குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 10

This entry is part 18 of 33 in the series 19 மே 2013

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 10

ஜோதிர்லதா கிரிஜா

“என்னடி! பேசி முடிக்கல்லையா ரெண்டு பேரும்?” என்றவாறு தயாவும் ரமாவும் இருந்த அறைக்கு வெளியே நின்று குரல் கொடுத்த ரேவதி, “ரமா இன்னிக்கு இங்கேயே சாப்பிடட்டும்,” என்றாள்.

“இல்லேம்மா! அம்மா எனக்காகக் காத்துட்டிருப்பா,” என்று பதில் சொன்ன ரமா, “என்னடி, தயா? அப்ப நான் புறப்படலாந்தானே? சங்கர் சொல்லி யிருக்கிறபடியே செய். ரகளை எதுவும் பண்ணாம ஒத்துக்கோ. அப்பால கடவுள் விட்ட வழி!” என்றாள். ‘ரகளை எதுவும் பண்ணாம ஒத்துக்கோ’ என்னும் சொற்களை மட்டும் கவனமாய் இரைந்து சொன்னாள்..

ரேவதி நிம்மதியுடன் அங்கிருந்து அகன்றாள்.

“ஏண்டி, ரமா? அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணத்தை நடத்திடணும்னு அவா சொல்லிட்டா, சங்கரால என்ன செய்ய முடியும்? ரெண்டு மாசம், மூணு மாசம்னே இடைவெளி இருந்தாலும் கூட அவரால என்ன செய்ய முடியும்? எனக்கு ஒண்ணுமே புரியல்லேடி. தலையைச் சுத்தறது. ஓடிப் போறதைத் தவிர வேற என்ன வழி இருக்க முடியும்? லீவு போட்டுட்டு ஓடிப் போய்க் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லுவாரோ?”

“நீ இப்ப சொன்னதை யெல்லாம் சங்கரை சாயங்காலம் பாக்குறப்ப அவர் கிட்ட சொல்றேன். நாளைக்கு ரெண்டு பேரும் நிறையப் பேசி ஒரு முடிவுக்கு வாங்க. நான் வறேண்டி, தயா. . .நான் செய்யக் கூடியது ஏதாவது இருந்தா சொல்லு. செய்யறேன்.”

“இப்போதைக்கி எதுவும் தோணல்லே. ரொம்ப தேங்க்ஸ்டி, ரமா.”

“சரி, சரி கண்ணைத் தொடைச்சுக்க.”

தயா கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள். கதவையும் திறந்தாள். அறையிலிருந்து வெளிப்பட்ட ரமாவைக் காப்பியுடன் சாம்பவி எதிர்கொண்டாள்.

“இந்தா, ரமா. காப்பியையாவது குடி.”

காப்பியை வாங்கிக் குடித்துவிட்டு ரமா அடுக்களைக்குப் போனாள்.

“ஒரு வழியா அவளைச் சம்மதிக்கப் பண்ணியிருக்கேன், மாமி.. யாரும் அவகிட்ட அநாவசியமா பேச்சுக் குடுத்து அவ மூடைக் கெடுத்துடாதங்கோ!”

“சரிடிம்மா. ரொம்ப தேங்க்ஸ்!” என்ற ரேவதி சிரிப்புடன் அவளுக்கு விடை கொடுத்தாள்.

ரமா படி இறங்கிப் போனதும் தயாவைத் தனியாகப் பார்த்த சாம்பவி, “என்னடி இது, தயா? சரின்னா சொல்லப் போறே?” என்றாள் வியப்பாகவும் ஒரு நம்பமுடியாமையுடனும்.

சுற்றுமுற்றும் பார்வையைச் சுழற்றியபின், “அது நிஜமான சம்மதமில்லேடி, சாம்பவி! சும்மா ஒரு இதுக்குத்தான். அப்பா அம்மாவை இப்போதைக்கு ஏமாத்துறதுக்கு. இல்லேன்னா, என்னை வெளியில போக விட மாட்டா. அப்புறம் அவரோட பேச முடியாது. இல்லியா? அதான். . .” என்று சன்னக் குரலில் பதில் சொன்ன தயா வெட்கத்துடன் தரையைப் பார்த்தாள். வயதில் தன்னை விட மூத்தவளிடம் இவ்வாறு பேசவேண்டி யிருந்ததன் தாக்கத்தால் அவள் ஒரு குற்ற உணர்வுக்கு ஆளானாள்.

“அப்படின்னா, அவர் டில்லியில இல்லியா?”

“இல்லே. மெட்ராஸ்தான். எங்க ஆ·பீசேதான். எனக்கு மூணு வருஷம் சீனியர். ஆனா ரெண்டு வருஷமாத்தான் எங்களுக்குள்ள . . .” என்று வாக்கியத்தை முடிக்காமல் தலை உயர்த்தி சாம்பவியைப் பார்த்துவிட்டுத் தயா தலை குனிந்தாள்:.

“புரியறதுடி. . . இன்னைக்கு இப்போதைக்கு சரின்னு சொல்லி எல்லாருக்கும் கடுக்காய் குடுத்துட்டு, பேசாம ரிஜிஸ்டர் ஆ·பீசுக்குப் போய்ச் சட்டப்படி கலியாணம் பண்ணிக்குங்க. நான் வேணும்னாலும் கூட வந்து சாட்சிக் கையெழுத்துப் போட்றேன்.”

தயவுக்குக் கண்கள் கலங்கின: “அதெல்லாம் வேண்டாம், சாம்பவி. நீ நினைக்கிற மாதிரி அது அவ்வளவு சுலபமில்லே. அவருக்கு ரெண்டு தங்கைங்க இருக்கா கலியாணத்துக்கு. ஒருத்திக்காவது பண்ணின பிற்பாடுதான் அவரால தன்னோடது பத்தி நெனைக்கவே முடியும். தவிர, உன்னை விட்டுட்டுக் கல்யாணம் பண்ணிண்டு போறதுக்கு நான் ஒண்ணும் அவசரக்காரி இல்லே. சுயநலக்காரியும் இல்லே.”

“சேச்சே! உன்னைத் தெரியாதாடி எனக்கு? நீ சொல்லணுமா, என்ன? கலியாணம் பண்ணிண்டியானா அப்புறம் இவாளால உன்னை அசைக்க முடியாதில்லியா? அதுக்காகச் சொல்றேன். எனக்கு ஆகட்டும் முதல்லேன்னெல்லாம் காத்துண்டிருந்தா சரிப்பட்டு வராதுடி.”

“அவரோட ப்ளான் என்னன்னு தெரியல்ல,” என்ற தயா சீனு மூலம் தான் கடிதம் அனுப்பியது, சங்கரன் சொன்ன பதில், இப்போது ரமா கொடுத்த கடிதம் ஆகிய எல்லாவற்றையும் சாம்பவியிடம் விவரமாகச் சொன்னாள்.

பின்னால் காலடியோசை கேட்க, அவர்களது பேச்சு நின்றது. வந்தவள் ரேவதிதான்.

“அடியே! அரும்பாடு பட்டு அந்த ரமாவை இவளோட பேச வெச்சு சம்மதிக்கப் பண்ணி இருக்கேன். நீ வந்து நடுவில ஏதானும் குளறுபடி பண்ணி அவ மனசைக் கெடுத்துடாதே!”

சாம்பவி ரேவதியை முறைத்துவிட்டு அப்பால் சென்றாள்.

. . . என்ன மாதிரியான திட்டத்தை மனத்தில் வைத்துக்கொண்டு சங்கர் முதலில் சரி என்று சொல்லு, பிறகு யோசிப்போம் என்று சொன்னான் என்பதை என்ன யோசித்தும் தயாவால் ஊகிக்கவே முடியவில்லை.

. . . பிற்பகல் மூன்றரை மணிக்கெல்லாம் தயா பெண்பார்க்கப்படுவதற்குத் தயாராகிவிட்டாள். காலையில் கலாட்டாப் பண்ணிய தயாவுவும், அவளுக்குப் பரிந்து பேசிய சாம்பவியும் மனமாற்றம் கொண்டு சட்டென்று அடங்கிப் போனது ஈசுவரனுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தாலும், ‘இதென்ன மாயம்!’ என்கிற வியப்பு அவருக்கு ஏற்பட்டது. எல்லாம் அவளுடைய நெருங்கிய தோழி ராமாவின் போதனையால்தான் என்று ரேவதி எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவரால் நம்பவே முடியவில்லை. இதற்கிடையே, சீனு வெளியே போயிருந்தான். முன்று மணிக்குத் திரும்பி வந்த அவனுக்கும் தன் அக்கா பெண் பார்த்தலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தது கண்டு வியப்பாகத்தான் இருந்தது. ஒரு தோதான கணத்தில் தயா அவனுக்கு எல்லாவற்றையும் தெரிவித்தாள்.

“நானே சாயங்காலம் மிஸ்டர் சங்கரைப் போய்ப் பாக்கலாம்னு இருந்தேன். அப்படின்னா, இப்ப போகவேண்டாந்தானே?”
“வேண்டாம். . .ம்! உனக்கு இருக்கிற அனுதாபம் கூட இந்தப் பெரியவாளுக்கு இல்லியே!” என்ற தயா கண்கலங்கிப் பெருமூச்சு விட்டாள்.

. . . சரியாக நான்கு மணிக்கு அவர்கள் வந்து விட்டார்கள். சாம்பவி சமையலறைக் கதவிடுக்கு வழியே எட்டிப் பார்த்தாள். மொத்தம் நான்கு பேர் வந்திருந்தார்கள். மூன்று ஆண்கள், ஒரு பெண்மணி. மூவரில் வயசானவராகத் தோன்றியவர் நிச்சயமாய் மாப்பிள்ளைப் பையனாக இருக்க முடியாது என்று நினைத்த அவளால் மற்ற இருவரில் அது யாராக இருக்கும் என்பதை அனுமானிக்க முடியவில்லை. ஒருவனுக்கு முப்பத்திரண்டு – முப்பத்து மூன்று வயது இருக்கலாம். இன்னொருவனுக்கு முப்பத்தைந்து இருக்கலாம். இருவரில் மணமகன் யாராக இருந்தாலும், சாம்பவிக்கு மனம் ஒப்பவில்லை. இருவருமே கண்ணுக்குப் பார்வையாக இல்லை என்பதோடு, ஆரோக்கியக் குறைவாகத் தோன்றினார்கள். உடுத்துக் கொண்டிருந்த உடையில் பணக்காரத்தனம் தெரிந்ததென்னவோ உண்மைதான். ஆனால் அது அவர்கள் மேனியைப் பளபளவென்று காட்டவில்லை.

மேலும், பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவனுக்கு முப்பது வயது தாண்டியும் மணமாகாதது ஏன் என்கிற கேள்வி அவள் மனத்தில் எழுந்து அவளை அவஸ்தைப் படுத்தியது. தயா போன்ற அழகும் ஆரோக்கியமும் நிறைந்த பெண்ணுக்கு இப்படி ஒரு பங்கரையா வாய்க்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டாள். தொடர்ந்து அவள் சரி என்று சொல்லப் போவது தற்காலிகமான ஏற்பாடுதானே என்கிற எண்ணமும் அவளுக்கு வந்தது.

கபாலீசுவரர் கோவிலில் அவளைப் பார்த்துவிட்டு மறு நாள் வந்து திருமணம் பற்றிப் பேசியது இவர்களின் உறவுக்காரிதான். இன்று ஏனோ அவர்களுடன் அவள் வரவில்லை.

“நீங்கதான் பிள்ளைக்கு அம்மாவா?”

“ஆமா.”

“இந்த ரெண்டு பேர்ல மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“இவந்தான். என் தம்பி. எனக்கும் இவனுக்கும் ரெண்டே வயசு வித்தியாசம்!” என்று ஒருவன் மற்றவனின் தோளில் தட்டி அறிமுகப்படுத்த, சாம்பவி கண்களை மலர்த்திக்கொண்டு அவனை நன்கு கவனித்தாள்.

குண்டாக இருந்தான். குண்டாக இருப்பது மோசமில்லை என்று வைத்துக்கொன்டாலும், அவன் தொள தொளவென்று இருந்ததைச் சாம்பவியால் சகிக்க முடியவில்லை. முன் நெற்றியில் முடி கொட்டிப் போயிருந்தது. கண்களுக்குக் கீழே பத்துப் பிள்ளை பெற்றவனுக்குரிய கறுப்புப் பள்ளங்கள். முகத்தின் அளவுக்கு மூக்கு மிகவும் பெரிதாகக் கொடமிளகாயை ஒட்டவைத்தது மாதிரி இருந்தது. கீழுதடு கன்னங்கரேல் என்று அவன் ஒரு சங்கிலிப் புகைப்பாளன் என்பதைத் தம்பட்டம் அடித்தது. கண்களில் ஒரு சோர்வு தெரிந்தது. பார்வை பளிச் சென்று இல்லை. சிரிப்பற்ற முகத்தினன். மொத்தத்தில் அடித்து விரட்டப்பட வேண்டியவன் என்று சாம்பவி நினைத்தாள்.

மெதுவாக தயாவை நெருங்கிய அவள், “சகிக்கல்லேடி. மாட்டேன்னே சொல்லிடலாம்னு தோண்றது. பணம் இருந்துட்டாப்ல ஆச்சா? வாந்தி வருது எனக்கு! முடியாதுன்னு கண்டிப்பாச் சொல்லிடு!” என்றாள் கசப்பும் எரிச்சலுமாய்..

தயா இன்னும் அதிகக் கசப்புடன் சிரித்தாள். “உனக்குத் தெரியுமா? அப்பா, அன்னைக்கு அந்தம்மா கிட்ட, ‘ எம் பொண்ணு நான் கிழிச்ச கோட்டைத் தாண்டமாட்டாளாக்கும். என் பொண்ணு உங்க பிள்ளைக்குத்தான்’ அப்படின்னு பீத்திண்டாரே, நீ கவனிக்கல்லியா?”

“கவனிச்சேன், கவனிச்சேன்..”

“ஒரு நிமிஷம். பொண்ணை வரச் சொல்றேன்,” என்றவாறு ஈசுவரன் எழுந்தது தெரிந்ததும், இருவரும் கதவுக்குப் பக்கத்திலிருந்து விலகிக்கொண்டார்கள்.

ரேவதி எல்லாருக்கும் சிற்றுண்டி எடுத்துத் தட்டுகளில் வைத்துக்கொண்டிருந்தாள்.

“என்னடி, குசுகுசுன்னு பேசிக்கிறேள் ரெண்டு பேரும்?”

“மாப்பிள்ளைப் பையன் அப்படியே மன்மதக்குஞ்சுதான் போ! சரியான ஜோடி!” என்று பல்லைக் கடித்துக்கொண்டு சாம்பவி பதில் சொன்னாள்.

ரேவதி அவளை முறைத்த கணத்தில் ஈசுவரன் அங்கு வந்தார்: “ரேவதி! தயாவை அழைச்சுண்டு கூடத்துக்கு வா!”

“இந்த ரெண்டு தட்டையும் நீங்க எடுத்துண்டு மொதல்ல போங்க. நான் ரெண்டு தட்டோட இவளையும் அழைச்சண்டு பின்னாலேயே வறேன்.”

. . . பிள்ளையின் அம்மா, “வாம்மா!” என்றாள், தயாவைப் பார்த்து வாய் கொள்ளாத சிரிப்புடன். தொடர்ந்து, “ செகப்புல கறுப்புக் கட்டம் போட்ட ஷர்ட் போட்டுண்டிருக்கானே, அவந்தான் கல்யாண மாப்பிள்ளை. நன்னாப் பாத்துக்கம்மா. கொஞ்சம் குண்டா இருக்கான். சிலருக்குக் கல்யாணம் ஆன கொஞ்ச நாள்ல உடம்பு இளைச்சுடும்! எங்க வம்சத்தில எல்லாருமே அந்த ரகம்தான்!” என்று பிள்ளையின் அப்பா திருவாய் மலர்ந்தார்.

அவரது அசட்டுப் பேச்சால் சிறுத்துவிட்ட முகத்துடன் தயா அந்தப் “பையனை” ஏறெடுத்தும் பாராமல் நின்றாள்.

“உக்காரும்மா. மண்டி போட்டெல்லாம் வணங்க வேண்டாம். அதெல்லாம் எங்களுக்குப் பிடிக்காது. கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அவன் கால்ல விழுந்துக்கோ. அது போறும். எங்க கால்ல எல்லாம் விழ வேண்டாம்.”

‘சரியான வழிசல் குடும்பமா யிருக்கும் போல இருக்கே! கஷ்டம், கஷ்டம்!’ – தயா உட்கார்ந்தாள். இரண்டே நிமிடங்களில், விடை கொடுக்கப்படும் முன், எழுந்துகொண்டாள். உள்ளே சென்றுவிட்டாள்.

ஈசுவரன் திகைத்தார்.

“தப்பா எடுத்துக்காதீங்க! ரொம்பக் கூச்சம். அதான். வேற ஒண்ணுமில்லே. இன்னும் கொஞ்ச நேரம் இருக்கணும்னா, மறுபடியும் கூப்பிட்றேன்.”

“பரவால்லே, வேண்டாம். அதான் பாத்தாச்சே! எங்களுக்குப் பொண்ணை ரொம்பப் பிடிச்சுப் போச்சு.”

“ரொம்ப சந்தோஷம். டி·பன் சாப்பிடுங்க. . . நான் போய்க் காப்பி அனுப்பறேன்.”

சமையலறைக்கு வந்த ஈசுவரன், “என்ன தயா, இது? ரெண்டே நிமிஷத்துல எழுந்து வந்துட்டே!” என்றார் கடுகடுத்த குரலில்.

“சரி, சரி. அவாதான் மறுபடியும் வர வேணாம்னுட்டால்ல? இப்ப எதுக்கு அவளைக் கோவிச்சுக்குறேள்? இந்தாங்க. நீங்க ரெண்டு காப்பி எடுத்துண்டு போங்க. நான் பின்னாடியே வறேன்..”

“சரி, குடு.”

“ஏன்னா! மாப்பிள்ளை சுமார்தான். ஆனா அதை யெல்லாம் பாத்துண்டிருக்க முடியுமா?”

“ஏம்மா? அவன் உன் கண்ணுக்கு சுமாராத் தெரியறானா? காண்டாமிருகம் மாதிரி இருக்கான்! அவன் மூஞ்சியும் மொகரையும்!” என்று சாம்பவி முகத்தைச் சுருக்கினாள்.

“கொதிக்கிற காப்பியை உன் மூஞ்சியில கொட்டினேன்னா! நீயே உன் தங்கைக்காரிக்குக் கொளுத்திக் குடுப்பே போலிருக்கே?”

“ஆ . . . மா! நான் கொளுத்திக் குடுத்துத்தான் அவன் காண்டா மிருகம் மாதிரி இருக்கான்கிறதை இவ தெரிஞ்சுக்கணுமாக்கும்!”

“சாம்பவி! நீ பேசாம இருடி.! நாந்தான் சரின்னு சொல்றதா இருக்கேனில்ல? இப்ப எதுக்கு இதெல்லாம்?”

“பாத்தியா, பாத்தியா! தன்னோட வருங்காலக் கணவனைச் சொன்னதும் தயாவுக்குக் கோவம் பொத்துண்டு வருது, பாரு!” என்று சிரித்தபடி ஈசுவரன் காப்பிக் கோப்பைகளுடன் புறப்பட்டார். சாம்பவி ‘நக்’ கென்று முகவாயைத் தோளில் இடித்துக்கொண்டாள்.

. . . “ பொண்ணு என்ன சொல்றா?”

“சரின்னுட்டா! எம்பொண்ணு நான் கிழிக்கிற கோட்டுல கால்விரலைக் கூடப் பதிக்க மாட்டா! அப்புறம்னா தாண்ட்றதுக்கு! நிச்சயதார்த்தத் தேதி எப்பன்னு சொல்லுங்கோ. எப்படி இருந்தாலும், எல்லாச் செலவையும் நீங்கதான் ஏத்துக்கப் போறதா. . .”

“ஆமாமா. அதிலே சந்தேகமே இல்லே. நீங்க ஏழைப்பட்ட குடும்பமா யிருக்கிறதால உங்க மூத்த பொண்ணு கல்யாணச் செலவுக்காக முன்கூட்டியே ஒரு முப்பதாயிரம் போலக் குடுத்துட்றோம். அந்தம்மா சொல்லியிருப்பாளே?”

“ஹி, ஹி! சொன்னா, சொன்னா!” என்று ஈசுவரன் காதுவரை இளித்தார்.

தொடரும்

jothigirija@live.com

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 65 என் விடுமுறைப் பொழுதில் !விளையாட்டு வாத்தியார் -2
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *