என்றென்றைக்கும் புரிந்துகொள்ளப்படமுடியாத ஒருத்தி

author
0 minutes, 13 seconds Read
This entry is part 10 of 14 in the series 28 ஜூன் 2020

அலைமகன்

எனது மேலதிகாரி கொழும்பில் இருந்து அனுப்பியிருந்த மின்னஞ்சலை மீண்டும் மீண்டும் வாசித்தேன். கொழும்பிலிருந்து வரும் அந்த பெண்ணை வரவேற்று தேவையான எல்லா வசதிகளையும் குறைவில்லாமல் செய்து கொடுக்கும்படி எழுதியிருந்தது. எவ்வளவு முயன்றும் என்ன காரியமாக வருகிறாள் என்ற விடயத்தை என்னால் ஊகிக்க முடியவில்லை. பொதுவாகவே எனது நிறுவனம் சம்பந்தப்பட்ட பணிகள் என்றால் நிச்சயம் எல்லா விடயங்களையும் துல்லியமாக எழுதிவிடுவது அவரின் வழக்கம். தொலைபேசி மூலம் விடயங்களை கேட்டறிவது அவருக்கு பிடிக்காத ஒன்று. அவருக்கு தமிழ் பேச முடியாதது ஒரு காரணம். எனக்கு சிங்களம் பேசப்பிடிக்காது என்பது இன்னொரு காரணம். ஆங்கிலத்தில் உரையாடுவது அவருக்குப் பிடிக்காது என்பது மேலதிகமான ஒரு காரணம்.

நான் அந்தப் பெண்ணின் பெயரை அடிக்கடி சொல்லிக்கொண்டேன்; “ஜெயந்தி.” 

இவ்வாறாக பல பெயர்கள் இருக்கின்றன. தமிழா, சிங்களமா என்று நேரில் பார்த்தாலன்றி ஊகிக்கமுடியாது. கமலி, பூஜா, பிரியதர்சினி என்று இதே வரிசையில் சேரக்கூடிய பல பெயர்கள் உண்டு.

‘ஜெயந்தி!’ எனக்கு இந்த பெயரை கண்டதும் அவளுடனான சந்திப்பு எப்போதும் நினைவிலிருக்கும்படியாக இருக்கும் என்று ஒரு விசித்திரமான எண்ணம் தோன்றியது. ஒன்றை மறந்துவிட்டேன்; மறக்கமுடியாததாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இனிமையாக இருக்கும் என்று நினைக்கவில்லை.

அப்போதெல்லாம் பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கும் விமானப்படையின் விமானங்கள் இலங்கையில் அதிக சம்பளம் வாங்கும் பிரமுகர்களை யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையில் காவிக்கொண்டு பயணித்துக்கொண்டிருந்தன. மாலை நாலுமணிக்கே நான் தயாராகி காரை எடுத்துக்கொண்டு விமானநிலையத்துக்கு சென்றுவிட்டேன். மிகக்கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகள், அடையாள உறுதிப்படுத்தல்களைத் தாண்டி என்னுடன் வேறு சிலரும் முன்னரே வந்து காத்திருந்தனர். மிக உயரமான கறுப்பு நிற நாய்கள் எங்களையும், வாகனங்களையும் முகர்ந்து பார்த்துவிட்டு எங்களை முறைத்தபடி உட்கார்ந்திருந்தன.

ஐந்து மணியளவில் கண்ணாடி அணிந்த பொதுநிறமான ஒரு பெண் என்னிடம் வந்து “நீங்கள்தான் என்னைக் கூட்டிச்செல்ல வந்தவரா?” என்று கேட்டாள். முன்பின் அறியாத ஒருவரை முதன் முதலில் சந்திக்கும்போது தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற நினைவு அவளுக்கு தோன்றியதாக தெரியவில்லை.

“நீங்கள்?”

“ஜயந்தி!”

“ஓம்! நல்லது நாம் போகலாம்.”

எங்களது அலுவலகம் ஆனைக்கோட்டையில் அமைந்திருந்தது. ஆனைக்கோட்டையிலேயே ஒரு நல்ல தரமான விடுதியை ஏற்பாடு செய்திருந்தேன். விடுதிக்கு போகும் வரை அவள் எனது கண்களை நேராக பார்த்துக் கதைப்பதை தவிர்த்தாள். நிச்சயம் வயது முப்பத்திரெண்டுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. நல்ல களையான, முக வெட்டு.

“எனக்கு அப்பா ஜெயந்தி என்றுதான் பெயர் வைத்தார். ஆனால் நான் ஜயந்தி என்றுதான் பாவிக்கின்றேன். ஏனென்றால் கொழும்பில் இதை கேட்டால் சிங்களம் என்றுதான் நினைப்பார்கள்.”

நான் கேட்காமலேயே, காரில் வந்துகொண்டிருந்தேபோது, நடுவில் என்னைப்பார்த்து கூறினாள். அப்போதும் அவள் சிரிக்கவில்லை.

இரண்டு நாட்களுக்குமுன்புதான் விடுதிக்கு தொலைபேசியில் பேசி முற்பதிவு செய்திருந்தேன். விடுதிக்குப்போய் மேலாளரை சந்தித்தபோது எனக்கு ஜயந்தியின் இரவுப்பொழுதுகள் குறித்து ஒருவித அவநம்பிக்கை ஏற்பட்டது. விடுதி மேலாளர் பணியென்பது ஒரு அரச உத்தியோகம் இல்லை என்று இதுவரை யாரும் அவருக்கு நினைவூட்டவில்லை. தடித்த பிரேம் போட்ட மூக்குக்கண்ணாடிக்குக்கீழாக வருபவர்களை மதிப்பீடு செய்தார். ஒரே ஒரு வினாடிமட்டும் முகத்தை பார்த்துவிட்டு குனிந்து வேகமாக பதிவுப்புத்தகத்தில் விவரங்களை எழுதத்தொடங்கினார்.

விடுதியில் தங்க வருபவர்களுக்கு தன்னை விட அறிவும் அனுபவமும் குறைவு என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். அவர்களுக்கு என்ன தேவைப்படும் என்பதுதொடர்பில் அவருக்கு மிகத்தெளிவான முன்முடிவுகள் இருந்தன. விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட தேவைகள் இருக்கும் என்பதில் அவருக்கு ஒருபோதும் நம்பிக்கை கிடையாது.

“நான் ஒரு பட்டயக்கணக்காளர்”

எனக்கு அந்த தகவல் தேவைப்படவில்லை. ஆனால் இதுதொடர்பில் அவருக்கு கவலை ஏதும் இல்லை.

“நான் சவூதியில் பத்து வருடங்கள் பணியாற்றிவிட்டு பின்னர் யாழ்ப்பாணம் வந்தேன்; கொழும்பில் எனக்கு இரண்டு வீடுகள் இருக்கின்றன.”

உலகின் மோசமான விடுதி முகாமையாளர்கள் சவூதியில் பட்டயக்கணக்காளர்களாக பணிபுரிந்திருப்பார்கள்.

அவர் எழுதி முடித்தபோது நான் ஜயந்தியிடம் சொல்லிக்கொள்ளாமலே விடைபெற்றேன்.

விடிந்தும் விடியாததுமாக எனக்கு தொலைபேசி அழைப்பு அவளிடமிருந்து வந்தது.

நான் விடுதியை அடைந்ததும் அவள் சொன்னாள்.

“உடனடியாக வேறு விடுதிக்கு நான் போயாக வேண்டும். உம்மைப் பற்றி கொழும்பில் புகாரளிக்கப்போகிறேன். எனக்கு மிகவும் மனஉளைச்சலாக இருக்கிறது.”

நான் நேற்று பயந்தது போலவே நடந்துவிட்டது. இரவில் வெகுநேரம் மின்வெட்டு இருந்தது. அந்த ஆணவம் பிடித்த, அதிக பிரசங்கித்தனமான முகாமையாளர் எந்த மாற்று ஏற்பாட்டையும் செய்யாமல் மெழுகுவர்த்தியை, அதுவும் அவள் வலிந்து கேட்டுக்கொண்டதன் பின்னரேயே அனுப்பியிருக்கிறான்.

யாழ்ப்பாணத்தில் அடிக்கடி நடக்கும் மின்வெட்டு குறித்த முகாமையாளரின் அலட்சியமான விளக்கங்களை அவள் காதுகொடுத்து கேட்க தயாராக இல்லை.

இவை எல்லாவற்றையும் விட மோசமானது வேறு ஒன்றும் நடந்திருக்கிறது. இரவில் மின்வெட்டு தொடர்பில் வாக்குவாதம் ஆரம்பித்தபோது முகாமையாளர் நடுவில் ஒரு வார்த்தையை கூறிவிட்டார். அதாவது

“நீங்கள் யாழ்ப்பாணத்தவர்கள், எனவே இவற்றை பெரிதுபடுத்தக்கூடாது. பொறுத்துக்கொண்டு போவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.”

ஆனால் ஜயந்தி இதைப் பொறுத்துக்கொள்வதாக இல்லை. ஜயந்திக்கு மின்வெட்டு கொடுத்த மனஉளைச்சலைவிட யாழ்பாணத்தவர்கள் என்ற முகாமையாளரின் பேச்சு அதிக கோபத்தை கிளப்பியிருந்தது அவள் பேச்சில் தெளிவாக தெரிந்தது.

“பனம்கொட்டை பொறுக்கிகள்” என்று கோபாவேசத்துடன் என்னிடம் முகாமையாளரைப்பற்றி சீறினாள்.

அங்கே வேலை செய்துகொண்டிருந்த இளம்பெடியன் என்னிடம் வந்து ரகசியமாக அடங்கிய குரலில் பேசினான்.

” இவா கொழும்பில் பிறந்து வளர்ந்தவரா அண்ணை?”

“ம்ம்….இல்லை. அவா யாழ்ப்பாணம்தான். ஆனால் பெரும்பாலும் கொழும்பிலே வளர்ந்தவர்தான். ஏன் கேட்கிறாய்?”

“இல்லை; இரவில் மின்சாரம் இல்லாமல் AC வேலை செய்யவில்லை. பெரிய பிரச்சினை குடுத்துக்கொண்டிருந்தா. இதெல்லாம் ரொம்பவும் ஓவர்.”

ஒருவழியாக இன்னொரு விடுதி ஒன்றை ஏற்பாடு செய்து முடித்தேன். அந்த விடுதி நல்லூர் கோவில் வீதியில் இருந்தது. மிக அழகிய முகப்புடன் கூடிய வீடு. உண்மையில் அது விடுதி அல்ல. ஒரு சாதாரண வீடுதான். அதை முன்பு ஐநா அலுவலகத்தில் பணியாற்றிய மோர்கன் என்பவர் வாங்கியிருந்தார். அவர் மீண்டும் இங்கிலாந்துக்கு செல்லும்போது தனது நீண்டகால உதவியாளருக்கு இலவசமாக கொடுத்த வீடு அது. அவரின் பெயராலேயே இப்போதும் அழைக்கப்படுகிறது. அதிகமான செலவும் இல்லை. ஒரு உதவியாளர் மட்டுமே எப்போதும் இருப்பார். முக்கியமாக பட்டயக்கணக்கியலில் பட்டம் பெற்ற முகாமையார்கள் எவரும் இல்லை.

பிரச்சினை இன்னும் முடிந்துவிடவில்லை. பயிற்சிப்பட்டறை நடைபெற்ற இடம் மிகவும் சுமாராக இருந்தது. மிகவும் பழசான ஒரு மின்விசிறி சத்தமிட்டபடியே இயங்கிக்கொண்டிருந்தது. அதனை ஜயந்தி அசையும் திசைக்கேற்ப பத்து நிமிடங்களுக்கொருமுறை நான் மாற்றி வைக்கவேண்டியிருந்தது.

“யாழ்ப்பாணத்தில் வெய்யில் மிக மோசமாக இருக்கிறது. இங்கே AC இல்லாமல் எப்பிடி சீவிக்கிறீர்கள்?”

“இங்கே ஒருவரும் AC பாவிக்கும் வழக்கம் இல்லை” என்று கூறினேன். சலிப்புடன் அவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

அடுத்த நாள் போயா விடுமுறை. ஆனைக்கோட்டையை சுற்றிப்பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். நான் மெதுவாக காரோட்டிக்கொண்டிருந்தேன். எனது வழக்கமான விசாரிப்புகளான, அம்மா, அப்பா, காதலன், திருமணம் என்பதுபற்றியெல்லாம் நான் வாய் திறக்கவில்லை. அதன் விபரீதங்களை ஒருவாறு முன்கூட்டியே ஊகித்துவிட்டிருந்தேன். என்றாலும் நான் ஊகித்த ஒரே விடயம் ஜெயந்திக்கு இன்னும் திருமணமாகவில்லை.

ஆனைக்கோட்டையின் ஒவ்வொரு பகுதிகளையும் சற்று வியப்புடன் கூடிய குதூகலத்துடன் பார்த்துக்கொண்டே வந்தாள். இடையிடையே தனது இளமைக்கால நினைவுகளையும் சொல்லிக்கொண்டிருந்தாள்.

“நான் படிக்கும்போது அடிபாடு மோசமாக இருந்தது. இருந்தாலும் நானும் பக்கத்துவீட்டு பிள்ளைகளும் சைக்கிளில் நீண்ட தூரம் சென்று பள்ளிக்கூடம் போய்வருவோம். அப்போதெல்லாம் இப்போதை விட எனக்கு தைரியம் அதிகம்.”

“நீங்கள் இங்கேயா படித்தீர்கள்?”

“ஓம்! இதே ஆனைக்கோட்டையில்தான், 0/L வரைக்கும்.”

தெருவோரம் புழுக்கொடியால் விற்றுக்கொண்டிருந்த கிழவியிடம் பேரம் பேசி நான் ஒரு கிலோ புழுக்கொடியல் வாங்கிக்கொண்டேன்.

“இப்போதெல்லாம், நான் இவற்றை அதிகம் சாப்பிடுவதில்லை.”

“பரவாயில்லை, தேவைப்படும்போது சாப்பிடுங்க” என்று சொல்லி அவள் கையில் திணித்தேன்.

“எங்கேயாவது, பாட்டு CD கடைகளில் நிறுத்துங்க. எனக்கு சில பாட்டுக்கள் வேணும்.”

ஆறுகால மடத்திலிருந்து ஒரு அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த ஒரு வீடியோ கடையில் நிறுத்தினேன். உள்ளே சென்றதும் தனக்கு தேவையான பாட்டுக்களை அவள் பட்டியலிடத்தொடங்கினாள். 

மிக அதிகளவான பாட்டுக்கள் தொண்ணூறுகளின் இடையிலும் இறுதியிலும் வந்தவை.  அவள் மிகவும் வேண்டி ரசித்த பாட்டு “வானம் எதுவரைக்கும் எதுவரைக்கும் வாழ்வை ரசிக்கவேண்டும் அதுவரைக்கும்.” ஆனால் அதன் பிரதி கிடைக்க நீண்ட நேரமாகிவிட்டது. மிகப்பழைய பாட்டு.

“நீங்களும் ஏதாவது பாட்டுக்கள் உங்களுக்கு தெரிவு செய்யுங்களேன்.”

நான் தெரிவுசெய்யத்தொடங்கினேன். பெரும்பாலும் இளையராஜா பாட்டுக்கள்; ஒரு சில ரகுமான் பாட்டுக்கள். நான் இறுதியாக ஒரு அழகிய பாடலைத் தெரிவு செய்தேன்.

“ஏண்டி கள்ளச்சி என்னை தெரியலையா?”

“என்ன நீங்கள் இந்த பாட்டை தெரிவு செய்கிறீர்கள்? சந்தேகமாக இருக்கே?” முதன்முதலாக அவளின் முகத்தில் கேலியுடன் கூடிய மலர்ந்த சிரிப்பு. எனக்கு அவளின் காதலை, திருமணத்தை பற்றிக்கேட்கவேண்டும் என்று அந்தக்கணத்தில் தோன்றியது. மிகுந்த கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

நீண்ட நேரம் அவளுடன் செலவழித்த பின்பு நான் ஒரு விடயத்தை கண்டறிந்தேன். ஜெயந்தி பேசுகின்ற தமிழ் சற்று கொழும்பும் கண்டியும் கலவையான பேச்சுவழக்கு. வேண்டுமென்றே பேசி திணித்து பழக்கப்படுத்திக்கொண்டது அது. தனது பேச்சில் யாழ்ப்பாணத்து வாடை இருக்கக்கூடாது என்ற அவளின் எண்ணத்தைப்புரிந்துகொள்ள எனக்கு நீண்ட நேரம் எடுக்கவில்லை.

02

மாலை நேரத்தில் கார் ஒரு பழைய பெரிய வீட்டின் முன்னால் நின்றது. நானும் ஜெயந்தியும் வீட்டின் உள்ளே போனோம். வீட்டின் உட்புறம் மிகவும் பழைய பொருட்கள், பழைய புகைப்படங்கள் மற்றும் பழைய கிழவி ஒருத்தியும் இருந்தனர். சுவர்களில் ஒட்டடைகள் தாராளமாக தொங்கிக்கொண்டிருந்தன. மிகவும் வயதான ஒரு கிழவி ஒரு பெரிய மரக்கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். ஜெயந்தியை கண்டதும் அவளின் கண்கள் உற்சாகத்தில் மின்னின. அவளது கட்டிலுக்கு கீழே ஒரு பருத்த பூனை. வெள்ளையும் கறுப்பு புள்ளிகளுடனும் இருந்த அது எங்களை கண்டதும் கிழவியின் கால்களை உரசியபடியே அடுப்பங்கரைக்குள் ஓடியது. கிழவியின் அருகிலிருந்த சிறிய நாற்காலியில் கொஞ்சம் பல்வேறு நிறத்தில் பூட்டுக்குளிசைகள், பழைய வெள்ளிச்சொம்பில் தண்ணீர், முடியும் தறுவாயிலிருந்த தலையிடிக்கு பாவிக்கும் சித்தாலேப்பை கிரீம் எல்லாம் இருந்தன. கிழவியின் பெரும்பாலான நேரம் கட்டிலிலேயேதான் செலவழிகிறது போலும். கட்டிலுக்குக்கீழே மீதமிருந்த கோப்பித்தண்ணீரில் வரிசையாக எறும்புகள் மொய்த்துக்கொண்டிருந்தன. கட்டிலின் தலைமாட்டில் ஒரு பழைய டார்ச் லைட் ஒன்றும் இருந்தது.

“இந்த பூனை இப்பிடித்தான்; புது ஆக்களைக்கண்டால் பிடிக்காது; ஆனா பாவம் என்ன விட்டுட்டு எங்கயுமே போகாது.” என்றாள் கிழவி.

ஜெயந்தியின் கைகளை பிடித்து நீண்ட நேரம் தடவிக்கொண்டிருந்தாள். ஜெயந்தியின் முகத்தில் பெரிதாக மாற்றங்கள் ஒன்றும் இல்லை. கிழவி “பிள்ளை, பிள்ளை” என்று முனகிக்கொண்டிருந்தாள். கிழவி ஜெயந்தியின் பேத்தியாக இருக்கவேண்டும் என்று ஊகித்துக்கொண்டேன்.

“ஆச்சி நீங்கள் இங்கே யாருடன் இருக்கிறீர்கள்?” இது நான்.

“நானும் இந்த பூனையும்தான் மோனை; கொஞ்சமாக சமைக்கிறதில இவனுக்கும் குடுப்பன்; ஏதும் அவசரம் எண்டால் பக்கத்தில இருக்கிற கவிதா ஏதும் உதவிக்கு வருவாள்; வேறென்ன வேணும்.” அவரது பேச்சில் தான் பெரிதாக சிரமப்படவில்லை என்ற பாவனை இருந்தது.

நாம் இருவரும் நீண்ட நேரம் அங்கே இருந்து தேநீர் அருந்திவிட்டு செக்கல் நேரம் தொடங்கியதும் புறப்பட்டோம். அப்போது பக்கத்துவீட்டு பெரிய மனிதர் அங்கே வந்து;

“இங்கே ஆச்சியுடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்துவிட்டு போங்கோ அம்மா” என்கிறார்.

“இல்லை, எனக்கு கொழும்பில் நிறைய வேலைகள் இருக்கின்றன. நான் செல்லவேண்டும்.” என்றாள்.

மூன்றாம் நாள் காலை நானும் ஜெயந்தியும் காரில் பத்திரிகை அலுவலகத்துக்கு சென்றோம்.  எமது நிறுவனத்தின் வேலைத்திட்டத்துக்கு பொருட்களை வழங்குவதற்கு வேண்டிய ஒப்பந்தங்களை பெற விளம்பரம் செய்யவேண்டியிருந்தது. படிவங்களை நிரப்பிவிட்டு ஜெயந்தியின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கேட்டார் பத்திரிகை ஊழியர். ஜெயந்தி சங்கடத்தால் நெளிந்தாள். என்னை தனது ஓரக்கண்களால் கவனித்தாள். எனக்கு மிகுந்த சங்கடமாகிவிட்டிருந்தது. உண்மையில் நான் உள்ளே வந்திருக்கவேண்டாம். இப்போது வேறு வழியில்லை. நான் அவளைக்கவனிக்காதவன் போல நேரே பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவள் எழுதப்போகும் அடையாள அட்டை எண்ணுக்காக ஆவலுடன் காத்திருந்தேன். எனக்குப்புரிந்துவிட்டது. அவளுக்கு வயது அதிகமாக இருக்க வேண்டும். அதை அவள் வெளிப்படுத்த விரும்பவில்லை. ஆனால் இப்போது வேறு வழியில்லை. முடிவில் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவளுக்கு நாற்பத்திரெண்டு வயது நிரம்பிவிட்டது. உண்மையிலேயே எனக்கு மிகுந்த அதிர்ச்சி. நான் எதையுமே காட்டிக்கொள்ளவில்லை. பார்ப்பவர்கள் நிச்சயம் முப்பத்திரெண்டுக்கு அதிகமாக சொல்லவே மாட்டார்கள். அவள் அடையாள அட்டை இலக்கத்தை வெளிப்படுத்த ஏன் இவ்வளவு தயங்கினாள் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. 

இவ்வளவு வயதான ஒருத்தி மிகுந்த சிரத்தை எடுத்து தனது ஆரோக்கியத்தை பேணிக்கொண்டிருக்கிறாள். எனக்கு அதன் பின்னர் அவள் மீது ஒருவித ஈர்ப்பு வந்துவிட்டது என்பதைப்புரிந்துகொண்டேன். அடுத்தநாள் மாலையில் கொழும்புக்கு பயணிக்க வேண்டும்.

“நீங்கள் என்னுடன் கொழும்புக்கு வந்து என்னை காரில் கொண்டுபோய் விட முடியுமா? எனக்கு இந்த யாழ்ப்பாண பஸ்காரங்களை கண்டாலே துப்பரவாக பிடிக்கவில்லை.” என்றாள். எனக்கு இங்கே சில வேலைகள் இருந்தாலும் அவளுக்கு கொழும்பு வரை காரோட்டிக்கொண்டு போவது உண்மையில் மனதுக்கு சந்தோசமாக இருந்தது. அதைவிட என்னைப்பற்றி கொழும்பில் புகாரளிப்பதை பெரும்பாலும் தவிர்க்கலாம் என்று எண்ணினேன். இப்போதைய சூழ்நிலையில் நான் இந்த வேலையை விட்டுவிட்டால் என்னால் வேறு வேலை தேடுவது மிகக்கடினம்.

இரவு உணவு உண்பதற்கு கிளிநொச்சியில் ஒரு அசைவ உணவகத்தில் நிறுத்தினேன். இருவருக்குமாக கோழிக்கொத்து இரண்டை அவள் வரவழைத்தாள். என்னிடம் எந்த தெரிவையும் அவள் கேட்கவில்லை என்பதை நான் கவனித்தேன். கொத்துரொட்டி எனக்கு மிகவும் பிடிக்கும் என்பது வேறு விடயம்.

ஆனால் பிரச்சனை வேறு ரூபத்தில் வந்து சேர்ந்தது. ஏறத்தாழ கடை மூடும் நேரம் அது. தயாரித்த கொத்துரொட்டியில் கொஞ்சம் தூக்கலாகவே உப்பை கொட்டியிருந்தான் கடைக்காரன். எனக்கு திகிலாக இருந்தது. என்னனென்ன விபரீதங்கள் நடக்கபோகுதோ என்று மிரண்டபடி;

“கொஞ்சம் உப்பு கூடப்போல;” என்று மெதுவாக அவளிடம் சொன்னேன். கடையை தெரிவு செய்தது நான் என்பதால் புகாரளிப்பதற்கு இன்னுமொரு காரணம் அவளுக்கு கிடைத்துவிட்டது. அவள் சிறிது நேரம் கோப்பையையே பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர் சற்று இள முறுவலுடன் “தங்களை என்றைக்கும் மறக்கக்கூடாது என்பதால் நிறைய கொட்டியிருக்கினம் போல” என்று கூறிவிட்டு வேகமாக உண்ணத்தொடங்கினாள்.

என்னால் நம்பவே முடியவில்லை. பொதுவாக எப்போதுமே எனக்கு அதிஷ்டம் துணைக்கு வருவதில்லை. இன்று இந்த அற்ப விடயத்தில் தகுந்த நேரத்துக்கு வந்து என்னைக்காப்பாற்றியது.

அவள் கொழும்புக்கு சென்றதும், இங்கே ஒருவாரமாக அவளைப்பற்றிய எண்ணங்களே என்னை ஆக்கிரமித்திருந்தன. அதன் பின்னர் அவள் சிலவேளைகளில் என்னிடம் தொலைபேசி வழியாகவும், மிக அதிகமாக மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பிலிருந்தாள். பொதுவாக கொழும்புக்கு வரும் ஊழியர்களை எமது சக ஊழியர்கள் தமது வீடுகளுக்கு அழைப்பார்கள். ஆனால் ஜெயந்தி வத்தளையில் இருப்பதாக மட்டுமே எனக்குச் சொல்லியிருந்தாள். ஆனால் என்னை மட்டுமல்ல வேறு எவரையுமே அவள் வீட்டுக்கு அழைத்ததாக எனக்குத்தெரியவில்லை. போனதடவைகூட ஆவலுடன் அவளை காரில் கொழும்புக்கு கூட்டிச்சென்றபோது வத்தளையில் அவள் இறங்கவில்லை. கொழும்பு தலைமை காரியாலயத்துக்கு என்னை அழைத்துப்போகச்சொன்னாள். அப்போதும் நான் எதுவுமே மறுப்பு சொல்லவில்லை. ஆனால் கொழும்பு தலைமை காரியாலயத்தில் நான் அவளை இறக்கிவிட்டதன் பின்னர் அவள் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்து வீட்டுக்குச்சென்றது எனக்கு மிகுந்த அவமானமாக இருந்தது. துரதிஷ்டவசமாக, அவள் தொழில் நிமித்தம் யாழ்ப்பாணம் பயணிக்க வேண்டியிருந்த காலத்தில், நிலைமைகள் சீராகி கொழும்பு யாழ்ப்பாணம் இடையே சிறந்த புகையிரதப்போக்குவரத்து உருவான காலப்பகுதியிலும் மிகுந்த பணச்செலவில் விமானப்பயணங்களை மேற்கொண்டாள். மிக உயர்தரமான நட்சத்திர விடுதிகளில் தங்கினாள். அந்த விடுதிகள் பட்டயக்கணக்கியலில் பட்டம் பெறாத, சவூதியில் பணி புரிந்திராத, தொழில்முறை சிங்கள ஹோட்டல் நிர்வாகிகளாலும், சிங்கள சிற்றூழியர்களாலும் இயக்கப்படுபவை. அங்கு யாரும் அவளை யாழ்ப்பாணத்தார் என்று அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் என்னோடு அரிதாக தனது தேவை நிமித்தம் தொடர்புகொள்ளும் நேரங்களில் என்னை பனம் கொட்டை என்று வர்ணிக்க அவள் தயங்குவதில்லை.

அவளுக்கு நான் மிகவும் பயனுள்ள, அவளது அந்தரங்க விடயங்களை துருவித்துருவி கேட்காத, வானத்து நட்சத்திரங்களை கேட்டாலும் எல்லா அவமானங்களையும், பணக்கஷ்டங்களையும்   சகித்துக்கொண்டு அவளிடம் கொண்டு வந்து சேர்க்கக்கூடிய, அவளுடன் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் உரையாடி பொழுதுபோக்கக்கூடிய, புத்திசாலியான ஒரு பனம்கொட்டை. 

03

நான் பணியாற்றிய அந்த கொழும்பு நிறுவனத்திலிருந்து வெளியேறியபோதும்கூட ஜெயந்தி அங்கேதான் பணிபுரிந்துகொண்டிருந்தாள். நான் எனது ஆவணங்களை அலுவலகத்தில் ஒப்படைத்தபோது இவள்தான் வந்து பெற்றுக்கொண்டாள்.

“எப்போது வேலையை ராஜினாமா செய்வதாக எழுதியிருக்கிறீர்கள்?”

“இந்த மாதம் இறுதியில்”

“எல்லா ஆவணங்களையும் சரிபார்த்து பட்டியல் இட்டிருக்கிறீர்களா?”

“ஓம்! எல்லாம் இதிலே இருக்கிறது”

“உங்கள் சம்பளபாக்கியை வரும் கிழமைகளில் வந்து பெறுக்கொள்ளலாம்.”

“சரி”

“வேறு ஏதாவது கதைக்கவேண்டுமென்றால் நிர்வாகப்பிரிவில் பேசுங்கள்”

“சரி”

இவ்வளவுதான்;

பணிக்கு சேரும்போது நான் Elbert Hubbard எழுதிய A Message to Garcia எனும் கட்டுரையை வாசித்து அதனால் ஈர்க்கப்பட்டவன். அதனாலேயே ஐந்து ஆண்டுகள் எனது உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்து நிறுவனத்தின் கடமைகளை நிறைவேற்றியவன். ஆனால் எனது இருப்பு எனது முன்னாள் நிறுவனத்தில் எனக்கு மிகவும் நெருக்கமான பெண்ணுடன் மிக மோசமான, இயந்திரத்தனமான ஒரு சம்பாஷணையுடன் முடிவுக்கு வந்தது. உடனடியாக அலுவலகத்தை விட்டு வெளியேறிவிட்டேன்.

புதிய பணிகள், புதிய நண்பர்கள், புதிய இடங்கள், புதிய சில நாடுகள் என்று கடந்த எட்டு ஆண்டுகள் விரைவாக ஓடிவிட்டன. அண்மையில் ஜெயந்தி அந்த அலுவலகத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும் அதன் நிதிநிலைமை மிக மோசமாக இருப்பதாகவும் எனக்கு செய்தி கிடைத்தது. பத்தாயிரம் ரூபாவை சம்பளமாக பெற்றுக்கொண்டு பத்துலட்சம் ரூபாவுக்கு வேலைசெய்யக்கூடிய புத்திசாலியான பனம் கொட்டைகள் நிறுவனத்தில் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம்.

கடந்த வருடங்களில் ஜெயந்தியை தொடர்புகொள்ள நான் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. Facebook, Twitter வழியாக மிக நீண்ட தேடல்களை நிகழ்த்தினேன். எதுவும் அவளைப்பற்றிய தகவல்களை தரவில்லை. பின்னர் அந்தப் பயனற்ற முயற்சிகளை கைவிட்டேன்.

தற்போது எனக்கு இறுதியாக அவள் ஆஸ்திரேலியாவில் இருப்பது மட்டுமே தெரியவந்தது. அவளின் தாய் தகப்பனுடன் இருக்கிறாளாம். எனக்கு ஆனைக்கோட்டையில் பழைய வீட்டில் பார்த்த கிழவியின் முகம் நினைவுக்கு வந்தது. இப்போது அந்த கிழவியுடன் அந்த கருப்பு- வெள்ளை பூனை மட்டுமே உடனிருக்கும்.

04

கொரோனா காலத்தின் ஊரடங்கு வேளையில் எந்தவித பணிகளும் இல்லாமல் வீட்டில் முடங்கியிருந்தேன். முதல் வார ஊரடங்கின்போது இரவு ஒரு மணியளவில் இணையத்தில் உலவிக்கொண்டிருந்தபோது எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. தற்செயலாகத்தான் ripbook.com பக்கம் போனேன். ஆனாலும் இந்த நெருக்கடி காலங்களில் நமது மனம் நாம் அறியாமலேயே இத்தகைய தளங்களுக்குள் சென்றுவிடுகிறது.

“ஜெயந்தி சுப்ரமணியம்- வயது 50, ஆனைக்கோட்டை, சிட்னி” என்ற எழுத்துக்கள் ஓரத்தில் மின்னின. கூடவே அவளது அழகான புகைப்படம், அவளின் ரேட் மார்க் கண்ணாடியுடன். வாய் நிறையப் புன்னகை; என்றுமே நான் அவளிடம் இந்த புன்னகையைக் கண்டதில்லை. தொடர்புகளுக்கு யாரோ ஒரு தூரத்து உறவினரின் எண்ணைக் கொடுத்திருந்தார்கள். எனக்கு எவருடனும் கதைக்க வேண்டுமென்று தோன்றவில்லை. எவருடன் எதைக்கதைப்பது?

அன்றிரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை. உண்மையில் அவளுடைய தொடர்புகளை நான் தானாக துண்டிக்கவில்லை. தேவை இல்லாமல் ஒருத்தியைப்பற்றிக் கவலைப்படுகின்றேனா என்றும் தோன்றியது. மனதின் விசித்திரங்கள் சொல்லி மாளாதவை. தனெக்கென தெளிவான பார்வையும், தனியான தெரிவுகளும் கொண்ட ஒருத்தியின் வாழ்வு இந்த திடீர் கொரோனாவால்தான் முடியவேண்டுமா? எனக்கு இரண்டு நாட்கள் வேறு வேலைகள் எதுவும் ஓடவில்லை.

போன வாரம்தான் மின்னஞ்சலில் இருக்கும் Spam மெயில்களை ஒவ்வொன்றாக பார்வையிட்டு அகற்றிக்கொண்டிருந்தேன். இதற்கெல்லாம் ஒரு அசாத்தியமான பொறுமை வேண்டும். அத்துடன் நேரமும் இருக்கவேண்டும். அவற்றில் ஒன்று எனக்கு மீண்டும் எதிர்பாராத அதிர்ச்சியை அளித்தது. கொரோனா Lock down தொடங்குவதற்கு இரண்டுநாட்களுக்கு முன்னர்தான் அது எழுதப்பட்டிருந்தது.

“என் இனிய பனம் கொட்டையே!” என்று தமிழில் தொடங்கிய அந்த மின்னஞ்சல் ஜெயந்தியிடமிருந்து வந்திருந்தது.

இந்த கடிதம் நான் எழுதும் கடைசி கடிதமாக இருக்கலாம். அத்துடன் இது நான் பள்ளி நாட்களுக்கு பிறகு எழுதும் தமிழ்க்கடிதமும் கூட. இதிலிருக்கும் பிழைகளை, குறைகளை நீ நன்கு பொறுத்துக்கொள்வாய் என்று எனக்குத்தெரியும். கடந்த ஒரு வருடங்களாக நிணநீர் முடிச்சுக்களில் வந்த புற்றுநோய் என்னை வாட்டி வருகிறது. நமது வாழ்க்கையில் எதற்கும் காரண காரியங்கள் தெரிவதில்லை. எனக்குச்சொந்தமான சகல சொத்துக்களையும் சிட்னியில் விற்றுவிட்டேன். முழுப்பணத்தையும் உன் பெயருக்கு எழுதி பின் தேதியிட்டு காசோலையை நமது கஸ்தூரியிடம் கொடுத்துவிட்டுள்ளேன். இந்த பணம் முழுவதும் ஆனைக்கோட்டையில் இருக்கும் அந்த நலிந்த வயோதிபர் இல்லத்துக்கும், எனது பாடசாலைக்கு அருகில் உள்ள பழைய வாசகசாலைக்கும் சேரவேண்டும். அது தொடர்பான ஆவணங்களையும் அனுப்பி வைத்திருக்கிறேன். ஆனைக்கோட்டைக்கும் எனக்கும் இனி எந்த பந்தமும் சாத்தியமாகாது என்பதை நான் அறிவேன். இவற்றை சரியாக நிறைவேற்ற எனக்கு என் பனம் கொட்டையைத்தவிர வேறு யார் இருக்கிறார்கள்.

My dear Sugu, பனம்கொட்டைகளில் நிறைய பழுதுபட்டவை இருக்கின்றன. ஆனால் நல்ல பனம்கொட்டைகள் மிகவும் அற்புதமானவை. தனித்துவமானவை. ஒரு தனித்துவமான பனம்கொட்டையாய் இருப்பது என்பது மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டது. ஏன் அது ஒரு அரசமரத்தைவிடவும் எப்போதும் தனித்துவமானதும் மேலானதும்க என்பதை நீ உனது வாழ்நாள் முழுவதும் மறக்கக்கூடாது. ஆனால் பனம் கொட்டைகள் எப்போதும் அதற்குரிய மண்ணில் மட்டுமே சிறப்பாக வளர்கின்றன. நீ நிச்சயமாக உனது வாழ்நாளில் என்னை மறக்கமாட்டாய் என்று எனக்குத்தெரியும்.

தூரதிஷ்டவசமாக அவள் இறந்துபோனபின்தான் இந்த கடிதம் எனக்குத் தெரியவந்திருக்கிறது. வெகுகாலத்துக்குப்பிறகு இரவு வெகுநேரம் படுக்கையில் கண்ணீர் விட்டு அழுதேன். அத்துடன் ஒரு கேள்வி நீண்ட நேரமாக மனதைத் துளைத்துக்கொண்டிருந்தது.

 “ஏன் அவள் திருமணமே செய்துகொள்ளவில்லை?”

இதற்கு இனி பதில் கிடைக்கப்போவதில்லை. இது ஒரு எளிய பனம் கொட்டையின் மிக அற்பமான சந்தேகம்தான். பரவாயில்லை, பழுதற்ற பனம் கொட்டைகள் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவை.         

 —முடிந்தது—

Series Navigationதி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)விஷ்ணு சித்தரின் விண்ணப்பம் (அப்போதைக்கு இப்போதே)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *