ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
உலகில் தோன்றிய ஆண், பெண் என்ற இரு இனங்களில் பெண்ணினம் மட்டும் கடும் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. தமிழ் மண்ணில் மட்டுமல்ல, இது உலகின் பொது நிலையாகும். . நாம் இப்பொழுது நம் தமிழ்மண்ணின் வரலாறு பார்க்கப் போகின்றோம். அதுவும் இந்த நூற்றாண்டு வரலாறு. பெண்ணின் நலம் காக்கப் பெண் மட்டுமல்ல ஆணும் உதவிக்குத் தோள் கொடுத்தான். வேர்களூம் விழுதுகளும் தெரியாமல் போனதாலோ அல்லது ஒருங்கிணைந்த சிந்தனை இல்லாததாலோ, பல மோசமான விளைவுகள் ஏற்பட்டு முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றோம். வரலாற்றில் ஈடுபட்ட எல்லோரையும்பற்றி எழுதப் புகுந்தால் எங்கெங்கோ போய் திசைமாறிப் போக நேரிடும். வீழ இருந்த ஆலமரம் பற்றி மட்டும் பார்க்கலாம். என் பயணத்தில் பார்த்த, பங்குபெற்ற நிகழ்வுகள், அதன் சம்பந்தப்பட்டவர்களைப் பற்றி மட்டும் சொல்ல விரும்புகின்றேன். வரலாற்று நாயகிகள் பற்றி ஏற்கனவே புத்தகங்கள் மட்டுமல்ல, வலைப்பக்கங்களிலும் இருக்கின்றன. அவர்களைப்பற்றி தேவையான விபரங்கள் மட்டுமே கூறப்படும். விடுபட்டவர்கள்பற்றி முழு விபரங்கள் எழுதப்படும். மேலும் ஒவ்வொரு திட்டமும் எந்த நோக்கத்தில் எந்த சூழ்நிலையில் தொடங்கப்பட்டன என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். நோக்கம் தெரியாததால் பல திட்டங்களைக் குழப்பத்துடன் விவாதித்து மோதிக் கொள்கின்றோம். உளவியல் ரீதியகவும் உணர்வு பூர்வமாகவும் இதனை எழுதுகின்றேன்
சங்க காலத்தில் அங்கும் இங்குமாய் அபூர்வமாக பெண்கள் வெளிவந்து பொதுவாழ்வில் பங்கு கொண்டிருக்கின்றார்கள். இடைக்காலத்தில் கூட கோயில் பணிகள், மருத்துவசாலைப் பணிகள் போன்றவற்றில் அக்கறைக் கொண்டு பணிசெய்தவர்கள் பற்றி கல்வெட்டுச்சான்றுகள் இருக்கின்றன. பெரிதாக எழுச்சி ஏற்பட்டது சுதந்திரப் போராட்ட காலத்தில்தான். பெண்கள் அதற்காக வெளிவந்ததை சமுதாயம் தடுக்கவில்லை. இதிலும் நகர்ப்புரத்தில்தான் பெண்களின் பங்கீடு அதிகமாக இருந்தது. வெளியில் வந்தவளின் பார்வை சுழல ஆரம்பிக்கவும் பெண்களின் பல இடர்பாடுகள் உறுத்தின. பெண் விடுதலை பற்றி நினைத்து அதற்கான பணிகளுக்கு அடிக்கல்லும் அமைத்தது அந்தக் காலத்தில்தான்.
யாதும் ஊரே யாவரும் கேளீர்
இது நாம் எல்லோரும் அறிந்த மொழி. ஆனால் நாமோ ஓர் புள்ளிக்குள் இருந்து விடுகின்றோம். பல சமயங்களில் குறுகிய வட்டத்தை விட்டு வெளியில் வர மறுக்கின்றோம் இப்பொழுது நாம் நினைவில் கொண்டு வரவேண்டியவர் ஓர் அயல்நாட்டுப் பெண்மணி. மத நல்லிணக்கம் பரப்ப வந்த அன்னிபெசண்ட் அம்மையார் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து அதில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். நாட்டுக்கு விடுதலை கிடைத்தால் மட்டும் போதாது, பெண்ணும் விடுதலை பெற வேண்டும் என நினைத்தார்.
பெண் கல்வியில் கவனம் செலுத்தினார். தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பள்ளிகள் தொடங்கினார். குழந்தைகளுக்கு பசி போக்க உணவு தர வேண்டும் என்றார். ஆனால் மதிய உணவுத் திட்டங்கள் பின்னால் வந்தது. அவருடைய அமைப்பில் சேர ஓர் உறுதி மொழி கேட்டார்.
“ஜாதி வேறுபாடு பார்க்க மாட்டேன்.பெண் குழந்தைக்கும் மனைவிக்கும் கல்வி போதிப்பேன். பெண்களுக்கு 21 வயதுக்குள் திருமணம் செய்து வைக்க மாட்டேன். விதவை மறுமணத்தை ஆதரிப்பேன்”
இந்த உறுதி மொழியில் கையெழுத்திட்டால்தான் அவரது அமைப்பில் சேரமுடியும். அயல் நாட்டிலிருந்து வந்த ஓர் பெண்மணி இந்த மண்ணின் பெண்மணிக்களுக்காக வகுத்த விதிகளைப் பாருங்கள். இவர் தொடக்கி வைத்ததுதான் இந்திய மாதர் சங்கம்..பெண்களுக்கு ஓட்டுரிமை வாங்கிக் கொடுத்தது இதுதான். இந்தியா முழுவதும் இதற்கு 75 கிளைகள் உண்டு. இன்றும் சென்னையில் இந்த சங்கம் திருமதி சரோஜினி வரதப்பன் தலைமையில் இயங்கி வருகின்றது. ஆதரவற்ற பெண்களுக்குக் கல்வி, தொழில், ஏற்படுத்தி அவர்கள் வாழும் இல்லங்களை நடத்தி வருகின்றன. பெண்களுக்குத் தேவையான விஷயங்களுக்கு அவ்வப்பொழுது கருத்தரங்குகள் இந்தியா அளவில் நடக்கும். இதன் செயளாராக இருந்து பணி புரிபவர் என்னுடன் பணியாற்றி ஓய்வு பெற்ற செல்வி பார்க்கவி தேவேந்திரா அவர்கள். இவரை நான் இந்த மண்ணின் தெரசா அம்மையார் என்பேன். இவரைப் பற்றி பின்னர் விரிவாக எழுதுகின்றேன். அடுத்து இதில் உறுப்பினராக இருந்து பணிபுரிபவர் என் தோழி தெளலத்பீ. அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ஊதியம் பெறாமல் இது போன்ற சமூக நல அமைப்புகளில் பல பெண்மணிகள் பணியாற்றி வருகின்றனர்
திட்டங்கள் தீட்டிவிடலாம். ஆனால் செயல்வடிவம் பெற சிறந்த ஊழியர்கள் தேவை. ஓர் திட்டம் வெற்றி பெறுவதும் தோல்வியுறுவதும் களத்தில் இறங்கி பணியாற்றுபவர்களைப் பொறுத்து அமைந்து விடுகின்றது. .
இந்த அமைப்பிற்குப் பலர் பொறுப்பானவர்கள் இருப்பினும் பல அமைப்புகளில் ஒருங்கிணந்த முறையில் பணிசெய்த முக்கியமானவர் களில் ஒருவர் திருமதி வசுமதி இராமசாமி அவர்கள் .இவர் ஓர் சிறந்த எழுத்தாளர். அவ்வை இல்லம், ஶசிரினிவாசகாந்தி நிலையம், சிரிசேவாமந்திர், பாலமந்திர் இல்லங்களிலும் இவர் பொறுப் பேற்றிருந்தார். இவர் பெயரில் ஓர் நூலகமும் இருக்கின்றது. வை. மு. கோதை நாயகி உட்பட பல பெண்மணிகள் காந்திஜியின் அறவழிப் பதையில் ஆர்வம் கொண்டு விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பெயர்கள் கூற ஆரம்பித்தால் நீண்ட தொரு பட்டியல் வரும். அன்னிபெசண்ட் அம்மையார் விதைத்த விதை . ஏறத்தாழ 125 ஆண்டுகளுக்கு முன்னாலேயே மகளிர் நலப் பணி தொடங்கிவிட்டது.
இப்பணியில் தொடர்ந்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியாகும். அவர் ஓர் போராளி. அந்தக் காலத்திலேயே சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியாவார். பேச்சில் வல்லவர். இவர் காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் “தேவதாசி ஒழிப்பு சட்டம்” வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்னும் சில சட்டங்கள் இவர் காலத்தில் இயற்றப்பட்டன.
1 தேவதாசி முறை ஒழிப்பு
2 இருதார தடைச் சட்டம்
3 பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம்
4 பால்ய விவாகங்களைத் தடை செய்யும் சட்டம்
1925 ஆம் ஆண்டு போட்டியின்றி சட்ட சபை துணைத் தலைவராக இருந்த பொழுது அந்த ஐந்து ஆண்டுகளில் கொண்டுவந்து நிறைவேற்றிய சட்டங்கள்
சிந்தித்துப்பாருங்கள். சட்டங்கள் வந்து 85 ஆண்டுகளாகின்றன. ஆனால் நம் பிரச்சனைகள் ஒழிந்துவிட்டனவா ? ஏன் சுயபரிசோதனை செய்யாமல் இருக்கின்றோம்? பிறர்மேல் பழி சுமத்தி வார்த்தைகளை மட்டும் அள்ளித் தெளிப்பதில் பயன் என்ன?
இன்றும் பால்ய விவாகங்கள் நடைபெறுகின்றன. 62ல் நான் போன கிராமங்களில் விலை மாதர்களுக் கென்று தனி வீதிகள் இருப்பதைப் பார்த்தேன். சொத்தும் கொடுப்பதில்லை. இருதாரச்சட்டம் கேலிக் கூத்து. அப்படி இருதாரம் உள்ளவர்களுக்கு தேர்தலில் நிற்க உரிமை கிடையாது என்று தடுக்கவில்லையே சட்டமன்றத்தில் கூட நாட்டைப்பற்றிக் கவலைப்படாமல் அசிங்கத்தைப் பார்த்து ரசிக்கும் மனம் கொண்டவர்கள் இருக்கின்றார்கள் என்ற செய்தி கேள்விப்படும் பொழுது கொதித்து எழுகின்றோம். புலம்புகின்றோம். தீமையை எதிர்க்கத் தெரியவில்லையா அல்லது முடியவில்லையா?
சட்டங்கள் இயற்றினால் மட்டும் போதவில்லை. அதில் குறிப்பிட்ட சில ஷரத்துக்கள் இல்லையென்றால் தவறு செய்கின்றவன் தப்பி விடுகின்றான்
இதனை எழுதும் பொழுது ஓர் கதை நினைவிற்கு வருகின்றது. கிரேக்க நாட்டில் பேசப்படும் கதை. கதையின் நாயகனின் பெயர் ஒடிபஸ். அங்கே ஆரூடம் மனிதனை ஆட்டிபடைத்துக் கொண்டிருந்த காலம். ஒருவன் மகன் வேண்டி ஆரூடம் பார்க்கின்றான். மகன் பிறப்பானென்றும் அதே மகனால் தந்தை கொல்லப்படுவான், அதுமட்டுமல்ல பெற்றதாயை மணந்து கொள்வான் என்று ஆரூடம் கூறப்படுகின்றது. ஒடிபஸ் பிறந்தான் ஆரூடத்தின்படி தந்தை கொல்லப்படுவதும் தாயை மணப்பதும் நிகழ்கின்றது. எதுவும் தெரியாமல் அனைத்தும் நிகழ்கின்றன். தாய் மரிக்கின்றாள். இங்கே தாயையும் மகனையும் உறவு படுத்திப் பேசினாலும் அத்தகைய உறவை அக்காலத்திலேயெ கடிந்துரைக்கப்பட்டிருக்கின்றது
பல ஆண்டுகளுக்கு முன்னால் பி..யூ.சின்னப்பா நடித்த மங்கையர்க்கரசி படத்தில் ஒர் காட்சி வரும். இளவரசன் ஓர் பெண்பித்தன். ஒருத்தி வீட்டிற்கு செல்கின்றன்.. போகிற பாதையில் ஓர் கன்றுகுட்டியின் வாலை மிதித்துவிடுவான். அது தன் தாயிடம் புலம்புகின்றது. அப்பொழுது அந்த தாய்ப்பசு கூறூவது
தாயைப் புணரப் போகின்றவனுக்கு வேறு எதுவும் தெரியாதம்மா
அந்தக் காலத்திலேயே திரைப்படப் பாடல்களை மட்டுமல்ல திரைக் கதைகளைக் காப்பி யடிப்பது தெரிகின்றது. இப்பொழுது நம் நாட்டில் நடந்த ஓர் வினோத வழக்கைப் பார்க்கலாம்
வடஇந்தியாவில் ஓர் கிராமத்தில் நடந்தது. ஓர் குடும்பத்தில் தாய் இறந்து விடுகின்றாள். மகள் மட்டும் வீட்டில் இருக்கின்றாள். ஒரு நாள் வீட்டுத் தலைவன் ஊரில் உள்ள சில முக்கியமானவர்களைக் கூட்டி தான் ஒரு கனவு கண்டதாகவும் அதில் கடவுள் தோன்றி மகளை அவனையே திருமணம் செய்து கொள்ள உத்தரவிட்டதாகவும் கூறுகின்றான். கிராமமும் -நம்புகின்றது. மகளை மணமுடித்துக் கொள்கின்றான் தகப்பன். மணம் முடிந்த மூன்று மாதஙகளில் அந்த சின்னப் பெண்ணிற்கு ஓர் குழந்தை பிறக்கின்றது. அப்பொழுதுதான் ஊருக்கு உண்மையைப் புரிந்து கொள்ள முடிந்தது. மகளை ஏற்கனவே தகப்பன் கெடுத்திருக்கின்றான். அவள் கர்ப்பவதியாகிவிட்டாள். இனி ஒன்றும் செய்ய முடியாது என்று கனவுக் கற்பனையைக் கூறியுள்ளான்.
ஊரார் அவனை அடித்து போலீஸிடம் ஒப்படைக்கின்றனர்.. வழக்கு நீதி மன்றம் செல்கின்றது. அவன் குற்றவாளியில்லை என்று தீர்ப்பாகின்றது.
பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்கவில்லை
தகப்பனும் மகளும் திருமணம் செய்தல் குற்றம் என்று சட்டத்தில் குறிப்பு கிடையாது
கற்பனைக்கும் கசக்கும் செய்தி. நாம் உறவுகள் இல்லாமல்தான் வாழ்ந்தோம். ஆனால் சமுதாயத்தை அமைத்து, விதிகளையும் ஏற்படுத்தும் பொழுது தாய்க்கும், தந்தைக்கும் மரியாதை கொடுத்து உறவுகளைச் சிறப்பித்து வைக்கப்பட்டது.. கதையில் கூட அதுபோன்ற காட்சிவருவதைத் தவிர்த்திருகின்றான். கிரேக்க நாட்டு கதையில் கூட அதனை மிகப் பெரிய குற்றமாகவே காட்டியுள்ளனர். அதனால் சட்டத்தில் அந்த ஷரத்து கிடையாது. இது நம் கலாச்சாரம்
இதை எழுதும் பொழுதே ஓர் வேதனைச் செய்தியைக் கூற விரும்புகின்றேன்
சிறுவயதில் எங்கள் வீட்டுப் பால்காரன் கொண்டு வரும் புத்தகங்களைப் படிப்பதுண்டு என்று எழுதி யிருக்கின்றேன்
ஒரு தகப்பனும் மகளும் சினிமாவிற்குச் செல்கின்றனர். அது பக்திப் படம். பிரம்மாவின் படைப்பு திலோத்தமை. பிரம்மனின் படைப்புதான் எல்லாம். படைத்தவன் என்பதால் அவனைத் தகப்பனாக்கி விட்டான் கதாசிரியன் பிரம்மாவின் பார்வை திலோத்தமையின் மேல் வீழ்கின்றதாம். அதாவது தகப்பன் பார்வை மகள் மேல். இதனைக் கிண்டல் செய்வதாக எழுதப்பட்ட கதை. சினிமாவிலிருந்து திரும்பிய தகப்பனுக்கும் மகளுக்கும் விரகதாபம். உணர்ச்சி ஓங்கியவுடன் தகப்பனும் மகளும் உறவு கொள்கின்றனர். அவர்கள் பார்த்த சினிமாவிற்கு சில பக்கங்கள். ஆனால் தகப்பன், மகள் உணர்ச்சி களுக்கும் உறவுகளுக்கும் பல பக்கங்கள். இது ஓர் சீர்திருத்த புத்தகமாம். படிக்கும் பொழுதே வெறுப்பு தோன்றியது. .
இப்படியும் விளம்பரம் தேடிக் கொண்டவர்கள் நம்மிடையே உண்டு. சட்டத்தில் குறிப்பிடக் கூடத் தயங்கும் ஓர் விஷயத்திற்குப் பல பக்கங்கள்:. நாட்டில் ஒழுக்கம் எப்படி வளரும் ?
எந்த வடிவிலும் ஒழுக்கக் கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டுவது குற்றம் என்பதைச் சட்டத்தில் வலியுறுத்தப்பட வேண்டும். அது முடியுமா? இன்றைய ஊடகங்களின் வணிகம் பாதிக்கப்படுமே ! சமுதயத்தில் சாக்கடைகள் பெருகி நாற்றம் அடித்தாலும் சகித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இன்றைய வாழ்வியல் இப்படி.
நெஞ்சு பொறுக்குதில்லையே என்று கத்த வேண்டும் போல் துடிக்கின்றேன்.
ஒரு புடவைக்கும் சில ரூபாய்களுக்கும் விற்கப்பட்டனர் சிறுமிகள். . மூவலூர் இராமிர்த அம்மையார் நடத்திய போராட்டத்தை மறக்க முடியுமா? சமீபத்தில் கூட 13 வயது சிறுமிக்கு பொட்டு கட்டி விபச்சார சந்தைக்குப் பெற்றவர்களே விற்றார்கள். ஊர் கூடி வேடிக்கை பார்த்தது. அந்தப் பிரச்சனையைத் தொடர்ந்து பார்த்து ஆவன செய்தோமா? சிந்தித்தால் போதாது. பேசினால் மட்டும் போதாது. எழுதினால் மட்டும் போதாது. செயல்வடிவம் பெற வேண்டும். தீமைகளை ஒழிக்க ஒன்றுபட வேண்டும். மூவேந்தர் காலம் முதல் ஒறுமையில்லாதர்வர்கள் என்று பார்த்தால் நமக்குப் பரிசுகூட கிடைக்கலாம். எத்தனை பிரிவினைகள்?! எவ்வளவு காழ்ப்புணர்ச்சி. மனித நேயம் எங்கே? எதிர்காலத்தில் ஏதாவது விந்தை நிகழாதா?
மனிதன் நிச்சயம் உணரும் காலம் வரும். பொங்கி எழுவான். போலிகளை, சுரண்டல் பேர்வழிகளை, சமுதாயத்தைச் சீரழிக்கும் நச்சு விதைகளை நீக்க பொங்கி எழுவான். அது ஓர் நீண்ட பயணம். நம்பிக்கை கொள்வோம்.
அயல்நாட்டுப் பெண்மணி விழிப்புணர்வை ஏற்படுத்தப் போராடினார். மாதர் சங்கங்களை உருவாக்கினார். டாகட்ர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களோ சட்டங்களே கொண்டு வந்தார். புற்று நோய் ஆஸ்பத்திரி மட்டுமல்ல, ஏழைக் குழந்தைகளுக்கு தங்கி, கல்வி கற்க அவர் தோற்றுவித்தது அவ்வை இல்லம் . இப்பொழுதும் அடையாரில் இருப்பதைப் பார்க்கலாம். இவர்கள் அன்று விதைத்த விதைகளிலிருந்து எத்தனை திட்டங்கள் தோன்றின. ஆம் 67 க்கு முன்னால் தோன்றி யவைகளைப் பற்றி கூறுகின்றேன்.
இதை முன்னோடியாக வைத்து எத்தனை ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லங்கள் ஏற்படுத்தப்பட்டு இயங்கிவருகின்றன.
குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குழந்தைகள், ஆஸ்பத்திரியில் பெற்றவுடன் அங்கே அனாதையாக விட்டுச் சென்ற கைவிடப்பட்ட குழந்தைகள் எத்தனை! அவர்களுக்கும் புகலிடம் இருக்கின்றது. பாலமந்திர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் வாழும் இல்லம். மஞ்சுபாஷினியை மறக்க முடியாது. அன்பே உருவான அம்மா. அப்பொழுது சென்னையில் இருந்த சமூக நலஆர்வலர்கள் ஒருங்கிணந்து நடத்திய இல்லங்கள் ஒன்றா இரண்டா தொட்டில் குழந்தை திட்டம் 67 க்குப் பின் வந்தது
இப்பொழுது பாலமந்திரில் இருந்து கவனித்து வருபவர் செல்வி விஜயா அவர்கள். இராமனாதபுர அரசின் வாரிசு. இராணியம்மா என்று செல்லமாக அழைப்பேன். இவரும் என்னுடன் பணீயாற்றி ஓய்வு பெற்றவர்.
குப்பைத் தொட்டி குழந்தைகளைப் பற்றிப் பேசும் பொழுது வாழ்க்கையில் வழுக்கி விழுந்த பெண்கள் குப்பைக்கும் இல்லங்கள் உண்டு. அக்காலத்தில் உடன்போக்கு சென்றால் செவிலித்தாய் அவர்களைத் தேடிச் செல்வாள். சென்றவர்கள் திரும்பி வந்தாலும் தலைவன் வீட்டில் சேர்த்துக் கொண்டனர். ஆனால் இப்பொழுது நடப்பது என்ன காதல் மொழி பேசி கூட்டி வருகின்றவன் அவளை ருசித்துவிட்டு சக்கையை எறிவது போல் விட்டுச் செல்கின்றான். அந்தப் பெண்ணின் நிலையென்ன? சினிமாவில் நடிக்கும் ஆசையில் வீட்டைவிட்டு வரும் பெண் கெடுக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் பொழுது அவள் நிலையென்ன? இத்தகைய பெண்ணைக் கண்டவுடன் தரகர்கள் உடனே அடைக்கலம் என்று பேசி விபச்சார விடுதியில் சேர்த்துவிடுவர். நடிகர் நடிகைகளுக்கும் மட்டும் ஆல்பமா இவர்களுக்கும் உண்டு. ஹோட்டலில் தங்க வருகிற சிலர் இரை தேடும் பொழுது இந்த ஆல்பம் காட்டப்படும் . அவள் அன்றைய விருந்தாவாள்.
இவர்களுக்கு உதவி கிடையாதா? இருக்கின்றது. நல்லவர்கள் கண்களில் பட்டால், போலீஸ்காரர் உதவி கிடைத்தால் இவர்களை ஏற்றுக் கொள்ளும் ஓர் இடமும் சென்னையில் உண்டு. பெயர் அபய நிலையம் அதன் நிறுவனர் பெயர் ரிஷி. . தாய்மனம் கொண்ட தங்கமான மனிதர். அன்புடன் வரவேற்று இல்லத்தில் தங்கச் சொல்வார். அந்தப் பெண்ணின் பெற்றோர் அல்லது கணவர், அல்லது உறவினர்கள் இவர்களைத் தொடர்பு கொண்டு இவளை சேர்த்து வைக்க முயல்வார். வீட்டைவிட்டு ஓடி வந்த பெண்ணை யாரும் மீண்டும் ஏற்றுக் கொள்வதில்லை. அவளுக்குக் கல்வி அல்லது தொழில் கற்றுத்தரும் இல்லங்கள் பார்த்து சேர்த்து வைப்பார். இது குறுகிய காலத்தில் தங்கும் இடம் மூன்று மாதங்கள். இதற்குள் அவளுக்கு வாழ வகை செய்துதரப்படும். ( Short stay homes) முன்னால் ஆரம்பிக்கப்பட்டது இது. நாளடைவில் பல இடங்களீல் இது போன்ற சேவை இல்லங்கள், தோன்றின. இதுவும் 67க்கு முன் இருந்த நிலைமை இன்னும் பல நிறுவன்ங்கள் உண்டு. தொடரும் பகுதியில் அவைகளைப் பற்றி எழுதப்படும்
பெண் விடுதலைக்குப் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் போராடியிருக்கின்றார்கள். அவர்களில் மூவரைப்பற்றி அடுத்து பார்க்கப் போகின்றோம்.
விழிப்புணர்வை ஏற்படுத்திய பெரியவர்கள் !. முன்னோடித் திட்டங்களைத் தொடக்கி வைத்த பெண்மணிகள்! இந்த எழுச்சியிலே உதயமானதுதான் மகளிர் நலத்துறை. காலச் சுழற்சியில் பல வளர்ச்சிகளைப் பெற்று, சமுதாயத்திற்குத் தேவையாகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஆலமரமாய் வளர்ந்தது மகளிர் நலத்துறை. 67க்குமுன் இருந்த நிலையினையே கூறுகின்றேன்
“ உன்னையே சீர்தூக்கிப்பார். உன்னுள்ளே பார். குறைபாடுகளைப் போக்க முயற்சி செய். இதுதான் உண்மையான சாதனையாகும். உன் குற்றங்களையெல்லாம் நீக்க வேண்டும். பல நெடு நாளைய கெட்ட வழக்கங்களை வேருடன் களைய வேண்டும். உன் தவறை மறைக்கக் காரணம் தேடுவதையும், நீ செய்ததே சரி என்று ஸ்தாபிக்க முயலுவதையும் விட்டுவிடு. நீ மேலான ஆனந்தம் அனுபவிப்பாய் “
சுவாமி சிவானந்தர்
(பயணம் தொடரும்)
(படங்களுக்கு நன்றி)
- ரங்கராட்டினம்
- சே.ரா.கோபாலனின் “ மை “
- தாகூரின் கீதப் பாமாலை – 10 குழம்பிப் போன பயணி !
- ”கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்”
- குறுந்தொகையில் வழிபாட்டுத் தொன்மங்கள்
- முள்வெளி அத்தியாயம் -6
- சாதி மூன்றொழிய வேறில்லை
- பணம்
- வாருங்கள்…! வடிவேலுவை மேடை ஏற்றலாம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 21
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 17) எழில் இனப் பெருக்கம்
- 2-ஜி அலைக் கற்றை ஊழலும் இந்திய ஜனநாயகமும்
- ரோஜா ரோஜாவல்ல….
- வேறோர் பரிமாணம்…
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –10
- விவேக் ராஜகோபாலின் “ குறுக்கு வழியில் ஒரு டிராபிக் ஜாம் “
- தங்கம் 4 – நகை கண்காட்சி
- பஞ்சதந்திரம் தொடர் 41-காக்கைகளும் ஆந்தைகளும்
- மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -23
- கடவுளும் கடவுளும்
- நூபுர கங்கை
- அக்கினி புத்திரி
- மறு முகம்
- ‘ மதில்களுக்கு அப்பால்……ஒரு நந்தக்குமாரன் ’
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தேழு
- முன்னால் வந்தவன்
- பள்ளிப்படை
- நியாயப் படுத்தாத தண்டனைகள்..!