முன்னணியின் பின்னணிகள் – 7 சமர்செட் மாம்

This entry is part 41 of 45 in the series 2 அக்டோபர் 2011

தமிழில் எஸ். சங்கரநாராயணன்

>>>

ஆச்சர்யமான விஷயம். அல்ராய் கியருடன் நான் விருந்து சாப்பிட்ட ரெண்டு மூணு நாளில் எனக்கு எட்வர்ட் திரிஃபீல்டின் விதவையிடமிருந்து ஒரு கடிதம் –

 

பிரியமான நண்பரே,

கடந்த வாரம் ராயுடன் நீங்கள் எட்வர்ட் திரிஃபீல்ட் பற்றி ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்ததாகக் கேள்விப்பட்டேன். அவரைப் பற்றி மனப்பூர்வமாய் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதாய் அறிய மகிழ்ச்சி. அடிக்கடி அவர் உங்களைப் பற்றி என்னிடம் பேசுவார். உங்கள் எழுத்துத் திறமையை அவர் பெரிதும் வியந்து போற்றிவந்தார். எங்கள் இல்லத்துக்கு நீங்கள் விருந்துக்கு வந்தபோது ரொம்ப திருப்திப்பட்டார் அவர். அவர் உங்களுக்கு எழுதிய கடிதங்கள் ஏதும் உங்களிடம் இருக்கலாம், நீங்கள் இன்னும் வைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இருந்தால் அதன் பிரதிகளை எனக்கு அளிக்க முடியுமா? நீங்கள் இங்கே வந்து என்னுடன் ரெண்டு மூணு நாட்கள் தங்கிப் போனால் மிக மகிழ்வேன். இப்போது ரொம்ப அமைதியான வாழ்க்கை எனக்கு. என்னுடன் இப்போது, கூட யாரும் கிடையாது. ஆக நீங்கள் உங்களுக்கு சௌகர்யமான நேரம் ஒதுக்கிக்கொண்டு வரலாம். உங்களைத் திரும்பச் சந்திக்கிறது அருமையான விஷயமாய் இருக்கும். நம் பழைய காலங்களை அசைபோட்டுக் கொள்ளலாம் அல்லவா? எனக்கு நீங்கள் ஒரு உபகாரம் பண்ணவேண்டும். அமரரான என் அருமைக் கணவருக்காக நீங்கள் இந்த உபகாரத்தை மறுக்காமல் செய்துகொடுப்பீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.

எப்போதும் நேர்மையான, தங்களுடைய,

அமி திரிஃபீல்ட்.

 

அவளை நான் ஒரேயொரு முறைதான் பார்த்திருக்கிறேன். அந்தக் கடிதத்தின் மூலம் ஓரளவு என்னை அவள் ஈர்த்தாள் தான். ஆனால் அந்த அழைப்பு, ‘பிரியமான நண்பரே’ – அது எனக்குப் பிடிக்கவில்லை. ஒருமுறை பார்த்து, ஒருதடவை அவவீட்டில் உணவு அருந்தியதில் அந்தம்மாவுக்குப் ‘பிரியம்’ வந்திட்டதாமா? அதற்கே அந்த உபகாரத்தை நான் மறுக்கலாம் போலிருந்தது. ரொம்ப சம்பிரதாய சாமர்த்தியம் பாராட்டும் கடிதம் அது. என்னை ஆயாசப்படுத்தியது. நான் அவளைப் போய்ப் பார்க்கவில்லை என்பதற்கு எம்மாதிரி காரணம் சொன்னாலும், முக்கியக் காரணம் நான் போக விரும்பவில்லை என்பதே.

என்னிடம் திரிஃபீல்ட் எழுதிய கடிதம் எதுவும் இல்லவும் இல்லை. வருட வருடங்களுக்கு முன்னால் அவர் பல தடவை எனக்கு எழுதியிருக்கிறார். எல்லாமே சின்னச் சின்னக் குறிப்புகள். ஆனால் அப்ப அவர் கையெழுத்து தெளிவற்ற கிறுக்கலாய் இருக்கும். அவற்றைப் பேணவே பராமரிக்கவே இல்லை. அப்படித் தோன்றவேயில்லை எனக்கு. நம்ம காலத்தின் ஆகப்பெரும் நாவலாசிரியர் என அவர் போற்றப்படுவார்… என்று எனக்கு எப்பிடித் தெரியும்?

அவளுக்கு நான் எதும் செய்யவேண்டும், என அவள் எதிர்பார்ப்பதில் எனக்கு அங்கே போகத் தயக்கம் இருந்தது. எனக்கு அது தேவையற்ற வில்லங்கத்தைக் கொண்டுவரும். ஆனால் என்னால் அது முடியும் என்கிற பட்சத்தில் அதை ஒரு விரைப்புடன் தவிர்க்கிறதும் முரட்டுத்தனமான காரியம். அவள் கணவன் சப்பை ஒண்ணுமில்லை. பிரமுகன்தான்.

முதல் கட்டில் வந்திருந்தது கடிதம். காலையுணவு கொண்டதும் ராய்க்குத் தொலைபேசியில் பேசினேன். என் பேரைக் கேட்ட மாத்திரத்தில் அவரது உதவியாள் உடனே இணைப்புத் தந்தாள். இது மர்மக்கதையாக இருந்தால், என் அழைப்புக்கு ஏற்கனவே அவர் காத்திருந்ததாக நான் ‘கண்டுபிடிச்சேன்’, என எழுதலாம். துப்பறியும் கதையில் வரிக்கு வரி சாகச கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. ஹல்லோ, என ராயின் உற்சாகக் குரல். என் சந்தேகம் ஊர்ஜிதமாகி விட்டது. அந்த முற்றாத காலையில் யார் இத்தனை உற்சாகம் கொண்டாடுவார்கள். ல் சேர்த்த ஹலோ

”உங்களைத் தூக்கத்தில் தொந்தரவு பண்ணிறலியே?” என்றேன்.

”சேச்சே… அதெல்லாமில்லை” என்றார் ராய். என்ன அனுபவித்த சிரிப்பு. சோடா நுரையாய் அந்த வயர்வழியே என்னை வந்து நிறைத்தது. ”நான் ஏழு மணிக்கே எழுந்திட்டேன். பூங்காவில் நடந்திட்டிருந்தேன். காலை உணவே இனிமேல்தான்… வாங்களேன். சேர்ந்து சாப்பிடலாம்.”

”எனக்கு எப்பவுமே உங்கமேல தனி அன்பு உண்டு ராய்…” என்று பதில்சொன்னேன். ”இன்னாலும் காலைல உங்களோட சாப்பிட எனக்குச் சரியா வராது. அத்தோட இப்பதான் நான் சாப்பிட்டேன். விஷயம் என்னன்னா, திருமதி திரிஃபீல்ட் கிட்டயிருந்து கடுதாசி. அவ கூடவந்து தங்கச்சொல்லி அழைச்சிருக்கா.”

”ம். உங்களை அழைக்கப்போறதா ஏற்கனவே என்கிட்டச் சொன்னாள். நாம சேர்ந்தேகூட போகலாம். ஒரு நல்ல டென்னிஸ் புல்வெளி மைதானம் அவள் பராமரிக்கிறாள். உங்களுக்கு அங்க விளையாடப் பிடிக்கும்.”

”நான் அவளுக்கு என்ன செஞ்சிதரணும்னு எதிர்பார்க்கிறாள்?”

”ஆ… அதை அவளே அவ வாயாலயே சொல்லணும்னு நான் நினைக்கிறேன்.”

ரொம்ப மென்மையாய்ப் பேசினார் ராய். தன் வருங்கால மாமனாரிடம் அவர் மருமகள் அவரது விருப்பம் அறிந்து நிறைவேற்றுகிறதைச் சொல்கிற நெகிழ்ச்சிகரமான குரல் அது. ஆனால் அதுமாதிரி எந்த நெகிழ்ச்சிக்கும் நான் மசியப்போவதில்லை.

”ஏய் சொல்லுங்க ராய்…” என்றேன். ”நான் ஒண்ணும் மூக்குறிஞ்சி சுப்பன் இல்ல. சட்னு என்னை எடுத்து சட்டைப் பைல போட்டுக்க முடியாது. என்னா விவரம், சொல்லுங்க.”

ஒரு விநாடி அந்தப் பக்கம் இருந்து பதிலே இல்லை. நான் தடாலடியாப் பேசுகிறதா அவர் முகஞ் சுளித்திருக்கலாம்.

”இந்தக் காலைவேளைல உங்களுக்கு அவசர வேலை எதும் இருக்கா?” என்று திடீரென்று கேட்டார். ”நானே வந்து வேணா உங்களைப் பார்க்கறேன்…”

”சரி வாங்க. ஒரு மணி வரை நான் இருக்கிறேன்.”

”ஒரு ஒரேமணி நேரத்ல நான் வந்திருவேன்.”

தொலைபேசியை வைத்துவிட்டு புகைக்குழாயைப் பற்றவைத்துக் கொண்டேன். திருமதி திரிஃபீல்டின் கடிதத்தை மற்றொரு முறை வாசித்தேன்.

அவர்கள் வீட்டில் நான் சாப்பிட்ட, அவள் குறிப்பிட்ட அந்த மதிய விருந்து… அது எனக்கு துப்புரவாக ஞாபகம் இருக்கிறது. தெர்கன்பரி பக்கமாய் ஒரு சீமாட்டி ஹோட்மார்ஷுடன் வார இறுதிகளை நான் விஸ்தாரமாகச் செலவிட்டு வந்தேன். அவள் கணவன் பெரும் வணிகன் என்றாலும் சமத்காரமோ, நேர்த்தியோ அற்றவன். ஹோட்மார்ஷ் புத்திசாலியான அழகான அமெரிக்க மங்கை. குடும்ப வாழ்க்கையின் கச்சடாவினால் தான் அவள் கலைஞர்களை அழைத்து போஷிக்க நினைத்தாளோ என்னவோ. ஒருமாதிரி கலந்துகட்டிய கொண்டாட்ட சந்திப்புகள் அவை. ஒருபக்கம் பெரியதனக்காரர்கள், முக்கியஸ்தர்கள். இவர்கள் நடுவே ஓவியர்கள், எழுத்தாளர்கள் நடிகர்கள் என்று, நாங்கள்… எங்களோடு கலக்க அவர்கள், அயர்ந்தார்கள். சங்கடப்பட்டார்கள்.

ஹோட்மார்ஷ் புத்தகத்தைக் கண்டாளா, ஓவியத்தை ரசித்தாளா… அதைப்பற்றி அவளுக்கு அட்சரம் தெரியாது. என்றாலும் எல்லாரையும் விருந்துக்கு அழைத்தாள். கலைஞர்கள் மத்தியில் இருப்பது அவளுக்குப் பிடித்தது. அவளுக்குப் பக்கத்தில்தான் எட்வர்ட் திரிஃபீல்ட் வசிக்கிறதாச் சொன்னாள். அத்தனை பெரிய எழுத்தாளர் அவள்வீட்டருகில் இருக்கிற பெருமை அவளுக்கு.

ஒருகாலத்தில் எனக்கு அவரை நல்லாத் தெரியும்… என்றேன் நான். ஆ, அப்டின்னா நாம ஒருநாள், வர்ற திங்கள் அவங்க வீட்டுக்கு விருந்துக்குப் போகலாமே, என்று அவள் ஆரம்பித்தாள். இப்ப வந்திருக்கிற அநேக விருந்தாளிகள் திரும்ப லண்டன் போயிருவார்கள்… என்றாள். நான் தயங்கினேன். அப்ப அந்தக்காலத்தில் நான் அவரை அறிந்தவன். அது கிட்டத்தட்ட 35 வருஷ முந்திய சமாச்சாரம். இப்ப அவருக்கு என்னை ஞாபகம் இருக்குமா. அப்பிடியே ஞாபகம் இருந்தாலும்… (எனக்குள் சொல்லிக்கொண்டேன்.) அவருக்கு என்னைப் பற்றி ஒரு உற்சாகமான நினைவாய் அது இராது.

ஆனால் இந்தக் கூட்டத்தில் துறுதுறுப்பான ஒரு இளைஞன். ஸ்காலியன் பிரபு என்று எதோ பேர். மனிதனுக்கு, இயற்கைக்கான நெறிமுறைகளுக்கு சட்டதிட்டங்களை இடுவதுக்கும் அப்பாற்பட்டு அவனுக்கு இலக்கியத்தில் கண். துப்பறியும் கதைகள் எழுதுவதில் ஒரு கிறுக்கு. ஆகா, திரிஃபீல்டா, இங்கயா இருக்கார்… என்று அவனுக்கு உடம்பே பரபரத்து விட்டது. இந்த அம்மையார் திரிஃபீல்டைப் பார்க்க… என ஆரம்பிக்கு முன்னே, ஆகா – என்றுவிட்டான். அவன் அப்பவே தயார்.

அந்த விருந்தின் பிரதம விருந்தாளியான ஒரு இளம் குண்டு மங்கை… திரிஃபீல்டா என அப்பவே வாயைப் பிளந்தாள். திரிஃபீல்டின் மகா ரசிகை அவள். அவரைப் பார்க்கிற சந்தோஷத்தில் லண்டனில் அவளுக்கு இருந்த ஒரு காரியத்தைக் கூட ஒத்திவைத்துவிட்டு எங்களுடன் சேர்ந்து கொண்டாள். திரிஃபீல்டைப் பார்க்காமல் அவள் கிளம்புவதாக இல்லை.

”ஆக இப்ப நாம நாலு பேர்… இல்லியா?” என்றாள் ஹோட்மார்ஷ். ”போதும் அவங்களுக்கும் இதுக்குமேல நாம தொந்தரவு குடுத்தா தாள மாட்டாங்க. உடனே நான் திருமதி திரிஃபீல்டுக்கு தந்தி குடுத்திர்றேன்…”

இந்தக் கும்பலோடு கூட்டுச்சேர்கிற சமாச்சாரமே எனக்கு ஒட்டவில்லை. எப்படியாவது அதை நான் தவிர்க்கப் பார்த்தேன்.

”பாவம் அவரு, தனியா ஆஸ்வாசமா இருக்கிறார்…” என்றேன் நான். ”கும்பலா அவரை மேல விழுந்து பிடுங்கறது அவருக்குப் பிடிக்காது. ரொம்ப தளர்ந்துட்டாரில்ல?”

”அதேதான். வயசான மனுசன். இவங்களுக்கு அவரைப் பார்க்கணும்னு இருந்தால் இப்பவே பார்த்திர்றது நல்லதில்லையா? இன்னம் எத்தனை காலம் இருப்பரோ தெரியல. திருமதி திரிஃபீல்ட் அவருக்கு மனுசாளைப் பார்க்க இஷ்டம்னுதான் சொல்கிறாள்… அவங்க வீட்டுக்கு யார் அடிக்கடி வர்றாங்க, மருத்துவர். போதகர்… இவங்கதான். நாம போனால் ஒரு மாறுதலா இருக்கும் இல்லியா? சுவாரஸ்யமான நபர்கள் யாரை வேணாலும் நான் அவவீட்டுக்குக் கூட்டிவரலாம்னு திருமதி திரிஃபீல்டே என்னாண்ட சொல்லீர்க்காளாக்கும். ஆனால் அவள் விருந்தாளிகளைத் தேர்ந்தெடுக்கறதில் கவனமாய்த்தான் இருந்தாக வேண்டியிருக்கு. எல்லா தர ஆட்களுமா வந்துபோயிட்டு இருந்தாலும் லாயக் படாது. பெரிய மனுசன், அவரை சும்மா பாக்கலாம்னே தினசரி கும்பல் கூடிரும். பேட்டி எடுக்க வர்றாட்கள். புது எழுத்தாளர்கள் புத்தகம் தந்து வாசிச்சிப் பாருங்க, கருத்துச் சொல்லுங்கன்னு வந்து நிப்பாங்க. சில மேனாமினுக்கிப் பொம்பளைங்கள் வேற வந்து மொய்க்கும்.

– ஆனால் திருமதி திரிஃபீல்ட் பரவால்ல, ஆள் சுதாரிப்பாய்ச் சமாளிக்கிறாள். அவருக்கு யார் யாரைச் சந்திக்கணுமோ அவர்களை அவளே முடிவுசெய்து மத்தவங்களை வடிகட்டி அனுப்பி விடுகிறாள். அவரைப் பார்க்க வர்ற கும்பலை அப்பிடியே உள்ளே அவள் அனுப்பினாளானால் ஒரே வாரத்தில் அந்தாள் மண்டையப் போட்ரும். ஆனால், நாம போயிப் பார்க்கலாம். இயல்பிலேயே நாம வித்தியாசமானவங்க இல்லியா?”

ஆமாமா, என நினைத்துக்கொண்டேன். நான் சரி, இதுங்க?… இந்த தடிச்சி சீமாட்டி, அவளைப் பெருமாட்டி என்றே சொல்லலாம். ஸ்காலியன் பிரபு. அதுங்களுக்கும் அப்படி நினைப்பு இருக்கிறதாகத் தெரிந்தது. மேல ஒண்ணுஞ் சொல்ல இல்லை.

>>>

தொடரும்

storysankar@gmail.com

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 11 – விஷ்ணுரூபம் கொண்ட நெசவாளிRequest to preserve the Tamil cultural artifacts
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *