முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
மண்ணின் மணம் பரப்பிய கவிஞர்கள்
பாட்டு பாரதியின் கையிலும், பட்டுக்கோட்டையின் கையிலும் பண்பட்ட கருவியாக விளங்கியது. அக்கருவியை அவர்கள் கையாண்ட முறைமை இருவருக்கும் இலக்கியப் பெருமையை ஈட்டிக் கொடுத்தது. கவிஞர் இருவரின் கவிதைகளும் மெருகேறி நின்றமைக்குக் காரணம் அவர்களது பாடல்கள் நாட்டுப்புறத் தன்மையின் மீது வேர் கொண்டு நின்று மண் மணம் பரப்பியதே ஆகும். நாட்டுப்புற இலக்கியத்தின் சாயலையும் சார்பையும் தன்மயமாக்கிக் கொண்டு, அதே நேரத்தில் இக்காலத் தன்மையையும் குறைவுறாது பாடியதே இருகவிஞர்களின் சாதனை எனலாம்.
பாமரர்களின் வாயில் எளிமைக் கோலத்துடன் தாமாகப் பொங்கி வழிவது என்றும் கற்றுத் துறைபோகிய பாவாணர்களின் சீரிய தீஞ்சொற்களால் புனைந்து தருவது என்றும் பாட்டில் இருவகை உண்டு. புலவர்களின் பாடல்கள் உயர்ந்தது எனினும் அவர்தம் படைப்புகளும் ஏதோ ஒரு வகையில் நாட்டுப்புற இலக்கியத்திற்குக் கடன்பட்டே இருக்கின்றன. இஃது உலக இலக்கியங்கள் அனைத்திலும் காணக்கிடக்கும் உண்மையாகும். தமிழிலக்கிய வரலாற்றிலும் இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. இப்படியிருக்க இருபெருங்கவிஞர்களின் பாடல்களும் இப்பொது உண்மைக்கு விதிவிலக்காக இருக்க இயலாது.
‘‘பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா’’
என்று பாடி வியந்து நின்ற பாரதியார் நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் தன்னை இழந்து நின்றதாகக் கூறுகிறார். மேலும்
‘‘ஏற்றநீர் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும்
பொற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒளியினிலும்
சுண்ணம் இடிப்பார்தம் சுவை மிகுந்த பண்களிலும்
பண்ணை மடலார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்’’
(குயில்பாட்
பாரதியார் நெஞ்சைப் பறிகொடுத்ததாகக் கூறுவது குறிப்பிடத்தக்கது. பாரதியின் இந்தப் பறிகொடுத்தலே தமிழுக்கு ஆக்கம் ஆயிற்று எனலாம்.
பள்ளு
தொழில் செய்வோர் சேர்ந்து பாடும் குழுப்பாடல்கள் அவரது அடிமனத்தில் பதிந்து செயற்பட்டன. அச்செயற்பாட்டின் வெளியீடுகளாகக் கவிதை நாட்டுப்புறத் தன்தை என்னும் உயிரூட்டத்தோடும் இக்காலத்தன்மை என்னும் ஒிக் கோலத்தோடும் அவரது உள்ளத்திலே இருந்து புறப்பட்டன. பாரதியின்,
‘‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டுடோ மென்று’’
என்ற ‘சுதந்திரப் பள்ளு’ என்ற பாடல் இதற்குச் சான்றாக அமைந்திலங்குகின்றது. உழவர்கள் சேர்ந்து வயலில் வேலை செய்யும்போது பாடிய பாடல்தான் இதற்கு மூலகாரணமாக அமைந்தது எனலாம். இப்பாடலின் குரல் உழவர்களின் குரலாக இல்லாது பாரத நாட்டு மக்களின் குரலாக ஒலிக்கிறது.
புதிய கோணங்கி, கும்மி
பள்ளுப் பாடலைப் போன்றே புதிய கோணங்கியும், பெண்கள் விடுதலைக் கும்மியும் முறையே குடுகுடுப்பைக் காரனின் பாட்டையும் கும்மிப் பாட்டையும் தழுவி எழுதப்பட்டவை ஆகும். குடுகுடுப்பைக் காரன், ‘‘நல்ல காலம் பிறக்குது ஜெய் ஜக்கம்மா’’ என்று குடுகுடுப்பையை ஆட்டிக் கொண்டே கூறுவதைப் போன்று,
‘‘நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது
ஜெய் ஜக்கம்மா
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது’’
என்று பாடுகின்றார்.
பெண்கள் விடுதலைக் கும்மியில்,
‘‘கும்மியடி தமிழ்நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!’
(பாரதியார் கவிதைகள், ப., 217)’
என்ற பாரதியாரின் பாடல் நாட்டுப்புறப் பாடலான கும்மிப் பாடலின் அமைப்பில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டுப்புறப் பாடல்களின் வடிவங்களையும் அதன் இசையையும் சமுதாய மாற்றத்திற்காகப் பாரதி பயன்படுத்தியிருப்பது சிறப்பிற்குரியதாகும்.
நாட்டுப்புறப் பாடல்களில் பாரதியின் இதயததை ஈர்த்த பகுதி அவற்றின் நடையே ஆகும். பாஞ்சாலி சபதத்தில் சூதாடல் எனும் பகுதியில்,
‘‘மாயச் சூதினுக்கே- ஐயன்
மனமி ணங்கி விட்டான்!
தாயம் உருட்டலானார் – அங்கே
சகுனி ஆர்ப்பரித்தான்’’
என்பதைப் போன்று பதின்மூன்று பாடல்கள் உள்ளன. இப்பாடல்கள் குருவிக்காரன் பாடும் பாட்டின் வடிவத்தில் அமைந்துள்ளன.
தெருவில் பாசிமணிகளும், ஊசிகளும் விற்றுக் கொண்டும் சில சமயங்களில் பிச்சை எடுத்தும் வாழ்க்கை நடத்தும் குருவிக்காரப் பெண்கள்,
‘‘மாயக்காரனம்மா – கிருஷ்ணன்
மகுடிக்காரனம்மா’’
என்று பாடிய பாடலே இப்பாடல்களின் பிறப்புக்குக் காரணம் என்று பாரதி கூறுகிறார். சூதாட்ட வருணனைக்கும் அதில் ஏற்படும் பரபரப்பான வார்த்தைகளையும் செயல்களையும் விளக்குவதற்கு ஏற்ற நடையாக இப்பாடல் பொருத்தமாக அமைந்துள்ளது.
வண்டிக்காரன் பாட்டு
பாரதியார் கொட்டைய சாமி என்ற தலைப்பில் கதை ஒன்றை எழுதியுள்ளார். அதில் கொட்டையசாமி என்னும் பெயரினன் ஒருவன் கண்ணனைப் போல் கூத்தாடிக் கொண்டு வெண்டிக்காரன் பாடுவதைப் போன்று பாடிச் செல்வதை வண்டிக்கார மெட்டு என்ற சிறு தலைப்பினைக் கொடுத்து பாரதி எழுகுகின்றார். தெம்மாங்கு என்று கூறப்படும் வண்டிக்காரர் பாட்டின் இனிய இசை பாரதியைக் கவர்ந்திருக்கிறது. அதனால் அத்தலைப்பில்,
‘‘காட்டுவழிதனிலே – அண்ணே
கள்ளர் பயமிருந்தால் . . . .? எங்கள்
வீட்டுக் குல தெய்வம் – தம்பி
வீரம்மை காக்குமா . . . ..’’
என்ற பாடலை எழுதியுள்ளார்.
இங்ஙனமே பாரதியாரது ‘முத்துமாரி பாடலுக்கு’ப் பூசாரிகள் பாடும் உடுக்கடிப்பாட்டும், ‘எங்கள் தாய்’ என்ற பாடலுக்குக் காவடி எடுத்துச் செல்லும் அடியவர்கள் பாடும் பாடலும் தூண்டுகோலாக இருந்திருப்பது நோக்கத்தக்கது. வண்டிக்காரன் பாடல் இருவர் பேசிக் கொள்வது போல் உரையாடல் அமைப்பில் அமைந்திருக்கும்.
லாவணிப் பாட்டு
இருவர் கோபத்துடன் விவாதிப்பதைப் போன்று அமைவது லாவணிப்பாட்டு. கிராமப்புறங்களில் கொண்டாடப்படும் காமன் பண்டிகைகளில் இருவர் எரிந்த கட்சி, எரியாத கட்சி எனப் பரிந்து நின்று பாடலாலேயே விவாதம் செய்வர். சிவபெருமான் காமக்கடவுளாகிய மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தாரா? இல்லையா? என்பதே விவாதப் பொருள். இந்த லாவணிப் பாட்டே வெள்ளைக்கார விஞ்ச் துரையும் தியாகச் செம்மல் வ.உ.சிதம்பரனாரும் பேசிக்கொள்வதாகப் பாரதி எழுதியிருக்கும் பாட்டிற்கு முன்மாதிரியாக அமைந்தது எனலாம்.
நாட்டுப்புறப் பாடல்களின் இனிய இசையை மடடும் ஈர்த்து அதில் மயங்கி நிற்கும் வெறும் ஓசைக்காதம் மட்டுமே இருபெருங்கவிஞர்களிடம் இருந்ததாகக் கூற இயலாது. நாட்டுப்புறப் பாடல்கள் பாடப்படும் சூழல் அமைவு இன்னதெனக் கண்டு, அச்சூழழமைவினை இக்காலத்திற்கு ஏற்பப் பொருத்திக் காணும் திறனும் அவர்கள் பால் இருந்து இதன்வழிப் புலப்படும். எனவே கவிஞர்களின் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்களின் நகலாக மட்டும் நின்றுவிடாமல் உண்மைத்தன்மையும் மெருகும் கொண்டு தனித்துவம் உடைய படைப்பாக உயர்ந்து நிற்கின்றன.
ஆனந்தக் களிப்பு
நாட்டுப்புறப் பாடல்களைத் தமக்கு முன்னர் நயம்படக் கையாண்ட முன்னோரையும் கவிஞர்கள் அறிந்து வைத்திருந்தனர். வாழையடி வாழையென வளர்ந்து வரும் தமிழ்க் கவிதை மரபில் தாம் என்ன செய்ய வேண்டும் என்கிற நனவு நிலை அவர்களுக்கு என்றென்றும் இருந்து வந்தது. ஆனந்தக் களிப்பு என்பது நாட்டுப்புறப்பாடல் வகையில் காணப்படும் ஒரு வர்ண மெட்டுஆகும். இதனை இசைநூல் வல்லார் தாது என்பர். ஆனந்தக் களிப்பை அதன் ஆற்றலெல்லாம் துலங்கும் வகையில் அழகுறக் கையாண்ட புலவர்கள் பலர். தாயமானவரும், கோபால கிருஷ்ண பாரதியாரும் இராமலிங்க வள்ளலாரும் ஆனந்தக்களிப்பு மெட்டில் பல பாலடல்களைப் பாடியுள்ளனர்.
‘‘தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்
தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர்!’’ என்னும் பாடல் ஆனந்தக் களிப்பில் அமைந்தது ஆகும். இப்பாடல் தவிர ‘‘தமிழ்த்தாய்’’ என்னும் பாடலும் இந்த மெட்டிலேயே பாரதியாரால் பாடப்பட்டுள்ளது. நாட்டுப்புறப் பாடல் வடிவத்திற்கு இலக்கியத் தகவினை முதன்முதலில் உண்டாக்கித் தந்தவர் கோபால கிருஷ்ணபாரதியார் ஆவார். அவரது நந்தனார் சரித்திரக் கீர்த்தனை தமிழ் இலக்கியப் படைப்புகளுள் தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்கின்றது. பாரதி அந்நூலில் காணப்படும் பல்வேறுவிதமான பாடல்களைத் தனக்கு முன்மாதிரியாகக் கொண்டு பல இசைப்பாடல்களை எழுதியுள்ளார்.
விடுகதை
விடுகதையும் நாட்டுப்புற இலக்கிமே ஆகும். பாரதியார் தாம் எழுதிய கொட்டையசாமி என்னும் கதையில்
‘‘பட்டைக் கிழித்தவன் பட்டாணி – அதைப்
பார்திருந்தவள் கொங்கணிச்சி
துட்டுக் கொடுத்தவன் ஆசாரி – இந்தச்
சூழ்ச்சியை விடு சொல் ஞானப்பெண்ணே!’’
என்ற ஒரு விடுகதையை எடுத்தாள்கிறார். இதில் அமைந்துகிடக்கும் புதிர் என்ற விடுகதைப் பண்பினைப் பாரதியின்
‘‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்! – அதை
அங்கொரு காட்டினில் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?’’
என்ற பாட்டிலும் இதனை நாம் காணமுடிகிறது.
விடுகதைப் பாட்டினால் தாக்கம் உற்ற பாரதியார் தமது பாடலை வெறும் விடுகதை வடிவத்தில் முடிக்கவில்லை. அதைக் குறியீட்டுருவகம் என்று கூறும் அளவிற்கு நுட்பமாக உயர்த்தி எடுத்துரைக்கின்றார். காண்போரின் நோக்கிற்கு ஏற்ப அக்கவிதை பல்வேறு மட்டத்தில், பல்வேறு நிலைகளில், பல்வேறு பொருளைத் தந்து நிற்கிறது.
‘‘நான் கூறும் அக்கினிக் குஞ்சு யாதென்று கூறடி ஞானப்பெண்ணே!’’ என்று பாரதி பாட்டை முடித்திருந்தால் அவர் விடுகதைக் கவிஞராகத்தான் வெளிப்பட்டிருப்பார். இப்படி ஒரு வினாவை அவர்தம் கூற்றாக வெளிப்படையாகக் கேட்கவில்லை. எனினும் கேள்வி மறைந்து நிற்கிறது. பதிலும் அந்தப் பாடல் வரிகளுக்குள் உறைந்து கிடக்கின்றது.
சிந்து
சிந்து என்ற பாடல் வடிவம் மகாகவிக்கும் மக்கள் கவிக்கும்கைவந்த கலையாக இருந்திருக்கிறது. பாவேந்தர் பாரதிதாசன், ‘சிந்துக்குத் தந்தை’ என்று அவரைச் சிறப்பித்திருப்பது இங்கு நினைக்கத் தக்கது. சிந்து வடிவம் பாரதியே கண்டுபிடித்த சொந்த நடை அன்று. நாட்டுப்புறப் பாடல்களைக் கண்டு வடித்த சந்த நடையே ஆகும். இந்த நாட்டுப்புறப் பாடல் வடிவமே பாரதியைச் சிந்துப் பாட்டுலகின் தந்தையாக்கியது.
கதைப்பாடல்
நாட்டுப்புறங்களில் வழங்கப்படும் பாட்டிலக்கியம் மட்டுமே பாரதியின் படைப்புக்குத் தூண்டுகோலாக இருந்தது எனச் சொல்ல முடியாது. கதை இலக்கியமும் அவரது கவிதை உணர்வுக்கு விருந்தாக ஆயிற்று. குயில்பாட்டு என்னும் அரிய படைப்பை வேதாந்தமாக விரித்துப் பொருள் உரைக்காமல் பாட்டுக் கிடந்த மேனியே நோக்கினால் அஃதோர் சிறந்த கதைப்பாடலாகும். மகாகவி தாம் கேட்க நேர்ந்த ஏதோ ஒரு நாட்டுப்புறக் கதையால் தூண்டப்பட்டுக் குயில்பாட்டைப் படைத்தார் என்பது நோக்கத்தக்கதாகும்.
கூத்து
நாட்டுப்புறவில் என்பது மக்களிடையே வழங்கும் மரபு வழிப்பட்ட நம்பிக்கைகளையும், புராணங்களையும், பழக்க வழக்கங்களையும் பண்பாட்டு எச்சங்களையும் ஒரங்கே குறிப்பது ஆகும்.நாட்டுப்புறக் கலைகளுள் ஒன்று கூத்தாகும். இதனை, இசைக் கூத்து, தெருக்கூத்து, கழைக்கூத்து, கணியான் கூத்து, என்று பலவகையாகப் பகுப்பர். மகாகவி, ‘ஊழிக் கூத்து வெடிபடு மண்டலத் திடிபல தாளம் போட’’ என்று தேவதை புகப்பெற்ற ஒருவன் தன்னை மறந்து ஆவேசமாக அடும் கூத்தின் தாள பாவத்தைத் தன்பால் கொண்டு விளங்குவதை உணரலாம்.
மக்கள் கவிஞரின் பாடல்கள் தனித்துவம் பெற்று மிளிர்வதற்குப் பெருங்காரணமாக இருப்பனவற்றுள் ஒன்று அப்பாடல்களில் மணக்கும் மண்ணின் மணமே ஆகும். பாரதியாருக்குப் பின் நாட்டுப்புற இலக்கியத் தாக்கத்தைப் பெரிதும் பெற்றவர் பட்டுக்கோட்டையாரே ஆவார். திரைப்பட உலகில் நாட்டுப்புற இலக்கிய மரபைப் புகுத்தியவர்களுள் உடுமலை நாராயண கவி, மருதகாசி, தஞ்சை இராமையாதாஸ், கம்பதாசன், கண்ணதாசன், மக்கள் கவிஞர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்தாலும் கொத்தமங்கலம் சுப்புவும் பட்டுக்கோட்டையாரும் மிக அதிகமாகத் திரைப்படத்தில் நாட்டுப்புற பண்ணைப் பயன்படுத்தினர்.
இவர்களுள்ளும் பாரதியின் அடியொற்றி நாட்டுப்புற மண்ணின் மணத்தைத் திரையில் சிறக்கப் பாடியவர் மக்கள் கவிஞரே ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமத்தில் பிறந்து, வளர்ந்து உழைப்பாளராகத் திகழ்ந்து உழைக்கும் மக்களுக்காகப் போராடிய மக்கள் கவிஞரின் பாடல்களில் இயல்பாகவே நாட்டுப்புறப் பாடல்களின் மரபு அமைந்துவிட்டது நோக்கத்தக்கது.
பட்டுக்கோட்டையாரின் பாடலில் இருக்கும் நாட்டுப்புறத் தாக்கத்தைப் பற்றி,
‘‘அவர் பாடல்களில் நான் மிகச் சிறந்த இரண்டு கூறுகளைக் காண்கிறேன். ஒன்று நாடோடிப் பரம்பரை(Folk tradition) அதாவது வழிவழி மரபு மற்றொன்று நவீன முறையில் வெளியிடுதல்( Modern expression) வழிவழி மரபையும் நவீன உணர்வையும் இணைத்துப் பாட்டுத்திறம் காட்டுவது இன்று மிகமிக முக்கியத் தேவையாக அமைந்துவிட்டது.
சராசரி மனிதனின் சாதாரண விருப்பு வெறுப்புகளையும், மன அசைவுகள், உணர்ச்சிப் பெருக்குகளையும் எளிமையாக நேர்பாங்காக உயிர்த் துடிப்பாகச் சொல்லும் மரபே நாடோடி மரபு. இதில் சிக்கலான கருத்துக்களுக்கும், உருவங்களுக்கும் இடமில்லை. எளிய விவசாய நாகரிகத்தின் அடிப்படையான உணர்வுகளை வெளியிட்டு வந்திருப்பதையே இந்த மரபில் பார்க்கிறோம்’’
என்ற தோழர் ப.ஜீவானந்தம் கூறுவது கவனித்து நோக்கக் கூடிய ஒன்றாகும். மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் இனிமை தருகின்ற எளிமையாக விளங்குகின்ற தன்மை கொண்டவையாக இருப்பவை நாடோடி இலக்கியமாகும் என்பதை ஜீவா அவர்களின் விளக்கத்திலிருந்து உணர்ந்து கொள்ளலாம். இந்த எளிமையும், இனிமையும் பட்டுக்கோட்டையாரின் பாடல்களில் மிகவும் இயல்பாக அமைந்துள்ளது.
உழவர் – உழத்தி பாடல்
உழவர் உழத்திப் பாடலைப் பின்பற்றி மக்கள் கவிஞர்,
‘‘பக்கத்திலே இருப்பே – நான்
பார்த்துப் பார்த்து ரசிப்பேன்’’
என்று எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் எளிய சொற்களும், சிக்கலின்றி நேரே உணர்த்தும் திறனும்,இனிய கிராமிய ஒலிநயமும், கிராமிய மண்ணின் மணமும் மிளிருவதை நன்கு காணலாம்.
ஏற்றப்பாட்டு
ஏற்றப்பாட்டிற்கு எதிர்ப்பாட்டில்லை என்பர். ஏற்றத்தின் நீர் இறைக்கும்போது பாடும் பாடலே ஏற்றப்பாட்டு ஆகும். இருவர் மாற்றிப் பாடுவதாக இப்பாடல் அமையும். இவ்வேற்றப்பாட்டின் அமைப்பில் மக்கள் கவிஞர்,
‘‘ஒருவன் ஏற்றமுன்னா ஏற்றம்
இதிலேயிருக்குது முன்னேற்றம்
மற்றவன் எல்லோரும் பாடுபட்டா – இது
இன்பம் விளையும் தோட்டம்
கிணற்று நீரை நிலத்துக்குத்தான்
எடுத்துத்தரும் ஏற்றம்
ஒருவன் கிளைவெடிக்கும் பயிர்களுக்கு
உயர்வளிக்கும் கூட்டம்
மற்றவன் தந்தனத்தானே
ஒருவன் ஏலேலோ’’ (அரசிளங்குமரி,-1957 ப.கோ.பா., ப., 93)
என்று பாடியிருக்கும் பாடல் நாட்டுமரபை ஒட்டி வந்தாலும், புதிய உணர்வை ஊட்டுவதைக் காணலாம். வழிவழி மரபையும் நவீன உணர்வையும் இணைத்துப் பாட்டுத்திறம் காட்டுவது என்று தோழர் ஜீவா கூறுவதற்கேற்ப இக்காலத்திய உழைப்பாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் உடனடித் தேவையான ஒழுங்கை உறுதியை, ஒற்றுமையை வலியுறுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது. மக்கள் கவிஞரைத் தவிர வேறுயாரும் ஏற்றப்பாட்டை திரையுலகில் லாவகமாகக் கையாளவில்லை என்பது நோக்கத்தக்கது.
கும்மி
ஆண்களும், பெண்களும் இணைந்தோ, தனித்தனியாகவோ வட்டமாக நின்று வளைந்து வளைந்து வந்து கைகளைத் தட்டி பாடி ஆடுவது கும்மி என்ற நாட்டுப்புறப் பாடல் மரபாகும். கும்மிப் பாடல் பண்ணும் பொருளும் இயைந்து செவிக்கினிய ஒலி நயத்துடன் அமைந்ததாக புதையல்(1957) திரைப்படத்தில் வெளிவந்துள்ள,
‘‘சின்னச் சின்ன இழைபின்னிப் பின்னிவரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி – நம்ம
தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி
தய்யத் தய்யா தத்தத்தானா தய்யத் தத்தத்தானா’’
என்ற பாடல் அமைந்துள்ளது.
கும்மி மெட்டில் அமைந்த இப்பாடலை வாய்அசைத்துப் பாடினால் தறி அடிக்கின்ற ஓசையுடன் இணைந்த இசையாக இயைந்து வருவதை உணரலாம். கருத்துக்கேற்ற பண்ணாக இப்பாடல் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பட்டுக்கோட்டையாரின் பாடல்களில் நாட்டுப்புற இலக்கிய வகைகளான சிந்து , போணங்கிப் பாட்டு காவடிப்பாட்டு உள்ளிட்டவற்றை ஆங்காங்கே காணலாம். அதனால்தான் தம் பாடல்களை மண்ணின் மணத்தால் மணக்க வைத்த மக்கள் கவிஞரை,
‘‘மொழியின் வரிகளை – நீ
பள்ளிக்கூடத்தில்
எழுதிப் பழகவில்லை
ஏரின் முனையால்
கழனிகளில் கீறிப் பழகினாய்
அதனால்தான் – உன் பாட்டில்
மண்ணின் ஈரம்
மாறவே இல்லை’’
என்று கவிஞர் மதுக்கூர்இராமலிங்கம் புகழ்ந்துரைக்கின்றார் எனலாம்.
தாலாட்டு
தமிழ்இலக்கிய வகைகளில் தாலட்டுப் பாடல்கள் தனித்தன்மை பெற்றவை. ஏட்டிலங்கியங்களிலும் நாட்டுப்புற இலக்கியங்களிலும் சிறந்து விளங்குபவை தாலாட்டுப் பாடல்களாகும். திரையிசைப் பாடல்களில் பலர் தாலாட்டுப் பாடல்களைப் பாடியிருந்தாலும் அவர்களுள் தலைசிறந்தவராக மக்கள் கவிஞர் விளங்குகின்றார். அவர் பாடிய தாலாட்டுப் பாடல்களில்,
‘‘சின்னஞ்சிறு கண் மலர்
செம்பவள வாய்மலர்
சிந்திடும் மலரே – ஆராரோ!
வண்ணத்தமிழ்ச் சோலையே!
மாணிக்க மாலையே!
ஆராரோ! – அன்பே ஆராரோ!’’
எனச் செந்தமிழ் கொஞ்சி விளையாடுவதைக் காணலாம். சொற்கள் உயிர் பெற்று இப்பாடலில் ஆடல் புரிகின்றன. மேலும் தாய்மையின் உணர்ச்சிகள் பலவகையான வண்ணங்களைப் பெற்று உயிர் ஓவியமாக வெளிப்படுகின்றன.
சிறுவர் பாடல்கள்
சிறுவர், சிறுமியர் தனியாகவும், சேர்ந்தும் பாடும் பாடல்கள் சிறுவர் பாடல்களாகும். இவர்கள் விளையாடும் போது ஒருவரை ஒருவர் பார்த்துப் பாடுவதாகவும் விளையாட்டாக ஒருவரைக் கேலி செய்வது போன்றும் இப்பாடல்கள் அமைந்திருக்கும். இந்த அமைப்பில்,
‘‘மாமா மாமா பன்னாடெ
வாங்கி வாயேன் பொன்னாடை’’
எனத் தொடங்கிப் பின் உளளவாறு தொடர்கிறது.
‘‘கோமாளிக்கும் கோமாளி – ஏ
குலுக்கி நடக்கும் ஏமாளி!
கத்தி கொடுததாலே கத்திரிப் பிஞ்சை எல்லாம்
பாஞ்சி பாஞ்சி வீரன் நீயும்
பதுங்கி பதுங்கி நறுக்குவே!’’
‘‘செத்துக் கிடக்கிற கட்டுவிரியனை
எட்டி இருந்தே நொறுக்குவே!
. . . . . . . . . . . . . . . . . . .
மாப்பிள்ளே யின்னா மாப்பிளே
மண்ணாங்கட்டி மாப்பிளே!
சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்டு
நல்லாத் தூங்குவே – தோப்பிலே!’’
என்று ‘பெற்ற மகனை விற்ற அன்னை’ என்ற படத்தில் மாமாவை இளம்பெண்கள் கேலி செய்து பாடுவதாக இடம்பெற்றுள்ளது.
இந்தப் பாடல் முழுதும்,
‘‘மாப்பிளே மாப்பிளே
மண்ணாங்கட்டித் தோப்பிலே!’’
என்ற சிறுவர் பாடும் பாடலின் மறுவடிவமாக அமைந்திருப்பதைக் காணலாம். இச்சிறுவர் பாடலில் கவிஞர் சிற்சில மாற்றங்களைச் செய்து கொண்டு தமது கருத்தினை அதில் அமைத்துள்ளது நோக்கத்தக்கது.
பழமொழி
நாட்டுப்புறக் கூறுகளில் பழமொழிகள் முக்கிய இடம்பெறுகின்றன. இப்பழமொழிகளை அப்படியே எடுத்துக் கொண்டு புதிய கருத்துக்களை எளிமையாக மக்களின் மனங்கொள மக்கள் கவிஞர் கூறுவது சிறப்பிற்குரியதாகும்.
‘‘குட்டி ஆடு தப்பிவந்தால்
குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக் கிட்டால்
குறவனுக்குச்சொந்தம்!’’
என்ற பழமொழியைப் பாசவலை என்ற படத்தில்,
‘‘குட்டி ஆடு தப்பிவந்தால்
குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக் கிட்டால்
கொறவனுக்குச் சொந்தம்!
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்’’
என்ற பாடலைப் பாடியுள்ளார். இப்பாடலின் இறுதி இரண்டடிகளில் ஏழைமக்களைச் சுரண்டிப் பிழைக்கும் கொடியவர்களை நினைத்துக் கொண்டு கடுங்கோபத்துடன், ‘தட்டுக் கெட்ட மனிதர்கள்’ என்று குறிப்பிடுகிறார். பழமொழிகளை பாங்குடன் அறிந்து அதனை மக்களின் இதயத்தில் பதியுமாறு எடுத்துரைக்கும் பாங்கு நினைந்து நினைந்து இன்புறத்தக்கதாக அமைந்துள்ளது.
வண்டிக்காரன் பாட்டு
வண்டியில் சுமையை ஏற்றிக் கொண்டு வெளியூர்களுக்குச் செல்வோர் வழியில் ஏற்படும் களைப்புத் தெரியா வண்ணம் பாடிக் கொண்டே செல்வர். மாட்டைப் பற்றியும், தனது காதலியைப் பற்றியும், தெய்வங்களைப் பற்றியும் வழியைப் பற்றியும் அப்பாடல்களில் பல்வேறு கருத்துக்கள் இடம்பெற்றிருக்கும். பாரதி,
‘‘காட்டுவழிதனிலே அண்ணே கள்ளர் பயமிருந்தால்
வீட்டுக் குலதெய்வம் தம்பி வீரம்மை காக்குமடா’’
என்று பாடியிருப்பதைப் போன்று, மக்கள் கவிஞரும்,
‘‘பள்ளம் மேடுள்ள பாதையிலே
பார்த்து நடக்கணும் காளைகளே!
பழைய போக்கிலே பயனில்லை! – நல்ல
விஷயம் இருக்கணும் மூளையிலே!’’ (ப.கோ.பா., ப., 275)
என்று வண்டிக்காரன் காளைகளைப் பற்றி பாடுவதைப் போன்று பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் பாமர மக்கள் புரிந்து கொள்ளுகின்ற வகையில் பல்வேறு கருத்துக்கள் இம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது.
தெம்மாங்கு
மனதைக் கவரும் வகையில் காதலன் காதலி அல்லது ஆணோ, பெண்ணோ தனித்துப் பாடும் சுவையான பாடல் தெம்மாங்குப் பாடலாகும். மக்கள் கவிஞர் இத்தகைய தேன்போன்ற தெம்மாங்கை பொதுவுடைமைக் கருத்துக்களைக் கூறப் பயன்படுத்தியிருக்கிறார். நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தில்,
‘‘பெண் சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி
சோம்பலில்லாம ஏர் நடத்தி
கம்மாக் கரையை ஒசத்திக் கட்டிக்
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டிக்
சம்பாப் பயிரைப் பறிச்சு நட்டுத்
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வௌஞ்சிருக்கு! – வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு! – அட
காடுவெளைஞ்சென்ன மச்சான்! – நமக்குக்
கையுங் காலுந்தானே மிச்சம்
ஆண் இப்போ-
காடுவெளையட்டும் பொண்ணே! – நமக்குக்
காலமிருக்குது பின்னே!’’ (ப.கோ.பா., ப., 269)
என காதலன், காதலி இருவரும் சேர்ந்து வண்டியில் போகும்போது பாடும் பாடலக புதுமையான முறையில் அமைந்துள்ளது. இதில் வரும் கருத்துக்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்கவையாகும்.
லாவணிப் பாட்டு கதைப்பாடல்
பாரதி எவ்வாறு லாவணிப் பாட்டைக் கையாண்டு பாடல் படைத்தாரோ அதைப் போன்றே மக்கள் கவிஞரும் இவ்லாவணிப் பாடலைத் திரைப்படத்தில் நன்கு கையாண்டுள்ளார். சக்கரவர்த்தித் திருமகள் என்ற திரைப்படத்தில்,
‘‘சீர்மேவும் குருபரம் சிந்தையொடு வாக்கிலும்
சிரமீது வைத்துப் போற்றி ஜெகமெலாம் மெச்ச
ஜெயக்கொடி பறக்கவிடும் தீரப்பிரதாபன் நானே
சங்கத்துப் புலவர் பலர் தங்கத்தோடா பொற்பதக்கம்
வங்கத்துப் பொன்னாடைகளும் பரிசளித்தார் – எனக்
கிங்கில்லை ஈடெனச் சொல்லிக் களித்தார் – இந்தச்
சிங்கத்துக்கு முன்னே ஓடிப் பங்கப்பட்டவர் அநேகஞ்
சீரெடுத்துப் பாடி வாறே நேரே – அதற்கு
ஓரெழுத்துப் பதில் சொல்லிப் பாரேன்’’
(ப.கோ.பா. மணிவாசகர் பதிப்பம், 205)
என லாவணிப் பாட்டு அமைந்துள்ளது. இப்பாடலில்,
‘‘கோவிலைக் கட்டி வைப்பது எதனாலே?
சிற்ப வேலைக்குப் பெருமையுண்டு அதனாலே!
அன்ன சத்திரம் இருப்பதெதனாலே?
பல திண்ணைத் தூங்கிப் பசங்கள் இருப்பதாலே!’’
என்று பல்வேறு புரட்சிகரமான கருத்துக்கள் அமைத்து மக்களை மக்கள் கவிஞர் சிந்திக்க வைக்குத் திறன் போற்றுதற்குரியதாக உள்ளது. திரைப்படம் பார்க்க வருவோர் பொழுதுபோக்கிற்காக மட்டும் பார்த்துவிட்டுச் செல்லாது சமூக சிந்தனையோடும் அவர்கள் செல்ல வேண்டும் என்று மக்கள் கவிஞர் கவனமுடன் மக்களின் பண்ணிலேயே வார்த்தைகளை வடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மகா கவியைப் போன்றே மக்கள் கவியும் தேசிங்கு ராஜன் கதைப்பாடல், நண்டு செய்த தொண்டு, அன்பே அமரா ஆகிய கதைப்பாடல்களைப் பாடியுள்ளார். இவை நாட்டுப்புறக் கதைப்பாடல் வடிவமைப்பில் ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. தேசிங்கு ராஜன் கதைப்பாடல்,
‘‘நாட்டுக்கொரு வீரன் – செஞ்சிக்
கோட்டைக்கு அதிகாரன்
அந்த நாளில் ஆற்காடு நவாபை
எதிர்த்த ராஜா தேசிங்கு – கதையை
நாம் சொல்வோம் இங்கு!’’ (ப.கோ.பா.,ப., 34)
என்று நாட்டுப்புற மரபுடன் தொடங்குகின்றது.
தெருக்கூத்துப் பாடல்
மகாகவி பாடலில் இடம்பெறாத தெருக்கூத்து நாட்டுப்புறக் கூறு மக்கள் கவிஞரின் பாடலில் அமைந்திருப்பது சிறப்பிற்குரியது. தெருக்கூத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மேடையைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடிப் பாடுவர். ராஜாவாக வருபவர்,
‘‘ராசாதி ராசன் வந்தேனே! – நான் வந்தேனே!
ராசாதிராசன் வந்தேனே!’’
என்று பாடிக் கொண்டே வந்து ஆடி மேடையின் நடுவில் நின்று நடிப்பர். இதைப் போன்ற அமைப்பில் மக்கள் கவிஞர்,
‘‘ராசாதி ராசன் வந்தேனே! – நான் வந்தேனே!
ராசாதிராசன் வந்தேனே!’’
என்ற வரிகளைப் பயன்படுத்தி,
‘‘எங்கும் புகழொடு இன்பம் பெருகிட
பொங்கும் வளமோடு புவிதனை ஆண்டிடும்
மகாராசா!
பக்கத்துச் சேரியிலே குறிப்பிட்ட தேதியிலே
பள்ளிக்கூடம் தொறந்தாச்சா!
மந்திரி! மந்திரி! மந்திரி!’’ (ப.கோ.பா., ப.,83)
என்று தற்காலத்திற்கேற்ற கருத்துக்களை மக்களின் மனதில் பதியுமாறு எடுத்துரைக்கின்றார். சமுதாய மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக நாட்டுப்புறக் கலைவடிவத்தை மக்கள் கவிஞர் பயன்படுத்தியிருப்பது நோக்கத்தக்கது.
இங்ஙனம் இருபெரும் கவிஞர்களும் தாங்கள் பிறந்த மண்ணின் பண்ணினைக் காலத்திற்கேற்பப் பயன்படுத்திக் கொண்டு அதன்வழி சமுதாய மாற்றத்திற்கான கருத்துக்களை எடுத்துரைத்து மக்களின் வளமான வாழ்விற்கு அடித்தளமிடுகின்றனர். புதிதாகப் பாடினால் மக்கள் புரிந்து கொள்வது கடினம் என்று உணர்ந்திருந்த கவிஞர்கள் மக்களிடம் காணப்பட்ட தெம்மாங்கு, வண்டிக்காரன் பாட்டு, கதைப்பாடல், தெருக்கூத்துப் பாடல், சிந்து உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைவடிவத்தைத் தங்களின் புரட்சிகரமான கருத்துக்களை எடுத்துரைக்கும் கலைவடிவ ஊடகங்களாகப் பயன்படுத்திக் கொண்டனர். மண்ணின் மணம் பரப்பும் மாபெரும் கவிஞர்களாக என்றென்றும் மகாகவியும் மக்கள் கவியும் மக்களின் மனதில் நிலைத்திருப்பர் என்பது திண்ணம்.
—————————————————
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழா இலக்கியப் போட்டிகள்
- தமிழ் ஸ்டுடியோவில் அம்ஷன் குமார் அவர்களின் விரிவான நேர்காணல்
- நினைவுகளின் சுவட்டில் – 97
- முள்வெளி அத்தியாயம் -21
- அமேசான் கதைகள் – 3 நிலவைத் தேடி..
- மீண்டும் அமைதி சமாதானம் அறிவிக்கப்படுகிறது
- இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மு.வ. நூற்றாண்டு விழா
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் இலக்கியகம் ஏற்பாட்டில் சிறுவர்/இளையோர் சிறுகதைகள் பரிசளிப்பு விழா
- தமிழ் ஸ்டுடியோ ‘லெனின் விருது’ வழங்கும் விழா – 2012
- தாகூரின் கீதப் பாமாலை – 26 உறக்கத்தில் தவறிய காட்சி !
- பாற்சிப்பிகள்
- பி.வி.பிரசாதின் “ எப்படி மனசுக்குள் வந்தாய்”
- அற்புதமான ஓர் சுய முன்னேற்ற புத்தகம் – Who moved my Cheese
- வாழ நினைத்தால் வாழலாம்!
- பொன் மாலைப்பொழுது
- தியாக தீபம் – அன்னை இந்திரா (1917 – 1984)
- அரவான்
- சதாசிவம் மதன் “உயிரோவியம்” கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- அவர் நாண நன்னயம்
- எம்.சி. சபருள்ளா “வியர்த்தொழுகும் மழைப்பொழுது” கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-13)
- 12 பியும் எகிறும் பி பி யும்
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 38
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 25
- ஆர். மாதேஷின் “ மிரட்டல் “
- 2012 ஆகஸ்டு செவ்வாயில் இறங்கிய நாசாவின் தளவூர்தி இயங்கத் துவங்கியது
- மரமும், நானும், விட்டுப் போன உரையாடல்களும்
- மொழிவது சுகம்: ஆகஸ்டு10-2012
- வெந்து முளைத்த விதைகள்:நாவல் குமாரகேசனின் ‘ கோட்டை மொம்மக்கா” சிறுகதைத்தொகுதி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 32) மரித்த காதலன் !
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் – அங்கம் -2 பாகம் -7
- அமெரிக்கப் பார்வை – மீண்டும் ஒரு தேர்தல்
- பாலஸ்தீனக் கலாசாரமும், இஸ்ரேல் கலாசாரமும் : வளமைக்குக் கலாசாரம் காரணமா?
- பஞ்சதந்திரம் தொடர் 56
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூற்றி ரெண்டு