என்னவைத்தோம்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 17 in the series 1 பெப்ருவரி 2015

பாவலர் கருமலைத்தமிழாழன்
முன்னோர்கள் தூய்மையாக வைத்தி ருந்த
மூச்சிழுக்கும் காற்றினிலே நஞ்சை சேர்த்தோம்
முன்நின்று காற்றிலுள்ள அசுத்தம் நீக்கும்
முதலுதவி மரங்களினை வெட்டிச் சாய்த்தோம்
பொன்கதிரை வடிகட்டி ஒளிய னுப்பும்
பொற்கவச ஓசோனை ஓட்டை செய்தோம்
என்னவைத்தோம் சந்ததிக்கே தன்ன லத்தால்
எல்லாமும் கலப்படத்தால் கெடுத்து வைத்தோம் !

ஆயிரமாம் ஆண்டுகளாய் சேர்த்து வைத்த
அடிநீரைக் குழாய்வழியே காலி செய்தோம்
பாய்மரம்போய் கடல்நீரில் எண்ணெய் குண்டால்
பரிதவிக்க மீன்களினைச் சாக டித்தோம்
தாய்மண்ணில் உரங்களினைப் போட்டுப் போட்டுத்
தரும்விளைச்சல் எனஉறிஞ்சி சக்கை செய்தோம்
சேய்களுக்கே என்னவைத்தோம் தன்ன லத்தால்
செழித்திருந்த இயற்கையினைக் கெடுத்து வைத்தோம் !

அறிவியலால் அணுக்குண்டை வெடிக்க வைத்தே
அழிவிற்கே அறிவென்று பயிற்று வித்தோம்
நெறிகளினைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு
நியாயத்தை அதர்மத்தில் அடக்கி வைத்தோம்
வெறியூட்டி சாதிமதம் பெருக்கு வித்தே
விளைந்திருந்த மனிதநேயம் கருக வைத்தோம்
குறிக்கோளாய் இளைஞருக்கே என்ன வைத்தோம்
குற்றுயிராய் வாழ்க்கையினை விட்டு வைத்தோம் !

Series Navigationமறைந்து வரும் குழந்தைகள் விளையாட்டுக்கள்

Similar Posts

Comments

  1. Avatar
    எழிலன் says:

    மரபுக்கவிதைகள் அரிதாகி வரும் காலத்தில் ஒரு நல்ல விருத்தப்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *