முன்னணியின் பின்னணிகள் – 6 சாமர்செட் மாம்

This entry is part 35 of 41 in the series 25 செப்டம்பர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

அந்த பிறைச் சந்திர தெருவில் மேடேறிப் போகிறேன். பிகாதிலியின் உற்சாகப் பொங்கலும் கலகலப்பும் அடங்கி இங்கே அமைதி ஆளைத் தழுவியது. கௌரவமான, பிறத்தியாரை மதிக்கிற அமைதி அது. நிறைய வீடுகள் பகுதிகளை வாடகைக்கு என்று அளித்தன. என்றாலும் அதை பறைசாற்றி வாடகைக்கு என அறிவிப்பு தொங்கவில்லை. சில வீடுகளில் பளபளப்பான பித்தளைத் தகடு அவர்கள் பெயர்பொறித்து. அவர் மருத்துவர் என்றால் தொழிலை அவை அறிவித்தன. வாசல் கதவுக்கு மேல்பக்க ஜன்னலில் அழகாய் அபார்ட்மென்ட் என்று எழுதப்பட்டிருந்தன. பல குடும்பங்கள் குடியிருக்கும் இடம். ஒன்றிரண்டில் அதிகபட்சம் வீட்டுச் சொந்தக்காரர் பெயர் இருந்தது. அது லேவாதேவிக்காரன், தையல்காரன் என கடை போட்டிருக்கிறவனின் சொந்தம் என நாம நினைச்சிறக் கூடாது அல்லவா?
ஜெர்மைன் தெருவின் கசகச இங்கே இல்லை. அங்கேயும் அறைகள் வாடகைக்குத் தந்தார்கள். என்றாலும் விட்டு விட்டு வீட்டுவாசலில் கார்கள் நிறுத்தியிருப்பார்கள். டாக்சி உள்ளே வர, யாராவது நடுத்தர வயசுப் பெண் இறங்குவாள். அந்தத் தெருவின் குடித்தனக்காரர்கள் எல்லாவனும் வாழ அலுத்தவன்கள் என்று தோன்றும். வெந்ததைத் தின்னு விதிவந்தால் போய்ச்சேரும் சனக்கூட்டம். பிறைச் சந்திர தெரு நபர்கள் இதைவிட கௌரவமான ஆட்கள் என்று ஏனோ தோன்றியது.
ஜெர்மைன் தெரு சனங்கள் காலை எழுந்துகொள்ளும் போதே தலைவலியோடு எழுந்து கொள்கிறார்கள். தெருநாய் கடித்து, அந்த நாய்வீட்டுக்காரரிடம் அதன் ஒரு முடி கேட்டு நிற்கிறார்கள். லண்டனின் திருவிழாக் காலங்களில் வெளியூர்ப் பெண்கள் வந்தால் ஒரு ஐந்தாறு வாரம் தங்க அங்கே இடம் கிடைத்தது. பாரம்பரிய கிளப்புகளில் அங்கம் வகிக்கும் முதியவர்கள், சாம்பிராணி டப்பாக்கள் அங்கே அதிகம்.
இந்த யாத்ரிகர்கள் எல்லாரும் வருடா வருடம் இங்கே வருவதும், இதே இடத்தில் அறையெடுத்துத் தங்குவதுமாக…. சம்பிரதாயங்களை மீற கொண்டாட்டங்கள். காலப்போக்கில் கொண்டாட்ட சம்பிரதாயங்கள்… வீட்டுச் சொந்தக்காரன் எப்பவோ, வேலையில் இருக்கையில் வாங்கிப் போட்ட கட்டடம். இவர்களுக்கெல்லாம் இந்தச் சொந்தக்காரனை அவன் வேலையில்இருக்கிற போதே பரிச்சயம் இருந்திருக்கலாம்.
எங்க ஆள் மிஸ் ஃபெல்லோஸ் ரொம்பப் பெரிய இடத்தில் எல்லாம் சமையல் வேலை செய்திருக்கிறாள். ஆனால் ஷெப்பேர்ட் மார்க்கெட் (ஆட்டுக்காரச் சந்தை) பக்கம் அவள் சரக்கு வாங்கப் போகையில் அப்படி, அவள் பெரிய வீட்டு சமையல்காரி மாதிரி தெரியாது. பிச்சைக்காரிக்கு பக்கத்து வீட்டுக்காரியாட்டம் தோணும். ஒரு தேர்ந்த சமையல்காரி எப்படி இருக்கிறாள்? பருமனாய். செவத்த முகமாய். வஞ்சகமில்லாத மார்புகள். ஆனால் இவள், எங்க ஆள் வெடவெட. நிமிர்ந்த நடை. அலங்காரமான சுத்தமான உடை. நடுத்தர வயது. அங்கக் கச்சிதம். உதட்டுச் சாயம். மூக்கில் மாட்டிக்கொள்கிற மாதிரி கண்ணாடி வில்லை. பட்டுக்கத்தரித்த நேர்ப்பேச்சு. அமைதியானவள். வெறுப்பைக் காட்டாத முகம். அத்தோடு ஊதாரி. கையடக்கம் கிடையாது.
என் அறைகள் தரைத்தளத்தில் இருந்தன. வரவேற்பு அறையில் சித்திரங்கள் ஒட்டிய பளிங்குகள் பதித்திருந்தன. கூடத்துச் சுவரில் வாட்டர்கலரில் ஓவியங்கள். ராணுவ வீரர்கள் தங்கள் பெண்களுக்குப் பிரியாவிடை தருகிறார்கள். வீரர்கள் கலந்துகொண்ட ஒரு விருந்துக்காட்சி. பூந்தொட்டிகளில் பாசி, பிரண்டை என்று அடைந்து கிடந்தது. மங்கிப்போன தோல்உறைகளுடன் கைவைத்த நாற்காலிகள். அந்த அறையில் ஒரு புராதான நெடி அடித்தது. 1880 ம் ஆண்டில் வசிக்கிற பிரமை தட்டியது. ஜன்னல் வழியே பார்த்தால், கிரிஸ்லர் கார் அல்ல…. ஒரு ஹான்சம் – ரெட்டைக்குதிரை சாரட் நிற்கும் போலிருந்தது.
பத்தாததுக்கு பாடாவதி அடர்சிவப்பில் கனமான ஜன்னல் திரைச்சீலை.

>>>
அன்றைக்கு அடுத்து நிறைய வேலைகள் காத்திருந்தன எனக்கு. ராயுடனான சந்திப்பு. உரையாடல்கள். நேற்று முன்தினத்தின் இன்னும் அழியாத சுவடுகள். மனிதர்களிடம் மறக்க முடியாமல், இன்னும் மங்காமல் தங்கிவிடும் பழைய உணர்வுகள். இதெல்லாமான கலவையில் நான் அறைக்கு வர, என் அறையின் புராதனம் என்னை மூக்குமேல் அழுத்துவதாக உணர்ந்தேன். எனக்கும் அந்தப் புராதன அம்சங்கள் கிளர்ந்தன. பழைய நினைவுகள் ஊடாடின. அந்தப் பழைய மனிதர்கள் எல்லாரும் இப்போது என் அறைக்குள் வந்து நெருக்கி யடித்துக்கொண்டு இடித்துக்கொண்டு உட்கார்ந்தாப் போலிருந்தது. அவர்களது பழையபாணி துணியுடுத்தல்களும், பழமையான சிந்தனைகளும்…
ஆண்கள். கையில் கசாப்புக்கத்தி, அழுக்கு வேலையுடை மேல்அங்கி. துள்ளல் பெண்கள். பொங்கிய கவுன்கள். லண்டன் மகாநகர மகா இரைச்சல். சந்திரப் பிறைத் தெருவில் மேட்டுப் பகுதியில் இருந்தேன் நான். இந்த இரைச்சல்கள் என்னை எட்டியதே இல்லை. நான் அவற்றை நினைத்துப் பார்த்ததே இல்லை. ஜுன் மாத கதகதப்பான இதம் என்னை வந்தடைந்து கொண்டிருந்தது. (பிரஞ்சு மொழியில் ஒரு மேற்கோள் அடைப்புக் குறியில் தந்திருக்கிறார் சாமர்செட் மாம்.) அதில் ஒரு கனவுலோக பிரமை. மிதக்கிற நிலையில் இருந்தேன் நான். பழமையின் இறுக்கத்தைச் சற்று தளர்த்திக்கொள்ள முடிந்தது. என்னில் கிளர்ந்தெழுந்த அந்த புராதனம் அதன் நிஜத்தன்மை கரைந்து, நான் பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு நாடகத்தின் காட்சியாகிப் போனது. பார்வையாளனாக இருட்டில் கடைசிவரிசையில் நான். ஆனால் நான் பார்த்தளவில் காட்சிகள் எல்லாமே துல்லியம். சில பாதைகள் பக்கத்தில் தெளிவாகவும் தூரத்தில் மசங்கியும் காணும்… காட்சிகளாக தெளிவாகாமல், இப்படித்தான் என்கிற அனுமானங்களாக அவை பதிவுகண்டிருக்கும். அதுபோலல்ல. இப்போது என் மனத்தில் காட்சிகள் எண்ணெய் வண்ண ஓவியப் பதிவுகளாக துல்லியப்படுகின்றன. விக்டோரியக் காலகட்ட திறமையான ஓவியனின் கலைப்படைப்பு அது.
ஒரு நாப்பது வருஷமுன்னாடி இருந்ததை விட வாழ்க்கை இப்ப உற்சாகமானதாய் இருக்கிறது. மக்களும் முன்னைக்கிப்ப ஒருத்தருக்கொருத்தர் அரவணைத்துப் போகிறார்கள். அவர்கள், நாற்பது வருஷ பழைஞர்கள்… மதிப்பு மிக்கோராய், நற்குண சீலராய், அறிவாளிகளாய் இருக்கலாம். யார் கண்டா, சொல்லக் கேள்விதான் இவை. ஆனால் அவர்கள் எல்லாரும் குட்டை மட்டைகள், புதியது எதற்கும் விழுந்து மறிப்பார்கள். நல்லா உட்கார்ந்து உட்கார்ந்து போஜனப்பிராப்தி கொண்டாடினார்கள். சிலாள் குடியாக் குடிச்சி உலகையே மறந்தான். பிராந்திப்பிராப்தி ரஸ்து. உடம்பு வளையாமல், உடற்பயிற்சி செய்யாமல் உடல்வளர்த்தார்கள். கல்லீரல் சீரழிந்ததுதான் கண்டபலன். செரிமானப் பிரச்னைகள் பூதமாய் வெடித்தன பின்பக்கமிருந்து. பார்க்கவே எரிச்சல்பட வைத்தார்கள்.
அவர்கள் லண்டன் பற்றி பேசமாட்டார்கள். நான் வளர்ந்து ஆளாகும் வரை எனக்கு லண்டன் பத்தி எதுவும் தெரியாது. லண்டன் பிரமுகர்கள் பொழுதுபோக்காய் மிருகங்களை காட்டில் வேட்டையாடினார்கள். எனக்குத் தெரிந்ததெல்லாம் எங்கள் கிராமாந்தரத்து நாணயஸ்தர்கள். தலையாரிகள். நாட்டாமைகள். சின்ன அளவில் பெரியவர்கள். மதபோதகர்கள். ஓய்வுகாலத்தில் நாட்டுப்புறம் வந்து ஒதுங்கிய அதிகாரிகள். உள்ளூர் சமுதாய நபர்களை மாத்திரமே நான் அறிந்திருந்தேன். பொழுதே போகாமல் வேலையே செய்யாமல் பொழுதை நந்தியாய்ப் பிடித்து, ஊப் – தள்ளினார்கள் அவர்கள். ஒரு கோல்ஃப் களம் கிடையாது. சில வீடுகளில் ஒரு கட்டாந்தரை டென்னிஸ் வளாகம் இருக்கும். சின்னப் பிள்ளைகள் மாத்திரம் சிலபேர் விளையாடுவார்கள். ஊர்க்கூடல் சமயத்தில் ஆண்டுக்கொருதரம் நடனம் இருக்கும். மட்டமான கனரக வாகனங்களில் சிலர் மதியம் வெளியே போய்வருவார்கள். பெரும்பாலோர் சிறு உலாவல், அத்தோடு அவர்கள் அலைச்சல் சரி.
வாழ்க்கையில் எத்தனையோ சந்தோஷங்கள் இருக்கு, வாஸ்தவம். ஆனால் அவர்கள் அவற்றை அறியாதவரை அவர்கள் அவற்றை இழந்தார்கள் என்று கூற இயலாது. அதெல்லாம் சரிதான். ஆனால் சின்ன அளவில் தங்களை அவர்கள் உற்சாகப்படுத்திக் கொண்டார்கள். கூட ரெண்டுவாட்டி தேநீர் அருந்தினார்கள். மாதே வலேரியின், தோஸ்தியின் அழகான பாடல்களை தெரிந்தவரை பாட்டுப் ‘படித்தார்கள்’. எப்பவாவது இப்படி ஒன்றுகூடி தங்களுக்குள் கிச்சுகிச்சு மூட்டிக்கொண்டார்கள். ஆனால் அவர்களுக்கு தினசரி பகல் ரொம்ப நெடியதாய் இருந்தது. போரடித்தது. கிராமம் மொத்தமே ஒரு மைல் பரப்புக்குள் அடங்கி, அதற்குள்ளேயே அவர்கள் வாழ வேண்டியிருந்தது. கு. சட்டிக்குள் கு. ஓட்டினார்கள். பொழுதுபோகாததனாலேயே ஈறைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கி, சண்டைகள். நேருக்கு நேர் சந்தித்துத் தொலைக்க வேண்டிய நிர்ப்பந்தம். சின்ன ஊர். ஆனாலும் அவர்கள் ஒருத்தரை ஒருத்தர் பாராமுகமாகவே 20 வருஷம் வாழ்ந்தார்கள்.
வெட்டி வீரமணிகள். மூளையற்ற விநோதப் பிறவிகள். அதனால்தான் நாட்டுப்புறத்தில் வித்தியாசமான நபர்களைச் சந்திக்கிறோம். ஒருத்தனைப் போல இன்னொருத்தன் இரான். ஒத்தொருத்தனுக்கும் ஒவ்வொரு அசட்டுவட்டம் என்பதில் பட்டப்பேர் தாங்குகிறார்கள். மத்தவர் பற்றியென்ன, அவர்களை அவர்களுக்கே பிடிக்கவில்லை. அவர்களுக்கு பிறத்தியாரையும் பிடிக்காமல் போய்விடுகிறது.
இவர்களைப்போல இல்லை நாம். நாம் கொஞ்சம் நெகிழ்ந்தாப்போல அலட்சிய பாவனை காட்டுகிறதாகத் தோற்றந் தரலாம். எல்லாருமே ஒருத்தரை ஒருத்தர், பரிச்சயம் அதிகம் இல்லாததாலேயே அவநம்பிக்கையும் இல்லாதவராய் இருக்கிறோம். நமது சூட்சுமமும் தயார்நிலையில் ஒரு எதிர்பார்ப்புடன் இருக்கிறது. எளிய புன்னகையுடன் எதையும் பெறவும் வழங்கவும் விழைவுடன் இருக்கிறோம். நண்டாய் வளைக்குள் நாம் சுருங்கிக்கொள்வது இல்லை.
கடல் கிட்டத்தில் ஒரு அத்தையுடனும் மாமனுடனும், நான் விநோதமாய் வட்டாரமொழி பேசும் கென்ட் நாட்டுப்புறத்தில் வாழ்ந்திருக்கிறேன். பிளாக்ஸ்டேபிள் என்று அந்த ஊர். என் மாமன் ஒரு விகார். மத போதகர். அத்தை ஜெர்மன்காரி. நொடித்துப்போன நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவள். தன் கணவனுக்கு என்று அவள் கொண்டுவந்தது எல்லாம் வேலைப்பாடு மிக்க ஒரு எழுதுமேசை மாத்திரமே. 17ம் நூற்றாண்டின் அவளது முன்னோர் யாரோ தமக்குச் செய்துகொண்ட சாமான். அப்புறம் கொஞ்சம் தம்ளர்களும் சீதனம் என்று கொணர்ந்திருந்தாள். நான் அவர்கள்கூட வாழ வந்தபோது, அதிலும் ஒண்ணு ரெண்டுதான் மிச்சமிருந்தது. வரவேற்பறையில் அந்த தம்ளர்கள் அலங்கார காட்சிப்பொருளாய் இருந்தன. அந்த தம்ளர்களின் வேலைப்பாடுகளை நான் ரசித்தேன். அவற்றை வைத்திருந்த அந்த தாங்கிகள் கூட அத்தனை அழகு. தாங்கிக்கால்கள், அதன் தம்ளர் வைக்கிற பிரிவுகள் எல்லாமே கலைநேர்த்தி மிக்கவை. ஒரு கிரீடம் போல பார்வைக்கு அயர்த்தியது அந்த அமைப்பு. முதிர்ந்த எளிய பெண் அவள். கிறிஸ்துவ அப்பிராணி சமூகம். ஒரு முப்பது வருஷமாகியும் கல்யாணம் கட்ட முடியாத அபலை. அதற்கப்புறமும் வாய்த்தது என்னவோ என் மாமன்தான். சொற்ப ஊதியத்தில், மேல்வரும்படி சொல்லிக்கொள்கிறாப்போல இல்லை என்கிற திவலை. நம்ம ஒரு பெரும் வளமான பண்ணைக்குடும்பம் என்பதே அவளுக்கு இந்நாட்களில் மறந்துவிட்டிருந்தது.
பணம் புழங்கும் வளாகங்களில் அடிபடக்கூடிய அளவில் குடும்பப்பெயர் கொண்ட ஒரு பெரிய பாங்கர், லேவாதேவன், லண்டனில் இருந்து, எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு வீடு, கோடைக்காலத்தில் வந்து தங்கிப் போகலாம்… என்று வாங்கினான்.. மாமன் அவனை வீட்டுக்கு அழைக்க யோசித்தார். (யார் வந்தாலும் மடக்கு, நம்ம அடிஷனல் கியூரேட்ஸ் சொசைட்டிக்கு, பிரார்த்தனையாளர் சபைக்கு நன்கொடை கேள்… விடாதே, என்பது அவர் சித்தாந்தம்.) அவளை விட்டு கூப்பிடச் சொன்னார். அவள் மறுத்துவிட்டாள். வியாபாரிகள் அவர்கள்… பக்திக்கு அப்பாற்பட்ட பாவப் புழுக்கள் என்பது அத்தையின் கணிப்பு. அத்தையை யாரும் குறைசொல்லவில்லை. அது சரி, என்றேதான் எல்லாரும் ஒத்துக்கொண்டார்கள்.
அந்த பாங்கருக்கு ஒரு சின்னப் பையன், என் வயதுதான் அவனுக்கும்… எப்படி நாங்கள் ஒருவருக்கொருவர் சிநேகமானோம் ஞாபகம் இல்லை. நம்ம சபைக்கு அவனைக் கூப்பிடலாமா என்று கேட்டபோது வேண்டா வெறுப்பாக அனுமதி கிடைத்தது. ஆனால் நான் அவன்வீட்டுக்குப் போகக்கூடாது. கிட்டத்தில் இருக்கிற கரி வியாபாரி வீட்டுக்கு நான் போய் விளையாட விரும்புவதாக அத்தை ஒருமுறை சொன்னபோது, மாமன் சொன்னார்.
”பன்னி கூட சேர்ந்த கன்னுக்குட்டியும் பீ திங்கப் போயிரும்.”
ஞாயிற்றுக்கிழமை காலைகளில் பாங்கர் சபைக்கு வருவார். தட்டில் அரை பவுன் நாணயம் க்ளிங் என்று சத்தமாய்ப் போடவும் செய்வார். என்றாலும் அதனாலெல்லாம் அவர் மதிப்பு கூடியதாக அவரே நினைத்துக்கொண்டால் தப்பு. அவர் தங்க நாணயம் தட்டில் போட்டதை மொத்த பிளாக்ஸ்டேபிளுமே அறியும். அத்தோடு அவரைப் பற்றியும் பேசும் – அட துட்டுக்கொழுப்புடா அவனுக்கு. பணத்திமிரைக் காட்டறாம் பார்!
பிளாக்ஸ்டேபிளின் தெரு நீண்டுகொண்டே போய் கடலை அடைந்தது. சிலுசிலுவென்று காற்று மோத அனுபவித்தபடி போகலாம். பெரும்பாலானவை வீடுகள் தான் என்றாலும் நிறையக் கடைகளும் இருந்தது. வாசல்அறையைக் கடையாய்க் கட்டி விட்டிருந்தார்கள். இப்போது அந்த நீளத் தெருவுக்கு குட்டிச் சந்துகள் முட்டு முடுக்குகள் கிளைபிரிந்திருந்தன. சதுப்புநிலம் வரை அந்த முடுக்கு போயிற்று. கடற்கரையைச் சுற்றிலுமே கச்சடாவாய் நிறைய சிறு சந்துகள். கூலிக்காரர்கள் நியுகேசிலில் இருந்து கரி கொண்டுவந்தார்கள்.
எப்பவும் அங்கே பரபரப்பாய் இருந்தது. கொஞ்சம் பெரியவனாகி வெளியே நானே போய்வர ஆரம்பிச்ச பிறகு, நான்பாட்டுக்கு கடற்கரைப் பக்கம் சுத்தித் திரிவேன். உடம்பே அழுக்கான கூலிக்காரர்களையும் கரிமூட்டைகளை அவர்கள் இறக்குவதையும் பார்ப்பேன்.
முதலில் எட்வர்ட் திரிஃபீல்டை நான் இங்கேதான் சந்தித்தேன். அப்போது எனக்கு வயது பதினைந்து. பள்ளிக்கூட கோடைவிடுமுறைக்காக வந்திருந்தேன். காலை வீட்டுக்கு வந்து துவாலையும், நனையாத குளியல் டவுசரும் அள்ளிக்கொண்டு கடலுக்குப் போனேன். வானம் தெளிவாய் இருந்தது. வெதுவெதுப்பாய்க் காற்று. பிரகாசமான நாள். வட கடலில் இருந்து புறப்பட்ட காற்றுக்கு ஒரு ருசிவேறு இருந்தது. அதை உள்ளிழுக்கவே ஹ என்கிற உற்சாகம். குளிர்காலத்தில் இந்த சனங்கள் வீட்டுக்கு வெளியே வந்து காலி வீதிகளில் கீழக் காற்றின் சுரீர் தாக்கும்படி உடலை இப்படி அப்படி வளைத்துக் காட்டிக் கொண்டிருப்பார்கள். அந்தப் பரபரப்பு இப்ப இல்லை. எல்லாரும் அசமந்தமா இருக்கிறார்கள். கென்ட் சேரியின் டியுக். (பிரமுகர்) அருகே கரடியும் அதன் வித்தைக்காரனுமாய் சிலைகள். நடுவே கும்பல் கும்பலாய்க் குழுமியிருக்கும் சனம்.
கிழக்கு இங்கிலாந்துக்கார அந்த வட்டார வழக்கில் ஒரு இசைநளினம் இருக்கிறது. ஒருமாதிரி இழுத்து இழுத்து அவர்கள் பேசுவது கொஞ்சம் அசிங்கமாய் இருக்கலாம். ஆனால் ஒரு கிராமத்து நிதானப்போக்கின் அழகு, பதறாத காரியம் சிதறாது என்கிற சித்தாந்தப்போக்கு. அவசரமாப் போயி எந்தக் கோட்டையப் பிடிக்கப் போறோம்… மாநிறம். நீலக் கண். கன்னம் ஒட்டி எலும்புகள் துருத்தித் தெரியும். சுருளற்ற நீளப்பாங்கான தலைமுடி. சுத்தமான நேர்மையான திறமையான சனம். ரொம்ப அறிவாளிகள் எல்லாம் இல்லை தான். கபடதாரிகள் அல்ல. ஆரோக்கிய முகங்கள். உயரமானவர்கள் அல்ல, ஆனால் பலசாலிகளாக, சுறுசுறுப்பானவர்களாக இருந்தார்கள். அப்பவெல்லாம் அங்கே வாகனப் போக்குவரத்தே இல்லை. தெருவில் கும்பல் கூடி நின்றிருக்கும் எவரும் எந்த மணிக்கும் ஹாரனுக்கும் ஒதுங்க வேண்டியிருக்கவில்லை. எப்பவாவது மருத்துவர் வரும், நாயிழுக்கும் வண்டி. அல்லது மிட்டாய்க்காரனின் சிறு பெட்டிவண்டி தடதடவென்று வந்து போகும்.
வங்கியைக் கடக்கையில் சட்டென உள்ளே நுழைந்தேன். மேலாளரிடம் எப்பிடி இருக்கீங்க என ஒரு வார்த்தை நலம் விசாரிக்கலாம்… எங்க மாமனின் சர்ச் வார்டன் அவர். திரும்பி வெளியே வரும்போது, மாமனின் கியுரேட், ஊழியக்காரர் எதிர்ப்பட்டார். நின்று எனக்குக் கைகொடுத்தார். அவருடன் கூட யாரோ புது மனிதர். அவரை எனக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை.
தாடிவைத்த சின்ன உருவம். கடும் பழுப்பில் ஒரு இறுக்கமான நிக்கர்போக்கர் சூட். கடல்நீல வண்ண ஸ்டாக்கிங்ஸ், முட்டிவரையிலான காலுறை. கருப்பு பூட்ஸ். சேவல்கொண்டைத் தொப்பி. அந்தமாதிரி நிக்கர்போக்கர் அந்தக்காலத்தில் அபூர்வம். எங்க பக்கம் கிடையவே கிடையாது. அந்தச் சின்ன வயசின் துறுதுறுப்பில், என்னய்யா இந்தாளு என்று அலட்சியமாய் அவரை நினைத்தேன். ஆனால் கியுரேட்டிடம் பேசிக்கொண்டிருந்த போது இவர் என்னைப் பிரியமாய்ப் பார்த்தார். வெளிறிய நீலக் கண்கள் அப்போது மிளிர்ந்தன. தானும் கூடப் பேசி எங்களோடு ஐக்கியப்பட அலையிறாரு. ஆளைப்பார், விளையாட்டுசாமான் கடை ஊழியனாட்டம். நிக்கர்போக்கர் ஆசாமி கூடல்லாம் நான் சகவாசம் வெச்சிக்க மாட்டேன்.
அட நானே, என்னைப் பார், வெள்ளை ஃபிளானல் முழுசராய். (மேலிருந்து கீழ் நீள்கோடு போட்ட டவுசர்.) எவ்வளவு அம்சமா உடையணிஞ்சிருக்கேன். நீல பிளேசர் மேல்கோட்டு, அதன் மார்புப்பக்க பாக்கெட்டில் என் கைகளை நுழைத்துக் கொண்டிருந்தேன். தலையில் கருப்பு வெள்ளை நார்த்தொப்பி, பெரிய வட்ட எல்லையுடன். என் அதிர்ஷ்டம், கியுரேட் நேரமாச்சி… என்று கழட்டிக் கொண்டார். நானே இதேதடா இம்சை, எப்படி இவர்கள்கிட்டே யிருந்து புட்டுக்கப்போறேன் என்று கவலையாய் யோசித்துக் கொண்டிருந்தேன். என்றாலும் மதியவாக்கில் சபை வரை வருவதாய்ச் சொன்னார். என் மாமனிடம் தகவல் சொல்லச் சொன்னார்.
நாங்கள் பிரிய அந்தப் புதியவர் தலையாட்டி விடை தந்தார். ஒரு வெறிப்புடன் நான் பார்வையைப் பிட்டுக்கொண்டேன். சும்மா இந்தக் கோடைக்கு வந்திருக்கலாம் அவர். இந்த ஊரில் நாங்கள் யாரும் இப்படி புதியவர்களோடு கலந்து பழகுவது இல்லை. ஐய லண்டன் ஆசாமிகள் மோசமான ஆபாசஅலைச்சல் காரர்கள் என்று நினைத்தோம். வருஷா வருஷம் இவனுங்க இங்க வந்து விஷமாப் பரவி போடற ஆட்டம், அடிக்கிற லூட்டி. என்ன, வியாபாரிகளுக்கு நாலாள் புது ஆள் வந்தால் அவர்கள் வியாபாரம் கொழிக்கும்… ஆனால் அவர்களே செப்டம்பர் முடிந்ததும், இந்த உல்லாசப் பயணிகள் கிளம்புவதை ஆசுவாசமாய்ப் பார்த்தார்கள். அப்புறந்தான் எங்கள் பிளாக்ஸ்டேபிள் திரும்ப அடையாளத்துக்கு வந்தது.
குளியல் போட்டு திரும்ப வீடடைந்தேன். தலைமுடி முற்றாய்க் காய்ந்திருக்கவில்லை. அப்படியே தலையோடு ஒட்டிக்கிடந்தது. கியுரேட்டை சந்தித்ததை மாமனிடம் சொன்னேன். மதியவாக்கில் அவர் இங்க வருவார்.
”கிழவி திருமதி ஷெப்பேர்ட் வாயைப் பொளந்திட்டா” என்றார் மாமன். பிரார்த்தனை ஏற்பாடுகள், என்று எனக்கு விளக்கினார்.
கியுரேட்டின் பெயர் கல்லோவே. நெட்டையான ஒல்லி மனிதர் அவர். நன்கு பராமரிக்கப்பட்ட கருத்த தலைமுடி. வாலிப வயதினராய்த்தான் இருக்க வேண்டும். என் பார்வையில் வாலிபம் கடந்த மத்திய வயதினர்போல் பட்டார். படபடவென்று பேசினார். பேசும்போது கைகளை அந்தப்பாடு படுத்தினார். வேடிக்கையாய் இருந்தது. அவர் கையைக் கட்டிப்போட்டால் வார்த்தைகளே வராது போலிருந்தது. மாமனே அந்தாளை மதித்தார் என்று சொல்ல முடியாது. ஆனால் எங்க மாமன் படு சோம்பேறி. படுத்த சோம்பேறி. வாழைப்பழத்தை உரிச்சித் தந்தால், நீயே போடு வாய்லன்னு ஆ காட்டுவார்… துறுதுறுப்பாய் சபைவேலை செய்ய, பிரார்த்தனை கூட்டங்களுக்கு ஆள்பிடிக்க இந்தமாதிரி ஆள் அவருக்கு சௌகர்யமாய் இருந்தது. வந்து எதோ கணக்கு வழக்கு பார்த்து முடித்தபின் ஊழியக்காரர் அத்தையை நலம் விசாரிக்க எங்கள் வீட்டுக்கு வந்தார். அத்தை அவரை தேநீர் சாப்பிட இருக்கச் சொன்னாள்.
அவர் உட்கார்ந்ததும் நான் அவரிடம் கேட்டேன். ”காலைல யார்கூட பேசிட்டிருந்தீங்க?”
”அவரா? அவர் எட்வர்ட் திரிஃபீல்ட். உங்கிட்ட அவரை அறிமுகப்படுத்தி விடல்ல. உங்க மாமன் என்ன சொல்வாரோன்னு விட்டுட்டேன்…”
”வேணா வேணா… அந்தாளையெல்லாம் இவன் தெரிஞ்சிகிட்டு நாசமாப் போவான்…” என முகம் சுளித்தார் மாமன்.
”ஏன்? யார் அவர்? நம்ம பிளாக்ஸ்டேபிள் ஆள் மாதிரித் தெரியல்ல அவரு… நம்மூர்க்காரரா?”
”அவரு ஒரு பாரிஷ்ல பொறந்தவரு…” என்றார் மாமன். (பாரிஷ் – சிறு கிறித்தவ வட்டாரப் பிரிவு.) ”அவர் ஐயா, சீமாட்டி மிஸ் உல்ஃபின் ஃபெர்ன் நீதிமன்றத்தில் ஒரு மனுஅதிகாரி. ஆனால் அவர்கள் நம்ம சர்ச் கிடையாது. சேப்பல் காரர்கள்…” (அவர்கள் பிரார்த்தனைக் கூடத்தில் பாதிரிக்கு தனி மேடை உண்டு.)
”அவரு ஒரு பிளாக்ஸ்டேபிள் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார்…” என்றார் திரு கல்லோவே.
”சர்ச்ல வெச்சிதானே?” என்று கேட்டாள் அத்தை. ”ரயில் ராணுவப்படையின் மது விடுதிக்காரப் பெண்ணாகத்தான் அவள் இருந்ததாகச் சொல்றாங்க, அது வாஸ்தவந்தானா?”
”அவளைப் பார்த்தால் அப்படியொரு இடத்துக்காரியாட்டம் தான் தோணுது…” என ஊழியக்காரர் புன்னகைத்தார்.
”அவங்க இங்க ரொம்ப காலம் இருப்பாங்களா?”
”ம். அப்டிதான் படுது. அவங்க குழுவோட சேப்பல் பக்கமா ஒரு வீடு பாத்திருக்காங்க…” என்றார் ஊழியக்காரர்.
அந்தத் தெருவுக்குப் பேர் இருந்தது. ஊழியக்காரருக்கு சட்டென்று ஞாபகத்தில் வரவில்லை. எங்கள் எல்லாத் தெருவுக்குமே பேர் உண்டு. யாரும் பயன்படுத்துவதில்லை…
”அவர் இப்ப நம்ம சர்ச்சுக்கு வர்றாரா?” என்று மாமன் கேட்டார்.
”அவர்கிட்ட நான் இன்னம் இதைப் பத்தி தகவல் சொல்லல்ல…” என்றார் கல்லோவே. ”நல்லா படிச்ச மனுசன், நாகரிகந் தெரிஞ்சவர்தான் இல்லியா?” (வரமாட்டார், என்று பொருள்.)
”நம்ப முடியல்ல..” என்றார் மாமன். ”அவர் ஆளையும் பண்ணீர்க்கற காரியத்தையும் பாத்தா….. படிச்சவன் இப்பிடிப் பண்ணுவானா?”
”ஹாவர்ஷாம் பள்ளில வாசிச்சவராக்கும். எக்கச்சக்க உதவித்தொகை, பரிசுன்னு வாங்கிக் குவிச்சிருக்காரு. மேல்படிப்புக்குன்னு ‘வாதம்’ போகக்கூட உதவி கிடைச்சது. அவரு அதை ஏத்துக்கறதுக்கு பதிலா, கடலைப் பாத்து ஓடிட்டாரு…”
”தலைச்சுழி அப்பிடி. ரொம்ப குஷிப்பித்தன்னு கேள்விப்பட்டேன்…” என்றார் மாமன்.
”அவரைப் பார்த்தால் கடலோடி போல் தெரியலியே…” என்றேன் நான்.
”ஆ அதுவா. ரொம்ப வருஷம் மின்னாடியே கடலைவிட்டு வெளிய வந்திட்டாரு. அப்பறம் இது அதுன்னு என்னென்னவோ புரட்டியெடுத்திட்டிருக்காரு.”
”பேரு பெத்த பேரு. தாக ஓட்டி லேது” என்றார் மாமன்.
”இப்ப இவர் ஒரு எழுத்தாளர்ன்றாங்க…”
”இது எத்தன்னாளோ…” என்றார் மாமன்.
எழுத்தாளர்னா யாரு, எப்பிடி இருப்பாங்க… அதுவரை எனக்குத் தெரியாது. அட, என ஆர்வம் வந்தது.
”அவர் என்ன எழுதறாரு?” என்று கேட்டேன். ”புத்தகங்களா?”
”அப்டிதான் தெரியுது…” என்றார் ஊழியக்காரர். ”கட்டுரைகளும் எழுதறார். போன வசந்த காலத்தில் அவரது ஒரு நாவல் வெளியானது. குடுங்க, படிச்சிப் பாக்கலாம்னேன். தரேன்னிருக்கார்…”
”நாவல் வாசிக்கறதா? கால விரயம்தான்… நான் மாட்டேன்…” என்றார் மாமன். அவர் டைம்ஸ், கார்டியன் ரெண்டு தாள்தான், செய்திகள் வாசிப்பார்.
”அந்தப் புத்தகம் பேர் என்ன?” என்று கேட்டேன் நான்.
”என்னவோ சொன்னாரு. ஞாபகம் இல்ல.”
”அது என்ன எழவா இருந்தால் என்ன, உனக்குத் தேவையில்லாதது அது…” என்றார் மாமன். ”எலேய் கண்ட நாவலையும் படிச்சி மண்டயக் கெடுத்துக்காதடா சொல்லிட்டேன்…” என்றார். ”விடுமுறை நாள்னு வந்திருக்கே. நல்லா வெளிக்காத்துல ஆனந்தமாப் போய்வா. வீட்டுப்பாடம் கொடுத்திருப்பாங்க. கொண்டாந்திருப்பன்னு நினைக்கிறேன். அதையும் முடிககணும்…”
கொண்டு வந்திருந்தேன்… ஒரு நாவல். ஐவன் ஹோ. பத்து வயசிலேயே ஒருவாட்டி வாசித்திருக்கிறேன். இப்ப பாடத்திலேயே அது வந்து, அதை இன்னொரு வாட்டி நான் வாசித்து, அதைப் பத்தி கட்டுரை வேற எழுதணுமாம். கழுத்தறுப்பு. வேற வேலையில்லையா மனுசனுக்கு?
எட்வர்ட் திரிஃபீல்ட் பிற்காலத்தில் பெரும் பேரும் புகழும் சாதித்தார். எங்க வீட்டு மேஜையில் அவரைப்பத்தி எவ்வளவு அலட்சியமாக எல்லாரும் அன்றைக்குப் பேசினோம் என நினைத்துப் புன்னகை செய்துகொள்கிறேன். இப்ப அவரது மரணமும் சம்பவித்து விட்டது. அவரது உடலை வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் புதைக்க ஏற்பாடானபோது அவரது ரசிகர்கள் பெரிதாய்க் கிளர்ச்சி செய்தார்கள். (அபே – வசதிபடைத்தவர்களின் தேவாலயம்.)
இதுபற்றி இப்பத்தைய பிளாக்ஸ்டேபிள் போதகர் தி டெய்லி மெய்ல் நாளிதழில் கண்டனம் கூட எழுதினார். எங்கள் மாமனுக்குப் பிறகு, ஊழல் பண்ணி, மாட்டி, சபைக்கு ரெண்டு போதகர் மாத்தியாச்சி..
அவர் குறிப்பிட்டிருந்தார். திரிஃபீல்ட் பாரிஷ் ஆள். பல வருடங்கள் இங்கே வசித்தார். மட்டுமல்ல, அவரது கடைசி 25 வருடங்களை இந்தப் பக்கத்திலேயே வாழ்ந்து கழித்தார். அவரது மிக முக்கியமான புத்தகங்களில் இங்கத்திய இடங்களையெல்லாம் நெருக்கமாய் உணரும்படி எழுதிக்காட்டினார். இதே கென்ட் சேரியில்தான் அவர் அப்பா அம்மாவின் எலும்புகள் இங்கத்திய சர்ச் வளாகத்தில் புதையுண்டு அமைதி கண்டன. அவரையும் இங்கேயே புதைப்பதுதான் சரி… வெஸ்ட்மினிஸ்டர் அபேயின் தலைமை மதகுரு (டீன்) அதெல்லாங் கிடையாது என்று மறுத்துவிட்ட போது, திருமதி திரிஃபீல்ட் தான் பத்திரிகைக்குக் குறிப்பு எழுதினாள். இத்தனை மக்கள் இத்தனை நேசிக்கிற எழுத்தாளராக அவர் இருக்கிறார். அவரது ரசிகர்களின் ஏகோபித்த விருப்பத்தின் படி எளிய மனிதர்கள் நடுவிலேயே அவர் உறங்கட்டும். இந்த பிளாக்ஸ்டேபிள் மனிதர்களை அவர் எவ்வளவு அறிந்திருந்தார், விரும்பினார். அவரது விருப்பமும் அவர் பிளாக்ஸ்டேபிள் கென்ட் சேரியில் புதைக்கப்பட வேண்டும் என்பதுதான்.
அதைக்கேட்டு பிளாக்ஸ்டேபிள் சேரியே நெகிழ்ந்தது.
அன்றைக்குப் பார்த்த ஊர் அல்ல இது. இப்பத்தைய பிளாக்ஸ்டேபிள் வளர்ச்சி கண்ட பிரதேசம். அந்த சனங்களை எளிய சனங்களாகச் சொன்னால் அவர்கள் ஒத்துக்கொள்வார்களா என்பதே சந்தேகம். ஆனால் அதைவிட – நான் பிற்பாடு அறிந்தேன் – பிளாக்ஸ்டேபிள் சனங்கள் திரிஃபீல்டின் இரண்டாவது மனைவி, அவளையே ஒத்துக்கொள்ளவில்லை.

தொடரும்
storysankar@gmail.com

Series Navigationதற்காலப் பார்வையில் திருக்குறள்பஞ்சதந்திரம் தொடர் 10 சிங்கமும் முயலும்
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *