ஜாக்கி சான் 6. சாகச நாயகன் பிறந்த கதை

0 minutes, 17 seconds Read
This entry is part 2 of 24 in the series 8 செப்டம்பர் 2013

 

 

சார்லஸ் தன் மனைவி லீ லீயுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

 

“இன்னிக்கு உடம்பு எப்படி இருக்கு?”

 

“பரவாயில்லை.  என்னைக்கு குழந்தை பிறக்குமோ? இதோட பெரிய பாடாய் இருக்கு..”

 

“என்ன செய்யறது?  குழந்தைங்கன்னா பத்து மாசத்துல பொறந்துடும்.  நம்ப குழந்தை என்னன்னா.. பன்னென்டு மாசமாகியும் பிறக்கலையே..”

“ஆமாங்க.. குழந்தை ரொம்பவே படுத்துது ..”

 

மருத்துவமனையில் லீ லீக்கு ஆண் குழந்தை பிறந்தது.

 

“அப்பாடா.. குழந்தை பொறந்தாச்சு.  உனக்கு உடம்பு எப்படி இருக்கு?”

 

“ஆச்சு.. குழந்தை பொறந்துட்டானில்ல.. அதுவே போதும்.  குழந்தை எப்படி இருக்கான்?”

 

“அவனுக்கென்ன.. ஜோரா இருக்கான். எடை எவ்வளவு தெரியுமா? பன்னிரண்டு பவுண்ட் (கிட்டத்தட்ட 6 கிலோ).. ”

 

“அப்படியா? பார்க்க எப்படி இருக்கான்?”

 

“பார்க்க பிரங்கி குண்டாட்டமா இருக்கான்.  அவனை பாவ் பாவ்ன்னு கூப்பிடலாம்ன்னு இருக்கேன்”

 

“என்னங்க இது?  பிரங்கி குண்டுன்னா கூப்பிடறது?”

 

“இருக்கட்டுமே.. அவன் அப்படித்தானே இருக்கான்?”

 

 

லீ லீ குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து கிளம்ப வேண்டிய நாள்.

 

“என்னங்க.. ரொம்ப யோசனையோட இருக்கீங்க?”

“உனக்கு அறுவை சிகிக்சை செய்ததால மருத்துவச் செலவு ரொம்ப ஆயிடுச்சு.  டாக்டருக்கு பணம் கட்டணும்.”

 

“எவ்வளவுங்க?”

 

“500 டாலர் கட்டணும்..”

 

“ஐநூறா?  எப்படிங்க கட்டறது?”

 

“அதான் தெரியல.. நம்ம கிட்ட அவ்வளவு பணம் இல்லயே”

 

“யாருகிட்டயாவது கேட்டுப் பாக்கறதுதானே..”

 

“டாக்டரே ஒரு யோசனை சொன்னாங்க..”

 

“என்னங்க அது?”

 

“நாம குழந்தைய அவங்ககிட்டே கொடுத்துட்டா மருத்துவச் செலவு 500 டாலரையும் அதுக்கு மேலே 1500 டாலரையும் கொடுக்கறதாச் சொல்லறாங்க..”

 

“ஐயோ.. குழந்தையை கொடுக்கறதா.. என்னால முடியாதப்பா..”

 

 

 

சார்லஸ் தன் நண்பகளைச் சந்திக்கச் சென்றார்.

 

“என்ன சார்லஸ்.. குழந்தை ஒரு வழியாகப் பிறந்துட்டான் போலிருக்கு..” என்று கேட்டார் ஒரு நண்பர்.

 

“ஆமாம்.. செலவுதான் ரொம்ப ஆயிட்டது..”

 

“கட்டிட்டுப் போக வேண்டியதுதானே?”

 

“500 டாலர் கட்டணுமாம்.. நாங்க அதுக்கு எங்கே போறது?”

 

“இப்ப என்ன செய்யப் போறே..”

 

“டாக்டர் குழந்தைய கொடுத்தா 2000 டாலர் தரதாச் சொல்லறாங்க..”

 

“இங்க அது சகஜம் தானே.. 500 டாலரையும் கட்டிடலாம்.  கூட 1500 டாலரும் கிடைக்கும்.  உன்னால குழந்தைய எப்படி வளர்க்க முடியும்ன்னு தெரியாது.  அவங்க நிச்சயம் நல்லா வளர்த்து ஆளாக்கிடுவாங்க இல்ல..”

 

“பணம் என்னவோ கிடைக்கும்.  ஆனா மனசு கேட்கல..”

 

இதைக் கேட்ட மற்றொரு நண்பர், “சார்லஸ்.. நான் ஒண்ண சொல்லறேன்.  பன்னிரண்டு மாதம்.  பன்னிரண்டு பவுண்டு எடை.  ரொம்பவே வித்தியாசமானக் குழந்தை.  அவன் சாதிக்கப் பொறந்திருக்கான்னு நினக்கிறேன்.  இப்ப டாக்டர்கிட்டே பணத்துக்காக அவனை கொடுத்துட்டு பின்னால யோசிக்கறதுல பிரயோஜனம் இருக்காது.“

 

“எனக்கும் குழந்தையக் கொடுக்க மனசேயில்ல.. பணத்துக்கு என்ன செய்யறதுன்னு தான்..”

 

“சார்லஸ்.. ரொம்ப யோசிக்காதே.  எங்களால முடிஞ்சதத் தரோம்.  எல்லாத்தையும் சேர்த்துக் கட்டிடு”

 

நண்பர்கள் கொடுத்துதவிய சிறு சிறு தொகைகளைக் கொண்டு மருத்துவமனைக்குக் கட்டிவிட்டு குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

 

இந்தக் குழந்தை யார் தெரியுமா?

 

அது தான் சாகச நாயகனான குங்பூ புகழ் ஜாக்கி சான்.

 

ஒரு முறை ஜாக்கி சானிடம் “தாங்கள் பெரிதாகக் கருதும் சாகசச் செயல் எது?” என்று கேட்கப்பட்ட போது, அவர் “நான் செய்த சாகசக் காட்சிகளுடன் என்றுமே ஒப்பிட முடியாத சாகசக் செயல் என் தாய் என்னை ஈன்று எடுக்க பட்டப்பாடு தான்” என்றாராம்.

 

லீ லீ பன்னிரண்டு மாதங்கள் குழந்தையை வயிற்றில் தாங்கி, பன்னிரண்டு பவுண்டு குழந்தையைப் பெற்றெடுத்தச் செயல் உண்மையிலேயே மிகவும் அரிதான செயல்.

 

திரைப்படங்களில் எத்தனையோ பேர்கள் நடித்து மக்களின் உள்ளங்களில் அரியாசனம் இட்டு அமர்ந்து சாதனைப் புரிந்திருக்கிறார்கள். திரையுலகில் சாதனையாளர்கள் என்று எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் ஆங்கிலப் படங்களில் நடித்த ஆங்கிலேயர்களும் அமெரிக்கர்களும் தான் அதிகம். இன்று பிற நாட்டுச் சாதனையாளர்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பவர் ஜாக்கி சான் என்றே சொல்லலாம். ஹாங்காங் நகரில் பிறந்து சீனாவிலும், அமெரிக்காவின் ஹாலிவுட் படப்பிடிப்பிகளிலும் சாகசங்கள் செய்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் அவர்.

 

சீன, ஆங்கிலப் படங்களில் பற்பல சாகசக் காட்சிகளை எவரின் உதவியுமின்றி, தானே செய்து அசத்தும் அவரைப் பற்றி இந்தத் தொடரில் உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று இருக்கிறேன். நான் ஹாங்காங்கில் கடந்த பன்னிரண்டு ஆண்டு காலம் வசித்த காரணத்தால், ஜாக்கி சான் பிறந்து வளர்ந்த சூழலை, தமிழில் நல்ல முறையில் தர முடியும் என்று நம்பி, இந்தத் தொடரை எழுத ஆரம்பித்து உள்ளேன்.

சீனாவில் நடந்த புரட்சியின் போது, முக்கிய நிலப்பகுதி மக்கள் பலரும், அப்போது ஆங்கில ஆட்சியின் கீழிருந்த, பாதுகாப்பும் வளர்ச்சியும் நிறைந்த ஹாங்காங் நகருக்குக் குடிப்பெயர்ந்தனர். உடுத்தும் உடைகள் கொண்ட மூட்டை ஒன்றை மட்டுமே முதுகில் சுமந்துக் கொண்டு, பலர் மறக்க முடியாத நினைவுகளை மட்டும் மனத்தில் ஏந்திக் கொண்டு  ஹாங்காங் நகருக்கு வந்தனர்.

 

வந்த இடத்தில் கிடைத்த வேலைகளை, ஆபத்தான வேலையென்றாலும் செய்து தங்கள் வயிற்றை நிரப்ப முயன்றனர். பசியும், பயமும், குற்றமும் தங்கள் வாழ்க்கையெனக் கொண்டனர் பலர். வந்த பலரில் சார்லஸ் சான், லீ லீ சான் தம்பதியினரும் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக ஒரு வேலையில் சேர்ந்து உண்ணும் உணவிற்கும், உடுத்தும் உடைக்கும், தங்கும் இடத்திற்கும் எந்த விதப் பிரச்சனையும் இல்லாத சூழல் அவர்களுக்குக் கிட்டியது.

 

அவர்கள் இருவரும் பிரன்சுத் தூதுவர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தனர். சார்லஸ் சான் சமையல்காரராகவும், லீ லீ சான் மற்ற வீட்டு வேலைகளைச் செய்யும் உதவியாளராகவும் வேலைக்குச் சேர்ந்தனர். மிகவும் பணக்காரர்கள் வசிக்கும் விக்டோரியா பீக் என்று அழைக்கப்படும் விக்டோரியா சிகரத்தில் இருந்த தூதுவர் வீட்டிலேயே ஒரு பகுதியில் வசித்தனர். அப்போதுதான் ஜாக்கி சான் அவர்களுக்குப் பிறந்தார்.  மேற்கண்ட உரையாடல்கள் அவரைப் பற்றியதே.

 

ஏப்ரல் 7, 1954ல் உலகைப் பார்க்க வந்த குழந்தையைக் கண்ட பெற்றோருக்கோ பேரதிர்ச்சி. அத்தனைப் பெரிய குழந்தையை அவர்கள் அது வரை கண்டது கிடையாது. அதனால் பிறந்ததுமே அவர்கள் குழந்தையை “பாவ் பாவ்” என்று செல்லமாக அழைத்தனர். சீன மொழியில் அதற்கு பீரங்கி குண்டு என்று பொருள்.

 

குழந்தைக்குச் சான் கொங்-சாங் என்று பெயர் வைத்தனர். ஹாங்காங்கில் பிறந்த சான் என்பது இதற்குப் பொருள்.

 

சீனர்களின் கால அட்டவணைப்படி, 1954 ஆம் வருடம், குதிரைக்கான வருடம். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும், குறிக்கோள் கொண்டவர்களாயும், வாழ்க்கையில் மேன்மேலும் வெற்றிகளைக் குவிப்பவர்களாகவும் இருப்பார்கள் என்பது நம்பிக்கை. பெண் குழந்தையாய் இருந்திருந்தால் தகுந்த வரன் கிடைக்க பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வந்திருக்கும். ஆனால் அதே ஆண் குழந்தையாய் இருந்ததால், நல்ல அதிர்ஷ்டத்தைத் தர வல்லவர்கள் என்று நம்பினர். அத்தகைய வருடத்தில் பிறந்து, சாதனை மேல் சாதனை படைத்து வரும் இந்த சாகச நாயகனைப் பற்றி அடுத்தத் தொடரில் மேலும் தெரிந்து கொள்ளலாம்.

 

Series Navigationஈழநாடு என்றதோர் ஆலமரம்: ஒரு வரலாற்றுப் பதிவுக்கான அழைப்புநைஸ்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *