குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 19

This entry is part 19 of 20 in the series 21 ஜூலை 2013

தாங்க முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகிறவர்கள் உடனே தண்ணீர் குடித்தால் தேவலை போன்ற நாவரட்சிக்கு உள்ளாவார்கள் என்பதை அறிந்திருந்த ராதிகா தீனதயாளன் மடக் மடக்கென்று தண்ணீர் குடித்தது கண்டு வியப்படையவில்லை.

தட்டுகளில் பஜ்ஜிகளைச் சட்டினியுடன் எடுத்து வந்து வைத்த தனலட்சுமி, “அய்யே! டிஃபன் சாப்பிடுறதுக்கு முந்தி ஏன் இப்படித் தண்ணி குடிக்கிறீங்க? அப்பால, ரெண்டே ரெண்டு பஜ்ஜி மட்டும் போதும்னு சொல்லிட்டு எந்திரிச்சுப் போறதுக்கா?” என்றாள்.

“நீ எத்தினி பஜ்ஜி திங்கச் சொல்றியோ, அத்தினி பஜ்ஜி தின்னுடறேன். சரிதானே? ஒரே தாகம். அடக்க முடியல்லே. அதான். பஜ்ஜியை வாயில போட்டு மென்னதுமே தாகம் இன்னும் அதிகமாகத்தான் போகுது!”

“அதுக்காக அதைத் திங்கிறதுக்கு முந்தியே இப்படித் தண்ணி குடிக்கணுமாக்கும்! சமத்துதான் போங்க!”

“என்னப்பா? நீங்களும் ஒரு டிக்கெட் எடுத்துப்பீங்கதானே?”

“அதுக்கென்ன? எடுத்தாப் போச்சு!”

“அம்மா! சிந்தியா தீனதயாளன்னு ஒரு அம்மா எங்க காலேஜுக்கு வந்திருந்தாங்க. …”
“அப்பா கிட்ட நீ சொன்னது என் காதுலயும் விழுந்திச்சு. ஒரு டிக்கெட் போதும். என் தலையில வேற நீ ஒரு டிக்கெட்டைக் கட்டிடாதடி…. அவ புருசன் பேரும் உங்கப்பா பேரும் ஒண்ணாயிருக்கவே, எல்லா டிக்கெட்டுகளையும் வித்துக் குடுக்கணும்னு தோணி, வாங்கிட்டு வந்துட்டியாக்கும்!”

“உங்கம்மா கூட சமயங்கள்லே தமாஷாப் பேசறா!”

‘விஷயம் தெரிந்தால் – அவள் பெயருடன் ஒட்டிக்கொண்டிருப்பது அச்சு அசல் தன் கணவரே என்பது இந்த அசட்டு அம்மாவுக்குத் தெரிந்தால் – இப்படி ஒரு ஜோக் அடிப்பாளா!’

“என்னடி வெறிச்சுப் பாக்குறே? வரவர உன் போக்கே சரி இல்லே. மனசு விட்டும் எதுவும் பேச மாட்டேன்றே!”

ராதிகா குபீரன்று சிரித்தாள்: “நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்கம்மா. அதான் அடிக்கடி முறைச்சு முறைச்சுப் பாக்குறேன்.”

“நான் அழகாயிருக்கிறதால என்னை முறைச்சுப் பாக்குறியா? அப்ப உங்கப்பாவை எதுக்குடி அப்பப்ப முறைச்சப் பாக்குறே?”

தீனதாயாளன் இப்போது குபீரென்று சிரித்தார். “இந்தக் குசும்புதானே வேணாங்கிறது! என்னை நேர்ல பாத்துட்டுத்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டே?”
“நான் எங்கே உங்களைப் பாத்தேன்? கால் கட்டைவிரலை மட்டுந்தானே பாக்க முடிஞ்சிச்சு? சிவப்பாத் தெரிஞ்சிச்சு. சம்மதிச்சுட்டேன்.”

“அப்ப, உங்க முன்னாடி ஒரு செங்கொரங்கைக் கொணாந்து உக்கார வெச்சிருந்தாலும் சரியாப் பாக்காம சரின்னிருப்பீங்களாம்மா?”

“சீ. வாயாடி. கம்னு இரு.”

“நான் மட்டும் என்ன? உங்கம்மாவைச் சரியாப் பாத்தேனா என்ன? தலையை உசத்திப் பாக்குறதுக்குள்ள எழுந்து ஓடிட்டா. அப்பல்லாம் சிக்குனு இருக்கும் உடம்பு. இப்ப அப்படி ஓட முடியுமா அவளால?”

“நீங்க கூடத்தானேப்பா தொந்தி போட்டிருக்கீங்க? அம்மாவோட ஒப்பிட்டா நீங்க அவங்களுக்கு ஏத்த ஜோடி இல்லே…அம்மா! உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? அமெரிக்கா மாதிரி சில வெளி நாடுகள்லே, பொண்டாட்டி தன்னோட அழகு, கவர்ச்சி இதையெல்லாம் இழந்துட்டா வேற பொம்பளையைத் தேடி ஆம்பளைங்க ஓடுவாங்களாம்! குறிப்பா, அமெரிக்காவில. இதனாலேயே பொம்பளைங்க தங்களை எப்பவும் இளமையாவும் கவர்ச்சியாவும் வெச்சுக்கிறதுக்காக மேக்-அப் என்ன, ஜிம் என்னன்னு எப்பப் பாரு தங்களோட உடம்பு பெருக்காம இருக்கிறதுல் ரொம்பவும் மெனக்கெடுவாங்களாம்! நான் ஒரு பத்திரிகையில படிச்சேன்…” – இவ்வாறு சொல்லிக்கொண்டே ராதிகா தீனதயாளனை ஓரத்துப் பார்வை பார்த்தாள்.

அவர் புன்சிரிப்புடன் உட்கார்ந்திருந்தார். முகத்தில் இலேசாக அசடு வழிந்துகொண்டிருந்ததாய் ராதிகா நினைத்தாள்.

“அப்ப? ஆம்பளைங்க் தொப்பையும் தொந்தியும் வழுக்கையும் ஆன பிற்பாடு பொம்பளைங்களும் வேற ஆம்பளைங்களைத் தேடிப் போனா அவங்க ஒத்துக்குவாங்களாமா?” என்று சிரிதத தனலட்சுமியை ராதிகா வியந்து பார்த்தாள்.

“அப்படிப் போடுங்கம்மா!…. ஏம்ப்பா? நீங்க என்ன சொல்றீங்க?”

“இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? தப்புன்றது யார் செஞ்சாலும் தப்புதான்…தனலட்சுமி! என்க்கு இன்னொரு உருளைக்கிழங்கு பஜ்ஜி போடு!”

“உருளைக்கிழங்கைத் தின்னுட்டு இன்னும் இம்புட்டு உருளையா ஆறதுக்கா?” என்று சிரித்துவிட்டு, தனலட்சுமி அவர் தட்டில் மேலும் இரண்டு உருளைக்கிழங்கு பஜ்ஜிகளைப் போட்டாள்.

“அம்மா! உங்களுக்கு நாப்பத்தாறு வயசு ஆயிடிச்சு தானே?”

“ஆமாண்டி. அதுக்கென்ன இப்ப?”

“ஆனா, உங்களைப் பாத்தா அப்படித் தெரியல்லே.”

“அம்பத்தாறு மாதிரி தெரியுதோ?”

“போங்கம்மா. நீங்களும் உங்க விளையாட்டும்! … முப்பத்தாறு மாதிரி தெரியறீங்கம்மா! இன்னும் ஒரு முடி கூட நரைக்கல்லே. நீங்க அமைதியும் தெய்வீகமும் நிறைஞ்ச அழகும்மா! குத்துவிளக்கு மாதிரி! அழகுன்னதும் ஞாபகம் வருது – இப்ப நான் சொன்னேனே, அந்த சிந்தியா தீனதயாளன் எம்புட்டு அழகு, தெரியுமாம்மா? அம்மாடி! பயங்கரமான அழகும்மா! மேக்-அப் வேற பண்ணிக்கிட்டு இருந்தாங்களா, அப்படியே சினிமா ஸ்டார் மாதிரி இருந்தாங்க! ப்யூட்டி பார்லருக் கெல்லாம் வேற போவாங்க போல! நீங்களும் ப்யூட்டி பார்லருக்குப் போயி, ட்ரிம் பண்ணிக்கிட்டு, மேக்-அப் போட்டுக்கிட்டீங்கன்னா அவங்களை விடவும் இன்னும் அழகா யிருப்பீங்கன்னு எனக்கு ஒரு எண்ணம்!” – தனலட்சுமியை மட்டுமே பார்த்தவாறு அவள் இப்படிச் சொன்னாள்.

“போதுண்டி உன் பினாத்தல்! நாப்பத்தாறு வயசுக்கு மேல் நான் ப்யூட்டி பார்லருக்குப் போறேன்! பேரன் பேத்தி எடுக்கிற வயசுல பிள்ளை பெத்துக்குற மாதிரி கனாக் கண்டாளாம் ஒருத்தி! அது மாதிரி இருக்கு உன் பேச்சு! அசட்டுப் பிசட்டுனு பேசிக்கிட்டு!”

“அய்யே! அப்படின்னா நீ உன்னைப் பாட்டின்னா நினைச்சுக்கிட்டு இருக்கே?”

“அந்தக் காலத்துல முப்பத்தஞ்சு வயசுலயே பாட்டி ஆயிடுவாங்கடி! பதினஞ்சு வயசுக்குள்ள கல்யாணம். அப்பால, அவளுக்கு முப்பத்திரண்டு-முப்பத்துமூணு வயசுல அவளோட பொண்ணுக்குக் கல்யாணம். அவளும் உடனே ஒரு கொழந்தையைப் பெத்துக்கிட்டா, அடுத்த வருசமே அவ பாட்டி யாயிடுவா! இந்தக் காலத்துலயோ, பாட்டியாகுற வயசுலதான் பொண்ணுங்களுக்குக் கல்யாணமே நடக்குது! கொடுமை!”

“அம்மா! பஜ்ஜி சாஃப்ட்டாவும் இருக்கு, க்ரிஸ்பாவும் இருக்கு. எப்படிம்மா?”

“தனலட்சுமி! உம் பொண்ணு எதுக்கோ அடி போட்றா!”

“அடியும் போடல்லே, நுனியும் போடல்லே. பஜ்ஜி நான் சொன்னபடி இருக்கா இல்லியா? உண்மையைச் சொல்லுங்க.”

“நீ சொன்னபடியேதான் இருக்கு. அதுல என்ன சந்தேகம்?”

“அப்ப? பொய் சொல்லிப் புகழ்ந்தாத்தானே எதுக்கோ ஒருத்தர் அடி போட்றதா அர்த்தம்?”

“உண்மையைச் சொல்லிப் புகழ்ந்தும் அடி போடலாமில்ல?”

“பொய்யும் புனைசுருட்டுந்தாம்ப்பா இந்த உலகத்துல அதிகமாயிருக்கு. வாயைத் தொறந்தாவே, மனுசங்க வாயிலேர்ந்து வர்றது முக்காலும் பொய்தான்! பொய், துரோகம் ரெண்டுந்தாம்ப்பா!” – ராதிகாவின் வாயிலிருந்து உதிர்ந்த இநதச் சொற்கள் அவளது அடி வயிற்றிலிருந்து ஓர் ஆவேசத்துடன் புறப்பட்டுத் தெறித்துச் சிதறியதைக் கவனித்த தீனதயாளன் வாயில் போட்ட பஜ்ஜித் துணுக்கை மெல்லாமல் சாடையாக மகளைக் கவனித்தார்.

“ஏம்மா, ராதிகா, யாரு யாரை ஏமாத்தினாங்க? என்னத்தையோ மனசுல வெச்சுக்க்கிட்டு நீ ஜாடைமாடையாப் பேசுற மாதிரி இருக்கு….. என்னங்க! நீங்க கேளுங்க அவளை. அவதான் அப்பா செல்லமாச்சே! உங்க கிட்ட சொல்லுவா. ஏங்கிட்ட சொல்ல மாட்டா.”

பஜ்ஜித் துணுக்கை இதற்குள் மென்று விழுங்கி யிருந்த தீனதயாளன், “என்னம்மா! உங்கம்மா என்னென்னமோ சொல்லுதே!” என்றார்.

“காதுல விழுற சமாச்சாரங்கள் எதுவும் நல்லாவே இல்லேப்பா! என் காலேஜ் ஃப்ரண்ட் ஒருத்தியோட அக்கா புருஷன் – இத்தனைக்கும் அவளை லவ் பண்ணிக் கல்யாணம் கட்டினவன் – இப்ப பொறந்த வீட்டுக்குத் துரத்தி யடிச்சுட்டான். அம்பதாயிரம் பணம் கொண்டாரணுமாம். அவ அப்பா கிட்ட அம்புட்டுப் பணம் இல்லே.’’

“பொய், கிய்னு என்னமோ சொன்னியேடி? துரோகம்னு வேற சொன்னே?”

“ஆமாம்மா. அவளை லவ் பண்றதா அவன் பினாத்தினது அப்பட்டமான பொய்தானே? இப்ப துரத்தியடிச்சது துரோகந்தானே?”

“நீ சொல்றது சரிதான். பெத்தவங்க பாத்துப் பண்ணி வெச்ச கல்யாணமாவே இருந்தாலும் கூட, அவன் பண்ணினது தப்புத்தான்! அது கிடக்கு. சாப்பிடுற நேரத்துல எதுக்குடி ஊரார் வீட்டுப் பிரச்சினைகளைப் பத்தியெல்லாம் பேசி உன்னோட மூடைக் கெடுத்துக்குறே? அவங்க பிரச்சினைகளை அவங்க பாத்துப்பாங்க. ஊர்ல உள்ளவங்க கவலைகளை யெல்லாம் நாம சுமக்க ஆரம்பிச்சா பொழுது முச்சூடும் டென்ஷன்லயே இருக்க வேண்டியதுதான். நம்ம வீட்டுல ஏதாச்சும் பிரச்சினை வந்தா, அப்ப டென்ஷனாய்க்க. இந்தா இன்னொரு வாழைக்காய் பஜ்ஜி போட்டுக்க.”
“அப்படிச் சொல்லாதீங்கம்மா. மனுஷங்க எல்லாருக்குமே ஒரு சமுதாய உணர்வு வேணும்…. இப்ப எங்க காலேஜுக்கு டிக்கெட் விக்க வந்த அந்த சிந்தியா தீனதயாளனையே எடுத்துக்குங்க. ஒரு அநாதை விடுதியில செக்ரிட்டரியா இருந்துக்கிட்டு செர்வீஸ் பண்றாங்க. பாத்தா, பணக்காரக் குடும்பம்னுதான் தோணுது. சமூக சேவை செய்யணும்னு அவங்களுக்கென்ன, தலையெழுத்தா! ஆனாலும் பண்றாங்க – ஒரு ஆர்வத்துனால. கீழ் மட்டத்துல இருக்கிற ஏழைபாழைங்களைப் பத்தின கவலையால. இல்லையாப்பா? நாமும் மத்தவங்களுக்காகக் கவலைப்படக் கத்துக்கணும்! இல்லியாப்பா?”

“நீ சொல்றது சரிதாம்மா!….. தனலட்சுமி! இனிமே பஜ்ஜி வைக்காதே. அப்பால, ராத்திரி பசிக்காது…”

ராதிகா, தீனதயாளனை அவரும் தனலட்சுமியும் அறியாதவாறு கூர்ந்து பார்த்தாள். அவர் முகத்தில் அப்பட்டமாய் ஒரு வெளிறல் தெரிந்தது. சிந்தியா தன் கல்லூரிக்கு வந்து போனது அவருக்குப் பிடிக்கவில்லை என்று ராதிகாவுக்குத் தோன்றியது. ஏதேனும் தற்செயலான பேச்சின் வாயிலாகத் தவறிப்போய் அரைகுறையாகவாவது உண்மை வெளிப்பட்டு விடுமோ என்று அவர் அஞ்சியதாய்த் தோன்றியது.

தன் பெயரையோ அல்லது தான் இன்ன கல்லூரியில் படிக்கிறாள் என்பதையோ அவர் சிந்தியாவிடம் சொல்லியிருக்க மாட்டார் என்று கூட அவளுக்குத் தோன்றியது. தன் பெயரும் தான் அங்கே படிப்பதும் தெரிந்திருப்பின், அவள் முகத்தில் அது சற்றேனும் புலப்பட்டிருக்கும் என்று அவள் உறுதியாக நம்பினாள். அதிலும், அத்தகைய பேசும் விழிகளைக் கொண்டவளால் கடுகளவேனும் அதைக் கண்களில் காட்டாமல் இருக்க முடியாது என்றும் அவள் எண்ணினாள். கண்கள் பொய் சொல்ல மாட்டா – முக்கியமாய், இயல்பான பேசும் விழிகள்!

‘அப்பா! நீங்கள் மிகுந்த கெட்டிக்காரர்தான். தந்திரக்காரரும் கூட. சிந்தியாவுடன் இந்தக் குடும்பத்தில் உள்ள எவருக்கும் ஒரு சின்ன தொடர்பு கூடத் தற்செயலாகவும் ஏற்படுவதைச் சாமர்த்தியமாய்த் தவிர்க்கப் பார்க்கிறீர்கள். அதனால்தான் நான் இன்ன காலேஜில் படிக்கிறேன் என்பதைக் கூட நீங்கள் அவளுக்குச் சொல்லவில்லை. … அல்லது, அவள் கேட்டு நீங்கள் என் புகைப்படத்தைக் காட்டி அவளுக்குச் சொல்லியிருந்தாலும், அதைத் தன் விழிகளில் காட்டாமல் அவளால் சமாளிக்க முடிந்ததென்றால், அவள் உங்களையும் காட்டிலும் அதிக மாய்மாலம் படைத்தவள்தான்!’

தீனதயாளன் முதலில் எழுந்து போனார். அதன் பிறகு ராதிகா எழுந்து சென்றாள். …

அன்றிரவே ராதிகா தீனதயாளனிடம் நூறு ரூபாய் டிக்கெட் ஒன்றைக் கொடுத்துப் பணம் வாங்கிக்கொண்டாள். ஒட்டுப்படி – counterfoil – இல் அவரது பெயர், முகவரி ஆகியவற்றை அவள் குறிக்க முற்பட்ட போது, அவர் கை நீட்டி அவளைத் தடுத்தார்: “கவுண்டர்ஃபாயில்ல என் பெயரையும் அட்ரெஸ்ஸையும் எழுதாதேம்மா.”

“ஏம்ப்பா?”

“ஏற்கெனவே ஒரு டிக்கெட் வாங்கியாச்சு – எங்க ஆஃபீஸ் ரெக்ரியேஷன் க்ளப் மூலமா. இப்ப இன்னொரு டிக்கெட் எடுத்தா, நான் பெரிய பணக்காரன்னு நினைச்சுக்கிட்டு மேல மேல தொல்லை குடுப்பாங்க. அதான்!”

“சரிப்பா.”

“நீ சொல்றயே, அந்தப் பொம்பளையை எனக்குத் தெரியாது. ஆனா இப்ப டிக்கெட் உன் மூலமா வந்தது மாதிரி, எங்க ரெக்ரியேஷன் க்ளப் மூலாமாவும் வந்திச்சு. அதே அநாதை விடுதியிலேர்ந்துதான் இதுவும்கிறது எனக்குத் தெரியாதில்லியா அப்ப?”

“அப்ப, யார் பேரைப் போட்டுக்கட்டும்?”

“உன் பேரையே போடேன்.”

“சரிப்பா.”

…..தமது அறைக்குச் சென்று கட்டிலில் படுத்துக்கொண்ட தீனதயாளனுக்கு ஆயாசமாக இருந்தது. சிந்தியா பற்றிய குற்ற உணர்வுக்குத் தாம் ஆளாகிற முறையில் விதி வசத்தால் அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாய் அவருக்குத் தோன்றியது. கடந்த ஒரு வாரத்துக்குள் மடமட வென்று நேர்ந்துவிட்டவற்றை நினைத்துப் பார்த்த போதோ, தமது மன நிம்மதிக்கு ஏதோ ஊறு விளையப் போகிறது என்று உள்ளுணர்வாய் அவருக்கு நெருடியது.

ராதிகா எந்தக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள் எனும் தகவலை அவள் எத்தனையோ தடவைகள் அவரைக் கேட்டும் அவர் சொன்னதில்லை. தம் குடும்பத்தினருடனான எந்தத் தொடர்பும் அவளுக்கு ஏற்படுவதை அவர் விரும்பியதில்லை. அதை அப்படியே அவளிடம் அவர் சொல்லியும் விட்டார்.

அவளுடன் தமக்கு இருந்த உறவை அவர் ஓர் இரகசியமாகவே கட்டிக்காக்க விரும்பினார். அதனாலேயே, டிக்கெட்டின் ஒட்டுச் சீட்டில் தீனதயாளன் எனும் பெயரைப் பார்த்துவிட்டு அவள் தேவையற்ற ஆராய்ச்சியில் ஈடுபடக்கூடாது என்பதன் பொருட்டு அவர் அந்தப் பெயரை எழுத வேண்டாமென்று ராதிகாவிடம் சொன்னார்.
அவர் குடும்பத்தினரைத் தொலைவிலிருந்தாவது பார்க்க வேண்டும் என்கிற ஆவல் சிந்தியாவுக்குப் பல நாள்களாகவே உண்டு. அவள் எத்தனையோ தடவைகள் தனது அந்த ஆவலை அவரிடம் வெளிப்படுத்தியும், கூட, அதை நிறைவேற்ற அவர் மறுத்துவிட்டார். அவர்களின் புகைப்படங்களைக் கூட அவர் அவளுக்குக் காட்டியதில்லை. தன் மனைவியின் புகைப்படத்தை மட்டும் ஒரே ஒரு முறை அவளுக்குக் காட்டிவிட்டுக் கண்ணிமைப் பொழுதுக்குள் அதைப் பிடுங்கிக்கொண்டும் விட்டார். நன்கொடை டிக்கெட்டுகள் விற்கும் பணியின் விளைவாகச் சித்தியாவுடன் ராதிகாவுக்குத் தொடர்பு ஏற்பட்டு, அதனால் சிக்கல் ஏதும் கிளம்பாதிருக்க வேண்டுமே என்பதே இப்போது அவரது கவலையானது. அது பற்றி அவரால் சிந்தியாவுடனோ ராதிகாவுடனோ எதுவும் பேச முடியாது. எனவே அவர் தவிக்கத் தொடங்கினார்.

‘காதல்’ என்பது பற்றித் தம் மகளுக்கு இருந்த தீர்க்கமான கருத்துகள் அவரை அயர்த்தின. ‘ஐ லவ்யூன்னு அவன் சொன்னது அப்பட்டமான பொய்னுதானே அர்த்தம்?’ என்று ஆத்திரத்துடன் அவள் கேட்டது அவர் செவிகளில் ஒலித்து அவரைச் சங்கடப்படுத்தியது. தமது இரட்டை வாழ்க்கை பற்றி அறிந்தால், ராதிகா ஒருபோதும் தம்மை மன்னிக்கவே மாட்டாள் என்பது அவருக்கு மிகவும் தெளிவாயிற்று. சிந்தியாவின் உறவை அறவே தவிர்ப்பது பற்றியோ அவரால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. சரியோ, தப்போ, சிந்தியாவின் மீது தமக்கு இருந்த அளவுக்கான காதல் தனலட்சுமியின் மீது தமக்கு இல்லை என்று நினைத்தார். ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமே யானாலும், தனலட்சுமியிடமும் தாம் அவளைக் காதலிப்பதாய்ச் சொன்னதும், எழுதியதும் உண்டு என்பவையும் அவருக்கு நினைவில் நெருடின. இந்த நெருடலால், காதல் என்பதாய்த் தாம் நினைத்துக் கொண்டிருந்தது சிந்தியாவின் அழகின் பாற்பட்ட ஈடுபாடே என்பது புரிய, தாம் செய்துகொண்டிருந்தது தப்பு என்பது முதன் முறையாக அவரைக் குத்தியது.

‘ … சிந்தியாவுடனான உறவு தப்பு என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறதா என்ன? அது எப்போதோ புரிந்துவிட்டது. அது தப்பு இல்லையெனில், அது பற்றி நான் தனலட்சுமிக்குச் சொல்லி யிருந்திருப்பேனே! அதைச் செய்ய என்னால் முடியாது என்பதே எனது தப்பை வெளிப்படுத்தவில்லையா, என்ன! தப்பு என்று தெரிவதால்தானே, மனச்சாட்சிக்குப் பயந்து அதை ரகசியமாய் வைத்திருக்கிறேன்! …ஆனாலும் என்ன? ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை நேசிக்க முடியாது என்று ஏதேனும் விதி இருக்கிறதா என்ன! நான் ஒன்றும் தனலட்சுமியைக் கைகழுவி விடவில்லயே! தாலி கட்டிய மனைவியான அவளுக்கு நான் என்ன குறை வைத்திருக்கிறேனாம்!….’

அவர் கண்களை மூடிக்கொண்டு ஒரு குட்டித் தூக்கம் போட முயன்றார்.

“என்னங்க! வெளக்கு வைக்கப் போற நேரத்துல போய்ப் படுத்துட்டீங்க? ராத்திரிக்கு என்ன சமையல் பண்ணட்டும்?” என்ற குரல் கேட்டு அவர் கண் திறந்து திரும்பினார்.

“எதாச்சும் பண்ணு, தனலட்சுமி. நீ எது செய்தாலும் எனக்குப் பிடிக்கும்.”

தனலட்சுமியின் முகத்தில் புன்னகை அரும்பிற்று. தம்மைச் சற்று முன்னர்தான் முதன்முதலாய்த் தாக்கியிருந்த குற்ற உணர்வில் அவர் எச்சில் விழுங்கினார். அவள் விழிகளின் சந்திப்பைத் தவிர்த்தார். அவளை ஏமாற்றிக் கொண்டிருந்ததற்கான உறுத்தலுக்கு முதன்முறையாக ஆட்பட்டார்.

“அப்ப கத்திரிக்காய் எண்ணெய்க் கறி பண்ணிடறேன். காலையில் வெச்ச முள்ளங்கி சாம்பாரையும், தக்காளி ரசத்தையம் சூடு பண்ணிக்கலாம்.”

“போதும், போதும். கொள்ளையோ, கொள்ளை!”

அவள் அவரது அறையை விட்டு நீங்கினாள். மெல்ல நடந்து சென்ற அவளது முதுகுப் புறம் பார்த்தவாறு தீனதயாளன் முதன்முறையாகக் கண் கலங்கினார். சிந்தியாவுடனான தம் உறவு பற்றி அவளுக்குத் தெரிய நேர்ந்தால், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது பற்றி அவரால் கணிக்க முடியவில்லை. ‘ஒரு பாட்டம் அழுது ஓய்ந்த பின் மன்னிப்பாளா, அல்லது சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை நிரூபிப்பாளா? எது எப்படி இருந்தாலும், தனலட்சுமி மனமுடைந்து போய்விடுவாள் என்பது மட்டும் மிக நிச்சயம்!’…. – அவர் இடிந்து போனார்.
தொடரும்
jothigirija@live.com

Series Navigationவேர் மறந்த தளிர்கள் – 20-21-22நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறையாக புது விண்மீனைச் சுற்றும் இரண்டு நீர்க்கோள்களைக் கண்டுபிடித்தது
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *