இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
குழந்தைகளுக்குப் பாடிய குழந்தைக் கவிஞர்கள்
குழந்தைகளே நாட்டின் எதிர்காலச் சிற்பிகள். அவர்களால் தான் நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சி உள்ளிட்டவை நிர்ணயிக்கப்பட வேண்டும். நல்ல குழந்தைகள் நல்ல வலிமையான நாட்டை உருவாக்குவர். குழந்தைகளை வைத்தே ஒரு நாட்டின் தலையெழுத்து அமைகிறது. ஒரு சமுதாயத்தில் குழந்தைகளை மாற்றிவிட்டால் பின்பு அந்தச் சமுதாயக் கட்டுக்கோப்பே கலகலத்துவிடும். இதனை உணர்ந்துதான் மகாகவியும் மக்கள் கவியும் குழந்தைகளுக்காக எழுதினர். குழந்தைகளின் மனதில் நல்ல எண்ணங்களை ஆழப்பதித்துவிட்டால் அவற்றை எளிதில் மாற்ற முடியாது என்பதை நன்கு உணர்ந்த கவிஞர்கள் பல நற்கருத்துக்களடங்கிய பாடல்களை குழந்தைகளுக்காகப் பாடுகின்றனர்.
மகாகவி பாரதியார் குழந்தைகளுக்காகப் பாடியது பாப்பாப் பாட்டு, முரசு, ஆத்திசூடி ஆகியன ஆகும் என்று கூறுவர். பாப்பாப் பாட்டின் தோற்றுவாய் சுவை மிக்கது. அதை,‘என் தந்தை எனக்காக நான் செய்ய வேண்டியதற்கெல்லாம் அட்டவணையாகப் பாடிக் கொடுத்தார்’ என்று பாரதியாரின் மகள் சகுந்தலா உரிமை கொண்டாடுகிறார். தடையில்லை எனினும் இன்னொரு கூற்றையும் இங்கு நினைவு கூர்வது நலம்பயக்கும்.
‘‘இந்த ஆசிரியரின் காலத்திற்குப் பின் எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப்பின் இவர் பாடல்களைத் தமிழ்நாட்டு மாதர்களும் புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக் களிப்டையும் காட்சியை யான் இப்போதே காண்கிறேன்’ எழுதிய ஆண்டு பிங்கள-ஆவணி –முதல் நாள். எழுதியவர் கவிஞரால் பெருமையுடன் என் அருமைத் தம்பி என்றழைக்கப் பெற்ற பரலி நெல்லையப்பப்பிள்ளை. இந்த ஆருயிர் நண்பர்தான் 1917ஆம் ஆண்டில் பாப்பாப் பாட்டையும் முரசையும் பதிப்பித்திருக்கிறார். புதிய ஆத்திசூடியை 1914-ஆம் ஆண்டே புதுச்சேரியில் கவிஞர் பிரசுரித்து விட்டார்.
இந்த நாட்டின் குழந்தை மேதைகளைப் பற்றி கவிஞருக்கு எப்போதுமே பெருமை அதிகம். பிரகலாதன்(கனகன் மைந்தன்), குமரகுருபரன், ஞானசம்பந்தன், துருவன் –ஆகிய குழந்தைகளைப் பற்றித் தமது சுய சரிதையில் மகாகவி குறிப்பிடுகிறார். நசிகேதன், சனத் குமாரனைக் குறித்த கட்டுரையில் மெய்கண்டாரைக் குறித்து மட்டும் ஏனோ பாரதி எழுதவிலலை என்பது நோக்கத்தக்கது.
பாப்பா பாட்டில் பதினாறு அடிகள். அதில் இறுதிப் பகுதியில் ‘‘உயிர்களிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் – இது
வாழும் முறைமையடி பாப்பா’’
என்று வாழும் முறைமையை மனித குலம் முழுமைக்கும் மகாகவி பாரதியார் வகுத்துக் கூறுகின்றார்.
சுதந்திர உணர்வைக் குழந்தைப் பருவத்திலேயே ஊட்டினால்தான் அக்குழந்தை வளர்ந்து அடிமைத் தளையை அறுத்தெரிந்து தாய்நாட்டினைச் சுதந்திர நாடாக்கும். தாம் சுதந்திற்காகப் போராடி மடிந்து விட்டாலும் அடுத்த தலைமுறையாக வரவிருக்கும் குழந்தைகள் சுதந்திரத்தின் அருமையைப் புரிந்து கொண்டு வீரத்துடனும் நாட்டுப் பற்றுடனும் வளர வேண்டும் என்று கருதிய பாரதி,
‘‘ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா ஒரு
குழந்தையை வையாதே பாப்பா
……. ….. ………. ………… …… ………………….
சின்னஞ்சிறு குருவி போலே நீ
பறந்து திரிந்துவா பாப்பா’’
என்று ஓடி விளையாடவும், கூடி விளையாடவும் கூறி சிட்டுக் குருவியைச் சுட்டிக்காட்டிப் பாப்பாவிற்கு சுதந்திரத்தின் இன்றியமையாமையையும் விளக்குகிறார். மேலும்,
‘‘பாதகம் செய்பவரைக் கண்டால் நீ
பயங் கொள்ளல் ஆகாது பாப்பா!
மோதி மித்தித்துவிடு பாப்பா!
அவர் முகத்தில் உமிழ்ந்து விடுபாப்பா!’’
என்று வீர உணர்வை இளம் மனதில் ஆழ வேரூன்றச் செய்கிறார் பாரதி. இளம் வயதிலேயே வீர உணர்வை ஊட்டிக் குழந்தைகளை வளர்த்தால் தான் அக்குழந்தை எதிர்காலத்தில் நமது பாரத நாட்டைச் சுதந்திர நாடாக மாற்றும் என்று உறுதியாக நம்பியதால்தான் குழந்தைகளுக்காகப் பாடிய பாடலில் சுதந்திரத்தை மனதில் பதிகின்ற வண்ணம் அழுத்தமாகப் பாடுகின்றார். மேலும் அதற்கு இடையூறாக இருப்பவர்களை மோதி மிதித்து அவர்களது முகத்தில் உமிழ்ந்து விடு என்று அக்குழந்தைகளுக்கு மிகச் சிறந்த ஆசானாக இருந்து பாரதி போதிக்கின்றார்.
இளஞ்சிறார்களுக்காக ஆத்திசூடி பாடிய ஔவையாரின் கூற்றினை வழிமொழியாது அவர் கூற்றுக்கு மாறுபட்டு காலத்திற்கேற்றவாறு மகாகவி பாடுகின்றார். ஔவையாரின் வழியில் ஆத்திசூடி பாடினாலும் அதிலும் புதுமை செய்கிறார்.
‘அச்சம் தவிர்’
‘ஆண்மை தவறேல்’
‘கூடித் தொழில் செய்’
‘முனையிலே முகத்து நில்’
‘குன்றென நிமிர்ந்து நில்’
‘கூடித் தொழில் செய்’
என்று குழந்தைகளுக்கு அறிவுரை கூறி வளமான எதிர்கால சமுதாயத்தை உருவாக்க முனைகிறார் மகாகவி. இந்நாட்டின் மீது சொல்ல முடியாத அளவிற்குப் பற்றினை வைத்ததால்தான் எதிர்காலத் தூண்களாக விளங்கக் கூடிய குழந்தைகள் நல்லவர்களாக, வல்லவர்களாக வளர வாழ்க்கை நெறிகளை வகுத்துரைக்கின்றார்.
இந்தத் தலைமுறை எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்று ஒரு திட்டவட்டமான வரைபடத்தை மகாகவி பாரதி நமக்கு அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார். மகாகவி பாரதி கூறியது பாலபாரதததிற்கு மட்டுமல்லாது பெரியோருக்கும் பொருந்தும். எனினும் இத்தகைய வாழ்வியல் கருத்துக்களை இளைய பாரதத்தினரிடையே ஊன்றி விட்டால் அது முளைத்துச் செழித்து சமுதாயத்திற்குப் பெரும் பயன் விளைவிக்கும் மரமாகத் தழைக்கும் என்பதில் மகாகவிக்குச் சிறிதேனும் ஐயமிருக்கவில்லை என்பது நோக்கத்தக்கது.
கற்பனை மிகுந்த காதற்காடல்களை வழங்கிய தமிழ்த் திரையுலகிற்குத் தரமிகுந்த தாலட்டுப் பாடல்களை வழங்கிய பெருமையும் மக்கள் கவிஞருக்கு உண்டு. பட்டுக்கோட்டையாரின் பாட்டுத்திறமும் வளமும் எங்ஙனம் காதல் பாடல்களிலும் சமூகப் பாடல்களிலும் இயல்பாகப் பொங்கிப் பொலிந்து விளங்கியதோ அவ்வாறே குழந்தைப் பாடல்களிலும், சிறுவர் பாடல்களிலும் பொலிகின்றன. குழந்தைப் பாடல்களைப் பாடும்பொழுது, குழந்தைகளின் அழகில் மூழ்கித் தாய்மையுணர்வுடன், குழந்தைகளின் எழிலையும் கள்ளங்கபடமற்ற அன்பையும் பாராட்டி மட்டுமே எழுதுபவர்களும் உண்டு. அதுபோன்று குழந்தைகளின் அழகையும் அன்பையும் புலப்படுத்துவதோடு அவர்களுக்குப் புதுமையான சிந்தனைகளையும் அறிவுறுத்துச் செல்பவர்களும் உண்டு. பாரதியாரும் பாரதிதாசனாரும் புதிய சிந்தனைகளை அறிவுறுத்திச் செல்லும் பான்மையராவர்.
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் தம்மிரு ஆசான்களையும் பின்பற்றிக் குழந்தைப் பாடல்களை இயற்றியுள்ளார். மக்கள் கவிஞர் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் சேர்த்து பாடல்கள் மிகக் குறைவனாதகும். பட்டுக்கோட்டையாரால் எல்லாப் பாடல்களும் எழுதப்பட்ட கல்யாணப்பரிசு 1959-ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படம் நடந்து கொண்டிருந்தபோதுதான் மக்கள் கவிஞருக்கு மகன் பிறக்கிறான். இந்தப்படத்தின் வெள்ளிவிழாவில் கலந்து கொண்ட சிறிது நாளில் மக்கள் கவிஞர் மரணத்தைத் தழுவுகிறார். கல்யாணப் பரிசில்,
‘‘கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
எனக்கு இனிநீ என்னென்ன தருவாய்?
வல்லமைசேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா’’
என்ற வரிகள் குழந்தை எங்ஙனம் வளரவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறார். மக்கள் கவிஞரின் இல்லற வாழ்வையும் எதிர்பாரா இறுதி முடிவையும்அறிந்தவர்களுக்கு இந்த வரிகள் ஏற்படுத்தும் ஏக்கத்தை எழுத்தால் விவரிக்க இயலாது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்துறையில் புகுந்து அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு நல்வழி காட்டிய மக்கள் கவிஞர் வல்லவனாகவும், நல்லவனாகவும் குழந்தைகள் வளர்தல் வேண்டும். அதுவே அக்குழந்தைகள் நாட்டிற்குச் செய்யும் உண்மையான கைமாறாகும் எனக் கருதினார்.
மேலும் குழந்தையைத் தாலாட்டும்போது மக்கள் கவிஞர்,
‘‘ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
அப்பா அம்மா சொன்னதைக் கேளு
அறிவு வந்ததும் சிந்திச்சுப் பாரு
அலட்சியமா இருந்திடாதே சின்னத் தம்பி
அதிக வேலை காத்திருக்குது உன்னை நம்பி’’
என்று தாலாட்டோடு நல்வாழ்வு நெறிகளையும் எடுத்தியம்புகிறார்.
அம்மா, அப்பா சொன்னதைக் கேட்டு நடப்பதுடன், அறிவு வந்த பின்னர் தானாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அலட்சியமாக இருந்துவிட்டால் அதனால் ஏற்படும் தீங்கு இந்த நாட்டையும் பாதிக்குமல்லவா? அதற்காகத்தான் அடுத்த வரியில் உன்னை நம்பி அதிக வேலைகள் காத்திருக்கிறது என்று எடுத்துக்கூறி அறிவுத் திறனுடன் வளர வேண்டும் என்று குழந்தைக்குத் தாயாக இருந்து அறிவுறுத்துகிறார்.
குழந்தைகளின் மனதில் நம்பிக்கை விதைகளை விதைத்தால் தான் அக்குழந்தைகள் நல்லவர்களாக உருவெடுப்பர். இதனை அறிந்திருந்த மக்கள் கவிஞர் அழும் குழந்தையை,
‘‘சின்னஞ்சிறு கண்மலர்
செம்பவள வாய்மலர்
சிந்திடும் மலரே ஆராரோ!’’
என்று பாடத் தொடங்குகிறார். ஆனால் குழந்தை அழுகையை நிறுத்தாததால்,
‘‘ஏழைநம் நிலையை
எண்ணி நொந்தாயோ?
எதிர்கால வாழ்வில்
கவனம் கொண்டாயோ?’’
என்று அழுகைக்கான காரணத்தைக் கண்டுபிடித்து அக்குழந்தையின் மனதில்,
‘‘நாளை உலகம் நல்லோரின் கையில்
நாமும் அதிலே உய்வோம் உண்மையில்”
என்று நம்பிக்கை வரிகளை விதைக்கின்றார். குழந்தைகள் அவநம்பிக்கையுடன் வளர்ந்தால் அவர்கள் கோழைகளாகிவிடுவர். வீரமாக வளர்ந்தால்தான் ஒரு நல்ல வளமான சமுதாயம் உருவாக முடியும். இதனை நன்கு உணர்ந்திருந்ததால்தான் மக்கள் கவிஞர் குழந்தைகள் மனதில் பதியும் வண்ணம் தாலாட்டுடன் நம்பிக்கையையும் சேர்த்துத் தாலாட்டுகிறார்.
யாருமற்ற அனாதைக் குழந்தை அழுகின்றது. அதனைப் பார்த்த மக்கள் கவிஞர் அக்குழந்தைக்கு,
‘‘அழாதே பாப்பா அழாதே
அம்மா இருந்தா பால் தருவாங்க
அனாதை அழுதா யார் வருவாங்க?’’
என்று தொடங்கி,
‘‘மாறாத காலம் உனக்காக மாறும்
பேசாத நீதி நமக்காகப் பேசும்’’
என்கிறார்.
மற்ற குழந்தைகளுக்குக் கிடைக்கக் கூடிய வாய்ப்புகளும் வசதிகளும் அனாதைக் குழந்தைகளுக்கும் கிடைத்தாக வேண்டம். அந்தக் காலம் வந்தே தீரும். வாயில் பூட்டோடு காட்சி தரும் நீதி.அதைக் கழற்றி எறிந்துவிட்டு நம்மைப் போன்ற ஏழைகளுக்காகவும் அவர்களின் நலன்களுக்காகவும் பேசும் என்று அனாதைக் குழந்தையின் சார்பாகத் தாலாட்டி அக்குழந்தைக்கு நம்பிக்கையூட்டுகிறார்.
நாட்டில் நடக்கின்ற தற்கொலைகளில் மிகப் பல வறுமைக்குப் பயந்தே நடக்கின்றன. குடும்பம் குடும்பமாகச் செத்து மடிவதை அன்றாடம் நாழிதழ்களும் வெளியிடுகின்றன. இவ்வறுமையின் காரணமாகப் பல சிறார்கள் திசைமாறி இன்னதென்று தெரியாமலேயே திருட்டில் ஈடுபடுவதும், அவர்களை ஈடுபடுத்துவதும் பெரு நகரங்களில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும் நிகழ்வுகளாகும். திருடும் சிறார்களைப் பிடித்துக் காரணம் கேட்டால் வயிற்றுப் பசிக்காகத் திருடுவதாகக் கூறுவர். இந்தப் பசிக்குறி முகங்ளைப் பார்த்து,
‘‘திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்குப் பயந்து விடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே!
சிந்திச்சுப் பார்த்து செய்கையை மாத்து – தவறு
சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா – அது
திரும்பவும் வராமப் பாத்துக்கோ!’’
என்று மக்கள் கவிஞர் அறிவுகொளுத்துகிறார். திருடாதே என அறிவுறுத்தினால் மட்டும் போதுமா? அதற்கு மாற்று வழி கூற வேண்டாமா? மற்றவராக இருப்பின் உனக்குப் பெற்றோர்கள் உள்ளனர். குடும்பம் உள்ளது. நல்லபெயர் எடுக்க வேண்டும் என்றுதான் கூறுவர். கவிஞர் அங்ஙனம் கூறாது ‘உன்னை நீ நம்பு. உன் திறமையில் நம்பிகை்கை வை’ என்று அரிய மாற்று வழியினைக் கூறுகிறார். சிறார்களுக்கு அறிவுரை கூறும் இப்பாடலின் சிறப்பை,
‘‘கல்யாணியின் இந்தப் பாட்டு ஒரு அசாதாரணமான பாட்டு. யாப்பிலக்கணத்தில் ஒரு பாட்டை எல்லாக் குற்றமும் தீர்த்த பாட்டு என்று சொல்வார்கள். அது மாதிரி ‘திருடாதே பாப்பா’ என்ற இப்பாட்டு எல்லாக் கருத்துக்களும் நிறைந்த ஒரு நிறைவுப் பாட்டு. இந்தப் பாடலின் இருபத்தோரு வரிகளும் ரொம்பவும் ஆழமாகத் தனியே ஆராயப்பட வேண்டும். சில வரிகள் ஊர்தோறும் கல்வெட்டுக்களில் பொறித்து வைக்கப்பட வேண்டிய வரிகள்! இன்னொரு அசோகன் இங்கே வந்தால் கல்தூண்களில் பொறிக்க வேறு விஷயங்கள் வேண்டாம். இந்தப் பாடலின் வரிகளே போதும்!’’
என்று அறிஞர் யாத்ரீகன் கூறுகிறார். சிறாரே எதிர்கால நாட்டின் வித்துக்கள் என்று எண்ணிய மக்கள் கவிஞர் அவர்கள் இளம் வயதில் நல்லவர்களாக வளரவேண்டும் என்று அதிக அக்கறை எடுத்துக் கொண்டு வாழ்க்கை நெறிகளை வழங்குகிறார்.
சிறுவர்களை வளர்க்க வேண்டிய முறை
சிறுவர்களை வளர்க்கும்போது மூடநம்பிக்கைகளையூட்டி வளர்க்கக் கூடாது. மராட்டிய வீரன் சிவாஜியை அவனது தாயார் வளர்த்ததைப் போன்றும் மகாத்மாவை அவரது அன்னையார் வளர்த்து உருவாக்கியதைப் போன்றும் சிறந்தவர்களாக வளர்க்க வேண்டும். அதுதான் நல்ல சமுதாயத்தை உருவாக்கும் வழியாகும். அறிவுள்ளவர்களாக, வீரமுள்ளவர்களாக அவர்களை வளர்த்தெடுக்க வேண்டியது சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.
இளம் வயதில் பேய் பிசாசு என்று கட்டுக்கதைகளைக் கூறி சிறுவர்களை முடக்கிவிடக் கூடாது என்பதை,
‘‘வேப்பமர உச்சியில் நின்னு
பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க
உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் தேவையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக்கூட நம்பிவிடாதே நீ
வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்து வெம்பிவிடாதே’’
என்று மக்கள் கவிஞர் சிறுவர்களைப் பார்த்து அறிவுறுத்துகிறார். வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளுகின்ற கதைகளைச் சொன்னால் அதை வேடிக்கையாகக் கூட நம்பி வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து பிஞ்சிலேயே வெம்பி விடாதே என்று சிறுவர்களை எச்சரிக்கிறார் கவிஞர். மேலும் சிறுவர்களைப் பார்த்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காதே வெளியே செல், வெளியில் எத்தனை எதிர்ப்புகள் வரினும் அதனை எதிர்கொள். வெற்றி அடை என அச்சத்தைப் போக்கி அஞ்சாமையைச் சிறுவர்களுக்கு மக்கள் கவிஞர் உணர்த்துகின்றார்.
சிறுவர்கள் உடல் வளர்ச்சியுடன், அறிவு வளர்ச்சியும் பெற வேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சியாகும். அத்தகைய வள்ர்ச்சியே நாட்டு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்த மக்கள் கவிஞர் வளரும் சிறுவர்களைப் பார்த்து,
‘‘ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி’’
‘‘ஆசையோடு ஈன்றவளுக்கு
அதுவே நீதரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி
உன்நரம்போடுதான் பின்னி வளரணும்
தன்மான உணர்ச்சி’’
என்று அறிவுறுத்துகிறார்.
சமுதாயப் பொறுப்புள்ளவர்களாகச் சிறுவர்கள் வளர வேண்டும். அதுவே பெற்றதாய்க்கும் பிறந்த பொன்னாட்டிற்கும் பெருமை சேர்க்கும். புது உலகை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டியதை மக்கள் கவிஞர் உணர்ந்திருந்தார். அதனால் சிறுவர்களை நோக்கி,
‘‘மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா
வளர்ந்து வரும்உலகத்துக்கே – நீ
வலது கையடா’’
என்று மக்கள் கவிஞர் தெளிவுறுத்துகின்றார்.
வாழுகின்ற மனிதரெல்லாம் மனிதனாக வாழ்வதில்லை. பலர் உருவத்தில் மனிதனாகவும், உள்ளத்தால் விலங்காகவும் வாழ்கிறார்கள். ஒருவர் மற்றொருவருக்கு தேவையற்ற வகையில் ஏதேனும் இடையூறு செய்தால், அதனால் பாதிக்கப்படுபவர் தனக்கு இடையூறு செய்பவரைப் பார்த்து ‘‘நீ எல்லாம் மனிதனாயா?’’ ‘‘மனிதனாக இருந்தால் இதுபோன்று செய்வாயா?’’ என்று கேட்பார். மனிதப் பண்புகளுக்கு ஒவ்வாத செயல்பாடுகளை செய்வதனால்தான் இந்த வினாவே எழுகிறது. அதனால் தான் மக்கள் கவிஞர் மனிதப் பண்பினை மீறி எந்த ஒழுங்கீனத்திலும் ஈடுபடக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகவே ‘மனிதனாக வாழ்ந்திட வேணும்’ என்று வலியுறுத்திப் பாடுகிறார்.
மனிதனின் அன்றாடத் தேவைகளுக்கு எவ்வாறு வலது கையானது இன்றியமையாததாக உள்ளதோ அதுபோன்று சிறுவர்களும் இருத்தல் வேண்டும். பயனற்றவர்களாக மாறிவிடக் கூடாது. அது சமுதாயத்திற்குச் சுமையாகும் என்ற அரிய வாழ்க்கை நெறியைச் சிறார்களின் மனதில் பதியும் வகையில் எளிமையாக மக்கள் கவிஞர் எடுத்துரைக்கின்றார்.
சாதி, மத, இனக் கலவரங்களும், ஏழை மேலும் ஏழையாவதும், இந்தத் தனியுடைமைச் சமுதாயத்தால்தான் என்பதை அறிந்த மக்கள் கவிஞர் அதை வேரோடு பெயர்த்தெறிய விரும்பி,
‘‘தனியுடைமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா’’
என்று மொழிகின்றார். அதே நேரத்தில்,‘மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றாமலா போவான்’ என்று மனிதனின் சுயமுயற்சிகளுக்குத் தடைபோடும் செயல்கள் இங்கு நிகழ்கின்றன. அத்தகைய மனநிலை மாற வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேற்றம் அடைய முடியும் என்பதை உணர்ந்த மக்கள் கவிஞர்,
‘‘தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பெய்யடா’’
என்று பொய்யை இனம் காட்டி எச்சரிக்கிறார். முயன்றால் மட்டுமே எதுவும் முடியும். தானாக எதுவும் கிடைக்காது. இவ்வுலகில் தொடர்ந்து முயன்று செயல்பட்டால் தான் எந்தவிதமான மாற்றமும் நிகழும் என்று சிறுவர்களுக்கு உலகின் நடைமுறையை எடுத்துரைத்து தானாக மாறும் என்று முடங்கிவிடாதே என்று எச்சரிக்கின்றார்.
சிறுவர்களுக்கு எதைச் சொல்ல வேண்டுமோ அதை மகாகவி பாரதி, புரட்சிக்கவி பாரதிதாசன் ஆகியோருக்குப் பின் அவர்களைவிட வலுவாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்தவராக மக்கள் கவிஞர் விளங்குகிறார். மக்கள் கவிஞர் தாலட்டுப் பாடல்களில் பல்வேறு விதமான கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார். பாரதியார் தாலாட்டு வடிவத்தில் பாடாவிட்டாலும் ஆத்திசூடியும், பாப்பாப் பாட்டும் வளரும் சந்ததிக்காக அவரால் எழுதப்பட்டவைகளே. பொய் சொல்லக் கூடாது, புறஞ் சொல்லலாகாது எனப் பிஞ்சு உள்ளங்களுக்கு அறிவுரை வழங்கிய பாரதி கொடுமைக்காரர்களின் முகத்திரையைக் கிழிக்க குழந்தைகளைத் தயார் செய்கிறார்.
மக்கள் கவிஞர் திரையிசையில் தாலட்டுப் பாடி சிறார்களை விழிப்புணர்வு கொள்ள வைக்கிறார். மக்கள் கவிஞரின் பாடல்களில் அதீதக் கற்பனையோ, ஆசை வார்த்ததைகளோ இடம் பெறவில்லை என்பது நோக்கத்தக்கது. ‘‘இதுவரை வந்த சிந்தனையாளர்கள் இந்த உலகைப் பல வழிகளில் விமர்சித்திருக்கிறார்கள். ஆனால் செய்ய வேண்டிய கடமை இந்த உலகை மாற்றுவதுதான்’’ என்ற கார்ல் மார்க்ஸின் சிந்தனைக்கு ஏற்ப மக்கள் கவிஞரின் பாடல்வரிகள் அமைந்துள்ளன. மக்கள் கவிஞரின் வரிகள் எதார்த்தம் என்ற நிலையில் இந்த உலகை மாற்றுகிற உணர்வை குழந்தைகளுக்கு ஊட்டுவதாக இருக்கின்றன. இருபெருங் கவிஞர்களும் சமுதாயம், நாடு ஆகியவற்றின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, நல்ல நாட்டையும், சமுதாயத்தையும் உருவாக்கும் அடிப்படையில் குழந்தைகளுக்காக் குழந்தைப் பாடல்களைப் பாடி குழந்தைக் கவிஞர்களாக பிஞ்சு மனங்களில் என்றென்றும் நிலைத்து நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முள்வெளி அத்தியாயம் -15
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 19
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 32
- நினைவுகளின் சுவட்டில் (91)
- ஏகாலி
- சித்திரவதைக் கூடத்திலிருந்து
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -1
- தமிழிலக்கியத்தை பிரெஞ்சுமொழியினருக்கு அறிமுகப்படுத்த
- “ல”என்றால் லட்டு என்றுதான் பொருள்…
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 26)
- சூலைத் திங்கள் 7, 8 நாள்களில் பிரான்சு திரான்சி பெரு நகரில் தமிழிலக்கிய உலக மாநாடு
- தாகூரின் கீதப் பாமாலை – 20 இரவின் மந்திர சக்தி !
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-8)
- காலணி அளவு
- ஹைக்கூ தடங்கள்
- உள்ளோசை கேட்காத பேரழுகை
- பஞ்சதந்திரம் தொடர் 50 -அடைந்ததை அழித்தல்
- துரத்தல்
- ஏழாம் அறிவு….
- கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -3 நிறைவுப் பகுதி)
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஆறு
- பத்தாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா
- அஞ்சுவன்னங்களும் அரபுக் குதிரைகளும்
- சின்னஞ்சிறு கிளியே…!
- துருக்கி பயணம்-8 – இறுதிப் பகுதி
- மணமான அந்தப் பெண்களின் பெயரில்…
- திண்ணைப் பேச்சு – புத்தகங்களிற்கு எதிரான போர்
- ஒரு வெளிர் நீல நிறப் புள்ளி : பூமி மீது ஓர் அன்னியப் பார்வை
- குழந்தைகள் நலனைப் பலி கொடுக்கும் மதவாதக் கலாசாரம்
- அன்பிற்குப் பாத்திரம்
- அண்டவெளிச் சிமிழ் கையாட்சி இணைப்புக்குப் பிறகு சைன விண்வெளி விமானிகள் பூமிக்கு மீட்சி
- ஜெயமோகனின் இந்தியா : ராஜன் குறையின் “தர்க்க” ரீதியான மறுப்பும் பூச்சாண்டி வேடக் கலைப்பும்