும் இடம் ஹை லைட். அதில் சிவாஜி வரம் கேட்கும் தாயிடம், மறுத்துக் குமுறும் இடம், வேறு எங்கும் காணக் கிடைக்காதது. என்னதான் கமல் சிவாஜி அடியொற்றி வந்தாலும், சிவாஜி பாவனைகள் சிவாஜி ராவிடமே விரவிக் கிடப்பது உண்மை. அதனால்தான், கிடைத்ததை வைத்துக் கொண்டு கொண்டாடி விட்டார்கள் ரஜினி ரசிகர்கள்.
கண்ணதாசன் வரிகளில் இருக்கும் நயமும் தமிழும் வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றன. போனசாக காலத்தால் அழியாத மெல்லிசை மன்னரின் இசை.
எதுகைமோனை வசனங்களாக இருந்தாலும், சாமான்னிய ரசிகனும் நிமிர்ந்து உட்காரும் வண்ணம் அவை இருப்பதுதான் இப்போதும் படத்திற்குக் கிடைத்த வரவேற்பிற்குக் காரணம்.
அம்புப்படுக்கையில் பீஷ்மர். அருகில் கர்ணன். அழுது ஆர்ப்பரிக்கும் அவனை ஆற்றுப் படுத்துகிறார் பீஷ்மர்.
பீஷ்மர் : கர்ணா! தெரிந்தேதான் உன்னை இழிவுபடுத்தினேன். எனக்குப் பிறகு துரியோதனைக் காக்கத் தகுந்தவன் நீ ஒருவனே என்பதால் உன்னை விலக்கி வைத்தேன். நான் வீரனல்லவா! நீ வீரன் என்பது எனக்குப் புரியாததா?
கர்ணன் : அய்யோ! சிப்பியின் மேலிருக்கும் நத்தையை எடுத்துக் கொண்டு, உள்ளிருக்கும் முத்தைத் தவற விட்டேனே!
இதைப் பார்த்துவிட்டு, ஏன் இந்த உலக மகா நடிகன்  ‘ பூங்காற்று திரும்புமா? ‘ என்று பாடினான் என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.
#
கொசுறு

இன்னமும் ஏ வி எம் ராஜேஸ்வரியில், படம் ஆரம்பிப்பதற்கு முன் தேசிய கீதம் போடுகிறார்கள். Please stand up for the National Anthem என்று போட்டவுடன் எல்லோரும் அமைதியாக எழுந்து நிற்கிறார்கள். இந்தியா வாழ்வது இதில்தான் என்று தோன்றுகிறது. ராஜேஸ்வரியில் பத்து ரூபாய் டிக்கெட் கிடையாது. ஐநாக்ஸில் கூட இருக்கிறது என்றேன். கவுண்டர் ஆசாமி சொன்னார். “ அங்கே மத்த சீட்டெல்லாம் 120. இங்கே எல்லாமே 40. கட்டுப்படியாகாது சார். அதனால நிறுத்திட்டோம்.”

வடபழனிக்கு அருகில் இருக்கும் பிக் பஜார் மாடியில் பத்து திரை கொண்ட மல்டி ப்ளெக்ஸ் வரப் போகிறதாம். பத்துக்குப் பத்து. எனக்குக் கொண்டாட்டம்.

#

Series Navigationஇறந்தும் கற்பித்தாள்பண்டி சரோஜ்குமாரின் ‘ அஸ்தமனம் ‘

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *