குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 9

This entry is part 24 of 28 in the series 5 மே 2013

கொஞ்சங்கூட நினைத்தே பார்த்திராத அதிர்ச்சியால் தாக்கப்பட்டு, கிட்டத்தட்ட உணர்விழந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த ராதிகாவுக்குத் தான் எப்படித்தான் சுருண்டு கீழே விழாமல் சமாளித்துத் தெருவில் நடந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தாளோ என்று வியப்பாக இருந்தது.

அவள் வந்து சேர்ந்த நேரத்தில் தனலட்சுமி வீட்டில் இல்லை.   பக்கத்து வீட்டில் சாவியைக் கொடுத்துவிட்டுக் கோவிலுக்குப் போயிருந்தாள்.  அவ்விட்டுச் சிறுமி அவளுக்காக காத்திருந்து சாவியை அவளிடம் கொடுத்துவிட்டுப் போனதும் கதவு திறந்துகொண்டு உள்ளே போன அவள் தன்னறைக்குள் நுழைந்ததும், கட்டிலில் கைப்பையையும் புத்தகங்களையும் பொத்தென்று போட்டுவிட்டு, தானும் அதன் மீது பொத்தென்று வீழ்ந்தாள். குப்புறப் படுத்துக்கொண்டு அழுதாள்.   அது போல் அதற்கு முன்னல் என்றும் அவள் மனமுடைந்து அழுததில்லை.

தனது அழுகையைக் கவனிக்க அங்கே யாரும் இல்லை என்கிற சுதந்திரத்துடன் விக்கி விக்கி அழுது தீர்த்தாள்.  அந்த அழுகையின் வெடித்துச் சிதறலில் அவள் உடல் முழுவதும் வலிப்பு வந்தவளுடையது போன்று குலுங்கித் தீர்ந்தது. ‘அம்மா! அம்மா! கோவிலுக்கா போயிருக்கிறீர்கள்? எதற்கு? உங்கள் மாங்கலிய பலம் நன்றாக இருக்க வெண்டு மென்று கடவுளிடம் வேண்டிக் கொள்ளுவதற்காகவா!  அதன் மூலம் அப்பாவின் ஆயுளுக்கு நீடிப்புக் கேட்பதன் பொருட்டா?  … அய்யோ, அசட்டு அம்மாவே!  இன்று நான்` கண்ட காட்சியை நீங்களும் காண நேர்ந்திருந்தால், எத்தகைய அதிர்ச்சிக்கு ஆளாகி இருந்திருப்பீர்கள்!  அதன் பாதிப்பை உங்களால் தாங்கியிருக்க முடியுமா, அம்மா? கல்ழாணம் ஆன புதிதில் ஓர் இளம் பெண் தன் கணவனுக்குச் செய்யும் பணிவிடைகளை எல்லாம் இன்றளவும் அவருக்கு அதே உற்சாகத்துடன் செய்து வருகிறீர்களே, அம்மா! ஒருகால், அன்றை விட இன்னும் அதிக உற்சாகத்துடன் அவற்றைச் செய்கிறீர்களோ எனாமோ!  யார் கண்டது? …. பூட் பாலிஷ் முதற்கொண்டு சலிக்காமல் போட்டு வைக்கிறீர்கள். அப்பா அஃபீசுக்குக் கிளம்பும் போது டிஃபன் பாக்சுடன் அவரது அறைக்குப் போய் அதற்கென்று அவர் வைத்துள்ள ரெக்சின் பைக்குள் அதை வைக்கிறீர்கள்.  ’நாளைக்கு என்ன டிஃபன் ப்ண்ணட்டும்’ என்று அப்பாவை நீங்கள் கேட்காமல் இருந்ததே கிடையாது.  வாசல் வரை சென்று வழியனுப்புவீர்கள்.   தெரு முக்கில் அவருடைய மாருதி கார் மறைகிற வரையில் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுத்தான் வீட்டுக் கதவை சாத்திக்கொண்டு உள்ளே வருவீர்கள். அவரை ஏறிடுந்தோறும் உங்கள் முகத்தில் தோன்றும் ஒளிக்கு ஈடு ஏது, இணை ஏது, அம்மா? அப்பாவின் மீது நீங்கள் கொண்டிருக்கும் காதல் உன்னதமானது.  மிக மிக உயர்ந்தது.  அதற்கு அவர் உங்களுக்கு அளித்துள்ள பரிசு இன்னொரு பெண்ணுடன் அவர் வைத்துக்கொண்டிருக்கும் அசிங்கமான கள்ள உறவுதான் என்பது தெரிய வந்தால் நீங்கள் என்ன ஆவீர்களோ என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடிழ்யவில்லை.   நல்லவர் என்று பெயர் வாங்கியுள்ள மனிதனே இப்படி என்றால்,   பிறகு கெட்டவர்கள் எப்படி இருப்பார்களோ என்கிற கற்பனையே எனக்குக் கசக்கிறது…. சே!…..’

காசினோ தியேட்டரில் அப்பாவின் பக்கத்தில் தாலி கட்டிய மனைவிக்குரிய ஒட்டுதலுடன் உரசியபடி நடந்து சென்ற அந்த அழகிழைப் பற்றி நினைத்தாலோ, அவளுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது.

’கல்ழாணம் ஆனவர் என்பது தெரிந்தும் – தெரியாமல் இருக்கவே முடியாது – இப்ப்டி ஓர் ஆண்பிள்ளையுடன் கூத்தடிக்க எப்படி அவள் மனம் இடங்கொடுத்தது? மனச்சாட்சியே இல்லையா அவளுக்கு?… தன்னையொத்த இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைப் பாழ் பண்ணுகிறோமே எனும் உறுத்தலே வராதா இவளைப் போன்ற பெண்களுக்கு?  அப்பாவின் மீதிருக்கும் தப்பின் பரிமாணத்தை விட, அவள் தப்பின் பரிமாணமே அதிகம்!  … ஒரு பெண் இப்படிச் செய்யலாமா? தப்பு தப்புதான். அதை ஓர் ஆண் செழய்தாலென்ன, ஒரு பெண் செய்தாலென்ன? பெண் செய்தால் அதிகத் தப்பு, அதே தப்பை ஆண் செய்தால் குறைந்த தப்பு என்றாகுமா என்ன!  .. இல்லை, இல்லை.  அது அப்படித்தான். பெண் என்பவள் தாய்மை உணர்வுகள் நிரம்பியவள்.  ஆணிலிருந்து வித்தியாசப்ட்டவள்.  சில் விஷழங்களில் ஆணையும் பெண்ணைழயும் ஒரே தராசின் இரு தட்டுகளிலும் வைத்து எடை போடுவது தப்பு.  ஏனெனில், குறிப்பிட்ட அந்தச் சில விஷயங்களில் ஆண்டவன் பெண்ணை ஆணைக் காட்டிலும் உழர்ந்தவளாய்ப் படைத்திருக்கிறான்.  ஆண் செய்யும் அதே தப்பைப் பெண் செய்யும் போது நமது சமுதாயம் திடுக்கிடுவது அதனால்தான் என்று கூடச் சொல்ல முடியும்!  சில நீதிகளைப் பெண்ணுக்கு மட்டுமே போதித்து அவளை ஆண் தனது ஓரவஞ்சனையால் தன்னை ..விடவும் சிறந்தவளாக ஆக்கி வைத்துள்ளான் என்பது உண்மையே யானாலும்,  பிறப்பின் இயல்பாலேயே சில குண உயர்வுகளைப் பெற்றுள்ள் பெண் அவற்றிலிருந்து பிறழ்ந்து வழுக்கி விழுந்துவிடக் கூடாதுதானே! …அப்பாவின் இந்த அசிங்க்ம் என்னை ஒரு தத்துவவாதியாவும், சிந்தனாவாதியாகவும் மாற்றிவிடும் போலிருக்கிறதே!  என் சிந்தனைக ளெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.  இந்தப் பிரச்னையை எப்படித் தீர்ப்பது?  … இதில் தீர்ப்பதற்கு என்ன இருக்கிறது?  அப்பாவின் கள்ள உறவு எத்தனை நாள்களாக இருந்து வருகிறதோ! …  ஏதாவது செழ்து இருவரையும் பிரித்து வேண்டுமானால் வைத்துவிட முடியலாம். அவ்வாறு செய்தல் இத்தனை நாளும் இருவரும் கொண்டிருந்த கள்ளத் தொடர்பை இல்லை என்றாக்கிவிடுமா என்ன!  இதென்ன ஒரு தாளில் பென்சிலால் எழுதிழதை ரப்பரால் அழிப்பது போன்றாதா? ….’   – தலையில் ஊற்றிக்கொண்டிருந்த தண்ணீருடன் அவள் கண்ணீரும் சேர்ந்து வழிந்துகொண்டிருந்தது.

’வெறும் உட்லுறவு மட்டுந்தானா, இல்லாவிட்டால் அப்பா அவளுடன் குடித்தனமே நடத்திக்கொண்டிருக்கிறாரா?…இதை எப்படிக் கண்டுபிடிப்பது?…அப்படியானால் அவருக்குக் அவள் மூலம் குழந்தைகள் இருக்குமா?….’

இப்படி ஒரு கேள்வி அவள் மனத்தில் எழுந்ததும் அவளால் தாங்கவே முடியாது போயிற்று.  ’அம்மா! அம்மா! இப்படி ஏமாந்து விட்டாயே, இந்த அப்பாவிடம்!  அப்பாவின் இந்தத் துரோகம் தெரியவந்தால், உன் மனம் என்ன பாடு படும்!  இதை நீ தாஙகுவாயா, இல்லாவிடில் உன் இதயம் வெடித்துச் சுக்கல் சுக்கலாய்ச் சிதறி விடுமா?    உன்னிடம் இதைச் சொல்லிவிட வேண்டும் என்று என் உள்ளம் பரபரத்தாலும், அதனால் விளையக் கூடியவற்றை நினைத்துப் பார்த்தால் ஊமை கண்ட கனவு மாதிரி அதற்குச் சொல்லுருவம் கொடுக்காமல் இருந்துவிட வேண்டியதுதான் என்றல்லவா தோன்றுகிறது?’  –  அம்மாவோடு தன் வழசக்கத்துக்கு மாறாக, ஒருமையில் மனத்துள் பேசியது அவளுக்கு வித்தியாசமாகப் பட்டது. அம்மா தன் இரக்கத்துக்கு உரியவ்ளளாகிவிட்டதால்,  பன்மையின் இடத்தில் ஒருமை வந்து உட்கார்ந்துவிட்டது போலும் என்று அவள் எண்ணிக்கொண்டாள்.

அன்றொரு நாள் அம்மாவுக்கும் அப்பாவுக்குமிடையே நடந்த – தறசெயலாய்த் தான் கேட்க நேர்ந்த அந்தரங்க உரையாடல் அப்போது திடீரென்று நினைவுக்கு வந்து தன் அப்பாவை இன்னும் அதிக அளவில் அவளை வெறுக்கச் செய்தது.

’தனலட்சுமி!’

‘என்னங்க?’

‘இந்த ஏற்பாடு உனக்குச் சம்மதமானதுதானே?  மகாத்மா காந்தி கூட கஸ்தூர்பா கிட்ட் சம்மதம் கேட்டதுக்கு அப்புறந்தான் பிரும்மசரிய விரதம் காக்கத் தொடங்கினாரு….’

தனலட்சுமி சிரித்தாள்;

’ஏய்! சத்தமாச் சிரிக்காதே. ராதிகா முழிச்சுக்கப் போகுது!’

’அது தூங்கிப் போயாச்சு.  பாலைக் குடிக்க வைக்கிறதுக்காக அஞ்சு நிமிசத்துக்கு முந்தி எழுப்பிப் பாத்துத் தோத்துப் போயிட்டேன்.  அதனால, இப்ப நாம ஃப்ரீயாப் பேசலாம்….அது சரி, காந்திக்கும் முன்னால அப்ப்டிப் பண்ணின ராமகிருஷ்ண பரமஹம்சரை மறந்துட்டீங்களே! அவரு கூட, சாரதா அம்மையாரோட சம்மதத்தோடதான் பிரும்மசரிய விரதம் காத்தாரு. இல்லியா?’

’ஆமாமா.’

’எனக்கொண்ணும் அது கஷ்டமில்லீங்க. நல்லதுதானே? ராதிகாவுக்கும் பதிநாலு வயசு ஆயிடிச்சு. இனிமேப்பட்டும் எதுக்குங்க இந்த அசிங்கம்? நானே சொல்லணும்னு இருந்தேன்.  நீங்க முந்திக்கிட்டீங்க.  ஆனா உங்களுக்குத்தான் கஷ்டமா இருக்கும்!”
ராதிகா வெட்கப்பட்டுத் தான் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.  ‘வேற எங்கேயாச்சும் போய் இது மாதிரியான விஷழங்களைப் பேசக்கூடாது? இப்பிடியா, பக்கத்துல ஒரு பொண்ணைப் படுக்க வெச்சுக்கிட்டுப் பேசுறது? ஒருக்கா பொண்ணு முழிச்சுக்கிட்டு இருந்துட்டான்ற அச்சம் வேணாம்? தூ! கிரிசை கெட்ட அப்பா, துப்புக்கெட்ட அம்மா!’

’ரொம்ப தேங்க்ஸ், தனலட்சுமி!’

’நீங்க எதுக்குங்க எனக்குத் தேங்க்ஸ் சொல்றீங்க? நானில்ல சொல்லணும்? இது மாதிரி ஒரு புருஷன் கிடைக்க ஒரு பொமபளை இல்லே குடுத்து வெச்சிருக்கணும்?’

’சரி, சரி. ஆரம்பிச்சுடாதே. கு நைட்.’

’குட் நைட்டுங்க.’

’என்ன  அருமைழான அப்பா என்று அன்றைக்குப் பெருமைப்பட்டுக் கொண்டேனே!  அந்த பிரும்மசரியத் திட்டத்தின் பின்னணி இப்போதல்லவா புரிகிறது! அடேயப்பா! என்ன சாகசம்! என்ன நரித்தனம்! வெளியே தனக்குத் தீனி கிடைக்க ஏற்பாடு செய்துகொண்டுவிட்டு, வீட்டிலே பிரும்மசரியமா!  அப்படிச் செய்தால்தானே இந்த அசட்டு அம்மாவுக்கு எந்தச் சந்தேகமும் வராது!  ’ஆகா! என் பாக்கியமே பாக்கியம்! ராமகிருஷ்ன பரமஹம்சர் வழியிலும், மகாத்மா காந்தியின் வழியிலும் செல்லும் கணவரன்றோ எனக்கு வாய்த்திருக்கிறார்!’என்று இறுமாந்துதான் போயிருப்பாள் இந்த  ஏமாளி அம்மா! இதனால் அம்மாவின் பதிவிரதத் தன்மையும், பதிபக்தியும் இன்னும் அதிகரித்திருக்கத்தான் செய்திருக்கும்! அட, பயித்தியக்கார அம்மாவே!’ ….

”ஏண்டி, ராதிகா! இன்னுமா குளிச்சுக்கிட்டு இருக்குறே?ச்ளி பிடிக்கப் போவுது…” என்ற தனலட்சுமியி குரல் கதவுக்கு வெளியே ஒலித்தது.

”இதோ வந்துட்டேம்மா!” என்று பதிலளித்த ராதிகா, ‘எனக்குச் சளி பிடிக்கிறதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்; உனக்குச் சனி பிடிச்சிருக்குதே, அது தெரியுமா உனக்கு?’ என்று கூறித் தனக்குமள் கசந்துகொண்டாள்.

கூடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அப்பாவும் பெரியப்பாவும் எதற்கோ இரைந்து சிரித்தது காதில் விழ, ராதிகாவின் எரிச்ச்ல் இன்னும் மிகுந்து போனது. ‘செய்யிறதையும் செய்துட்டு என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு?  அம்மாவை ஏமாத்தி, அப்பாவியா வெச்சிருக்க முடியுதுன்றதுதானே நீ சிரிப்பும் களிப்புமா இருக்கிறதுக்குக் காரணம்?  உன்னைப்பத்தி அம்மாகிட்ட நான் போடுக்குடுத்தா உன்னோட கதி என்ன?  அதுக்கு அப்புறமும் இந்த அசட்டு அம்மா பதிவிரதா சிகாமணியா இருப்பாளா, இல்லாட்டி பத்திரகாளி யாவாளான்னு தெரியல்லே. சாது மிரண்டா காடு கொள்ளாதும்பாங்க.  எல்லா சாதுக்களும் மிரள்றதில்லே.  இந்த அம்மா எந்த ரகம் – மிரளக்கூடிய ரகமா, இல்லாட்டி வாயில வெரலை வெச்சலும் கடிக்கக்கூடத் தெரியாத ரகமா? எந்த ரகம்?…’ – தீனதயாளனை ஒருமையில் விளித்துத் திட்டியதும் அவளை அயர்த்தியது.

ராட்திகாவால் ஒரு நிச்சயமான முடிவுக்கு வர முடியவில்லை. தனலட்சுமி மிரள்வாளோ இல்லையோ, மனமுடைந்து போய்ப் பயித்தியம் பிடித்த மாதிரி ஆகிப்போவாள் என்கிற வரைழில் நிச்சயம். ஆக மொத்தம் யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத அவமானத் துயரத்தைத் தன் மனத்துள்ளேயே வைத்துக்கொண்டு அவள் இனி மறுக வேண்டியதுதான்.

’அப்பா! நீ எத்தகைய மோசக்கார ஆள்! ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு இந்த முட்டாள் அம்மா உன்னை ஒப்பிட்டுப் புளகிப்பதும், நீயே உன்னை மகாத்மா காந்திக்கு ஒப்பிட்டுத் தப்பான பெருமிதத்தை அவளிடம் வெளிப்படுத்திக்கொண்டதும் – என்னே கேலிக்கூத்துகள்! ஒன்று அசட்டுத்தனத்தின் மறு பதிப்பு; இன்னொன்றோ அயோக்கியத்தனத்தின்  உச்சம்!
… அந்த அயோக்கியப் பெண்மணி யார், என்ன், ஏது என்கிற எல்லா விவரங்களையும் கண்டுபிடிக்கிற வரையில், நான் அப்பாவைக் கண்டுபிடித்துவிட்ட சேதி அப்பாவுக்குத் தெரியவே கூடாது… ஊகமாகக்கூடப் புரிந்துவிடக் கூடாது. …எனவே இனிக் கவனமாக இருக்க வேண்டும்.  அதாவது வேஷம் போடவேண்டும். அது என்னால் முடியுமா? … முடியத்தான் வேண்டும்!  இல்லாவிட்டால், தந்திரக்காரரான அப்பா அந்தப் பெண்மணியைப் பற்றி என்னால் எதுவும் கண்டுபிடிக்க முடியாதபடி உஷாராகச் செயல்பட முற்பட்டுவிடுவார்……..’

மறுபடியும் ராதிகாவுக்கு அழுகை வந்தது.

’அப்பா! அருமையான இரண்டு குழந்தைகளை உனக்குப் பெற்றுத் தந்த உன் மனைவிக்கு உன்னால் துரோகம் செய்ய முடிகிறதென்றால், நீ அவளையும் சரி, உன் குழந்தைகளையும் சரி, நேசிக்கவில்லை என்றுதானே அர்த்தம்?  கட்டின பெண்டாட்டிக்கு எந்தச் சந்தேகமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக மகாத்மா காந்தி வேஷமா போடுகிறாய்! அந்த மகானின் பெயரை உச்சரிக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது?  தூத்தேறி! மகாத்மா காந்தியாம், மகாத்மா காந்தி! அடி செருப்பாலே!’  –  தன் அப்பாவப்பற்றிய சிந்தனையில் ‘அடி, செருப்பாலே’ என்னும் சொற்கள் தன் மனத்தில் தோன்றியதை எண்ணி அவளுக்கே மலைப்பாக இருந்தது. தன் கோபமும் ஆத்திரமும் அதிகப்படியோ என்று ஒரே ஒரு நொடி நேரச் சந்தேகம் அவளுள் எழுந்து, எழுந்த விரைவில் மறைந்தும் போயிற்று.

.    அதற்கு மேல் எந்தச் சிந்தனைக்கும் ஆளாகாமல், ராதிகா தலையைத் துவட்டியபடி, குளியலறையை விட்டு வெளியே  வந்தாள்.

”நேத்தெல்லாம் தலைவலின்னு சொல்லிட்டு எதுக்குடி தலைக்குகத் தண்ணி ஊத்திக்கிட்டே?”
”தலைவலி போயிடிச்சும்மா. இப்ப எதுவும் இல்லே. தலைக்கு ஊத்திக்கிட்டதுமே ஃப்ரெஷ்ஷா ஆயிடிச்சு…” என்ற ராதிகா புன்னகை செய்தாள்.

தனலட்சுமி அவளைக் கவனித்தாள். அவள் தன் இயல்புக்குத் திரும்பி விட்டதாகத் தோன்றியதில் சற்றே நிம்மதியுற்றாள்.

”என்ன சமையல்மா பண்ணப் போறீங்க?”

”எல்லாம் உங்கப்பாவுக்கும் உனக்கும் பிடிச்ச சமையல்தான்.”

”என்னம்மா இது, அக்கிர்மமாயிருக்கு? வீட்டுக்கு விருந்தாளிங்க வந்திருக்கிறப்ப, அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி சமையல் பண்ணுவீங்களா,, அத்த விட்டுட்டு, அப்பாவுக்கும் என்க்கும் பிடிச்ச் மாதிரின்றீங்களே!”

”அவங்களுக்கும் பிடிச்சதுதாண்டி.  கேட்டுட்டுத்தான் பண்றேன்..சின்ன வெங்காயம் போட்டு சாம்பார், தக்காளி போட்டு மைசூர் ரசம், வாழைக்காய்ப் பொடிமாஸ், கேரட்டும் வெள்ளரிக்காயும் போட்டுத் தயிர்ப்பச்சடி, ரங்கவிலாஸ்ல வாங்கின உருளைக்கிழங்கு வறுவல்…போதுமா, இல்லே இன்னும் ஏதாச்சும் பண்ணணுமாடி?”

”போதும், போதும்!”

பதினொன்றரை மணிக் கெல்லாம் சாப்பாட்டுக்கடை முடிந்தது.அதன் பிறகு தாம்பூலம் தரித்துப் பேசியபடி ஓர் அரை மணி நேரத்தைக் கழித்த பிறகு பூரங்கமும் நாகம்மாளும் விடை பெற்றுப் புறப்பட்டார்கள்……

அவர்கள் போன பிறகு ராதிகா தன்னறைக்குச் சென்றாள்.  ஆனால், கதவைச் சாத்திக்கொள்ளவில்லை.

கூடத்தில் கணவருக்கு எதிரே அமர்ந்துகொண்ட தனல்சுமி, “என்னாங்க!  ராதிகாவோட காலேஜ்ல அஞ்சாறு சிநேகிதிங்களோட அப்பாமாருங்க சின்னவீடு செட்-அப் பண்ணி வெச்சிருக்காங்களாம்.  அது பத்தி ஒருத்தருக் கொருத்தர் சொல்லி அந்தப் பொண்ணுங்க் அழுதிருக்குதுங்க. அதைப் பார்த்த ஆத்திரத்துலதான் நம்ம ராதிகா மூடு அவுட்டாயி கல்யாணம் பண்ணிக்கப் போறதிலையாக்கும், அதாக்கும், இதாக்கும்னு பேசி இருக்கா நேத்து.,” என்றாள்.

தனலட்சுமியின் சொற்கள் ராதிகாவின் செவிகளில் விழுந்தன, ஆனால், தீனதயாளன் முதுகு காட்டி உட்கார்ந்திருந்ததால், அவளால் அவரது முகத்தைப் பார்க்க முடியவில்லை. அதனால், அம்மாவின் சொற்கள் அவரது முகத்தில் விளைவித்திருக்கக் கூடிய மாற்றத்தை அவளால் தெரிந்துகொள்ள முடிழயவில்லை. எனினும் அவர் அம்மாவுக்கு ஏதேனும் பதிலைச் சொல்லித்தானே ஆகவேண்டும் என்பதால், அவ்ள் காதுகளத் தீட்டிக்கொண்டாள்.
”அப்படியா! அதானே பார்த்தேன்!” என்றதோடு அவர் நிறுத்திக்கொண்டார்.
’இந்த அப்பா ரொம்பவே சாமர்த்தியசாலிதான்! …’

அதன் பிறகு அவர்கள் எதுவும் அது பற்றிப் பேசிக்கொள்ளாததால், ராதிகா தன் கட்டிலில் ஏறிப் படுத்துக்கொண்டாள்.

சிறிது நேரச் சிந்தனைக்குப் பிறகு, அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது.  அது பயனுள்ள யோசனையாக அவளுக்குத் தோன்றினாலும், அதைச் செயல்படுத்துவது சிரமமான ஒன்றாக் இருக்குமென்று அவளுக்குத் தோன்றியது. இருப்பினும், உண்மையைக் கண்டுபிடிக்க அதைத் தவிர வேறு எந்த வழியும் அவளுக்குத் தோன்றவில்லை.

எனவே, அதைச் செயல்படுத்தும் பொருட்டு மறு நாள் அவள் கல்லூரிக்குப் போகாதிருக்கத் தீர்மானித்தாள்.

(தொடரும்)
jothigirija@live.com

Series Navigationபசுமையின் நிறம் சிவப்புவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -8 [இரண்டாம் அங்கம் முடிவு]
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *