ரத்தத்தை விடக் கனமானது தண்ணீர்

0 minutes, 16 seconds Read
This entry is part 15 of 23 in the series 7 அக்டோபர் 2012

 

அந்தக் காரின் முதுகில் மோதிய வேகத்தில் தன் இருசக்கர வாகனத்துடன் இரண்டு மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டார் வசந்தன். தலைக் கவசத்தின் இடப்பக்கம் பழைய டயராய்த் தேய்ந்து விட்டது. அந்த ஒரு வினாடி வசந்தனின் உயிரின் விலை 90 வெள்ளிக்கு வாங்கிய அந்தத் தலைக் கவசம்தான். சாலை ஓரத்திற்கு தூக்கிவரப்பட்டார். முதலில் சில மூச்சுக்களைக் கடினமாக இழுத்தார். பிறகு சரளமானது. உடல் முழுதும் எல்லா மூட்டுமே மடங்க மறுக்கிறது. ஓர் வாடகைக் கார் ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு வேகமாக ஓடிவந்தார்.

‘ஐயா, நீங்கள் தமிழா?’

 

‘ஆம்.’

‘வீட்டு எண்ணைச் சொல்லுங்கள். தகவல் சொல்கிறேன்.’

 

‘வேண்டாம். பயந்துவிடுவார்கள்.’

 

‘சரி. முதலுதவி வண்டியை அழைக்கிறேன்.’

 

‘சரி.’

 

சிறிது நேரத்தில் சங்கூதிக்கொண்டு வந்தது முதலுதவி  வண்டி. பத்தை பத்தையாக பஞ்சுகள் நறுக்கப்பட்டன. 50 காசு விட்டத்தில் தேய்ந்திருந்த பல தோல் காயங்களை மருந்திட்டு மூடினார்கள். பிறகு ஒரு பாடையில் வைத்து, மன்னிக்கவும் படுக்கையில் வைத்து, வண்டிக்குள் தள்ளினார்கள்.

 

‘தசை நார்கள் ஒவ்வொன்றும் உடம்பைத் தைப்பது போன்ற வலி. தயவுசெய்து மெதுவாக ஓட்டச் சொல்லுங்கள். எங்கு அழைத்துச் செல்கிறீர்கள்?’

 

‘டன்டாக் சென் மருத்துவ மனைக்கு.’

 

‘சரி. நன்றி.’

 

அவர் டன்டாக் சென் மருத்துவ மனை சேர்வதற்குள் வசந்தனைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

 

மனைவி பவானி. இல்லத்தரசி. மூத்த மகன் சந்தானம். குடும்பமாக ஜூரோங்கில் இருக்கிறான். இளைய மகன் கலிய பெருமாள். குடும்பமாக ஈசூனில். வசந்தனுக்கு இப்போது 65. இருபது தனியார் நிறுவனங்களுக்குக் கணக் கெழுதும் வேலை. வரவுக்கும் செலவுக்கும் புருவ இடைவெளிதான். பத்து நாள் படுத்துவிட்டால் உளைச்சலிலேயே செத்துவிடுவார் மனிதர். இதுதான் வசந்தனின் வாழ்க்கை.

 

மருத்துவமனையின் அவசரப் பிரிவுப் பகுதியில் வண்டி நுழைந்தது. தாதியர்கள், மருத்துவர்கள், உதவியாளர்கள், காவலாளிகள் யாரும் ஒரு வினாடி ஒரு இடத்தில் நிற்கவில்லை. வசந்தன் இறக்கப்பட்டார். சிறிது நேரத்தில் பவானி வந்து சேர்ந்தார்.

 

‘என்னங்க ஆச்சு?’

 

‘பெரிய ஆபத்தில்லை. பயப்படாதே. நன்றாக இருக்கிறேன்.’

 

சில தாதியர்கள் வந்தனர். ரத்த அழுத்தம் எடுக்கப்பட்டது. மருத்துவர் வந்தார்.

 

‘மருந்து ஒவ்வாமை உண்டா?’

 

‘இல்லை.’

 

‘நன்று. வேறு பிரச்சினைகள்?’

 

‘சர்க்கரை.’

 

‘பரவாயில்லை. இடது விலா இடது மூட்டு படம் எடுக்க வேண்டும். தயாராயிருங்கள்.’

 

நாலு பேர் வந்தனர். எக்ஸ் கதிர் அறைக்குத் தள்ளிச் சென்றனர். இடது விலா தோள்பட்டை அறுந்து விழுவதுபோல் வலிக்கிறது. அது ஏன் என்று எக்ஸ் கதிர்கள்தான் சொல்லப் போகிறது.  எக்ஸ் கதிர் கருவியின் கீழ் கிடத்தப்பட்டார் வசந்தன். முதுகுக்குக் கீழ் சில தகடுகள் வைக்க உடம்பைப் புரட்டினார்கள். உயிர் பிதுங்கி வெளியேறிவிட்டு மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டது. அத்தனை வலி. 5 படங்கள் எடுத்தபின் பழைய இடத்துக்கே தள்ளிக் கொண்டு வந்தார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு மருத்துவப்பெண் வந்தார்.

 

‘ஒரு கெட்ட செய்தி.’

 

‘என்ன?’

 

‘இடது பக்கம் இரண்டு விலா எலும்புகளில் கீறல்கள். இடது கையின் பந்துக் கிண்ண மூட்டு நழுவி யிருக்கிறது. உங்களைப் படுக்கையில் சேர்க்க வேண்டும். எலும்பு மருத்துவரின் ஆலோசனைக்குப் பின் வீட்டுக்குச் செல்லலாம்.

 

‘எனக்காக எத்தனை பேர் எத்தனை விதமாக வெல்லாம் வேலை செய்கிறார்கள். கடவுளின் கருணையை நினைத்தார். அழுதார்.

 

‘வலிக்கிறதா?’ பவானி கேட்டார்.

 

‘இல்லை’

 

‘பிறகு ஏன் கண்ணீர்?’

 

‘சும்மா.’

 

ஒரு மணி நேரம் தாண்டியது.

 

‘உங்களுக்குப் படுக்கை கிடைத்துவிட்டது. 11வது மாடி, 5வது படுக்கை.’

 

ஒரு தாதி சொன்னார்.

 

படுக்கையில் கிடத்தப்பட்டார். சிறுநீர் முட்டியது. ஒரு தாதியிடம் சொன்னார். ஒரு குடுவையைக் கொண்டுவந்தார். அவரே சிறுநீரைப் பிடித்துக் கொண்டார். ஏதோ புனிதநீரைக் கொண்டுபோவதுபோல் கழிவறைக்குக் கொண்டு சென்றார். ‘எனக்காக எத்தனை பேர் எப்படியெப்படி யெல்லாம் வேலை செய்கிறார்கள். தாதிகளெல்லாம் வாழும் தெய்வங்கள்.’ ஏனோ அன்னை தெரஸாவின் ஞாபகம் வந்தது. அழுகைதான் வருகிறது ஏதும் பேச முடியவில்லை.

 

இரவு மணி 11. தொலைபேசியில் விசாரித்தார்கள் மகன்கள். நாளை வருவதாகச் சொன்னார்கள். பவானியை வீட்டுக்குப் போய்விட்டு நாளை வரச் சொன்னார் வசந்தன். வலிக் கொல்லி மருந்துகள் தரப்பட்டன. நிரந்தரமாய் ஒரு ஊசி வலது கையில் பொருத்தப்பட்டது. மருந்தை விரும்பும் போதெல்லாம் ஏற்றிக் கொள்ளலாமாம். ஒரு ஆக்ஸிஜன் குழாய் மீசையில் படுத்தபடி ஆக்ஸிஜன் ஊட்டியது. மூச்சு எளிதானது. இரவு கழிந்தது. பொழுது விடிந்தது.

 

காசு செலுத்தவேண்டிய பில்கள், வீட்டுத்தவணை எல்லாம் விஸ்வரூபமெடுத்து படமெடுத்தன. ‘என்ன நடக்கப் போகிறதோ? எப்படி சமாளிக்கப் போகிறோமோ?’ மண்டையைக் குடைந்து கொண்டார் வசந்தன்.

 

9 மணி. மூத்த மகன் சந்தானம் வந்தான்.

 

‘எனக்குத் திருமணமானது முதல் மாதாமாதம் உங்களுக்கு ஏதாவது தரவேண்டு மென்றுதான் நினைக்கிறேன். இதுவரை முடியவில்லை. எப்படியாவது முயற்சி செய்து 2000 வெள்ளியை இன்று உங்கள் கணக்கில் போட்டுவிடுகிறேன். நீங்கள் எதையும் சிந்திக்காமல் அமைதியாக இருங்கள்.’

 

என்று சொல்வான் என்று எதிர்பார்த்தார் வசந்தன்.

 

‘வயசா திரும்புகிறது. என்ன அவசரம். மெதுவாகச் செல்லக்கூடாதா? விழுந்து படுத்துக் கொண்டால் எல்லாருக்கும் எவ்வளவு சிரமம். நான் அவசரமாக அலுவலகம் போக வேண்டும். வீட்டுக்கு எப்போது அனுப்புவார்கள் என்று சொல்லுங்கள். பிறகு வீட்டுக்கு வருகிறேன்.’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.

 

அவன் தன் நெற்றியையோ, கன்னத்தையோ, மார்பையோ தொடுவான் என்று எதிர்பார்த்தார் வசந்தன். பிள்ளைகளின் தீண்டல்களை அனுபவித்து எத்தனை ஆண்டுகளாகிவிட்டது. அவன் அவரைத் தீண்டவே யில்லை.

 

அடுத்த ஒரு மணி நேரத்தில் கலியபெருமாள் வந்தான். ‘காலையிலிருந்து மகள் சித்ராவுக்கு நல்ல காய்ச்சலப்பா. மருத்துவரைப் பார்த்துவிட்டு வீட்டில்விட்டு வர நேரமாகிவிட்டது. என்றாலும் பயமாகத்தான் இருக்கிறது. நான் உடனே போகவேண்டும். பிறகு வருகிறேன்.’ சொல்லிவிட்டுப் பறந்துவிட்டான். அவனிடமும் அந்தத் தீண்டலை எதிர்பார்த்து ஊமையாய் அழுதார்.

 

மதியம் 12 மணி. நண்பர் ஜானகிராமன்  வந்தார். கொஞ்சம் பதட்டமாகவே வந்தார்.

 

‘நன்றாக இருக்கிறீர்களா வசந்தன்.’

 

‘இருக்கிறேன் ஜானகி.’

 

‘தகவல் தெரிந்ததும் வடபத்ரகாளியம்மன் கோயிலில் உங்கள் பெயருக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு அலுவலகத்துக்கு விடுப்பு எழுதிக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன் வசந்தன்.’

 

‘ரொம்ப நன்றி.’

 

‘எப்படி இருக்கிறது இப்போது. மருத்துவர் என்ன சொன்னார்?’

 

‘எலும்பு மருத்துவர் வருவார். சொல்வார். அதற்குப் பிறகுதான் நிலவரம் தெரியவரும். 3 மணிக்கு வருகிறாராம். ‘

 

‘பரவாயில்லை. அதுவரை இங்கேயே இருக்கிறேன். இப்போதுதான் பவானி நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். உளைச்சல்கள் இருந்தால் உடம்பு குணமாகாது. வலிகளும் குறையாது. வசந்தனின் வரவுசெலவு எனக்குத் தெரியும். ஒன்றும் நினைத்துக் கொள்ளாதீர்கள் பவானி. இதில் 2000 வெள்ளி இருக்கிறது. அவசரச் செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள். இழப்பீடு கிடைத்தபின் கொடுங்கள். கிடைக்காவிட்டால் மறந்துவிடுங்கள். இதை நான் கடனாகத் தரவில்லை. ஏதோ என்னால் முடிந்த சிறு உதவி. எனக்குத் தெரியும். பணப்பிரச்சினை வந்தால் வசந்தன் தூங்கமாட்டார். ஒரு சகோதரனாக என்னை நினைத்துக் கொள்ளுங்கள்.

பவானி அழுதார்

 

பவானியின் கண்ணீருக்குக் காரணம் வசந்தனுக்குப் புரிந்தது. ‘ஏன் அழுகிறாய்’ என்று கேட்கவில்லை.

 

ஜானகிராமன் வசந்தனைத் தேற்றினார். நெற்றியில் கைவைத்தார். ‘காய்ச்சலில்லை’ என்றார். ஜானகியின் கையின்மேல் தன் கையை வைத்துக் கொண்டார். ‘தீண்டினால் தேவலாம் என்று நினைத்த மகன்கள்…………. மிகச் சிரமப்பட்டு தன் சிந்தனையை மாற்றிக் கொண்டார் வசந்தன்.

 

எலும்பு மருத்துவர் வந்தார்.

 

‘உங்களின் எக்ஸ் கதிர் படங்களைப் பார்த்து விட்டேன். விலா எலும்பில் கீறல் இருக்கிறது. அது தானாக ஒட்டிக் கொள்ளும். கை மூட்டில் விரிசல் இருக்கிறது. கையை லாவகமாகத் தொங்கவிட்டு வட்டம் போடுங்கள் இடமாக 30 வலமாக 30. நேரம் கிடைக்கும்போதெல்லாம் செய்யுங்கள். நாங்கள் எதிர்பார்த்த எந்த ஆபத்தும் இல்லை. ‘

 

‘மருத்துவச் சேமிப்புக் கணக்கு, சேமநல நிதிக் கணக்கு, மருத்துவச் செலவுகள் என்று சில தாள்களில் கையெழுத்து வாங்கினார்கள். வெளியாகலாம் என்பதற்கான கடிதத்தையும் தந்து வீட்டுக்குப் போகலாம் என்றார்கள். வீடு வந்தபோது இரவு மணி 10

 

‘தண்ணீரைவிடக் கனமானது ரத்தம்.’ ஒரு ஜெர்மானியப் பழமொழி. அர்த்தம் என்னவாம்? சாதாரண நட்புகளைவிட குடும்ப உறவுகள்தான் ஆழமானதாம்  உறுதியானதாம். ஜானகிராமன் போன்ற நண்பர்கள் இருந்திருந்தால் அந்தப் பழமொழியை அவன் வேறுவிதமாகச் சொல்லியிருப்பான்.

‘ரத்தத்தை விடக் கனமானது தண்ணீர்’

Series Navigationமொழிவது சுகம்- அக்டோபர் 5 -2012நம்பிக்கை ஒளி (2)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *