நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………25 அசோகமித்திரன் – ‘தண்ணீர்’

This entry is part 5 of 27 in the series 30 ஜூன் 2013

 

    எனக்குத் தெரிந்து 1948–லிருந்தே சென்னையில தண்ணீர் ஒரு கவலைப் படவேண்டிய பொருள்தான். தனித்தனி வீடுகள், கிணறுகள்; ஆனால் குடிக்கும்படி இருக்காது. ஆதலால் (அன்று கார்ப்பரேஷன்) குழாய்த் தண்ணீரை நம்பித்தான் சென்னை வாசிகள் எல்லோரும் இருந்தார்கள். தெருக் குழாய்கள் எனப் பல இருந்தன. அவற்றில் எந்நேரமும் தண்ணீர் வரும். தண்ணீருக் கென்று யாரும் தனியாகச் செலவழித்தது கிடையாது. குழாய்த் தண்ணீரை நேரடியாகப் பயன்படுத்துவார்கள். நானே சிறுவனாக இருந்தபோது குழாயடியில் உள்ளங்கையைக் குவித்துக் கொண்டு தண்ணீர் குடித்திருக்கிறேன். ரயிலில் வெளியூர் போவதாக இருந்தால்தான் ஒரு கூஜாவில் தண்ணீர் எடுதுத்துப் போவார்கள். வாழ்க்கையில் உன்னதமானதெல்லாம் இலவசம் என்று ஒரு பழமொழி அன்று உண்டு. அன்று அது உண்மை.

    முப்பது முப்பந்தைந்து ஆண்டுகளுக்கு முன்புதான் தண்ணீர் வரி விதிக்கக்கூடியதாகவும் விலை கொடுக்க வேண்டியதாகவும் மாறத் தொடங்கிற்று. இந்த மாற்றம் மிக மெதுவாக வந்தது. இது எளிதில் புலப்படவில்லை.. உண்மையில் அன்று சென்னை மக்கள் அனுபவித்த பல இன்னல்கள் இந்த மாற்றம் வந்து கொண்டிருப்பதை உணராததுதான். தண்ணீர் வினியோகமும் ஒழுங்குபடவில்லை, இன்று சென்னை நகரில் குடிசைவாசிகள் உட்படத் தண்ணீருக்குக் கட்டணம் ஏதாவது ஒரு வகையில் கட்ட வேண்டியிருக்கிறது. கூரையிட்ட வீடுகளில் ஒரு குடும்பம் நூறிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை மாதாமாதம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. பத்து மாடி. பனிரெண்டு மாடிகளில் வசிக்கும் செல்வந்தர்கள்(!) மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் தண்ணீர் வசதிக்காக ஏராளமாகச் செலவழிக்க வேண்டியிருக்கிறது.

    ‘தண்ணீர்’ நாவல் இதெல்லாம் பற்றியல்ல. ஆனால் இவற்றிற்ககான அறிகுறிகள்ள் கொண்டதுதான். இதெல்லாம் நான் திட்டமிட்டு எழுதவில்லை. ஊர் பெயர் தெரியாத ஒரு பெண் குடத்தை வைத்துக்கொண்டு அலைவதைத் திரும்பத் திரும்பப் பார்த்ததன் விளைவாகத்தான் கதை எழுதப்பட்டது.

    இந்த 2006-ஆம் ஆண்டின் இந்தத் ‘தண்ணீர்’ நாவலுக்கு எப்படிப் பொருத்தம் தேடுவது? தண்ணீர் மூலம் இருக்க முடியாது. ஆனல் இந்தக் கதையிலுள்ள நெருக்கடிகள் வேறு வேறு பொருட்களுக்காகவும் காரணங்களுக்காவும் நிகழ்கின்றன. நிர்பந்தங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. முயற்சி, வெற்றி, தோல்வி, நிராசை, இன்னும் வாழத்தான் வேண்டுமா என்ற கேள்வி எழுப்பும் தருணங்கள் இருந்து கொண்டுதான். உள்ளன.

அசோகமித்திரன்

சென்னை,நவம்பர் 2005.

Series Navigationவறுமைலாடம்
author

வே.சபாநாயகம்

Similar Posts

3 Comments

  1. Avatar
    கவிஞர் இராய.செல்லப்பா says:

    ஞானபீடம் பெறவேண்டிய முதுபெரும் எழுத்தாளர், அசோகமித்திரன். இன்றும் எழுதிக்கொண்டிருப்பவர். அவரது முன்னுரையைப் படிக்க நேர்ந்தது மகிழ்ச்சியளிக்கிறது. –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா

  2. Avatar
    கா.சிவபாலன் says:

    1972 சித்திரை மாதம் சென்னையில், ஈழம் திருகோணமலையில் இருந்து தர்மு சிவராம் உடன் சென்றிருந்தபோது அசோகமித்திரனை ஞானக்கூத்தனின் அறையில் சந்தித்தோம்.”நீங்கள் இலக்கணத் தமிழிலேயே பேசுகிறீர்களே” என ஞானக்கூத்தன் கூற,”ஆமாம் ஈழத்தவர்தான் சுத்தமான தமிழில் பேசுவார்கள்” என அ.மி.கூறியது ஞாபகம் வருகிறது.தமிழுக்குக் கிடைத்த நல்லதொரு எழுத்தாளர்-நோர்வேயிலிருந்து சிவபாலன்

  3. Avatar
    Ramesh Kalyan says:

    தண்ணீர் நாவலில் தண்ணீர் பற்றிய விஷயங்கள் பெரிதாக இருக்காது. ஆனால் ஆங்காங்கே சின்ன சின்ன தெறிப்புகள் இருக்கும். ஒரு இடத்தில் தண்ணீர் டாங்க் வைப்பதை பற்றி எழுதி இருப்பார். பெரிய பிளாஸ்டிக் தொட்டியை வைக்க கார்பரேஷன் ஆட்கள் வருவார்கள். அதை பொருத்துவார்கள். அப்போது காலில் ஏதோ அசூயை மிதிபட அந்த ஆள் கோபப்பட, அங்கிருக்கும் ஒருவர் ஏதோ சின்ன கொழந்தையா இருக்கும் என்பார். இருந்தா என்ன? எல்லாம் படிச்சவங்கதனே பாத்ரூம்ல உக்கார பழக்க கூடாதா எனும்போது அதெல்லாம் சரி ஆனா அதுக்கு ஒரு வாளி தண்ணீ ? யாரு கொட்டறது? என்று கேட்பார். இதில் வரும் 2 சகோதரி கதாபாத்திரங்கள் வாழ்வின் வறட்சியை பார்த்துக்கொண்டே கிடைக்கும் வழி தேடிக்கொண்டு சென்று கொண்டிருப்பார்கள். இதை என்பதை மட்டுமே தண்ணீரோடு பொருத்திப் பார்க்க முடிகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *