வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் 17

This entry is part 21 of 43 in the series 17 ஜூன் 2012

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்துவிடல்

 

அடிமைத்தளை நீங்கியவுடன் நம் முதல் இலக்கு கிராமப் புனருத்தாரணம்

கிராம ராஜ்யம்

நம்மிடம் மந்திரக்கோலா இருக்கின்றது ?! கிராமங்களில் அனைத்து வசதிகளும் வர வேண்டும். சுதந்திர நாட்டின் உயிர்நாடி கிராமங்கள். எத்தனை பணிகள் செய்ய வேண்டியிருக்கின்றன ?!

ஊரக வளர்ச்சித் திட்டம் தோன்றியது.

எங்கும் காந்தீய மணம். பயிற்சி நிலையங்களான காந்தி கிராமமும் கல்லுப்பட்டியும் வார்தாவின் வார்ப்புகள். ஒவ்வொரு நடவடிக்கையும் ஆசிரம வாழ்க்கையாக இருந்தது. கழிப்பறை கூட வார்தா கக்கூஸ்.   உழைப்பு உழைப்பு உழைப்பு. சோம்பலுக்கு அங்கே இடமில்லை. எளிமையில் இனிமை. கதரின்  மென்மை. சர்வோதயப் பிரார்த்தனையில் உள்ளங்களின் சங்கமம் ஒருமைப்பாட்டின் உயர்வை உணர்ந்தோம். . கிராமங்களில் வேலை செய்யும் பொழுது கூட ஒரு குடும்பமாய் இருந்தோம். அன்று அரசுப் பணி இயந்திர வாழ்க்கையாக இருக்கவில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒருவர் பொறுப்பு. விவசாயம், கால்நடை, கூட்டுறவு, தொழில், கட்டுமானம் என்று பல பொறுப்புகள். விழிப்புணர்வுக்கு மட்டும் ஆண்களுக்கு ஒருவர், பெண்களுக்கு ஒருவர் என்று இருந்தனர்.

அப்பொழுது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மிக மிக முக்கியம்

விவசாயத்தில் ஜப்பானிய நடவு. கால்நடையில் கலப்பு – .டில்லி எருமை, காங்கேயம் பசு என்று கிராமங்களுக்கு வரும். சேவல்களும் உயர்ந்த ஜாதி வரும். அவர்கள் கேட்ட கேள்வி இப்பொழுது நினைவிற்கு வருகின்றது.

“:மாட்டுலே ஜாதி, சேவல்லே ஜாதி சொல்றீங்க. மனுஷன்கிட்டே ஜாதி இருக்குன்னா அப்போமட்டும் ஏதேதோ பேசறீங்க “

அவர்களுக்கா பேசத் தெரியாது !

ஆண்களுக்காக என்னுடன் பணியாற்றியவர் பெயர் திரு ருத்ர துளசிதாஸ். அவர் மட்டுமல்ல அவரது குடும்பமே காந்திக் குடும்பம். அப்படித்தான் சொல்லுவோம். அவருடைய தந்தை திரு ருத்ரப்பசாமி அவர்கள் மாவட்ட கல்வி அலுவலாக இருந்தார். பள்ளிகளுக்குத் தணிக்கைக்குச் செல்வது சைக்கிளில்தான். ஒருமுறை அவர் ஓர் பள்ளிக்குச் சென்ற பொழுது வாயிலில் இருந்த பியூன் அவரை வெளியில் உட்கார வைத்துவிட்டான். தலைமை ஆசிரியர் வேறு வேலையில் இருப்பதாகக் கூறினான். சிறிது நேரம் கழித்து தலைமை ஆசிரியர் வெளியில் வந்தார். இவரைப் பார்க்கவும் பதறிப்போனார். இவருக்காகத்தான் காத்திருந்தார். பியூனைத் திட்டினார். உடனே அவரோ, “அவன் அவனுடைய கடமையைச் செய்தான்” என்றார். அவருடைய எளிமையான தோற்றம் அவரை அதிகாரியாக நினைக்கத் தோன்றவில்லை. இவரும் தன்னை யாரென்று கூறிக் கொள்ளவில்லை. இச்செய்தியைப் பலர் கூறக் கேட்டிருக்கின்றேன். துளசிதாஸ் வீட்டில் எல்லோரும் கதர்தான் உடுத்துவர். வீட்டு வேலையெல்லாம் இவர்களே செய்துகொள்வர். எல்லோருக்கும் இராட்டை நூற்கத் தெரியும்.

எனக்கும் இராட்டை நூற்கத் தெரியும் . நூல் நூற்று கதர்க் கடையில் கொடுத்து துணி வாங்கியிருக்கின்றேன். சிறு வயது முதல் கதர்த் துணிதான் உடுத்தியிருந்தேன். இந்த வேலையிலும் கிராம சேவக்குகள், சேவிக்காக்கள், சமூக நல அமைப்பாளர்கள் எல்லோரும் கதர்தான் உடுத்துவோம். மாநில அளவில் இருந்த அதிகாரியின் பெயர் திரு. வெங்கடாஜலபதி. அவர் ஐ.ஏ.எஸ் படித்தவரல்ல. காந்தீயவாதி.

ருத்ரதுளசிதாஸ்

இவரைப் பற்றிக் கூறியாக வேண்டும். இவர்தான் என்னைப் பத்திரிகை உலகில் நுழைய வைத்தவர். பள்ளியில் படிக்கும் பொழுதே  கதைகள், கவிதைகள் எழுதுவேன். இருப்பினும் இவரால்தான் பத்திரிகைக்கு அனுப்பினேன். வாடிப்பட்டியில் நாங்கள் ஆறு பேர்கள் எழுத்தாளர்கள். எங்களுடன் இருந்த சோம மகாதேவனின் கதைகள் 300க்கு மேல் பத்திரிகைகளில் வந்திருக்கும். துளசி அவர்கள் எனக்கும் ஓ.எஸ். கிருஷணமூர்த்திக்கும் மரபுக் கவிதை எழுதக் கற்றுக் கொடுத்தார். மதுரை மாவட்டம் என்று வந்தால் திரு நா. பார்த்தசாரதியும் எங்கள் வட்டத்தைச் சேர்ந்தவர். நாங்கள் எல்லோரும் ஒர் சிறுகதைத் தொகுப்பு புத்தகம் வெளியிட்டோம். எங்கள் கதை ஓர் நீண்ட கதை. துளசிதாஸ் அவர்கள் இந்த வேலையை விட்டு ஆசிரியர் பணிக்குச் சென்று விட்டார். பின்னர் 49 புத்தகங்கள் வெளியிட்டிருக்கின்றார். ஏழு மொழிகள் தெரியும். சாகித்ய அக்காடமி முதல் பல விருதுகள் பெற்றவர். இப்பொழுதும் புதுச்சேரியில் இருந்து கொண்டு ஏதாவது மொழிபெயர்ப்பு நூல் எழுதிக் கொண்டிருக்கின்றார். இப்பொழுதும் என்னை எழுதத் தூண்டிக் கொண்டிருப்பவர் நான் பத்திரிகைகளில் எழுதுவதை நிறுத்தியது அவருக்கு வருத்தம்.

அவரைப்பற்றி இங்கு தனிப்பட்ட முறையில் கூறியதற்குக் காரணம் பத்திரிகை உலகின் அறிமுகத்திற்கு இவர்தான் காரணமாக இருந்தார். நான் ஓர் போராளி என்று ஏற்கனவே சொல்லியிருக்கின்றேன். நான் எதிர்த்துப் போராடும் களம் மிகப் பெரியது. என் பக்கம் நின்றவர்கள் பத்திரிகை உலகைச் சேர்ந்தவர்கள். 1967 ஆண்டுல் வந்த பெரிய ஆபத்திற்கும் எனக்கு பத்திரிகை உலகம்தான் உதவிக்கரம் நீட்டியது. என் பணிக்காலம் முழுவதும் எனக்குப் பக்கத்துணையாக இருந்தவர்கள் அவர்கள்தான். பத்திரிகை உலகம் தெரிந்தால் நம் எழுத்து நிறைய பத்திரிகைகளில் வர முடியும். ஆனால் என்று இவர்களுடைய நட்பு வளர்ந்ததோ நான் கதை எழுதுவது நின்றுவிட்டது. என்னுடைய எந்தத் தொடர்புகளும் என் பணிக்குத்தான் பாதுகாவலாக உபயோகித்துக் கொண்டேன். தொடர் வாசிக்கும் பொழுது விபரங்கள் வரும். இப்பொழுது பணிக்களம் செல்லலாம்.

ஊரக வளர்ச்சித் துறையில் சமூக நல அமைப்பாளர் (பெண்) ஒருவரும் இரு கிராம சேவிக்காக்களூம் மகளிர் நலப் பணிகளுக்குப் பொறுப்பாவார்கள்.  முக்கியமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதும் பயிற்சிகள். நடத்துவதும் செய்ய வேண்டும். ஓர் ஊராட்சி ஒன்றியத்திற்கு நான்கு மகளிர் மன்றங்கள் என்று நிர்ணயிக்கப் பட்டிருந்தன. இந்த மகளிர் மன்றங்கள் சிறப்பாக செயல்பட்டது என்று கூறமாட்டேன். கிராமப் பெண்கள் அதிகாலையில் வயல் வேலைக்குப் புறப்பட்டு அந்திமாலையில்தான் திரும்பவார்கள். இரவில்தான் சமையல் வேலை. இரவு 9 மணிக்கு எப்படி மகளிர் மன்றம் நடத்த முடியும் ?  பெண்கள் தனியாக இரவு நேரங்களில் நடந்து போய் வர முடியாது. வயல் வேலைக்குப்  போகாதவர்கள் உண்டு. அவர்கள் வீட்டில் கூட்டம் போடுவோம்.

முக்கியமாகச் சொல்ல வேண்டியது

1.  பழகிய பல நல்ல பழக்கங்களை மாற்றுதல் கூடாது

2. அர்த்தமுள்ள, பயனுள்ள புதிய வழிகள் கூறப்படும் பொழுது மாற்றிக் கொள்ள வேண்டும்

கைக்குத்தல் அரிசி உபயோகம் நல்லது. காய்களைக் குழம்பில் போட்டு சாப்பிடுவதால் காய்களில் இருக்கும் சத்து போகாது. எண்ணையில் வதக்கி சாப்பிடும் பழக்கத்தை வளர்க்க வேண்டாம். வீட்டு வைத்தியம் பல நல்லவைகள் இருக்கின்றன. மறந்துவிடாமல் தொடர்ந்து பழக்கத்தில் இருப்பது நல்லது. இது போன்று பல பழைய நல்ல பழக்கங்களைக் கைவிடல் கூடாது படித்து என்ன ஆகப் போகின்றது என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும். வேலைக்கு என்று இல்லா விட்டாலும் உலக நடப்புகளைத் தெரிந்து வைத்துக் கொள்ள கல்வி அவசியம்  (இதனை என்னிடம் நேரில் பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் கூறிய அறிவுரை) பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டு இடையில் நிறுத்துதல் கூடாது. பிள்ளைகள ஊக்குவித்து அனுப்ப வேண்டும். (school dropouts)) இக்குறை அமெரிக்காவிலும் இருக்கின்றது.

கர்ப்பிணி பெண்களை முதலிலேயே மருத்துவர்களிடம் கூட்டிச் சென்று காட்ட வேண்டும். அவர்களுக்கும் ஓர் தடுப்பூசி உண்டு. குழந்தை பிறந்த பிறகு குழந்தைக்கு தடுப்பூசி முதல்முறை போட்டால் மட்டும் போதாது. தொடர்ந்து போட்டுக் கொள்ள வேண்டும். இவைகளால் பிரசவ காலத்தில் பெண்கள் மரிப்பதும் குழந்தகளாக இருக்கும் பொழுது மரிப்பதும் குறையும். (maternal mortality and infant mortality ) இவ்விஷயத்தில் நம் நாடு நல்ல முன்னேற்றத்துடன் சென்று கொண்டிருந்த்து. பல வெளி நாட்டுத் திட்டங்களும் இருந்தன. இப்பொழுது மீண்டும் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம். நிலைமையைச் சீராக்க அரசு முயற்சி செய்து கொண்டிருக்கின்றது.

அரசு திட்டம்  போட்டால் மட்டும் போதாது. பொதுமக்கள் இதன் அவசியத்திப் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு தர வேண்டும். யார் நன்மைக்காக என்பதனைப் பெரியவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இது போன்ற விஷயங்களைப் பற்றி மகளிர் மன்றங்களில் கலந்து ரையாடல் இருக்கும்.

நான் வேலை பார்த்த வாடிப்பட்டி வட்டாரத்தில் இரண்டு மகளிர் மன்றங்கள் மேற்சொன்னபடி நடந்தன. மற்ற இரண்டும் தலித் மக்கள் வாழும் பகுதியில் வைத்துக் கொண்டேன். மேலக்கால் பெரிய கருப்பன் அங்கேதான் பழக்கமானான். இரவில்தான் பெண்களைச் சந்தித்துப் பேசுவேன். அவர்களுக்குப் பிரச்சனைகள் கொஞ்சம் வித்தியாசமானது. வேலை பார்க்கும் இடங்களில் சரியான கூலி கொடுக்காவிட்டாலும் நான் அங்கு சென்று வாதிடுவேன். இவர்கள் வாழும் பகுதியில் சில பிரச்சனைகள். உதாரணத்திற்கு ஒருவர் வீட்டுக் குப்பையை அடுத்த வீட்டுப் பக்கம் தள்ளி விடுவார்கள். பெரிய சண்டை வரும். இந்தச் சண்டைகளையும் தீர்த்து வைத்திருக்கின்றேன். குப்பைக் குழி வெட்டி குப்பையைக் கொட்டச் சொல்லி இருக்கின்றேன்.

கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி இருக்கின்றேன். சாதி என்பது மனுஷன் வச்சது, தாழ்வு மனப்பான்மை கூடாது என்று நம்பிக்கையை வளர்ப்பேன். அவர்களை முதலில் மனம்விட்டுப் பேசச் சொல்வேன். புருஷன் குடிப்பதிலிருந்து அவனுடைய கள்ள உறவுகள் வரை என்னிடம் தங்கள் பிரச்சனைகளைக் கூறுவார்கள். குடும்பங்களில் சமரசம் செய்து வைப்பேன்.

இப்படி செய்யக் கூடிய வேலைகளுக்குப் பின்னால் காட்ட அளவுகோல் கிடையாது. அன்றாட வாழ்க்கையை ஒட்டி வருவதும் போவதுமான இது போன்ற பணிகளுக்கு நிரந்தர அடையாளம் கிடையாது .விழிப்புணர்வு முகாம்களை ஏற்பாடு செய்ய அலைந்ததுதான் தெரிந்தது. தோரணம் கட்டவும் கோலங்கள் போடுவதும்தான் வேலை யென்றும் அலையும் அலங்காரப் பொம்மைகள் என்ற பழியும்தான் பரிசாகக் கிடைத்தன.

விழிப்புணர்வுக்காக ஒரு சிறப்புத் திட்டம் இருந்தது. தமிழ் நாட்டில் இரு வட்டாரங்களுக்கு மட்டும் வண்டி ஒன்று கொடுத்து பிரச்சார படங்களைக் கிராமங்களில் போட்டுக் காட்டப் பணித்தனர். அந்த இரண்டு வட்டாரங்களில் வாடிப்பட்டியும் ஒன்று. படம் மாறும் பொழுது இடையில் மைக்கில் நாங்கள் சொல்ல நினைப்பவைகளைப் பேசுவோம்.  ஒரு காலத்தில் திரை அரங்குகளுலும் அரசு எடுத்த படங்கள் செய்திப் படங்களாக வந்து கொண்டிருந்தன. பின்னர் அவைகள் வருவது நின்று விட்டது.

அக்காலத்தில் திட்டப்பணிகள் பற்றிய பிரச்சார நாடகங்கள், கதாகால ஷேபங்கள், வில்லுப்பாட்டு என்று நாங்களே நிகழ்ச்சிகள் தயார் செய்து மேடையில் அரங்கேற்றுவோம். பணியாளர்களுக்கு ஏதாவது காரணத்தினால் மேடை ஏற முடியவில்லை யென்றால் மற்ற வர்களைக் கொண்டு நிகழ்ச்சிகள் நடத்துவர்.

வாடிப்பட்டியில் நான் பணியாற்றிய பொழுதுதான் ஆனந்த விகடன் மணியன் அந்த வட்டார வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட வந்தார். அப்பொழுது விகடனில் வளர்ச்சிப் பணிகள் பற்றி ஓர் தொடர் வந்தது. அன்று ஏற்பட்ட அறிமுகம் குடும்ப நண்பர்களாகி அவர் மரிக்கும் வரை நட்பு நீடித்தது. அவரைப் பற்றிய விமர்சனங்களை நானும் கேள்விப் பட்டிருக்கின்றேன். இந்தத் தொடரில் அவரைப் பற்றி எழுதும் ஓர் நிகழ்ச்சி வரும் அப்பொழுது விளக்கமாக எழுதுவேன்.

மகளிர் நலத்துறைத் திட்டம் ஆரம்பத்தில் பரவலாக இருக்கவில்லை என்பதை ஏற்கனவே கூறியுள்ளேன். ஆனால் அதன் பின்னர். திருமதி பாரிஜாதம் நாயுடு அவர்கள் செய்த விரிவான ஆய்வறிக்கை இருந்தமையால் ஒருங்கிணைப்பு ஒன்று நிகழ்ந்தது  எல்லாக் கிராமங்களிலும் மகளிர் நலத்துறை தன் கடமையைச் செய்ய ஆரம்பித்தது. வேறு எந்த மாநிலைத்திலும் இல்லாத அமைப்பு தமிழ் நாட்டில் மட்டும் அமைந்தது.

இதை எழுதிவரும் பொழுது என் மனப்பறவை என்னை உசுப்பிக் கொண்டே இருந்தது. வெறும் புகழ்ப் பாட்டு பாடிக் கொண்டிருப்பது சரியா? நிச்சயம் இல்லை. அலைபாயும் மனத்தினைக் கொண்டவன் மனிதன். சுதந்திரப் போராட்ட காலத்தில் பிறந்த எழுச்சியின் வேகம் குறைய ஆரம்பித்ததை உணர முடிந்தது. பணக் கரன்ஸியில் காந்தியின் படம் போட்டு திருப்தி அடைந்தான். அவருக்குச் சிலைகள் எழுப்பியதில் கடமை முடிந்துவிட்டது என நினைத்தானோ என்று எண்ணும் அளவு காந்திஜியின் மணம் குறைந்து வருவதையும் காலத்தில் உணர்ந்தேன். சுய நலமும் சுரண்டலும் அவனுக்குப் பிடிக்க ஆரம்பித்தது. இல்லை இல்லை. அவைகள் இரண்டும் மனிதனைப் பிடித்துக் கொண்டு விட்டன. இந்த மாறுதலுக்கு எந்த விழிப்புணர்வுத் திட்டமும் தேவையாக இருக்கவில்லை. இனி அப்பக்கத்தினையும் கொஞ்சமாவது காட்டிக் கொண்டு எழுதினால்தான் வாழ்வியல் வரலாற்றிற்கு ஓர் அர்த்தமுண்டு என்பதை உணர ஆரம்பித்தேன். பார்க்கலாம். எந்த அளவு உண்மைகளை எழுத முடியும் என்று எனக்கே தெரியாது. ஆனால் நிச்சயம் முயற்சி செய்வேன் என்பதனை மட்டும் உறுதியாகக் கூறுகின்றேன்.

ஒரு பக்கம் வளர்ச்சியின் வேகத்தையும் பார்த்தேன். அதே நேரத்தில் சில ஆண்டுகளுக்குப் பின்னர் சரிவையும் மெலிதாக உணர முடிந்தது . அரசியல் வாடை வீச ஆரம்பித்தது. ஊடகங்களின் தாலாட்டில் மனிதனின் தெளிந்த அறிவு மயங்கி உறக்கம் கொள்ள ஆரம்பித்தது. எக்காலத்திலும் வரலாறு நீரோடையாகவே சென்று கொண்டிருந்தது என்று சொல்ல முடியாது. சீறிவந்த காட்டாற்றில் ஏற்பட்ட அழிவுகளும் வடுக்களை விட்டுச் சென்றிருப்பதை நாம் பார்க்கத்தான் செய்கின்றோம்.

நான் சமுதாய நல விரும்பி. உளவியலும் சமூகவியலும் கற்றவளும் கூட. எனவே  சாடுதலைவிட குறைகளைச் சுட்டிக் காட்ட விரும்பு கின்றேன். கத்திமேல் நடப்பது போன்ற நிலை. முயற்சி செய்வதில் தப்பில்லை

அடுத்து விரிவாக அதனையும் பார்க்கலாம்

“குறையில்லாத மனிதன் இல்லை. ஆனால் எதிராளியின் குறைகளை மட்டுமே மிகைப்படுத்துகிறோம். இதனால் வெறுப்புணர்வு அதிகமாகிறது. கருத்து ஒற்றுமை கொண்டவர்களிடம் விட்டுக் கொடுப்பது பெரிதல்ல. முரண்பட்ட கருத்து உடையவர் என்றாலும் விட்டுக் கொடுப்பதே சகிப்புத் தன்மை. சவால்களை எதிர்கொண்டு வாழக் கற்றுக் கொள்வதே சரியானது.”

 

(தொடரும்)

 

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 18 வைகாசி வாழ்த்துபஞ்சதந்திரம் தொடர் 48
author

சீதாலட்சுமி

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    It is baffling to see how the writer can recollect past events in such a detailed manner. The writer is not only a warrior for social causes, but also a highly talented writer. In this episode she has recollected how she started her career in the literary field. Her services among women especially in the villages is remakable. She seems not to be tired travelling from village to village. She seems to be a heroine among the village folks. She has lived a life of selfless service for the upliftment of women,poor,illiterate and the downtrodden people. But sadly such people of her calibre are no more in our present era. As a result of the continuing poverty, greed for quick riches has led people towards corruption which has become the norm of the day.Politics has taken over social activities. As a result there is more division based on political parties and caste differences in our villages. Hence development is being retarded.Gandhi once said that he sees India in the villages. Sadly the villages of India are the same today as they were before independence. This is because we still lack honest leaders to lead the masses…Looking forward to read and learn more from your experiences MADAM!…Dr.G.Johnson.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *