நிலாமகள் கவிதைகள்

author
0 minutes, 12 seconds Read
This entry is part 18 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

‘ இலகுவானதெல்லாம் இலேசானதல்ல ‘ என்ற கவிதைத் தொகுப்பு நிலாமகளின் [ நெய்வேலி ] இரண்டாவது தொகுப்பு. இவர் தன்
சிறுகதைகளையும் தொகுப்பாகத் தந்துள்ளார். இவர் கவிதைகள் கல்கி , யுகமாயினி , காக்கைச் சிறகினிலே , அனுபவம் , நிவேதிதா ,
சங்கு , புதிய ‘ ழ ‘ , போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன.

பெண் , தாய்மை அடைந்த பின் சந்திக்கும் கஷ்டத்தைக் கருக்பொருளாகக் கொண்டது ‘ கொடுந்துயர் ‘ என்னும் கவிதை. இதில்
பிரச்சனையின் வெப்பமே கவிதையை இயக்கும் சக்தியாகியுள்ளது. தாய்ப்பாலை மறக்கச் செய்வது எந்தப் பெண்ணுக்கும் கொடுந்துயரம்தான்.
கன்றை இழந்த ஆனால் பால் தரும் செவலைப் பசுவின் நிலையும் , அதற்கு நேர் எதிரான தாயின் நிலையும் ஒப்பிடப்படும் தளம் நம்மைச்
சிந்திக்க வைக்கிறது.
கன்றிழந்த தாய்ப் பசுவுக்கு
பால் சுரப்பு நிற்க
மாத்திரை தேடுவதில்லையே நாம்…!
கிடைத்த வரை இலாபமென
உடல் நோவும்
உயிர் நோவும்
சக உயிர்க்கும் சமம் தானே…!
——- எல்லோருக்கும் ஒன்றை இக்கவிதை கவனப்படுத்துகிறது. அதுவே வாசகன் மனத்தைக் கனக்கச் செய்துவிடுகிறது.
குழந்தை தூங்குவதே அழகு. அக்காட்சியை இன்னும் அழகுபடுத்துகிறார் நிலாமகள்.
அவள் கைகளுக்குள்
தலையணை உருவில் நான் !
—— என்ற வரிகளில் தாய்ப்பாசம் ததும்புகிறது.
‘ அசைதலின் பெருவலி ‘ – சோகத்தை அழுத்தமாப் பதிவு செய்துள்ளது.
தோட்டத்தில்
கிளை பரப்பி நிற்கும்
மாமரப் பொந்தில்
உச்சிப் பொழுதின்
வெம்மையடங்கக் கரையும்
ஒற்றைக் குயிலின் மென் சோகம்….
——-‘ கரையும் ‘ என்றாலே போதும். ‘ வெம்மையடங்க ‘ என்பதால் அணியழகு சேர்ந்துவிட்டது. கவிதையில் அடுத்து வரும் வரிகள் ,
சாவு வீட்டின் ஒற்றை விசும்பலைச் சொல்லி , அத்தோடு மற்றவரின் சோகத்தையும் இணைக்கிறது. அடுத்து வரும் முத்தாய்ப்பு
கவித்துவத்தை உருவாக்குகிறது.
அசைவற்ற மர இலைகளில்
கசிந்து பரவுகிறதென்
வன் சோகம்
———- மனத்தின் சோகத்தை மர இலைகளில் இடமாற்றம் செய்வது அசாதாரண பொருட்செறிவை ஏற்படுத்துகிறது இத்தொகுப்பில் இது
முக்கியமானதொரு கவிதை. ‘ இலைகளால் பேசும் பெருமரம் ‘ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியுள்ளார் நிலாமகள். இயற்கை
நேசத்தில் இவர் லயிக்கும் புள்ளிகள் கவிதைகளாகின்றன
‘ செவிக்குணவு ‘ — கவிதை , திருவிழாக் கூட்டத்தில் ஊதல் விற்பவனின் நிலை பற்றிப் பேசுகிறது. பிறர் காதுகளைப் பற்றிக்
கவலைப் படாமல் ஊதல் ஊதுவது குழந்தைகள் இயல்பு.
உயர்ந் தோங்கிய
அவனது குழலொலி
எட்டும் செவிகளைப்
பிரகாசமாக்குகிறது
‘ கேட்டவுடன் மகிழ்தல் ‘ என்பதைச் செவிகளில் ஏற்படும் பிரகாசம் என்பது வித்தியாசமான அழகான வெளிப்பாடு !
‘ திரிபு ‘ என்ற கவிதை வித்தியாசமான கருப்பொருள் கொண்டது. ஒரு வீடு தகர்த்துப் புதுப்பிக்கப்பட்டுவிட்டது. அவ்வீட்டில் பிறந்த
ஒருவர் அதைச் சென்று பார்க்கிறார். பசுமை நினைவுகள் மலர்கின்றன. அந்த நினைவுகள் யதார்த்தப் போக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அப்பதிவுகளில் காட்சிப்படுத்துதல் நன்றாக அமைந்துள்ளது.
நிலை வாசல் இருபுறமும்
உயர்ந்து பரந்திருக்கும் கல் திண்டு வைத்த
திண்ணைகள் மேல்
உட்கார்ந்தால் ஆடை மீறி ஊடுருவும் குளுமை
—— என்ற தொடக்கமே களை கட்டச் செய்துவிடுகிறது.
கொல்லைத் தாழ்வாரத்து
நெல் ஊற வைக்கும் தொட்டியருகே
அம்மாவிடமிருந்து முதன்முதல் நான்
தரை தொட்ட இடம் பார்க்க…
—— இப்படி வீட்டின் முக்கிய இடங்கள் சுட்டப்படுகின்றன.
தகர்த்துப் புதுப்பிக்கும்முன்
மற்றுமொரு முறை போயிருக்கலாம்
——- என்ற ஏக்கத்தோடு கவிதை முடிகிறது. இது ஒரு நல்ல யதார்த்தக் கவிதையாகும்.
‘ பயணத்தடை ‘ — பேச்சு நடையில் அமைந்துள்ளது. ஒரு மூதாட்டியின் , மரணத்திற்காகக் காத்திருத்தல் பற்றிப் பேசுகிறது. மூதாட்டி
தன் பிள்ளைகளைக் கவனிக்கச் சரியான ஆள் இல்லையே எனக் கண்ணீர் வடிக்கிறாள். உயிர் பிரிய மறுக்கிறது. குழந்தையைத் தெய்வமாகப்
பார்க்கும் செயல் ஒன்றைப் பதிவு செய்கிறது ‘ இங்குமிருக்கிறார்.. ‘ என்ற கவிதை ! கோயிலில் பக்தர்கள் வரிசையில் இது நடக்கிறது.
” அர்ச்சனை நமக்கெல்லாம் செய்ய மாட்டாங்களாம்மா ? ” என்று கேட்கிறது ஒரு குழந்தை.
என் கையிலிருந்த பூக்களை
அந்த மழலையின் தலைமேல் தூவிவிட்டு
வரிசை விட்டு வெளியேறினேன்
திருப்தியுடன்
——- குழந்தைமையில் இறைமை தரிசனம் வித்தியாசமான அணுகுமுறை. நன்றாகவே இருக்கிறது.
‘ இருப்பு நிலைக் குறிப்பு ‘ கவிதையின் கருப்பொருள் என்ன்வென்று தெளிவாக இல்லை. ஒரு மருத்துவரிடம் ஒருவர் தன் அவஸ்தைகளைப் பட்டியலிடுகிறார். மருத்துவர் மௌனமாகிறார்.
துள்ளும் கன்றைக்
கயிறு கொண்டு கட்டுதல்போல்
எங்களிருவர் நாவை
இழுத்துக் கட்டியது
எல்லாவற்றையும் விஞ்சிய
இறைச் செயல்
——– ‘ இறைச் செயல் ‘ என்று சுட்டப்படுவது எது ? நோய்மையா ? விடை தெரியவில்லை.
படம் வரையும் ஆர்வமுள்ள ஒரு குறும்புக் குழந்தையைப் பற்றிப் பேசுகிறது ‘ குழந்தைகளெல்லாம் குழந்தைகளல்ல ‘ கவிதை !

நிலாமகள் கவிதைகள் சராசரிக்கு மேல் உள்ளன. கவிதைகளில் கருப்பொருள் தேர்வு நன்றாக இருக்கிறது. திருப்தியளிக்கிறது.
வெளியீட்டு முறையில் இன்னும் சில படிகள் முன்னேற்றம் தேவை. சிந்தனையைச் சற்றே தீவிரப்படுத்தினால் மொழியின் அடியாழங்களில்
படிந்து கிடக்கும் கவித்துவம் நிச்சயம் தட்டுப்படும். [ வெளியீடு : ஊருணி வாசகர் வட்டம் சென்னை – 600 092 பக்கங்கள் 80 விலை ரூ 70
செல் 81 48 19 42 72 ]

Series Navigationபந்தம்பொ கருணாகர மூர்த்தி நூற்கள் அறிமுகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *