திருப்பூரியம்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 11 of 12 in the series 15 மே 2022

 

 

மணிமாலா மதியழகன், singapore

யற்கை ஆர்வலரான திரு. சுப்ரபாரதி மணியன் அவர்கள் தான் காணும் சமுதாயச் சிக்கல்களை, புறச்சூழலை, மனிதர்களின் அகவுணர்வுகளைத் தன் படைப்பில் வெளிப்படுத்துகிறார். இவரது படைப்புகளில் பெரும்பாலும் திருப்பூரே கதைக்களமாகவுள்ளது. பின்னலாடை தொழில் உற்பத்தியின் மூலம் அந்நியச் செலவாணியை அதிகளவில் ஈட்டி, டாலர் சிட்டி என்னும் பெருமையுடன் விளிக்கப்படும் நகரம் திருப்பூராகும். இங்கே பஞ்சு மில், பின்னலாடை தொழிற்சாலை ஆகியவற்றில் மக்கள் படும் பாடுகள் இவரது கதைகளின் பாடுபொருளாகின்றன. தேநீர் இடைவேளை, புத்துமண், முறிவு ஆகிய நாவல்கள் இக்கருத்தை மெய்ப்பிக்கும் விதமாக அமைந்துள்ளன. கற்பனையைக் கதையாக வடிக்காமல், வாழும் மனிதர்களின் அகமும், புறமும் சார்ந்த பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது இவருக்குக் கைவந்த கலையாகவுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

பஞ்சும் பாவமும்:

திருப்பூருக்குப் போனால் பிழைக்க முடியும் என்ற எண்ணத்தில் வெளியூரிலிருந்து வரும் தொழிலாளர்களின் நிலை மிகப்பெரிய கேள்விக்குறியாக ஆகின்றது. தங்கள் குடும்பத்தினரை வாழ வைக்க என்று உழைப்பை கைப்பிடித்தவர்கள் அனுபவிக்கும் வாதை கதைகளெங்கும் விரவியுள்ளன. நம்மையறியாது நாசிக்குள் சென்றுவிடும் சிறு தூசு, தும்மலைக் கொடுத்து நம்மை ஒரு வழியாக்கிவிடும். ஆனால் இங்கே பஞ்சுப் பொதியில் பாடுபடும் மக்கள் காற்றுக்கு நிகராகப் பஞ்சையும் உள்ளிழுக்கும் துர்ப்பலத்தை என்னென்பது? அதுவும் வேலை செய்யக் கால நேரமென்று எதுவும் கிடையாது. ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரம் உழைத்த பிறகும், வேலை நீடித்தால் அவர்களது உடல்நிலை என்னாவது என்ற கருத்தை கதாசிரியர் சொல்லாமல் சொல்கிறார். இடம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் நகரின் எல்லையில் இறந்து கிடக்கின்றனர். சரியான விசாரணை என்று ஏதும் இல்லாமல் போவது விந்தையாகவுள்ளது. பணம் படைத்தவர்கள் என்ன செய்தாலும் கேள்வி கேட்பதற்கு ஆளில்லாமல் போவது இங்கே வெள்ளிடைமலை!

ஒண்ட வந்த பிடாரிகள்:

அந்நாளில் பிழைப்பை நாடி வந்த வடநாட்டவர், தென்னாட்டில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ளச் செய்யும் முயற்சிகள் தேநீர் இடைவேளையில் பட்டியல் போடப்பட்டுள்ளன. முதலாளி வர்க்கத்தைச் சார்ந்த அவர்கள், நிலங்களை வளைத்துப்போட்டு அதற்குத் தங்களது கடவுளின் பெயர்களையும் சூட்டுகின்றனர். மக்களை மயக்க தானம், தருமமென ஏதோ செய்துவிட்டு, அவர்களது உழைப்பைச் சுரண்டி அனுபவிப்பது வலியைத் தருவதாகவுள்ளது.

புத்துமண்ணில் உறியடியில் வெற்றிபெற்ற வடநாட்டுக்காரனைப்பற்றிக் குறிப்பிடுகையில் தமிழனை யார் யாரோ ஜெயிச்சிட்டிருக்காங்க என்கிறார் ஆசிரியர். அவ்வளவு வலி நிறைந்த வாசகமாக அது உள்ளது. வட இந்தியர் பற்றிய ஆசிரியரின் தார்மீகச் சிந்தனையை ஆட்சியாளர்கள் கருத்தில் கொண்டிருந்தால், இன்று காணும் இடமெல்லாம் வடநாட்டவரின் ஆதிக்கம் பரவியிருப்பதைத் தடுத்திருக்கலாம். தமிழக மக்களுக்குச் சொந்த மண்ணில் வேலையில்லா பரிதவிப்பு நேரும் கொடுமையும் ஏற்பட்டிருக்காது. நாடு கடந்து வந்த நைஜீரிய வாசிகள், ஆரம்பத்தில் லாட்ஜில் தங்கியிருந்தவர்கள் நாளடைவில் வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு குடியிருக்கின்றனர். இருக்க இடம் கொடுத்த நிலையில், உள்ளூர்வாசிகளிடம் அவர்கள் வெட்டுக்குத்து என இறங்குவது மிகவும் கொடுமை. பனியன் கம்பெனியில் மேலாளராகப் பதவி வகிக்கும் சிங்கள நபர், எங்க ஊர்ல உங்களையெல்லாம் துரத்திட்டோம். இங்கிருந்தும் துரத்தணுமா?” என்று கேட்பதைப் பார்க்கும்போது நம் ரத்தம் கொதிக்கிறது.

உயிருக்கு விலை:

தேநீர் இடைவேளையில், பஞ்சு மில்லில் வேலை செய்த ஒரு தொழிலாளிக்கு இயந்திரத்தில் கை மாட்டித் துண்டாகிவிட, அந்நிலையில்கூட அவருக்கு சரியானச் சிகிச்சையை அளிக்க விரும்பாத நிர்வாகம். இந்த அலட்சியப் போக்கினால் அடிபட்ட உயிர் அநியாயமாக மாண்டு போகிறது. காலம் முழுக்கப் பாடுபட்டு உழைத்தவர்களுக்கு இப்படியொரு நிலையா வர வேண்டும்? ஒரு கை போய்விட்டால் அந்நபரால் இனி பழையபடி வேலையைச் செய்ய முடியாது, பண விரயம் செய்து எதற்காகச் சிகிச்சையளித்து அவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற முதலாளி வர்க்கத்தின் அலட்சியப் போக்குகள் கதையில் சொல்லப்பட்டுள்ளன.

விழாக்காலங்களில்கூட விடுமுறையளிக்காது, தொடர்ச்சியாக வேலைசெய்ய நிர்ப்பந்திக்கப்படும் பணியாளர்கள். கட்டாயப்படுத்தப்படுவதால் பணிக்கு வந்து இயந்திரங்களிடம் அங்கங்களை இழக்கும் பரிதாபம். பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியான மருத்துவ வசிதியோ இழப்பீடோ அளிக்காமல், தன்னுடைய கவனக்குறைவால்தான் இப்படி நேர்ந்தது எனக் கவனமாக எழுதி வாங்கிக்கொண்டு விரட்டிவிடும் நிர்வாகம் என்று ‘முறிவு’ நாவல் நம் மனத்தை வதைக்கிறது.

புத்துமண்ணில், ஆற்று மணலை அள்ளும் லாரியைத் தடுத்த நபரை லாரி ஏற்றிக் கொன்ற கொடுமை பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்கிரமக்காரர்களின் அளவுக்கு ஒரு வரையறையே இல்லையா என்ற கேள்வி இங்கே எழுகிறது. ஆற்று மணலை அடுத்த மாநிலத்துக்கு அள்ளிக் கொடுத்துவிட்டுக் குடிநீருக்காகப் பிறரிடம் கையேந்தி நிற்கு அவலம் நம் தமிழகத்தில் என்று தீரும்? கதாசிரியர் மிகப்பெரும் பிரச்சினையை வெளிக்கொண்டு வந்தும், இன்னும் தமிழகத்தில் லாரிகள் மணலைச் சுமந்து சென்றுகொண்டுதானே உள்ளன. உயிர் வாழ அத்தியாவசியமான தண்ணீர் இல்லா நிலையை உருவாக்கியவர்களை ஆசிரியர் தன் படைப்பின் மூலம் வெளியுலகத்துக்குக் காட்டியது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

பெண் பாவம்:

பாதி நாளுக்கு மேலாகப் பஞ்சுக்குள் தங்கள் நேரத்தைச் செலவிடும் பெண்களின் நிலையோ மிகவும் பரிதாபத்திற்கு உரியதாய் உள்ளது. மூன்றாண்டுகளை அவர்கள் கடந்துவிட்டால் மாங்கல்ய திட்டம்சுமங்கலி திட்டம்’ என்பதன் மூலம் குறிப்பிட்டளவு தொகைக் கிடைக்கும் என்பதால் இரவு, பகல் பாராது உழைக்கின்றனர். ஏய்த்துப் பிழைப்பதையே வாடிக்கையாகக் கொண்ட அதிகார வர்க்கம் அதை நம்பியிருப்பவர்களுக்கு இலகுவாகக் கொடுத்துவிடுமா என்ன? குறிப்பிட்டக் காலக்கெடுவுக்கு முன்பே அந்தப் பெண்களின் மீது தவறான குற்றத்தைச் சுமத்திப் பணியிலிருந்து விலக்கி விடுகின்றனர். கல்யாணக் கனவுகளோடு எதிர்பார்த்திருந்த பணமும் இல்லை என்றான நிலையில், தன்மீது சுமத்தப்பட்ட களங்கத்தையும் தாங்கிக்கொண்டு அப்பெண் வாழ வேண்டியுள்ளது. இவ்வளவும் தெரிந்தும் ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலே இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பது எவ்வளவு வலி நிறைந்த விடயமாகவுள்ளது?

வெளியூரிலிருந்து வந்து வேலை செய்யும் பெண்களுக்குத் தங்கியிருப்பதற்காகச் சரியான இடவசதி செய்து தரப்படுவதில்லை. மிக முக்கியமாகக் கழிவறையைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இரண்டாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றும் இடத்தில் இருப்பதோ பத்துப் பொது கழிப்பறைகள் மட்டுமே. இடைவேளை நேரத்தில் வரிசை பிடித்து நின்று செல்ல வேண்டும். மூன்று நிமிடத்துக்கு மேலே கழிவறையில் இருந்தால் அபராதம் செலுத்த வேண்டும். இயற்கையின் உபாதையைக் கழிப்பதற்குக்கூடக் காலக்கெடு நிர்ணயம் செய்வது எந்த விதத்தில் நியாயமென்று தெரியவில்லை. பெண்கள் என்றாலே கூச்ச சுபாவம் அதிகம் உள்ளவர்கள்தான். அவ்வாறு இருக்க இப்படிப் பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்த பெரும்பாலும் தயக்கம் காட்டுகின்றனர். அதன் பலனாகச் சிறுநீரகக் கோளாறு வந்து அவதியுறுகின்றனர். பணியாளர்களுக்கு அத்தியாவசியத் தேவைகளைக்கூட சரியாக அமைத்துத் தராத நிர்வாகத்தினரை கதாசிரியர் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார். இந்தக் கொடுமையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காகதான் நாவலுக்குத் தேநீர் இடைவேளை என்னும் பெயரைச் சூட்டியுள்ளார் என நான் நினைக்கிறேன்.

மாதவிலக்கு தள்ளிப்போவதற்குக்கூட நிர்வாகத்தினர் மாத்திரையை அளிப்பார்களா? இந்தக் கொடுமை நம் தேசத்தில்தான் அரங்கேறுகிறது என்பதை முறிவு நாவல் காட்டுகிறது. இப்படிப்பட்டக் கொடூர மனம் படைத்த முதலாளி வர்க்கத்தினரை நினைக்க நினைக்க மனம் கொதிக்கிறது.

பெண்களது உழைப்பை குடியில் கரைக்கும் பல தந்தைமார்கள். ஊணுறக்கமின்றிச் சேமித்த பணத்தை ஊதாரித்தனமாகச் செலவிட்டுவிட்டு மகள்களை வேலைக்குத் துரத்துவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இந்த நெருக்கடி தாங்காது பெண்கள் பலர் காலனின் கரங்களில் தங்களை ஒப்படைத்துவிடுவது கொடுமை.

பற்றாக்குறை படுத்தும்பாடு:

குறைவான சம்பளத்தில் காலந்தள்ளும் மக்கள் தங்களது தேவைகளுக்காக வட்டிக்கு விடுபவர்களையே முழுதும் நம்பியுள்ளனர். பெரும்பாலும் வட நாட்டவர்களே ‘பைனான்சியர்களாக’ இருக்கின்றனர். அவர்கள், குறித்த நேரத்துக்குள் வட்டியைக் கட்டாதவர்களை மிகவும் மோசமாக நெருக்குகின்றனர். இதன் விளைவால் அங்கு வாழ்வோர், ஓரிடத்தில் வாங்கிய கடனுக்கு வட்டியைக் கட்ட வேறிடத்தில் புதிய கடனை வாங்குகின்றனர். நாளடைவில் கடனையடைக்க வழியற்றுத் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்பவர்களும் உண்டு. கடனுக்காகத் தங்களது மானத்தை இழந்து நிற்கும் பெண்களின் நிலையை நினைத்தால் மனம் பதறுகிறது. உலகில் படைக்கப்பட்ட உயிரினங்களிலே மிகவும் குரூரமான இனம் மனிதன்தான் என்று சொல்லத் தோன்றுகிறது.

நச்சுநீர்:

சாயப்பட்டறைகளின் கழிவை நொய்யலில் திறந்து விடுவதைக் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்களை கதாசிரியர் தனது புத்துமண்ணில் காட்டுகிறார். நல்ல தண்ணீரின் பிறப்பிடமாக விளங்கிய ஆறுகள்கூட உப்பு, கழிவுகளின் சங்கமமாக ஆன நிலையை என்னென்பது? சிறுவாணித் தண்ணீர், அத்திக் கடவுத் தண்ணீர் என்று குடித்த மக்கள் வேறு வழியின்றி எங்கிருந்தோ வரும் லாரி தண்ணீரை ஆலகால நஞ்சுபோல விழுங்குகின்றனர். மேலும் கடலோரப் பகுதிகள்கூடத் தொழிற்சாலைகளாக மாறி வருவதால் கடலும் நஞ்சாகும் பரிதாபத்தை ஆசிரியர் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளார். வற்றிப்போன குளங்களைக் கடக்கையில் கதாசிரியரது மனது கனத்துப் போவதை வாசகர்களாலும் உணர முடிகிறது. கழிவுநீரைச் சரியான முறையில் வெளியேற்றாது, ஆற்றில் கலக்கவிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் மனத்தைக் கலங்கடிப்பதாக உள்ளன. உயிரைக் களவாடும் தாராளமான மது விற்பனையால் மனிதர்கள் விழுங்கப்படுவதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை.

சூழலியல்:

சாயப்பட்டறைக் கழிவுகள் தேங்கும் இடத்திற்கு அருகே வாழும் மக்களுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளைச் சுட்டுகிறார். நெகிழி என்னும் நச்சு நம் வாழ்வை எப்படிச் சூறையாடுகின்றது என்பதைத் தன் படைப்பில் குறிப்பிடத் தயங்கவில்லை. பஞ்சில்கூட வேதிப்பொருட்களைக் கலப்பதால் அதில் வேலை செய்பவர்களுக்குச் சுவாசப் பிரச்சினைகளும் தோல் பிரச்சினைகளும் வந்து அவதிப்படுவதைக் காட்டுகிறார். மேலும் காற்றின் தரத்தைக் கெடுக்கும் மோசமான வேலையை ஆக அதிகமாக அமெரிக்கர்களே செய்கின்றனர் என்பதையும் சொல்கிறார். தெருவில் விற்க வேண்டிய காய்கறிகள் குளிர்சாதன அறை உள்ள கடைகளுக்குள் போய்விட, காரும் ஸ்வெட்டரும் தெருவில் கூவிக்கூவி விற்கப்படுகின்றன என்கிறார். மக்களிடம் அத்தியாவசியத் தேவைகள் மறந்து ஆடம்பர மோகம் தலைவிரித்தாடுவதைப்படைப்பாளரின் வரிகள் சொல்லாமல் சொல்கின்றன. நாளைய தலைமுறைக்கு இந்த மண் வேண்டாமா?” என்ற கூற்று சாமானியமானவர்கள் மட்டுமல்லாது சகலரையும் யோசிக்க வைப்பதாய் உள்ளது. திருப்பூர் இன்று மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறியிருப்பதைக் காட்டும் நிமித்தமாகவே ஒரு நாவலுக்குப்புத்துமண் என்று பெயரிட்டுள்ளார் என்று நினைக்கத் தோன்றுகிறது.

உள்ளது உள்ளபடி.

இருண்மை செறிந்த வாழ்வை எதிர்கொள்பவர்களின் மனநிலை இவரது கதை நெடுகிலும் வியாபித்துள்ளன. தான் வாழும் மண்ணின் அவலத்தைப் படம்பிடித்துக் காட்டும் கதாசிரியரின் தைரியத்தைப் பாராட்டியே ஆகவேண்டும். பொதுவாக மண் சார்ந்த பிரச்சினைகளை மையப்படுத்தி எழுதும்போது அப்படைப்புக்கு ஒரு வலு சேர்ந்துவிடுவது மறுக்க முடியாத ஒன்றாகும். உண்மைச் சம்பவத்தைக் கதைக்கருவாக வடித்தபோது கதாசிரியரிடம், இது கதை என்பதையும் தாண்டி உண்மையை உலகிற்குப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற அறச்சீற்றம் ஆட்டுவிப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. தான் காணும், தன் மனத்திற்கு ஒவ்வாத நிகழ்வுகளை ஒரு படைப்பாளியால் மட்டுமே வெளியே கொண்டு வர முடியும். அதை திரு. சுப்ரபாரதி மணியன் அவர்கள் மிகச் சிறப்பாகவே செய்கிறார்.

தமிழகச்சரித்திரத்தில் சாபக்கேடுகளாய் விளங்கும் விஷயங்களை, தனது படைப்புகள் மூலம் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக இவர் கையாண்டிருக்கும் முறையும் உன்னதமாகவுள்ளது. கதைதானே என்று சொல்லி தப்பித்துக்கொள்ளப் பார்க்காமல் நடந்த சம்பவங்களை, சம்பந்தப்பட்டவர்களது பெயர்களைக்கூட அப்படியே குறிப்பிட்டிருப்பது இவரது எழுத்தின் மிடுக்கை காட்டுகிறது.இன்று தமிழகத்தில் துப்புரவுப் பணிக்குப் பட்டதாரிகள் வரிசை பிடித்து நிற்கின்றனர். மக்கள், நிலம், நீர் ஆகிய அனைத்து வளங்களையும் பெற்றுள்ள தமிழகத்தில் இப்படியொருதுர்ப்பலமா?நாளைய நிலை என்னவோ என்பதை நினைத்துப்பார்க்கவே கலக்கமாகவுள்ளது. படைப்பாளரின் ஆதங்கத்தை ஆட்சியாளர்கள் கண்டுகொண்டால் இனியாவது பாடுபடும் நம் மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்!

Series Navigationதிருப்பூரியம் கருத்தரங்கம்தகவல் பரிமாற்றம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *