வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 19

This entry is part 2 of 32 in the series 1 ஜூலை 2012

 

ஊறெரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டில்

ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்

 

நாட்டுக்காக விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் அதன் எழுச்சியின் வேகம் கூட்டுப் பறவையாக இருந்த பெண்ணை வெளியில் எட்டி பார்க்க வைத்தது. “பெண் விடுதலை” என்ற புதுப்பாட்டும் ஒலிக்க ஆரம்பித்தது. அப்படியென்றால் அவள் வாழ்ந்து வந்தது சிறைக்குள்ளா? வேறு பெயர் வைத்திருக்கலாமோ ?

பெண் கல்வி, பெண் சுதந்திரம் என்று ஆரம்பித்தால் இதிகாசமும் இலக்கியமும் வரலாறும் போட்டி போட்டுக் கொண்டு சில நிகழ்வுகளைக் காட்டி பெண்கள் சுதந்திரமாக இருந்தனர் என்ற முழக்கம் ஒலிக்கும்.

மன்னன் சபையில் நீதி கேட்டுப் போராடி மதுரையை எரித்த கண்ணகி

மன்னர்களிடையே தூது சென்ற ஒளவைப்பிராட்டி

மணம் நடக்காவிட்டாலும் மணம் பேசப்பட்டவன் மாண்டதும் மணம் மறுத்து தனி வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த திலகவதி

மனைவியின் சிறப்பைக் கண்டு அச்சத்தில் ஓடிய கணவன் வேறு ஒரு பெண்ணை மணந்து குடும்பம் நடத்துவதைப் பார்த்து உடனே துறவறம் முடிவைத் தானே எடுத்த காரைக்கால் அம்மையார்

இன்னும் பலரை எடுத்துக் காட்டாக கொண்டு வந்து விடுவார்கள்

இதிகாசம் காலம் மட்டுமென்ன?

கற்புக்கு எத்தனை முறை பரீட்சை? இந்த மண்ணில் மேல் இருப்பதைவிட மண்ணுக்குள் புதைந்து விடலாம் என முடிவெடுத்து பூமிக்குள்போன சீதை.

மனைவியை வைத்து சூதாடிய கணவர்களுக்கு முன் விரித்த கூந்தலுடன் சபதம் செய்த பாஞ்சாலி.

எத்தனை எடுத்துக்காட்டுக்கள் வந்து என்னை மிரட்டும் என்று தெரியும். பரவாயில்லை. சொல்ல வந்ததைச் சொல்லி விடுகின்றேன்.  ஒரு பிரச்சனையைப் பேசும் பொழுது பிரச்சனையின் அளவு கோலைப் பார்த்து மதிப்பீடு செய்தல் வேண்டும். சுதந்திரமாக முடிவு எடுக்க முடியாத நிலை. கணவன் எப்படி நடந்தாலும் கண்ணீர் விடுவதைக் கூட ரகசியமாய் செய்தல் வேண்டும். கணவன் முன் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். இன்னும் நிறைய எழுதலாம். கருவிலே சாகடிப்பது முதல் சிறுமியாயினும் சிதைக்கப் படும்வரை பேசலாம்.

மாறி வரும் காலத்தில் எடுத்து வைக்கும் அடிகள் கவனச் சிதறல்களுடன் செய்தல் கூடாது. ஓர் வீடு நன்றாக இருந்தால் நாட்டிலும் அமைதி இருக்கும். எனவே பெண்ணின் நலனில் கவனம் கொண்டு அதற்கான முயற்சிகளின் தொடக்கம்,  விடுதலைப் போராட்ட காலத்தில் ஆரம்பித்தது அர்த்தமுள்ளதாக அமைந்தது.

ஆய்வும் அனுபவமும் தொடரத் தொடரப் பணிகளின் எல்லையும் விரிவடைய ஆரம்பித்தது. சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கும், ஊனங்களில் காரணமாக இயலாமையில் தவிப்பவர்களுக்கும் புனர்வாழ்வு கொடுக்கும் சமுக நல சேவை யுணர்வு மலர்ந்தது.. ஆர்வத்திற்கும் அவசியத்திற்கும் ஏற்ப நிறுவனங்களும் தோன்றின. (ஊனமுற்றோருக்கு இப்பொழுது சொல்மாற்றுத் திறனாளி. அக்காலத்தைப் பற்றிப் பேசுகின்றேன். ஊனம் என்பதில் பல அர்த்தங்களில் கையாளுவதால் நான் இந்தச் சொல்லை உபயோகிக்கின்றேன்).  மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள் இல்லம் பராமரிப்பது எளிதல்ல (mentally retarded home ) நடத்துபவர்களின் மனோ நிலையும் முக்கியம் அனுதாபம் மட்டுமல்ல, அன்பு இருக்க வேண்டும்.

மதுரையில் ஓர் இல்லம் உண்டு அதை நடத்தியவர் பெயர் திருமதி. மேரி தங்கராஜ். அவர்கள் சொந்த வாழ்க்கையிலும் ஓர் சோதனை உண்டு. எனவே அவரது ஈடுபாடு மலைக்க வைத்தது. அதற்காக வேதனைப் பட்டவர்கள்தான் இத்திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் என்று சொல்லவில்லை. கருணை முக்கியம். குழந்தைகளைக் கவனிக்க, பணி புரிபவர்களை சாமர்த்தியமாக வழி நடத்தத் தெரிய வேண்டும்.அல்லது அந்தக் குழந்தைகளுக்கு மன வியாதி யுடன் பல வியாதிகள் வந்துவிடும்.

ஓர் முதியோர் இல்லம். பெயர் பெற்ற இல்லம். அங்கு நானும் புனிதம், ருக்மணி மூவரும் சென்றிருந்தோம். முதியோர்களுக்குஒரு அறை ஒதுக்கப்பட்டு கட்டில்கள் போடப் பட்டிருந்தன. அவர்களுக்குக் கழிப்பறை ஒன்றுதான்.  ஓர் முதியவர் என்னிடம் புலம்பியது “நாங்கள் வயதானவங்க. எங்களுக்கு வயசாச்சு. அடிக்கடி ஒண்ணுக்குப் போவோம். இருக்கறது ஒரு கக்கூஸ். வரிசையா நின்னு போகணும்னா முடியல்லே. நிக்கற இடத்தை அசிங்கப் படுத்திடிவோம். ராத்திரியிலே கவனிக்க யாரும் இல்லே. இருக்கற கக்கூஸும் உடைஞ்சிருக்கு. என்னிக்கு என்ன ஆகுமோ ?”  இந்தப் பிரச்சனையை எப்படி அணுகுவது. ? அந்த அம்மா சொன்ன மாதிரி விழுந்து விட்டார்கள் பின் படுக்கையில். இப்பொழுது அதிலும் கொடுமை. ட்யூப் ஏற்பாடு செய்திருந்ததும் சரியாகக் கவனிக்கப்படவில்லை. பலன் நீர் வரும் பாதை புண்ணானது. வலியால் துடித்தார்கள். ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார்கள். இன்னும் நிறைய செய்திகள் உண்டு. இது முதியோர் இல்ல நிலைமை.

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குழந்தைகள், ஆஸ்பத்திரியில் பிறந்தவுடன் விடப்பட்ட குழந்தைகள் நலனுக்காக இருக்கும் இல்லமும் மிக மிகக் கவனத்துடன் கவனிக்கப்பட வேண்டும். பெற்றவளே பல இடங்களில் சரியான அக்கறை காட்டாமல் இருப்பதைப் பார்க்கலாம். அதனால் குழந்தைகளுக்கு நோய், மரணம் ஏற்படும். சென்னையில் இருக்கும் பால மந்திர் ஒரு காலத்தில் 500 குழந்தைகள் வரை வைத்துப் பராமரிக்கப்பட்டது. இப்பொழுதும் 300 குழந்தைகள் இருக்கின்றன. இது போன்ற இல்லங்கள் இப்பொழுது பல வந்து விட்டன.  அதனை நடத்திய மஞ்சு சுபாஷிணியை மறக்க முடியுமா? இத்தகைய இல்லம் நடத்த கருணையுடன் நேர்மையும் அக்கறையும் வேண்டும். இதன் தன்மை யாவரும் அறிவர்.

இந்த இல்லம்பற்றிய இரு செய்திகள் கூறுவது முக்கியம்

திரு . காமராஜ் அவர்கள் முதல்வராக இருக்கும் பொழுது விழா நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் தருணம் மரியாதைக்குத் துண்டுகள் போர்த்துவார்கள். ஓர் இடத்தில் ஒருவன் ஒரு துண்டை எடுத்து வைத்துக் கொண்டான். விழா முடிந்து திரும்பும் பொழுது அவனைக் கூப்பிட்டு கண்டித்தவர் திரு காமராஜ். அந்த துண்டுகள் அனைத்தும் பால மந்திருக்குக் கொடுக்க வேண்டும் என்றும் அதைக் கூடவா சுயநலத்தில் சுரண்டுவது என்று கோபித்துக் கொண்டார். இவரல்லவா தலைவர் என்று சொல்லத் தோன்று கின்றது. இன்று அரசியல்வாதி மட்டுமல்ல யாராயினும் எல்லாம் தங்களுக்கே என்று அள்ளி வைத்துக் கொள்ளும் அற்ப குணம் பார்க்கின்றோம். இது நான் பத்திரிகையில் படித்த செய்தி.

இன்னொரு செய்தி, எழுத்தாளர் ஆர். சூடாமணி பற்றியதாகும் யாராலும் அவருடைய எழுத்தை மறக்க முடியாது. பெரும்பாலும் உளவியல்பற்றியதாக இருக்கும். உள்ளத்தைத் தொடும்.  உணர்ச்சிகரமானவை. அவர் எழுத்தில் வந்த பணம், அவருக்குக் கிடைத்த சொத்து எல்லாவற்றையும் பால மந்திருக்குக் கொடுத்தார்.

நூற்றுக்கணக்கான குழந்தைகளைப் பராமரிக்கும் அந்த இல்லம் நடக்கும் விதத்தைப் பார்த்தாலே அந்த நிர்வாகி முதல் பணி செய்கின்றவர்கள்வரை ஆத்மார்த்தமாகச் செயல்படுவது தெரியும் அதனால்தான் பெரியவர்கள் அவர்களாகவே தங்களுக்குக் கிடைப்பதை அந்த நிறுவனத்திற்குக் கொடுத்தனர்

தொண்டு நிறுவனங்கள் நடத்த ஆர்வம் மட்டும் போதாது. நிதியாதாரம் வேண்டும். நிறுவனம் இயங்கும் இடம் போதுமானதாகவும் வசதிகள் உள்ளதாகவும் இருக்க வேண்டும். பணியாற்றுபவர்களின் வேலை சாதாரணமானதல்ல. அக்கறையுடன், கவனத்துடன் பணி புரிய வேண்டும். அவர்கள் சரியாக பணிபுரிகின்றார்களா என்று கண்காணிப்பவரும் வேண்டும். அவரும் வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர கண்டித்து தண்டித்து விடுபவராய் இருத்தல் கூடாது.

அரசு நடத்தும் ஓர் பணியில் நடந்தவற்றைக் கூறூகின்றேன்.

சென்னையில் நடந்தது. அப்பொழுது நான் இயக்குனர் அலுவலகத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றி வந்தேன்.

இருள் கவிய ஆரம்பித்துவிட்டது. ஒரு சிலர் மட்டும் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தோம். எங்கள் இயக்குனரும் அவர் அறையில் இருந்தார். திடீரென்று என்னைக் கூப்பிட்டனுப்பினார். நான் அவர் அறைக்குச் சென்றேன். அந்த அறையில் வெளிப்புறத்தில் சிலர் நின்று கொண்டிருந்தனர். நான் போகும் பொழுது அவர்கள் கோபமாகத் திட்டுவதைக் கேட்டேன். எங்கோ ஏதோ தவறு நடந்திருகின்றது என்பதை அவர்கள் கோபக் குரல் உணர்த்தியது.

இயக்குனர் அவர்கள் செய்தியைக் கூறி உடனே கவனிக்கும்படி கூறினார்கள். விஷயம் இதுதான்

நகரச் சேரியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் குழந்தையின் மரணம். அதற்கு மூன்று வயதிருக்கலாம். நல்ல சளி.காய்ச்சலும் இருந்திருக்கின்றது. பள்ளி ஆசிரியை அதற்கு மாத்திரை கொடுக்கும்படி பள்ளி ஆயாவிடம் சொல்லியிருக்கின்றாள். குழந்தையால் மாத்திரை விழுங்க முடியவில்லை. தண்ணிர் குடிக்க முயற்சி செய்திருக்கின்றாள். அது மூச்சு திணறிச் செத்து விட்டது. வெகு நாட்களுக்குப் பின் பெற்றோருக்குக் கிடைத்த பிள்ளைச் செல்வம். குப்பமே கொதித்து எழுந்தது. ஆசிரியையும் ஆயாவையும் பள்ளிக்குள் வைத்து பூட்டிவிட்டனர். வெளியில் கூப்பாடு. பள்ளிக் கூடத்தையே கொளுத்தி அவர்களைக் கொல்ல கூட்டத்தில் சிலர் முயன்றனர். போலீஸுக்குத் தகவல் போய் அங்கே சென்று அவர்களை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்துவிட்டனர். குப்பத்து மனிதர்களும் பலர் காவல் நிலையம் வந்தனர். இப்பொழுது இயக்குனருக்கு நடந்ததைக் கூறி மேல் நடவடிக்கை எடுக்க, காவல் நிலையத்திலிருந்து ஒருவரும் அவருடன் குப்பத்து மனிதர்களில் சிலரும் புகார் கூற வந்திருந்தனர். அதைத்தான் என்னை விசாரிக்க உத்திரவு

சமூக நலத்துறையென்றால் அது பொழுது போக்கும் சாதாரணத் துறை இல்லை. பல குற்றங்கள் நடக்கும் இடம் செல்ல வேண்டும். விசாரணை செய்து ஆவன செய்ய வேண்டும். குறை காணும் இடங்களில் அதனைச் சரிவரக் கண்டு அவைகளைக் களைய வேண்டும்.

நான் காவல் நிலையம் சென்றேன். பெற்றவன் ஒரு பக்கம் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான். பல வருஷங்களுக்குப் பிறகு கிடைத்த மகனை இழந்திருக்கின்றான். அவன் வேதனை மகாக் கொடிது. நான் அங்கு செல்லவும் குப்பத்தினர் கூச்சல் போட்டனர். நான் ஊழியர்களிடம் போய் விசாரித்தேன். குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லையென்றால் கவனிக்க ஏ.என்.எம் இருக்கின் றார்கள் அவர்கள் அறிவுரைப்படி அந்த டீச்சர்தான் செய்ய வேண்டும். அவளுக்குத்தான் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கின்றது. அவளோ பொறுப்பை ஆயாவிடம் தந்துவிட்டாள். ஆயாவும் அதே குப்பத்தைச் சேர்ந்தவள்தான். குழந்தைக்கு அதிகச் சளி. கட்டாயப்படுத்தி யிருக்கக் கூடாது. புரையேறி குழந்தை இறந்துவிட்டது. வீடுகளிலும் இதே தவறுகள் நடக்கும். காரணம் அறியாமை. வேண்டுமென்று செய்யவில்லை. காரணம் எதுவானால் என்ன, சிகிச்சை என்று வரும் பொழுது அதிகக் கவனம் எடுத்துச் செய்தல் வேண்டும். இப்பொழுது போன உயிர் கிடைக்குமா? குப்பத்தினர் கொதித்துப் போயிருந்தனர். பெற்றவனைப் பார்க்கவும் எனக்கும் அழுகை வந்தது அருகில் சென்று கீழே உட்கார்ந்து அவனைப் பிடித்தேன். அவன் என் தோள்மேல் சாய்ந்து கொண்டு “அம்மா, என் குழந்தை எங்களை விட்டுப் போய்ட்டான். என் செல்லம். அஞ்சு வருஷம் கழிச்சுப் பொறந்தது. கொன்னுட்டாங்களே அம்மா.”  என்று கத்திக் கொண்டே என் தோள்மேல் சாய்ந்தான். பதில் கூற முடிய வில்லை. அவனைக் கட்டிக் கொண்டு நானும் அழுதேன். கத்த ஆரம்பித்த குப்பத்தினரின் சத்தம் குறைந்தது. அங்கே அதிகாரத்திற்கு இடமில்லை. அன்பும் பாசமும் தான் சக்தி வாய்ந்தவை. நான் நடிக்க வில்லை. மனிதா பிமானம் உள்ளவர்கள் யாராயினும் அழத்தான் செய்வார்கள்.

சில நிமிடங்கள் கழிந்தன.

“:நடந்தது பெரும் துக்கம்தான்பா. அந்த ஆயாம்மாவும் உன் மகனுக்கு நல்லது செய்யத்தான் முயற்சி செய்திருக்காங்க. வேணும்னு செய்யல்லே.(சலசலப்பு சத்தம் கூட ஆரம்பித்தது) ஆனாலும் ஒரு குழந்தையின் உயிர். இவங்களைக் கொன்னா குழந்தை திரும்ப கிடைக்குமா? அவங்க செஞ்ச தப்புக்கு என்ன தண்டனை கொடுக்கணுமோ அதை நாங்க பாத்துக்கறோம். இப்போ நீதான் முக்கியம். குழந்தையை விட்டு இங்கே உட்கார்ந்திருக்கியே. அவனுடன் இருக்கப் போவது கொஞ்ச நேரம்தான்.”

(அவன் சத்தம் போட்டு அழ ஆரம்பித்தான். கூட்டமும் சேர்ந்து கொண்டது)

“யாரும் சத்தம் போடுவதால் குழந்தையின் உயிர் வருமா ? அதுக்குச் செய்ய வேண்டியதைச் செய்யணும். இவர்கள் மேல் சட்டப்படி என்ன நடவடிகை எடுக்கணுமோ எடுப்போம். இப்பொழுது போலீஸை குழந்தை பிணத்தை ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போக விடுங்கள்”

மாட்டோம் மாட்டோம் மாட்டோம்.

போலீஸார் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். நான் எழுந்தேன். அவர்களிடம் சாமர்த்தியமாகப் பேச்சு கொடுத்து மவுனமாக்கினேன்.

“:அம்மா என் மகனுக்கு ஊசி போட்டால் கூட வலிக்கும் கத்தி அழுவான். இப்போ கத்தியாலே அறுப்பாங்களே.”

இது பெற்றவனின் கவலை. “குழந்தை இறந்துவிட்டதால் வலிக்காது” என்று சமாதானம் செய்துவிட்டு அவனையும் குப்பத்தைச் சேர்ந்த சிலரையும் என் வண்டியில் ஏற்றினேன். சிலர் காவலர்கள் வண்டியில் ஏறினார்கள் ஊழியர்களை அங்கேயே விட்டுவிட்டு மறுநாள் இயக்குனர் அலுவலகத்திற்கு வரச் சொல்லிவிட்டுப் புறப்பட்டோம்.

குப்பத்தில் மீண்டும் பிரச்சனை. பெற்றவள் கதறினாள். இப்பொழுது அழும் கணவன், குழந்தை வேண்டி இன்னொருத்தியிடம் போய்விடலாம் குழந்தையையும் இழந்து கணவனையும் இழந்து வாழும் நிலை பெண்ணுக்குத்தானே. அவள் நிலை மிகவும் பரிதாபகரமானது.

வாழ்க்கை விசித்திரமானது வேதனைகளும் சோதனைகளும் நிறைந்தது. கதைகளிலும் சினிமாக்களிலும் சுப முடிவைக் கொண்டு வரலாம். இங்கு யதார்த்த நிலை. உண்மை நினைத்தால் வலிக்கின்றது. என் அனுபவங்கள் எனக்குத் தந்த அடிகள் கொஞ்சமா? அத்தனை பட்டும் மரத்துப் போகவில்லை. இப்பொழுதும் பிறர் துன்பம் காணும் பொழுது வலிக்கின்றது. முன்பாவது பிறர் துயரம் களைய முயற்சி செய்ய முடிந்தது. இப்பொழுது முடமாகி வலிகளைத் தாங்கிக் கொண்டு வாழ வேண்டியிருக்கின்றது

குப்பத்தில் அடுத்த பிரச்சனை. ஜீப்பில் பிணத்தை ஏற்றக் கூடாது என்று சாத்திரம் பேசினான் டிரைவர். அவனை உடனே வேலையை விட்டு நீக்குவேன் என்றேன். அவனும் மனிதன். பின் அவனுக்குச் சமாதானம் சொன்னேன் செய்ய வேண்டிய சாங்கியங்களுக்கு நான் பணம் கொடுக்கின்றேன் என்றேன். எப்படியோ பிணத்தைத் தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றோம். அவர்களை மட்டும் அனுப்பி நான் சென்றிருக்கலாம். பிணத்தைச் சேர்ப்பதி லிருந்து மீட்பது வரை பல பிரச்சனைகள் வரும். அவைகளுடன் அவர்களை அந்த ஏழைகளைப் போராடவைக்க மனமில்லை. நான் உடன் இருந்ததால் எல்லாம் விரைவில் முடித்தேன். நிர்வாகம் என்பது வெறும் கையெழுத்து போடுவது மட்டுமல்ல.

ஆர்வத்தில் தாங்களாகத் தோற்றுவிக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் பல பிரச்சனைகள் உண்டு. சரியான வழிகாட்டலும் சில இடங்களில் நிதி பற்றாக் குறையும் அவைகளைப் பாதித்தன இந்த சமுதாயத்திற்குத் தொண்டு நிறுவனங்கள் மிக மிக அவசியம் எல்லாவற்றையும் அரசே கவனித்தல் இயலாத காரியம். இது உலகம் முழுவதற்கும் பொதுவானது. எனவே இவைகளின் பாதுகாப்பிற்கும் வழி நடத்தலுக்கும் ஓர் அமைப்பு தேவை .இந்தியாவின் தொண்டு நிறுவனங்களுக்கு ஓர் வாரியம் தோன்றியது.

இதன் மூலவர் திருமதி துர்காபாய் தேஷ்முக். சமூக நலம் பற்றிப் பேசினால் இவர்களை நினைக்காமல்இருக்க முடியாது. அந்தளவு சமூகநலப் பணிகளுடன் அவர் பெயரும் பிணைந்து விட்டது. அவரைப் பற்றிக் கணினியில் வலம் வந்தால் நிறைய செய்திகள் பார்க்கலாம். எனவே இங்கே குறிப்பாக சில தகவல்கள் மட்டும் எழுதுகின்றேன்

தனிமனித இயல்புக்குப் பிள்ளைப்பருவ அனுபவங்கள் அடித்தளம் அமைக்கின்றது என்று ஏற்கனவே சொல்லிவருகின்றேன். துர்காபாய் தேஷ்முக் அவர்களூம் அதற்கு விலக்கல்ல. சிறுவயதில் திருமணம். அக்காலத்தில் பெண்கள் படிக்க முடியாத சூழல். அவர்களாலும் படிப்பைத் தொடர முடியவில்லை. பின்னர்தான் திறந்த வெளிக் கல்விச் சாலையில் படிப்பு தொடர்ந்து வக்கீல் படிப்பு முடிக்கும் பொழுது 44 வயதாகிவிட்டது. எனவே கல்வியின் அருமை தெரிந்தவர். வாய்ப்புகள் என்பது சிலருக்கு சிறப்பாக அமைகின்றது. அவருக்கும் அப்படியே. அவர் கணவர் திரு தேஷ்முக் டில்லி அமைச்சரானார். இவர்களும் திட்டக் கமிஷனில் இருந்தார் எனவே மத்திய சமுக நல வாரியம் அமைக்க முடிந்தது.

இவர்தான் சமூகநல வாரியத்தின் முதல் தலைவியாகும்.

சிறுவயதிலேயே சேவை மனப்பான்மை வளர இவருடைய தாத்தாவின் நண்பரும் ஓர் காரணம் அந்தக் காலத்தில் சமுதாய நலத்தில் பெண்கள் என்றால் காந்திஜியின் பெயரும் வந்துவிடும். இவர்கள் 12 வயாதாக இருக்கும் பொழுதே தேசியப் போராட்டத்திற்கு நிதி வசூல் செய்தார்கள் காந்திஜியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் சந்திப்பிலேயே கை வளையலைக் கழற்றி நாட்டு விடுதலைப் போராட்டத்திற்கு தந்தார். இவர் மட்டுமல்ல பல பெண்மணிகள் தங்கள் நகைகளைக் கழற்றி கொடுத்தது அன்றைய வரலாற்றில் முக்கியம். பெண் வீட்டைவிட்டு முதலில் வந்தாள். காந்திஜியின் தரிசனத்தில் ஓர் எழுச்சி உண்டாகி தன் அலங்காரத்தை எண்ணாமல் தன் நகைகளைக் கழற்றிய பல பெண்மணிகள் உண்டு.

காந்திஜியுடன் சிறிது நேரம் இருந்தாலும் போதும் அவர்கள் சமூக நல சேவைக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். இவர்களும் சுதந்திரப் போரட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றிருக்கின்றார். அக்கால வரலாற்று நாயகிகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் தொடக்கத்தில் காந்திஜியை நாம் காணலாம். சமுதாய அக்கறைக்கு வித்தூன்றப்பட்டுவிடும்.

சென்னை ஒரு காலத்தில் ஆந்திராவைச் சேர்ந்தவர்களுக்கும் சொந்தமாக இருந்தது. பல நிறுவனங்கள், தொழில்கள் சென்னையில் பார்க்கலாம். இவர்களால் சென்னையில் 1937 இல் ஆந்திரமகிள சபா தோன்றியது. இன்றும் செழித்து தன் சேவைகளைச் செய்துவருகின்றது. ஒரு சமயம் நானும் அங்கேயுள்ள முதியோர் இல்லத்தில் தங்க முடிவு செய்தேன். ஆஸ்பத்திரி வசதிகள் உண்டு. இவர்களின் நிர்வாகத்தில் கல்விக் கூடங்கள், அனாதை இல்லங்கள், தொழில் பயிற்சி மையங்கள் இயங்குகின்றன

சிறுவர்கள் கல்வியென்றால் அங்கே மாணவி மட்டுமல்ல, மாணவர்களுக்கும் பள்ளிகள் உண்டு. உடல் ஊனமுற்றோர் என்றால் அங்கே பெண்கள் மட்டு மல்ல ஆண்களும் உண்டு. மகளிர் நலம் என்று ஆரம்பித்தது சமூக நலம் என்ற பெயரைத் தாங்கி அதனில் மகளிர் நலத்தை முன்னிறுத்தியது. தனி மனிதனால் சமுதாயமும் சமுதாயத்தின் அரவணைப்பில் தனி மனிதனும் இருக்கின்றான். புது உயிர் படைக்கின்றவள் தாய். பிறந்த அந்த உயிரும் வளர்ச்சியை அடைவது அந்தத்தாயின் அரவணைப்பில். ஆக சமூதயத்தின் தாயே ஓர் பெண்தான். அவள் பிரச்சனையில் இருந்தால் சமுதாயத்தின் அமைதி குலைந்துவிடும். பெண்ணின் தெளிவிலே, அவள் வலிமையிலே சமுதாயம் இருப்பின் அது  ஆரோக்கியமானதாக அமையும். அமைதியும் அன்பும் ஒரு சேரக் கிடைக்கும்.

ஆந்திரமகிளசபாக் கட்டடத்திற்கு 1946ல் அடிக்கல் நாட்டியவர் நம் பிதாஜி காந்திமகான். நூறாண்டையும் தாண்டி தலை நிமிர்ந்து நின்று சேவைகளைச் செய்துவருகின்றன. கிராமப் புரங்களிலும் பெண்களுக்கு அடிப்படை கல்வி கொடுக்க ஆரம்பித்தது. ஆண்பெண் இருபாலாருக்கும் முதியோர் கல்வித் திட்டம் கொண்டுவந்து செயல்படுத்தியது.

பெண்களுக்குப் பால்ய விவாகம் செய்வதைத் தடுக்க ஆரம்பித்தது. பெண்ணின் அறியாமையைப் போக்க கல்வியுடன் பொருளீட்ட தொழில் கல்விக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களே ஓர் வழக்கறிஞர் என்பதால் குடும்பச் சண்டைகளைத் தீர்த்து அதனைச் சீராக்க கவுன்ஸ்லிங் மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.  இதன் கிளைகள் பல மாநிலங்களிலும் தோன்றின.

1953 இல் மத்திய சமூக நல வாரியம் இவர்களால் தோற்றுவிக்கப்பட்து. இதுவரை அவர்கள் பார்த்த, செய்த சேவைகள் இங்கே தொடர்ந்தன. எல்லா மாநிலங்களிலும் நிறுவிய தொண்டு நிறூவனங்களுக்கு ஓர் தாயகமாக இந்த வாரியம் அமைந்தது. நிறுவனங்களும் தயக்க மின்றி, தேவையான வழி காட்டலும் பெற்று இயங்க ஆரம்பித்தன. பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், ஊனமுற்றோர் நலனுக்காகாக் எந்தத் திட்டமும் வகுக்கலாம். எல்லா மாநிலங்களிலும் மாநில வாரியங்களும் அமைக்கப்பட்டன.  தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர ஆரம்பித்தது. இதற்குப் பொறுப்பாவர் திருமதி துர்காபாய் தேஷ்முக் அவர்கள். நல்ல பேச்சாளரும் கூட. ஒரு பெண்மணியிடம் சிறிது ஆர்வம் கண்டாலும் ஊக்குவித்து அவரைத் தொண்டு செய்யும் ஒரு சேவகியாக ஆக்கிடுவார். பல பயிற்சி நிறுவனங்களும் உருவாகின. நாடு முழுவதும் அவரால் சுற்ற முடிந்தது. சமூக நலப் பணிக்கு  அவர் ஓர் பக்க பலமாய் வாழ்ந்தார்.

ஆரம்ப காலத்தில் பார்வையற்றோர் நல சங்கத்தின் தலைவராக இருந்தார் அப்பொழுது அவர்களின் நலனுக்காகக் கல்விக் கூடங்கள், தொழில் பயிற்சிகள், தொழில் கூடங்கள் அமைத்தார். பின்னர் சமுதாயத்தில் அறியாமை இருளில் மூழ்கி பின் தங்கியிருப்பவர்களுக்காக வாரியம் அமைத்தார். பாராளுமன்ற உறுப்பினரானவுடன் சமுதாய நலனுக்குப் பல சட்டங்கள் வர ஆவன செய்தார். அவர் ஓர் போராளி. சிறந்த மேடை பேச்சாளர். குற்றவியல் வழக்கறிஞர். சத்தியாகிரஹப் போராட்டங்களில் கலந்து மும்முறை சிறைக்குச் சென்றவர். “:இரும்பு மனுஷி” ( IRON LADY ) என்று பெயர் எடுத்தவர். தன் மொழி பேசும் ஆந்திரா என்றோ, தான் வசிக்கும்  இடம் தமிழ் நாடு என்றோ நினைக்காமல் இந்தியா எனது நாடு, எல்லோரும் சீரிய வாழ்க்கை பெற வேண்டும் என்ற ஒருமித்த கருத்து, உயர்ந்த கருத்து கொண்டு தேசிய ஒருமைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக எல்லா மாநிலங் களையும் ஒரு குடைக்குள் வைத்துப் போற்றிக் காத்த வரலாற்றுப் பெண்மணி திருமதி துர்காபாய் தேஷ்முக். அவர்கள் தொடங்கிய ஆந்திர மகிள சபா நூற்றாண்டைக் கடந்துவிட்டது. மருத்துவம் மட்டும் கருதாமல் அனைத்து கோணங்களிலும் அதன் மூலம் சமுதாய நலன்களுக்கு வழி வகுத்தவர். பல விருதுகள் பெற்றவர்.  ஆம் சமுக சேவகர்கள் இந்த சமுதாய மருத்துவர்கள். அவருக்கு இந்த சமுதாயத்தில் ஓர் நிலைத்த பெயர் உண்டு

அடிக்கடி வாய்ப்பு பற்றி கூறி வருகின்றேன். துர்காபாய் தேஷ்முக், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, திருமதி அம்புஜம்மாள், இன்னும் பலரை நேரில் பார்த்திருக்கின்றேன். பேசி இருக்கின்றேன். எங்களுக்கு சொற்பொழிவு ஆற்றி யிருக்கின்றனர். எனக்கு சில மனக்குறைகள் உண்டு. காந்திஜியைப் பார்க்க முடியவில்லை. பாரதியும் நான் பிறக்கும் முன்னரே பறந்துவிட்டான். அவர்கள் எண்ணங்கள் எனக்குள் பதிவாகியிருக்கின்றன. அவர்கள் எழுத்தை எப்பொழுதும் மீண்டும் மீண்டும் படிப்பேன்

இத்தகைய சமூக நலவாரியத்தின் மாநிலக் கிளையான தமிழ் நாடு சமூக நல வாரியமும் மகளிர் நலத்துறையுடன் இணக்கப்பட்டது. திரு காமராஜர் முதல்வராக இருக்கும் பொழுது ஒரே நேரத்தில் பல கிளைகளில் செயல் பட்டுவந்த பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. சமூக நல வாரியத்தின் உறுப்பினர்கள் அரசியல் தேர்வல்ல. அக்களத்தில் சாதனைகள் புரிந்திருக்க வேண்டும். அக்கறை வேண்டும். எனவே மக்கள் பிரதிநிதியாக வாரியமும் அரசும் இணைந்து செயல்பட ஆரம்பித்த்து.

தமிழ்நாடு சமூக நல வாரியப் பணிகளை அடுத்துப் பார்க்கலாம்.

“தனி மனிதர்களால் சமுதாயமும், சமுதாயத்தால் தனி மனிதர்களும் காக்கப் பெறுகின்றனர். எனவே சமுதாயப் பொதுவான திட்டங்களும் நோக்கமும் ஒவ்வொரு தனி மனிதனுடைய நலத்திற்கும் பாதுகாப்பிற்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். தனி மனிதர் ஒவ்வொருவருடைய ஆற்றலும் தன் நலத்தைப் பேணுவதோடு சமுதாயத்திற்கும் ஆக்கம் தருவதாக இருக்க வேண்டும்.”

– வேதாத்ரிமகரிஷி

(தொடரும்)

படத்திற்கு நன்றி

 

 

Series Navigationமுள்வெளி அத்தியாயம் -15மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 32
author

சீதாலட்சுமி

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    The death of the 3 year old boy in the city slum and the problem that ensued and the way you have dealt to solve the problem shows your care towards the poor and your unequalled quality of patience. The narration about Mrs.DURGABAI DESHMUK is very inspiring for those of us who want to do something for the society. Though you are recollecting the past through these episodes they are valuable guidelines for the younger generation to be patriotic and contribute to the general welfare of the society. It is true that it is THE INDIVIDUAL WHO SAVES THE SOCIETY AND LIKEWISE THE SOCIETY SAVES THE INDIVIDUAL! Looking forward to read more of your youthful adventures in the upliftment of women,the poor and the total society!…Dr.G.Johnson.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *