பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(நிறைவுப் பகுதி)

This entry is part 2 of 37 in the series 2 செப்டம்பர் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

 

மரணத்தை வென்ற மகா கவிஞர்கள் 

மரணம் மனிதன் பயப்படும் ஒரு சொல். மரணித்தல் மனிதன் விரும்பாத ஒன்று. மரணம் தங்களுக்கு வரக்கூடாது என்று தடுக்க நினைக்கும் மனிதர்களே இங்கு அதிகம். ஆனால் தங்களுக்கு நேரப்போகும் மரணத்தை எண்ணி எந்தவிதக் கவலையும் கொள்ளாதவர்களாக மகாகவியும் மக்கள் கவியும் விளங்கினர். மரணத்தை முகமலர்ச்சியுடன் ஏற்கத் துணிந்தவர்கள் இக்கவிஞர்கள்.

மகாகவி பாரதியார் மரணத்தை வெல்வதற்கு மக்களுக்கு வழி கூறுகிறார். அனைவரும் இறந்தாலும் தனக்குச் சாவில்லை என்று பிரகடனப்படுத்துகின்றார் பாரதியார். தம்மை இதில் பின்பற்றி நடக்க வேண்டும் என்று மக்களுக்கும் மகாகவி அறிவுறுத்துவது நோக்கத்தக்கது. தான் எங்ஙனம் மரணத்தை வெல்வேன் என்பதை,

‘‘பார்மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்!

மலிவு கண்டீர்இவ்வுண்மை பொய் கூறேன்யான்

மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே

நலிவுமில்லை சாவுமில்லை கேளீர் கேளீர்!

நாணத்தைக் கவலையினைச் சினைத்தைப் பொய்யை

அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்

அப்போது சாவுமங்கே அழிந்து போகும்

மிச்சத்தைப் பின்சொல்வேன் சினத்தை முன்னே

வென்றிடுவீர் மேதினியில் மரணமில்லை’’

  (பாரதியார்பாடல்கள், பக்., 266-267)

என்ற கவிதை வழி எடுத்துக் கூறி மக்களும் அதனைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். தான் மட்டும் மரணமின்றி வாழ்ந்தால் சரியாக இருக்காது என்று கருதிய மகாகவி, அனைவரும் மரணமின்றி வாழ வேண்டும் என்று விரும்பினார். அவ்விருப்பத்தின் வெளிப்பாடாகவே இப்பாடல் பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மரணத்தைச் சம்பவிப்பவனைக் காலன், எமன், தூதன், எமதர்மன் என்று மக்கள் வழங்குகின்றனர். இப்பெயர்களைக் கூறுவதற்கே மக்கள் அஞ்சுவர். எங்கே பெயரைக் கூறினால் தன்னை எமன் கொண்டு சென்றுவிடுவானோ? என்ற அச்சமே இதற்குக் காரணம். இம்மரணத்தைக் கண்டோ, காலனைக் கண்டோ யாரும் அஞ்சக்கூடாது என்ற எண்ணத்தில் காலனைப் பார்த்து,

‘‘காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் என்தன்

காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன்’’

  (பாரதியார் பாடல்கள் ப.,189) 

என்று பாடுகின்றார். காலனைக் கண்டு அஞ்சாது மிதிப்பதாக மகாகவி கூறுவது மரணம் குறித்து துச்சமெனக் கருதிய அவரின் மனத்துணிவை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

மக்கள் கவிஞரும் மகாகவியைப் பின்பற்றி அவரின் வழி வாழ்ந்ததால் மரணத்தைக் கண்டு அவர் அச்சப்படவில்லை. ஒருவருக்கு மரணம் நிகழ்ந்தால் அப்பிணத்தைச் சுற்றி அமர்ந்து அழுவது உலக இயற்கையாக இருந்து வருகிறது. அவ்வாறு அழுவது மடத்தனமாகும். மரணத்தை எதிர்கொள்ளத் தயங்கும் மனநிலையாகும். இம்மனநிலை இருப்பின் மனிதன் வாழ்வை அமைதியாக வாழ இயலாது போய்விடக்கூடும். இம்மனநிலை நீடித்தால் மனிதன் வாழ்நாள் முழுவதும் அஞ்சி அஞ்சியே மாய்தல் வேண்டும். ஒரு மனிதன் இறந்தால் அழக்கூடாது. அழுவதற்கு  மாறாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இது வாழ்க்கை உண்மை. இவ்வுண்மையை அனைவருக்கும் புரிகின்ற வண்ணம்,

‘‘தானா எவனும் கெடமாட்டான்!

தடுக்கி விழாமா எவனும் விழமாட்டான்!

போனா எவனும் வரமாட்டான்! – மேலே

போனா எவனும் வரமாட்டான் – இதைப்

புரிஞ்சுக்கிட்டவன் அழமாட்டான்’’ (ப.கோ.பா., ப.,)

என்று எளிமையாக மக்கள் கவிஞர் எடுத்துரைக்கின்றார்.

இதற்கு பட்டுக்கோட்டையாரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சியே சான்றாக அமைந்துள்ளது. இந்நிகழ்ச்சியை மக்கள் கவிஞரின் நெருங்கிய நண்பராகிய ஏ. வீரப்பன்,

‘‘நானும் பட்டுக்கோட்டையாரும், மூடப்பழக்க வழக்கங்களைக் கைக்கொள்ளுவது கிடையாது. ஒருமுறை நானும் அவரும் பேசிக் கொண்டிருந்தபோது இறந்துபோனபின் பிணத்தை வைத்துக் கொண்டு மக்கள் கூத்தடிப்பது அழுவது எனக்குப் பிடிக்காது. நான் இறந்தாலும் சரி நீ இறந்தாலும் சரி அழவே கூடாது. யார் உயிருடன் இருக்கின்றார்களோ அவர் அன்று பிரியாணி வாங்கிச் சாப்பிடணும் என்று பட்டுக்கோட்டையார் என்னிடம் கூறினார். ஆம் (8.10.1959) இன்று அவர் இறந்து விட்டார். நான் அழவில்லை. அவர் எனக்கிட்ட கட்டளைப்படியே பிரியாணி சாப்பிட்டேன். எனக்குச் சாப்பிட மனசு இடங்கொடுக்கவில்லை. என்ன செய்ய! என்னுடைய ஆருயிர் நண்பனுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அவன் என்னுள் இருந்து என்னை வழிநடத்தியதால் பிரியாணி சாப்பிட்டேன் என்னைப் பார்க்க மைலாப்பூர் வரும்போது,‘‘மேலோர் வாழும் இடத்திற்கு வருகிறேன்’’ எனக்கூறும் கல்யாணம் என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டான். ‘‘சென்றதினி மீளாது’’ என்று அவன் கூறிய வார்த்தை அவனுக்குப் பலித்துவிட்டது’’ (கார்த்திகேயன், பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை, ப., 67)

என்று மக்கள் கவிஞர் இறந்த அன்று கூறி அஞ்சலி செலுத்துகின்றார்.

வறுமையிலிருந்து மீளாமலேயே பாரதிக்கு மரணம் நேரிட்டது. அவர் இறந்தபோது அவரை அடக்கம் செய்வதற்கு அவரைத் தூக்கிக் கொண்டு சென்றோருடன் சேர்த்து மொத்தம் பன்னிரண்டு பேர்களே சென்றனர். மகாகவிஞன் இறந்தபோது யாரும் அதனைக் கண்டு கொள்ளவே இல்லை. இருந்தபோதும் அவரை இச்சமுதாயம் பாதுகாக்கத் தவறிவிட்டது.  ஆனால் பட்டுக்கோட்டையார் இறந்தபோது திரை உலகின் புகழ் உச்சியில் இருந்தார். அவர் சார்ந்த பொதுவுடைமைத் தோழர்களும், அவரது நண்பர்களும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களும், திரையுலகைச் சார்ந்தோர் பலரும் கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தினர். ஆம் இறந்தும் இரு மகா கவிகளும் நம்முடன் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்கள்.

மகாகவி குறித்து

‘‘புதுமையினைக் கூறுகையில் விட்மன் மற்றும்

புரட்சியினைக் கூறுகையில் சார்லஸ் மாக்கே

உதவாதிங் கடிமையென் றுரைக்கும் போதில்

உயர்கின்றான் ஷெல்லியென மற்றுமிங்கே

இதமான தேசீயக் கவிதை சொல்ல

எண்ணுகையில் ஓர் இக்பால் குழந்தைகட்கு

உதவுமொரு பண்ணிசைக்க எண்ணிவிட்டால்

உயர்கவிதை தருகின்றான் ப்ரௌணிங் போல!

விருத்தப்பாத் தந்தையவன் கம்பனுக்கும்

மெச்சுபுகழ் வெண்பாவார் புகழேந்திக்கும்

கருத்தூறும் சொல்லழகுச் சந்தச் சிந்திற்

கைவந்த நல்அண்ணா மலையாருக்கும்

பொருத்தமெனக் கூறுமா றிங்குத் தோன்றிப்

புவியினிலே புகழ் கொண்ட புலவன் எங்கள்

திருத்தந்தை பாரதியே! அவனே இன்பச்

செந்தமிழ்க் கவிவானில் நிலவு போன்றான்’’

(மகாகவி பாரதிநூறாண்டு விழாமலர் ப., 215)

என்று கவிஞர் சாமிபழனியப்பன் பாடுவதைப் போன்று மகாகவி தமிழ் வானில் என்றும் ஒளிர்ந்து கொண்டே இருப்பார்.

மகாகவியைப் போன்றே மக்கள் கவிஞரைக் குறித்து,

‘‘இன்றைக்குிருப்பவர் நாளைக் கிருப்பவர்

என்றைக்கும் வாழ்பவர் ஆவதில்லை

என்றைக்கு வாழ்ந்தவன் இன்றைக்கு வாழ்பவன்

என்றைக்கும் வாழ்பவன் மக்கள் கவி’’ (இளந்தேவன்)

 

‘‘கல்யாண சுந்தரனே! கண்ணியனே! ஓர் பொழுதும்

பொல்லாத காரியங்கள் புரியாத பண்பினனே

வாழும் தமிழ் நாடும் வளர்தமிழும் கலைஞர்களும்

வாழ்கின்ற காலம் வரைவாழ்ந்துவரும் நின்பெயரே’’

             (கண்ணதாசன்)

என்று கவிஞர் இளந்தேவன், கவியரசு கண்ணதாசன் உள்ளிட்டோர் பாடுவதைப் போன்று மக்கள் கவிஞர் தமிழர்தம் நெஞ்சில் நிலைத்து நின்று வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்.

மகாகவியும், மக்கள் கவியும் மறைந்தது மிகக் குறைந்த இளம் வயதில். அதே சென்னை மாநகரில் இருவருமே நோயுற்றுத் திடீரென இறப்பது நெஞ்சை உருக வைக்கும் நிகழ்வாகும். அவர்கள் உடல் மரணித்தாலும் அவர்கள் நம்முடன் அவர்களது எழுத்துக்களால் இன்றும், என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

Series Navigationபுதிய அனுபவம்தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 68வது நிகழ்ச்சி
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *