வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –12

This entry is part 4 of 41 in the series 13 மே 2012


தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

இப்பகுதி எரிமலையில் தீக்குழம்பைக் கொட்டுவது போல் இருக்கலாம்.

நம்முடன் இருந்து பேசுகின்றவர் தந்தை பெரியார். பாரதி போல் கவிஞன் அல்ல. குடும்பத்தில் அவர் ஓர் “தந்தை”. .(தயவு செய்து எங்கள் உணர்வுகளை அரசியல் குட்டையில் கலந்து விடாதீர்கள். இது குடும்ப விஷயம் ..வாழ்க்கையில் பெண்ணின் நிலை, குடும்ப நலன்பற்றி எழுதுகின்றேன். அது சம்பந்தமாக மற்றவர்களின் கருத்துக்களையும், சில விளைவுகளையும் பதிய முயற்சிக்கின்றேன். எனக்கு அரசியல் வர்ணம் வேண்டாம்.)

கவிஞன் தன் எண்ணங்களை,, விருப்பங்களைத் தமிழமுதத்தில் குழைத்துக் கொடுக்கலாம். ஆனல் அப்பா தன் குடும்பத்தின் சரிவைப் பார்க்கும் பொழுது பாட்டு எழுதிக் கொண்டிருக்க முடியாது. வார்த்தைகளைக் கொட்டத்தான் முடியும். நெஞ்சுக் குமுறல்களின் வெளிப்பாடு. சாகாத ஒருத்தியைச் செத்தவனுடன் வைத்துக் கொளுத்துவது கொடுமையிலும் கொடுமை. ஆனால் நம் அய்யா என்ன சொல்கின்றார் தெரியுமா?

“ராஜாராம் பெண்களுக்கு ஒரு துரோகம் இழைத்துவிட்டார். செத்த புருஷனோடே பொண்டாட்டியையும் கொளுத்திட்டா அப்புறம் இந்த சமுதாயம் அவளை வதைக்க முடியாதே. தாலி அறுத்த பொண்ணுக்கு சுகம் ஏது? எங்கேயோ சொர்க்கம் இருக்காமே, அங்கேயே இருந்து தொலைக்கட்டும். ஐந்து நிமிட வலியுடன் கஷ்டம் முடியும்.”

பத்தினிப் பெண்ணைப் பற்றி நினைத்தான் பாரதி

கோரிக்கையற்று கிடக்கும் வேரில் பழுத்த பலாவை நினைத்தான் அவன் தாசன், பாரதிதாசன்.

அய்யாதான் மகளின் வேதனையைப் புரிந்து குமுறி யிருக்கின்றார். நான் பார்த்த காட்சிகள் கொஞ்சமில்லை. என் குடும்பத்தில், என் நண்பர்கள் குடும்பத்தில், பணிக்களத்தில் பழகிய, பார்த்த குடும்பங்களில் விதவைகள், வாழாவெட்டிகள், மலடிகள், வழுக்கி விழுந்தவர்கள், ஆதரவற்றவர்கள் இவர்களிடையேதான் நான் வாழ்ந்தவள். என் பெண்ணியத்திற்கு பாரதி வித்திட்டவன் என்றால் நீரூற்றி, உரமிட்டு வளர்த்தவர்கள் பலர்..அவர்களீல் முதல் இடத்தில் இருப்பவர் தந்தை பெரியார். ஒரு காலத்தில் அண்ணாவின் மேடைப் பேச்சால் ஈர்க்கப்பட்டு அடுக்கு மொழி பேசியவள் நான். ஆனால் கிராமப் பணிக்கு வந்த பிறகு அய்யாவின் பாணியில் பேச்சு வந்துவிட்டது. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவள் என்னாலும் இலக்கியத்தமிழ் எழுத முடியும். ஆனால் நான் எழுதுவது சாமான்ய மானவர்களுக்காக.. என்னைப்போல் ஒருத்தியுடன் பேசுகின்றேன். அவள் மீது பரிவு கொண்ட அண்ணன் தம்பியுடன் பேசுகின்றேன். என் படைப்புகள் அனைத்தும் உணர்ச்சிகளின் கொந்தளிப்பு.

நான் கண்ட இரு காட்சிகளைக் கூறுகின்றேன்

ஜானகி என் தோழி. அவள் பெரியம்மாவின் பெயர் மீனாட்சி. சிவந்த நிறம் அழகு மங்கை.. நீண்ட கூந்தல் ஐந்து வயதில் ஐந்து நாட்கள் திருமணம். அந்த நாட்களில் ஐந்து நாட்களில் திருமணம் நடக்கும். மீனாட்சியம்மாளின் புகுந்த வீடு நாகப்பட்டினம். மூத்த மருமகளாய்ப் போனாள். கூட்டுக் குடும்பம். வசதியானவர்களும் கூட. ஆச்சாரமான பிராமணர்கள். மீனாட்சி தன் இருபத்தோரு வயதில் விதவையானாள். நீண்ட கூந்தல் மழிக்கப்பட்டது. மொட்டையடித்து முக்காடு போட்டுக் கொண்டாள். இப்பொழுது திருமண வயது 21. மீனாட்சி விதவையானது அவள் 21.வயதில். .சாப்பிடும் உணவிலிருந்து எல்லாம் கட்டுப்பாடுகள். பிறந்த வீட்டுக்கு அவளை அனுப்பவில்லை. . புருஷன் போனாலும் இருப்பது அவன் வீட்டில் என்று சமாதானப்படுத்திக் கொண்டு விட்டாள் சம்பளமில்லா வேலைக்காரி. ஆனால் அப்படி அவர்கள் நினைக்கவில்லை. மரியாதையுடன்தான் வைத்திருந்தார்கள்

காலம் உருண்டோடியது. பிள்ளைகள் பெரியவர்களாகி, படித்த பின் ஊரைவிட்டு ஒவ்வொருவராகச் செல்ல ஆரம்பித்தனர். முதியவர்கள் ஒவ்வொருவராகச் சாக ஆரம்பித்தனர். மீனாட்சிக்கு 81 வயதாகிவிட்டது. மரணம் அவளருகில் வரவில்லை. வீட்டில் எஞ்சியிருந்தவன் பாலு. அவள் வளர்த்த பிள்ளை. அவனுக்கும். வயதாகிவிட்டது. தன் மனைவியுடன் ஏதாவது ஒரு பிள்ளை வீட்டிற்குச் செல்ல நினைத்தான். மீனாட்சியைத் திடீரென்று அழைத்துக் கொண்டு ஜானகியிடம் விட்டுச் சென்றுவிட்டான்.

ஜானகியின் தாயாரின் உடன்பிறந்தவள் மீனாட்சி. இப்பொழுது ஜானகிக்கு தர்ம சங்கடம். அவள் மகன் கலப்புத் திருமணம் செய்திருந்தான். பிரசவத்திற்காகச் சென்ற மருமகள் குழந்தையுடன் ஒரு வாரத்தில் வர இருக்கின்றாள். அவள் மாமிசம் சாப்பிடுகின்றவள். ஜானகியே திணறிக் கொண்டிருந்தாள். அவள் முழு சைவம். தனித்தனி சமையல் என்றாலும் சமையல் அறைக்குச் சென்றால் நறுக்கி வைத்த மாமிச துண்டுகள், சில மீன்கள், இவைகளைக் காண நேரும். தன் அறைக்கு வந்து அழுவாள் ஜானகி. இந்த நிலையில் ஆச்சாரமான தன் பெரியம்மாவை எப்படி வைத்துக் கொள்ள முடியும்? ஜானகி என்னிடம் வந்தாள். விசாரித்துப் பார்த்து ஓர் மடத்தில் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டோம். அங்கே சிறுவர்கள் இல்லமும் இருந்தது.. மறுநாளே எங்களை உடனே வரச் சொல்லி தந்தி வந்தது.

அப்பப்பா எத்தனை பிரச்சனைகள்! வாழ்க்கையில் ஏதோ சில காரணங்களைக் காட்டி சில நடை முறைப் பழக்கங்களைக் கூறி விடுகின்றோம். நாமும் அந்தப் பழக்கங்களூக்கு மாறி அதுவே வாழ்க்கையின் வழக்கமாகி விடுகின்றன. பின்னர் அதனின்றும் மாறுவது என்பது இயலாதாகி விடுகின்றது.

மீனாட்சியம்மாள் சாப்பிட மறுத்துவிட்டார். அவர் ஒர் விதவை. அவரை இப்படித்தான் வாழ வேண்டுமென்று பெரியவர்கள் சொல்லி யிருக்கின்றார்கள். ஆச்சாரத்தை விடுவதைவிட . சாப்பிடாமல் செத்துப் போக விரும்புவதாகக் கூறியிருக்கின்றார்

சமையலறையில் சமைப்பவர் ஒரு பிராமணத்தி அம்மாள். ஆனால் உதவி செய்பவர் வேறு ஜாதியைச் சேர்ந்த்தவர். எனவே மற்ற சாதியினர் தொட்டதைச் சாப்பிடுவது ஆச்சாரமில்லை.

அங்கே நடைபெறுகின்ற சிறுவர் இல்லம் அரசு மான்யம் பெற்று நடைபெற்று இயங்குகின்ற ஓர் அமைப்பு.. எல்லா சாதியினரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் ஒரே சமையல். அங்கிருந்த முதியோர் இல்லத்தில் மீனாட்சியம்மாள் வயதில் யாரும் இல்லை. ஓரளவு நகர்ப்புர வாழ்க்கைக்குப் பழக்க மானவர்கள். மீனாட்சியம்மாள்தான் கூண்டுக் கிளியாய், வாழ்ந்தவர்கள். அதனால் பிரச்சனை. மற்ற ஜாதியினர் சாப்பிட்ட பிறகு சா[ப்பிடுவதும் ஆச்சாரமில்லை. சாப்பாட்டில் வெங்காயம் பூண்டு சேர்க்கின்றார்கள். அது ஆச்சாரமில்லை. எனவே அந்த அம்மாள் சாப்பிட மறுத்து விட்டார். அவர்களை வைத்திருக்க முடியாது என்று இல்லம் கூறியது.

ஆச்சாரம் வகுத்தவர்கள் இது போன்ற நிலைக்கு வருகின்ற வர்களைப் பாதுகாப்பது கடினம் என்று நினைத்துத்தான் உடன்கட்டை ஏறுதலை தீர்வாக நினைத்தார்களா ?! என் ஆத்திரம். நான் கத்தினேன். பரிகாரம் செய்துவிட்டால் தவறில்லை என்றார்கள்

ஒரு காலத்தில் அதாவது நான் சிறு பெண்ணாக இருந்த பொழுது சமுதாய நிலை.

ஒரு பெண் வீட்டுக்கு விலக்கமானால் கொல்லைப் புரத்தில் தள்ளி இருக்க வேண்டும். கொஞ்சம் பக்கத்தில் சென்றாலும் தீட்டு. காலம் மாறியது. தீட்டு கண்டவுடன் குளித்துவிட்டு வீட்டுக்குள் ஒரு பக்கம் உட்கார்ந்து கொள்ளலாம். சமையலறை, சாமி படங்கள் இருக்கும் இடம் வரக் கூடாது. யாரையும் தொடக் கூடாது. அதுவும் மாறியது. குளித்துவிட்டு சமைக்கலாம் என்று வந்தது. இது போன்ற விஷயங்களில் மாற்றிக் கொள்ள முடியும்.

மீனாட்சி அம்மாள் ஒரு விதவை. அவருக்கு இதுதான் சாஸ்திரம் என்று கூறிப் பழக்கமாகி விட்டது. அதை 81 வயதில் மாற்றிக் கொள்ள முடியுமா? வயதான கிழவி அழுத பொழுது நான் திகைத்தேன். அங்கே வேலை பார்த்தவர்களில் ஒருவர் முன் வந்து ஓர் ஆலோசனை சொன்னார். அவர் ஒரு பிராமணன். அவர் வீட்டிலிருந்து சாப்பாடு அனுப்புவதாகக் கூறினார்.

காலை, மாலை, காப்பி, இரவில் பாலும் பழமும், ஒரு வேளை சாப்பாடு. பேசி முடித்தேன். தேவையான பணம் கொடுக்க ஒப்புக் கொண்டேன். மீனாட்சியம்மாளூம் சமாதானம் ஆனார்கள்.

ஒரு மாதம் கூடக் கழிந்திருக்காது. மீனாட்சியம்மாள் இறந்து விட்டதாகச் செய்தி வந்தது. நாங்கள் இருவரும் சென்றோம். சாப்பாடு விஷயத்தில் ஏற்பாடு செய்திருந்தாலும் ஏனோ தன் நிலை நினைத்து வருந்த ஆரம்பித்திருக்கின்றார் மீனாட்சியம்மாள். புருஷன் இறந்து அனாதையானதை இப்பொழுதுதான் புதிதாக உணர்ந்தது போல் புலம்ப ஆரம்பித்திருக்கின்றார். கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது குறைந்திருக்கின்றது. சரியாகிவிடும் என்று நிர்வாகத்தினர் நினைத்திருக்கின்றார்கள். ஒரு நாள் தூங்கச் சென்றவர் மறுநாள் விழிக்கவில்லை. உள்ளுக்குள் நினைத்து நினைத்து துக்கத்தில் உடல் தளர்ந்து, தூக்கத்தில் உயிரும் போய்விட்டது. அவர் இறந்தது நிம்மதி கொடுத்தாலும் அவர் கடைசிக் காலத்தைக் கழித்த விதம், இந்த சமுதாயத்தின் விதிகள் அவரைக் கொலை செய்ததைப் போல் உணர்வு. இதை இயற்கையான சாவாக நினைக்க முடியவில்லை. நாம் வகுத்த சில விதிகள் அந்தக் கிழவியைக் கொலை செய்துவிட்டது. போல் உணர்ந்தேன்.

தந்தை பெரியார் சொன்னது சரிதானே ? இந்த பெண்ணையும் அன்றே உடன்கட்டை ஏற வைத்திருந்தால் இப்படி கடைசி நிமிடங்களை வலியுடன் கழித்திருக்க வேண்டாமே !

அடுத்து இன்னொரு நிகழ்ச்சி. அது என் குடும்பத்தில் நடந்தது. என் மாமாவின் மூன்றாவது மகன் ரவி. அவன் மனைவியின் பெயர் சுமதி. ஒரு மகன். 37 வயதில் ரவி செத்துவிட்டான். ஒரே வருடத்தில் சுமதியின் அப்பா, அம்மா, அண்ணன், புருஷன் நால்வரும் இறந்தனர். அவள் எட்டாவது வரைதான் படித்திருந்தாள். ரவி அப்பள வியாபாரம் செய்து வந்தான். அப்பொழுது அவன் வசித்த பகுதியின் அடுக்கு மாடிக் கட்டடங்கள் வளர்ந்து வந்த காலம். கூட்டுறவு முறையில் ஓர் வீடு கடனில் வாங்கி இருந்தான். கீழே முன் பகுதியில் அவன் வீடு. அவர்களுக்கு அடுத்து இருந்தவர்கள் வீட்டில் கணவனும் மனைவியும் அரசுப் பணியில் இருந்தனர். ஒரு மகள் அவளும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள்

ரவி இறந்த பிறகு பக்கத்து வீட்டுக்காரருக்கு சபலம் ஆரம்பித்துவிட்டது.. விதவை சுமதியைப் பயமுறுத்தி வசப்படுத்தலாம் என நினைத்திருக்க வேண்டும். சுமதி வீட்டில் இருந்து கொண்டே சமைத்து சாப்பாடு அனுப்பும் தொழிலை மேற்கொண்டிருந்தாள் . அவளைப்பற்றி எனக்கு அமெரிக்காவிற்கு மெயில் அனுப்பினார். அவள் செய்யும் தொழில் பிடிக்க வில்லையாம். நானும் சென்னைக்குப் போக வேண்டி வந்தது. போன பிறகு சுமதி மூலம் இன்னும் பல விஷயங்கள் அறிந்தேன். அங்கே குடியிருப்பவர்கள் வெளியில் போகும் பொழுது அவள் வீட்டிற்குள் இருக்க வேண்டும். விதவைப் பெண் முன் வருவது சகுனம் சரியில்லையாம். காலையில் எழுந்து வரும் பொழுதும் முதலில் அவள் முகத்தைப் பார்க்கக் கூடாதாம் சகுனம் சரியில்லையாம். தாலி அறுத்தவள் முன் வரக் கூடாது. எந்த சுப நிகழ்ச்சிகளிலும் ஒதுங்கி இருக்க வேண்டும். குழந்தையைத் தூக்கினாலும் ஆவிவராதாம். அதாவது உருப்படாதாம். இதைவிட உடன்கட்டை ஏறி நெருப்பில் வெந்திருக்கலாம்.

எனக்குத் தெரிந்த போலீஸ் ஆபீசர் ஒருவரை யூனிபார்முடன் வரச் சொன்னேன். இது போன்று இனி யாரவாது விதவை, வெளிவரக் கூடாது என்று பேசினாலோ, தொல்லை கொடுத்தாலோ, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும். என்றார். பக்கத்துவிட்டுக் காரரை வைத்துக் கொண்டு பொதுவாகச் சொன்னார். நான் வருத்தப் பட்டதாகக் கூறினார். அடுத்த வீட்டுக்காரர் முகம் சுண்டியது. பின்னர் நானும் பேசினேன். இனிமேல் சுமதிக்கு எவனாவது தொல்லை கொடுத்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய முறையில் எடுப்பேன் என்றேன். இனிமேல் புகார் வராமல் பார்த்துக் கொள்கிறேன் என்றார். ஒரே வாரத்தில் வேறு இடம் பார்த்துப் போய்விட்டார். இந்த வீட்டை வாடகைக்குவிட்டு விட்டார்.

புருஷன் செத்தால் விதவை. அவன் விட்டு ஓடிப்போனால் அவள் வாழாவெட்டி. குழந்தை இல்லையென்றால் மலடி. எவனோ கெடுத்துவிட்டிருந்தால் வழுக்கிவிழுந்தவள் ,ஆதரிப்பார் இல்லையென்றால் அனாதை.. பெண்ணுக்கு எத்தனை பட்டங்கள்?! எத்தனை பாடுகள்?!

பூவும் பொட்டும் புருஷன் வரும் முன்னாலேயே எங்களுக்கு உண்டு. மலட்டுத்தனமுள்ள ஆண்கள் கிடையாதா? பெரிய மனிதப் போர்வையில் சின்னப் புத்தியை வைத்துக் கொண்டு தட்டிக் கொடுப்பதாகச் சொல்லிக் கொண்டு அழுத்திப்பிடிக்கும் அவலமான ஆண்களுக்கு என்ன பெயர் வைக்கலாம்?. எங்கள் புகார்களைச் சொல்ல ஆரம்பித்தால் அதற்கு எல்லையே கிடையாது. சீர்திருத்தம் என்று கூறி சின்னப் புத்தியைக் காட்டுகின்றான். பெண்ணியத்திற்கு வக்காலத்து வாங்குவதுபோல்பேசுவதும் உதவிசெய்ய வருவதுபோல் காட்டிக் கொண்டு பெண்களைச் சீர்குலைப்பவரகளை என்ன செய்யலாம்.

அன்பு காட்ட வந்தவள் பெண். சுகம் கொடுக்க வந்தவள் பெண். சொந்தப் பிள்ளையைச் சுமந்து, பெற்று வளர்த்து குடும்பத்தைக் காப்பவள் பெண். ஏன் அவளுக்கு இந்தக் கொடுமைகள்?

இந்த சமுதாயத்தில் எதிர்நீச்சல் போட்டுப் பணியாற்றியவள் நான். என் உணர்வுகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் குரல் அய்யாவுடையது. அவர் பேசியது போல் கடுமையாகச் சாடியவர் கிடையாது அவரைப் பார்க்க விரும்பினேன். பேச விரும்பினேன். என் ஆசைகள் நிறைவேறியது. தொடரின் ஆரம்பத்தில் பாரதி என்னை ” துணிச்சல்காரி ” என்று கூறுவதாக எழுதியிருந்தேனே. அந்தப் பட்டம் எனக்குக் கொடுத்தது. தந்தை பெரியார் அவர்கள். பல்கலைக் கழகப் பட்டத்தைவிட அதனைப் பெரிதாக மதிக்கின்றேன்.

நான் இறைவழிபாடு செய்கின்றவள். ஆனால் எந்த மதங்களுக்குள்ளும் என்னை அடக்கி வைக்கவில்லை.. என் நம்பிக்கைகள், நடைமுறைகள்பற்றிய முழுவிபரமும் அய்யாவிடம் முதலில் கூறவிட்டே அவரைப் பார்த்தேன். அவரிடம் போலித்தனமாகப் பேசவில்லை. கேட்ட கேள்விகளுக்குத் தயங்காது பதில் சொன்னேன். அதைத்தான் துணிச்சல் என்றார். யாருக்கும் பயப்படக் கூடாதாம். துணிந்து மனத்தில் நினைப்பதைச் சொல்ல வேண்டுமாம். அய்யாவின் மீது மதிப்புண்டு. கருத்துக்கள்பற்றி சொல்ல வேண்டுமென்றால் எனக்கு மாற்றுக் கருத்துக்களும் உண்டு. என்னிடம் கோபம் கொள்ளாமல் பாராட்டிய அந்த பெருந்தகை மீது மதிப்புவராமல் இருக்குமா?

பெண்களுக்காக அவர் பேசிய சில கருத்துக்களை மேலும் பதிய வேண்டும்.

“புருஷன் கள்ளத்தனமா ஒருத்தியை வச்சுக்கிடா பெண்ணும் மூணு பேரை வச்சுக்கட்டும். அப்பொத்தான் இவனுக்கு புத்திவரும் ”

என்ன ஆத்திரம்?! குடும்பத்தில் கூட வயதானவர்கள் கோபத்தில் பிள்ளைகளைக் கண்டபடி திட்டுவோம். அது ஆற்றாமை, கோபம். இத்தனைக்கும் அடிப்படை பாசம்.

மனம் ஓர் கற்பனைத் தேரில் பறக்க ஆரம்பித்தது. எனக்கு ஒரு ஆசை.

ஓர் இருக்கை தயார் செய்து கொள்ள வேண்டும். அங்கே உட்காருகின்றவர்களைப் பேசச் சொல்ல வேண்டும். பொய் பேசினால் தீப்பிழம்பு தோன்றி பொய் பேசுகின்றவர்களை எரித்துவிடும் சக்தி அதற்கு இருக்க வேண்டும். .

ஆன்மீகம் முதல் அரசியல்வரை வேடமிட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றோம். இதில் ஒருவர் மட்டும் குற்றவாளியல்ல. மனித சமுதாயமே இந்த விஷயத்தில் மட்டும் கூட்டணியாக சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த சத்தியக் கல்லில் உட்கார அழைக்க வேண்டும். பேசச் சொல்ல வேண்டும். உடனே எல்லோரும் சரி என்பார்கள். கல்தானே, அதற்கு சுடும் சக்தி ஏது? மூடப்பழக்கம், மூட நம்பிக்கைகளில் ஒன்று அதனால் துணிவுடன் உட்கார எல்லோரும் வருவார்கள். அதுவே உண்மையாக இருந்தால் ஒருவரும் வரமாட்டார்கள்..இப்பொழுது வாழ்வியலே ஓர் கூத்து மேடையாகி விட்டது.

அன்னிபெசண்ட் அம்மையார், ராஜாராம் மோகன்ராய் போன்றாவர்கள் உறுதி மொழி கேட்டுத்தானே தங்கள் அமைப்புகளில் சேர்த்தார்கள். திருமணச் சடங்குகளில் கூட உறுதி மொழிகள் உண்டு. ஆனால் தாம்பத்தியத்திலும் இப்பொழுது பொய்மை நுழைந்து விட்டது. அகவாழ்வு இப்படியென்றால் புறவாழ்வில் பொய்மொழிகள். தேர்தலில் வென்ற பிறகும் பதவி ஏற்கும் முன் உறுதி மொழி கொடுக்கின்றோம். உதடுகளீல் உச்சரிப்பதுடன் சரி பின்னர் அந்த உறுதிகள் உதிர்ந்துவிடும்.

. நம்மிடையே ஒரு புராணக் கதையுணடு. பஸ்மாசுரன் ஒரு வரம் வாங்குகின்றான். அவன் யார்தலை மீது கை வைத்தாலும் அவன் எரிந்து சாம்பலாகிவிடுவான். வரம் வாங்கியவனோ வரம் கொடுத்தவன் தலையிலேயே கைவைக்க முயற்சி செய்கின்றான். ஒரே ஓட்டப் பந்தயம். இறுதியில் அவன் தன் தலையிலேயே தன் கையை வைத்து அழிந்து போகின்றான்.

உலகில் தோன்றிய உயிரினங்களில் மனிதனின் பகுத்தறிவு வியக்கத் தக்கது. ஆனால் பகுத்தறிவுக்கும் தனி உரை எழுதப்பட்டு பண்பட்ட வாழ்க்கையையும் மயக்க நிலைக்குள் தள்ளி விட்டோம். “தென்னகத்தில் பகுத்தறிவும் பாமரனும்” ஆய்வு செய்து கொண்டிருந்தேன். வரலாற்றுச் செய்திகள், சான்றுகள் சேகரித்துக் கொண்டிருக்கும் பொழுது. உடல்நிலை காரணமாக முடிக்க முடிய வில்லை. காலம் கருணை காட்டினால் ஆய்வு முடித்து எழுதுவேன். .

நல்லவர்கள் சிந்திக்கட்டும். வல்லவர்களிடம் மறைந்து கொண்டிருக்கும் நல்ல சிந்தனையைத் தட்டி எழுப்புங்கள். உலகம் மூழ்கி அழிந்துவிடும் முன் காப்பதற்கு ஒவ்வொருவரும் அவர்களால் ஆன முயற்சி செய்து வருங்கால சந்ததிகளுக்கு நல்வாழ்வைக் கொடுப்போம்.

காழ்ப்புணர்ச்சி விடுத்து மனித நேயம் காப்போம்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு.

இந்த அம்மாள் எப்பொழுதும் ஆணினத்தையே குறை கூறூகின்றார்களே, பெண்களிடம் குறை கிடையாதா? ஆண் சிறந்தவனா, பெண் சிறந்தவளா என்பதல்ல பிரச்சனை. மனிதன் அமைத்த குடும்பம் அமைதியுடன் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். அதுதான் என் இலக்கு

அடுத்து விரிவாகப் பேசுவோம்

தொடரும்

“அன்பான சுபாவம் கொள் .பிறர்க்குத் தக்கபடியும், சூழ்நிலக்குத் தக்கபடியும் நடக்க முயற்சி செய். மனோ திடத்துடனிரு. ஒரு பொழுதும் நம்பிக்கை இழக்காதே ”

சுவாமி சிவானந்தா

படத்திற்கு நன்றி

Series Navigationகைலிபாலாஜி சக்திவேலின் “ வழக்கு எண் 18 / 9
author

சீதாலட்சுமி

Similar Posts

20 Comments

  1. Avatar
    களிமிகு கணபதி says:

    சீதாலட்சுமி அம்மா,

    சொல், செயல், விளைவு என்கிற இந்த மூன்றையும் ஒருங்கிணைத்துத்தான் ஒருவரின் ஒருமைப்பாடு (integrity) முடிவு செய்யப்பட வேண்டும்.

    ராமசாமிக்கு முன்பாகவே விதவைத் திருமணங்கள் நடத்துவதில் பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், காங்கிரஸ் இயக்கம், போன்ற சீர்திருத்த அமைப்புக்கள் ஈடுபட்டு வந்தன. தனிமனிதர்களும்.

    தன் சொந்தச் சொத்தை விற்று, விதவைத் திருமணம் செய்பவர்களுக்கு நிஜமாகவே மிக மதிப்புள்ள வெகுமதி அளித்தவர்கள் ராமசாமி பிறப்பதற்கு முன்பே இருந்தார்கள்.

    ராமசாமிக்கும் அவர்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.

    இந்து மதச் சீர்திருத்தவாதிகளான இவர்களால் பல விதவைகளுக்கு மறுமணம் நடந்தது.

    மீண்டும் சொல்கிறேன். ஒருவரின் சொல்லும் செயலும் வேறு வேறாக இருந்தால் அவர் நம்பிக்கைக்குரியவர் இல்லை.

    .

  2. Avatar
    puthiyamaadhavi says:

    உங்களின் இப்பக்கத்தை வாசித்து நெகிழ்ந்துப் போனேன்.
    வாழ்த்துகள்.

  3. Avatar
    களிமிகு கணபதி says:

    ஈவெரா இறந்த பின்னர் அவரது துணைவியார் ஏன் மறுமணம் செய்துகொள்ளவில்லை ?

  4. Avatar
    மனீஷ் says:

    கணபதி,
    அம்மையாரின் கட்டுரையின் சாரம் பெண்வாழ்வு குறித்தது.
    இந்தியப் பெண்களின் நீண்ட நெடிய துயரம் பற்றியது.
    திரு பெரியார் அவர்களின் பெண்வாழ்வு குறித்த அக்கறைகளும் அது ஏற்படுத்திய விளைவுகளும் பற்றியது.

    உங்களுக்கு பெரியார் மீது இருக்கும் கோபத்தை நான் புரிந்து கொள்கிறேன். அனால் அதை வெளிப்படுத்தும் இடம் இதுவல்ல.
    பெரியார் நிச்சயமாக மிக முக்கியமான பெண்ணியவாதிதான்.
    பெண்களின் முழுமையான விடுதலை பற்றி பேசியவர் அவர். பெண்ணின் முழுமையான விடுதலையில் ஆணின் விடுதலையும் உள்ளடங்கி இருக்கிறது என்னும் புரிதலை அவரிடத்தே காணமுடியும்.

    கட்டுரையை சரியாக புரிந்து கொள்ள முயல்வதே வாசிப்பின் பயனைத் தரும்.

  5. Avatar
    smitha says:

    பெரியார் நிச்சயமாக மிக முக்கியமான பெண்ணியவாதிதான்.
    பெண்களின் முழுமையான விடுதலை பற்றி பேசியவர் அவர்.

    Correct, but he never practised what he preached.

  6. Avatar
    மலர்மன்னன் says:

    திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட சொந்தப் பிரசினை. கணவரை இழந்த பெண்கள் அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினாலும் முடியாத சம்பிரதயம் ஹிந்து சமூகத்தில் இருந்தது. ஆனால் காலத்துக்கேற்ற மாற்றங்களை ஏற்கும் மனப் பக்குவம் ஹிந்து சமூகத்துக்கு இருப்பதால் இன்று அந்த சம்பிரதாயம் இல்லை. ஈ.வே.ரா. அவர்கள் காலத்தில் இருந்தது. நூறு ஆண்டுகளுக்கு முன் கணவனை இழந்த பெண்கள் நிலை மகா மோசமாக இருந்தது. அந்தப் பெண்களில் பலர் மிக மிகச் சிறு வயதினராகவும் இருந்து படாத பாடு பட்டிருக்கிறார்கள். அந்த வேதனை அனுபவங்களை பிராமணரான அ மாதவையா நிறையவே பதிவு செய்து மறு மணத்தைத் தீவிரமாக ஆதரித்து செயலிலும் முனைந்திருக் கிறார். பிராமணரான வீரேசலிங்கம் பந்துலு விதவையர் மறுமண பீரோவே நடத்தியிருக்கிறார். பாரதியார் வாதாடியிருக்கிறார். ஈ.வே.ரா. அவர்களும் தமது குடும்பத்திலேயே 110 ஆண்டுகளுக்ககு முன் ஓர் இளம் விதவைக்குத் திருமணம் செய்துவைத்துக் குடும்பத்தாரின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கிறார். ஈ.வே.ரா. அவர்கள் இதுபோல் எதிர்ப்புக்கு அஞ்சாமல் பல நல்ல காரியங்கள் செய்திருப்பவர் தான். மணியம்மையின் சம்மதம் பெற்றே அவர் மணியம்மையை மணந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்தான் கண்டிக்கப்பட்டது. ஈ.வே.ரா. அவர்கள் மறைந்தபின் திருமணம் செய்வதும் செய்யாமல் இருந்ததும் மணியம்மையின் சொந்த விஷயம். விதவையர் அனைவரும் கட்டாயம் திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று ஈ.வே.ரா. சொல்லவில்லை. கணவரை இழந்த பெண்கள் மறுமணம் செய்துகொள்ள உரிமை பெற வேண்டும் என்றுதான் சொன்னார். அப்படிச் சொல்வதற்கே கடும் எதிர்ப்பு இருந்த காலத்தில் அதைச் சொன்னார். அதற்குமுன் அதைச் சொல்லாமலே தம் குடும்பத்தில் செய்யவும் செய்தார். பெண்கள் கல்வி கற்க வாய்ப்பு அளிப்பதிலும் ஈரோடு நகராட்சித் தலைவராக இருக்கையில் முன் முயற்சி எடுத்தார். காங்கிரசில் சேர அழைக்கப்பட்டபோது நகராட்சித் தலைவர் என்கிற மரியாதையான, செல்வாக்கான பதவியைத் தூக்கி எறிந்தார். லாபகரமான வாணிபத் தொழிலையும் விட்டார். கலெக்டர் முதலான உள்ளூர் அதிகாரிகள் வெறுப்பையும் தயங்காமல் எதிர்கொண்டார். நமக்கேன் வம்பு, எல்லாரையும்போல் இருந்துவிட்டுப் போவோம் என்று மற்ற செல்வந்தர்களையும் பெரிய மனிதர்களையும்போல் விலகி இருக்கவில்லை. காங்கிரசின் வளர்ச்சிக்காக தமிழ் நாடு முழுவதும் சாலை வசதி, போக்குவரத்து, சாப்பாடு வசதிகள் இல்லாத காலத்தில் அவர் அலைந்து திரிந்து கடுமையாக உழைத்ததை “அவர் பட்ட பாட்டை ஆண்டவனே அறிவன்” என்று திரு.வி.க. தமது வாழ்க்கைக் குறிப்பில் பதிவு செய்துள்ளார்.
    -மலர்மன்னன்

    1. Avatar
      paandiyan says:

      மணியம்மை விசயமும அவர் திருமணமும் அதற்க்கு முன் பேசிய விசயங்களும் பெரிய முரண்பட்டு உண்டா இல்லையா . தனக்கு ஒரு நியாயம் உருக்கு ஒரு உப்டதேசம் என்று பேசியவர் எப்படி பெரியவர் ஆவார்?? காங்கிரஸ் இல இருந்து வெளியில் வர அவர் கையாண்ட தந்திரம் பினால் தி மு க விற்க்கு பெரிய பலம் ஆனது . ஹிந்தி , மாநில சுயாட்சி என்று 100 அடி பாயந்தார்கள் . இத திரு.மலர்மன்னன் அவர்கள ராமசாமி பற்றி வரலாறில் சாமர்த்தியமாக மாற்றி விட்டார்கள் என்று சொன்னதை மறக்க வேண்டாம் யாரும்..

  7. Avatar
    மலர்மன்னன் says:

    ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது 1916 இறுதியில். ஈ.வெ.ரா. 1925 வரையிலும் காங்கிரசில் இருந்து பாடுபட்டு ஜஸ்டிஸ் கட்சி பெரிய மனிதர்களைக் கண்டித்துப் பிரசாரம் செய்துகொண்டுதானிருந்தார். 1925க்குப் பிறகே அவர் ஜஸ்டிஸ் கட்சியின் பக்கம் சாயத் தொடங்கினார். கதர் உள்ளிட்ட சுதேசி தொழில்கள் வளர்ச்சிக்குப் பாடுபட்டு ஹிந்தி கற்பிக்கப் படவும் முதல் முதலில் ஏற்பாடு செய்தார்.
    -மலர்மன்னன்

  8. Avatar
    மலர்மன்னன் says:

    பெண்கள் வீட்டுக்கு வெளியே தம்மிச்சையாக நடமாடக் கூடாது என்கிற கட்டுப்பாடு இருந்த காலத்தில் மனைவி நாகம்மா, தங்கை கண்ணம்மா இருவரையும் கள்ளுக் கடை மறியல் போன்ற கடும் பொதுவாழ்க்கையிலும் ஈ.வே.ரா. ஈடுபடுத்தியதையும் எண்ணீப் பார்க்க வேண்டும்.
    -மலர்மன்னன்

  9. Avatar
    களிமிகு கணபதி says:

    மலர்மன்னன் அவர்களே,

    ஈவேராவிற்கு முன்பே விதவைகள் மறுமணம் என்பதைத் தீவிரமாகச் செய்தவர்கள் உண்டு.

    ஆனால், ஒரு இயக்கம் தனது கொள்கையைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியது அவசியம். உதாரணமாக, திமுக தலைவர் கருநாநிதி தனது குடும்பத்திலேயே பல கலப்பு மணங்கள் செய்திருப்பது நிச்சயம் பாராட்டத் தக்கதுதான். பின்பற்றத் தக்கதுதான்.

    ஒருவரின் ஒட்டுமொட்த்தச் செயல்பாடுகளின் விளைவு வரலாற்றில் சமூகத்தில் என்ன விளைவை ஏற்படுத்தியது என்றுதான் பார்க்க வேண்டும்.

    எனவே, பாராட்ட வேண்டிய விஷயத்தில் பாராட்டையும், கண்டிக்க வெண்டிய விஷயத்தில் கண்டிப்பையும் செய்ய வேண்டியது அவசியம்.

    அது ஈவெராவிற்கும் பொருந்தும்.

    .

  10. Avatar
    களிமிகு கணபதி says:

    மலர்மன்னன் அவர்களே,

    ஈவெரா எந்த அளவு கடுமையான கலவரக்காரர் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். கடைசிக் காலம் வரை அவர் காடுமேடு பாராமல் ஊர் ஊராகச் சென்று பேசியவர் எழுதியவர். அந்த உழைப்பை யாரும் குறை சொல்லவில்லை.

    அந்த உழைப்பை சே குவாராவின் உழைப்போடுதான் ஒப்பிட முடியும்.

    ஒரு புறம் பெண் உரிமை என்று பேசிக்கொண்டு மறுபுறம் விதவைகளைத் தூற்றவும், ஆபாசப்படுத்தவும் ஏற்பாடு செய்த ஒருவரை எப்படி நேர்மையான ஒருவராகக் கருத முடியும்?

    தனது தந்தையார் குடும்பத்துக்குச் சொந்தமான தோட்டத்தில் இருந்த மரங்களை கள் எதிர்ப்புப் போராட்டத்திற்கு எதிராக வெட்டினார்தான். ஆனால், தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்கக்கூடாது என்று அவர் போராடியதுதானே வெற்றிபெற்றது?

    இன்றும் தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் மதுவால் அழிந்துகொண்டிருப்பதற்கு ஈவெராதான் காரணம். அவர் தமிழர்களின் தந்தை அல்ல. டாஸ்மாக்கின் தந்தை.

    ஒருவர் என்ன சொல்கிறார் என்பதைவிட சமூகத்தை எங்கு எடுத்துப் போனார் என்பதுதான் வரலாறு.

    ஒடுக்கப்பட்டவர்கள் சுயமரியாதையோடு சம உரிமையோடு வாழவேண்டும் என்று ஒருபக்கம் பேசிக்கொண்டே, தன்னைப் போன்ற ஜமீந்தார்களுக்கு இணையானவர்கள் தலித்துகளைக் கொடுமைப் படுத்துவதை அவர் ஆதரித்தார். தலித் பெண்கள் ஜாக்கெட் போட்டதால்தான் துணி விலை அதிகரித்தது என்று வெளிப்படையாகப் பேசினார்.

    இங்கனம் பிரச்சாரத்தின்போது ஒரு கருத்தும், பிரச்சாரத்திற்காகச் சில செயல்பாட்டு நாடகங்களும், நடத்திய ஒருவரையும் அவரது கழகத்தாரையும் உண்மையானவர்கள் என்று நம்புவது ஏமாளித்தனம்.

    அவரும் அவரது கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும்படி நடந்துகொண்டிருந்தால் நிச்சயம் தமிழ்நாடு முன்னேறி இருக்கும். அது தவறான கருத்துக்களுக்காக என்றாலும்.

    .

  11. Avatar
    HariPrasath says:

    இன்று பெண்ணியம் தேவையான ஒன்று ஆனால் பலர் அதை தவறாக பயன் படுத்துகிறார்கள். உரிமைக்காக பெண்ணியம் பேசும் சிலர் சொல்லும் உரிமைகள் உண்மையில் அர்த்தமற்றதாக உள்ளன பெரியார் பேசிய பெண்யதிற்கும் இன்று விளம்பர பேச்சின் பெண்ணியமும் வேறு பரிமானம் பெற்று மழுங்கி விட்டது

  12. Avatar
    Kavya says:

    கணபதி !

    திரும்பத்திரும்ப சொன்னதையே சொல்கிறீர்கள்.

    ராமசாமிக்கு முன் இந்துமதச்சீர்த்திருத்தக்காரர்கள் இருந்தார்கள்; விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார்கள் என்றல்லாம்.

    ஆனால் அவர்களில் செயல் இந்துமதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? அதன்பின் ஏராளமான விதவைகளின் மறுமணங்கள் நடந்தனவா? தமிழகத்தில் நிலையென்ன? அச்சீர்திருத்தக்காரர்கள் தமிழகத்தில் எத்தனை பேர்?

    அவர்கள் சீர்திருத்தம் இந்து மதத்தை அசைக்கவில்லை என்ற் உண்மையை விருந்தாவன் விதவைகள் இன்று உலகுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களப்பற்றிய சோகம்நிறைந்த குறும்படங்கள் (டாக்குமென்டரி) உலகமுழுவதும் சென்றுவிட்டன. போனமாதம் மத்திய அரசு அவர்கள் புணர்வாழ்வுக்காக திட்டம் தீட்ட்விருப்பதாகச்சொல்லியது பாராளுமன்றத்தில்.

    இளம் விதவைகளை விருந்தாvaனலில் கொண்டு தள்ளுவதும் முதியோரை காசியில் கொண்டு விடுவதும் நீங்கள் சொல்லும் சீர்திருத்தக்காரர்கள் வந்தும் நடந்து கொண்டேதானிருக்கிறது.

    ஒரே ஒரு பெண் (இங்கு எழுதுபவரை)ப் பாதித்தாலும் ராமசாமியின் தொண்டு வெற்றியே.

    ராமசாமி சொல்லியும் இளம் விதவைகளுக்கு மொட்டைகளைப்போட்டு அவலட்சணம் பண்ணிக்கொண்டுதானிருந்தார்கள். இல்லையா? வீட்டுத்தூரமென்று வீட்டுத்திண்ணையிலே மூன்றுநாட்கள் வைத்து நாயுக்கு உணவு வைப்பது போல வைத்துக்கொண்டுதானிருந்தார்கள். இல்லையா?

    கண்ணிலுள்ளவர் பார்க்கக்கடவது; காதுள்ளவர் கேட்கக்கடவது என்றுதானே ஒரு சீர்திருத்தவாதி நினைத்துத் தன் வாணாள் முழுவதும் பேசமுடியும்? அதைத்தான் ராமசாமி செய்தார். பலரும் கேட்க சொல்லக்கூடாததைச் சொன்னதற்காக ராமசாமிக்கு ஒரு ‘ஜே’ போடாதவர்கள் மனசாட்சியில்லாதவர்கள்.

  13. Avatar
    murali says:

    If women want to break her clucthes,man has to fight. Economic independence may liberate women. Woman in top position are not living a secured life,i felt sorry for a lady who is holding a top position in tamilnad- after reading an article about her. I am sure that article was written and published by a low grade person.

    Woman feels secure with a man that is nature,western woman is not an exemption. INDIAN Women who comes to west with their husband don’t want to go back to india again. If husband determines to go back, his wife hesitates because liberty, economic independence, what she gets in west is a dream for her in india and moreso social security is high in the west.

    Western people don’t worry about chastity until they start living togather but westernized indian mindset is par with native indians. Migrated indian or born and brought up indian males posses same mindset as indians in the mother land.
    Seethamma will never come back to india to settle because
    ?????????????????
    liberty ???
    social security ????
    or dream land

  14. Avatar
    puthiyamaadhavi says:

    மணியம்மை, மணியம்மை…. எவ்வளவு காலத்திற்கு இந்த ஒரு
    செயலைக் குற்றச்சாட்டாக தந்தை பெரியார் மீது சுமத்த முயற்சி செய்து கொண்டிருக்கின்றீர்கள்? பெரியார் தன் மகள் வயதை ஒத்த
    பெண்ணைத் திருமணம் செய்தது சரியா தவறா? என்பது உங்கள் பார்வையில் சரியானக் கேள்வியாகவே இருக்கலாம்! ஆனால் மணியம்மைக்காக பேச நீங்களும் நானும் யார்? இத்திருமணம்
    கட்டாயத் திருமணமா? இல்லை மணியம்மையின் சுய நினைவுடனும் விருப்பத்துடனும் நடந்த திருமணமா? இந்தக் கேள்வியை முன்வைத்தால் ? மணியம்மை என்ற பெண் தனக்கான வாழ்க்கையை அவள் விருப்பத்துடன் தேர்ந்தெடுத்துக் கொண்டார். இன்னும் சொல்லப்போனால், கணவனுடம், தந்தையுடனும் உடன் பிறந்த சகோதரனுடம் மகனுடனும் மட்டுமே தங்கி இருக்கவும் சேர்ந்துவாழவும் அனுமதிக்கப்பட்டிருக்கும் இச்சமூகத்தில் அப்பெண்ணுக்கு ஈவெராவுடன் சேர்ந்து வாழும் அவள் விருப்பத்தை, கணவன் மனைவி என்ற உறவு மட்டுமே தந்திருக்க முடியும்.
    இதுதான் மணியம்மையின் பார்வையாக இருக்க முடியும்.

    இதை வாசித்தவுடன் வரிந்து கட்டிக்கொண்டு வரப்போகிறீர்களா?
    மணியம்மையை திருமணம் செய்தவுடன் இயக்கத்தில் இருந்த இராமிர்தம் அம்மையார் போன்றவர்கள் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்கள். அதைவிட கடுமையாகவும் மிகவும் சரியாகவும் குற்றச்சாட்டுகளை எவரும் வைத்ததாகத் தெரியவில்லை. ஆனால் இத்திருமணம் குறித்து 1மணியம்மையின் பதிவு ஏதேனும் உண்டா? தெரியவில்லை.
    அப்படி இருந்தால் நல்லது. மணியம்மையின் நோக்கமும் விருப்பமும் அவர் மூலமே பதிவாகி இருந்தால் , மிகச் சரியான கோணத்தில் விமர்சனங்களை நாம் தொடர முடியும்.

  15. Avatar
    puthiyamaadhavi says:

    காவ்யா அவர்களுக்கு,

    பெரியார் சொன்னதை எல்லாம் விட்டுத் தள்ளுங்கள்.
    அது என்னவோ தெரியவில்லை ஈவெரா என்ற பெயரே சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
    அப்படிப் பட்டவர்கள் எல்லாம் தயவுச்செய்து சுவாமி விவேகானந்தர் சொன்னதையாவது இந்து சமூகத்தில் செய்தார்களா? இல்லை செய்யத்தான் முயற்சித்தார்களா?
    விவேகானந்தரின் ஒருசில கருத்துகள் சொன்னது யார்? என்ற குறிப்பு இல்லை என்றால் தந்தை பெரியார் சொன்னதாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வரமுடியும்.

    சுயமரியாதை திருமணங்கள் குறித்து திமுக அன்பழகன் ( சுயமரியாதையுடன் இருந்த காலக்கட்டத்தில் எழுதியது) எழுதிய
    புத்தகத்தில் விவேகானந்தர் குறித்த நிறைய செய்திகளைப் பதிவு
    செய்திருக்கிறார்.( வாசித்து 20 அல்லது 25 வருடங்களுக்கு மேலாகிறது. புத்தகத்த்தின் தலைப்பு சந்தேகமாக இருக்கிறது)

  16. Avatar
    கண்ணன் says:

    விவகானந்தரோடு ஈ.வே.ராமசாமியை ஒப்பிடாதீர்கள்; எங்க தாத்தாவுக்கும் வழுக்கையிருந்தது; காந்திக்கும் வழுக்கையிருந்தது என்பதைப்போலிருக்கிறது அது.

  17. Avatar
    Kavya says:

    கண்ணன் உங்கள் பார்வையே மற்றவர்களின் பார்வை என்று நினைப்பதை விட குழந்தைத்தனம் எதுவுமில்லை. உங்க‌ளுக்கென்று ஒரு கூட்ட‌ம் உண்டு. ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் உண்டு என‌ப‌தை நினைவில் வைத்தால் ந‌ல‌ம்.

    மற்றவர்களின் பார்வை தெரிய வேண்டுமா? உங்கள் வசனத்தைத் திருப்பிப்போட்டுப்பாருங்கள் தெரியும்.

    “ஈ.வே.ராமசாமியை விவேகானந்தரோடு ஒப்பிடாதீர்கள்; எங்க தாத்தாவுக்கும் வழுக்கையிருந்தது; காந்திக்கும் வழுக்கையிருந்தது என்பதைப்போலிருக்கிறது அது.”

    விவேகான‌ந்த‌ர் செய்ய‌த்த‌ய‌ங்கிய‌ அல்ல‌து செய்யாக் காரிய‌ங்க‌ளை ராம‌சாமி செய்தார். ப‌ன்னெடுங்கால‌மாக‌ பிராம‌ண‌ர் என‌த்த‌ம்மையும் அழைத்துக்கொண்டு பிற‌ரையும் அழைக்க‌வைத்து ச‌மூக‌த்தில் பிறரைவிடத்தாம் உயர்ந்தவர் என்றும் சிவனின் அவதாரங்கள் என்றும் (சிதம்பரம் தீட்சிதர்கள் இன்றும் அப்படித்தான் சொல்கின்றனர்), பிராமணனுக்கே முதல் மரியாதையென்று கதைகளும், இறைவனே பிராமணத்தியின் வயிற்றில்தான் கருக்கொண்டான் என்றும் சுந்தரரைத் தடுத்தாட்கொள்ள பிராமணன் வேடத்தில்தான் சிவன் வந்தான் என்றும் கதைகளுமெழுதி மக்களைத் தம் இறைத்தன்மையை ஏற்றுக்கொள்ளவைத்த ஒரு சாராரைக் கேள்விகள்மேல் கேள்விகள் கேட்டார். இறைவன் தனித்தனியாகப்படைத்தான் என்றும் சாதிகள் அவசியம் என்றும் உட்டான்ஸ் உட்ட பிராமணர்களை அவரின் கேள்விகள் கலக்கியது. உங்களுக்கு அதுதான் வருத்தம். நீங்க‌ள் ‘சாமி’ இல்லையே? அவரில்லையென்றால் உங்க‌ளை மற்ற‌வ‌ர்க‌ள் ‘சாமி’ என்றுதானே அழைத்துக்கொண்டிருப்பார்க‌ள் !

    விவேகானன்த‌ர் அப்ப‌டியெதுவுமே ந‌ட‌க்க‌வில்லையென்று பொய்வேட‌ம் போட்டார். பார்ப்ப்ன‌ர‌ல்லா ம‌க்க‌ளுக்காக‌ அவ‌ர் எதுவுமே செய்ய‌வில்லை. அவ‌ர் ஒரு பி சி. ஆனால் அந்த‌ பி சிக்க‌ளுக்காக‌ ச‌மூக‌ நீதி கேட்டு வெற்றி பெற்ற‌வர் ” ராம‌சாமி ” என‌ இழிவாக‌ க‌ண‌ப‌தி அழைக்கும் ஈவேராமசாமி நாய‌க்கரேதான். இன்றைய இந்திதியாவில் ம‌ற்ற‌வ‌ரும் த‌லை நிமிர்ந்து பெருமை கொள்ள‌ உத‌விய‌வ‌ர் உங்க‌ளால் ப‌ழிக்க‌ப்ப‌டும் அந்த‌‌ ராம‌சாமியேதான்.

    த‌மிழ‌க‌த்தில் வ‌ர‌லாறை மாற்றிய‌வ‌ர் உம்மால் பசியோடு விர‌ட்டிய‌டிக்க‌ப்ப‌ட்ட‌ ராம‌சாமிதான்.

    1. Avatar
      paandiyan says:

      இது எல்லாம் உண்மை என்று நம்பிவிடுங்கள். இது எல்லாம் உண்மையிலும் உண்மை என்று நம்பிவிடுங்கள்,இது எல்லாம் உண்மை என்று நம்பிவிடுங்கள். இது எல்லாம் உண்மையிலும் உண்மை என்று நம்பிவிடுங்கள் ,இது எல்லாம் உண்மை என்று நம்பிவிடுங்கள். இது எல்லாம் உண்மையிலும் உண்மை என்று நம்பிவிடுங்கள் ,இது எல்லாம் உண்மை என்று நம்பிவிடுங்கள். இது எல்லாம் உண்மையிலும் உண்மை என்று நம்பிவிடுங்கள் ,இது எல்லாம் உண்மை என்று நம்பிவிடுங்கள். இது எல்லாம் உண்மையிலும் உண்மை என்று நம்பிவிடுங்கள் ,இது எல்லாம் உண்மை என்று நம்பிவிடுங்கள். இது எல்லாம் உண்மையிலும் உண்மை என்று நம்பிவிடுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *