ருக்கு அத்தை 

author
1
0 minutes, 2 seconds Read
This entry is part 7 of 8 in the series 6 நவம்பர் 2022

 

                                                                          

சோம. அழகு                                                                                    

                             

மிக்க அன்புள்ள ருக்கு அத்தை,

              27 வருடங்களுக்கு முன்பு மரித்த உங்களைக் கடந்த இரண்டு வருடங்களாகத்தான் அறிவேன்.

 

வெறும் உப்பு மட்டுமே இட்டு உங்கள் கைகளால் குழையப் பிசையப்பட்ட தயிர் சாதத்திற்கே அவ்வளவு ருசி இருக்குமாம். ஒரு கை சோறு பொங்கி ஊருக்கே ஆக்கிப் போடும் கெட்டிக்காரி என ஆச்சி ஒருத்தி உங்களைச் சிலாகித்திருக்கிறாளாம். மல்லிப்பூ என்றால் உங்களுக்குக் கொள்ளைப் பிரியம். ஒரு கையில் குடம் நிறைய ஆற்றுநீரும் ஒக்கலில் கைப்பிள்ளையுமாக நடந்தே வீடு வரும் அளவிற்கு அந்த மெலிந்த அளவான தேகத்தில் யானை பலத்தை ஒளித்து வைத்திருந்திருக்கிறீர்கள். நீங்கள் கலகலவென அவ்வளவு அழகாகச் சிரிப்பீர்கள். உங்களுக்குக் கோபம் கொஞ்சம் நிறையவே வரும். பதிலடி கொடுக்கத் தயங்கவே மாட்டீர்கள். உங்களை அறியாமலேயே சில சந்தர்ப்பங்களில் மிகச் சாதாரணமாகப் பெண்ணியம் பேசியிருக்கிறீர்கள்.

 

இவ்வாறு உங்களைப் பற்றி அவ்வப்போது ஒன்றிரண்டாக அறிந்து கொண்டது தாண்டி வெகு சமீபத்தில் கேள்விப்பட்ட சில விஷயங்கள்தாம் நான் முன்பின் பார்த்திராத இனி பார்க்கவும் இயலாத உங்களை என் மனதிற்கு மிக நெருக்கமாக அழைத்து வந்… இல்லை! ஆழ்மனதில் நிரந்தரமாகக் குடியேற்றிவிட்டேன் உங்களை. ‘யார்? என்ன?’ என்றெல்லாம் பாராமல் ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’ என்று துணிவுடன் கேள்வி கேட்டு இடித்துரைக்கும் பண்பில் நமது இயல்புகள் ஒன்றிப் போவது கூட காரணமாக இருக்கலாம். கேள்விகளிலும் குற்றச்சாட்டுகளிலும் பொதிந்திருக்கும் நியாயம் தரும் வலிமை அது என்று நீங்களும் உணர்ந்தே இருந்திருப்பீர்கள். முற்போக்குச் சாயத்தைப் பூசிக் கொள்ள முயன்று இயலாமல் மூச்சுத் திணறும் தற்காலச் சமூகம் பெண் கேள்வி கேட்பதையும் தன் முடிவுகளைத் தானே எடுப்பதையும் இன்னும் அதிர்ச்சியுடனும் ஒவ்வாமையுடனும் அணுகும் நிலையில், அந்தக் காலத்தில் உங்களது துணிவு போற்றுதலுக்குரியது.

 

ஆனால் நீங்கள் ஜீவித்திருந்த காலத்தில் நிச்சயம் உங்களது துணிவை திமிர், பிடிவாதம் என்றே மொழிமாற்றம் செய்திருப்பார்கள். உங்கள் தைரியத்திற்கான பரிசாகக் கிட்டிய சில பல வசவுகளெல்லாம் உங்களைக் கொஞ்சமும் சீண்டியிருக்காது. அதையெல்லாம் லாவகமாகத் தூக்கி எறிந்திருப்பீர்கள்.  ஒருவேளை நானும் உங்களுடன் விண்ணுலகில் கைகோர்த்த பின்னர்தான் எனது இயல்பிற்கும் ஏணம், தெளிவு, உறுதிப்பாடு போன்ற நேர்மறையான பெயர்கள் சூட்டப் படுமோ என்னவோ? ஆமா… ரொம்ப அவசியம்தான். இவர்களிடம் எல்லாம் பாராட்டுப் பத்திரம் வாங்கித்தான் என்ன ஆகப் போகிறது?

 

 உறவுகளை ஒரு எட்டு தள்ளி நிற்க வைத்து வாலாட்ட விடாமல் பார்த்துக் கொண்ட உங்கள் இயல்பு பிடித்துப் போனதும் மற்றொரு முக்கிய காரணம். உங்களது சில அணுகுமுறைகளைக் கேள்விப்பட்ட பின், இப்போது நீங்கள் இருந்திருந்தால் எனது ஒவ்வொரு முடிவையும் நிலைப்பாட்டையும் ஆதரித்து இருப்பீர்கள் என்று ஆணித்தரமாக என்னால் கூற முடிகிறது.  அதுவே எனக்கான ஆறுதலும் பலமும்.

 

  எண்பதுகளில் வீட்டினரை எதிர்த்து அவ்வளவு தைரியமாகக் காதல் மணம் புரிந்தவர் நீங்கள். “23 வயசு எனக்கு, கல்யாணம் ஆகும் போது. ஒல்லியா கருப்பா கரிக்கட்டை மாதிரி இருந்த என்னிடம் அப்படி என்னதான் அவளுக்குப் பிடிச்சதோ?” – மாமா இதைக் கூறும் போதெல்லாம் ‘காதலுக்குக் கண்ணில்லை’ என்பதை நினைவு கூர விரும்பி பின் மரியாதை நிமித்தமாகக் கூறாமல் விட்டிருக்கிறேன். இதோ இப்போது எழுத்தில் கூட அப்படித்தான்! சொல்லாமல் விட்டு விடுகிறேன்…. ஹி! ஹி!

 

உங்களுக்குத் தெரியாமல் குடும்பம் ஒரு பெரிய பொருளாதாரப் பிரச்சனையில் சிக்குண்டு கிடப்பது தெரிய வந்த அன்று மனதளவில் உடைந்துதான் போயிருப்பீர்கள். பொங்கி வந்த ஆற்றாமையில் பேரொலியுடன் உங்களிடம் இருந்து புறப்பட்டு வெளி வந்து விழுந்த கேள்விகளுக்குப் பதில் ஏதும் கிடைக்காததில் உருவான கோபம் மட்டுமே உங்களை அக்குரூர முடிவிற்குத் தள்ளியதாக நான் எண்ணவில்லை. சுற்றத்தார் அர்த்தமற்றுக் கடிந்து கொண்டதையெல்லாம் அவ்வபோது கண்டு கொள்ளாது இருந்திருந்தாலும் மீண்டும் மீண்டும் எதிர்கொண்ட சாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக உங்களுள் தேங்கிக் கிடந்ததா? அல்லது அவற்றிலிருந்து உங்களை நீங்கள் மட்டுமே தற்காத்துக் கொண்டு வந்த சலிப்பா? எல்லாம் அந்தப் புள்ளியில் ஒன்று சேர்ந்து அக்கொடிய தினத்தில் உங்களுள் பெரிதாய் வெடித்திருக்க வேண்டும். எவ்வளவு மனத்திட்பம் உடையவராய் இருந்தாலும் வாழ்வில் ஏதோ ஒரு நொடி நிச்சயம் நம்பிக்கையின்மையால் சூழப்படுவோம். சட்டென தனித்து விடப்பட்ட உணர்வு இயற்கையாக இருளென வந்து கவிந்து கொள்ளும்.

 

கால எந்திரம் என்பது என் கட்டுப்பாட்டில் வர மனதார விழைந்தேன். உங்கள் உணர்வுகள் கட்டுக்கடங்காமல் காட்டாற்று வெள்ளமென எல்லா எல்லைகளையும் அழித்துச் சென்று கொண்டிருந்த வேளையில் சடாரென உங்கள் முன் தோன்றி உங்கள் கைகளை அழுந்தப் பிடித்து, என் கண்களில் கோர்த்த நீர் உங்கள் கையில் பட்டுத் தெறித்து நிற்க, “ அத்தைமா…. கொஞ்சம் பொறுமையா இருங்க… ‘இது கோழைத்தனம். இந்தச் சூழல்ல இருந்து வெளியே வந்துடலாம். மன உறுதியை விடாதீங்க’னு எல்லாம் பாமரத்தனமா சொல்லமாட்டேன். என்னால் உங்கள் நிலையை முற்றிலுமாகப் புரிந்து கொள்ள முடிகிறது” என்றவாறே உங்களை ஆரத்தழுவி “ஆனாலும் இந்த முடிவு வேண்டாம்… பிளீஸ்” என உங்கள் காதோரமாக படபடத்த குரலில் கெஞ்சிக் கூத்தாடி உங்களைத் தடுத்து நிறுத்த முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.

 

அடுக்களையில் எரிதழலுக்கு உள்ளிருந்து வெளிப்பட்ட உங்கள் அலறல், நிதானத்தை நீங்கள் முற்றிலுமாகத் துறந்துவிட்டதை உணர்த்தியது. மாமாவைச் சற்றே துணுக்குறச் செய்யவென நீங்கள் எடுத்த முடிவு நீங்களே எதிர்பாராத முடிவைத் தந்ததுதான் ஏற்றுக் கொள்ள இயலாத துன்பியல். ஏனெனில் உயிரை மாய்த்துக் கொள்ள நீங்கள் எண்ணவில்லை என்பது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகையில் “ஐயோ! ஏதோ தெரியாம உணர்ச்சிவசப்பட்டு செஞ்சுட்டேன். என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்று மாமாவிடம் நீங்கள் கூறியதிலிருந்து புலப்படுகிறது. ‘என்ன நடக்கிறது?’ என்றே புரியாத வயதில் இருந்த உங்கள் இரு மகன்களும் மருத்துவமனையில் அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடி அங்கிருந்த மீன் தொட்டியை ஆச்சரியத்துடன் கண்டு களித்ததெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உங்கள் பிள்ளைகளிடம், “நல்லா படிக்கணும்… நல்ல பசங்களா வளரணும்” என்று கூறிய போது நலமுடன் மீண்டு வரப்போவதில்லை என்பதை நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும். இந்த விடைபெறலின் போது  உங்கள் மனம் சுக்கு நூறாக உடைந்து விம்மியது இப்போதும் எனக்குக் கேட்கிறது. இறுதி நொடிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதைக் காட்டிலும் அதை அறிந்திருக்கும் கொடுமை போல் வேறு இருக்கவே முடியாது. கடைசியாக உதிர்ந்த அவ்வார்த்தைகளோடு நீங்களும் உதிரத் துவங்கிய அக்கணத்தை இழுத்துப் பிடித்து காலத்திரையைக் கிழித்துக் கொண்டு மீண்டும் உங்கள் அருகில் அமர்ந்து எனது கண்ணீர்த் துளியின் சுவடைத் தேடிப் பார்க்கிறேன். தீக்கதிர்கள் அதைக் குடித்துத் தன் தாகம் போக்கியிருக்கும் என்ற என் எண்ணத்தைப் பொய்யாக்கிய அத்துளி, விழுந்த இடத்தில் அதே ஈரத்தோடு அப்படியே இருந்தது. 25 வருடங்கள் கழித்து நமக்குள் உண்டாகப் போகும் பிணைப்பிற்கான அறிவிப்பு போலும். படுக்கையில் அரை மயக்கத்தில் இருந்த உங்கள் தலை கோதியவாறே ஒரு சில வார்த்தைகள் :

“தயவுசெஞ்சு மீண்டு வந்துடுங்க… உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் வேண்டும். இவ்வுலகில் பாரபட்சமற்ற எதிர்பார்ப்பற்ற அன்பையும் அக்கறையையும் நீங்கள் மட்டுமே அவர்களுக்குத் தர இயலும். அன்பென்றால் சாதாரண அன்பல்ல. பிள்ளைகளுக்காக உலகையே பகைத்துக் கொள்ளும் அளவிற்கான கண்மூடித்தனமான அன்பு. அது பெற்றவளிடம் மட்டுமே காணக்கிடைப்பது. இளம் பிராயத்தில் விளையாடும் போது ஏற்படும் காயங்களுக்கும் சிராய்ப்புகளுக்கும் உங்கள் அரவணைப்பு மட்டுமே அவர்களுக்குக் கதகதப்பான ஆறுதலைத் தரும். எந்த மனிதனும் தனது வெற்றிகளைப் போல் தோல்விகளையும் எவ்வித சங்கோஜமும் இன்றி வெளிப்படுத்துவது தாயிடம்தான். நீங்கள் அவர்களின் மீது வைத்திருக்கும் அபார நம்பிக்கை, அவர்கள் தளர்ந்து போகும் தருணங்களில் எல்லாம் நீங்கள் கொடுக்கப் போகும் அசாதாரண ஊக்கம் – இவற்றை வேறு யாராலும் தர இயலாது. வளர்ந்த பின் சந்திக்க இருக்கும் வாழ்க்கைச் சவால்களுக்கும் இடைவிடாத ஓட்டத்திற்கும் உங்கள் மடி மட்டுமே அவர்களுக்கு ஆசுவாசத்தை அளிக்கும். ஒரு தாய் கருக்கொள்ளும் போதே இரு உயிர்களுக்கும் இடையில் எழுதப்பட்ட இயற்கை விதி இவை. வாழ்க்கைப் பாடத்தை அவர்கள் உங்களிடம்தான் கற்க முடியும். உங்கள் வாய்ச் சொற்களில் மட்டுமல்ல; நீங்கள் வாழும் விதத்தைப் பார்த்து; உங்களது அருமையான வலிமையான ஆளுமையைப் பார்த்து.

 

உங்கள் இருப்பின்மையினால் நிறைந்த வாழ்க்கையில் இருவரும் இழந்ததே அதிகம். நீங்கள் கூறியது போல் நல்லவர்களாக வளர்ந்திருந்தால் பரவாயில்லை. உலகின் எதார்த்தத்திற்குச் சற்றும் பொருந்தமில்லாமல் அநியாயத்திற்கு நல்லவர்களாக வளர்ந்து தொலைத்திருக்கிறார்கள். வேறெப்படிச் சொல்ல? Annoyingly innocent and nice. தாம் பயன்படுத்தப் படுகிறோம் அல்லது சுரண்டப் படுகிறோம் என்பதைக் கூட உணர முடியாதவர்களாக அல்லது உணர மறுக்கிறவர்களாக இருப்பதைக் கண்டால் தோன்றுகிறது… ‘உண்மையாகவே தூங்குகிறவர்களைத்தான் எழுப்ப முடியும்’. தமக்கெனப் பணம் சேர்த்து வைப்பதையோ தமக்கென ஒரு பொருள் வாங்குவதையோ ‘சுயநலம்’ என்று நினைக்கும் இருவரையும் நொந்து கொள்வதா? அல்லது இந்நினைப்புடன் வளர நேர்ந்த சூழலை நொந்து கொள்வதா? ஒன்றிய அரசு நிறுவனம் ஒன்றில் அலுவலகப் பணியாளராகப் பணிபுரியும் மாமாவை, மேற்கொண்டு வியாபாரத்தில் முதலீடு செய்து இழப்பைப் பெருக்க வேண்டாம் என முதல் சறுக்கலிலேயே தடுக்க நீங்கள் வேண்டும். ‘திருமணம், குழந்தை என்ற கட்டமைப்புக்குள் செல்ல விரும்பும் எந்த மனிதனும் கையில் ஓரளவேனும் பொருள் சேமித்து வைப்பதை சுயநலம் என்று நினைப்பது ஒன்றும் உயரிய கொள்கை அல்ல. அதன் பெயர் ஏமாளித்தனம். இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு மனிதனும் கொஞ்சம் சுயநலத்தோடு இருந்தால் மட்டுமே பிழைக்க இயலும். தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும். குடும்பச் சூழல் அப்படி; நிலைமை கழுத்தை நெரிக்கிறது, காதைக் திருகுகிறது என்பதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் உங்கள் எதிர்காலத்திற்காகப் பணியில் சேர்ந்த இப்போதிலிருந்தே சிறிதளவேனும் சேமிக்கத் தொடங்குங்களடா’ என உரிமையோடு கடிந்து கொள்ள நீங்கள் வேண்டும். ஒரு பிள்ளையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இன்னொரு பிள்ளை பெரும்பாலான செலவை ஏற்றுக் கொள்வதை அல்லது கடனாளியாவதை எந்த அன்னையும் அனுமதிக்க மாட்டாள். உளுக்கு சளுக்கு இல்லாமல் அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க நிச்சயம் நீங்கள் விரும்பியிருக்க மாட்டீர்கள். குடும்பத்தின் பொருளாதாரம் இன்னும் அதல பாதாளத்தை நோக்கிச் செல்லவிருக்கிறது. நீங்கள் கடைசியாகக் கண்டது வெறும் தொடக்கமே! உங்களது கண்டிப்பான அணுகுமுறை மட்டுமே அந்தப் பிரளயத்தில் தங்கள் தலையைக் கொடுத்து நிலைமையைச் சீர் செய்வதிலேயே இளமைக் காலத்தின் பெரும் பகுதியைக் கழித்த உங்கள் பிள்ளைகளை அச்சுமையிலிருந்து காப்பாற்றி அவர்களுக்கு நியாயம் செய்யும்.

 

இவ்வளவு கடமைகளையும் விட்டுவிட்டுப் போகிறீர்கள் என சுட்டிக் காட்டுவதற்காகக் கூறவில்லை. மேற்கூறியவை அனைத்தும் உங்களால் மட்டுமே உங்களது கடுமையான நடவடிக்கைகளால் மட்டுமே சாத்தியப்படும் என்பதாலேயே இக்கடைசி நிமிட உரையாடல்”

 

            காலன் இவ்வளவு நேரம் என்னை அனுமதித்ததே பெரிய விஷயம் என்பதைப் போல் முன்னேறி வர, நான் உங்கள் கரங்களை இறுகப் பற்றியவாறே மறையத் துவங்குகிறேன், என் அனுமதியில்லாமல்.

 

திடீரென நீங்கள் பாளை மார்க்கெட் பகுதியில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருவதாகத் தகவல் கிடைக்கிறது. நானும் உங்களது இளைய மகனான என்னவனும் உங்களை அங்கு வந்து சந்திக்கிறோம். புகைப்படத்தில் பரிச்சயமானது போலவே அதே பச்சை நிறப் புடவை உடுத்தி அதே உருவில் அழகாக மிளிர்கிறீர்கள். நாங்கள் உள்ளே நுழையவும் எழுந்து அமர்ந்து கொண்டீர்கள். உங்கள் விரல்களில் செக்கச்செவேலென இருக்கும் மருதாணியைப் பார்த்தவாறே, அப்போதுதான் முதன்முதலாகச் சந்திக்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாது, எவ்வித முன் அறிமுகமும் இன்றி தொடங்குகின்றேன். “அத்தைமா… உங்க பேத்தி கோவத்துல அப்படியே உங்களை மாதிரி. என்னா துறு துறு தெரியுமா?” அழகிய புன்னகை ஒன்றை பதிலாகத் தருகிறீர்கள். சிறிது நேரம் அமைதியைச் சூழ விட்டு மீண்டும் தொடர்கிறேன். “பேசாம எங்களோட வந்துடுங்களேன். உங்க பேத்தியை நீங்களே வளர்த்துத் தர்றீங்களா? உங்களைக் கடைசி வரை நான் பாத்துக்குறேன்”. இதற்கும் அதே புன்னகை. ஏதோ ஒன்று மனதினுள் பாரமாய் இறங்க சட்டென முழிப்பு வந்தது. பதறி விழித்ததில் என் மீது படுத்து உறங்கிக் கொண்டிருந்த என் மகளைச் சற்று தாமதமாகத்தான் உணர்ந்தேன். அது அவள்தானா?

 

என்னவனிடம் இதைக் கூறவும் தம்முள் உருவான மென் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு, “பாரேன்… இத்தன வருஷத்துல என் கனவுல ஒரு தடவை கூட வரவில்லை. எனக்கு வெறும் யானை, பாம்புன்னு அனுப்பிட்டு உனக்கு மட்டும் வந்திருக்காங்க. குணத்துல அவங்கள மாதிரியே இருக்குற உன்னை ரொம்ப பிடிச்சுப் போச்சோ?” என்று சிரித்துக்கொண்டே கூறி பின்னர் “அவங்கதான் தேடிக் கண்டுபிடிச்சு உன்னை என்கிட்ட சேர்த்துருக்காங்க போல” என்ற போது என்னவனின் குரல் லேசாகத் தழுதழுத்தது. “ப்பா! அது…. அவங்கள நெனச்சுட்டே தூங்கியிருப்பேனாயிருக்கும். ஒண்ணு கவனிச்சீங்களா? கனவு கூட லாஜிக்கோட தான் வந்துருக்கு. நான் அவங்க உருவத்தை எப்படி பார்த்திருக்கிறேனோ அப்படியேதான் வந்தாங்க, அதே புன்னகையுடன். அவங்க குரல் எனக்குத் தெரியாது. அதனால கனவுல அவங்க பேசவும் இல்ல…” – என்னைத் தொடர விடாமல், “ப்ச்! கொஞ்சம் சும்மா இரேன். தயவுசெஞ்சு உன் அறிவியல் பார்வை, பகுத்தறிவு, ஆழ்மனதின் படிநிலைகள், கனவுகளின் விளக்கம், சிக்மண்ட் ஃப்ராய்ட்(Sigmund Freud) எல்லாத்தையும் கொஞ்ச நேரம் மூட்டை கட்டி வையேன்” என்ற என்னவனின் வேண்டுகோள்/ஆணையை ஏற்று என் கனவின் கவித்துவத்தை ரசிக்கத் துவங்கினேன். அது வரை உங்கள் புகைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் மரியாதை மட்டுமே இருந்த எனக்கு, இப்போது உங்களுள் அன்று உருவெடுத்த கையறு நிலை பற்றியும் உங்களது மனநிலை பற்றியுமே நினைவு வருவதாலோ என்னவோ… உங்கள் மீது எழும் பச்சாதாபத்தில் பிறக்கும் பரிவும் பாசமும் பன்மடங்காகிறது.

 

நீங்கள், மாமா, இரு குழந்தைகள் என அழகாக வாழ்க்கை சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் மிகவும் மகிழ்ந்திருந்த ஒரு தருணத்தில், “எனக்குப் பிடிச்ச மாதிரி மண வாழ்க்கை. முத்து முத்தாக ரெண்டு செல்வங்கள். இதுக்கு மேல ஒண்ணுமே வேண்டாம். இப்போவே செத்துட்டாலும் பரவாயில்லை எனக்கு” என நீங்கள் கூறியதை நினைவுகூறும் போதெல்லாம் மாமா சொல்வார்கள், “மகராசி… என்னத்த நெனச்சு அப்படிச் சொன்னாளோ? இப்படி ஆகும்ன்னு முன்னாடியே தெரிஞ்சுதான் அந்த வார்த்தை அவள் வாயிலிருந்து வந்ததோ?” சிதையில் நீங்கள் கிடத்தப்பட்டிருக்கும் போது உங்களைச் சுற்றி வந்த தலைமகனின் தோளில் இருந்த பானையில் இடப்பட்ட ஓட்டையிலிருந்து விழுந்து கொண்டிருந்த நீரில் இளையவன் விளையாடிக் கொண்டிருந்த பதைபதைக்கும் காட்சியை நீங்கள் (கற்பனையிலேனும்) காண நேர்ந்திருந்தால் நிச்சயம் காலனை எட்டி உதைத்தே விரட்டியிருப்பீர்கள்.

 

மற்ற யாரின் இழப்பை விடவும் அக்குழந்தைகளின் இழப்பே எனக்குப் பூதாகரமாகத் தெரிகிறது. பள்ளி, கல்லூரி, பணியிடம், சந்தித்த மனிதர்கள், பயணப்பட்ட இடங்கள் குறித்த எவ்வளவு சின்னச் சின்ன சாதாரண விஷயமாக இருந்தாலும் கூட எல்லாவற்றையும் பகிர்வதற்கான புகலிடத்தை அவர்கள் இழந்ததால் பெரும்பாலான விஷயங்கள் யாரிடமும் பகிரப்படாமல் அவர்களுள்ளேயே புதைந்து போயிருக்கும். களிப்போ கவலையோ… உணர்வுகளின் உச்சத்தில் வார்த்தைகள் கைகொடுக்காத தருணங்களில் அதை உள்ளுணர்வின் மூலம் அறிந்து அவர்களைத் தேற்ற வல்ல ஆற்றல் ஈன்று புறந்தந்தவளிடம் தான் உண்டு. யாராலும் நிரப்பவே இயலாத ஒரு வெற்றிடத்தை அச்சிறார்கள் வாழ்வில் விட்டுச் சென்றுவிட்டீர்கள். அதைப் புரிந்து கொள்ளும் வயதில் அவர்கள் அப்போது இல்லை என்பது வரமா, சாபமா? தெரியவில்லை. ஒருவேளை வளர்ந்த பின் அவ்வெற்றிடம் அவர்களுக்குப் பழகிப் போயிருக்கக் கூடும். இப்பேரிழப்பு தம்முள் நிகழ்த்திய போராட்டத்தை எங்ஙனம் எதிர்கொண்டு வெளி வந்தார்கள் என்பதெல்லாம் என் கற்பனைக்கும் எட்டாத துயரம். வெளி வர வாய்ப்பில்லை. மனதின் ஒரு ஓரத்தில் உங்களைச் சுமந்து கொண்டே வாழும் முறையை வழக்கப்படுத்திக் கொண்டார்கள் போலும். வேறு வழிதான் என்ன? அவர்களது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு மகிழ்ச்சியிலும் பங்கெடுத்து அவர்களின் வளர்ச்சியைக் கண்டு ஈன்ற பொழுதினும் பெரிதுவக்க நீங்கள் மட்டும் இருந்திருந்தால்…

 

 இப்படியாக உங்களைச் சுற்றியே என் மனப்பறவை சிறகடித்துக் கொண்டிருந்ததில் உணர்வுகள் எழுத்தாய் வெளிப்பட ஆயத்தமாயின. பேனாவினுள் மையாக உறைந்திருப்பது கூட நீங்கள்தானோ? எழுதி முடித்ததும் என் மேசையில் விழுந்த ஒற்றைக் கண்ணீர்த்துளியில் உங்கள் பெயர் தெளிவாய்த் தெரிந்த தருணம் என் மகள் ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டாள். “மீண்டு வாருங்கள்” என்று நான் கூறியதை “மீண்டும் வாருங்கள்” என்று எடுத்துக் கொண்டீர்கள் போலும். மடியில் அமர்ந்திருந்த உங்கள் கன்னங்களை வருடி ஆசையாக ஒரு முறை நெட்டி முறித்ததும் என்னை முத்தமிட்டு இறங்கி ஓடி விட்டாள். உங்கள் கைகளில் நான் விட்டுச் சென்ற கண்ணீரின் ஈரத்தை அதில் உணர்ந்தேன்.  

 

                                                                                                            இப்படிக்கு

                                                                                                                 அனு

                                                                                               

                                                                                                            – சோம. அழகு

Series Navigationபெண் விடுதலை – நூல் அறிமுகம் ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
author

Similar Posts

Comments

  1. Avatar
    Sankaramoorthi.M says:

    உண்மைலேயே மனதை கலங்க வைத்து விட்டது…
    ஒரு ஆலோசனை
    உங்களின் தமிழை இன்னும் எளிமையாக பயன்படுத்துங்கள்..
    இன்னும் நிறைய வாசகர்களை சென்றடையும்…
    நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *