மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மு.வ. நூற்றாண்டு விழா

author
0 minutes, 2 seconds Read
This entry is part 8 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

 


(செய்தி: கே.எஸ்.செண்பகவள்ளி, துணைச் செயலாளர்)

 

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரரறிஞர் மு.வரதராசனார் நூற்றாண்டு விழா எதிர்வரும் 26.8.2012ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் கோலாலம்பூர் ஜாலான் ஈப்போவிலுள்ள கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் தலைவர் பெ.இராஜேந்திரன் தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

 

இருபதாம் நூற்றாண்டு கண்ட நிகரற்ற பேராசிரியர் டாக்டர் மு.வ. என்பது வரலாற்று உண்மை. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் மு.வ. என்னும் இரண்டெழுத்து, தமிழ் மக்களிடையே, குறிப்பாக மாணவர்களிடையே ஒலித்த இரண்டெழுத்து மந்திரம் ஆகும். வட ஆர்க்காடு மாவட்டத் திருப்பத்தூரில் பிறந்த மு.வ. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு அங்கேயே வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியைத் தொடங்கினார். தனியே படித்துப் புலவர் தேர்வில் மாநிலத்தில் முதல்வராகத் தேர்ச்சி பெற்று, அவ்வூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகி, பின் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்து, பேராசிரியராக உயர்ந்து, சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியராகத் திகழ்ந்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஒளிர்ந்து புகழின் உச்சியில் மறைந்தார். எளிய குடும்பத்தில் பிறந்து ஆர்வத்தாலும் உழைப்பாலும் படிப்படியாக உயர்ந்து முன்னேற்றம் கண்டு பெருவாழ்வு வாழ்ந்த மு.வ.விற்கு நூற்றாண்டு விழா எடுப்பதில் சங்கம் பெருமை கொள்கிறது.

 

இவ்விழாவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும், மு.வ.வின் மாணவருமாகிய முனைவர் இரா.மோகன் அவர்கள் கலந்து கொண்டு மு.வ.வின் பணிகளைப் பற்றிப் பேருரை ஆற்றுவதோடு, அவருடனான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வார்.

 

மேலும், முனைவர் இரா.மோகனின் துணைவியார் முனைவர் நிர்மலாவும் மு.வரதராசனாரின் பேரன் டாக்டர் தாமோதிரனும் கலந்து கொண்டு உரையாற்றுவார்.

 

மு.வ. பற்றி மூத்த கவிஞர்களும், இளைய கவிஞர்களும் கவிதைகள் படைப்பர். மு.வ.வின் நாவல்களைப் பற்றி மூன்று எழுத்தாளர்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வர்.

 

இவ்விழாவில் படைக்கப்படும் கட்டுரைகளும், கவிதைகளும் மற்றும் சிறப்புக் கட்டுரைகள் உள்ளடக்கிய சிறப்பு மலரும் இலவசமாய் அனைவருக்கும் வழங்கப்படும்.

 

ஒரு மாபெரும் இலக்கியவாதியாய்த் திகழ்ந்து தமிழ் இலக்கிய உலகில் முத்திரைப் பதித்த மு.வரதராசனார் அவர்களுக்காக நடத்தப்படும் இவ்விழாவில் அனைவரும் கலந்து கொள்ள மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அன்புடன் அழைக்கிறது.

——————————————-

Series Navigationஇன்னும் உன் குரல் கேட்கிறது கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் இலக்கியகம் ஏற்பாட்டில் சிறுவர்/இளையோர் சிறுகதைகள் பரிசளிப்பு விழா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *