பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! இரட்டைப் பரிதிகளைச் சுற்றும் வியப்பான ஓர் அண்டக் கோள் கண்டுபிடிப்பு. (கட்டுரை : 75)

This entry is part 7 of 41 in the series 25 செப்டம்பர் 2011

(Discovery of A Planet Orbiting Two Suns)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

 

ஒற்றைப் பரிதியைச்
சுற்றிவரும் நமது
பண்டைக் கோள்கள் !
விண்வெளியில் இப்போது
இரட்டைப் பரிதிகள் சுற்றும்
சுற்றுக்கோள் ஒன்றைக்
கண்டு பிடித்தார்
அண்ட வெளியில் !
சுற்றுக் கோளின் மாலை
அந்திப் பொழுதில் இரு பரிதிகள்
அடுத்தடுத்து அத்த மிக்கும்
விந்தை நிகழும்
தொடு வானிலே !
நேற்று
நியூட்ரான் விண்மீனைச்
சுற்றி வரும்
வைரக்கோள் ஒன்றைக்
கண்டு பிடித்தார் !
புதுவிதக் கோள்களைத் தேடிப்
போகும் நாசா கெப்ளர்
விண்ணோக்கி !
கண்ணுக்குத் தெரியாமல்
வேற்று முறையில் விந்தைக் கோள்கள்
விளையாடிக் கொண்டி ருக்கும்
நூற்றுக் கணக்கில் !

 

 

“இந்த இரட்டைப் பரிதிச் சுற்றுக்கோள் அமைப்பாடு மிக்கக் கவர்ச்சி ஊட்டுவது !  இரண்டு பரிதிகள் குறுக்கிடும் கோள் ஆக மூன்று அகிலக் கோளங்கள் ஒன்றை ஒன்று மறைத்து வருவது (Solar Eclipses) விண்வெளியில் மகத்தான காட்சி !”

லாரென்ஸ் டாயில் (அகிலவெளி விண்மீன் உயிரியல் ஆய்வக விஞ்ஞானி)  

“கெப்ளர் விண்ணோக்கியின் உன்னத துல்லிய கணிப்பு இது.  இதில் மெய்யான புல்லரிப்பு ஊட்டுவது எங்களுக்கு : இரட்டைப் பரிதிகளை ஓர் அண்டக்கோள் சுற்றி வருவது !”

அலன் பாஸ் (கார்னகி விஞ்ஞானக் கழகம், வாஷிங்டன். டி.சி.)

“இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், உயிரினச் சின்னங்கள் இருப்பையும் கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.”

ரே ஜெயவர்த்தனா (Ray Jayawardhana, Associate Professor of Astronomy, University of Toronto) (2007)

“பூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்].  அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது.  அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது.  அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந்திருக்கலாம்.”

ஸ்டெஃபினி உட்றி [Stephane Udry, Geneva Observatory]

“அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம்.  இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”

டாக்டர் சார்லஸ் பீச்மென் [Dr. Charles Beichman, Director Caltech’s Michelson Science Center]

“பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம்.  ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா?  அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன?  அந்த வாயுக் கலவையில் நீர்மை ஆவி [Water Vapour] உள்ளதா ?  அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள் ளனவா?  நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”

டாக்டர் விக்டோரியா மீடோஸ் [Member, Terrestrial Planet Finder, NASA]

“தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது !  சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) எனப்படும் விண்மீனைச் சுற்றி வருகிறது !  மிக்க மகத்தானது ! ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது ! எல்லாவற்றுக்கும் உன்னதமான ஒரு கோள் இனிமேல்தான் தெரியப் போகிறது !”

மிசியோ காக்கு (Michio Kaku, Professor Theoretical Physicist, City College of New York) (2007)

இரண்டு சூரியன்களைச் சுற்றிவரும் ஓர் அண்டக்கோள் கண்டுபிடிப்பு

2011 செப்டம்பர் 15 ஆம் தேதி நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி வானியல் குழுவினர் முதன் முறை யாக இரு பரிதிகளைச் சுற்றிவரும் ஒரு கோளைக் கண்டிருப்பதை மெய்ப்பித்து விட்டதாக அறிவித்தார்.  கெப்ளர் விண்ணோக்கி நோக்கிய அந்தக் விந்தைக் கோளின் பெயர் : கெப்ளர் -16பி (Kepler -16b).  அந்தப் புதிய கோள் நமது பூமியிலிருந்து 220 ஒளியாண்டு தூரத்தில் இருப்பதாகத் தெரிகிறது.  பெரிய பரிதி ஒன்றை மையமாய் வைத்துச் சுற்றும் ஒரு சிறிய பரிதியின் ஏற்பாடு இது.  இவை “இரண்டை விண்மீன்கள்” (Binary Stars) வகுப்பு வகையைச் சேர்ந்தவை.  இந்த இரட்டை விண்மீன் களைச் சுற்றிவரும் கோளுக்கு “இரட்டைப் பரிதிச் சுற்றுக்கோள்” (Circumbinary Planet) என்று பெயர் அளிக்கப் பட்டுள்ளது,  அதாவது கெப்ளர் -16பி இன் அந்திவானில் மாலைப் பொழுது மங்கி மறையும் போது இரு பரிதிகள் அடுத்தடுத்து அத்தமிக்கும் விந்தை நிகழும் !

 

நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி விண்வெளியில் 2009 இல் ஏவப்பட்டது.  அதன் முக்கியக் குறிக்கோள் நமது பால்வீதி ஒளிமந்தையில் ஒளிந்து கொண்டுள்ள பூமியைப் போன்ற கோள்களைக் கண்டுபிடிப்பது.  கெப்ளர் -16பி சுற்றிவரும் பரிதிகளில் பெரியது நமது சூரியன் போல் ஒப்பளவில் 69% பரிமாணம் உடையது.  சிறிய பரிதி நமது சூரியன் போல் ஒப்பளவில் 20% பரிமாணம் உடையது.  கெப்ளர் -16பி சுற்றுகோளின் தள உஷ்ணம் : (-73C முதல் -101C வரை) (-100F முதல் -150F வரை).  இரட்டைப் பரிதிகளை ஒருமுறை சுற்ற கோளுக்கு 229 புவிநாட்கள் (Earth days) எடுப்பதைக் கெப்ளர் கணித்தது.  மையப் பரிதியிலிருந்து சுற்றும் தொலைத் தூரம் சுமார் 65 மில்லியன் மைல் (104 மில்லியன் கி.மீடர்).  அந்தத் தூரம் நமது பரிதியை வெள்ளிக் கோள் (Venus) சுற்றும் தூரத்துக்கு நிகரானது.

 

கெப்ளர் விண்ணோக்கிச் சுற்றுக்கோளை எப்படிக் கண்டுபிடித்தது ?

விண்வெளியில் மின்னும் ஒரு பரிதிக்கும் கெப்ளர் விண்ணோக்கிக்கும் இடையில் ஓர் அண்டக்கோள் குறுக்கிடும் போது சீராக ஒளி மங்கியும் பிறகு பொங்கியும் திரும்பத் திரும்ப வருவதால் பரிதிக்கு அருகில் கோளின் நகர்ச்சி நிச்சயமாகிறது.  இந்தக் கண்டுபிடிப்பில் ஒரு பரிதி அடுத்த பரிதியைக் குறுக்கிடும் போதும் ஒளி மங்குவதும் மீள்வதும் காணப்பட்டது.  மாற்றி மாற்றி இரண்டு பரிதிகளின் ஒளியும் ஓர் ஒழுங்குக் கால நேரத்தில் மங்கலானதை நாசா விஞ்ஞானிகள் கண்டனர்.  இரட்டைப் பரிதிகளின் சுற்றையும், குறுக்கிடும் கோளின் இருப்பையும் விஞ்ஞானிகள் நிரூபித்தார்.  கெப்ளர் விண்ணோக்கி இந்தப் புதிய கண்டுபிடிப்பை நோக்கியது மட்டும் இல்லாமல் பரிதிகளின் நிறை, ஆரம், பாதை, சுற்றும் காலம் ஆகியவற்றையும், கோளின் நிறை, ஆரம், சுற்றுக் காலத்தையும் துல்லியமாகக் கணித்தது.  மையப் பரிதிச் சுற்றும் சிறிய பரிதி “செங்குள்ளி” (Red Dwarf) இனத்தைச் சேர்ந்தது. விண்மீன்  கூட்டத்தில் செங்குள்ளி தளர்ச்சியுற்று மங்கிப் போன ஒரு சிறு விண்மீன் !

 

நாசா கெப்ளர் விண்ணோக்கியை ஏவியிருப்பதின் முக்கியக் குறிக்கோள் பூமியைப் போன்ற நீர்க்கோள்கள் பிரபஞ்ச வெளியில் வேறு சூரியன்களைச் சுற்றி வருகின்றனவா என்பதைக் காண்பதற்கே.  இதுவரை (2011 செப்டம்பர் 19) விண்ணோக்கி 150,000 விண்மீன்களின் ஒளித் திணிவை உற்று நோக்கி வந்துள்ளது.  விண்மீன் ஒளித் திணிவில் ஒளிமங்கல், ஒளிமீட்சி நிகழ்ந்து சுற்றுக்கோள் ஒன்று குறுக்கிடுகிறதா வென்று கெப்ளர் விண்ணோக்கி சோதிக்கிறது.  இதுவரை 563 சூரிய ஏற்பாட்டில் ஒற்றைப் பரிதியைச் சுற்றும் 685 அண்டவெளிக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன !

தகவல் :

Picture Credit : NASA Space Center

1.  Astronomy Today Chaisson & McMillan (1999)

2.  Reader’s Digest – The Universe & How We See It  By : Giles Sparrow (2001)

3.  Universe By : Roger Freedman & William Kaifmann III (6th Edition) (2002)

4.  Lightnet :  Planet Orbiting Two Suns ?  (November 5, 1999)

5.  Space Daily : Latest Exoplanet Haul Includes Super Earth At Habitat Zone Edge, Geneva Austria (September 13, 2011)

6.  UCSB Scientist Contributes to First Discovery of a Planet orbiting Two Suns (University of California Santa Barbara) (September 16, 2011)

7.  BBC News : NASA’s Kepler Telescope Finds Planet Orbiting Two Suns (September 15, 2011)

8  Los Angeles Times :  Scientists Find Planet Orbiting Two Suns Like in “Star Wars” (September 16, 2011)
9.  Wikipedia :  Extrasolar planets (September 19, 2011)

10.  Space Daily :  Astronomers Confirm First Planet orbiting Two Suns (September 19, 2011)

11  Wikipedia : http://en.wikipedia.org/wiki/Kepler-16b Kepler-16b Planet (September 19, 2011)

12.  Wikipedia : http://en.wikipedia.org/wiki/Circumbinary_planet (September 19, 2011)

++++++++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) (September 20, 2011)

http://jayabarathan.wordpress.com/

Series NavigationNandu 1 – அல்லிக் கோட்டைஎனது இலக்கிய அனுபவங்கள் – 17 எழுத்தாளர் சந்திப்பு – 4. (மௌனி)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *