பொறுப்பு – சிறுகதை

7
0 minutes, 1 second Read
This entry is part 26 of 35 in the series 29 ஜூலை 2012

வாசலில் பைக் சத்தம் கேட்டு, ரவி, படித்துக்கொண்டிருந்த நாவலை விரித்த நிலையில் குப்புற மேஜை மீது வைத்துவிட்டு எழுந்து சென்று கதவு திறக்கையில், மஞ்சு, மகேஷின் பைக்கிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தாள். பைக்கின் ஹெட்லைட் ஒளிவீசிக்கொண்டிருந்த‌தில், எதிர் வீட்டு வாச‌லில் சடகோபனும், அவர் பையன் சுந்தரும், மனைவி வசந்தியும், மகள் வினோதினியும் நின்றிருந்த‌து தெரிந்த‌து. சடகோபனும் அவர் மனைவியும் எப்போதும் போல் சினேகமாய் சிரித்தார்கள்.

“ஹாய், ரவி”

“ஹாய் மகேஷ், பாத்து ரொம்ப நாள் ஆச்சு. எப்படி இருக்கீங்க?”

“ஃபைன். ஹவ் அபெளட் யூ?”

“க்ளாட் மேன். மூவி எப்படி இருந்தது”

“மூவி வாஸ் நைஸ். நீயும் வந்திருக்கலாம். இட் வுட் ஹவ் பீன் க்ரேட்”

“ஆமா டியர், வீ மிஸ்ட் யூ” என்றபடியே மஞ்சு, ரவியின் இடுப்பைச் சுற்றி வளைத்துக்கொண்டாள்.

“ஓ..ரியலி.. ” அமைதியாய் சிரித்தபடியே பதிலளித்தான் ரவி.

“ஓகே, ரவி.. காட் டு கோ.. நான் கிளம்பறேன்”

“ஓகே மேன். குட் நைட்” ரவி வழியனுப்ப‌,

“சீயூ மகேஷ்” இணைந்துகொண்டாள் மஞ்சு.

“மகேஷுக்கு மூவி பார்க்கிற எண்ணமே இல்லை. உங்ககிட்ட ஏதோ கேட்கணும்னு சொல்லிட்டிருந்தான். நீங்க தான் வரவே இல்லை” இரவு உணவில் செல்லமாய் கோபித்தாள் மஞ்சு.

“என்ன விஷயமாம்? உன்கிட்ட ஏதும் சொன்னானா?”

“நான் கேட்டேனே? அவன் உங்ககிட்ட தான் சொல்வானாம்.. அதுக்கு மேல நான் கேக்கலை. நீங்களாச்சு.அவனாச்சு”

“நீங்க ரெண்டு பேரும் ஒரே ஆஃபீஸ்ல வேலை பாக்கறீங்க. உனக்கு கூடவா என்னன்னு தெரியாது?”

“ஒரே ஆஃபீஸ்ல வொர்க் பண்ணிட்டா எல்லாம் தெரிஞ்சிடுமா என்ன?”

“தெரியாதா? ஆஃபீஸுன்னா ஒரே இடத்துல இருக்கும். அவன் யாரையாச்சும் லவ் பண்ணினா உனக்கு தெரியாதா என்ன?”

“அவனா! லவ்வா! அப்படியே லவ் பண்ணிருந்தாலும் எனக்கெப்படிப்பா தெரியும்?”

“ஏன் மஞ்சு தெரியாம? லவ் பண்றவங்க மனசு, லவ் பண்றவங்களுக்கு தெரியாதா?” என்றுவிட்டு கண்ணடித்தான் ரவி.

“டேய், என்ன சாரு இன்னிக்கு ரொம்ப ஜாலியா இருக்கிறாப்புல இருக்கு?”

“ஏன் இல்லாம? ஐ ஃபீல் தி லவ் எவ்ரிடே டியர். ஐ லவ் யூஉ உ உ உ ஊ” என்று ராகமாய் சிரித்தபடியே ரவி இழுக்க‌,

“ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ” போட்டிக்கு மஞ்சுவும் அதே ராகத்துடன் இழுத்தாள். இருவரும் சிரித்தார்கள். ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக்கொண்டார்கள்.

இதற்கு மேல் இவர்களைப் பற்றி மேல் விவரம் சொல்லாமல் போனால், சரியாக இருக்காது. ரவிக்கு மஞ்சுவுடன் திருமணமாகி இரண்டு வருடங்களாகிறது. ரவிக்கு வயது 31, மஞ்சுவிற்கு வயது 25. காதல் திருமணம். மஞ்சு, ரவி இருவருமே பொறியியல் பட்டதாரிகள். இருவரும் இருவேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். வீடு அண்ணா நகரில் 9வது அவென்யூ. திருமணமான நாளிலிருந்தே ரவியின் அப்பா, மகனுக்காக அவர் காலத்தில் வாங்கிய மனையில் இரண்டு படுக்கையறை வீடு கட்டி குடித்தனம் துவங்கியாயிற்று. மகேஷ், மஞ்சுவுடன் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறான். மஞ்சுவின் உற்ற தோழன். அன்று வெள்ளிக்கிழமை, ரவி, தன் காதல் மனைவி மஞ்சுவுக்காக, அவள் பார்க்க‌ விரும்பிய‌ திரைப்படமொன்றிற்கு செல்ல டிக்கட் எடுத்திருந்தான். ஆனால், ப்ரொடக்ஷனில் நேர்ந்துவிட்டு தவறு ஒன்றிற்காக அவசர அவசரமான, முந்தைய வாரத்தில் எழுதப்பட்ட ப்ரோக்ராம்களை மீண்டும் டிப்ளாய் செய்யவேண்டி வந்ததில், ரவி வீட்டில் தேங்க வேண்டியதாகிவிட்டது. ஆதலால் மஞ்சு, மகேஷுடன் திரைப்படம் போய் பார்த்துவிட்டு வந்தாள்.

சனிக்கிழமை மாலை, ரவி அலுவலகத்தில் ரீடிப்ளாய் செய்துவிட்டு வீடு வந்து சேர மாலை ஆறு தாண்டியிருந்தது. காரை போர்ட்டிகோவில் நிறுத்திவிட்டு, வீட்டின் காலிங் பெல் அழுத்த எத்தனித்தபோதுதான் கவனித்தான் கதவு தாழிடப்பட்டு பூட்டப்பட்டிருந்தது. மாலையில் ஷாப்பிங் செல்ல இருப்பதாய் மஞ்சு நாளின் முற்பகுதியில் குறுஞ்செய்தி இட்டிருந்தது நினைவுக்கு வந்தது. பொதுவாக இருவரில் யாரேனும் வெளியே செல்ல நேர்ந்தால் எதிர் வீட்டில் சாவி கொடுத்துவிட்டுப் போவது வழக்கம் என்பதாய், எதிர்வீட்டை அண்டி கதவு தட்டினான் ரவி. சடகோபன் கதவு திறந்தார். சிரித்தார்.

“ஹாய் ரவி”

“ஹெல்லோ சார், எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன்ப்பா. வீட்டில சாவி குடுத்துட்டு போனாங்கப்பா” என்றுவிட்டு, அருகாமையிலிர்ந்த டிவி பெட்டியின் மீதிருந்த சாவியை எடுத்து நீட்டினார். தானும் வெளியே வந்தார். வெளியே வருகையில், வீட்டுக் கதவை பொத்தினாற்ப்போல் சாத்தினார்.

ரவியின் தோல் மீது அணைவாய் கைபோட்டபடி,

“ரவி, மஞ்சுக்கு தம்பி இருக்கிறதா நீ சொல்லவே இல்லையே” என்றார்.

“எப்படி சொல்றது சார். அவளுக்குத்தான் தம்பின்னு யாரும் இல்லையே” என்றான் ரவி மெல்லிய புன்னகையுடன்.

“அட என்னப்பா, நேத்து பாத்தோமே. பைக்ல வந்து இறங்கினித்தே மஞ்சு”

“ஓ.. அதுவா..அது மகேஷ்.. ஃப்ரண்ட் சார்”

“ஓ.. ஃப்ரண்டா? உனக்கா? மஞ்சுவுக்கா?”

ரவி புரிந்துகொண்டான்.

“மஞ்சுவுக்குத்தான் சார். மஞ்சு மூலமாக இப்போ எனக்கும் ஃப்ரண்ட்” என்றான்.

“அப்படியா, சரி சரி.. நேத்து பாத்தோம்..வசந்திதான் சொன்னா. தம்பின்னுட்டு”

“ஓ.. ஓகே சார்.. நன்றி..வரேன் சார்” என்றுவிட்டு நகர்ந்தான் ரவி. அவன் பின்னால், சடகோபன், இமைக்காத விழிகளுடன் ரவியையே பாத்துக்கொண்டு நின்றிருந்தார்.

பின் மாலையில் ஏழு மணி தாண்டி வீடடைந்தாள் மஞ்சு. மஞ்சுவுக்கென ரவி போட்ட காஃபி, மஞ்சுவின் இதழ்களுக்கு ஏங்கி, ஆறி காய்ந்து போயிருந்தது.

“என்னாச்சு மஞ்சு, ஷாப்பிங்ல ஏதாச்சும் ப்ராப்ளமா?”

“ஷாப்பிங் போலப்பா”

“ஷாப்பிங் போகலையா? ஷாப்பிங் போறதாத்தானே சொன்னே?”

“சொன்னேன். ஆனால் போகலை. மனசு சரியில்லாம இருந்தது. அதனால பார்க் போயிருந்தேன்”

“ஓ.. என்னாச்சு குட்டி? ஏதாவது பிரச்சனையா?”

“என்ன சொல்றது ரவி. இந்த மனிஷங்க ஏன் இப்படி இருக்காங்கன்னு தெரியலை”

“ஏன் என்னாச்சு?”

“வேலைக்காரி பப்பி சொன்னா. எதிர் வீட்டு பிசாசுங்களை நினைச்சா…” இழுத்தபடி பொறுமினாள் மஞ்சு.

ரவிக்கு புரிந்துபோயிற்று.

“நேத்து பைக்ல வந்ததைப் பத்திதானே?” என்றான் ரவி.

மஞ்சுவின் முகத்தில் ஆச்சர்ய ரேகைகள் அடர்த்தியாய் படிந்தன‌. இவனுக்கெப்படி தெரியும் என்பதான ஆச்சர்யம்.

“உனக்கெப்படி தெரியும் ரவி?”

“சடகோபன் சார் சொன்னார்”

மஞ்சு உதடு கடித்தாள். “என்ன‌ சொன்னார் அந்தாளு?” என்றாள். சொன்னான்.

“ரவி, நீ பதிலுக்கு எதுவும் கேட்கலையா?”

“நான் எதுவும் கேட்கலையேப்பா”

“உனக்கு என் மேல ஏதாவது கோபமா?”

“கோபமா? உன் மேலயா? இல்லையே. நான் ஏன் கோபப்படனும்?”

“உன் பொண்டாட்டி பத்தி சந்தேகமா கேட்டிருக்கான் அவன். உனக்கு கோபம் வரல?”

“லுக் மஞ்சு. எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. நான் உன்னை நம்புறேன். சோ, யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை. அப்புறம், எல்லோர் பார்வையும் ஒண்ணா இருக்கனும்னு அவசியம் இல்லை. நாமே வாயை விட வேணாம்னு இழுத்து வாய்ப்பூட்டு போட்டுக்கிட்டேன். உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு இருந்தேன். பப்பி புண்ணியத்துல உனக்கே தெரிஞ்சிடிச்சி.”

“அப்ப உனக்கு என்கிட்ட சொல்ல ஒண்ணுமே இல்லையா?”

“ஒண்ணுமே இல்லை”.

“இப்போ நான் என்ன பண்றது?”

“எனக்கு தெரியலைடா. நான் வரும்போதே சாப்டுட்டேன். தூக்கம் வருது. நான் தூங்கறேன். சரியா?” என்றான் ரவி கொட்டாவி விட்டபடி.

“என்ன ரவி, இவ்ளோ நடந்திருக்கு. நீ தூங்குறேன்னு சொல்ற? நிஜமாவே உனக்கு என்கிட்ட சொல்ல ஒண்ணுமே இல்லையா?”

“என்ன சொல்லச் சொல்லற குட்டி? இந்த சமூகம், இந்த மக்கள் இதெல்லாத்தையும் நீ இன்னிக்கு நேத்தா பாக்குற? உனக்கு எது சரின்னு தோணுதோ அதைச் செய். இடையில நான் எதுக்கு? நான் ஏன் தலையிடனும்? இது நீ பார்த்து வளர்ந்த சமூகம் தானே? உனக்கு இந்த சமூகத்துல எதை எப்படி செய்யணும்னு தெரியாதா? நல்லது கெட்டது உனக்கு தெரியாதா? நான் ஏன் சொல்லனும்? உனக்கு சொல்ல, என்கிட்ட எதுவும் இல்லை. எனக்கு தெரிஞ்சது எல்லாமே உனக்கும் தெரியும்னு நம்பறேன் குட்டி.”

“எனக்கு நீ பொறுப்பு இல்லையா?”

“இல்லை. தாலி கட்டிட்டா புருஷன், பொண்டாட்டியோட சகலத்துக்கும் பொறுப்பு இல்லை. பொறுப்ப யோசிக்கிறப்போ, சமூகத்தைப் பத்தி யோசிக்கணும், சமூகத்தை பத்தி யோசிச்சா, கட்டுப்பாடு பத்தி யோசிக்கணும், கட்டுப்பாடு பத்தி யோசிச்சா, அது நிச்சயம், மனைவியோட‌ சுதந்திரத்துக்குள்ள தலையிடற மாதிரி ஆயிடும். உன் சுதந்திரம் உன்கிட்ட தான் இருக்கு. என்ன செய்யிறதுன்னு நீயே முடிவு பண்ணுடா. எனக்கு தூக்கம் வருது. நான் தூங்கறேன். என்ன?” என்றுவிட்டு படுக்கையறையை அண்டி, விளக்கணைத்து படுக்கையில் விழுந்தான் ரவி. உறக்கம் அவனை ஆரத்தழுவிக் கொண்டது.

முற்றும்.

– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigationவிஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூறுநீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசு

Similar Posts

7 Comments

 1. Avatar
  பவள சங்கரி. says:

  அன்பின் திரு ராம்பிரசாத்,

  நல்ல கதைக்களம். வித்தியாசமான நடை. பல இடங்களில் வார்த்தைகள் விடுபட்டுப் போயிருக்கிறதே.

  அன்புடன்
  பவள சங்கரி

 2. Avatar
  இளங்கோ says:

  Dear Editor,
  Not able to read a single line fully.

  Please correct the formatting issue. For every line, one can not come down and move the cursor..

  Elango

 3. Avatar
  இளங்கோ says:

  எந்தவித பம்மாத்தும் இல்லாமல் எழுதப்பட்ட, நல்ல சிறுகதை. தொடர்ந்து நிறைய எழுதுங்கள் ராம்ப்ரசாத்.

 4. Avatar
  punai peyaril says:

  இதை அடியாக கொண்டு நீங்கள் தொடராக எழுதலாம்.

 5. Avatar
  இளங்கோ says:

  புனைபெயரில் சொல்வது மிக நல்ல ஆலோசனை. ஒரு பெரிய நாவலுக்கு உரிய அருமையான துவக்கம், இந்த சிறுகதை. முயலுங்கள் ராம்ப்ரசாத்.

 6. Avatar
  ஜெயஸ்ரீ ஷங்கர் says:

  அன்பின் திரு.ராம்ப்ரசாத் அவர்களுக்கு,

  முதலில் படித்தபோது பாதிக் கதை தான் இருந்தது..
  முழுதும் படிக்க இயலாமல் இருந்தது..இன்று படித்தேன்.
  இன்றைய சூழ்நிலை அழகாகப் படம் பிடித்து எழுதிய விதம்
  யதார்த்தமாக இருந்தது.
  நன்று
  அன்புடன்
  ஜெயஸ்ரீ ஷங்கர்.

 7. Avatar
  ராம்ப்ரசாத் says:

  அன்பின் நண்பர்களுக்கு,

  முயற்சிக்கிறேன் தோழர்களே.

  உங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.

  நட்புடன்,
  ராம்ப்ரசாத்

Leave a Reply to ராம்ப்ரசாத் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *