குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 16

This entry is part 27 of 27 in the series 30 ஜூன் 2013

மகளின் அறையை முற்றாக அலசிப் பார்த்த பிறகும் அவளது விந்தையான நடத்தைக்கான எந்தத் தடயமும் கிடைக்காததால், பத்மஜாவையே சந்தித்து என்ன விஷயம், என்ன பிரச்சினை என்பதை யெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டால்  என்ன என்று அவருக்குத் தோன்றிற்று.  எனினும் அப்படிச் செய்வது அநாகரிகச் செயலாக இருக்கும் என்பதால் மட்டுமல்லாது, தம் மகளைத் தாமே வேவு பார்ப்பதை அவள் தோழிக்கு அது காட்டிக்கொடுத்துவிடும் என்பதாலும்,  அந்த எண்ணம் தோன்றிய கணத்திலேயே அதை அவர் ஒதுக்கினார்.

கல்லூரி விட்டதும் நேராக வீடடுக்குப் புறப்பட்டு வருகிறாளா, இன்றேல் வேறு எங்கேயாவது போகிறாளா என்பதை முதலில் கண்டுபிடிக்க அவர் அவாவினார். அவளுக்கு ஒரு காதலன் கிடைத்திருக்கக் கூடிய சாத்தியக்கூறு பற்றிய மனக்கசப்பு அவருக்குச் சிறிதும் இல்லை.  எனினும் அவளது கலக்கம் நிறைந்த முகம் அவளது காதலில் ஏதோ குழப்பமேற்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாக ஏதோ அச்சத்தில் அவள் ஆழ்ந்திருப்பதாகவும் அவரை நினைக்க வைத்ததால், அதை எப்படியாவது கண்டுபிடித்துச் சரி செய்ய வேண்டும் என்கிற – பாசமுள்ள ஒரு தகப்பனுக்குரிய – பொறுப்பான கவலை அவரை ஆட்டிப் படைக்கத் தொடங்கி யிருந்தது.

எப்படி உண்மையைக் கண்டுபிடிப்பது என்று அவர் மண்டையை உடைத்துக்கொள்ளத் தொடங்கிய பின் சில கணங்களுள் அவரது மூளை நரம்பொன்று அசைந்து கொடுக்க, அவருக்குத் திக்கென்றது. ‘அந்தப் பெண் பத்மஜா தன்னை விட்டுவிட்டு ராதிகா வேறு பெண்களுடன் சினிமாவுக்குச் சென்றதைப் பற்றிச் சொன்னாளே! ஒரு வேளை சிந்தியாவும் நானும் சென்றிருந்த அதே சினிமாவுக்கு அவளும் வந்திருந்தாளோ? அட, கடவுளே…..’- அவரது சிந்தனை தம்பித்து நெஞ்சு அடித்துக்கொள்ளலாயிற்று.

பொதுவாக, ஏதேனும் சினிமாவுக்குத் திடீரென்று போக நேர்ந்தாலும், அதை ராதிகா பின்னர் வீட்டில் சொல்லாதிருந்தது கிடையாது.  ‘வெள்ளிக்கிழமை யன்றுதான் அவள் சினிமாவுக்குப் போயிருக்கிறாள்.  சிந்தியாவும் நானும் சென்றது அதே தியேட்டராக இருப்பின், அவள் பார்வையில் நாங்கள் இருவரும் பட்டிருந்திருக்கக் கூடும்.  ஆனால், இவள் என் கண்ணில் படவே இல்லையே!  நான் சிந்தியாவுடன் இருக்க நேரும் போதெல்லாம், என்னை ஆட்டுகிற மெய்ம்மறப்பில் சுற்றுப் புறத்தைக் கவனிக்க நான் தவறி யிருக்கலாம்.  … அல்லது இந்த எண்ணமே எனது பிரமையாக இருக்கலாம்.  அவள் போனது வேறு தியேட்டராய்க் கூட இருக்கலாமே! … சினிமாவுக்குப் போனால் அதை மறைக்கும் வழக்கமில்லாத ராதிகா ஒருகால் தனலட்சுமியிடம் அது பற்றிச் சொல்லியிருக்கக்கூடும். … அவளை மெல்ல விசாரித்துப் பார்க்க வேண்டும்.      ஆனால், தனலட்சுமி இல்லாத பொல்லாத கேள்விக ளெல்லாம் கேட்பாளே!  ‘ராதிகாவையே நேரடியாகக் கேட்க வேண்டியதுதானே? என்னை ஏன் கேட்க வேண்டும்?’ என்று யோசிக்கத் தலைப்பட்டால், அவளும் என்னைப் போன்றே தன் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொள்ளுவாளே! வேண்டாம்….கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம்….’

சிந்தனைகளின் தாக்கம் சகிக்க முடியாமற் போகவே, அவர் பிற்பகலில் அலுவலகத்துக்குப் புறப்பட்டுப் போனார்.

… அன்று மாலை, சிற்றுண்டி அருந்திக்கொண்டே தாம் தீர்மானித்திருந்தபடி அந்தத் திரைப்படத்தைப் பற்றிப் பேச்செடுக்க அவர்  முற்பட்டார்.  அதன் விளைவு எதுவாக இருப்பினும் அதனை எதிர்கொள்ள வேண்டியதுதான் என்னும் முடிவுக்கு அவர் வந்திருந்தார்.

சாப்பிட்டுக்கொண்டே, “சினிமாவுக்கெல்லாம் இப்ப நீ போறதில்லை  யாம்மா?” என்றார் திடீரென்று..

இந்தக் கேள்வியைக் கேட்ட போது அவர் தன்னை நேருக்கு நேராய்ப் பார்க்கவில்லை  என்பதையும், சாப்பாட்டுத் தட்டில் அவரது பார்வை பதிந்திருந்தது என்பதையும் கவனிக்க ராதிகா தவறவில்லை.

“ஏம்ப்பா? எதுக்குக் கேக்குறீங்க?”

“சும்மாத்தான் கேட்டேன். அப்பப்ப,  இந்த சினிமாப் பாத்தேன், அந்த சினிமாப் பாத்தேன்னு சொல்லுவியே, கொஞ்ச நாளா ஒண்ணுமே சொல்லாம இருக்கியேன்றதுனாலதான் கேட்டேன். விசேஷமான காரணம் எதுவும் இல்லே. ஜஸ்ட் லைக் தட் கேட்டேன்…” என்றவர் தலை உயர்த்தி அவளைப் பார்த்துவிட்டு மீண்டும் தம் சாப்பாட்டுத் தட்டில் விழிகளைப் பதித்தார்.

‘உள் நோக்கத்தோடுதான் அப்பா இந்தக் கேள்வியைக் கேட்கிறார். உட்கிடையான இந்தக் கேள்விக்குக் கவனமாய்ப் பதில் சொல்ல வேண்டும். உண்மையையே சொன்னால், அது ஒரு சுவாரசியம்தான். பொய்யைச் சொன்னாலோ அதனினும் சுவாரசியமாக இருக்கக்கூடும்……’ – ராதிகா அரைப் பொய் – அதாவது பாதி உண்மை – சொல்லுவதெனும் முடிவுக்கு வந்தாள்.

“வெள்ளிக்கிழமையன்னிக்கு மினர்வா தியேட்டர்ல பழைய படம் ஒண்ணு பாத்தோம்ப்பா.  கமல் நடிச்சது…….”

“அட! அதைப் பத்தி நீ ஒண்ணுமே சொல்லல்லியே!”

“அன்னைக்குத்தான் நான் தலைவலியால ஒரே டென்ஷன்ல இருந்தேனேப்பா! இல்லாட்டி அதைப் பத்தின பேச்சு வந்திருக்கும்……”

“காலேஜ் கட் பண்ணிட்டா போனே?”

“கட் பண்ணினோம்னு சொல்ல முடியாதுப்பா. கடைசி ரெண்டு பீரியட்ஸ் இல்லே. வீட்டுக்குப் போறதா மிஸ் கிட்ட சொல்லிட்டு சினிமாவுக்குப் போனோம்.”

“படம் நல்லாருந்திச்சா?”

”ஃபர்ஸ்ட் க்ளாஸ்ப்பா!  ஏம்ப்பா, நீங்க பாத்ததில்லையா நாயகன்ற அந்தப் படத்தை?”

“இல்லேம்மா. பழைய படந்தான்னாலும், நான் மிஸ் பண்ணிட்ட படம். இப்பவும் மினர்வாவில ஓடுதா, இல்லாட்டி எடுத்துட்டாங்களா?”

“தெரியலியேப்பா?”

“சரி., நான் விசாரிச்சுக்கறேன்.”

தீனதயாளனை அநதப் பெண்மணியுடன் ராதிகா பார்த்தது காசினோ தியேட்டரில். ஆனால், அவர் கண்களில் தான் பட்டிருக்கவில்லை என்று அவள் உறுதியாக் ஊகித்ததால், மினர்வா என்று வேண்டுமென்றே பொய் சொன்னாள்.  அவ்வாறு தான் சொன்னதைக் கேட்டதும், தீனதாயளனின் முத்தில் ஒரு நிம்மதியும் அதன் அடையாளமாய் ஒரு புன்சிரிப்பும் தோன்றியதைக் கவனிக்க அவள் தவறவில்லை.

‘அப்பாடா! ஒரு கவலை விட்டது!  நான் சிந்தியாவுடன் காசினோவுக்குப் போன அதே வெள்ளிக்கிழமை ராதிகா மினர்வாவுக்குப் போயிருக்கிறாள்!  எனவே என்னைப் பார்த்துவிட்டுத்தான் இவள் பொடிவைத்துப் பேசுகிறாளோ என்று நினைப்பதற்கு வாய்ப்பில்லை!  பிழைத்தேன்!’ என்று தீனதயாளனின் சிந்தனை ஓடியது.

‘உங்களுக்கு இப்படி ஒரு நிம்மதி ஏற்பட்டால்தான், இனி நீங்கள் முன் ஜாக்கிரதையோடு இருக்க முயல மாட்டீர்கள் என்பதற்காக ஒரு பொய் சொன்னேன்!  … இருக்கட்டும், பார்க்க்கலாம்…. எல்லா விவரங்களையும் கண்டுபித்த பிறகு உங்களை நான் சும்மா விடப்போவதில்லை.  ஏதோ ஒரு வழியில் உங்களுக்குத் தொல்லை கொடுக்கத்தான் போகிறேன்.  நீங்கள் என் அப்பா என்பதால் மகளுக்குரிய பாசத்தால் நான் உங்களை மன்னிக்கக்கூடும். ஆனால், அப்பாவியான, கள்ளமே இல்லாத, உங்களை முழுவதுமாக நம்புகிற, இன்னும் உங்களுக்கு நாள்தோறும் வெற்றிலை மடித்துக் கொடுக்கிற, பத்தாம் பசலிப் பதிவிரதைத்தனமான, என் உயிருக்குயிரான அம்மாவை ஏமாற்றித் துரோகம் செய்துவரும் உங்களை என்னால் கனவில் கூட மன்னிக்க முடியாது!  உங்கள் பால் எனக்குள்ள கடமைகளிலிருந்து நான் தவற மாட்டேன்.. ஆனால்,  அந்தப் பழைய அன்பும், பாசமும், ஒட்டுதலும் இனி ஒருபோதும் உங்கள் மேல் எனக்கு வரவே வராது  அது மட்டும் நிச்சயம். ….’

அவள் பார்வை தனலட்சுமியின் மீது பதிந்தது.

“அப்பாவும் மகளும் அடிக்கடி சினிமாப் பாத்துட்டு வாங்க..  ஏதுடா, வீட்டில ஒருத்தி ஒரு பொழுது போக்கும் இல்லாம அடச்சுக் கெடக்குறாளே, அவளையும் ஒரு நாள் கூட்டிட்டுப் போவம்கிறதைக் காணலே! ரதிகாதான படிப்பு படிப்புன்னு இருந்துக்கிட்டு எப்பவாச்சும் போகுது – அதுலயும் செநேகிதப பிள்ளைங்களோட காலேஜ்லேர்ந்து திடீர்னு கெளம்புறதால என்னையக் கூட்டிட்டுப் போக முடியிறதில்லே. உங்களுக்கென்ன கேடு?  நீங்க ஒரு நாளு கூட்டிட்டுப் போவலாமில்லே?”

“சரியாப் போச்சு, போ! அதுக்கெல்லாம் எனக்கெங்கே நேரம்?  ஆஃபீஸ்ல வாயில ஈ பூந்தது தெரியாம அப்படி ஒரு வேலை.  நாயித்துக் கெழமைங்கள்ள கூட சில நாள் ஆஃபீசுக்குப் போக வேண்டியிருக்கு.  இல்லாட்டி என்ன!  உங்க ரெண்டு போரோடவும் சினிமாவுக்குப் போவணும்னு எனக்கு மட்டும் ஆசை இல்லியா என்ன?”

“என்னால உங்க ரெண்டு பேரோடவும் வரமுடியாதுப்பா.  நான் தான் காலேஜ் ஃப்ரண்ட்ஸோட போயிர்றேனில்ல? நீங்க அம்மாவைக் கூட்டிட்டுப் போங்க,” என்று ராதிகா தன்னுள் கிளர்ந்த குமைச்சலை அடக்கிக்கொண்டு சொன்னாள்.

“எனக்கேதும்மா அதுக்கெல்லாம் நேரம்? அந்தக் காலத்துல உங்கம்மாவோட சினிமா, பாரக், பீச்னு எம்புட்டோ சுத்தியிருக்குறேன். இப்ப முடியல்லியேம்மா!”

“மனசு வெச்சா எல்லாமே முடியும்ப்பா. உங்களுக்கு ரொம்ப நெருக்கமானவங்காளா யிருந்தா எப்படியாவது போக முடிஞ்சுடும்! …. … உங்க மேலதிகாரியே ஒரு நாள், ‘வாய்யா, சினிமாவுக்குப் போலாம்’ னு கூப்பிட்டா, போவீங்கல்லே? மனசு இருந்தா மார்க்கம் உண்டு!”

“சரி.  வர்ற வாரத்துல ஒரு நாள் கண்டிப்பா உங்க ரெண்டு பேரையும் ஒரு நல்ல சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போறேன். இப்ப திருபதியா உங்க ரெண்டு பேருக்கும்?” என்று தீனதயாளன் சிரித்தார்.

‘ரொம்ப நெருக்கமானவங்களா யிருந்தா எப்படியாவது போக முடிஞ்சுடும்’ என்று சொன்ன பிறகு மூன்று நொடிகள் போல் தாமதித்த பின், ‘உங்க மேலதிகாரி கூப்பிட்டா போவீங்கல்ல’ என்று கேட்ட ராதிகா அந்த இடைவெளியில் தீனதயாளனின் முகம் இலேசாக இருண்டதை மனத்தில் வாங்கிக்கொண்டாள்.

‘ரொம்ப நெருக்கமானவங்களா யிருந்தா’ எனும் சொற்களைக் கேட்டதும் தீனதயாளன் மறுபடியும் கொஞ்சம் மிரண்டுதான் போனார்.  ஆனால், சலனமற்றுத் தென்பட்ட மகளின் முகத்தைக் கவனித்ததும்., ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தானே?’ என்று எண்ணிச் சமாதானமானார்.

மகள் கொஞ்சம் தன் பழைய இயல்புக்குத் திரும்பிவிட்டதாகக் கணித்த தனலட்சுமி, “என்ன ராதிகா! படிப்பு முடிஞ்ச பெறகுதான் உனக்குக் கல்யாணம் பண்றதா யிருக்கோம்.  ஆனா எதுக்கும் அந்தக் கானடா மாப்பிள்ளைக் காரனோட அம்மா-அப்பா கிட்ட நாங்க ஒரு வார்த்தை பேசறோமே? அதுல உனக்கென்ன ஆட்சேபணை?… அப்படி முறைச்சிப் பாக்காதேடி, என் தங்கமில்லே?” என்றாள் கெஞ்சுதலாக.

“அன்னைகே நான் உங்களுக்குச் சொன்னேனில்ல? வெளி நாட்டு மாப்பிள்ளையை யெல்லாம் நம்ப முடியாதும்மா. அங்கே ஏற்கெனவே ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டிருப்பான்.  தனக்குக் கல்யாணமே ஆகல்லேன்னு சொல்லி என்னை அழைச்சுட்டுப் போயி, ரெண்டாவதா வச்சுக்குவான்.  வெளிநாட்டு மாப்பிள்ளை யெல்லாம் வேணாம்மா. சொன்னா கேளு. தொலை தூரத்துக்கு என்னை அனுப்பிட்டு உங்களாலயும் நிம்மதியா யிருக்க முடியாதும்மா!”

“அதென்னமோ மெய்தான்.  ஆனா, நாகம்மாவுக்குத் தெரிஞ்ச எடமா யிருக்குதேன்னு பாத்தேன்.”

“வேணாம்மா.”

“சரிடி… என்னங்க! நாளைக்கே ஒரு ஃபோன் போட்டு நாகம்மா புருசன் கிட்ட சொல்லிடுங்க ராதிகா வெளிநாட்டு மாப்பிள்ளை வாணாம்குதுன்னு.”

“சரி.. சொல்லிடறேன். இதுக்கு இடையில, நானும் எனக்குத் தெரிஞ்ச நாலு பேருகிட்ட விசாரிச்சு ஒரு நல்ல பையானாத் தேடிப் பிடிக்கிறேன்.”

“நல்ல பையனா இல்லியான்னு எப்படிப்பா கண்டிபிடிப்பீங்க?”

“அக்கம் பக்கத்துல தீர விசாரிச்சுத்தான். அவன் வேலை செய்யிற எடத்துலயும் விசாரிக்கலாம். வேற எப்படிக் கண்டு பிடிக்கிறதாம்?”

“எவனுமே நாலு பேருக்குத் தன்னை நல்லவனாக் காட்டிக்கிட்டுத்தான் வேஷம் போடுவான். எந்தப் புத்துல பாம்பு இருக்கும், எந்தப் புத்துல எறும்பு இருக்கும்னு யாருக்குப்பா தெரியும்?  … அதனால நான் என்ன சொல்றேன்னா, என் கல்யாணத்தை ஏங்கிட்ட விட்றுங்க!” – இவ்வாறு சொல்லிவிட்டு ராதிகா புன்சிரிப்புடன் தட்டை எடுத்துக்கொண்டு நகர்ந்தாள்.

“அடி சக்கைன்னானாம்! அப்படிச் சொல்லு…. தனலட்சுமி! உன் மக பெரிய் ஆளுதான்!  லவ் மேரேஜ் பண்ணிக்கத்தான் அவளுக்கு விருப்பம்னு இப்ப தெரிஞ்சிடிச்சு.  அதை முதல்லியே சொல்லிட வேண்டியதுதானே?” என்ற தீனதயாளன் சிரித்த சிரிப்பில் தனலட்சுமியும் கலந்துகொண்டாள்.

“அதெப்படி அவ தானா வந்து நம்ம கிட்ட நான் லவ் மேரேஜ்தான்  பண்ணிப்பேன்னு சொல்லுவா? வெக்கமா யிருக்குமில்ல?  இப்ப நம்ம பிடுங்கல் பொறுக்க மாட்டாம வாயைத் தொறந்து உண்மையைச் சொல்லிடிச்சு!  ஏங்க? அது சரி, சரியான ஆளா அவளூக்குக் கிடைக்கணுமேங்க?”

“எல்லாம் கிடைப்பான். கவலைப்படாதே.”

“எனக்கு நீங்க கிடைச்ச மாதிரி!”

கழுவுதொட்டியில் தட்டைக் கழுவிக்கொண்டிருந்த ராதிகாவின் செவிகளில் இருவரும் பேசிக்கொண்டது விழுந்தது.

‘அம்மா! உங்களுக்குக் கிடைச்ச மாதிரிப்பட்ட ஆளு எனக்கும் கிடைச்சா அது என்னோட துரதிருஷ்டமாத்தான் இருக்கும்!’

“இவளாப் பாத்துத் தேடிக்கிற ஆளு மட்டும் நல்லவனா யிருப்பான்கிறது என்னங்க நிச்சியம்?”

“நிச்சியமில்லேதான்.  ஆனா விருப்பப்பட்டுத் தேர்ந்தெடுத்துக்  கட்டிக்கிறதுல ஒரு த்ரில் இகுக்கும்! ..ம்! அதெல்லாம் உனக்கெங்கே புரியப் போகுது!…அதே சமயத்துல, அவளே தேடிக்கிட்ட ஆளா யிருந்தா, நாளைக்கு ஏடாகூடமா எதுனாச்சும் ஆனா, நாம சரியா விசாரிக்காம கொள்ளாம கட்டிவெச்சுட்டோம்னு அது நம்மளக் கொறை சொல்லாதில்ல!”

“அதுவும் சர்த்தான்.  ஆனா, அவளே தேடிக்கிட்ட ஆளாயிருந்தாலும், நாமளும் நாலு எடத்துல விசாரிக்கணும்ங்க.”

“கண்டிப்பா. ஆனா, என்னதான் விசாரிச்சாலும், தனலட்சுமி, ராதிகா சொல்ற மாதிரி, ஒரு ஆளுக்குள்ள இன்னொரு ஆளு ஒளிஞ்சிக்கிட்டு இருப்பான்! அவனைப் பத்தின நெஜம் அவனுக்கு மட்டும்தான் தெரியும். மத்தவங்களூக்குத் தெரியாது.  அதனால, முடிவாச் சொல்லணும்னா, அதது அவங்கவஙக தலையெழுத்துன்னுதான் சொல்லணும்!”

தட்டுத்தாங்கியில் தன் தட்டை வைக்கப்போன ராதிகாவின் செவிகளில் தீனதயாளனின் சொற்கள் விழ, அவளுள் தாங்க முடியாத ஆவேசம் பொங்கியது. அதை உடனேயே தணித்துக்கொண்டே ஆகவேண்டிய உந்துதல் அவளை இயக்க, அவள் வேண்டுமென்றே தன் தட்டை ஓங்கித் தரையில் போட்டாள்.  தீனதயாளனும் தனலட்சுமியும் திரும்பி அவள் புறம் பார்த்தார்கள். தீனதயாளனின் விழிகள் அதிக அகலம் கொண்டிருந்தன. எந்தக் காரணமும் இன்றி, அது தம் மீது வீசப்பட்டது போல் அவர் உணர்ந்தார்.

அவர்களை ஓரத்துப் பார்வை பார்த்தபின் சட்டென்று இயல்புக்குத் திரும்பிக்கொண்ட ராதிகா, “ஐம் சாரிப்பா!  கை தவறி விழுந்திடிச்சு!” என்றவாறு குனிந்து தட்டை எடுத்து அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டுத் திரும்பினாள். பிறகு தன்னறைக்குப் போனாள்.   ‘அவங்கவங்க தலையெழுத்து, பெரும்பாலும் அவங்கவங்க கையிலதான். தப்புன்னு தெரிஞ்சுக்கிட்டே தப்புப் பண்ணிட்டு அப்பால தலையெழுத்துன்னா என்னப்பா அர்த்தம்?’ என்று நான் கேட்டிருந்திருக்க வேண்டும்.  ஆனாலும், கேளாதது ஒரு வகையில் சரிதான்.  அடிக்கடி ஜாடைமாடையாகப் பேசினால் உண்மையைத் தெரிந்துகொண்டே நான்  வேஷம் போடுவது அப்பாவுக்குத் தெரிந்து போய்விடும்….’

ராதிகா ஒரு புத்தகத்தை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டாள்.  ஆனால் படிக்க முடியவில்லை.  எவ்வளவுதான் முயன்றாலும், அந்தச் சிந்தியாவின் அழகிய முகமும் பெரிய விழிகளும் அவள் மனக்கண்கள் முன்பு தோன்றியவாறாக இருந்தன.

‘தேர்ந்தெடுத்துக் கல்யாணம் கட்டுறதில ஒரு த்ரில் இருக்கும்.  அதெல்லாம் உனக்கெங்கே புரியப் போகுது?’ என்று தீனதயாளன் கூறிய சொற்கள் அடுத்து அவள் செவிகளைச் சுற்றிச்சுற்றி ஒலிக்கத் தொடங்கின.

‘அப்படியானால், கட்டிய மனைவி இருக்கையில் இன்னொரு பெண்ணின் மீது விழும் நாட்டத்துக்குப் பெயரும் உங்கள் அகராதியில் காதலா! காதலைப் பற்றிய இத்தனை எதிர்பார்த்தல்கள் உள்ளவர் பிறகு ஏன் பெரியவர்கள் பார்த்துச் செய்துவைக்கிற திருமணத்துக்குச் சம்மதிக்க வேண்டும்?  அம்மாவும் அழகிதானே? பெண்பார்த்தலுக்குப் பிறகு தானே சம்மதித்து அம்மாவின் கழுத்தில் தாலியைக் கட்டினீர்கள்?  இப்போது வேறு தினுசான அழகியைக் கண்டதும் அவள் மீது உங்களுக்குக் காதல் பிறந்துவிட்டதாக்கும்!  இதென்ன நியாயம்? அம்மா இப்படிச் செய்தால் ஒப்புக்கொள்ளுவீர்களா?
‘எப்படியாவது அந்தப் பெண்மணியைச் சந்தித்து நாக்கைப் பிடுங்கிக்கொள்ள வைக்கிற மாதிரி நறுக்கென்ற் நாலு கேள்விகள் கேட்கவேண்டும். எப்போது போகலாம்? இப்போதேயா, இல்லாவிட்டால் இன்னும் சில நாள்கள் கழித்தா?’

ஆனால், அந்தச் சந்திப்பு மறுநாளே தற்செயலாக நிகழப் போவது பற்றி யறியாமல், ராதிகா யோசித்தவாறே கொதிப்புடன் புரண்டுகொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரச் சிந்தனைக்குப் பிறகு அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். ‘… இனி அப்பாவைத் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும்.  .. எப்படியாவது அவரும் அந்தப் பெண்மணியும் அன்று காசினோ தியேட்டரில் சேர்ந்து காணப்பட்டது போல் எசகு பிசகான நிலையில் என் பார்வைக்குத் தென்படவேண்டும்.  எப்படி? எப்படி?…’

மறு நாள் அவளையும் பத்மஜாவையும் கல்லூரி முதல்வர் பியூன் மூலம் தம் அறைக்குக் கூப்பிட்டு அனுப்பினார். எதற்கு என்பது தெரியாமல் இருவரும் அங்கே சென்ற போது, ராதிகாவைத் தூக்கிப்போட ஓர் ஆச்சரியம் அவளுக்குக் காத்திருந்தது.

முதல்வர் தெரஸ்ஸா, “இவ பத்மஜா… இவ ராதிகா… இவங்க தான் பிரபல சோஷியல் வொர்க்கர் மிஸஸ் சிந்தியா தீனதயாளன்… ஒரு அநாதை விடுதியில காரியதரிசியா இருக்காங்க.  அந்த விடுதிக்கு நன்கொடை வசூலிக்க வந்திருக்காங்க.  நீங்க ரெண்டு பேரும் உதவி பண்ண்ணும்…என்ன?” என்றார்.

ஒருவருக்கொருவர் கும்பிட்டுக்கொண்ட பிறகு, “என்ன உதவி செய்யணும், மேடம்?” என்று வினவியவள் பத்மஜா மட்டும்தான்.

ராதிகா பெரும் பிரமிப்பில் ஆழ்ந்திருந்தாள்: ‘..சிந்தியா தீனதயாளன்! என்ன திமிர்! என்ன நெஞ்சழுத்தம்!’

பதிலேதும் சொல்லாமல் சிந்தியாவை வைதத விழி வாங்காமல் முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்த ராதிகாவை முதல்வர் வியந்து நோக்கினார்.
–  தொடரும்
jothigirija@live.com

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​-13 ம.​பொ.சி​
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *