பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-9)

This entry is part 17 of 41 in the series 8 ஜூலை 2012


 இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

கவிஞர்கள் காண விரும்பிய பாரதம்

     மகா கவியும் மக்கள் கவியும் பாரதம் அனைத்துத் துறைகளிலும் உலகில் தலைசிறந்து விளங்க வேண்டும் என்று விரும்பினர். எவ்வாறெல்லாம் பாரதம் சிறந்து விளங்க வேண்டும் என்பதைத் தமது பாடல்களில் குறித்து வைத்தனர். பாரத நாட்டைப் பற்றி பல்வேறு கனவுகளைக் கொண்டிருந்ததற்கு இருகவிஞர்களின் பாடல்களே சான்றுகளாக அமைந்துள்ளன.

பாரதி இந்தியாவைப் பற்றி பற்பல கனவுகள் கண்டு அவற்றையெல்லாம் பாடல்களாகப் பாடி வைத்தார். அவை தீர்க்க தரிசனமாக ஒவ்வொன்றாக நிறைவேறி வருவது நோக்கத்தக்கது. அடிமைப்பட்ட இந்தியாவில் பிறந்து அடிமை விலங்கொடிக்க முயன்று நாடு சுதந்திரம் பெறுவதைக் காணமுடியாமலேயே இறந்தார் பாரதி. இளவயதில் இறந்த பாரதிக்கு இந்தியாவைப் பற்றி நெஞ்சம் நிறையக் கனவுகள் இருந்தன. இந்தியா உலக அரங்கில் அனைத்து நாடுகளுக்கும் தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும் என்று விரும்பினார் பாரதி.

இந்திய நாட்டின் விடுதலை உறுதியானது என்று பாடுகின்றார் மகாகவி. காந்தியின் சாந்த சத்தியாகிரகத்தினாலே பாரதம் விடுதலையாகும் என்று மகாகவி சங்கு முழங்குகிறார்.

‘‘ஊதுமினோ வெற்றி

ஒலிமினோ வாழ்த்தொலிகள்

வேதனைகள் இனி வேண்டா

விடுதலையோ திண்ணமே’’

என்று மகிழ்ந்து பாடித் துள்ளினார். பாரதி புதிய பாரதத்தைத் தம்முள்ளே கண்டார்.

பாரதி காண விழைந்த பாரதம் வெறும் மணிணிலம் அன்்று. அது புவியிலுள்ளோர் போற்றும் புண்ணியர்களின் நாடு, புரணர்களின் நாடு, பாருக்குள்ளே நல்ல நாடு என்பதை,

‘‘வேதமும் வாழ்வும் ஒன்றும்

வீரமும் அறமும் ஒன்றும்

காதலும் கற்பும் ஒன்றும்

கண்ணுடன் கருணை ஒன்றும்

போதமும் குணமும் ஒன்றும்

புதுமையும் பண்டும் ஒன்றும்

நீதியும் அருளும் ஒன்றும்

நெறியினிற் பெரிய நாடே’’

என்று தெளிவுறுத்துகிறார்.

பாரத நாட்டில் வாழ்பவர்,

‘‘ஈதலில் இன்பங் கண்டார்

இன்பத்திற் கடவுள் கண்டார்

மாதரில் அன்னை கண்டார்

மண்ணிடை விண்ணைக் கண்டார்

காதலில் கலையைக் கண்டார்

கலையினில் வாழ்வைக் கண்டார்

சாதலும் பிறப்பு மில்லாத்

தம்மையே கண்டார் மாந்தர்’’

என்று சிறந்த பாரத நாட்டை மனங்குளிரப் பாடுகின்றார் பாரதியார்.

பாரதி காண விரும்பிய பாரதத்தில் சாதி மத வேறுபாடே கிடையாது. இவையேதுமில்லா முன்னேற்றம் கண்ட பாரதம் உருவாக வேண்டும் என்று விரும்பி அதனை,

‘‘ஒன்றுண்டு மானிடச் சாதி – பயின்று

உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்

வையகம் காப்பவரேனும் – சிறு

வாழப் பழக்கடை வைப்பவரேனும்

பொய்யக லத்தொழில் செய்தே –பிறர்

போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்

நந்தனைப் போல்ஒரு பார்ப்பான் – இந்த

நாட்டினில் இல்லை குணம் நல்லதாயின்

எந்தக் குலத்தின ரேனும்  – உணர்

வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்’’

என்று எடுத்துரைக்கின்றார்.

இந்தியாவில் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து வாழ வேண்டும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று யாரும் இருத்தல் கூடாது. இங்கு வாழ்பவர் அனைவரும் இந்நாட்டு மன்னர்களாவர். இங்கு வாழும் மக்கள் அனைவரும் ஜாதி மதங்களைக் கடந்து பாராது வாழ வேண்டும் இத்தகைய உன்னதமான பாரதம் மலர வேண்டும் என்பதை,

‘‘ஏழை என்றும் அடிமை என்றும்

எவரும் இல்லை ஜாதியில்

இழிவு கொண்ட மனிதர் என்பது

இந்தியாவில் இல்லையே

வாழ கல்வி செல்வம் எய்தி

மனம் மகிழ்ந்து கூடியே

மனிதர் யாரும் ஒரு நிகர்

சமானமாக வாழ்வமே’’

என்று சட்டத்தைப் போன்று மகாகவி பிரகடனப்படுத்துகிறார்.

பெண்களை அடிமைப்படுத்தாத நாடாகவும், உணவுப் பஞ்சம் இன்றி தொழில் வளம் கொழிக்கும் நாடாகவும் இந்தியா மலர்ந்து உலகிற்கே தலையேற்கும் நாடாக விளங்க வேண்டும் என்று மகாகவி விரும்பினார். நோயின்றி மக்கள் வலிமையானவர்களாக, அறிவு சான்றவர்களாக, விளங்கி சுதந்திரமாக வாழவேண்டும் என்று கருதி அத்தகைய இந்தியாவே மலர வேண்டும் என்று எண்ணினார். அதனால்தான் மகாகவி,

‘‘ஒளிபடைத்த கண்ணினாய் வாவாவா

உறுதி கொண்ட நெஞ்சினாய் வாவாவா’’

என்று வளமான பாரதத்தை வரவேற்றுப் பாடுகின்றார். இப்பாடலில் பாரதத்தினைப் பற்றிய பாரதியின் முழுமையான கருத்துக்கள் வெளிப்பட்டிருப்பது நோக்கத்தக்கது.

பாரத நாடு, பாரத சமுதாயம் உள்ளிட்டவை பற்றிய பாரதியின் எண்ணக் கனவுகள் மிகவும் உயர்ந்ததாக அமைந்திருந்தமைக்கு அவரது தேசிய கீதங்களே சான்றுகளாக அமைந்துள்ளன. உலகத்திற்கே தலைமையேற்கக் கூடிய சமுதாயமாக, நாடாகப் பாரத நாடும், பாரத சமுதாயமும் சிறந்து விளங்க வேண்டும் என்று மகாகவி எண்ணினார். சுதந்திரம் பெற்றுப் பல்வேறு துறைகளில் உயர்ந்தோங்க வேண்டும். மக்கள் வறுமையின்றி வளத்துடனும், உடல் வளத்துடனும் வாழ வேண்டும் என்று கருதிப் பாடினார்.

அடிமை இந்தியாவில் பிறந்து சுதந்திர இந்தியாவில் வாழ்ந்த மக்கள் கவிஞருக்கு இந்தியாவின் வளர்ச்சியைக் காண வாய்ப்பிருந்தது. மகா கவிக்கு அவ்வாய்ப்புக் கிட்டவில்லை. விடுதலை பெற்ற இந்தியாவில் நடக்கும் கொடுமைகளைக் கண்டு மனம் வெதும்பிய மக்கள் கவிஞர் சுதந்திரம் பெற்ற இந்தியத் தாயைத் தியாகிகள் இன்றிருந்து கண்டால்,

‘‘தியாக வடுக்களை எல்லாம் கண்களாக்கித்

தேசத்தை நனைத்திருப்பீர் கண்ணீராலே

அங்குமிங்கும் வசைபெற்றுச் சுதந்திரத் தாய்

அவதியுறும் நிலைகண்டால் உங்கள் நெஞ்சம்

அனலில் மெழுகென உருகிப் போய்இருக்கும்!’’

என்று பாடுகின்றார். சுதந்திரம் பெற்றால் மக்கள் வாழ்வு வளமடையும், நாடு முன்னேற்றம் காணும் என்று கனவுகள் கண்டவர்களுக்கு அதிர்ச்சியாகவும் வேதனையும் அடைந்தார்கள். மேலும் இந்தியா எப்படிப்பட்ட நாடாக மலர வேண்டும் என்பதை மக்கள் கவிஞர்

அடுத்தாண்டில் இனும் பலவும் கூறுகின்றேன்!

தலைக்கெல்லாம் தலையாய தலைமைத் தாயே!

சரித்திரத்தில் இடங்கொண்ட சுதந்திர நாளில்

கொலை நடந்த விபரமெல்லாம் கூறுதற்குக்

கூசுகின்றேன் மற்றும் உள்ள விபரம் சொல்வேன்

சுதந்திரத்தைப் பெற்ற முதல் ஓர் நாளேனும்

துளியும் நீ மகிழ்ந்ததுண்டா! உன்றன் மக்கள்

உகந்து மன ஒற்றுமையாய் வாழ்ந்ததுண்டா!

உன்னைத்தான் மதித்ததுண்டா உயர்ந்ததுண்டா?

எங்கோ ஓர் பகுதியில் ஒன்றுபட்டார்

எனில் அதனை ஆதரிக்கும் முறைதான் உண்டா?

பெரும் வெயிலால் வண்டல் நிலம் வெடிப்பதைப்போல்

பிளவுபட்டுப் பிளவுபட்டுச் சுயநலத்தால்

வருமான வேட்கையிலே புகுவதன்றி

மனதில் ஏதும் விசாலமுண்டா பொது நோக்குண்டா?

இதுவரை நீ மகிழ்ந்திருப்பாய் என்ற எண்ணம்

என்போன்றார்க் கில்லை இனியேனும் அந்தப்

புதுவாழ்வும் ஒற்றுமையும் புனிதத் தொண்டும்

பொலிக என வணங்குகின்றோம் அன்னையே நீ!

பூரிக்கும் அன்னாளை எதிர்பார்க்கின்றோம்.’’(ப.,222)

என்று எடுத்துரைக்கின்றார்.

மக்கள் சுயநலமின்றி பணத்திற்கு ஆசைப்படாதவராக இருத்தல் வேண்டும். நாட்டுப்பற்று மிகுந்தவராகவும், ஒற்றுமை உணர்வுடனும் இருந்து நாட்டையும் தங்களது வாழ்க்கையையும் வளமுறச் செய்தல் வேண்டும் அவ்வாறு இருந்தால் பாரத அன்னை மகிழ்ச்சியால் பூரித்து மகிழ்வாள் என்று தனது மனவிருப்பினை மக்கள் கவிஞர் முன்மொழிகின்றார். ஒருவரை ஒருவர் மக்கள் நேசித்து பொதுநல மனப்பான்மையுடன், சுயநலமின்றி நாட்டுப்பற்றுடன் வாழ்ந்தால் பாரதம் உலகில் உயர்ந்து நிற்கும் என்று நாடு முன்னேறுவதற்கு உரிய வழியினையும் இப்பாடலில் மக்கள் கவிஞர் எடுத்துரைத்திருப்பது நோக்கத்தக்கது.

மக்களாட்சி நடைபெறும் நாட்டில் அனைவரும் இந்நாட்டின் மன்னர்கள் ஆவர். இவர்களில் துன்பத்தால் வாடுபவர்களும், தள்ளாடும் வாழ்க்கை நிலை உடையவர்களும், சாரமற்ற வாழ்க்கை உடையவர்களும் உண்டு. அன்பின் வழி நடத்தலும், உடல்நலமாக இருத்தலும், சமாதானம் பேணுதலும் நாட்டில் நிகழ்தல் வேண்டும். உலகம் போற்றும் உன்னத நாடாக நமது நாடு மலர வேண்டும் என்று மக்கள் கவிஞரின் கனவு நீள்கிறது. கவிஞரின் எண்ணம்,

‘‘மன்னன் ராசாதி ராசன் வந்தேனே! நான் வந்தேனே!

ராசாதி ராசன் வந்தேனே!

எங்கும் புகழெடு இன்பம் பெருகிட

பொங்கும் வளமோடு புவிதனை ஆண்டிடும்

மகாராசா!

பக்கத்துச் சேரியிலே குறிப்பிட்ட தேதியிலே

பள்ளிக்கூடம் தொறந்தாச்சா!

மந்திரி! மந்திரி! மந்திரி!

குழு எங்கே! எங்கே! எங்கே!

மந்திரி அவரவர் மனைவிகளே அவர்களுக்கு மந்திரிகள்

அன்பு கொண்டு குடியரசு புரிந்திடணும்

ஆவேதெல்லாம் பொதுவாய்த்தான் நடந்திடணும்

மன்னன் ஆகா! ஆகா! சபாசு!

ஆண்டி மடத்தில் உள்ள அட்ரசை மாத்தியதில்

ஆஸ்பத்திரி தொறந்தாச்சா!

மந்திரி! மந்திரி!மந்திரி!

மந்திரி இப்போ –

ஆரோக்கியம் கம்மியில்லே யாருக்கும் பிணி இல்லே

ஆஸ்பத்திரி தேவையில்லே மன்னரே!

ஆஸ்பத்திரி தேவையில்லே மன்னரே!

குழு ஆமாம் மன்னரே! மன்னரே! மன்னரே!

மன்னன் கட்டத்துணியும் – நம்ப கடன் கேட்ட கோதுமையும்

கப்பலில் வந்தாச்சா மந்திரி!

மந்தி இனி

எட்டாத சீமைகளை எதிர்பார்க்கத் தேவையில்லே

இங்கேதும் பஞ்சம் இல்லை மன்னரே!

குழு ஆமாம் மன்னரே! மன்னரே! மன்னரே!

மன்னன் பாயும் புலி போன்ற பட்டாள வீரர் கையில்

ஆயுதம் தந்தாச்சா மந்திரி! மந்திரி! மந்திரி!

மந்திரி இப்போ –

ஆயுதம் தேவையில்லே அடிதடி வம்புமில்லே

அமைதிதான் நிலவுது மன்னரே!

குழு எங்கும் அமைதிதான் நிலவுது மன்னரே!

ஆமாம் மன்னரே! மன்னரே! மன்னரே!’’ (ப,84)

என்று மன்னன், மந்திரி உரையாடலைப் போன்று கவிதையாக மலர்கிறது. சோம்பேறிகள் என்ற உழைக்காதவர்களே நாட்டில் இருக்கக்கூடாது. அப்போதுதான் நாடு முன்னேற்றம் காணும். உழைப்பு பெருகினால் தனிமனித வாழ்க்கை முன்னேற்றம் காணும். தனிமனித வாழ்வு முன்னேற்றம் கண்டால் நாடு முன்னேற்றம் அடையும். நாடு முன்னேற்றம் கண்டால் உலகில் நாடு அனைவராலும் போற்றி மதிக்கப்படும் அதனால்தான் மக்கள் கவிஞர் உழைிக்காதவர்கள் கூடுகின்ற மடம் தேவையில்லை என்று குறிப்பிட்டுப் பாடுகின்றார்.

மேலும் ஆஸ்பத்திரி தேவையில்லை என்று கவிஞர் குறிப்பிடுவது வள்ளுவரின் கருத்தை அப்படியே எடுத்துரைப்பது போன்று அமைந்துள்ளது. நோய் இன்றி இருந்தால்தான் மக்கள் உழைக்க முடியும். மக்கள் நோய் வந்து படுத்துவிட்டால் நாடு முன்னேற்றம் காண முடியாது. நாட்டில் பிணியே இல்லாது மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் உடல் நலத்துடனும் வாழ்ந்தால் மருத்துவமனை என்பதே தேவையில்லாமல் போகும். மேலும் நோய்க்குச் செலவு செய்ய வேண்டிய நிதியை நல்ல பல ஆக்கச் செயல்களுக்கு ஓதுக்கலாம். அதனால் மக்கள் வாழ்வு வளமடையும். மக்கள் நலமுடன் வாழ நல்ல உணவு, தூய்மையான சுற்றுப்புறச் சூழல், நல்ல காற்று, நல்ல குடிநீர், நல்ல உறைவிடம், நல்ல உடை ஆகியவை தேவை. இவை அனைத்தும் குறைவின்றிக் கிடைத்தால் மக்கள் பிணியின்றி ஆரோக்கியம் உடையவராக இருப்பர். மக்கள் ஆரோக்கியமாக இருப்பின் மருத்துவமனை தேவையிருக்காது. இதனையே சிந்தித்து சுருக்கமாக மக்கள் கவிஞர் எடுத்துரைக்கின்றார். மக்கள் கவிஞரின் இக்கருத்தானது,

‘‘உறுபசியும் ஓவாப் பிணியும் செருபகையும்

சேரா தியல்வது நாடு’’

என்ற திருக்குறளின் பிழிவாக இருப்பது நோக்கத்தக்கது. திருக்குறளின் கருத்தினை எடுத்துரைத்து மக்கள் கவிஞர் திரையிசைத் திருவள்ளுவராகத் திகழ்வது சிறப்பிற்குரியதாக அமைந்துள்ளது.

உணவு, உடை இவற்றைப் பிறநாட்டிலிருந்து கடனாகவோ, இரந்தோ நாம் பெறக் கூடாது. உடை, உணவுப் பஞ்சம் நாட்டில் நிலவக்கூடாது. பிறநாட்டிலிருந்து எதையும் இறக்குமதியே செய்யக் கூடாது. அனைத்தும் நமது நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு நமது தேவைகள் போக மீதியுள்ளவற்றை நாம் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட வேண்டும். அனைத்திலும் தன்னிறைவு பெற்ற, தன்னிகரற்ற நாடாக நம் நாடு மலர வேண்டும் என்று மக்கள் கவிஞர் நினைத்தார். அவரது அத்தகைய உன்னத உளக்கிடக்கையைப் பிரதிபலிப்பதாக இப்பாடல் வரிகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று உலகில் போரால் அழிவுற்ற நாடுகள் அதிகம். அமைதியின்றி, உள்நாட்டு, வெளிநாட்டுப் போர்களால் சிதிலமடைந்து போன நாடுகள் அதிகம். மேலும் சில நாடுகளில் வளமிருந்தாலும் அந்நாட்டில் பல்வேறு உள்நாட்டுப் போராளிக் குழுக்கள் போரிட்டுக் கொண்டு இருப்பதால் அமைதியைத் தொலைத்துவிட்டு வளங்குன்றி அயல்நாட்டின் உதவிக்காகக் கையேந்திக் கொண்டு திரியும் அவலநிலையும் நீடித்துக் காணப்படுகின்றது.

மக்களின் வரிப்பணம் மிகுதியாக ராணுவத்திற்கே செலவிடப்படும் நிலை உலக நாடுகளில் மிகுதியாக நிலவுகிறது. ஒரு நாடு தனது ராணுவத்திற்காக ஒரு இலட்சம் செலவிட்டால் பக்கத்து நாடானாது அதைவிடக் கூடுதலாக நிதியை ஒதுக்குகின்றது. அவ்வாறு ராணுவத்திற்கே அதிகம் நிதி ஒதுக்கப்படுவதால் மக்களின் நலத்திட்டங்கள் புறந்தள்ளப்படுகின்ற சூழல் உருவாகின்றது. அதுமட்டுமல்லாது நாட்டில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டு பிற நாடுகளிடம் கடன் கேட்கும் அவலம் ஏற்படுகின்றது. இதனால் நாட்டின் முன்னேற்றம் தடைப்படுவதுடன் மக்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக மாறுகின்றது. இந்நிலை மாற வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும். உள்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் அமைதி நிலவினால் ராணுவத்திற்காகப் பெரும் நிதியைச் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படாது. மக்கள் வாழ்க்கை மேம்படுவதற்கான செலவுகளே அதிகம் மேற்கொள்ளப்படும். மக்கள் வாழ்க்கை வளமுற்று நாடு செழிப்படையும். இதனையே உள்ளீடாகக் கொண்டு மக்கள் கவிஞர் இப்பாடலில் பாடுகின்றார்.

நோய் இல்லாத, அனைத்துத் துறையிலும் தன்னிறைவு பெற்ற, அமைதி நிலவக்கூடிய மிகச் சிறந்த நாடாக நமது பாரத நாடு உருவாக வேண்டும் என்று மக்கள் கவிஞர் மகாகவியைப் போன்று கனவு காண்பது இருவருக்கும் நாட்டின் மீதுள்ள பற்றுள்ளத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது. கவிஞரின் இக்கனவு,

‘‘வண்மையில்லை ஓர் வறுமை இன்மையால்

திண்மை இல்லை நேர்செறுநர் இன்மையால்

உண்மை இல்லை பொய்யுரை இலாமையால்

ஒண்மை இல்லை பலகேள்வி ஓங்கலால்’’ (கம்ப.,பால.,பா.எ.,85)

என்று கம்பர் படைத்துக் காட்டும் அயோத்தியின் வளம் போன்று காணப்படுவது ஒப்பு நோக்கத்தக்கதாகும். கற்பனையில் கவிஞர் படைத்துக் காட்டியிருப்பது இவ்வாறெல்லாம் பாரதநாடு மலர்ந்து உயர்ந்தோங்க வேண்டும் என்ற உயரிய எண்ணமே ஆகும்.

இருபெருங் கவிஞர்களின் எண்ணம் காலங்கள் மாறினாலும் மாறாமல் ஒன்றுபட்டு இருப்பது சிறப்பிற்குரியதாகும். இந்தப் பாரத மண்ணையும் மக்களையும் நேசித்த மாபெருங் கவிஞர்களின் எண்ணம் நிறைவேறும் காலம் நெருங்கி வருகிறது. ஏனெனில் கவிஞர்களின் வாக்குப் பொய்க்காது என்பதால் பாரத நாடு உலகில் தன்னிறைவு பெற்ற நலமான வளமான நாடாக மாறும் என்பது திண்ணம்.

——-

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 21 நிரம்பும் நின் நறுமணம்.உகுயுர் இனக் கதைகள் (சீனா)
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *