வரவேற்பறையை அடைந்த தயா அங்கே ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த ஆளைப் பார்த்ததும் அதிர்ந்து போனாள்.
ரமணி ! இரண்டு நாள்களுக்கு முன்னால் அவளைப் பெண்பார்க்க வந்தவன்! அவள் திரும்பிப் போய்விட எண்ணிய கணத்தில் அவன் தலை உயர்த்திப் பார்த்துவிட்டான். அவளைப் பார்த்துச் சிரிக்கவும் செய்தான். அவளால் பதிலுக்கு ஒரு புன்சிரிப்பைக் கூடக் காட்ட முடியவில்லை. அவளைத் தேடிவந்த ஆள் என்பதை யறிந்த வரவேற்பு மங்கைக்கு முன்னால் அவளால் திரும்பிச் சென்றுவிடும் எண்ணத்தைச் செயல்படுத்தவும் முடியவில்லை.
‘இவன் எதற்காக இங்கே வந்திருக்கிறான்? இதென்ன அசிங்கம்? என்னை இவனுக்கு முன்னே தெரியுமா, பின்னே தெரியுமா?’ -அவனைத் தெரிந்துகொண்டதாய்க் காட்டிக்கொள்ளக் கூடாது என்னும் முடிவுக்கு உடனே வந்த அவள், அங்கே நாற்காலிகளில் நான்கு பேர் உட்கார்ந்திருந்ததால், “யாரு என்னைப் பாக்க வந்தது?” என்று பியூனிடம் விசாரிக்க, அவர் பதில் கூறும் முன் அவனே எழுந்து வந்து அவளுக்கு முன்னால் நின்றான்.
“நான்தான்! ஞாயித்துக் கிழமை வந்திருந்தேனே – எங்கம்மா, அப்பா, அண்ணா எல்லாரோடவும்? தெரியலையா?” என்றான்.
“ஓ! நீங்களா?”
“இப்ப தெரிஞ்சுடுத்தா? அரை நாள் லீவ் போட்டுட்டு வர முடியுமா?” என்றான் அவன் மெதுவான குரலில்.
அந்தச் சொற்கள் அவள் செவிகளில் நாராசமாக நுழைந்தன. தன் சினத்தை அடக்கிக்கொண்ட அவள், “ எதுக்கு?” என்றாள். – அந்த ஒற்றைச் சொல் கடுமையாக ஒலித்தது.
ஆனால், அந்தக் கடுமையைக் கவனியாதவன் போல், “உன்னோட பேசணும் எனக்கு. அதுக்குத்தான். வேற எதுக்கு?” என்று சிரித்தான். சிரிப்பு இளிப்புமாதிரி இருந்தது.
பியூனும் வரவேற்பு மங்கையும் ஏதோ பேசிச் சிரித்துக்கொண்டிருந்தாலும், இருவரும் தங்களைக் கவனித்தவாறு இருந்தது தயாவுக்குத் தெரிந்தது. இதனால் அவள் முகத்துக்கு இரத்தம் ஏறியது. நொடிப் பொழுதுக்குள் முகத்தில் வேர்வை அரும்பிற்று.
“சரி, வாங்க!” என்ற அவள் அலுவலகத்து வெளி வாயிலை நோக்கி நடக்க, அவன் பின் தொடர்ந்தான். ஏகப்பட்ட ‘செண்ட்’ பூசி யிருந்தான். அதன் வாசனை குமட்டியது.
வெளியே வந்ததும், “ஆ·பீஸ்ல பெர்மிஷனுக்குச் சொல்லவே இல்லியே நீ?” என்றான்.
“இப்ப நான் உங்க கூட வர்றதா யிருந்தாத்தானே சொல்லிட்டு வரணும்? . . . அவங்க முன்னாடி எதுவும் சொல்ல வேண்டாம்னுதான் வாசலுக்குக் கூட்டிண்டு வந்தேன். ஐம் சாரி! கல்யாணம்னு ஆகிறதுக்கு முந்தி உங்களோ¡ட என்னால எங்கேயும் வர முடியாது!” என்று படபடப்புடன் சொல்லி முடித்த தயா அவனைக் கடுமை தெறிக்க ஏறிட்டாள். அவள் புருவங்களின் ஏற்ற இறக்கத்திலிருந்து அவளுள் சினம் கிளர்ந்துகொண்டிருந்தது அவனுக்குப் புரிந்தது. அவனுக்கும் எரிச்சல் வந்தது. அது அவனது முகத்தில் தெற்றெனத் தெரிந்தது.
எனினும் அதை அடக்கிக்கொண்ட அவன், “நான் ஒண்ணும் உன்னைக் கடிச்சுத் தின்னுட மாட்டேன். பயப்படாம வா. கொஞ்ச நேரம் சேர்ந்து இருக்கலாம். நான் முரட்டுத்தனமானவன் இல்லே. லெட்ஸ் ஹேவ் சம் ·பன்!” என்று அவன் சன்னமாய்ச் சிரித்தான். சிரிப்பில் காமம் வழிந்தது. புகையிலைக் காவியால் மங்கியிருந்த பல் வரிசை தெரிந்தது. அவளுள் சகிக்க முடியாத அருவருப்புக் கிளர்ந்தது.
“அந்த மாதிரி ஆளில்லே நானு!” என்று சொல்லிவிட்டு, மேற் பேச்சுக்கு நிற்காமல், அவள் விரைவாக வரவேற்பறையைக் கடந்து மாடிப்படிகளில் ஏறினாள். அவளுக்குப் படபடத்துக் கொண்டிருந்தது. கால்கள் பின்னின. ஒருவழியாய்த் தன்னிருக்கைக்கு வந்து உட்கார்ந்து மேசை மீதிருந்த தண்ணீரை எடுத்து மடக்கு மடக்கென்று குடித்துவிட்டு நெற்றியில் துளித்திருந்த வேர்வையைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டாள்.
இதற்குள் அலுவலரது அறையிலிருந்து ரமா திரும்பி யிருந்தாள். தயா எழுந்து அவளது இருக்கைக்குச் சென்று, அருகே இருந்த முக்காலியில் உட்கார்ந்து நடந்ததைச் சொன்னாள். அவள் சொல்லி முடித்த கணத்தில் தலைமை எழுத்தர் தொலைபேசி யழைப்புக்காக அவளைக் கூப்பிட, அவள் கிலியுடன் எழுந்து சென்று பதிலளித்தாள்.
“நாந்தான் ரமணி. இப்ப நான் வெளியே ஒரு கடையிலேருந்து பேசறேன். ஆமா? அதென்ன, கிடுகிடுன்னு ஓடிட்டே? இதுதான் எனக்கு நீ தர்ற மரியாதையா? ஆசை ஆசையா வந்தவனை விரட்டாத குறையாப் பேசறியே? வர்றியா கீழே?”
“இல்லே. வெரி வெரி சாரி!” – மேலே ஒரு சொல்லுக்குக் கூட இடம் கொடுக்காமல் அவள் ஒலிவாங்கியைக் கிடத்திவிட்டு ரமாவிடம் சென்று அமர்ந்தாள்.
“அந்தாளுதானா?”
“ஆமா. அப்ப ரிசப்ஷன்லேர்ந்து பேசினான். இப்ப வேற எங்கேருந்தோ பேசினான். . . ரமா! நான் என்னடி செய்யப் போறேன்? அவன் கிட்டேர்ந்து எப்படிடி தப்பிக்கப் போறேன்? சங்கர் இப்படிப் படுகிடையா நர்சிங் ஹோம்ல இருக்காரே? அவரோட பேசவே முடியாது போலிருக்கே?”
ரமா ஒரு பெருமூச்சை உதிர்த்தபின் மவுனமாக இருந்தாள். சில நொடிகளுக்குப் பிறகு, “இவனைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிடு, தைரியமா!” என்றாள்.
“பொண்ணு பாக்க வந்தப்ப சரின்னு சொல்லிட்டேனேடி?”
“அதனால என்ன? இப்ப முடியாதுன்னு சொல்லிடு. அவன் இங்க வந்து உன்னைக் கூப்பிட்டதே அதுக்குக் காரணமா யிருக்கட்டுமே! ‘லெட்ஸ் ஹேவ் சம் ·ப்ன்’ அப்படின்னானே? அதுக்கு என்ன அர்த்தம்? உங்கப்பா கிட்ட கண்டிப்பாச் சொல்லிடு, முடியாதுன்னு. தாலி கட்டின கல்யாணத்தையே முறிச்சுக்கிற காலம் இது. இப்ப என்ன? பொண்ணு பாத்துட்டுப் போயிருக்கான். அவ்வளவுதானேடி?”
“உனக்கு ஒண்ணு தெரியுமாடி, ரமா? . . . எங்கப்பா என்னை அடிப்பார்.”
“என்னது! அடிப்பாரா? வளர்ந்த பொண்ணை ஒரு அப்பா கை நீட்டி அடிக்கிறதா!”
“ஆமா. நீ எல்லாம் நாகரிகமான குடும்பத்துல பிறந்திருக்கே. இருபத்திரண்டு வயசான ஒரு பொண்ணை அவளோட அப்பா அடிப்பார்ங்கிறதெல்லாம் உனக்கு அருவருப்பான விஷயம். நம்ப முடியாத அநாகரிகம். ஆனா எங்க வீட்டைப் பொறுத்த மட்டில உண்மை அதுதான்.”
“உங்கம்மா சொல்லக் கூடாதா?”
“அம்மாவுக்கும் சேத்து அடி விழும்டி! உனக்குத் தெரியாது. எங்கம்மா எங்கப்பா கிட்ட எத்தனை அடி, உதை வாங்கியிருக்கா, தெரியுமா?”
“அப்ப என்ன பண்ணப் போறே?”
“சொல்லத்தான் போறேன், பிடிக்கல்லேன்னு. அப்படிச் சொன்னா என்ன நடக்கும்கிறதை உங்கிட்ட சொன்னேன், அவ்வளவுதான். அடிக்குப் பயந்துண்டு இவ்வளவு பெரிய விஷயத்தில நான் ஏமாந்து போக முடியுமா?”
“அதுதான் சரி. உறுதியா நில்லுடி.”
“அப்படித்தான் நினைச்சுண்டிருக்கேன். பாக்கலாம். இப்ப போயி, சங்கர் இப்படிப் படுத்துட்டது எவ்வளவு பெரிய துரதிருஷ்டம், பாரு.”
“வீட்டுக்குப் போனதும், முதல் காரியமா முடியாதுன்னு சொல்லிடு. அதுக்கு முன்னாடி இன்னைக்கு சாயந்தரம் ஒரு தரம் சங்கரைப் பாத்துட்டுப் போ.”
“நீயும் என்னோட நர்சிங் ஹோமுக்கு வாடி, ரமா.”
“சரி.”
தயா தன்னிருக்கைக்குப் போய் உட்கார்ந்தாள். வேலை ஓடவில்லை. ‘லெட்ஸ் ஹேவ் சம் ·ப்ன்’ னாமே! என்ன துணிச்சல்! சங்கரும்தான் என்னோட இத்தனை நாளாப் பழகிட்டிருக்கார். சினிமாவுக்குக் கூடக் கூப்பிட்டதில்லை. நான் ஏதாவது தப்பா எடுத்துண்டுடுவேனோன்னு அவருக்கு பயம். இப்படி ஒரு கனவானை நேசிக்கிற என்னால இப்படி ஒரு பயித்தியத்தை நினைச்சுக்கூடப் பாக்க முடியாது.’
. . . சரியாக ஐந்தரை மணிக்கு இருவரும் ஓர் ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்குப் புறப்பட்டார்கள்.
அவர்கள் அவனது அறையை அடைந்த போது, அங்கே சங்கரின் அம்மா மட்டுமே இருந்ததைப் பார்த்து தயாவுக்கு ஒரு நிம்மதி ஏற்பட்டது. ‘நல்ல வேளை! அந்த மனிதர் – அவருடைய அப்பா – இல்லை!’
விழித்திருந்த சங்கர் இருவரையும் வரவேற்றுத் தலை யசைத்தான்.
“நீங்க ரெண்டு பேரும் அவனோட பேசண்டிருங்கோ. நான் போய் வெந்நீர் எடுத்துண்டு வறேன்,” என்ற ராமலட்சுமி நாசூக்காக வெளியேறினாள்.
“உக்காரவே முடியல்லே. உடம்பு முழுக்க ஒரே வலி. காலையிலே வந்திருந்தேளாம். அம்மா சொன்னா.”
“இப்ப எப்படி இருக்கு?”
“பயங்கர வலி. . . எங்கப்பா ஏதோ பேசினாராமே உங்கிட்ட? அதை யெல்லாம் ஒரு பொருட்டா நினைக்காதே. நம்ம பிரச்னையை நம்ம இஷ்டப்படி தீர்த்துக்கலாம். நடுவிலே இந்தப் பெரியவா வர வேணாம். நான் எங்கே எல்லாரையும் விட்டுட்டுப் போயிடுவேனோன்னு எங்கப்பாவுக்கு பயம். அதான்.”
“அது சரி, யாரு உங்களை இப்படி அடிச்சிருப்பாங்க, சங்கர்?” என்று ரமா வினவினாள். .
சங்கர் கசப்பாய்ச் சிரித்தான்: “நான் என்ன நினைக்கிறேன்னா, காலையிலே ஒரு இடத்தில ஓவர்டைம் பண்றேனில்ல? அங்கே எனக்கு முன்னால ஒரு ஆள் வேலையா இருந்தான். தப்புந் தவறுமா டைப் அடிக்கிறான்னுட்டு அவனை நிறுத்திட்டு என்னை வேலைக்கு வெச்சாங்க. போன வாரம் சம்பள பாக்கியை வாங்கிக்கிறதுக்காக அவன் அந்தக் கம்பெனிக்கு வந்திருந்தான். இது அவனோட கைங்கைரியமாத்தான் இருக்கணும். ஏன்னா, எனக்கு யார் கூடவும் எந்தச் சண்டையும் இல்லே. அதனால எனக்கு அவன் மேலதான் சந்தேகம். தவிர, முறைச்சிண்டே போனான். வாய்க்குள்ளே என்னமோ முணுமுணுன்னு என்னைப் பாத்துண்டே திட்டினான். அதனால அவனாத்தான் இருக்கணும்.”
“ஒரு நெருக்கடியான நேரத்துல இப்படி வந்து படுத்துண்டுட்டேளே, சங்கர்? நான் ஒண்டியாளா எப்படித்தான் சமாளிக்கப் போறேனோ, தெரியல்லே.”
“விஷயம் எந்த மட்டில இருக்கு, தயா?”
“பொண்ணு பாத்துட்டுப் போனதுதான் உங்களுக்குத் தெரியுமே? உங்க யோசனைப்படி நான் சரின்னு சொல்லியாச்சு. சொல்லி ரெண்டு நாளு கழிஞ்சாச்சு. இன்னும் பதினஞ்சே நாள்தான் இருக்கு. என்னைப் பொண்ணு பாத்துட்டுப் போன அந்தக் கட்டையில போற கடங்காரன் இன்னைக்கு நம்ம ஆ·பீசுக்கே வந்துட்டான் என்னைப் பாக்கறதுக்கு. வெளியில போலாம் வா, நிறையப் பேசணும்னு கூப்பிட்டான். நான் முடியாதுன்னுட்டேன்.”
“எனக்கும் என்ன செய்யறதுன்னே ஒண்ணும் புரியல்லே. இந்த உலகத்தில ஏழைகளாவும் பொறக்கக் கூடாது, ரெண்டுங்கெட்டான் நடுத்தரக் குடும்பத்திலேயும் பொறக்கக்கூடாது. பணக்காரங்களுக்கு மட்டுந்தான் இந்த உலகம்!”
“சங்கர்! அன்னைக்கு நாம பேசிண்டோமே – அதும்படி செஞ்சா என்ன? நான் உங்க வீட்டுக்கு வந்துர்றேனே?”
சங்கரன் வாயடைத்துப் போய் அவளைப் பார்த்தபடி இருந்தான்.
“நான் இப்படிப் படுத்த படுக்கையா இங்கே இருக்கிறப்ப, நீ எப்படி எங்க வீட்டில போய் இருக்க முடியும்? அதைப் பத்தி நான் இன்னும் அம்மா கிட்டயோ, அப்பா கிட்டயோ பேசவே இல்லியே, தயா?”
“உங்கம்மா இப்ப இங்கதானே இருக்கா? அவாளோட பேசிச் சம்மதம் வாங்கிடுங்களேன்? எங்கப்பா ஏதானும் தகராறு பண்றதுக்கு முந்தி நான் உங்க வீட்டுக்கு வந்து, அப்படியே போலீஸ்ல கம்ப்ளெய்ண்டும் குடுத்துட்டேன்னா, யாரும் எதுவும் பண்ணிக்க முடியாது. இல்லியா?”
சங்கரன் ஒன்றும் சொல்லாதிருந்தான்.
“சங்கர்! பேசாம இருந்தா என்ன அர்த்தம்? ஏதாவது பண்ணுங்கோ. . . இல்லேன்னா நீங்க லவ் பண்றதா இத்தனை நாளும் சொன்னதுக்கு அர்த்தமே இல்லேன்னு அர்த்தம்!”
“சரி. நான் நாளைக்கு எங்க அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டு, நாளைநீக்கி மத்தாநாள் என்ன முடிவு பண்ணினேன்கிறதை. . .”
“சங்கர்! அப்படிச் சொல்லாதங்கோ. நம்ம பிரச்னைக்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கு. அதுக்கு உங்க அம்மா அப்பாவை ஒத்துக்க வையுங்க. நாம ஒண்ணும் கலியாணத்துக்கு அவசரப்படல்லையே! நாம ஒருத்தரை ஒருத்தர் இழந்துடக் கூடாதுங்கிறது மட்டும்தான் என்னோட கவலையெல்லாம்.”
“என்னோட கவலயும் அதுதானே, தயா?”
“அப்ப, சீக்கிரம் சொல்லிடுங்க அவங்ககிட்ட. இன்னைக்கு ஆ·பீசுக்கு வந்தவன், நாளைக்கு வீட்டுக்கே வந்துறுவான். இன்னும் முன்னாலயே ஒரு முகூர்த்தம் இருக்கு, அதில கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு வந்து நின்னாலும் நிப்பான். சொல்லிட்டேன்.”
அப்போது ராமலட்சுமி நுழைய, அவர்களது பேச்சு நின்றது. இருவரும் அவளிடமும் சங்கரனிடமும் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார்கள்.
. . . காலணிகளை உதறிவிட்டு தயா உள்ளே வந்ததும் கதவைச் சாத்திய ஈசுவரன், “ஏண்டி லேட்டு? எங்க போயிட்டு வறே?” என்றார் ஆத்திரமாக. அவரது கையில் ஒரு தாம்புக் கயிறு இருந்தது.
“அடிக்காம கேளுங்கோ! பொண் கொழந்தை!”
“ஆ … மா! கொழந்தை! பல்லைத் தட்டிட்டுத் தொட்டில்ல போட்டு ஆட்டு!”
தயா தலை உயர்த்தி அம்மாவையும் அப்பாவையும் மாற்றி மாற்றிப் பார்த்தாள். அதற்குள் அங்கு வந்த சாம்பவி, “அவ மேல மட்டும் அந்தக் கயிறு படட்டும், சொல்றேன், இங்க நடக்கப்போறதே வேற!” என்று தொண்டை கிழியக் கூச்சலிட்டாள்.
ஈசுவரன் அதிர்ந்து போய்விட்டார். அந்த வீட்டில் யாரும் அவரை இந்த அளவுக்கு எதிர்த்துப் பேசியதில்லை.
“நீ இதில தலை இடாதடி, அறிவு கெட்டவளே! முப்பதாயிரம் நயா பைசாக்களை ஒரே சமயத்தில வச்சிருக்கக்கூடிய குடும்பமாடி இது? முப்பதாயிரம் ரூவா தர்றேன்றா. உன் கலியாணத்தையும் நடத்தறேங்கறா. இப்பிடி அறிவுகெட்ட தனமாப் பேத்துறியே? போடி அந்தண்டை! இல்லேன்னா உன்னையும் நாலு சாத்துச் சாத்திடுவேன். நகரு.”
சாம்பவி நகரவில்லை.
“ஏண்டி? அந்தப் பையன் உன்னோட ஆ·பீசுக்கு வந்தப்ப மரியாதைக் குறைச்சலா நடந்துண்டியாமே? ஆனா அதை அவன் பெரிசா எடுத்துக்கல்லே. சிரிச்சுண்டே சொல்லிட்டுப் போறான். உங்க பொண்ணுக்குக் கொஞ்சம் இங்கிதம் சொல்லி வையுங்கன்னு மட்டும் சொன்னான். தங்கமான பிள்ளை!”
“யாரும் அவன் கிட்ட மரியாதைக் குறைச்சலா எதுவும் பேசல்லே. வெளியில வரச் சொன்னான். ‘லெட்ஸ் ஹேவ் சம் ·ப்ன்’ அப்படின்னான். கல்யாணத்துக்கு முந்தி பேசற பேச்சாப்பா அது? நான் வரல்லேன்னேன். இதுதான் நடந்த்து.”
“உனக்குப் புருஷ ன் ஆகப் போறவரை அவன் இவன்கறே? அவர்னு சொல்லு.”
“அவன் மூஞ்சியும் முகரக்கட்டையும்! பொறுக்கி நாய் அவன். அவனுக்கு மரியாதை வேற தரணுமா நான்?” என்ற தயா மேற்கொண்டு பேச்சுக்கு இடமே வைக்காமல் அங்கிருந்து அகன்றாள். அவளைத் தொடர்ந்து சாம்பவியும் சென்றாள்.
இருவரும் கொல்லைப் புறத்தில் கொஞ்ச நேரம் பேசினார்கள். சங்கரன் யாராலோ தாக்கப்பட்டு மருத்துவ மனையில் இருப்பதைத் தயா அவளிடம் தெரிவித்த போது, “அப்படின்னா, உன்னோட பிரச்னையை எப்படித் தீர்த்துக்கப் போறே?” என்று சாம்பவி கவலையாய்க் கேட்டாள்.
பிறகு, “அவன் நம்ம வீட்டுக்கு ·ப்ரிட்ஜ், மிக்சி, டி.வி. இதெல்லாம் வாங்கி யனுப்பப் போறானாம். அப்பா கிட்ட சொன்னான்.”
தயாவுக்கு இதயம் தடக் தடக் என்றது. சாமர்த்தியமாக அவன் தூண்டில் போடுவது புரிந்தது. திகைத்தாள்.
இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டிருந்த போதே அவர்கள் வீட்டு வாசலில் ஒரு டெம்போ வந்து நின்றது. அதிலிருந்து இறக்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்வுப் பெட்டி, மின் அம்மி ஆகிய மூன்றும் கூலியாள்களால் உள்ளே கொண்டுவந்து கூடத்தில் வைக்கப்பட்டன. பின்னாலேயே ரமணியும் இறங்கி வந்தான்.
“வாங்க, மாப்பிள்ளை! வாங்க! ரொம்ப தேங்க்ஸ் உங்களுக்கு. இப்படி யாரு செய்யப்போறா இந்தக் காலத்துலே? காப்பி சாப்பிடுங்க! அடியே, ரேவதி!”
“வேண்டாம், சார். இது காப்பி குடிக்கிற நேரமில்லே. நான் அப்புறமா வறேன். அடுத்த வாரத்திலேயே ஒரு முகூர்த்தம் இருக்காம். அம்மா சொல்லச் சென்னா. மத்த வெவரமெல்லாம் நாளைக்கு அம்மாவே வந்து பேசுவா.”
“ஹி. ஹி!. . .”
“அப்ப நான் வரட்டுமா? சொல்லிடுங்க. இனிமே உங்க பொண்ணு நான் கூப்பிட்டா வெளியே போறதுக்கு ஆட்சேபணை பண்ண மாட்டான்னு நினைக்கிறேன். . .” என்றவனைத் தொடர்ந்து வாசலுக்குப் போன ஈசுவரன் அவன் அந்த டெம்போவிலேயே ஏறிச் சென்றபின் உள்ளே வந்தார் – காதளவோடிய புன்னகையுடன்.
“அம்மா! அந்தாளு ஒரு ரவுடிம்மா. அவன் மூஞ்சியிலேயே எழுதி ஒட்டி வெச்சிருக்கு. அவனைக் கல்யாணம் பண்ணிக்கிறதை விட சமுத்திரத்துல முழுகிச் சாகலாம்மா!” என்ற தயா தோள்கள் குலுங்க அழலானாள்.
தயா நெஞ்சே பிளந்து விடும் போல் அப்படி அழுதது ரேவதியை என்னவோ செய்தது.
“ஆ·பீசுக்கு வந்து உன்னைக் கூப்பிட்டான்கிறதுக்காக அவனை ரவுடின்றியா? அவன் இந்தக் காலத்துப் பையன். முன்ன பின்னதான் இருப்பான். எத்தனை கதை படிக்கிறே?”
“பையனா! சரிதான்! மாமான்னு சொல்லும்மா!” என்று சாம்பவி நக்கலாய்ச் சிரித்தாள்.
கண்களைத் துடைத்துக்கொண்ட தயா, “ஏம்மா? நேத்து நான் சரின்னு சொன்னது என் முழு மனசோடயா? உங்களோட பிடுங்கல் பொறுக்க மாட்டாம சரின்னு சொல்லித் தொலைச்சேன். அது உனக்குத் தெரியாதா என்ன?” என்று பொருமினாள்.
அங்கு வந்து நின்றுகொண்ட ஈசுவரன், “இத பாரு. அழுது ஆகாத்தியம் பண்ற நீலித்தன மெல்லாம் வேணாம். நீ அவனுக்குத்தான் கழுத்தை நீட்டப் போறே. தெரிஞ்சுதா? எப்பேர்ப்பட்ட பணக்காரா! பாரு. இப்பவே மிக்சி, ·ப்ரிட்ஜ், டி.வி. ன்னு கொ¡ண்டுவந்து எறக்கிட்டான்! இதை யெல்லாம் இந்த ஜென்மத்துல நாம அனுபவிக்க முடியுமா?” என்றார்.
“நீங்க அதையெல்லாம் அனுபவிக்கணும்கிறதுக்காக, பிடிக்காத ரவுடிக்கு வாக்கப்பட்டு நான் அனுபவிக்கணுமா?”
“சினிமா டயலாக்கா பேசறே? நான் முடிவு செஞ்சா செஞ்சதுதான். இன்னும் ஒரு வாரத்துலேயே கூட அவா உன்னைக் கூட்டிண்டு போய்டுவா. அழுது உடம்பைக் கெடுத்துக்காதே. அப்புறம் என் கையால அடிபட்டே சாவே!”
“அய்யோ! கல்யணம் ஆகப் போற பொண்ணைப் பாத்து அப்படியெல்லாம் துக்கிரித்தனமாப் பேசாதங்கோ.”
“அந்தாளைக் கல்யாணம் பண்ணிக்கிறதை விட உங்க கையால அடிபட்டுச் சாகிறதே மேலுப்பா! அதைச் செய்யுங்க முதல்ல!”
“நெசமாவே அடி வாங்கப் போறே!. . . இத பாரு. நீ நாளையிலேர்ந்து ஆ·பீசுக்குப் போக வேணா¡ம். வீட்டுலயே கெட.! . . . ஏய்! எந்திரு, எந்திரு! எந்திருடின்னா?”
அவர் பேச்சை மதிக்காமல் உட்கார்ந்து கொண்டிருந்த தயாவின் முடியைப் பற்றித் தூக்கி நிறுத்திய ஈசுவரன், “அழிச்சாட்டியமாடி பண்றே? வா, இப்படி!” என்று கூறி அவளைப் பளார் பளார் என்று இரு கன்னங்களிலும் அறைந்தபின் அந்த வீட்டுப் பகுதியின் ஒரே அறையினுள் அவளைத் தள்ளிக் கதவை இழுத்து மூடிப் பூட்டிச் சாவியைத் தமது வேட்டி மடிப்பில் கோத்துக் கொண்டார்.
சாம்பவி செய்வதறியாது பூட்டப்பட்ட கதவைப் பார்த்தபடி உட்கார்ந்து போனாள்.
“ரூமுக்குள்ளே யெல்லாம் வெச்சுப் பூட்டாதீங்கோ!” என்றாள் ரேவதி.
பதிலே சொல்லாமல் ஈசுவரன் வெளியேறினார்.
தொடரும்
jothigirija@live.com
- கதவு
- விடுப்பு
- மருத்துவக் கட்டுரை தற்கொலை முயற்சி
- புகழ் பெற்ற ஏழைகள் 15. உலகை உலுக்கி அச்சுறுத்திய ஏழை
- தாகூரின் கீதப் பாமாலை – 73 பரிவான விருந்தோம்பல் .. !
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………27 சி.சு. செல்லப்பா – ‘ நீ இன்று இருந்தால்’
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -32 என்னைப் பற்றிய பாடல் – 25
- போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 28
- நீங்காத நினைவுகள் – 10
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -10 மூன்று அங்க நாடகம்
- கூரியர்
- மாற்றுக் கோணம் : எதிர்த்தோடிகளின் குரல்- 01 ஒடுக்கப்படுவோரின் விடுதலைக்கான உரையாடல்வெளி….
- வேர் மறந்த தளிர்கள் – 17,18,19
- முப்பத்தாறு ஆண்டுகளில் பரிதி மண்டலம் தாண்டி 11 பில்லியன் மைலுக்கு அப்பால் பால்வீதி ஒளிமீன்கள் அரங்கம் புகுந்த நாசாவின் முதல் விண்வெளிக் கப்பல்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 18
- சாத்தானும் சிறுமியும் _ ‘யூமா வாசுகி’யின் கவிதைத் தொகுப்பு _ வாசக நோக்கில்
- உமா மகேஸ்வரி கவிதைகள்: ‘இறுதிப் பூ’ தொகுப்பு வழியாக…
- வாழ்வு எனும் விளையாட்டு மைதானம்