அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்.
மனம் விட்டுப் பேசுகின்றேன்
இது உளவியல் பகுதி. இனிய இல்லறத்திற்கு வழிகாட்டும் பகுதி. அந்தரங்கம் புனிதமானது. அது அர்த்தமற்றதாகிவிடாமல் பாதுகாக்க மனம் திறந்த பேச்சு தவறில்லை. நமது இலக்கியங்களில் அகப்பாடல்கள் என்று தனித்து வந்தாலும் போர்ப்பரணி பாடும் பொழுது கூட ஓர் கடை திறப்பு முன்னிறுத்துகின்றோம். வாழ்வியல் வரலாற்றில் அகம்பற்றிய அலசல் இன்றியமையாதது. நம்மை ஆட்டிப் படைக்கும் சில பிரச்சனைகளையாவது ரண சிகிச்சை செய்து பார்ப்போம்
எத்தனை திட்டங்கள் ?1 எத்தனை சட்டங்கள் ?! தீயக்காற்றை அடக்க முடியவில்லை. முதலில் புகைந்தது. இப்பொழுது தீ பரவ ஆரம்பித்துவிட்டது. ஒரு பக்கம் உடனடி சிகிச்சை என்றாலும் அதன் மூல காரணம் தெரிந்து கொண்டால்தான் சிகிச்சை ஓரளாவாவது பலன் கொடுக்கும். சமூக மருத்துவராக உங்கள் முன் நின்று இதனைச் சொல்கின்றேன்
இந்தப் பிரச்சனைகளுக்கு அரசின் திட்டமென்ன?
ஒருவர் கேள்வி கேட்டுவிட்டார். அதனை அப்படியே விடுத்தும் செல்ல முடியாது. விளக்க வேண்டியது என் கடமை.
அரசு செய்ய வேண்டியதைச் செய்து வருகின்றது. இது தனிமனிதனின் உணர்வைப் பொறுத்தது. ஒரு தகவல் கூறுகின்றேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அமெரிக்காவில் வீட்டில் செல்லப் பிராணிகளை தங்கள் சொந்தப் பிள்ளைகளுக்கு மேல் ஆசையாக வளர்க்கின்றார்கள். அதுவும் ஓர் உயிரினம்தானே. அவைகளுக்கு இத்தகைய செக்ஸ் உணர்வு அதிகமாக வருவது குறிப்பிட்ட காலங்களில்தான். நினைப்பு வந்தால் வீட்டை விட்டு ஓடிவிடும். அதைத் தடுக்க உணர்வே வராமல் இருக்க தடுப்பூசிகள் போட்டுவிடுவார்கள். பின்னால் அவைகளுக்கு ஆசையே வராது. ஆண், பெண் இருபாலாருக்கும் அத்தகைய தடுப்பூசி போடலாமா? என்னை அடிக்கத் தோன்றுகின்றதா?உயிருள்ள பொம்மைகள் எதற்கு? உயிர்படைக்கும் மனிதன் வேண்டுமே? குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில் கூட நிரந்திரத்தீர்வு மட்டுமல்ல தற்காலிகத் தடுப்பு முறைகளும் உண்டு. அதுவும் ஒருதலைப்பக்க வேலை. குழந்தைப் பிறப்பைத்தான் தடுக்குமே தவிர எழும் ஆசைகளைத் தடுக்காது.
மனிதன் இரு பசிகளால் ஆட்டிவைக்கப்படுகின்றான். வயிற்றுப் பசி. உணவு கிடைக்கவில்லையென்றால் சோர்ந்து போய்விடுகின்றான். காமப் பசிக்கு இரை இல்லையென்றால் வெறித்தனம் தோன்றிவிடுகின்றது. இது உடல் கூறுகளின் இயல்பு.
சில எடுத்துக் காட்டுகள் கூறுகின்றேன்
பணி ஓய்வு பெற்றபின் பங்களூரின் இரு வருடங்கள் வாழ்க்கையில் பல நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களில் ஒருத்தியின் பெயர் ஈஸ்வரி. கெட்டிக்காரப் பெண் இப்பொழுது அவள் ஒரு தொழில் நிறுவனத்தை நடத்தி வருகின்றாள். முதலில் இருந்த வீட்டை மாற்றி பெரிய வீடு வாங்கிக் குடி போயிருந்தாள். இது அண்டை வீட்டு பிரச்சனை. அடுத்த விட்டில் இருந்தவர் பெயர் சாருலதா. அவள் கணவர் ஓர் கம்பெனியில் தலைமை அதிகாரி. அவர்களூக்கு இரு பெண்கள். உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர். என்ன நடந்ததோ. அக்குடும்பத்தில் சில மாறுதல் தோன்ற ஆரம்பித்தன. சாருலதா வீட்டை விட்டு அடிக்கடி வெளிச் செல்ல ஆரம்பித்தாள். தன் பிள்ளைகளிடம் கூட அக்கறை போய்விட்டது. வெளியில் சென்றால் இரவில் நேரம் கழித்து வர ஆரம்பித்தாள். கணவர் ஒன்றும் கேட்கவில்லை. குழந்தைகள் அழ ஆரம்பித்தனர். ஈஸ்வரிக்கு இதைப் பார்த்துப் பொறுக்கவில்லை.
நான் பங்களூர் சென்ற சமயம் ஈஸ்வரி இந்த குடும்பத்தைப்பற்றி என்னிடம் கூறினாள்.. சாருலதா விடம் பேசாமல் உண்மையைக் கண்டு பிடிக்க முடியாது என்றேன். ஈஸ்வரி தன்னால் ஆன முயற்சிகள் செய்து எப்படியோ சாருலதா என்னைப் பார்க்க வரச் செய்துவிட்டாள். நானும் சூழ்நிலையைச் சாமர்த்தியமாகக் கையாள ஆரம்பித்தேன். முதலில் தனிமையில் உரையாடல். பின்னர் அவள் ரசனைகள், குழந்தைகள் பற்றிய விபரங்கள் என்று பேச்சு தொடர்ந்தது. உரையாடலில் உற்சாகமின்மை தெரிந்தது. மெதுவாகக் கணவனைப் பற்றி பேச்சை ஆரம்பித்து அன்பு, ஆணின் குணம் என்று பொதுப்படையாகப் பேச ஆரம்பிக்கவும் திடீரென்று அழ ஆரம்பித்து விட்டாள். கணவருக்குத் தன் மீது அன்பு போய்விட்டது என்றாள்.. தன்னுடன் பேசுவதும் இல்லையாம். இரவில் நேரம் கழித்து வந்து உடனே படுக்கைக்குப் போய்விடுவார். அவள் பக்கம் பார்க்காமல் திரும்பிப் படுத்துக் கொள்வார் என்றாள்.சொல்லி முடிக்க விட்டு கடந்த காலத்தில் அவர்கள் தாம்பத்ய அனுபவங்களைக் கேட்டேன். அவைகளைச் சொல்லும் பொழுது சந்தோஷமாகப் பேசினாள். எங்கே தவறு என்று என்னால் ஊகிக்க முடிந்தது. இது யூகம் தான். அதன் அடிப்படையில் பேச ஆரம்பித்தேன்
படுக்கை அறையில் ஊடல் இருக்கலாம் ஆனால் ரோசம், நீடித்த கோபம், முறைப்பு கூடாது. ஊடலில் தோற்றவர் வென்றார் என்பது நம் குறள்வழி. சாருலதாவிடம் கூறிய அறிவுரைகளில் சில மட்டும் கூறுகின்றேன். பேசாமல் ஒதுங்கும் கணவனிடம் தொல்லை கொடுக்காமல் தாயைப் போல் பரிந்து அணைத்துக் கொள்ளலாம். அப்பொழுதும் உதறல் சிணுங்கல் இருக்கலாம். தோழியாய்ப் பரிவுடன் பொதுவான விஷயங்கள் பேசவும். மனைவி எதிர்பார்ப்பு பேச்சு என்று தெரியவும் கொஞ்சம் நிதானமாகிப் பேச ஆரம்பிப்பான். பின்னர் சிறிது சிறிதாக அவனைப் பலஹீனமாக்கிய பிரச்சனைகள் வரும், தைரியம் கூறலாம். நம்பிக்கையை வளர்க்கலாம். இது உடனே தீரக் கூடியதல்ல. சில நாட்கள் ஆனாலும் ஒரு தோழியாய், தாயாய்ப் பரிவு காட்டுங்கள். கணவன் சேய், — மனைவி என்னும் தாயிடம் ஒண்டிவிடுவான். இன்னும் சில வழிமுறைகளையும் கூறிவிட்டு வந்தேன். சில நாட்களில் அக்குடும்ப்ப பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று உமா தொலை பேசியில் கூறினாள். நான் சென்ற சமயம் பூ, பழங்கள் வாங்கி வந்து சாருலதா என்னை நமஸ்கரித்தாள். அக்குடும்பத்தில் பிரச்சனைக் கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் அக்குழந்தைகள் தாயை இழந்திருப்பார்கள்.ஒரு மனைவி தன் கணவனிடம் தாயின் பரிவுடன், தோழியின் வழிகாட்டலிலும் இருப்பதுடன் ஓர் தாசியைப் போல் அவனுடன் எவ்விதத்தயக்கமுமின்றி ஒன்றி இருப்பதே இல்லறம் நல்லறமாக நடக்க சிறந்த வழிகள்.
ஆத்திரமாக இருக்கும் பொழுது கோபத்துடன் இருக்கும் பொழுது எடுக்கும் அவசர முடிவுகள் நிலையானதாக இருக்காது. வாழ்வைக் கவிழ்த்துவிடும்
தம்பதிகளுக்குள் பிரச்சனை வந்தால் அதற்கு என்று இருக்கும் கவுன்சிலர்களிடம் சென்று ஆலோசனை கேட்கலாம். உடல் நிலையும் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு என்று இருக்கின்ற செக்ஸாலஜி டாக்டரிடம் செல்லலாம். சமூக நல வாரியத்தில் கவுன்ஸ்லிங் பிரிவு உண்டு. அவர்கள் பல மாவட்டங்களில் மையங்கள் வைத்திருக்கின்றார்கள். எனக்கு அதில் பயிற்சியுண்டு. ஒன்றை வெளிப்படையாகச் சொல்கின்றேன். வெறும் படிப்பு மட்டும் போதாது. பேச்சு சாமர்த்தியம் இருக்க வேண்டும். அது மிக மிக முக்கியம். இன்னும் சில தகவல்களையாவது வெளிப்படையாகக் கூற விரும்புகின்றேன்
ஆண்களுக்கு “தான்” என்ற ஓர் ego உண்டு. அவனிடம் சில சமயங்களில் ஏற்படும் பலஹீனத்தை அவன் தனதாக உணரமாட்டான் அலுவலகத்தில் அல்லது வேறு இடத்தில் பிரச்சனைகள் என்றால் அவனுடைய இயல்பில், இயக்கத்தில் ஓர் பலஹீனம் வரும். பாலியல் உறவுக்கு ஓர் இயலாமையும் வந்துவிடும். காமத்திற்கு ஊட்டமான உடம்பைவிட சக்தி கொடுக்கும் உந்துதல் முக்கியம். மனம் முக்கிய பங்காற்றுகின்றது.
இனிமையாக இயங்கிவந்த இல்லறம் காலச் சுழற்சியில் காயம்பட்டுத் தவித்துக் கொண்டி ருக்கின்றது. அச்சம், மடம் நாணம், பயிர்ப்பு இவைகளைத் தூக்கி எறியச் சொன்னார் பாரதி . முதலிரவின் சுவை குன்றியதற்குக் காரணங்களில் இதுவும் ஒன்று. நாணத்துடன் நங்கை வரும் பொழுது ஆண்மனம் துள்ளூம். அச்சமும் பயிர்ப்பும் அவன் முதல்தொடலில் அவள் மன துள்ளும். தாம்பத்திய வாழ்க்கைக்கு இந்த இனிய நினைவுகள் தேவை.
பல ஊடகங்களால் பாலியல் உறவு பற்றி அறிந்துகொள்கின்றோம்.. நெரிசல் வாழ்க்கையில் உணர்ச்சிகளும் கொஞ்சம் மரத்துப் போய்விடுகின்றது. இவைகளால் முதல் இரவு சந்திப்பின் இனிமை குறைகின்றது. ரசனையுடன் நெருங்க வேண்டிய உறவு. இந்த தருணங்கள் அவன் முதுமையிலும் நினைவிற்கு வரும். இரு உடல்களின் கலப்பு இரு உயிர்களின் சங்கம்ம். உயிர்போடு கலந்து உணரும் எண்ணங்களுக்கு நீண்ட ஆயுள். .பகல் பொழுதுகளிலும் பார்வைகளின் பரிவர்த்தனைகள், சின்னச் சின்ன தொடல், சீண்டல் வாழ்க்கையில் இனிமையைப் பாதுக்காக்கும். செக்ஸ் பாபமில்லை, அதனால் அதற்குத் திருமணம் தேவையில்லை என்ற கருத்து வேகமாகப் பரவி விட்டது. இங்கே பாவ புண்ணியம் பற்றிப் பேசவில்லை. மணமாகி இருவர் வாழ நினைத்தால் தாம்பத்திய சுகம் இனிமையான நினைவுகளைச் சுமந்து கொண்டு இருக்க வேண்டும். இது முக்கியம். ஆணும் பெண்ணும் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீண்ட காலத்திற்கு வாழும் இன்பமும் உறவும் வேண்டுமா, குறுகிய காலத்தில் கிடைக்கும் சுகம் போதுமா என்று நினைத்துப் பார்க்க வேண்டும். குடும்பத்தில் சலனம், சச்சரவு,, அமைதியின்மை ஆகிவை களுக்கு அச்சாரமான ஆரம்ப காலத்தில் தப்புத்தாளம் போட்டு விடுவதுதான்.. பின்னர் அவஸ்தைப் படுகின்றோம்.
ஊட்டியில் வேலை பார்க்கும் பொழுது ஒரு நிகழ்வு. திருமதி மாஸ்டர் என்று ஒரு பார்ஸி பெண்மணி. நான் குன்னூருக்குப் போன பொழுது அவர்களும் என்னுடன் வந்தார்கள். இரவு கொஞ்சம் நேரம் அதிகமாகிவிட்டது. மாவட்ட ஆட்சியாளரிடமிருந்து ஓர் அவசர உத்திரவு எனக்கு வந்தது. என்னுடன் இருக்கும் அந்த அம்மையாரை உடனே அழைத்துக் கொண்டு திரும்ப வேண்டும். அந்த அம்மையின் கணவரிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த உத்திரவைப் பார்க்கவும் ரசித்தேன். சிரித்தேன். இதை வாசித்து சொன்னவுடன் அந்த அம்மையாரும் வீட்டிற்குப் போகத் துடித்தார்கள். அவர் கணவரிடம் எட்டு மணிக்குள் திரும்பி விடுவதாகச் சொல்லி இருக்கின்றார். நேரம் கடந்தவுடன் தன் மனைவியைக் கூட்டிச் சென்ற ஆபீசர் பொறுப்புடன் திரும்ப அழைத்து வரவில்லையென்று கலெக்டருக்குப் புகார் செய்துவிட்டார். நாங்கள் திரும்பியவுடன் நேராக அவர்கள் வீட்டிற்குச் சென்றோம், வேகமாக இறங்கி உள்ளே சென்றார்கள். அவர்களிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்று நானும் இறங்கி பின்னால் சென்றேன். ஆனால் பேசும் நிலையில் அவர்கள் இல்லை. கணவனும் மனைவியும் கட்டிப் பிடித்துக் கொண்டு முத்தமழையில் நனைந்து கொண்டிருந்தார்கள். அது காமத்தால் அல்ல. ஆழமான காதலால் கட்டுண்டு இருந்தனர். கணவரின் வயது 85 . அந்த அம்மாவின் வயது 80. இந்த இன்பம் அவ்வளவு எளிதில் கிடைக்குமா? அவர்கள் தாம்பத்திய வாழ்க்கையின் அர்த்தம் அங்கே பார்த்தேன்.
ஆணுக்குப் பிரச்சனைகள் வருவது போல் பெண்ணிற்கும் உண்டு. அதற்கும் ஓர் எடுத்துக் காட்டு கூறுகின்றேன்
ஓர் சிந்தனையாளர். என்னுடைய நண்பர். அவர் தன் வாழ்க்கையில் நடந்த எல்லாம் என்னிடம் மனம்விட்டுப் பேசுவார்.. எவ்வளவு சிறந்த சிந்தனையாளனும் வாழ்க்கையில் ஆண் , பெண் உறவில் சறுக்கி விழுகின்றான். பெரியவர்கள் பார்த்து மணம் முடித்து வைக்கின்றனர். சோதிடம் பொருத்தம் பார்த்து முடிக்கின்றனர். சோதிடத்தில் வழிகள் இருப்பினும் ஏதோ பத்து பொருத்தங்களில் கணக்கு போட்டு சோதிடர்கள் கூறவும் மணம் நடந்துவிடுகின்றது. ஆனால் வாழ்க்கையில் பல விஷயங்களில் அவளிடமிருந்து ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. ஒத்த ரசனையுள்ள ஒருத்தியுடன் பழக ஆரம்பிக்கவும் அவளுடன் ஒன்றி விடுகின்றான். நம் சிந்தனையாளனுக்கும் ஒருத்தி குடும்பத்தில் ஒன்று சேர்ந்தாள். தாலிகட்டாத மனைவி. குழந்தைகள் கிடையாது. ஆனால் மற்றவர் அவளை கவுரவத்துடன் அங்கீகரிக்கும்வண்ணம் இருபெண்களையும் சமமாக நட்த்தினார். இப்பொழுது ஒரு பிரச்சனை திடீரென்று முளைத்துவிட்டது. காதல் மனைவி அடிக்கடி அழ ஆரம்பித்தாள். அவருடன் சரியாகப் பேசுவ தில்லை. அவள் முகத்தில் சோர்வு மட்டுமில்லை வேதனையும் சேந்திருந்த்து.. அவளை அன்புடன் அணைத்து ஆதரவாகக் கேள்விகள் கேட்டும் பதில் கிடைக்கவில்லை. இந்த சோகச் சுமை அவரை மிகவும் வருத்திற்று. நான் அவரைப் பார்க்கச் சென்ற பொழுது இந்தப் பிரச்சனையைக் கூறினார். சில கேள்விகள் கேட்டேன். ஓரளவு என்னால் ஊகிக்க முடிந்தது.
அவளுக்கு இது “மெனொபாஸ்” காலம். அதாவது மாதவிடாய் நிற்கப் போகும் தருணம். இக்காலத்தில் பெண்கள் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் வரும். ஆனால் அவள் விஷயத்தில் அதுமட்டுமல்ல. நம் சமுதாயத்தில் ஓர் அசட்டு நம்பிக்கையும் ஒர் சொல்வழக்கும் உண்டு. இது அக்காலத்தில் இருந்தது. பெண்ணிற்கு மாதவிடாய் நின்றுவிட்டால் பின்னர் அவள் தாம்பத்திய உறவில் குறைபாடு வந்துவிடும் என்பது. எங்கள் காலத்தில் முப்பது வயதானால் பின்னல் போடுவதை நிறுத்திவிட்டு பிச்சவடா அதாவது கொண்டை போட்டுக் கொள்ள வேண்டும். நாற்பது வயதில் கிழவியாகிவிடுவோம்.
சிந்தனையாளனின் காதல் மனைவி தாலி கட்டி இருப்பவள் அல்ல . சட்டப்படி அந்த உறவு செல்லாது. குழந்தைகளும் இல்லை. உறவுச் சங்கிலி இல்லை. இருந்த ஒர் உடல் கலப்புக்கும் இப்பொழுது சோதனை வந்துவிட்டது. இதில் உபயோகமற்றுப் போனால் இந்த உறவு நீடிக்குமா? அவள் மனத்தில் பீதி. அவரிடம் விளக்கினேன். அவர் முகத்தில் ஆச்சரியம் மட்டும் தோன்றியது. ஆனால் பேசவில்லை. மேலும் நான் தொடர்ந்தேன். இது காரணமானால் பிரச்சனை தீர அவளிடம் பேச வேண்டியவைகளைச் சொன்னேன். பெண்ணிற்கு மாதவிடாய் மட்டுமல்ல, அடிக்கடி உடல் உறவு கொண்டாலோ , குழந்தைகள் பெற்றால் கூட சிறு குறைகள் ஏற்படும் ஆனால் அது பெரிய தடையல்ல. ஆனால் ஆணுக்கு வரும் இயலாமைதான் உறவைக் கெடுத்துவிடும். எனவே பெண்ணைவிட ஆண்தான் பயப்பட வேண்டும் என்று சொன்னேன். அவர் சிரித்துவிட்டார். இதனை நகைச் சுவையுடன் பேசுங்கள். அவள் புரிந்து கொள்வாள் பயம் விலகிவிடும் என்றேன்.. தாம்பத்தியத்தில் ஆரம்ப காலங்களில் அனுபவிக்கும் சுகம் அஸ்திவாரம். அதில் அன்பு முளைத்து செடியாகி மரமாகி வளர்ந்துவிடும். அந்த அன்புதான் தாம்பத்தியத்தைக் காப்பாற்றும். அவர்கள் இருவரிடமும் அந்த ஆழமான அன்பு இருக்கையில் பயம் தேவையில்லை என்பதனைக் கூறச் சொன்னேன். மேலும் பிரச்சனை தொடர்ந்தால் அந்தப் பெண்ணுடன் நான் பேசுவதாகச் சொன்னேன். ஒரு மாதம் கழித்துப் பார்க்கப் போன பொழுது அவர் மலர்ந்த முகம் எனக்கு விடை கூறிவிட்டது. சிந்தனையாளனாக இருந்தாலும் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றது என்பதைப் புரிய வைக்க ஓர் அனுபவம்.
கற்றது கையளவு. கல்லாதது உலகளவு. இதை யாரும் மறக்கக் கூடாது
பன்னாட்டு அமைப்பு ஒன்றில் சிறப்பு உறுப்பினராக இருந்ததை ஏற்கனவே எழுதியிருக்கின்றேன், தமிழ் நாட்டில் ஒர் ஆய்வு நடத்தினேன். கணவன் மனைவி உறவில் எந்த அளவு கணவனின் பங்கீடு இருக்கின்றது என்பதனைக் காண நடத்திய ஆய்வு. “SHARING” ஆய்வுக்கு முன் கேள்விகளைக் குறிக்க சில பெண்களைத் தேர்ந்தெடுத்தேன். என் வீட்டில்தான் கூட்டம் நடந்தது. என் தாய் ஓர் மறுப்பைத் தெரிவித்தார்கள். வந்திருந்தவர்களில் திருமணமான, படித்தவர்கள் இருந்தாலும் வயதானவர்கள் இல்லையென்பதே. அனுபவமும் ஆய்வில் வேண்டும். என்றார்கள். உடனே என் அம்மாவையும் அந்தக் குழுவில் சேர்த்துக் கொண்டேன். கேள்விகள் குறிக்கப்பட்டு 1000 பெண்களிடம் கொடுத்து அறிக்கை வாங்கினோம். அதில் யாரும் கையெழுத்து போட வேண்டாம். டிக் செய்தால் போதும். இரு கேள்விகளுக்கு டிக் செய்யப்படவில்லை. ஒரு பெண் கூட பதில் தரவில்லை
உடலுறவு கொள்ளும் முன் உன் மன நிலைபற்றி அறிய ஏதாவது கணவன் கேட்பானா?
உனக்கு ஆவல் இருந்தால் கணவனிடம் வெளிப்படையாக ஏதாவது தெரிவிப்பாயா?
உடல் சங்கமங்கள் தன்னிச்சையாக நடப்பது தாம்பத்தியத்தில் வழக்கமாகிவிட்டது. அதைப்பற்றி பேசுவது கூட ஏதோ குற்றம் போல பெண்ணின் மவுனம், உள்ள நிலைக்குப் பதிலாகக் கிடைத்தது. தாம்பத்திய உறவில் இருவரும் கவனமாக இருக்க வேண்டும்.. வயதாகலாம். நோய்கள் வரலாம். ஆனால் மனம் இளமையுடன் இருக்க வேண்டும். சிறு தொடல் கூட சிலிர்ப்பைக் கொடுக்க வேண்டும். குடும்பத்தில் எத்தனை பிரச்சனைகள் வரினும் அன்பு அரவணைப்பு ஒன்றே அதிக பலம் கொடுக்கும். அதனை இழக்கக் கூடாது. பழங்காலத்தில் எல்லாம் இயல்பாக இருந்தது. இன்று காலம் மாறிவிட்டது. சூழ்நிலைத் தாக்கத்தில் மனித மனம் அகப்பட்டுக் கொண்டு தவிக்கின்றது. தாம்பத்யம் அசிங்கமில்லை. வாழ்க்கையின் ஆதாரம் அதுதான். அந்த உறவின் பலத்தை இழந்துவிட வேண்டாம்.
என் ஆய்வு அறிக்கையைக் கொடுத்த பொழுது மேலை நாட்டுப் பெண்கள் பல கேள்விகள் கேட்டார்கள். தாம்பத்தியம் இருவகைப்படும். அன்பை வளர்ப்பது ஒன்று. இன்னொன்று வேட்கையை வளர்ப்பது. வெறும் வேட்கை மட்டும் இருந்தால் விரிசலும் மண முறிவுகளும் ஏறபடுவது இயற்கை என்றேன். அவர்களுக்கு இது புது விளக்கமானாலும் ஒப்புக் கொண்டார்கள். வாழ்க்கையைப் புரிந்து நடப்போம். மதிக்க வேண்டியது தாம்பத்தியம். வள்ளுவரும் வாழ்வியல் நூலில் தனிப் பகுதியே கொடுத்திருப்பது இதன் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது.
காம சாத்திரம் என்ற நூல் எழுதப்பட்டது இந்த மண்ணில்தான். அக்காலத்தில் மன்னர்களூம் செல்வந்தர்களூம் அவர்கள் சுகத்திற்காக ஏற்படுத்திய பரத்தையர் பிரிவிற்கு இது ஒரு கலையாகக் கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கின்றது. சிலப்பதிகாரத்தில் மாதவிக்குத் தெரியும் கலைகள்பற்றி சொல்லுமிடத்தில் நீண்டதொரு பட்டியலே கொடுத்திருகின்றான். நாம் எதுவும் கற்க வேண்டாம். தாம்பத்தியத்தை வெறும் கடமைக்காக என்றில்லாமல் காதலுடன் அமைத்துக் கொள்ளுங்கள். எண்பதிலும் இனிமை உணரலாம்.
எனக்குப் படிப்பினைகள் நான் பல வழிகளில் பெற்றவை. அவைகளில் ஒன்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். என்னுடய நெருங்கிய தோழி ராஜேஸ்வரி அனந்தராமன் அடிக்கடி என் தொடரில் வருவார். அவர் முதுகலைப் பட்டம் பெற்றவர். சென்னையில் ஓர் அரிமா சங்கத்தைச் சேர்ந்தவராயினும் பல பயிற்சிகள் கொடுக்கும் திட்டங்களை நடத்துபவர் என்ற முறையில் எல்லோருக்கும் அவளைத் தெரியும்.. மேலும் SCOUT ல் பயிற்சியாளர். பல மொழிகள் தெரிந்தவர். இந்தியாவில் பல மாநிலங்களூக்கும் பயிற்சி கொடுக்கச் செல்கின்றவர். அவருடைய திறமைகளால் சென்னையில் உள்ள பத்திரிகை நிருபர்கள் அவளுக்கு நண்பர்களாயினர். ராஜேஸ்வரியால்தான் எனக்கும் அந்த நட்பு வட்டத்திற்குள் செல்ல முடிந்தது.
குமுதர் அரசியல் ரிப்போர்ட்டர் பால்யூ பற்றி அரசியல் வட்டத்தில் தெரியாதவர்கள் கிடையாது. எல்லாக் கட்சித் தலைவர்களுடனும் பேசியிருக்கின்றார். அவரின் நடபு ராஜேஸ்வரியால்தான் கிடைத்தது. அவர் சாகும் வரை எனக்கு நல்ல நண்பராக இருந்தார். அரசியல் செய்திகளை என்னுடன் பகிர்ந்து கொள்வார். அடுத்து இன்னொரு நிருபர். பெயர் நாராயணன். இவர் சில மாத இதழ்களின் நிருபர். “ WOMENS WEEKLY: “ WOMENS ERA” இவ்விரண்டும் மகளிர் சம்பந்தப்பட்டவை. எனவே எங்கள் நட்பு இருவருக்கும் உதவியது.
நாராயணன் ஓர் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தார். ஆண்கள் ஐவர். பெண்கள் இருவர். நானும் ராஜியும்தான். ஆண்களில் நாராயணன் நிருபர் என்ற பொறுப்பில் வந்தார். உடன் ஒரு டாக்டர், இரு தொழில் அதிபர்கள், ஒருவர் வியாபரம் செய்பவர் (big business man). பொதுவாக இந்த நட்பு வட்டத்தில் ஏழுபேர்களாம். மற்ற இருவர் அன்று வரவில்லை. அவர்களில் நடிகர்கள் ஜெமினி கணேசனும், மனோகர் அவர்களும் ஆவர்.
அன்று எங்கள் கலந்துரையாடலில் விவாதம் காரசாரமாக இருந்தது. எடுத்துக் கொண்ட தலைப்பு அப்படி. அதிகமாகக் கேள்விகள் கேட்டவள் நான்தன். அவர்கள் கோபப் படாமல் பதில்கள் கொடுத்தனர். அவர்களும் எதையும் மறைக்காமல் மனம்விட்டுப் பேசினர். அந்த உரையாடலை அப்பொழுதே எழுதி புத்தகமாக்கி யிருந்தால் இனிய தாம்பத்திய வாழ்க்கைக்கு உதவியாக இருந்திருக்கும். எழுதுவதில் நான் சோம்பேறி. ஆனால் பேசியதால் நான் கவுன்ஸ்லிங் செய்யும் பொழுது உதவியாக இருந்தன என்பதற்கு மறுப்பில்லை. எல்லாம் எழுத முடியாவிட்டாலும் சிலவற்றைத் தொட்டுக் காட்ட மட்டும் செய்கின்றேன்.
ஆணுக்கு அவன் இச்சையைத் தீர்க்க மனைவி இருக்கும் பொழுது ஏன் மற்ற பெண்களை நாடுகின்றான்?
அவன் பழக்கம் ஒருத்தியுடன் நிற்காமல் வித விதமான பெண்களுடன் ஏன் உறவு கொள்கின்றான்?
“ Men like varities“ என்ற சொல் உண்மையானால் அவன் மனைவியும் வாழ்க்கையை வித விதமாகச் சுவைக்க அனுமதிப்பானா?
தொழில் முடிந்தவுடன் வீட்டிற்கு வராமல் relaxation என்று எங்கோ செல்வது, குடிப்பது, இன்னொரு பெண்ணுடன் சல்லாபம் செய்வது, வீட்டிற்குத் தாமதமாக வருவது அவன். அப்பொழுது சிரித்த முகத்துடன் மனைவி வரவேற்க வில்லையே என்று குற்றம் சாட்டுவது சரியா?
அவன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மனைவி நடப்பதில்லை. இங்கே ஜெயகாந்தனின் “புதுச் செருப்பு கடிக்கும்” கதையை நினைவில் கொள்ளலாம். திருமணத்திற்கு முன்பு இது போன்ற விஷயங்களில் அனுபவம் இருக்கின்றதா என்று பார்த்தா மணக்கின்றார்கள்? வேண்டியது புதிதாக இருக்க வேண்டும். புதுச்செருப்பு கடிக்கத்தானே செய்யும்.
ஏதோ ஒரு காரணத்தால் இயலாமை வரும் பொழுது மனைவியைச் சிகரெட்டால் சுட்டும் கடித்தும் சித்திரவதை செய்வது சரியா?
இவைகள் ஆணின் பக்கம் இருக்கும் குற்றச்சாட்டுக்கள்.
பெண்ணின் பக்கமும் பார்ப்போம்.
வாழ்க்கையில் தாம்பத்தியம் முக்கியம். அதனைச் சுகமாக வைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு பெண்ணிற்கும் உண்டு. ஆனால் மணமான சில நாட்களில் அதனைச் சுமையாக நினைத்து ஆர்வம் காட்டாமல் ஒதுங்கலாமா?
பெண் என்றாலே பிறந்த விட்டுக் கிறுக்குதான். மாமியார் கொடுமை இருக்கட்டும். இவள் மாமியாருடனோ, கணவனைச் சேர்ந்தவர்களிடம் ஏன் ஒத்துப் போகாமல் இருக்கின்றாள்? அதுவும் கணவன் வீட்டில் இருக்கும் பொழுது எப்பொழுதும் அவன் பிறந்த வீட்டைக் குறை கூறிக் கொண்டே இருந்தால் அவனுக்கு வீட்டில் இருக்கப் பிடிக்குமா?
கணவனின் ரசனை அறிந்து அதற்கேற்ப தன்னை அமைத்துக் கொள்வதில் தவறு என்ன இருக்கின்றது? அங்கே பெண்ணியம் நினைப்பதா? பெண் விடுதலை பேசப்பட்டது எந்தக் காரணங்களுக்காக என்பதனைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இருவரும் ஒருவருக்கொருவர் ரசிக்கும்படியாக இருப்பது புத்திசாலித்தனமில்லையா?
வருவாய்க்குத் தகுந்தபடி இல்லறம் நட்த்த வேண்டும். பொருளாதார நெருக்கடி கொடுத்தால் வீட்டு ஆண்மகன் திணறுவதில் தப்பென்ன இருக்கின்றது?
தாம்பத்ய உறவில் “சீ “ என்று ஒதுக்குவது சரியல்ல. அசிங்கத்தில்தான் உறவு. அசிங்கத்தில்தான் உயிரும் பிறக்கின்றது. தாம்பத்ய உறவில் எதிலும் அறுவறுப்பு பட வேண்டியதில்லை. யார் ஒதுக்கினாலும் மற்றவர் அதனைத் தேடி வெளியே சென்று விடுவார்கள்.
குடும்பத்தில் சமையலறை முதலாக படுக்கை அறைவரை அன்பு நிறைந்திருக்க வேண்டும். அதற்கென்ன காசா பணமா வேண்டும். புரிதல் வேண்டும். மனம் வேண்டும். ஒவ்வொரு செயலும் வாழ்வுக்குப் பக்க பலமாக இருக்க வேண்டும். ஆழ்மனத்தில் இருக்கும் சக்தியை உசுப்பி எழுப்பினால் எல்லாத் துயர்களும் பறந்துவிடும். பழைய கஞ்சி கூட சுவையானதாக இருக்கும். வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்த்து வாழ்வதில்தான் போராட்டங்களும் வேதனைகளும் தோன்றுகின்றன.
எங்கள் கலந்துரையாடலில் இருபக்கப் பிரச்சனைகளும் அலசப்பட்டன. ஆணுக்குள் அடங்கியிருக்கும் வெறித்தனைத்தை அடக்க அவனுக்குள் இருக்கும் சக்தியை எப்படி வெளிக்கொணர வேண்டும் என்றும் பேசினோம். ஆன்மீகம் என்று சொன்னலும் சரி அல்லது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று கூறினாலும் சரி வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமைத்துக் கொள்ளல் வேண்டும். அப்படி முயன்றால் அமைதி தானே கிடைக்கும்.
இது எளிதல்ல. முயற்சி திருவினையாக்கும்.
நாராயணன் என்னை ஜெமினி கணேசன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். எங்கள் உரையாடல் காதல் பற்றியது. அவர் காதல் மன்னன் இல்லையா? வாதத்தில் அவர் தோற்றுப் போனார்.
மனோகர் சிறந்த நாடகக் கலைஞர். எடுத்துக் கொள்ளும் கரு கூட வித்தியாசமாக இருக்கும். அரக்கன் ராவணன், சூரபத்மன் ஆகியவர்களிடமும் இருக்கும் நியாங்களை எடுத்துக் காட்டியவர் (சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட வெறுக்கப்பட்ட மனிதர்களிடம் நான் பழகிய பொழுது அவர்களுக்குள் இருக்கும் நல்ல குணங்களைப் பார்க்க முடிந்தது). இந்தத் தன்மை எளிதல்ல. அவர் மேடையில் காட்டிய வித்தைகள் வியப்பானவை. அக்காலத்தில் விஞ்ஞான வசதிகள் குறைவு. அவரைப் பார்த்து ஓரிரு வார்த்தைகள்தான் பேச முடிந்தது. விவாதம் எதுவும் நடக்கவில்லை.
பெண்ணின் துன்பங்களை நிறைய பேசுகின்றோம். கவிதைகள், ஏன் காவியங்களில் கூட அவள் கண்ணீரைக் காட்டி வருகின்றோம். இப்பொழுது ஆணும் அந்தக் குழிக்குள் தள்ளப் படுகின்றான். மணமான ஆண் தனக்குள் சமரசம் செய்து கொண்டு வாழ்கின்றவர்கள் எண்ணிக்கை கூடி வருகின்றது. பெண் கல்வி, ஞானத்தை வளர்த்து அவள் பாதுகாப்புக்கு அரணாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். சம்பாதிக்கின்ற பெண்கள், அதிலும் கணவனைவிட அதிகமாகச் சம்பளம் வாங்கும் பெண்களால் கணவன் உதாசீனப் படுத்துவதுவும் கூடி வருகின்றது. பெண்ணைப் படிக்க வைக்கும் பெற்றோர்கள், பெண்ணுக்குத் திருமணம் செய்துவிட்டு அதன் பின்னர் பெண்ணைத் தாங்களே வைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பவர்களின் எண்ணிக்கையும் கூடி வருகின்றது. ஆண் அடித்துச் சித்திரவதைப் படுத்தினான். இப்பொழுதும் தொடர்கின்றது.
பெண்ணோ சொல்லால் புண்படுத்துகின்றாள். சமீபத்தில் ஒரு செய்தி தினத்தாளில் வந்தது
ஒருவனுக்கு மனைவியின் தொல்லை பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள விரும்புகின்றான். அவன் செய்தது என்ன தெரியுமா? மிருகக்காட்சி சாலைக்குச் சென்று தன் ஆடைகளைக் கழற்றிவிட்டு சிங்கக் கூண்டுக்குள் புகுந்துவிட்டான். இரண்டு சிங்கங்கள் அவனைக் கடித்து குதற ஆரம்பித்திருக்கின்றது. பார்வையாளர்களின் கூச்சல் கேட்டு சிங்கங்கள் ஒதுங்கின. காவலர்கள் வந்து அவனை மீட்டெடெத்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். போலீஸ் விசாரணையில் அவன் சொன்னது. “பொண்டாட்டியிடம் பிடுங்கல்படுவதைவிட சிங்கம் கடித்துக் கொல்வது மேல்.” இது கற்பனையல்ல நிஜம்ம்
மனைவியும் மனைவி வீட்டாரும் கொடுமைப்படுத்திய பல ஆண்கள் எனக்கு எழுதி யிருகின்றார்கள். சென்னைக்குச் செல்லும் பொழுது பார்த்திருக்கின்றேன். அவர்கள் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சி செய்திருக்கின்றேன்
நாம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம்?
காட்டுவாசியாய் வாழ்ந்த காலம் முதல் கோலோச்சி வருகின்றவன் ஆண். இன்று தலை குனிந்து செய்வதறியாது உட்கார்ந்துவிட்டான்.
நம்பிக்கை இழக்காதீர்கள். எழுமின். காலச் சக்கரத்தின் விளையாட்டு இது. நம்மிடம் சக்தி இருக்கின்றாது. ஆழ்மன சக்தியை எழுப்பி வலிமை பெற்று ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறலாம்.
எத்தனை மனிதர்கள் ?! எத்தனை சந்திப்புகள்? ! ஒவ்வொன்றும் பல புத்தகங்கள் படிப்பதற்கு ஈடானவை. என்னால் பத்திரிகை உலகத்தை மறக்க முடியாது. என் நினைவில் வாழ்கின்றவர்கள் நூற்றுக் கணக்கானவர்கள்.
“எல்லாச் சிக்கல்களுக்கும் முடிவு இயற்கையிலேதான் உண்டு.ஒவ்வொரு சிக்கலையும் வெற்றி கொள்வது தெளிந்து தேர்ந்த அறிவேயாகும்.. அத்தகைய அறிவு எல்லோரிடமும் இருக்கிறது. அதைத் தூண்டி அதையே வலுவுள்ள ஆயுதமாகக் கொண்டு கவலைகளை ஒழித்து வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் பெறுவோம்.”
வேதாத்ரி மகரிஷி
[தொடரும்]
படத்திற்கு நன்றி
- பஸ் ரோமியோக்கள்
- சாந்த சொரூபியான ஒரு பஞ்சாபி -2
- வாதம் – விவாதம் – ஒரு ஜாலியான அலசல்
- பத்மினி சாகுமளவிற்கு உன்னை நேசித்தாள் சந்திரசோம
- வாயு
- கேளா ஒலிகள் கேட்கிறவள்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -6
- நிழல்
- இடைவெளிகள் – 12: மண்ணும் மனிதர்களும் இடைவெளிகளும்
- நம்பிக்கை ஒளி! (3)
- திருமதி சௌந்தரநாயகி வைரவன் சிங்கப்பூரில் தமிழ் தமிழர் .
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 41) நளினக் குறும்புகள்
- கவிதை
- கிழவனும் கடலும் ஒரு வாசகனின் புரிதலில்
- தாகூரின் கீதப் பாமாலை – 35 கானம் பாடினேன்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : மூலக்கூறு முகிலில் புவிக் கடல்கள் போல் 2000 மடங்கு நீர் ஆவி கண்டுபிடிப்பு
- கைப்பீயத்து என்றால் என்ன?
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –32
- எதிர் வினை!
- அக்னிப்பிரவேசம்- 5
- உத்தமம் INFITT – உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் மாநாடு…
- கதையே கவிதையாய்! (9)
- மன தைரியம்!