அ.முத்துலிங்கம் சிறுகதைகளில் அயலகப்பண்பாடுகள்

author
0 minutes, 24 seconds Read
This entry is part 7 of 10 in the series 30 ஏப்ரல் 2023

ஜெயப்பிரியா,முதுகலைத்தமிழ் இரண்டாம் ஆண்டு,

 தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) (அண்ணாமலை பல்கலைக்கழகம்), விழுப்புரம் – 605401.

ஆய்வுச்சுருக்கம்:

புலம்பெயர்வு என்னும் பண்பாட்டு இடர்ப்பாடு அயலக நாடுகளில் வாழ்பவர்களுக்கு தரும் வாழ்வியல் அனுபவங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. அகதி வாழ்நிலையின் அவலங்களை பண்பாட்டு நிலையிலும் பணியிடச்சூழல் அடிப்படையிலும் இக்கட்டுரை விளக்கியுள்ளது.

முதன்மைசொற்கள்: பண்பாடு, மொழி, உணவு, இசை, சமயநம்பிக்கைகள், பணிகள், கருவிகள்.

பண்பாடு என்பது மாந்தர்களுடன் தொடர்புடைய ஒரு சொல்லாகும். இச்சொல் ஆங்கிலத்தில் CULTURE என்னும் சொல்லுக்கு இணையானப் பொருளில் தமிழில் பயன்படுத்தப்படுகின்றது. பண்பாடு பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும், அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத்தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது. மேலும், அது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், வாழ்வின் வழிமுறைகள், சமூகக் கட்டமைப்புகள் என்பனவற்றைச் சுட்டி நிற்கிறது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில்கள், கருவிகள் போன்றவையும் இப்பண்பாட்டில் அடங்கும்.

பண்பாடு – பொருள் விளக்கம்

பண்பாடு என்பது மக்களால் ஆக்கப்பெற்ற கருவி. அந்த ஊடகத்தைக் கொண்டே மக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றனர். மக்கள் தலைமுறை தலைமுறையாக குழுவாகச் சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும், பழக்கங்களும், மரபுகளும் சேர்ந்த தொகுதியே பண்பாடு ஆகும்.

‘பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்க நெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும் மனிதன் சமுதாயத்தில் ஓர் உறுப்பினராக இருந்து கற்கும் பிற திறமைகளும், பழக்கங்களும் அடங்கிய முழுமைத் தொகுதியாகும்.’  ( பக்தவட்சல பாரதி,  பண்பாட்டு மானுடவியல், பக், 151) என்று அறிஞர்களால் விளக்கம் தரப்பட்டுள்ளது.

பண்பாட்டு மாற்றம்

ஒரு குறிப்பிட்ட இனத்தில் வழங்கி வந்த பண்பாடு காலப்போக்கில் மாற்றம் பெற்றுவிடுகின்றது. இத்தகையப் பண்பாட்டு மாற்றம் என்பது குறிப்பிட்ட பண்பாட்டில் மட்டுமல்லாது பெறுகின்ற பொழுது அந்நியப் பண்பாட்டின் கூறுகளை மற்றொரு பண்பாடு ஏற்றுக்கொள்கிறது.

‘பண்பாடு மாற்றமென்பது தனியோரு செயலோடு மட்டும் தொடர்புடையது அல்ல. பல செயல்களின் மொத்த தொகுதியாகும். இந்த நிகழ்வின் ஒரு பண்பாட்டின் கூறுகள் அயல் பண்பாட்டுக் கூறுகளால் மாற்றப்படுகின்றன அகற்றப்படுகின்றன. இதனால் பண்பாட்டில் ஏற்படும் மாற்றத்தின் தொடக்கம் நிலையான இயக்கத்தைப் பெற்றுத்  தொடர்ச்சியாக வழிக்கோலுகிறது.’  (எஸ்.பொ, இ.பா, (தொ.ஆ) பனியும் பாவையும் பக்,58)

இவ்வாறு பண்பாட்டு மாற்றமானது அந்தந்தப் பண்பாட்டில் நிலைத்து இயங்கக் கூடியதாகவும், பிற பண்பாட்டுத்தாக்கத்தினால் மீள முடியாமலும் செயல்படுகின்றது.

பண்பாட்டு அதிர்வு

பண்பாட்டு மாற்றம், பண்பாட்டு அதிர்வு இவை இரண்டிற்கு இடையே மிகுதியான வேறுபாடுகள் உள்ளன. பண்பாடு மாற்றத்தில் ஒரு சமூகமானது விரும்பியோ அல்லது விரும்பாமலோ பிறிதொரு சமூக பண்பாடுகளை ஏற்றுக் கொள்கிறது. ஆனால், பண்பாட்டு அதிர்வு என்பது நிர்பந்த வசத்தால் ஒரு சமூகமானது முற்றிலும் மாறுபட்ட அயலகச்சூழல் சார்ந்த பண்பாட்டினை ஏற்றுக்கொள்ளும் நிலையாகும்.

பண்பாட்டு அதிர்வு என்பது முற்றிலும் புதிய அறிமுகமில்லாத பண்பாட்டுச் சூழலுக்குள் தள்ளப்படும் மனிதன் அல்லது குழுவின் மனநிலையினை குறிக்கும். பெரும்பாலும் இடப்பெயர்வு, காலணியநிலை, எதிர்பாராத சமூக, அரசியல் நடவடிக்கைகளால் இப்பண்பாட்டு அதிர்வுகள் ஏற்படுகின்றது. ஒவ்வொரு சமூகமும் தங்களது பண்பாடானது பிற சமூகப் பண்பாட்டை விட உயர்ந்தது என்ற மனநிலையிலேயே இயங்கிக் கொண்டிருக்கும். அவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கும் தனிநபரோ அல்லது குழுவோ புதிய பண்பாட்டுச் சூழலைக் காணும் பொழுது உடனடியாக எல்லாமே மாறுபட்டதாக உள்ளதோடு இதுவரைக் காணாத உணராத பண்பாட்டுச் சூழலுடன் வினைபுரிய வேண்டிய நெருக்கடி ஏற்படுகின்றது.

அமெரிக்க பண்பாடு

ஆசிரியர் அ.முத்துலிங்கம் வடக்குவீதி சிறுகதைத்தொகுப்பிற்கு அளித்துள்ள முன்னுரையில் அயலகப் பண்பாடுகள் குறித்து விவரிக்கின்றார். அயலகங்களில் மரியாதை செய்யும் பண்பாடு பற்றி குறிப்பிடுகையில்,

‘அமெரிக்கக்காரனுக்கு எழுந்து மரியாதை செய்து சேர் என்று அழைத்தால் பிடிப்பதில்லை. ஆங்கிலேயனுக்கு கால்களை ஒடுக்கிவைத்து மரியாதை முன்னே தலைகுனிந்து நிற்பது அசிங்கமாகப் படுகிறது. ஜெர்மன்காரனுக்கு கைகட்டி பவ்யமாக நின்றால் போதும், வேறு விளையே வேண்டாம். ஆனால் எங்கள் ஊர்களில் இன்றுகூட ஒரு பெரியவரைக் கண்டதும் தோளில் போட்ட சால்வையை எடுத்து கக்கத்தில் வைப்பது நடந்துகொண்டு தான் வருகிறது.’ ( அ.முத்துலிங்கம், வடக்கு வீதி, முன்னுரை)

இவ்வாறு பல நாடுகளில் மரியாதை செய்யும் பண்பாடு மாறுபாடு மிகுந்ததாக காணப்படுவதை ஆசிரியர் விவரிக்கின்றார். 

அமெரிக்க பண்பாடு குறித்து கூறும் ஆசிரியர்,

‘அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் பதினாறு வயதுக்கு மேல் கன்னித் தன்மையோடு ஒரு பெண் இருந்துவிட்டால் அவளுக்கு எவ்வளவு அவமானம். அவள் பொய்யுக்காவது கன்னி கழிந்துவிட்டது என்று சொல்லவேண்டிய நிர்பந்தம்.’4  (அ.முத்துலிங்கம், வடக்கு வீதி, முன்னுரை) இவ்வாறு அமெரிக்க பெண்களின் பண்பாட்டு நிலைக்குறித்து விவரிக்கின்றார். 

ஆப்பிரிக்கா பண்பாடு

வையன்னா கானா என்னும் சிறுகதையில் ஆப்பிரிக்கா பண்பாடு குறித்து,

‘ஆப்பிரிக்காவில் எல்லாம் காலில் விழும் பழக்கம் கிடையாது. கிறிஸ்தவர்கள் கணிசமாக இருக்கும் நாடு என்ற படியால் முழங்காலில் இருந்து பழக்கம் புழக்கத்தில் இருந்தது.’  (அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், வையன்னா கனா, பக்,149) இவ்வாறு ஆசிரியர் விவரிக்கின்றார். 

குதம்பேயின் தந்தம் என்னும் சிறுகதையில் ஆப்பிரிக்காவில் காடுகள் வெட்டும் பகுதிக்கு ஆலோசகராக ஆசிரியர் பணிபுரிகின்றார். அங்கு, உயர் ஆதிகாரி கொடுத்த விருந்திற்கு மனைவியை ஆசிரியர் அழைத்துச் செல்கின்றார். அத்தருணத்தில் உயர் அதிகாரியின் மனைவி ஆசிரியரின் மனைவியின் முகத்தில் இருக்கும் பொட்டினை பார்த்து, இது எந்த இனத்தைக் குறிக்கிறது என்று கேட்கிறாள். ஆசிரியருக்கும் அவருடைய மனைவிக்கும்  போகப் போகத்தான் அவர்களின் பண்பாட்டினை புரிந்துகொண்டார்கள். 

‘அங்கே குழந்தைகள் பிறந்தவுடனேயே அந்த அந்த இனம்  தங்கள் சின்னத்தை குழந்தையின் முகத்திலேயும், மார்பிலேயும் பொறித்து விடுவார்கள். ஒரு கூரிய கண்ணாடித்துண்டினால் இப்படிக் கீறிக்கொள்வார்கள். இந்த வடு இறக்கும் வரை அழியாது. இதன்படி ஒரு இனத்தவர் தங்கள் இனத்தாரை உடனே அடையாளம் கண்டு கொள்வார்கள.;’6   (அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், குதம்பேயின் தந்தம், பக்,149) உடலில் உருவாக்கும் புற அடையாளங்கள் தங்களுடைய இன மக்களை இனங்காணுவதற்கு முன்னோர்களால் உருவாக்கப்பட்ட வழிமுறைகளாக ஆப்ரிக்கா மக்கள் எண்ணுவதை இக்கதையின் வாயிலாக அறிகின்றோம்.

ஆப்பிரிக்கா பழங்குடிமக்களில் ஆண் பல பெண்களை திருமணம் செய்துக்கொள்ளும் முறை உள்ளதை இக்கதையில் ஆசிரியர் வெளிப்படுத்துகின்றார்.

‘இன்றைக்கு எங்கள் குடிகள் தலைவர் மூன்றாவது மனைவியையும் எடுத்திருக்கிறார்; பதினெட்டு வயதுப் பெண். அவளுடைய நடனத்தைப் பார்க்க ஊர் முழுக்க அங்கே கூடிவிடும்’ (அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், குதம்பேயின் தந்தம், பக்,169)

பழங்குடித்தலைவர் மணந்துகொள்ளும் மணப்பெண் ஊரார் முன்னிலையில் நடனம் ஆடுவாள் என்ற செய்தியையும் அறிகிறோம்.

ஆப்பிரிக்காவில் பெண்களை சீர் கொடுத்து மணக்கும் பழக்கம் உள்ளதை ஆசிரியர் குதம்பேயின் தந்தம் சிறுகதையில் தெரிவுப்படுத்துகின்றார். மேலும்,

‘குடிகள் தலைவருக்க இப்ப வயது 65 ஆகிறது. இது மூன்றாவது மனைவி; கொஞ்சம் குமரி அவள். 40 ஆடுகளும், 8 மாடுகளும் கொடுத்து அவளை வாங்கினாராம். இப்படியான மயக்கும் அழகி அவருக்கு மிகவும் மலிவாகவே கிடைத்துவிட்டதாக குதம்பே அபிப்பிராயப்பட்டான்.’  (அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், குதம்பேயின் தந்தம், பக்,169)

ஆப்பிரிக்க பழங்குடிமக்களின் திருமண முறைகள் குறித்தும் குதேம்பேயின் தந்தம் விவரிப்பதை அறிகின்றோம்.

அமெரிக்கா பண்பாடு

துரி என்னும் சிறுகதை அமெரிக்காவைக் கதைக்களமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க பண்பாடாக,

‘எங்களைப்போல இன்னும் பல பெற்றோரும் அமெரிக்காவின் பலபகுதிகளிலும் இருந்து அங்கே வந்திருந்தனர். பதினேழு வயது தாண்டிய பிள்ளைகளை இப்படி பெற்றோர் கூட்டிவந்து கல்லூரிகளில் சேர்ப்பது இங்கே ஒரு சடங்கு. பிள்ளைகளுடன் பெற்றோருடைய உறவுகள் துண்டிக்கப்படும் முக்கியமான நாள் இது. இதன் பிறகு பெற்றோர் வேறு, பிள்ளைகள் வேறு என்று தங்கள் பாதையில் பிரிந்து சென்று விடுவார்கள்’ (அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், குதம்பேயின் தந்தம், பக்,170)

பிள்ளைகளை கல்லூரிகளில் பெற்றோர்கள் இணைந்து வந்து சேர்க்கும் நிலை, பிள்ளைகள் தங்கள் தனித்து செயல்பட வேண்டிய கட்டாயம் ஆகியவை குறித்து ஆசிரியர் விவரிக்கின்றார்

பாக்கிஸ்தான் பண்பாடு

  கிரகணம் எனும் சிறுகதையானது பாக்கிஸ்தானை கதைக்களமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. இக்கதை பஸ்மினா என்னும் சிறுமியை மையப்பாத்திரமாகக் கொண்டுப்படைக்கப்பட்டுள்ளது. பஸ்மினாவின் தந்தை ரத்தப்பகை முன்விரோதத்தின் காரணமாக கொலைச்செய்யப்பட்டார். இதனைப் பண்பாடு ரீதியாக பாக்கிஸ்தானியர் பார்க்கும் நிலையினை,

‘இரண்டு நாட்களாக போலீஸ் வந்து விசாரணை எல்லாம் நடந்தது. மூன்று தலைமுறையாக இப்ராஹிம் குடும்பத்திற்கும், இன்னொரு குடும்பத்திற்கும் இடையில் தொடரும் இரத்தப்பகைதான் இதற்கு காரணம். சாப்பிட வழியில்லை ஆனால் கொலை செய்வதற்க மாத்திரம் தயங்கமாட்டார்கள். கொலை செய்த குடும்பம் பிராய்ச்சித்தமாக இரத்தக் காசு  கொடுத்தாலொழிய இந்தச் சண்டை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்பா இதை எங்களுக்கு அப்போது விளக்கியது ஞாபகம் இருக்கிறது.’  (அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், துரி, பக்,196)

இரத்தக்காசு என்பது கொலையுண்ட நபரின் குடும்பத்திற்கு கொலை செய்த குடும்பம் கொடுக்க வேண்டிய பணமாகும்.

பஸ்மினாவை தத்து எடுக்க ஆசிரியர் முடிவு செய்தார். எனினும் பாக்கிஸ்தானில் தத்து எடுப்பதில் உள்ள சிக்கல்களாக,

‘பாகிஸ்தானில் ஓர் இளம் முஸ்லிம் பெண்ணை தத்து எடுப்பதென்றால் அது அப்படி ஒன்றும் லேசான காரியமல்ல. எத்தனையோ பேரைப் போய் பார்க்க வேண்டும்; பேப்பருக்கு மேல் பேப்பராக நிரப்பிக் கொடுக்க வேண்டும் கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதி நினைவூட்ட வேண்டும்’  (அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், கிரகணம், பக்,228) ஆசிரியர் குறிப்பிடுகின்றார். பாக்கிஸ்தானில் பண்பாடு மிகவும் கடுமையானதாக பின்பற்றப்படுகின்றது. கிரகணம் சிறுகதையில் பாக்கிஸ்தானிய மக்களின் வாழ்வியல் நிலை விவரிக்கப்படுகின்றது.

ஆப்கானிஸ்தான் பண்பாடு

ஆப்கானிஸ்தானின் பண்பாட்டு நிலையினை ஆசிரியர் வடக்கு வீதி சிறுகதை தொகுப்பின் முன்னுரையில் விவரிக்கின்றார். 

‘எங்கள் ஊரில் எப்படி உடும்பு பிடிப்பார்கள் என்றும், அதை உயிருடன் கட்டி தொங்கவிட்டு, தோலை உரித்து என்னமாதிரி சமைப்பார்கள் என்பதையும் விவரித்தேன். அவர்கள் ஸ்தம்பித்து போய்விட்டார்கள். பத்து அவ்கானி காசு கடனுக்காக துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல தயங்காதவர்கள், கல்நெஞ்சக்காரர்கள். இவர்கள் தங்கள் வாழ்நாளில் பார்த்திராத ஒரு உடும்புக்காக இரக்கப்பட்டார்கள். என்னால் நம்ப முடியவில்லை.’ (அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், கிரகணம், பக்,234)

பணத்திற்காக கொலை செய்யக்கூடிய பண்பாட்டு நிலையினை உடையவர்கள் ஆப்கானிஸ்தானியர் என்பதனை ஆசிரியரின் கூற்றிலிருந்து உணரலாம்.  

ராகுகாலம் சிறுகதையில் தமிழ்ப் பண்பாட்டு நிலையினை நைரொபியில் கடைபிடிக்கும் தமிழர்களின் பண்பாடு, பழக்கவழக்கங்களைக் கண்டு அதிர்ச்சி அடையும் நைரோபியின் நிலையினை,

‘மாரியோ முதல் தடவையாக ஒரு வெளிநாட்டுக்காரரிடம் வேலை பார்த்தான். அதனால் அவனுக்கு அடிக்கடி சம்சயங்கள் வந்தன. டொன்னுடைய பழக்க வழக்கங்கள், விருப்பு வெறுப்புகள் ஒன்றுமே அவனுக்கு முதலில் புரிபடவில்லை. அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்றும் தெரியவில்லை. அவன் படித்த முதல் பாடம் காலையில் காரை எடுக்கும்போது பின்னோக்கி எடுக்கக்கூடாது என்பதுதான். புதிய கார் ஒன்றை வாங்கி டொன் செய்த புதிய காரியம் இவனைப் பிரமிக்க வைத்தது. பூசணிக்காய் ஒன்றைக் கார் சில்லின் கீழ் வைத்து நசித்து கார் ஓட்டியதைக் கூறி அதற்குக் காரணம் கேட்டான். நான் எனக்குத் தோன்றிய மாதிரி அர்த்தம் சொன்னதும் மிகவும் கலவரப்பட்டு யோசனையில் ஆழ்ந்தான்.’  (அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், ராகுகாலம், பக்,631) 

இவ்வாறு விவரிக்கின்றார்.  காலையில் காரைப்பின்னோக்கி எடுத்தல் தீய சகுனம் என்பதும், புதிய வாகனம் வாங்கும் பொழுது திருஷ்டிக்காக பூசணிக்காய் உடைக்கும் பழக்க நிலையினையும் நிலையையும் ஆசிரியர் இச்சிறுகதையின் வாயிலாக விவரிக்கின்றார். தமிழர்கள் அயலகங்களில் உடை, உணவு, மொழி, பழக்கவழக்கங்களில் தாயக பண்பாட்டிலிருந்து மாறுபட்டாலும் மூடப்பழக்கவழக்கங்களை அயலகங்களிலும் தொடரும் நிலையினை இச்சிறுகதை பதிவுச்செய்கின்றது.

ராகுகாலம் என்னும் சிறுகதையானது பண்பாட்டு மாற்றம் குறித்து விவரிக்கும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. இக்கதையில்,

‘ஒரு நாள் பார்த்த போது யாமா சோமா இறைச்சியை அவர்களுடன் பகிர்த்து உண்டு கொண்டிருந்தாள். அந்தச் சிறுமி ஆப்பிரிக்கச் சிநேகிதிகளின் சகவாசத்தால் முற்றிலும் மாறி வர, மாரியோவோ தன்னுடைய இயல்பான குணத்தையும், பழக்க வழக்கங்களையும் துறந்துவிட்டான். அந்த அம்மாவின் மேல் அவனுக்குப் பற்றுதல் அதிகமானது. சிறிது சிறிதாக மாமிசம் சாப்பிடுவதையே விட்டுவிட்டு அவர்களுடைய இட்லி, சாம்பார் தோசைக்கு அடிமையானான். அது மாத்திரமல்ல, சிவராத்திரி, கந்தசஷ்டி பற்றியெல்லாம் தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்திருந்தான்.’ (அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், ராகுகாலம், பக்,632)

தமிழ்ச் சிறுமி ஆப்பிரிக்க பண்பாட்டிற்கு ஏற்ப மாறுவதையும், ஆப்பிரிக்க இளைஞன் தமிழ் பாண்பாட்டிற்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்வதையும் இக்கதை பதிவுச்செய்கின்றது.

ராகுகாலம் சிறுகதையானது தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்ப மாற்றம் அடைந்த ஆப்பிரிக்க இளைஞன், தமிழர்களின் மூடப்பழக்கங்களையும் அப்படியே கடைபிடிப்பதை,

‘நெற்றியிலே திருநீறு பூசி அதிலே குங்குமப் பொட்டு. ‘ஏன், என்ன நடந்தது?’ ‘நேர்முகத் தேர்வுக்கு புதன்கிழமை பன்னிரெண்டு மணிக்குக் கூப்பிட்டிருந்தார்கள். எப்படி போக முடியும்?’  ‘நீ போகவில்லையா?’  ‘சரியான ராகுகாலம், வேலை கிடைக்கவா போகிறது?’ (அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், ராகுகாலம், பக்,635)  இவ்வாறு இக்கதை விவரிக்கின்றது. மூடநம்பிக்கையினால் நேர்முகத்தேர்விற்குச் செல்லாத ஆப்பிரிக்க இளைஞனின் நிலை இக்கதையில் பதிவுச்செய்யப்படுகின்றது.

மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான  ஜமைக்கா நாட்டின் சடங்கு முறை குறித்து  அடைப்புகள் சிறுகதையில்,

‘அலுவலகத்தில் மீனுவுக்கு பக்கத்து அடைப்பில் இருப்பவள் பெயர் எஸ்தர். அவளுடைய தேசம் ஜமய்க்கா. எந்த அறையினுள் நுழையும் முன்பும் அவள் கண்கள் பார்ப்பது வாசல் கதவுகளின் அளவுகளை. நுழைந்த பிறகு பார்ப்பது இருக்கைகளின் அகலங்களை. இரண்டு முழங்கைகளின் உதவியால் மார்புகளைத் தூக்கிக்கொண்டு வருவாள். சமீபத்தில் குழந்தை பெற்றவள். அந்தக் குழந்தையுடன் பிறந்த இருபதடி தொப்புள் கொடியை தன்னிடம் கொடுக்கும்படி ஆஸ்பத்திரியில் கேட்டபோது மறுத்துவிட்டார்கள். அவள் நாட்டிலே செய்வதுபோல சில சடங்குகளை அவளால் செய்ய முடியவில்லை. அது பெரிய வருத்தம் அவளுக்கு.’  (அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், அடைப்புகள், பக்,683)

ஜமைக்கா மக்கள் குழந்தை பிறந்தவுடன், குழந்தைக்கும் தாய்க்கும் பிணைப்பினை ஏற்படுத்திய தொப்புள் கொடியைக் கொண்டு சடங்குகள் செய்யும் முறையினை உடையவர்கள் என்பதை இக்கதையில் ஆசிரியர் பதிவுச்செய்கின்றார்.

அமெரிக்ககாரி என்னும் சிறுகதையில் மதி என்கின்ற இலங்கைப் பெண் தமிழ் பண்பாட்டு நிலையினை மீற இயலாத நிலையினால் அமெரிக்காவில் நிகழ்ந்த நிகழ்வுகள் ஆகியவற்றினால் தமது குழந்தை அமெரிக்க பண்பாட்டுடன் வளர்க்க வேண்டும் என்னும் எண்ணம் உடையவளாக மாறுகின்றாள். இந்த நிலையினை,

‘குழந்தையின் முகம் அவள் அம்மாவுடையதைப் போலவே இருந்தது. சின்னத் தலையில் முடி சுருண்டு சுருண்டு கிடந்தது. பெரிதாக வளர்ந்ததும் அவள் அம்மாவைப்போல கொண்டையை சுருட்டி வலைபோட்டு மூடுவாள். தன் நண்பிகளுடன் கட்டை பாவாடை அணிந்து கூடைப்பந்து விளையாட்டு பார்க்கப் போவாள். சரியான தருணத்தில் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரிப்பாள்.

அயலகங்களுக்குச் சென்றவர்கள் தமது பண்பாட்டு நிலையிலிருந்து மாற்றம் அடையாது காத்து வந்தாலும், அவர்களுடைய எதிர்கால தலைமுறையினர் அயலகத்தின் சூழலில் அயலகப்பண்பாட்டினை தழுவி வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாக உள்ள நிலையினை இக்கதைப் பதிவுச்செய்கின்றது.

போரில் தோற்றுப்போன குதிரைவீரன் என்னும் சிறுகதையானது அமெரிக்காவின் உச்சகட்ட  நாகரீக மாற்றத்தினை,

‘நான் எங்கேயும் ஓடிவிட மாட்டேன். போன ஞாயிறில் இருந்து நீயல்லவோ எனது காதலன். இந்த உடம்பு உன்னுடையதுதான்.’ (அ. முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் சிறுகதைகள், போரில் தோற்றுப்போன  குதிரைவீரன், பக்,732) காதலன் பணி நிமித்தம் காரணமாக மாற்றலாகி செல்லும் பொழுது மனம் ஒத்து பிரியும் நிலை அயலகங்களில் உள்ளதை இக்கதை பதிவுச்செய்கின்றது

காபுல் திராட்சை எனும் சிறுகதையில் ஆசிரியர் காபுலின் பண்பாடு, வாழ்க்கை நிலை குறித்து, ‘கள்ள பாஸ்போர்ட்காரருக்கும், அடையாள அட்டை இல்லாதோருக்கும் அனுமதி கிடையாது. வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் போன்றவற்றை வரவேற்பறையில் பாதுகாப்புக்கு விடவும். தகுந்த துணையுடன் வரும், முழுக்க முகத்திரை அணிந்த பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஆண்களுடன் வரும் பெண்கள் தங்கள் மணப்பதிவை உறுதி செய்ய வேண்டும். இப்படியாக இன்னும் பல கட்டளைகள் மோசஸின் பத்து கட்டளைகள் அப்போது எனக்கு வெகு சாதாரணமாகப்பட்டன.’   (அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், காபுல் திராட்சை, பக்,707) பண்பாடு சார்ந்த கடுமையான சட்ட திட்டங்களை தன்னகத்தே கொண்ட நாடு ஆப்கானிஸ்தான் என்பதனையும், இங்கு துப்பாக்கி கலாச்சாரம் மிகவும் இயல்பான ஒன்று என்பதையும் இக்கதையின் வாயிலாக அறிகின்றோம்.

தொகுப்புரை

அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள் கனடா, அமெரிக்கா, சுவீடன், ஸியாரா லியோன், பாக்கிஸ்தான், சுவீடன், நைஜிரியா, பிரான்ஸ், ஆப்கானிஸ்தான் என விரியும் முத்துலிங்கத்தின் கதைப்புலங்கள். புகோள ரீதியாக இடத்திற்கு இடம் மாறுபடும் மொழி, இனம், நிறம், உணவுப்பழக்கங்கள், சடங்குகள், சமய வழிபாடுகள் போன்ற இயல்பான வேறுபாடுகளால் உருவாகும் அனுபவங்களின் தன்மையை வெளிப்படுத்துகிறது.

துணை நூற்பட்டியல்

[1]பக்தவத்சல பாரதி. பண்பாட்டு மானுடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை.

[2] அ.முத்துலிங்கம்.  அ முத்துலிங்கம் கதைகள், தமிழினி பதிப்பகம், சென்னை.

[3]பீட்டர் ஜஸ்ட், ஜான் மோன்கன். சமூக பண்பாட்டு மானுடவியல், அடையாளம் பதிப்பகம், திருச்சி. 

[4] அ.முத்துலிங்கம்.  அமெரிக்ககாரி,  காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

Series Navigationபுதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் !ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி – பாகம் : 5
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *