ஒரு கதை ஒரு கருத்து – சா கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள் -2

author
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 7 in the series 20 பெப்ருவரி 2022

 

அழகியசிங்கர்

 

கவிதைக்கு அடுத்ததாகச் சிறுகதைத் தொகுப்பு விற்பதில்லை.  நாவல்களும், கட்டுரைகள்தான் விற்கின்றன. 

சா.கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள் கடைசியாக அவர் செய்த முயற்சி என்று தோன்றுகிறது.  புத்தகம் வருவதற்கு முன்னால் அவர் மரணம் நிகழ்ந்து விட்டது.  அவர் எல்லாவற்றையும் முடித்துக் கொடுத்திருக்கிறார். 

கிட்டத்தட்ட 30 கதைகள்.  அ.மாதவையா வின் ‘வரன்’ தேடும் அனுபவத்திலிருந்து’ அண்டனூர் சுரா வரை.

ஒரு எழுத்தாளர் முகநூலில் இப்புத்தகம் பற்றிக் குறிப்பிடும்போது பக்கத்துக்குப் பக்கம் தப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.  இப்படிச் சொல்லும்போது ஒரு விஷயத்தை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.  புத்தகத்தின் மற்ற தன்மைகளைப் பற்றி ஏன் குறிப்பிட வில்லை.

சா கந்தசாமி அவருடைய முன்னுரையில்,  ‘எழுதப்பட்ட ஒரு கதையைப் பற்றி விமர்சனம் மட்டுமில்லை.  கதையை எழுதிய கதாசிரியர் கூட அப்படியே திருப்பிச் சொல்லி  விட முடியாது என்பது இலக்கியத்தின் அரிச்சுவடி.  எனவே தான் ஒவ்வொரு வாசகனும் தானே படித்து கதைகளில் சொல்லப்பட்டதையும் சொல்லப்படாத அம்சத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்.’

இந்தத் தொகுப்பில் க.நா.சு வின் கதையான ‘பாதஸரம்’ என்ற கதையும், சி. என் அண்ணாதுரையின் ‘நாடோடி’ என்ற கதையும் இருக்கிறது.

கல்கி எழுதிய காலத்தில் எழுதிய இன்னொரு எழுத்தாளர் சி.என. அண்ணாதுரை என்று இயற்பெயர் கொண்ட அண்ணா.  அவர் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் எழுதினார்.  ஏராளமாக அரசியல் கட்டுரைகள் எழுதினார். அவரும் அவரைச் சார்த்தவர்களும் அதிகாரம்,மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பணம் கொடுத்த மிராசுதாரரர்களுக்கு எதிராக எழுதினார்கள். அவை கலைப் படைப்பாக இல்லை.  அழகியல் இல்லை என்று க.நா.சுப்பிரமணியம் உட்பட சில விமர்சகர்கள் கருதினார்கள் என்று கூறிய சா.க. ‘க.நா.சு கதையையும், சி.என் அண்ணாதுரை’ கதையும் ஒன்றாக இத் தொகுப்பில் சேர்த்ததைக் கவனிக்க வேண்டிய ஒன்று.

1954 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதெமி வெளியிட்ட ‘தமிழ்ச்சிறுகதைகள்’ என்று சிதம்பரநாத செட்டியார், அண்ணாதுரை உட்படத் திராவிட சிந்தனையின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதைகள் கலைத் தூய்மைக் கொண்டு இருக்கவில்லை என்று ஒதுக்கிவிட்டார்.  இதை முன்னுரையில் சா.க கூறி உள்ளார். 

சா.க இந்தத் தொகுப்பில் அண்ணாதுரை கதையைச் சேர்த்தது அத் தொகுப்பிற்குப் பதிலடி கொடுத்ததாக இருக்கும்.

சி.என்.அண்ணாதுரை கதையையும், க.நா.சுப்பிரமணியம்  கதையையும் பார்ப்போம்.

‘நாடோடி’ என்ற சி.என் அண்ணாதுரை கதையில்  எஜமானர் எம்பெருமான் பிள்ளை மான் அண்டு கோ விற்கு சொந்தக்காரர். தோட்டக்காரர் அவருடைய அப்பாவிற்கு நெருங்கிய சினேகிதர். 

எம்பெருமான் பிள்ளை தோட்டக்காரரிடம் அவர் பிள்ளையைப் பற்றி விசாரிக்கிறார்.  அவருடைய பையன் ஒரு இடத்தில் தங்காமல் ஊர் ஊராகச் சுற்றுகிறான். எந்த இடத்தில் தங்கி ஒரு வேலை பார்க்கும் எண்ணம் இல்லை.  இதை நாடோடி என்று கிண்டல் செய்கிறார்  எம்பெருமாள் பிள்ளை.

எம்பெருமாள் பிள்ளைக்கு வேறு பல வியாபாரக் கம்பெனிகளில் தொடர்பு உண்டு.  அதில் நடக்கும் ஒரு கமிட்டிக் கூட்டத்தில் கம்பெனி மானேஜரைப் பற்றி புகார்களை விசாரிக்கிறார்.  பொறுமை இல்லாமல் எந்த ஊருக்கும் போகாமல் சரக்கு வாங்காமல் இருக்கிறான் மானேஜர் . இதனால் அவன் மீது கோபப்பட்டு அவனை நீக்கி விடுகிறார். 

அவனை ‘நாடோடி மாதிரி சுற்றினால்தான் காரியம் நடக்கும்’ என்கிறார்.  

அண்ணாதுரை இந்தக் கதையின் கடைசியில் இரயில் பயணத்தைக் கொண்டு வருகிறார்.  

மலபார் மெயிலிலிருந்து  எம்பெருமான் பிள்ளை இறங்கி பிளாட்பாரத்தில் உலாவிக் கொண்டிருக்கிறார்.  பெங்களூர் வண்டியிலிருந்து, எம்பெருமாளின் நண்பர், கம்பெனி டைரக்டர் ஒருவர் சம்பந்தம் பிள்ளை இறங்கி வந்தார்.  

இருவரும் ஒவ்வொரு இடம் ரயிலில்  போகிறார்கள். பேசிக்கொள்கிறார்கள். 

“கோயமூத்துரிலே காலையிலே கொஞ்சம் வேலையைப் பார்க்கணும் மத்யானமா பாலக்காடு போகலாம்னு இருக்கிறேன்” என்கிறார் எம்பெருமான் பிள்ளை.

இரயில்கள் புறப்பட்டு விட்டன.  இரண்டாம் வகுப்பிலே சம்பந்தம், ‘அப்பா! பயல் பணத்துக்குப் பிசாசாக அலைகிறான். என்று எண்ணிக்கொண்டு படுத்தார்.  எம்பெருமான், ‘சம்பந்தம் சுற்றுவதற்குச் சளைப்பதில்லை பணம் எங்குக் கிடைக்குமோ என்று மோப்பம் பிடித்துக்கொண்டு அலைகிறான்’ என்று நினைக்கிறார்.

இருநண்பர்களும் ஒரே சிந்தனை உடையவர்களாக இருக்கிறார்கள். 

முத்தாய்ப்பாக முடிக்கும்போது தோட்டக்கார பையன் மருதாச்சலம் சிதம்பரம் சந்திரா டாக்கீசில், டீ கடையில், அரைத்தூக்கத்தோடு உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.  உள்ளே மாய உலகு என்ற தமிழ்ப்பட காட்சி நடந்து கொண்டிருந்தது.

இந்தக் கதையில் நமக்குத் தெரிய வருவது.  கம்பெனி முதலாளிகள் பணத்துக்காக அலைகிறார்கள்.  எம்பெருமாள் பிள்ளை தோட்டக்காரன் புதல்வனை  நாடோடி மாதிரி சுற்றுகிறான் என்று கூறி கிண்டல் செய்கிறார். தன் கம்பெனியில் பணிபுரியும் மானேஜரை நாடோடி மாதிரி சுற்றி வேலைப் பார்க்கணும் என்று கூறி வேலையைவிட்டு எடுத்து விடுகிறார். ஆளுக்குத் தகுந்த மாதிரி பேசித் திரியும் எம்பெருமாள் பிள்ளைக்குப் பணம் சம்பாதிப்பதுதான் ஒரே குறிக்கோள்.

‘பாத ஸரம்’ என்கிற க.நா.சுப்பிரமணியம் கதை ஒரு வித்தியாசமான கதை.  தன்னை முதன்மைப் படுத்தி எழுதுவதில் முக்கியமானவர் க.நா.சு.  இவரைத் தொடர்ந்து பலர் இன்றும் எழுதி வருகிறார்கள்.

 எஸ். ராமகிருஷ்ணன் தன்னை முதன்மையாக வைத்துக்கொண்டு எழுதுவதைத் தவிர்ப்பவர். கதைகளில் சுய சரிதம் கலப்பதை விரும்பாதவர்.  

தன்னையே மையப்படுத்திக் கதை எழுதினாலும் கதையைச் சிறப்பாகக் கொண்டு போக விரும்புவார் க.நா.சு.  அவருடைய பாதஸரம் கதையில் ஒரு ரயில் சிதம்பரத்திலிருந்து கிளம்பி ஊருக்குப் போகிறார்கள்.  க.நா.சு, அவருடைய மனைவி ராஜீ, அவர்கள் புதல்வி பாப்பா. கூட்டம் அதிகமாக இருக்கும் இந்த வண்டியில் ஏன் ஏறினோம் என்று அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். க.நா.சு சமாதானம் சொல்கிறார்.  

மாயவரத்தில் இறங்கி வேற வண்டியில் போகப் போகிறோம் என்று.

சுயசரித பாணியில் இந்தக் கதை நகர்கிறது.  தன்னை உதாரணமாக  வைத்துக்கொண்டு கதை எழுதினாலும், ரயில் கதை என்கிறபோது, வேடிக்கை பார்ப்பதுதான் முக்கியமான அம்சம். நகுலனும் திருவானந்தபுரத்திலிருந்து சென்னை வருவதை ஒரு ரயில் கதை எழுதியிருப்பார்.

இந்த அம்சத்தை முக்கியப் பங்காகக் கொண்டு வருகிறார். இந்த இடத்தில் அந்த வண்டியில் ஒரு காலேஜ் பெண் ஏறுகிறாள்.  எல்லோருடைய கவனமும் அவள் மீது படர்ந்து இருக்கிறது.

அவர் மனைவியைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.  காலேஜ் பெண்கள் என்கிற ஜாதியையே பார்க்காதவள்போல் அவள் பார்த்துக் கொண்டு உட்கார்ந்த எனக்குப் பிடிக்கவில்லை என்கிறார் க.நா.சு. 

“அவாத்து சரோஜா மாதிரி இருக்காப்பா” என்றாள் பாப்பா உரத்த குரலில்.

இங்கே க.நா.சு, ‘அம்மாவுக்குப் பெண் மாதிரிதானே’ என்றார் க.நா.சு. 

அந்தக் கல்லூரி பெண் உட்கார்ந்திருக்கும் இடத்தில் கால்மேல் கால் போட்டுக்கொண்டாள். அவளைப் பார்த்துக்கொண்டு வந்த ராஜி, “இத்தனை அலங்காரத்துக்கும் மேலே காலிலே பாத சரம் போட்டிண்டிருக்காளே! அழகாகத்தான் இருக்கு”, என்றாள்.

பாப்பாவைப் பார்த்து .”இங்கே வாயேன்” என்று கூப்பிட்டாள் அந்தக் காலேஜ் பெண். 

பாப்பா தன் வெட்கத்தைச் சமாளித்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். நான் உன்கூட வரமாட்டேன் “எங்காத்து லீலாகிட்டத்தான் போவேன்” என்றாள்.

“என் பெயரும் லீலாதான்” என்கிறாள் அந்தக் காலேஜ் பெண்.

ரயிலில் வருகிற இன்னொரு பயணி நவரத்தின ஆசாமி.  அவரை சென்னையை விட்டுப் போக இருந்த தமிழறிஞருக்கு நடந்த ஒரு விருந்தில் கநாசுவைச் சந்திக்கிறார்.  அவர் நாராயண செட்டியார் என்று ஞாபகத்திற்கு வருகிறது க.நா.சுவுக்கு.

இங்கே ஒரு செய்தியைத் தெரிவிக்கிறார் க.நா.சு. அந்தக் காலேஜ் மாணவி லீலாவும் சமீபத்திய பத்திரிகைகளில் நாராயண செட்டியாரின் பெயரைப் பார்த்திருக்க வேண்டும் என்பது நிச்சயமாயிற்று.  சற்று விரசமான விஷயம்.  அதையும் கூடிய வரையில் விரசமாகவே பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன.

பத்திரிகைகள் குறித்து இங்கே ஒரு தகவல் தருகிறார்.  பத்திரிகைகள் பேரில் பிசகா என்ன? விரசமான விஷயங்களை விரசமான பாஷையில் படிக்க விரும்புகிறவர்கள் தாமே இன்று நம்மிடையே அதிகம் பேர் இருக்கிற மாதிரி இருக்கிறது.

நாராயண செட்டியார், லீலா, க.நா.சு விற்கு ரயிலில் உறவுப் பின்னணி ஏற்பட்டு விடுகிறது.  லீலா நாராயண செட்டியிடம், தஞ்சாவூர் வந்தால் எங்கள் வீட்டிற்கு  வாருங்களேன் என்று கூப்பிடுகிறாள். .”

இந்த திடீர் அழைப்பு கநாசுவைத் திடுக்கிடச் செய்தது.  இதென்ன விபரீதமாக இருக்கிறதே என்று எண்ணினார் க.நா.சு. நாராயண செட்டியாரையும் கூடத்தான் திடுக்கிடச் செய்தது இந்த அழைப்பு என்று கநாசுவிற்குத் தோன்றியது. 

மாயவரத்தில் இறங்கித் திருவாரூர் ரயிலைத் தேடிக் கொண்டு போகும்போது க.நா,சு ராஜியைக் கேட்கிறார்.”பாதஸரம் என்ன அநாகரிகமான நகையா? “

பாத ரஸத்தைப் பார்க்கும்போது எனக்கு வேடிக்கையாக இருந்தது என்கிறார் ராஜி.

இறங்கி இன்னொரு ரயிலைப் பிடிக்கப் போய்க்கொண்டிருக்கும்போது அவர்களைப் பற்றியே பேச்சுத் தொடர்ந்தது.

திருவாரூர் வண்டியில் ஏறிக்கொண்டார்கள். அந்தச் செட்டியார்தான் எத்தனை வைரம் போட்டுட்டு இருக்கார் என்றார்  ராஜி.

          க.நா.சு கதை சொல்லும் முறையில் நம்மையும் பயண வைக்கிறார்.  விவரணை மூலம் கதையைக் கொண்டு போகிறார். அறிஞர் அண்ணாதுரை கதையில் வியாபாரம்தான் முக்கியமாகப் பேசப்படுகிறது. ரயில்வே நிலையத்தில் இரண்டு வியாபாரிகள் சந்திக்கிறார்கள்.  பேசுகிறார்கள்.  அவ்வளவுதான்.

                                                                                           (இன்னும் வரும்)

           

Series Navigationசார்ள்ஸ் டிக்கின்ஸ்- கிறேட் எக்பெக்ட்ரேசஸ் : Great Expectationsஎமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 23
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *