பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-4)

This entry is part 15 of 28 in the series 3 ஜூன் 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

நம்பிக்கை விதைத்த கவிஞர்கள்

எந்த ஒரு காலத்திலும் படைப்பாளன் சமுதாய மக்களுக்கு அவநம்பிக்கையை ஊட்டுகின்ற விதத்தில் தனது படைப்புகளை படைத்தல் கூடாது. அவ்வாறு படைத்தால் அப்படைப்பாளன் அச்சமுதாயத்திற்குச் செய்யும் மிகப்பெரிய அநீதியாகும். விரக்தியான நிலையில் மனச்சோர்வடைந்துள்ள மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய விதத்தில் படைப்புகளைப் படைத்து, மக்களை வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொள்ள வைக்க வேண்டும். இது ஒவ்வொரு படைப்பாளனுடைய கடமையாகும்.

நல்ல கவிஞர்களுக்கான அடையாளமாக நம்பிக்கை ஊட்டுவதைத்தான் உயர்ந்ததாகக் கூறுவர். மகாகவியும் மக்கள் கவியும் இந்த வகையில் மிக உயர்ந்த நிலையில் உள்ளனர். இவர்களிருவரது வாழ்வும் மிகுந்த வேதனைகளுக்கு உட்பட்ட வாழ்வாக இருந்தபோதும் அவர்களது பாடல்களில் அத்தகைய வேதனைகளும் அவநம்பிக்கையைத் தோற்றுவிக்கக் கூடிய கருத்துக்களும் இடம்பெறவில்லை.

மகாகவி பாரதி ஒரு பாசமிக்க குடும்பத்தலைவராக விளங்கினார். (என் தந்தையார் தம் தேசத்தின் மீதுள்ள அன்பிற்கு அடுத்ததாக என்மீது செலுத்தினார்- பாரதியின் மகள் சகுந்தலா பாரதி- என் தந்தை என்ற தலைப்பில் எழுதிய சிவாஜி இதழ்க் கட்டுரை 1969-70). ஒரு முறை பாரதியின் குழந்தை சகுந்தலா நோய்வாய்ப்பட்டபோது அவர் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை. இதனை,

‘‘குழந்தைக்கு ஜ்வரம் வந்தது. நினது திருவருளால் குணமாய்விட்டது. இரண்டு மாத காலம் இரவும் பகலுமாக நானும் செல்லம்மாளும் புழுத்துடிப்பது போலத் துடித்தோம். ஊண் நேரஸ்ரீரே செல்லவில்லை-இருவருக்கும். எப்போதும் சஞ்சலம், பயம், பயம், பயம்! கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது. வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம், குழப்பம், தீராத குழப்பம்!’’ என்று மகாகவி பாரதி தனது நாட்குறிப்பில் குறிப்பிடுகின்றார்(பாரதி நூற்றாண்டுவிழா மலர்1982 ப.,239). இங்ஙனம் மகாகவியை வறுமை வாட்டிய போதும் அவர்தம் பாடலில்,

‘‘நம்பினார்க் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு’’ (ப.,222)

‘‘யானும் மற்றது மெய்யெனத் தேர்ந்துளேன்

விலங்கி யற்கை யிலையெனில் யாமெலாம்

விரும்பும் மட்டினில் விண்ணுற லாகுமே’’ (ப.,255)

‘‘குன்றென நிமிர்ந்து நில்’’

‘‘குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு

நல்ல காலம் வருகுது நல்ல காலம் வருகுது

வாதிகள் சேருது சண்டைகள் தொலையுது

சொல்லடி சொல்லடி சக்தி மகாகாளீ!

………………. ……………………….. ……………………….. ……………………………..

தரித்திரம் போகுது செல்வம் வருகுது’’ (ப.,321)

என்று நம்பிக்கை விதைகளைத் தூவி மக்களை எழுச்சி கொள்ள வைக்கிறார். பராசக்தியிடம் பாரதி கேட்கின்றபோது கூட,

‘‘சொல்லடி சிவசக்தி எனைச்

சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

வல்லமை தாரோயோ இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே’’(ப.,116)

என்று நம்பிக்கை தளராது பாடுகின்றார்.

மகாகவியைப் போன்றே மக்கள் கவியும் வறுமையில் உழன்றவர். உண்ண உணவின்றிப் பல நாட்கள் பட்டினியால் வாடியவர். அவர் உடுத்தியிருந்த நாலுமுழ வேட்டி கிழிந்த போது அவர்,

‘‘ஓரம் கிழிஞ்சாலும் ஒட்டுப் போட்டுக் கட்டிக்கலாம் – இது

நடுவே கிழிஞ்சுதடி நாகரத்தினமே! – அதுவும்

நாலுமுழ வேட்டியடி கனகரத்தினமே!’’ (ப.,231)

என்று நகைச்சுவை தோன்றப் பாடுகின்றார். ஒருசமயம் மக்கள் கவிஞர் சாதரண செருப்பைக் (நடையன் என்று கூறுவர்) கால்களில் போட்டுக் கொண்டு நடந்தார். செருப்பின் வார் அறுந்துவிட்டது. செருப்பைப் போடமுடியவில்லை. அதனைத் தைக்கவும் இயலாது. இத்தகைய சூழலில் செருப்பின்றி வெறுங்கால்களோடு எவ்வாறு தார்ச் சாலையில் நடக்க இயலும். கவிஞர் அதுகுறித்துக் கலங்காது,

‘‘உறுப்பறுந்து போனாலும் உள்ளம் கலங்கான்

செருப்பறுந்து போனதற்கோ சிந்திப்பான்!

நெருப்பினில் வீழ்ந்து எதிர்நீச்சல் அடிக்கத்

துணிந்தான்! கொதிக்கும் தார் குளிர் நீர்!’’ (ப.,231)

என்று மனத்துணிவுடன் கவிஞர் பாடுகின்றார்.

கவிஞர் வறுமையில் வாடினாலும் அவர் கவிதைகளில் வறுமையும் இல்லை வெறுமையும் இல்லை. வறுமையால் வாடும் மக்கள் மனச் சோர்வு அடைந்திடாது இருக்க மக்கள் கவிஞர்,

‘‘என்றும் துன்பம் இல்லை இனிச் சோகம் இல்லை

பெறும் இன்பநிலை வெகு தூரம் இல்லை!

இனி வஞ்சமும் பஞ்சமும் இல்லை

நெஞ்சை வாட்டிடும் கவலைகள் இல்லை!

………………………….. …………………………………….. ……………………………………………….

இனிச் செல்கின்ற தேசத்தில் பேதமில்லை!

கொடும் தீமை பொறாமை வீரோதமில்லை!’’ (ப.,303)

என மக்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றுகின்றார்.

‘‘காடு வௌஞ்சென்ன மச்சான் நமக்குக்

கையுங்காலுந்தான மிச்சம்’’

என்று உழவனின் காதலி கேட்க, அதற்கு அவளின் காதலன்,

‘‘இப்போ காடு வெளையட்டும் பொண்ணே- நமக்குக்

காலம் இருக்குது பின்னே!’’

என்று விடையிறுக்கின்றான். ஆனால் அவளுக்கோ மனம் அமைதியுறவில்லை. மேலும் மேலும் சந்தேகம் வலுக்கின்றது. அது,

‘‘வாடிக்கையாய் வரும் துன்பங்களை

இன்னும் நீடிக்கச் செய்வது மோசமன்றோ!’’

என்று வினாவாக வெளிப்படுகின்றது. இதனைக் கேட்ட காதலனோ,

‘‘இருள் மூடிக்கிடந்த மனமும் வெளுத்தது

சேரிக்கும் இன்பம் திரும்புமடி!’’ (ப.,270)

உறுதியாக உழைக்கும் மக்களின் வாழ்வில் வசந்தம் வரும் என்ற நம்பிக்கை விதையை மக்கள் கவிஞர் ஆழமாக மனதில் பதிய வைக்கின்றார். சுதந்திரம் பெற்ற பின்னரும் தங்களது வாழ்வில் இன்னும் மகிழ்ச்சி ஏற்படவில்லையே என்று வருந்திய உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக மக்கள் கவிஞரின் பாடல் வரிகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வறுமையைக் கண்டு அஞ்சுதல் கூடாது. அவ்வாறு அஞ்சினால் வாழ்வில் முன்னேற்றம் காண முடியாது என்பதை உணர்ந்திருந்த மக்கள் கவிஞர், எதிர்காலத்தை உருவாக்குகின்ற குழந்தையிடம் கூறுவதைப் போன்று,

‘‘வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே

திறமை இருக்கு மறந்துவிடாதே’’

என்று உழைக்கின்ற வர்க்கத்தினருக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளைக் கூறுகின்றார். மகாகவியும் புரட்சிக் கவியும் காட்டிய வழியில், உழைக்கும் வர்க்கத்தினரின் வீடுகளுக்கு நம்பிக்கை ஒளியைக் கையில் ஏந்திக் கொண்டு நடக்கின்றார் மக்கள் கவிஞர். தான் வாழ்ந்த காலத்தை அறிந்தும் அத்தகைய காலத்தை மாற்றவும் எதிர்காலத்தை எண்ணியும் ஏழை மக்களின் வெற்றிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் நம்பிக்கைக் குரலாக மக்கள் கவிஞரின் குரல் ஒலிக்கின்றது. நம்பிக்கையை விதைத்த மாண்பாளராக மக்கள் கவிஞர் திகழ்ந்தார் என்பதை,

‘‘நீ ஏழைகளின்

பாடகனாக இருந்தாய்

ஆனால் உன் பாடல்கள்

ஏழைகளாக இருந்ததில்லை’’

(மே.கோவி.மு.சுதந்திரமுத்து, தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா, ப.,47)

என்ற மக்கள் கவிஞரைப் பற்றிய கவிக்கோ அப்துல்ரகுமானின் கவிதை தெளிவுறுத்துவது சிறப்பானதாக அமைந்துள்ளது.

இருபெருங்கவிஞர்களும் தங்கள் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டிய சமுதாயப் பிரஞ்ஞையுடைய கவிஞர்களாகத் திகழ்ந்தனர். அவ்வாறு திகழ்ந்ததினாலேயேதான் அவர்கள் இன்றும் மக்களின் மனதில் நீடித்து நிலைத்து நிற்கின்றனர். எக்காலத்திலும் இக்கவிஞர்களின் வரிகள் மக்களுக்கு வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வைர வரிகளாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

கவிஞர்களின் விதி பற்றிய நம்பிக்கை

மனித வாழ்வு விதியினால் இயக்கப்படுகின்றது. இது சங்க காலம் முதல் ஏற்பட்டுவிட்ட நம்பிக்கையாகும். ஆணும் பெண்ணும் காதல் வயப்படுவது கூட வினைப்பயனால் கண்டு அவர்கள் தம்முள் காதல் கொண்டார்கள் என்று இயற்கைக் காதலைத் தெய்வீகக் காதலாக்கி உரையாசிரியர்கள் உரைகண்டார்கள்.

வள்ளுவர் இருவினைக் கொள்கையை ஒப்புக் கொண்டவர். எனவேதான் வள்ளுவர் ‘‘இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்’’ என்று முதல் அதிகாரத்திலேயே அவ்வினைகளைப் பற்றி குறித்து விடுகின்றார். வள்ளுவர் காலம் விதியினை ஒப்புக் கொண்டு அதனை முயற்சியினால் வெல்லலாம் எனும் நம்பிக்கையினை ஊட்டிய காலம் ஆகும்.

விதியின் விளைவுகளை மிகுந்த அழுத்தத்துடன் வலியுறுத்துவதற்காகச் சிலப்பதிகாரக் காப்பியம் எழுந்தது. இளங்கோவடிகள் விதி வலியது என்று தமது காப்பியத்தின் வாயிலாக தெளிவுறுத்தினார். கம்பரும் இரமன் அயோத்தியை ஆளமுடியாது என்பது விதி என்று கூறுகின்றார்.

‘‘குழைகின்ற கவரியின்றிக் கொற்ற வெண்குடையுமின்றி

இழைக்கின்ற விதிமுன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக’’

என இராமன் முடிசூடாமல் சென்றதற்கு விதியைக் கம்பர் காரணமாக்கினார். இராமன் இந்நிகழ்ச்சியினை ‘‘விதியின் பிழை’’ என்று ஒப்புக்கொள்கிறான். இலக்குவன் விதிக்கும் விதி செய்கின்றேன் எனப் பொங்கி எழுகிறான். அவனை இராமன் அவ்வாறு செய்யவிடாது தடுத்துவிடுகிறான். முடிவில் இராமனே அயோத்திக்கு மன்னனாக முடிசூடுகிறான். இராமன் விதியினை வென்றிருந்தாலும் கம்பர் தருமத்தின் வெற்றியாக வருணிக்கின்றார். இராமன் விதியினை வென்றதாக ஒப்புக் கொள்ளவில்லை.

கம்பருக்குப் பின்வந்தோரும் விதிக் கொள்கையில் நம்பிக்கை வைத்தே பாடினர். கம்பர் கூறும் கருத்தின் பிழிவை மகாகவி பாரதியிடத்திலும் காணலாம். பாண்டவர்கள் இந்திரபிரஸ்தத்தை விட்டு நீங்கிப் புறப்பட்டதற்கு,

‘‘நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்

நழுவிவிழும் சிற்றெரும்பால் யானை சாகும்

வரிவகுத்த வுடற்புலியைப் புழுவுங் கொல்லும்

வருங்கால முணர்வோரு மயங்கி நிற்பார்

……………. ……………………….. ………………………. …………………….. ………………………..

போற்றிடுவார் விதிவகுத்த போழ்தினன்றே’’

(பாஞ்சாலி சபதம் அழைப்புச் சருக்கம், பாடல், 146)

பாஞ்சாலியைத் துகிலுரியும்போது வீமன் அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாது மிகுந்த சினத்துடன் தருமனைப் பேச அர்ச்சுனனோ,

‘‘தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்

தருமம் மறுபடி வெல்லும் எனுமியற்கை

மருமத்தை நம்மாலே உலகங்கற்கும்

வழிதேடி வதியிந்தச் செய்கை செய்தான்

கருமத்தை மேன்மேலும் காண்போம் இன்று

கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்’’

(பாஞ்சாலி சபதம் சபதச் சருக்கம்)

என வீமனை அடக்கும் வகையில் உரைக்கின்றான். கம்பர், ‘தருமம் பின்னிரங்கி ஏக’’ என்று குறிப்பிட மகாகவியோ, ‘தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்’ எனத் தருமன் சூதாடியதை வெறுக்காது அச்செயலினை விதியின் செய்கையாகச் சித்திரிக்கின்றார். மகாகவி பாஞ்சாலியை பாரதத்தாயாகக் கண்டபோதும் விதி வலியது எனும் பழைய நம்பிக்கையை மாற்றிக் கொள்ளவில்லை.

இவ்வுலகில் அனைத்தும் விதியினால்தான் நடக்கின்றன. அவ்விதியை மதியாலும் வெல்ல இயலாது என்பதை,

‘‘இங்கிவை யாவுந் தவறிலா – விதி

ஏற்று நடக்குஞ் செயல்களாம்’’ (பாரதியார் பாடல்கள், ப.,396)

‘‘மதியினும் விதிதான் பெரிதன்றோ?

வைய மீதுள வாகு மவற்றுள்

விதியினும் பெரிதோர் பொருளுண்டோ?

மேலை நாம் செய்யுங் கர்மமல்லாதே’’

(பாரதியார் பாடல்கள், ப., 407)

என்று தெளிவுபட உரைக்கின்றார். புதுமைபல படைத்த புரட்சிக் கவியாகப் பாரதியார் விளங்கினாலும் அவர் விதி நம்பிக்கை உடையவராகத் திகழ்ந்தார் என்பதற்கு அவரது படைப்புகளே சான்றுகளாக அமைந்துள்ளன.

பாரதியின் சீடரான பாரதிதாசனைக் குருவாகக் கொண்ட மக்கள் கவிஞர் பாரதியிலிருந்து விதி நம்பிக்கையில் மாறுபடுகின்றார். பாரதியைப் போற்றினாலும் அவரது இவ்விதிக் கொள்கையிலிருந்து வேறுபட்டுச் சிந்தனை செய்கின்றார் பட்டுக்கோட்டையார். சுதந்திரம் பெற்ற நாட்டில் புதிய உலகை உண்டாக்க விரும்பும் மக்கள் கவிஞர் ஆதிகால விதி நம்பிக்கையை அழித்தொழிக்க ஆசைப்படுகின்றார்.

‘‘விதியென்னும் குழந்தை கையில் உலகந்தன்னை

விளையாடக் கொடுத்துவிட்டாள் இயற்கையன்னை – அது

மேல்கீழாய்ப் புரட்டிவிடும் மனிதர் வாழ்வை

மதியுண்டு கற்புடைய மனைவியுண்டு

வலிமையுண்டு வெற்றிதரும் வருந்திடாதே

எதிர்த்து வரும் துன்பத்தை மிதிக்கும் தன்மை

எய்திவிட்டால் காண்பதெல்லாம் இன்பமப்பா’’ (ப.கோ.பா.ப.,42)

என்ற பாடலில் விதிக்கு ஒரு புதிய விளக்கம் ஒன்றைத் தருகிறார் மக்கள் கவிஞர். யார் இவ்வாறெல்லாம் செய்து மக்களை ஏமாற்றியது என்பதனை,

‘‘நலிந்த எளியோரை வலியவர் பார்த்து

போனஜன்மத்தின் வினை என்றும்

வினையென்றும் சொல்லி வச்சாங்க – அவங்க

பொளச்சிக்கிட்டாங்க – அதைப்

புரிஞ்ச மக்களும் நல்ல சமயத்தில்

முழிச்சிக் கிட்டாங்க’’ (ப.கோ.பா., ப.,283)

என்ற பாடலில் மக்கள் கவிஞர் எடுத்துரைக்கின்றார்.

விதியினைக் கடவுளின் கட்டளை என்று கூறாது இயற்கையன்னையின் குழந்தையாக மக்கள் கவிஞர் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. இது மத நம்பிக்கைக்கு மாறுபட்டது. அவரவர் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப இறைவன் மறுபிறப்பில் அவற்றை ஆட்டுவிக்கின்றான் என்பதே மதவாதிகளின் கொள்கை. மதக் கொள்கையிலிருந்து மாறுபட்ட மக்கள் கவிஞர் காரணம் காண முடியாத சில உலக நடப்புகளையே விதி என்னும் பெயரில் கொள்கின்றார் என்று கொள்ளல் வேண்டும். எனினும் விதியின் செய்கைகளை மதியாலும் வலிமையாலும் வெல்லலாம் என்று இப்பாடலில் வலியுறுத்துகின்றார் கவிஞர். இடுக்கண் வருங்கால் நகுக என்று கூறாது எதிர்த்துவரும் துன்பத்தை மிதி என்று மக்களுக்கு அறிவுறுத்துவது விதியினைக் கீழ்மைப் படுத்துவதாக அமைகின்றது. விதியை மக்கள் நம்பினாலும் அவ்விதியை மதியால் வெற்றி காண்லாம் என்று மக்களுக்கு அறிவு கொளுத்துகிறார் மக்கள் கவிஞர்.

விதியை நம்புவர்களின் வாழ்வு சக்கையாகிவிடும். வளமாக அமையாது என்பதை,

‘‘தலைவிதியை நம்பிநம்பிச் சக்கைபோல் வாழ்ந்தவரும்’’

(ப.கோ.பா., ப.,12)

என்ற தொடரின் வாயிலாக எடுத்துரைக்கின்றார் கவிஞர்.

விதியை நம்பிக்கொண்டு இருப்பவர்களை,

‘‘விதியை எண்ணி விழுந்து கிடக்கும்

வீணரெல்லாம் மாறணும்

வேலை செஞ்சா உயர்வோம் என்ற

விவரம் மண்டையில் ஏறணும்’’ (ப., 32)

என வீணர்கள் என்று சாடுகின்றார். அவர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டு உழைத்துவாழ முற்பட வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்துகின்றார் பட்டுக்கோட்டையார்.

எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்ற நம்பிக்கை உடைத்தெறியப்பட வேண்டும் என்பதிலே பட்டுக்கோட்டையாரின் பார்வை மிகத் தெளிவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் சொல்லுவதை அழுத்தமாகச் சொல்லுகின்றார் கவிஞர்.

இந்நாட்டில் ஏழை ஏழையாகவும், குடிசைகள் குடிசைகளாகவும், பசித்தவன் பசிக்கின்றவனாகவும், உழைப்பவன் உழைப்பவனாகவும் இருப்பதற்கு அவனவன் தலைவிதியே காரணமாக்கப்படுகின்றது. தலைவிதியை நம்பும்போது தாழ்ந்த நிலையினையும் நம்பியே ஆகவேண்டும். தாழ்வை ஒப்புக் கொண்ட பின்னர் நிமிர வேண்டும் என்ற எண்ணம் உதிப்பதற்கு வாய்ப்பில்லை. இத்தகைய வீணாண எண்ண நோயால் மனதர்கள் பீடிக்கப்பட்டு இறுதி வரைக்கும் வாழ்வில் வறுமையிலேயே சிக்குண்டு மடிவர். மக்களிடம் கிடக்கும் இத்தகைய எண்ண நோயை ஒழித்தால்தான் மக்கள் முன்னேறுவர். இதனை நன்கு உணர்ந்ததால்தான் மக்கள் கவிஞர் நாட்டு மக்களைப் பார்த்து விதியை உழைப்பால் மதியால் மாற்றுக என்று அறிவுறுத்துகிறார்.

மக்கள் கவிஞரின் கூற்றினை ஆராய்ந்த குன்றக்குடி அடிகளார்,

‘‘நம்முடைய மக்கள் ஊழின் வலிவை எண்ணி ஊழின் வலிவை மிகுதிப்படுத்தி உழைப்பாற்றலைத் தரத்தில் தாழ்த்தி வாழ்விழந்து போயினர். இம்மனப்போக்கு வளரும் சமுதாயத்திற்கு நல்லதன்று. கவிஞர் இயல்பாகவே இத்தகு கருத்துக்களில் நம்பிக்கையில்லாதவர். அவருடைய கருத்துக்கள் கற்பனையில் தோன்றியவை அல்ல. யதார்த்த உலகத்தையும் அனுபவத்தையும் மையமாகக் கொண்டே தோன்றியிருக்கின்றன’’

என்று குறிப்பிடுவது பொருத்தமான ஆய்வுரையாக அமைந்த விளக்க உரையாகும்.

சிலர் பட்டுக்கோட்டையார் விதிக் கொள்கையில் நம்பிக்கை உடையவர் என்று கூறுவர். அது பொருத்தமற்றது. அவர் உறுதியான பொதுவுடைமையாளர். அப்படிப்பட்டவர் விதியை ஏற்றுப் பாடுவாரா? திரைப்படத்திற்குத் தொழில் முறையில் எழுதிய பாடல்களே அவை. படத் தயாரிப்பாளர்களின் நிர்பந்தத்தினால் தவிர்க்க முடியாமல் பாடப்பட்டவையே அவை. அவற்றில் பல தொடக்க காலத்தில் எழுதப்பட்டவை. திரையுலகில் நுழைந்தவுடன் அப்பாடல்களைப் பாட வேண்டிய சூழலில் இருந்தார் பட்டுக்கோட்டையார். அவர் பாட மறுத்திருப்பாராயின் திரையுலகில் அவர் தெடர்ந்திருக்க முடியாது.

பட்டுக்கோட்டையார் ஐந்து படங்களில் ஐந்து இடங்களில் விதி பற்றிய பாடல்களை எழுதியுள்ளார். அவை இயக்குநர்களின் வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்டவை என்பது நோக்கத்தக்கது. மேலும் அவரது பாடல்களில்,

‘‘வருவனவும் போவனவும்

விதியென்று வைத்தவன்

வாழ்வினை விதைத்த உழவன்’’(படம் சௌபாக்கியவதி,1957ப., 139)

‘‘வஞ்சம் தீர்க்கும் எதிரிபோல

மனிதரை விதியும் வாட்டுதே’’

(படம்,எல்லோரும் இந்நாட்டு மன்னர், ப.,139)

எனக் காணப்படினும் அவர் விதியை ஏற்காதவர் என்பது அவரது பாடல்களை ஊன்றிக் கவனித்தால் நன்கு புலப்படும். இருபெருங் கவிஞர்களும் தத்தம் சமுதாய, காலச் சூழல்களுக்கேற்ப தமது கொள்கை மாறாது பாடல்களைப் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.(தொடரும்…)

Series Navigationமாறியது நெஞ்சம்ஜூன் முழுவதும் சென்னையில் வானவில் விழா!
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *