வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –33

This entry is part 4 of 21 in the series 21 அக்டோபர் 2012

 

சீதாலட்சுமி

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை.

 

அர்த்தநாரீஸ்வரர்

அம்மையும் அப்பனும் ஓர் உருவாய் தரும் காட்சி

Positive and negative  இரண்டும் ஒன்று கலந்தால் சக்தி… உருவமாய்க் காட்ட இரு பாகங்களாய்க் காட்சி. இல்லறத்தில் இணை கோடுகளாக இருத்தல் கூடாது. ஆனந்தமும் அமைதியும் பெற ஒன்று கலந்து ஓர் புள்ளியாய் மாறவேண்டும்.

வாழ்வியலுக்கு விதிகள் வகுத்த பொழுது “கற்பு” புகுத்தினான். அதுகூட வாழ்க்கையில் ஒன்றியவளுக்கு மட்டும் கற்பு நிலை வலியுறுத்தப்பட்டது. கற்பின் நிலையைப் பற்றி காட்சிகளாலும் கதைகளாலும் சொல்லாமல் சொல்லிக் காட்டுவதும் உண்டு.

ஓர் பெண் தலைவனுடன் ஓடிவிட்டாள். அவளுடைய செவிலித்தாய் மகளைத் தேடி அலைகின்றாள். பாதையில் இருவர் வருகின்றனர். அவர்களிடம் பெண் ஒருத்தியைக் கண்டார்களா என்று கேட்கிறாள். ஆண்மகனோ எதிரே ஒரு ஆடவன் வந்ததைச் சொல்கின்றான். அவனுடன் இருந்த பெண்ணோ எதிரே ஓர் பெண் வந்ததாகக் கூறுகின்றாள். அதாவது ஆண் ஆணைத்தான் பார்ப்பதுவும் பெண் பெண்ணைப் பார்ப்பதுவும் சமுதாயம் ஏற்றுக்கொண்ட விதியைக் காட்டு கின்றது. சிலம்பு சத்தம் கேட்டால் ஆண்மகன் பெண்ணை நிமிர்ந்து பார்க்கமாட்டன். மனித இயல்புக்கு ஏற்ற விதியா அல்லது இப்படி ஒரு கற்பனையில் மகிழ்ந்தானா?

பரசுராமனின் தாய் தினமும் நதிக்குச் சென்று நீராடிவிட்டு அங்குள்ள ஆற்று மணலைத் தொடுவாள். பானை உருவாகும். அந்தப் பானையில் நீர் மொண்டு கணவனின் யாக சாலைக்கு எடுத்து வருவாள். ஒரு நாள் அவள் ஆற்று நீரில் ஓர் அழகிய பிம்பம் காண்கின்றாள். கந்தர்வன் மேலே பறந்து  கொண்டிருக்கின்றன். அவன் நிழல்தான் நீரில் தெரிந்தது.. ஒரு வினாடி பிற ஆடவனை ரசித்து விட்டாள். குளித்து முடிந்து மணல் அருகில் சென்று பானை செய்ய முயன்றாள்.. பானை வரவில்லை. அவள் கற்பு மாசுபட்டு விட்டது. யாக சாலைக்கு வெறும் கையுடன் திரும்புகின்றாள். முனிவருக்குக் கோபம் வந்து, தாயின் பிள்ளைகளைக் கூப்பிட்டு அவர்கள் தாயின் தலையைக் கொய்யச் சொல்கின்றார். பரசுராமன் தவிர எல்லோரும் மறுத்து விடுகின்றனர். பரசுராமன் தந்தை கட்டளை நிறைவேற்றியாதால், வேண்டும் வரம் கேட்கலாம் என்று தந்தை கூற, தாயை  உயிர்ப்பிக்க வரம் கேட்டு தாயை மீண்டும் பெற்றான்.

ஒருவனை நிழலில் ரசித்ததால் பெண்ணின் கற்பு போய் தலையை இழந்தாள். அப்படியானால் இன்றைய உலகில் ஒரு பெண்ணிற்கும் தலை இருக்காது. தலையில்லா முண்டங்களாகத்தான் பெண்கள் திரிந்து கொண்டிருப்பர்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் ஏற்புடைத்ததே என்பது நமது இலக்கணம். சமுதாயம் வம்பு பேசினாலும் கடந்த காலத்தைப் பார்க்காது திருமணங்கள் நடைபெற ஆரம்பித்துவிட்டன.

மேலை நாட்டின் விதியைப் பார்க்கலாம்.

நாம் chastity  வலியுறுத்துகின்றோம். அவர்கள் வலியுறுத்துவது  fedelity.. அதாவது திருமணத்திற்கு முன் ஆண், பெண் வாழ்க்கையில் நடந்தவைகளைப் பற்றி அக்கறையில்லை. குழந்தைகள் இருப்பினும் ஏற்றுக் கொள்வர். ஆனால் மணமான பின் நம்பகத்தன்மையுடன் இருவரும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அங்கே முரண் படும்பொழுது மண முறிவு ஏற்படுகின்றது. இரட்டை நிலை வாழ்க்கையை அவர்கள் விரும்புவதில்லை

நாம் எப்படி இருக்கின்றோம்? நம்மைப்பற்றி கொஞ்சம் அலசிப் பார்க்கலாம்.

புதியமாதவி தன் பின்னூட்டத்தில் ஒன்றைக் குறித்திருந்தார்கள் “ maleprostitute “.

அவர்கள் அமெரிக்காவில் இருக்கும் பொழுதே என்னிடம் அதுபற்றியும் எழுதுங்கள் என்றார்கள். இன்னொரு தோழி பிரமிளா கார்த்திக். ஒரு காலத்தில் அவரின் சிறுகதை வராத பத்திரிகை கிடையாது. அதுமட்டுமல்ல தொலைக்காட்சி சீரியல்களுக்கும் கதைகள் எழுதியவர். ஆனால் அவர் எழுதுவதை இப்பொழுது நிறுத்திவிட்டார். மறைந்த அனுராதா ரமணனின் நெருங்கிய தோழி. அன்றும் இன்றும் என்றும் என்னை ஏதாவது செய்வதற்குத் தூண்டிவருகின்றவர்.  என் தோழி. அவரால்தான் அண்ணா நகர் டைம்ஸில் விளம்பரம் கொடுத்து சோதிடம் பார்த்தேன். அவரால்தான் ஜெமினி டைம்ஸில் ராசிபலன் எழுதினேன். இப்பொழுதும் என்னை எழுதத் தூண்டுகின்றவர். அவரும் இதுபற்றி எழுதச் சொன்னார். இதைத் தொட்டால் பெண்ணின் ஒரு பக்கம் பற்றி எழுதியாக வேண்டும்,. வாழ்வியல் வரலாற்றில் சம நிலையுடன் எழுதப்பட வேண்டும். எனவே நான் கண்டவற்றை எழுத முடிவு செய்தேன்.

“பரத்தையர்” என்ற சொல்லை இலக்கியங்களீல் பார்க்கும் அளவில் ஆணுக்கு ஒரு பெயரை நான் படித்ததில்லை.

ஆண்கள் விதித்த விதி கற்பு. அவன் கற்புக்கு ஓர் இடமும் காமத்திற்கு இன்னொரு இடமும் பிரித்தான். பெயர் சூட்டியவனும் அவனே. ஆண் வியாபாரிக்குப் பெயர் தெரியாது. எனவே ஆண் வியாபாரி என்றே எழுதுகின்றேன். முதலில் ஏன் பரத்தையர் போன்று ஒரு சொல்லை வழக்கில் கொண்டு வரவில்லை. ஒருவேளை கொண்டு வந்திருந்தாலும் அப்பெயர் அதிகம் பேசப்பட வில்லை. இல்லத்தரசிகள் தன் கணவனை விடுத்து பிற ஆடவனுடன் தொடர்பு கொள்வதைச் சமூகம் அங்கீகரிக்க வில்லை. சொல் வைப்பது கூட குற்றமாக நினைத்திருக்கலாம். அப்படி யென்றால் வீட்டுப் பெண் யாரும் தவறான செயலில் இறங்கவில்லையா? இந்த நூற்றாண்டு பற்றி மட்டும் என்னால் கூற முடியும். கிராமங்கள், நகரங்கள் என்று சுற்றியவள் நான். குடும்பப் பிரச்சனைகள் என்று வரும் பொழுது சமரசம் செய்ய வேண்டிய பணியில் இருந்தவள் நான். வேதனையுடன் கண்டவைகளை உணர்ந்தவைகளை எழுதுகின்றேன். நம் குறைகளை தெரிந்து கொண்டால்தான் நம்மைச் சீராக்கிக் கொள்ள முடியும். வரலாறு என்றால் உண்மைகள் பதியப் படவேண்டும். அங்கே விருப்பு வெறுப்பு இருத்தல் கூடாது.

முன்னதாக என்னைப்பற்றி ஒரு தகவல் கூற விரும்புகின்றேன்.  என் பிள்ளைப் பருவ வாழ்க்கை அனுபவம். என் தந்தை பார்த்த வேலையை விட்டு ஹோட்டல் ஆரம்பித்தார். முதலில் மேலவாசல் என்ற கடைத் தெருவில் கடை இருந்தது. அங்கிருந்து அவர் மாற்றிய இடம் தியேட்டரை ஒட்டியது. அரண்மனையின் சிங்காரத் தோப்பு என்ற பெரிய தோட்டப் பகுதியில் தியேட்டரும் அதையொட்டி எங்கள் ஹோட்டலும் இருந்தன. பக்கத்தில் வீடுகள் கிடையாது. எதிரே ஓர் குளம். அடுத்து பள்ளிக்கூடம் இருந்தன. எனவே எனக்குப் பழக என் கடையில் வேலை பார்த்தவர்கள்தான். எல்லோரும் ஆண்கள். பள்ளிக்கூடத்திலும் என் வகுப்பில் நான் ஒருத்திதான் பெண். அந்தக் காலத்தில் பெண் பெரிய மனுஷியாகி விட்டால் பள்ளிக்கு வரமாட்டார்கள். எனக்கு அடுத்த வகுப்பிலும் இருவர்தான். சில தெருக்கள் கடந்து சென்று அரண்மனையில் எங்கள் ராஜாவின் மகள் தங்கப்பண்டியன். பின்னர் மீனாட்சி, சுப்புலட்சுமி என்று இரு பெண்களுடன் பழகினேன். இவைகளைக் கூறக் காரணம் ஆண்களுடன் பழகுவதில் எனக்குக் கூச்சம் கிடையாது. பாரதியின் பாடல்களால் என் பெண்மைக் குணமும் போய்விட்டது. அதாவது என்னிடம் மென்மை இல்லை.

ஓர் மனிதனின் குணங்கள் அவன் பிள்ளைப் பருவ காலச் சூழலில் வளர்ந்ததையொட்டி அமையும். பின்னர்தான் மற்றவைகள் அவனைச் செதுக்க ஆரம்பிக்கும்.

வாடிப்பட்டியில் வேலைக்குப் போன பொழுது என் வயது 22. என்னுடன் பணியில் இருந்த பெண்கள் இருவர்தான். அவர்களும் கிராமங்களில் இருப்பார்கள். மற்றவர்கள் எல்லோரும் ஆண்கள். ஜீப்பில் ஏறினால் ஆண்களுடன் சேர்ந்துதான் உட்கார வேண்டும். நான் வித்தியாசமாக உணரவில்லை. எல்லோருடனும் சரளமாகப் பழகுவேன். என்னதான் ஆண்களுடன் பழகினாலும் ஆண்களைக் கெட்டவர்களாவே நினைத்தேன். கிராமங்களில் நான் கண்ட காட்சிகள் என்னை அப்படி நினைக்க வைத்துவிட்டது. கோயிலுக்குப் போனாலும் தியேட்டருக்குச் சென்றாலும் கிடைக்கும் உரசலும் இடியும் அவர்களை வெறுக்க வைத்தது. பணிக்குச் சேர்ந்தவுடன் கேள்விப்பட்டவைகளும் அதை வளர்த்தது.

ஒருதலைப் பட்சமான கருத்தை மாற்றி உலகை எனக்குப் புரிய வைத்தது வாடிப்பட்டிதான். ஏட்டுப் படிப்பிலிருந்து வாழ்க்கையைப் பற்றிய படிப்பினைகள் கிடைக்க ஆரம்பித்தன. சமுதாயத்தைக் கூர்ந்து நோக்க ஆரம்பித்தேன். அதன் பின்னர் விருப்பு வெறுப்பின்றி எல்லோரையும் பார்க்க ஆரம்பித்தேன். மனிதனுக்குள் இருக்கும் மனிதம் உணர முடிந்தது.

இன்று நம்மில் பெரும்பாலானோர் உணர்ச்சிகளின் அடிப்படையில் மற்றவர்களை மதிப்பிடு கின்றனர். அவர்களைக் குறை கூறமுடியாது. ஒவ்வொருவரும் அவர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களால் செதுக்கப்படுகின்றார்கள்.

இனி சம்பவங்களைப் பார்ப்போம்.

வாடிப்பட்டி மாதர் சங்கத்தில் என்னைப்பற்றிய விமர்சனம். அதனைக் கேள்விப்பட்ட என் தோழி சரோஜாவிற்கு கோபமும் வேதனையும் ஏற்பட்டிருகின்றது. எனக்காகச் சண்டை போட்டிருக் கின்றாள். அவள் என்னிடம் வந்து புலம்பினாள். அவளுடன் சாரதா என்ற ஒரு பெண்மணியும் வந்திருந்தாள். அவள்தான் நடந்தவைகளை விளக்கினாள்.. ஆண்களுடன் சேர்ந்து சினிமாவிற்குப் போகின்றேனாம். நான் கெட்டவளாம். நான் அதைக் கேட்டு சிரித்தேன். ஆனால் அதற்கடுத்து அவள் பேசியவைகள்தான் என் சிந்தனைக்கு முதல்  வித்து. என்னைக் கேவலமாகப் பேசிய பெண், கணவன் இருந்தும் தப்பு செய்கின்றவளாம். இது ஊர் வம்பா அல்லது உண்மைச் செய்தியா?

எனக்கு வம்புகள் பிடிக்காது. வெட்டிப் பேச்சும் பிடிக்காது. ஆனால் வம்புகளிலும் திண்ணைப் பேச்சுகளிலும் கூட பொய்களுடன் சில உண்மைகளும் கலந்துவரும் என்ற படிப்பினை கொடுத்த செய்தி.

அக்காலத்தில் கிராமங்களில் கழிவறைகள் கிடையாது. மிகக் குறைந்த அளவு வீடுகளில் இருக்கும் கழிவறைகளிலும் சுத்தப்படுத்த மனிதர்கள் வர வேண்டும். எனவே வெளிச்சம் வரும் முன்னர் தோப்பு பக்கம், வாய்க்கால் பக்கம் காலைக்கடன் கழிக்கச் கிராமத்தினர் செல்வது வழக்கம். பெண்களும் போவார்கள். அப்படிச் செல்லும் இடங்களில் முறையில்லா கள்ள உறவுகளின் சந்திப்பும் நடக்கும். இதனை சாரதா கூறிய பொழுது முதலில் கோபம் வந்தாலும் சரோஜாவின் முகபாவம் என்னை அடக்கியது. சரோஜாவும் நானும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டவர்கள். இளம் விதவை. இருக்கும் ஒரு மகனுடன் மாமியார் வீட்டில் வாழ்ந்து வருகின்றாள். ஓரளவு படித்த பெண் என்னுடன் மனம்விட்டுப் பேசுவாள். சாரதாவின் கூற்று உண்மையென்று தலையாட்டினாள். அன்று முதல் யாராயினும் ஏதாவது சொல்ல முயன்றால் பொறுமையுடன் கேட்க ஆரம்பித்தேன். அது தவறு என்று தெரிந்த பின்னர் கூப்பிட்டு கண்டிப்பேன்.

பிரச்சனைகளை விமர்சிக்கும் கூடம் வம்பர் மடம். தெளிந்த அறிவுடன் கவனித்தால் உண்மை எது , பொய் எது என்று காணலாம். சமூக நலப்பணிகளில் இருப்பவர்கள் இதனைவிட்டு விலகியிருக்க முடியாது. சிகிச்சை செய்ய இது உதவும்.

சமுதாயத்தை கூர்ந்து பார்த்து நான் அறிந்தவைகள் பல. கள்ள உறவுகள் என்பது சமுதாயம்  தோன்றியதிலிருந்து வருகின்றன. அதற்கு முன்னர் உறவுகள் வைத்துப் பழகவில்லையே!. ஆனால் ஒன்று, இல்லத்தில் வாழும் பெண்கள் தவறு செய்வது மிகமிகக் குறைவு. பரவலாக எங்காவது நடக்கும் நிகழ்வாக இருந்தது. உண்மை வெளியில் தெரிந்தால் அந்தப் பெண் கொல்லப்படுவாள். சிலரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிடுவார்கள். எனவே ஆண் வியாபாரிக்கு வேலையில்லை. பரத்தையர் சேரி வரவேற்புகளுடன் இயங்கிக் கொண்டிருந்தன.

பெண் செய்த தவறுகள் சிலவற்றைப் பார்க்கலாம். ஒரு குடும்பத்தில் கணவனின் உடன் பிறந்தவனுடன் தொடர்பிருக்கலாம். ஒரே ஜாதியில் தொடர்பு இருக்கலாம். எப்பொழுதாவது நடக்கும் இந்தத் தவறுகளைக் கண்டும் காணாதவர்போல் இருக்கும் குடும்பங்களும் ஊர்களில் உண்டு. அக்காலத்தில் கணவன்மார்கள் பர்மா, மலேசியா, சிங்கப்பூர் என்று போய் வருடக் கணக்கில் தங்கிய காலத்தில் சில வீட்டுப் பெண்கள் தோட்ட வேலை செய்பவன் போன்றவர் களுடன் கள்ள உறவு வைத்தது உண்டு. நகர்ப்புறங்களில் சில செல்வந்தர்கள் வீட்டில் நடப்பது. எப்பொழுதும் காசைத் தேடும் கணவன். மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் இருந்து விட்டால் அந்தப் பெண்களில் சிலர் தங்கள் வீட்டு கார் டிரைவர்களுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்வார்கள். கி. ராஜநாராயணன் கதைகளை ஆரம்ப காலத்தில் அதிகமாக விமர்சனம் செய்தார்கள். பின்னர் யதார்த்த வாழ்க்கை என்று நினைத்துப் பேசுவதை நிறுத்தினர்

1963 இல் நடந்த ஓர் சம்பவம்

அப்பொழுது வேலூரில் மாவட்ட மகளிர் நல அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் ஒருவர் 17 வயதுப் பெண் ஒருத்தியைக் கூட்டிக் கொண்டு வந்தார். அந்தப் பெண்ணின் பெயர் வேணி. அவள் தந்தை இறந்துவிட்டார். அவள் தாயார் அவளைத் தன் சகோதரி வீட்டில் விட்டு விட்டு தன் சகோதரன் வீட்டிற்குச் சென்றுவிட்டாள். வேணியும் சித்தி வீட்டில் வேலைகள் செய்து கொண்டு பள்ளிக்கும் சென்று sslc படித்து முடித்தாள். எவனோ ஒருவன் அவளுக்குக் காதல் கடிதம் எழுதியிருக்கின்றான். அவள் சித்தப்பா அதைப் படித்துவிட்டு அவளை அடித்திருக்கிறார். மனம் உடைந்த வேணி கிணற்றில் குதித்துவிட்டாள். அவள் குதிப்பதைத் தற்செயலாகப் பார்த்தவர்கள் உடனே கிணற்றில் குதித்து அவளைக் காப்பாற்றியிருக்கின்றனர். அவள் குடும்பப் பெயரைக் கெடுத்து விட்டதால் இனிமேல் வைத்துக் கொள்ள முடியாது என்று முடிவு செய்து என்னிடம் கூட்டி வந்துவிட்டார். எங்காவது அனாதை இல்லத்தில் சேர்த்துவிடுங்கள் என்று கூறி அவளை என் வீட்டிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். ஆடு மாடு போல் பெண்ணின் நிலை. தவறு செய்யாத அப்பாவிப் பெண்.

அப்பொழுது என் துறையில் ஒரு கிராமத்தில் ஓர் பணியிடம் காலியாக இருந்தது. அதில் வேலையில் சேர்த்துக் கொண்டேன். அக்காலத்தில் இது போன்ற வேலைகளுக்குச் சேர்த்துக் கொள்ளலாம். அவள் வேலையில் சேரவும் அவளைப் பெற்றவள் வந்துவிட்டாள். வராமால் இருந்திருக்கலாம். அவர்கள் குடியிருந்த வீட்டின் வாயில் புறத்தில் ஒரு கிராமத்து இளைஞன் தையல் இயந்திரம் வைத்து பெண்கள் ஆடைகள் தைத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தான். அவன் பெயர் மூர்த்தி.வேணியின் அம்மாவிற்குச் சபலம் வந்துவிட்டது. மகன் வயதிருக்கும் அவனை தன் இச்சைக்குப் பலியாக்கிவிட்டாள்.. பழக்கம் தொடர்ந்தது. அவனை எப்பொழுதும் தன் பிடியில் வைத்திருக்க அவள் ஓர் முடிவு செய்தாள். அதுதான் கொடுமை. அவனுக்கே தன் மகளை மணமுடித்தாள். வேணி குழந்தைப் பெண். . ஆனால் மூர்த்தி கெட்டிக் காரன். ஏழையாயிருந்தாலும் கோழையில்லை. திருமணம் முடிந்தபின் வேணியின் அம்மா நெருங்கி வந்த பொழுது தொடக் கூட மறுத்துவிட்டான். “இதுவரை செய்ததே தவறு. இனியும் தொடர்ந்தால் அது பாவம்” என்று கூறி அவளை மறுத்துவிட்டான். இப்பொழுது தாயும் மகளும் சக்களத்தியானார்கள். மூர்த்தியை விரட்டச் சொன்னாள். சண்டை போட்டாள். மகளை அடித்தாள். மூர்த்திக்குக் கோபம் வந்துவிட்டது. மனைவியைக் காப்பாற்ற வேண்டும். வேணியின் அம்மாவை வீட்டை விட்டு துரத்திவிட்டான். அவ்வப்பொழுது வெளியூரிலிருந்து வந்து சில நாட்கள் தங்குவாள். சண்டை போடுவாள் மூர்த்தி அவளை விரட்டுவான்.  வேணியிடம் பிரியமாக இருந்தான். குழந்தைகள் பெற்று இன்று அக்குழந்தைகளும் நல்ல நிலையில் இருக்கின்றானர்.

இந்தக் குற்றம் தொடர்கதை என்பதைக் காட்ட சமீபத்தில் ஒரு செய்தி வந்தது. மருமகனுடன் மாமியார் கள்ள உறவு. தடைக் கல்லாக இருக்கும்  மனைவியைக் கொலை செய்துவிட்டதாக ஒரு செய்தி.

அடுத்த சம்பவம் சென்னையில் நடந்தது.

வள்ளி எனக்குத் தெரிந்த பெண். மத்திய அரசுப் பணியில் இருந்தாள். அவள் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தாள். அவளுக்கடுத்து வசித்த குடும்பம் அவளுக்குப் பழக்கமானது. அவள் பெயர் கண்ணம்மா. அவளுக்கு ஒரு குழந்தை. அவள் கணவன் அடிக்கடி வெளியூர் போக வேண்டிய வேலையில் இருந்தான். அவளுடைய மாமனார் மாமியார் இறந்துவிட்டதால் அவள் கணவனின் தம்பி இவர்களுடன் தங்கியிருந்து பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தான். கண்ணம்மாவின் சபலத்திற்கு அந்த சின்னப் பையன் பலியானான். அவனுக்கு இப்பொழுது உலகமே அவன் அண்ணிதான். அண்ணன் வீட்டுக்கு வந்தால் பொறாமைப்படும் அளவு மாறிவிட்டான். இந்நிலையில் கண்ணம்மாவின் கணவன் ஓர் விபத்தில் மாண்டுவிட்டான்.. அவள் கணவனின் நண்பன் ஏற்கனவே கண்ணம்மாவின் மேல் ஆசை வைத்திருந்ததால் அவளை மணக்க சம்மதம் கேட்டான். அவளும் அவனை மணந்துகொண்டாள். இந்தப் பையனால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தூக்கில் தொங்கி மாண்டான். இந்த செய்தி அந்தப் பையன் சாக விட்டு என்னிடம் வள்ளி கூறினாள். முன்பே தெரிந்திருந்தால் அந்தப் பையனைக் காப்பாற்ற ஏதாவது செய்திருப்பேன்.

தாம்பத்யம் பற்றி விபரமாக எழுதுவதற்குக் காரணங்கள் பல. ஓர் தாயார் அதிக பாசத்தில் தன் குழந்தைகள் தப்பே செய்யாது என்று கூறுவாள்.அதிக பாசத்தில் எழும் நம்பிக்கை யாரையும் கவனக் குறைவில் நிறுத்தும். குணம் கெட்டு நடக்கும் பெண்கள் கணவனிடம் மிகவும் அன்பு கொண்டவர் போல் நடிக்கலாம். அதனைக் கணவன் நம்பலாம்.ஆணின் நிலையும் அதுவே. ஒன்றை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். கணவன் மனைவி இருவரும் அவர்களின் ஆசைகள், குணங்கள், எதிர்பார்ப்புகள் இவைகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். முன்பு கூட்டுக் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அரண்களாக இருந்தனர். இப்பொழுதுள்ள சூழலில் வழுக்கி விழுவது சாதாரணமாகிவிட்டது. சரியான புரிதலும் அதற்கேற்ப குடும்பத்தைக் கொண்டு செலுத்துவதும் மிகவும் முக்கியமானது. முக்கியமாக தாம்பத்தியத்தின் வலிமை இங்கே மிக மிக முக்கியம்.

மணம் செய்து கொள்வது பெரிதல்ல. என்றும் மணம் வீசி மகிழ்வைப் பெருக்கவும் அமைதிக்கு வழி வகுக்கவும் இருவருக்கும் கவனச் சிதறல்கள் கூடாது. தாம்பத்யத்தியத்தின் அர்த்தம் புரிந்து காக்க வேண்டும்.

கசப்பானவைகளை எழுதும் பொழுது என் மனமும் வலிக்கின்றது. பொய்மைப் போர்வையப் போத்திக் கொண்டு வாழ்வின் அமைதியைப் பறி கொடுக்க ஆரம்பித்திருக்கின்றோம். மேலே சுட்டிக் காட்டிய தவறுகள் முன்பு அபூர்வமாக இருந்தன. ஆனால் நாளுக்கு நாள் எண்ணிக்கை கூட ஆரம்பித்து விட்டது. விபரம் அறிந்தவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த முயல் வேண்டும். ஒதுங்கி இருக்கக் கூடாது. வருங்கால சந்ததியினரைப் புதை குழியில் அழுத்திவிடக் கூடாது.

முயன்றால் முடியாதது இல்லை. நம் குறைகளை முதலில் உணர வேண்டும். இருக்கும் சூழலில் தடைகளை விலக்கி முன்னேற முயற்சி செய்ய வேண்டும். இது ஒவ்வொருவரின் கடமையாகும் .

சாதிக்க முடியும் என்று ஓர் சாதனையாளரைப்பற்றி ஏற்கனவே இத்தொடரில் எழுதியிருகின்றேன். திருநங்கை நடராஜ் நர்த்தகி. என் அன்பு மகள். அவள் நாட்டியம் கற்க முயன்றதே கடும் முயற்சி. பயிற்சியைத் தன் மூச்சாக எண்ணி முயன்றாள். அவள் எனக்கு முதலில் ஓர் நற்செய்தி அனுப்பியிருந்தாள். அவளுக்கு ஓர் பரிசு கிடைத்திருக்கின்றது. மகிழ்ச்சியைக் கடிதம் மூலம் தெரிவித்தாள். ஓர் திருநங்கை பெற்ற பரிசின் பெயர் என்ன தெரியுமா?

[Image -1]

சங்கீத நாடக அகாடமி புரஸ்கார் விருது.

[வணக்கம்,  தங்களது அனைவரது அன்பான வாழ்த்துக்களுடன் சங்கீத் நாடக் அகாடமி

புரஸ்கார் விருதினை இந்தியக் குடியரசுத்தலைவர் அவர்களிடம் பெற்று இனிதே

நடன நிகழ்ச்சியும் வழங்கி சென்னை வெள்ளியம்பலம் வந்தடைந்தோம்.

வாழ்வில் நினைத்து,நினைத்து மகிழவேண்டிய தருணமாய் இருந்தது.

நிகழ்வின் படங்களையும் இணைத்துள்ளேன்..

நன்றி! நன்றி! நன்றி!

 

அன்புடன்,

நர்த்தகி நடராஜ்]

 

டில்லிக்குச் சென்று இந்தியக் குடியரசுத் தலவரிடமிருந்து பரிசு வாங்கியதைப் படம் பிடித்து எனக்கு அனுப்பியிருக்கின்றாள். அங்கு அவள் நாட்டிய நிகழ்ச்சியும் நடந்ததாம்.அவள் அடைந்த மகிழ்ச்சியினை வார்த்தைகளில் கோர்த்து உணர்ச்சியினை வெளிப்படுத்தியிருக்கின்றாள். ஈன்ற பொழுதிலும் பெற்ற மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாயின் பெருமிதம் மகிழ்ச்சி எனக்கும் உண்டாயிற்று. பத்து மாதம் சுமந்து பெற்றால்தான் பிள்ளையா?!  அவள் புகைப்படத்தை எல்லோரும் பார்க்க இணத்திருக்கின்றேன். அந்த முகத்தைப் பாருங்கள். தெய்வீகமாகத் தெரிய வில்லையா? பிச்சை எடுக்கவும் விபச்சாரம் செய்யவும் அரசின் அனுமதி. ஆனால் இவளோ ஓர் கலையைக் கற்று பேரும் புகழுடன் வாழ்கின்றாளே! இதைப் பார்த்து நம்பிக்கை பெறுவோம்.

இப்பொழுது பல திருநங்கைகள் படித்து வக்கீல்களாகவும் இன்னும் பல பதவிகளிலும் இருக்கின்றனர். மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் வழிகாட்டலில் வங்கிக் கடன் பெற்று கண்ணிய மான தொழில்களூம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். கவுரவத்துடன் வாழ்ந்தவர்கள் தடம் புரளலாமா?

எண்ணங்கள் நல்லதாக இருக்க வேண்டும். முயற்சிகளில் மனம் ஒன்றிச் செயல்படவேண்டும். இத்தனையும் செய்வதற்கு முன்னால் ஒவ்வொருவரும் தங்கள் குறைகளை நமக்குள் நாம் நினைத்துப் பார்ப்போம். அவைகளை முதலில் குறைக்க முயல்வோம். நம்பிக்கை இழக்காமல் செய்யும் தொடர் முயற்சியில் நமக்கு வெற்றி கிடைக்கும். தவறு செய்பவர்களை வெறுக்க வேண்டாம். முடிந்த மட்டும் திருத்த முயல்வோம். அதுவும் ஒரு தொண்டு. வெறுப்பை வளர்க்க வேண்டாம். மறக்க முடியவில்லை யென்றால் மன்னித்து விடுவோம். ஆரோக்கியமான சமுதாயத்திற்கு நாம் ஒத்துழைப்போம்.

ஒரே உபதேசமாக இருக்கின்றது என்று அலுப்பாக இருக்கின்றதா? என்னையும் அச்சுறுத்தும் ஓர் மாற்றம் சமுதாயத்தில் வளர்ந்து வருகின்றது. அதனை அடுத்துக் கூறப் போகின்றேன். தாம்பத்யம் மட்டுமல்ல இன்னும் பல பிரச்சனைகள் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. அவைகளைப் பற்றியும் வாழ்வியல் தொடரில் வரும்.

ஆண்கள் வியாபாரி என்பவர் தமிழ் நாட்டில் இல்லையா? இந்தக் கேள்விக்கு நான் கூறப் போகும் உண்மை எல்லோருக்கும் வேதனை கொடுக்கும் செய்தியாக இருக்கும். அடுத்து வரும் பகுதியில் விளக்கம் கூறுகின்றேன். தொடர்க.

“நம் செயல்கள் ஆனாலும் சரி மற்றவர்கள் செயல்களானாலும் சரி விழிப்புணர்வோடு வாழ்க்கையை நட்ததுபவன் வரும் சிக்கல்களை ஆரம்பித்திலேயே கண்டு கொள்ள முடியும். அதனால் கவனமாகவும் வேகமாகவும் ஆரம்ப நிலையிலேயே அவ்வப்பொழுதே அவற்றைத் தவிர்க்கவோ அல்லது சரி செய்துகொள்ளவோ முடியும். விழிப்புணர்வு இல்லாதபோதோ அவை பூதாகாரமாகும்வரை கவனிக்கப்படுவதில்லை. .பின் அதன் விளைவுகளில் சிக்கித் திண்டாட வேண்டிவரும். சில சிக்கல்களைத் தீர்க்க முடியாமல் போகலாம். தீர்க்க முடிந்தாலும் மீதமுள்ள வாழ்க்கை நாம் ரசிக்க முடியாததாகவும் மாறிப் போகலாம். எனவே விழிப்புணர்வோடு இருங்கள். என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். நீங்கள் கண்டிப்பாக 90 சதவிகித சிக்கல்களை விழிப்புணர்வோடு இருப்பதால் மட்டும் தவிர்த்திடல் முடியும்”

என்.கணேசன்  — வாழும்கலை

[தொடரும்]

 

Series Navigationநினைவுகளின் சுவட்டில் (102)பஞ்சதந்திரம்
author

சீதாலட்சுமி

Similar Posts

6 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    இந்த தொடரில் சீதாலட்சுமி அவர்கள் பாலியல் பிரச்னைகள் பற்றிய விழிப்புணர்வின் அவசியத்தை பல்வேறு உண்மை உதாரணங்களுடன் படைத்துள்ளார்கள் .குறிப்பாக இல்லறத்தில் கணவனும் மனைவியும் இரு கோடுகள் போல் இல்லாமல் ஒரு புள்ளியாக இருப்பதின் அவசியம் அழகாக கூறப்பட்டுள்ளது.
    கற்பு என்பது ஆண் வர்க்கத்தினரால் பெண்ணை அடிமையாக நடத்த உண்டாகிய ஒரு சக்திமிக்க ஆயுதமாகும். அதை மிகவும் கெட்டிக்காரத்தனமாக தங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளாமல் தங்களின் தேவைக்கு ஏற்ப பரத்தை குலத்தை உண்டாக்கி அவர்களிடம் பகிரங்கமாக கூடி மகிழிந்துள்ளனர். கோவலன் மாதவி நல்ல உதாரணம்.
    பண்டைய தமிழர்கள் கற்பு நெறியில் எவ்வாறு திளைத்திருந்தனர் என்பதை விளக்கும் வண்ணமாக குறுந்தொகை பாடலை விளக்கியுள்ள விதம் அருமை!
    அதோடு புராணங்களில் உள்ள பரசுராமனின் தாயார் நீரில் ஒருவனின் நிழலைக்கண்டு கற்பு இழந்தாள் என்பதற்காக தந்தையின் ஆணையை எவ்வாறு அவன் நிறைவேற்றினான் என்ற குறிப்பும் அருமையே!
    தன்னைப் பற்றி சொல்லும்போது எவ்வாறு பாரதியின் பாடல்களால் பெண்மை குணம் போய் மென்மை இல்லாமல் போனது என்பதையும் வெளிப்படையாகவும் கூறியுள்ளார். இதனால் உண்டான துன்பங்களையும் உண்மை சம்பவங்களுடன் விளக்கியுள்ளார். அதனால் ஆண்கள் மீது சந்தேக உணர்வும் வெறுப்பும் உண்டானது குறித்தும் கூறியுள்ளார்.
    நமது சமுதாயத்தில் அன்றுமுதல் இன்றுவரை எல்லா தரப்பினரிடமும் மணமானபின்பும் கள்ள உறவுகள் உள்ளது சர்வ சாதாரணமே என்பதையும் அழுத்தமாகவே எடுத்து சொல்லியுள்ளார்.
    இறுதியாக திருநங்கைகளின் பரிதாப நிலை பற்றியும் கூறி, முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதுபோல் நடராஜ் நர்த்தகியின் சாதனையையும் வெளிபடுத்தியுள்ளார்.
    குடும்பத்தில் கணவன் மனைவி இருவருக்கும் இருக்க வேண்டிய புரிந்துணர்வையும் பரஸ்பர அன்பையும் விழிப்புணர்வையும் இப்பகுதியில் நன்றாகவே வலியுறித்தியுள்ளார்.
    தொடர்ந்து எழதுங்கள் உங்களின் அனுபவங்களையும் அதனால் நீங்கள் உணர்ந்துள்ள உண்மைகளையும். நன்றி…டாக்டர் ஜி. ஜான்சன்.

    1. Avatar
      seethaalakshmi says:

      அன்பு ஜான்
      பதிவை ஆழ்ந்து பார்த்து அலசியிருக்கின்றீர்கள். ஆண், பெண் உறவுபற்றி எழுதும் பொழுது கொச்சைப்பட்டுவிடாமல் எழுத வேண்டியிருக்கின்றது. அந்தரங்கமான விஷயம்தான். எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். என்னால் முடிந்த மட்டும் முயற்சிக்கின்றேன்.இந்த பயணத்தில் எனக்கு வழித் துணையாக வருகின்றீர்கள். மிக்க நன்றி
      சீதாலட்சுமி

  2. Avatar
    R.Karthigesu says:

    சீதாம்மா,

    அரிய கட்டுரை. நமது gender மீதான விழுமியங்களின் வக்கிரத்தை நன்கு விளக்கியுள்ளீர்கள். நர்த்தகியின் நடனத்தை முதன்முறை பார்த்தபோது அவர் திருநங்கை எனத் தெரியாது. அற்புதமான புதிய நடனமணி தோன்றியுள்ளார் என்றே நினைத்தேன். யாரும் அவரை மேடையில் பார்க்கும்போது திருநங்கை என்று யூகிக்க முடியாது. உங்கள் அரவணைப்பில் இருக்கிறார் என அறிந்து மகிழ்ச்சி. அவருக்கு மலேசிய ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள்.
    fedelity? Should be fidelity.

    நன்றி.

    ரெ.கா.

    1. Avatar
      seethaalakshmi says:

      மதிப்பிற்குரிய கார்த்திகேசு அய்யா அவர்களுக்கு வணக்கம். தாங்கள் வருகை தந்தது எனக்கு மகிழ்வையும் மன நிறைவையும் கொடுத்தது. தங்கள் எழுத்தைப்பற்றி கேள்விப்பட்டதுமில்லாமல் மதுரைத் திட்டத்தில் படித்தும் இருக்கின்றேன். சமுதாயத்தின் மேல் கொஞ்சம் அதிகம் அக்கறையுள்ளவள். இப்பொழுது பணி செய்ய களத்திற்குப் போக முடியாது. எனவே என் அனுபவங்களை, நான் அறிந்தவைகளை எழுதிக் கொண்டு வருகின்றேன். நீங்கள் சுட்டிக் காட்டிய பிழையைத் திருத்திக் கொள்கின்றேன்.
      மயிலாப்பூர் வீட்டிற்குச் சென்று நர்த்தகி நடராஜ், மற்றும் சக்தி இருவரையும் பார்த்துப் பேசியிருக்கின்றேன். அன்புடன் பழகியதை மறக்க முடியாது. இருவரும் அவ்வப்பொழுது கடிதங்கள் எழுதிக் கொள்வோம். முக்கியமான நிகழ்வுகளைப்பற்றிய தகவல்களூம் வரும்/ சென்னைக்குச் சென்றால் வீட்டிற்கு விருந்து சாப்பிட கூப்பிடுவார்கள். அவர்கள் காட்டும் அன்பிலே என் பிள்ளைகளானார்கள்
      தங்கள் வாழ்த்துக்களை நர்த்தகிக்குத் தெரிவிக்கின்றேன்
      தங்கள் வருகை எனக்கு ஊக்கம் அளித்துள்ளது. என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
      சீதாலட்சுமி
      .

  3. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர் says:

    அன்பு அம்மா,

    உங்கள் அனுபவங்கள் ஒவ்வொர்ன்றும் , யாராலும் எளிதில் பகிர்ந்து கொள்ள முடியாத
    எண்ணங்களைக் கொண்டிருந்தாலும் அதை அனைவருக்கும் உணர்த்தும் வண்ணம் எளிமையாக
    மிகவும் யதார்த்தமாக எழுதும் உங்கள் திறமையும் தெளிவும்…வியக்க வைக்கிறது.

    உங்கள் கட்டுரைகள் ஒரு இரும்பு அறைக்குள் நடப்பதை கண்ணாடி அறைக்குள் நடப்பதாகக் காட்டிவிடும்.

    அன்புடன்
    ஜெயா.

    1. Avatar
      seethaalakshmi says:

      அன்பு ஜெயா
      இத்தொடரில் பல இடங்களீல் எழுதும் பொழுது கம்பி மேல் நடப்பது போன்று இருக்கின்றது. வாழ்க்கையில் பல அடிப்படை விஷயங்களைக் கூட உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எழுத வேண்டியது நிறைய ஆனால் முடியவில்லை. இலைமறை காய்போல் சில தகவல்கள் தர வேண்டியிருக்கின்றது. சிலருக்குப் புரியாமல்கூடப் போகலாம். முடிந்த அளவு முயற்சி செய்கின்றேன். உன்னால் முடிந்த அளவு ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவி செய். தொடர்ந்து வருக.
      சீதாம்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *