முன்னணியின் பின்னணிகள் – 8 சமர்செட் மாம்

This entry is part 44 of 45 in the series 9 அக்டோபர் 2011

தமிழில் எஸ். சங்கரநாராயணன்

 

பளபள மஞ்சள் ரோல்ஸ் ராய்ஸ் காரில் நாங்கள் போனோம். பிளாக்ஸ்டேபிளில் இருந்து ஃபெர்ன் கோர்ட் மூணு மைல் தொலைவு. சாந்துக்கலவை பூச்சு வீடு. ஒரு 1840 வாக்கில் கட்டப்பட்டிருக்கலாம். அலட்டல் இல்லாத அறையறையாய்ப் பிரித்த எளிய வீடு. நல்ல விஸ்திரணம். காம்பவுண்டில் ரெட்டைக் கதவு. அரைச்சந்திர வில்வளைத்த வாசல் நிலை. இதேபோல முதல்மாடியிலும் இதே வில்நிலைப்படி. தணிந்த கூரையை வெளிச்சுவர் மறைத்தது. ஒரு ஏக்ரா அளவு தோட்ட நடுவில் வீடு. நெரிசலாய் உள்ளே மரங்கள். ஆனால் நன்கு பராமரிக்கப் பட்டிருந்தன. கூடத்து சாளரத்தின் வழியே வெளி தோட்டக்காட்சி குளுமை. அழகு. கிராமத்து வீட்டின் விஸ்தாரமான கூடத்தின் இலக்கண சுத்தமாய் அங்கே மேசைநாற்காலிகள். அத்தனை வசதி தேவைப்படாது, அங்கே அத்தனை ஆட்கள் வந்தமரப் போவதில்லை என்றாலுங் கூட. பரந்த நாற்காலிகள். பெரிய சோபா எல்லாவற்றுக்குமே சுத்தமான பளிச்சென்ற உறைகள். அதே டிசைனில் திரைச்சீலைகள். சிப்பன்டேல் மோஸ்தர்* சிறுமேஜைகள் மேல் பூச்சாடிகள். கிரீம் வண்ண சுவரில் வாட்டர்கலர் ஓவியங்கள். எல்லாமே இந்த நூற்றாண்டுப் படங்கள். பெரும் மலர்க்கொத்துக்கள். பிரமாண்ட பியானோ. அதன் வெள்ளிப் பட்டைகளில் பெரும் புகழ்பெற்ற நடிகைகள், அமரரான எழுத்தாளர்கள். அத்தோடு சில இளம் பிரமுகர்கள். (*Thomas Chippendale was a London cabinet-maker and furniture designer in the mid-Georgian, English Rococo, and Neoclassical styles.)

அந்த தடிச்சீ(மாட்டி) ஆ, என அந்த அறை நேர்த்தியை வியந்ததில் ஆ-ச்சர்யம் இல்லை. ஒரு பெரும் புகழ் எழுத்தாளர் மாலைநேரம் கழிக்க வேண்டிய அறை அந்த மாதிரித்தான் இருக்கும். திருமதி திரிஃபீல்ட் எங்களை நன்முகத்துடன் வரவேற்கிறாள். என்ன அவளுக்கு ஒரு 45 வயது இருக்கலாம். சின்ன சப்பை முகம். ஆனால் அங்கங்கள் கச்சிதம். தலையில் அழுத்தி ஒரு சல்லாத்துணி வேய்ந்த தொப்பி. சாம்பல் வண்ண கோட். பாவாடை. பரபரப்பு தளர்ந்த உருவம். ரொம்ப உயரமும் இல்லை. குட்டையும் கிடையாது. நம்பிக்கை தெறிக்கும் கவனமான நிமிர்வுடன் இருந்தாள்.

அவள் உள்ளூர் தேவ சபை பொறுப்பாள பண்ணையின் விதவை மகளாக இருக்கலாம். அப்படியாய் எலலாரையும் எல்லாவற்றையும் கூட்டி ஒழுங்குசெய்கிற தன்மையை அவள் அடைந்திருக்கலாம். வந்திருந்த ஒரு மதாச்சாரியருக்கும் மங்கையொருத்திக்கும் எங்களை அவள் அறிமுகம் செய்து வைத்தாள். நாங்கள் உள்ளே நுழைய சடக்கென்று அவர்கள் எழுந்து நின்றார்கள். அவர் பிளாக்ஸ்டேபிளின் போதகர். கூட அவர் மனைவி. நம்ம ரெண்டு சீமாட்டிகள் – திருமதி ஹோட்மார்ஷ் மற்றும் தடிப்பெண்மணி ரெண்டுபேருமே உடனே தங்கள்தங்கள் (அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் மரியாதை செலுத்துவதான அலட்டலுடன்) பெருந்தன்மையுடன் கைகுலுக்கினார்கள்.

அப்போது எட்வர்ட் திரிஃபீல்ட் உள்ளே நுழைந்தார். அவ்வப்போது வெளிவரும் அவரது படங்களை பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன். ஆனால் நேரில் பார்க்க இன்னும் தளர்ச்சியாய்த் தெரிந்தார். நான் நினைவில் வைத்திருந்ததை விட சின்ன உருவம். மெலிவு. மிருதுவான ¢நரைமுடிகள் முழுசுமாய்த் தலையை மறைக்கவில்லை. மழுமழுவென்ற கன்னம். தோல் அத்தனை வெளிறி ரத்தம் தெரிந்தது. நீல சோகைக் கண்கள். கண்சிமிழ் சிவப்பாய் இருந்தது. முதுபெருங் கிழமாய்த் தெரிந்தார். உதிரத் துடிக்கும் இலை. பல்செட் கட்டியிருந்தார். சிரிக்கும்போது வலியச் சிரித்தாப்போன்ற விகாரம். தாடியில்லாமல் அவரை நான் பார்த்ததே கிடையாது. உதடுகளே கூட சோகையாய் வெளிறிக் கிடந்தன. புதுசான நேர்த்தியான நீல செர்ஜ், புசுபுசுவென்ற கம்பளி சூட். ரொம்ப தளர்வான கழுத்துப்பட்டி உள்ளே சுருக்கம் விழுந்த நீண்ட கழுத்து. சுருக்கமற்ற கருப்பு டையில் ஒரு முத்து பதித்திருந்தது. விடுமுறை என்று சுவிட்சர்லாந்துக்கு ஓய்வெடுக்க வந்திருக்கிற கல்லூரிப் பேராசிரியர் போல!

அவர் வர அவரை ஒரு அவசரப் பார்வை பார்த்தாள் திருமதி. ம், என ஒரு அங்கிகாரப் புன்னகை. பண்ணிவிட்ட அலங்காரத்தைக் கலைத்துக்கொள்ளாத சமர்த்துக் குழந்தை. விருந்தாளிகளுடன் அவர் கைகுலுக்கினார். ரொம்ப சகஜமாய் என்னவோ எல்லாரிடமும் பேசினார். பின் என்னைப் பார்க்க வந்தார்.

”எப்பவும் வேலை செஞ்சிட்டே யிருக்கிற சாதனையாளன் அப்பா நீ. நான் ஒரு பழைய பெருச்சாளி. இருந்தாலும் என்னைச் சந்திக்க நீ வந்தது ரொம்ப சந்தோஷம்.”

நான் துணுக்குற்றேன். அவருக்கு என்னை நினைவிருக்கிறதா என்றே சந்தேகமாகி விட்டது எனக்கு. பழைய நினைவுகளைத் தொடர்கிற பாவனை அவர் பேச்சில் தட்டவில்லை. என் கூட வந்தாளுகள் என்னடா, இவன்பாட்டுக்குத் தன்னை திரிஃபீல்டோடு அப்டிப்  பழகினவன் என்று கதையளந்திருக்கிறான்… என்று நினைத்துவிடுவார்களோ? அட அதைவிடு, இந்தாள் நம்மை முற்ற முழுசாவே மறந்தாச்சோ?

”நம்ம கடைசியா சந்திச்சி எத்தனை வருஷமாச்சின்னே நினைவில் இல்லியே…” என நான் ஓர் சமாளிப்புப் புன்னகை சிந்தினேன்.

சட்டென என்னை ஒரு தீவிரத்தன்மையுடன் பார்த்தார். ஆனால் அந்தக் கொஞ்சநேரமே யுகமாய்ப் பட்டது எனக்கு. நான் அதிர்ந்துபோகிற மாதிரி என்னைப் பார்த்து, அட கண்சிமிட்டினார். ஒரு சின்ன துரிதச் சிமிட்டல். என்னைத்தவிர யாருமே அதைக் கண்டுகொண்டிருக்க முடியாது. அந்த முதிய முகத்தில் சட்டென இப்படியொரு பாவனை, யார் எதிர்பார்க்க முடியும்? உடனே திரும்ப அவர் சகஜப்பட்டார். முகம் சாந்தமடைந்திருந்தது. தனது மௌன வியூகத்துக்கு, கேட்கிற பாவனைக்கு வந்திருந்தார்.

விருந்து தயாராய் இருந்தது. நாங்கள் சாப்பாட்டுக் கூடத்துக்கு ஒருசேரப் போனோம்.

இந்த விருந்தைப் பற்றியும், என்ன சொல்ல, நல்ல சுவைகளின் சங்கமம். சிப்பன்டேல் பலகை விளிம்புகளில் மெழுகுவர்த்திகள். சிறு மேஜைகளும் மெலிந்த நாற்காலிகளுமே சிப்பன்டேல் மோஸ்தர்தான். சாப்பாட்டு மேஜையின் நடுவே வெள்ளிக் கிண்ணத்தில் ரோஜாமலர்கள். அதைச்சுற்றி வெள்ளிப் பாத்திரங்கள். அவற்றில் விதவிதமான சாக்லேட்கள். பெப்பர்மின்ட் கிரீம்கள். ஜார்ஜ் கால வெள்ளிக் குப்பிகளில் உப்பு மிளகுத் தூவல்பொடிகள். வெளிர் வண்ணச் சுவர்களில் சர் பீட்டர் லேலி வரைந்த ஓவியங்களின் செதுக்கல்கள். மேலே புகைபோக்கி குகை.

பழுப்புச் சீருடை அணிந்து இரண்டு வேலைக்காரப் பெண்கள் பரிமாறினார்கள். திருமதி திரிஃபீல்ட் வாய்பாட்டுக்குப் பேசிக்கொண்டிருக்க, அவர்கள் பரிமாறுவதை கவனித்துக் கொண்டிருந்தாள். அந்த ரெண்டு கென்ட்பகுதிப் பெண்களும் நல்ல வளமையான உடலுடன் இருந்தார்கள். அந்தப்பகுதிப் பெண்களைப் போல நொந்தபாவனை கொண்டாடவில்லை அவர்கள். தோல்பளபளப்பும், தோள்எலும்பு எடுப்பும்… இவர்களை இப்படி உருவாக்கியதும், இப்படி வேலைகளுக்கு அவர்களை நேர்த்தியாய்ப் பழக்கியதும்… திருமதி திரிஃபீல்ட் ஆச்சர்யமானவள்தான். அந்த நேரத்துக்கு ஏற்ற பதார்த்தாங்கள். பந்தா அலட்டல் இல்லாத உணவுவகைகள். சோமாஸ் பொதிவுகள். மேலே வெள்ளை சாஸ். வறுத்த கோழி. இளம் உருளைக்கிழங்கு. பச்சைப்பட்டாணி. ஆஸ்பாரகஸ். கூஸ்பெரி கூழ். அந்த உணவுக்கூடமும், பரிமாறப்பட்ட பதார்த்தங்களும்… ஒரு பேரும் புகழும் ஓரளவு துட்டும் பெற்ற இலக்கியவாதியின் இலக்கண அடையாளம் போலிருந்தது.

பேர்அடிபடும் பிரபலங்களின் மனைவிகள் எல்லாரையும் போலவே, திருமதி திரிஃபீல்ட் வளவள. யார் என்ன பேசினாலும் அவள் தொடர்ந்து பேசிக்கொண்டே யிருந்தாள். இவள் காட்டிய அளப்பறையில் அவள்பக்கத்தில் எங்களுக்கு தூரத்தில் அமர்ந்திருந்த அந்த மகானுபாவன் என்ன சொல்கிறார் என்றே எங்களுக்குக் கேட்கவில்லை. உற்சாகவெள்ளமாய் அவள் பொங்கினாள். எட்வர்ட் திரிஃபீல்ட் முதிர்ந்த மனிதர். அவரது உடம்பும் நித்ய கண்டம் பூர்ணாயுசு. அவருக்கு இந்த நாட்டுப்புறம்தான் உசிதம். அதனால் அவளும் அங்கேயே வளையவர வேண்டியிருந்தது.

ஆனாலும் அவள் அடிக்கடி பட்டணம் வந்துபோனாள். நாட்டுநடப்புகள் அறிந்துகொண்டாள். ஸ்காலியன் பிரபுவுடன் லண்டனில் அரங்கேறும் நாடகங்கள் பற்றி கலகலப்பாக உசாவ ஆரம்பித்துவிட்டாள். அதுவும் ராயல் அகாதெமியில் என்ன அப்பிடி கொசுவாய் மொய்க்குதே சனம். காட்சிக்கு மாட்டியிருக்கிற ஓவியங்கள் முழுக்க பார்க்கவே அவள் ரெண்டுமுறை போகவேண்டியதாயிற்று. அப்பவும் வாட்டர்கலர் ஓவியங்களைப் பார்க்க நேரமில்லாமலாச்சு. என்னதான் சொல்லுங்க, வாட்டர்கலர் ஓவியங்களே தனி அழகுதான் இல்லிங்களா. அதில் ஓவியத்தன்மை, பாவ்லா இல்லை. நிஜம் அதிகம் தெரிகிறது. பாவ்லாவே அவளுக்கு உவ்வே.

மேஜைக்கு தலைமாட்டிலும் கால்மாட்டிலும் விருந்தளிக்கும் நபர், அவர் மனைவி என அமர, போதகர் ஸ்காலியன் பிரபுவுக்கு அடுத்து அமர்ந்தார். குண்டு பெருமாட்டி யருகே போதகரின் பெண்டாட்டி. பெருமாட்டிக்கு போதகரின் மனைவியோடு கலந்துரையாட வேண்டிவந்தது. தொழிலாளிகளின் சேரிகள் பற்றி போதகரின் பெண்டாட்டியை விடவும் அறிந்தாப்போல அள்ளிவீச ஆரம்பித்தாள். அவரவர்கள் முடிச்சு போட்டுக்கொண்டதில் நான் சுதந்திரமாய் எட்வர்ட் திரிஃபீல்டை கவனித்துக் கொண்டிருந்தேன். லேடி ஹோட்மார்ஷோடு அவர் உரையாடிக் கொண்டிருந்தார். ஒரு நாவலை எப்படி எழுதவேண்டும் என்கிற மாதிரி கிட்டத்தட்ட வகுப்புபோல அவள் பேசிக்கொண்டிருந்தாள் அவரிடம். நீங்க இந்த நாவலெல்லாம் அவஸ்யம் வாசிச்சிப் பார்க்கணும், என ஒரு ஜாபிதாவையும் முன்வைத்துக் கொண்டிருந்தாள். முரண்டாமல் தேமேன கேட்டுக்கொண்டிருந்தார் அவர். இடையிடையே சின்னதாய் ஓன்றிரண்டு வார்த்தை மாத்திரம் பேசினார். என்ன பேசினார் இங்கிருந்து எனக்குக் கேட்கவில்லை. பேசும்போது சிறு துள்ளலான அசைவுகளை, புன்னகையை அவள் வீசிப்பேசினாள். பார்க்க பொதுவாக அது அழகாகவே இருந்தது. அவரும் அதற்கு ஒரு அதிராத புன்னகையை பதிலாகத் தந்தார்…. ஏய், பரவாயில்லையப்பா இந்தப் பொம்பளை, ரொம்ப மோசங் கிடையாது.

பழசையெல்லாம் அசைபோட்டபடி நான் நினைத்துக்கொண்டேன். இந்தக் கும்பலைப் பற்றி அவருக்கு என்ன அபிப்ராயம் இருக்கும்? சமூக அந்தஸ்து கோரும் பெண்டாட்டி. திறமைசாலிதான். அவரை எத்தனை சீராய் கவனித்துக்கொள்கிறாள். நல்ல வாழ்க்கைச் சூழலையும் இந்நாட்களில் அவர் அடைந்துவிட்டிருக்கிறார். ஒருவேளை தன் ஆரம்ப கட்ட லீலைகளையிட்டு இப்போது வருத்தம் கொள்வாரோ? இந்த சந்திப்பு, சூழல் இதெல்லாம் அவருக்குப் பிடிக்கிறதா, அல்லது மகா அறுவையாக உள்ளுக்குள் உணர்ந்து சபை மரியாதைக்காக சகித்துக் கொண்டிருக்கிறாரா?

நான் அவரையே பார்த்தபடி யோசித்துக்கொண்டிருந்ததில் உறுத்தியதோ, சட்டென என் கண்ணை நேருக்குநேர் சந்தித்தார். ஒரு யோசனையான பார்வை. இதமான என்றாலும் எடைபோடும் பார்வை. சட்டென்று இம்முறை தற்செயலாக அல்ல, என்னைப் பார்த்து வக்கணையாய் கண்சிமிட்டினார். அட கிழத்துக்கு என்ன குசும்பு, என் ஒரு திகைப்பே என்னை முட்டியது. இதற்கு எப்படி பதில் தர என்றே புரிபடவில்லை. ஒரு அசட்டுச் சிரிப்பு, அதைத்தான் பதிலாய்த் தர முடிந்தது.

இப்போது பெருமாட்டி ஹோட்மார்ஷ் பேச்சில் இடைப்புகுந்தாள். போதகரின் மனைவி, அவள் என்னைப் பார்க்கத் திரும்பினாள்.

”ரொம்ப வருஷம் முன்னாடியே உங்களுக்கு சாரைத் தெரியும், இல்லிங்களா?” தணிந்த குரலில் என்னிடம் அவள் கேட்டாள்.

”ஆமாம்.”

சுற்றுமுற்றும் எங்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை ஒருநோட்டம் பார்த்துக்கொண்டாள் அவள்.

”அவர் மனைவி நீங்கள் அவரிடம் பழைய நினைவுகளைக் கிளர்த்திவிட்டு விடுவீர்களோ என்று கவலைப்படுகிறாள். எதாவது சொல்லி அவர் வருத்தப்படறாப்ல ஆயிறக்கூடாது இல்லிங்களா? மனுசன்ட்ட இப்ப தெம்பே இல்லை. சின்ன விஷயம் கூட அவரை ரொம்ப பாதிச்சிருது…”

”அதுண்மைதான். நான் கவனமா நடந்துக்கறேன்…”

”அவ அவரை என்னமா கண்ணின் மணியாப் பாத்துக்கறா பாருங்க… பத்தினின்னா அப்டிதான் இருக்கணும்னு நமக்கு வாழ்ந்து காட்டறா. மகத்தான பொறுப்பு அது. நல்லா பொறுப்பு உணர்ந்து அவ செய்யறா. தன்னலமற்ற அவளது பணிவிடையை விவரிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை.”

அவள் குரலை இன்னுமாய்த் தாழ்த்திக்கொண்டாள்.

”அவருக்கும் கொள்ளையா வயசாயிட்டது. எதாவது ஏடாகூடமா செய்யறதோ, நடந்துக்கறதோன்னு இருப்பாங்க. ஆனாலும் அவளுக்குதான் எத்தனை பொறுமை. அவ பொறுமையிழந்து நான் பார்த்ததே யில்லை. அவரை எவ்வளவு மதிக்கிறோமோ, ஒருவகைல இவளையும் நான் அதேஅளவு மதிக்கிறேன்…”

இந்த மாதிரியெல்லாம் ஒருத்தர் பேசுகிறபோது நம்மால் பதில் என்று எதும் வாயைத் திறக்க முடியாமல் போகிறது. ஆனால் இவள் என்னிடம் கருத்துக் கேட்கிறாப் போலவும் த்வனி இருக்கிறது.

”எல்லாத்தையும் வெச்சிப் பார்க்கிற போது அவர் பரவாயில்ல, நல்லாதான் இருக்கிறார்….” என முணுமுணுப்பாய்ச் சொன்னேன்.

”எல்லாம் அவளது கைங்கர்யம்.”

விருந்து முடிந்தது. நாங்கள் கூடத்துக்குத் திரும்ப வந்தோம். ஒண்ணு ரெண்டு நிமிடங்கள் அங்கே அப்படியே நின்றிருந்தோம். பிறகு எட்வர்ட் திரிஃபீல்ட் என்னிடம் வந்தார். அப்போது நான் போதகருடன் பேசிக்கொண்டிருந்தேன். இம்மாதிரி சந்தர்ப்பங்களில் அழகியல் சார்ந்து வெளிக்காட்சியை வர்ணித்துப் பேசுவது நல்லா யிருக்கும் என்று பட்டது. நான் விருந்தளித்தவரைப் பார்க்கத் திரும்பினேன்.

”ஜன்னல் வழியே அதோ வரிசையாய்ச் சின்னச் சின்னக் குடிசைகள்… பார்க்க எத்தனை ஓவியத்தன்மையா இருக்குன்னு சொல்லிட்டிருந்தேன்…”

அவரும் பார்த்தார். தூரத்தில் கலங்கித் தெரியும் காட்சிகள். அவர்முகத்தில் புதிராய்ப் புன்னகை. உதட்டை ஒருமாதிரி மடித்தார்.

”அந்தக் குடிசைங்கள்ல ஒண்ணில்தான் நான் பிறந்தது… சம்பந்தமே இல்லை, போல இருக்கா?”

ஆனால் திருமதி திரிஃபீல்டு எங்களைப் பார்க்க அமரிக்கையாய் வந்தாள். மிருதுவான துடிப்பான குரல்.

”ஓ எட்வர்ட்,. நம்ம பெருமாட்டி நீங்க எங்க உட்கார்ந்து எழுதுவீங்களோ அந்த அறையைப் பார்க்க விரும்புவாங்க. அவங்க உடனே கிளம்பணும்…”

”என்னை மன்னிக்கணும். நான் எப்படியும் 318 தேர்கன்பரி வண்டியைப் பிடிச்சாகணும்…” (பஸ்.)

திரிஃபீல்டின் வாசிப்பறைக்குள் நாங்கள் குழுமினோம். வீட்டின் மற்ற பக்கத்திலான பெரிய அறை அது. வெளிப்பார்வைக்கு சமையல் கூடத்தை ஒத்திருந்தது. அதே வில்லெடுத்த நிலையுடன் சன்னல். இலக்கியவாதி கணவனுக்கு பக்திபூர்வ பதிவிரதை அமைத்துக்கொடுக்கிற சகல இலக்கணங்களுடன் இருந்தது அந்த அறை. தூசு தும்பு அற்ற அறை. அறையில் பூச்சாடிகள் பெண்ணின் ஒத்துழைப்பை அறிவித்தன. ஆண்கள் வேலைமெனக்கெட்டு பூவைப் பறித்து கொண்டுவந்து பூச்சாடியில் செருகி அழகு பார்த்துக்கொண்டிரார்.

”இந்த மேசை இல்லே? எழுத்தின் பிற்காலத்தின் அனைத்து படைப்புகளையும் இதில்தான் எழுதினார் சார்…” என்றாள் திருமதி. மேசையில் பாதி வாசித்த நிலையில் குப்புறக் கிடந்த ஒரு புத்தகத்தை எடுத்து மூடி வைத்தாள். ”டிலக்ஸ் பதிப்பு, சிறப்பு வெளியீட்டின் மூன்றாம் தொகுதிக்கு அட்டைப்படம் இதோ… எல்லாம் கால வரிசையில் பிரிக்கப்பட்ட தொகுதிகள்.”

அவரது எழுதுமேசையை எல்லாரும் ஆகா என வியந்தோம். லேடி ஹோட்மார்ஷுக்கு அது நல்ல தரமான மரமா என்று சிறு சந்தேகம். யாரும் அறியாதபடி அவள் மேசைக்கு அடியில் விரலால் தடவிப் பார்த்தாள். ஆனால் அவள் சந்தேகத்தை திருமதி திரிஃபீல்ட் கண்டுகொண்டாள். சட்டெனப் பிரகாசமாகிப் பேசினாள் அவள்.

”அவரது கையெழுத்துப் பிரதி எதும் பார்க்க விரும்புகிறீர்களா?”

பெருமாட்டி, ”ம். பாக்கணும்…” என்றாள். ”அத்தோட நான் கிளம்பியாகணும்…”

திருமதி திரிஃபீல்ட் பீரோ ஒன்றில் இருந்து மொராக்கோ ஒட்டி பைன்ட் செய்யப்பட்ட நீலப் புத்தகம்… கையெழுத்துப் பிரதியை எடுத்தாள். மகா பவித்ரத்துடன் எல்லாரும் அதை வாங்கிப் புரட்டினார்கள். அறையில் அடுக்கப்பட்டிருந்த மத்த புத்தகங்களைப் பார்த்தேன். எல்லா எழுத்தாளர்களையும் போலவே எனக்கும் அரிப்பு. என் புத்தகம் எதும் அங்கே இருக்கிறதா? இல்லை. ஆனால் அல்ராய் கியரின் எல்லா புத்தகங்களுமே வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும் அநேக பிரபல நாவல்கள் பளிச்சென்ற கட்டுமானத்துடன். அந்த நேர்த்தியும் சுத்தமும், அதை யாரும் புரட்டிக்கூட இருக்க மாட்டார்கள் என்று அறிவித்தன. எல்லாம் இளங்குருத்து எழுத்தாளர்கள் தங்கள் குருவுக்கான காணிக்கையாகவோ அஞ்சலியாகவோ அனுப்பி வைத்தவை. செத்தவனுக்கு இரங்கல் குறிப்பு போல… பதிப்பாளர் விளம்பரத்துக்கு பயன்படுதிதும் வார்த்தைகள், படங்கள் என எத்தனையோ விதத்தில் அங்கே அந்தப் புத்தகங்கள் அடையாளப்படலாம்.

ஆனால் கச்சிதமாய் உயர அளவில் அடுக்கப்ட்டிருந்தன. வரிசை ஒழுங்கு கலையாமல் அவற்றைப் பார்க்கையில் அவை ஒருமுறை போய் அடைந்தபின் திரும்ப இடம்பெயரவே இல்லை என்றுதான் இருந்தது. ஆக்ஸ்ஃபோர்டு அகராதி. அநேக ஆங்கில பேரிலக்கியங்களின் தேர்ந்த மகா வரிசை. ஃபீல்டிங். போஸ்வெல். ஹஸ்லிட்…. என நீண்ட ரயில்தொடர். கடல் பற்றிய அருமையான புத்தகங்கள். கடல்வழி மார்க்கக் குறிப்புகள் சுமந்த புத்தகங்கள். தோட்டக்கலை.

அந்த அறை வெறும் எழுத்தாளரின் செயல்கூடம் மாத்திரம் அல்ல. ஒரு பெரிய எழுத்தாளரின் நினைவுச் சின்னம் என்கிற சாவுநெடியும் அதில் இருந்தாப் போலிருந்தது. அங்கே பார்வையாளராக வந்த வெகு சிலருக்கே கூட அதன் அருங்காட்சியக சாயல் தாக்கியது. இப்ப இந்தவயசில் இந்தச் சோர்வில் அவர் எதும் படிக்க விரும்பினாலுமே கூட தோட்டக்கலை பத்திரிகை, கடல்சார்ந்த இதழ் எதாவது என்றுதான் கையில் எடுப்பார். மேசையின் ஓரு ஓரத்தில் அப்படிப் பத்திரிகைகளின் குவியலை நான் பார்த்தேன்.

பெண்கள் பார்க்க விரும்பியதெல்லாம் பார்த்து முடித்தார்கள். நாங்களும் விடைபெற்றோம். ஆனால் லேடி ஹோட்மார்ஷ் காரியக்காரி. இந்த மொத்த விருந்துமே என்னை சாக்காகக் கொண்டு தற்செயலாக அமைந்ததுதான்… ஆனால் நேரமிதுவரை நான் எட்வர்ட் திரிஃபீல்டுடன் ஒரு வார்த்தை போலும் கலந்துரையாடவில்லை என்பதை அவள் கவனித்துவிட்டாள். வாசல்வரை எல்லாரும் நகர்கிறோம். போட்டு உடைத்தாப் போல கேட்டாள் லேடி.

”சார், நீங்களும் திரு ஆஷென்டெனும் ரொம்ப வருஷங்களாப் பழக்கமாமே… கேள்விப்பட்டு ரொம்ப சுவாரஸ்யப்பட்டேன். அப்ப இவர் எப்பிடி? சமத்துக் குட்டியா இருந்தாரா?”

அதேபாணி புதிரான ஒரு பார்வையை என்மேல் பதித்தார் திரிஃபீல்ட். யாரும் அங்கே இல்லை என்றால் அ, என நாக்கை நீட்டி என்னை அலட்சித்திருப்பார்.

”சங்கோஜி” என்றார் அவர். ”அவனுக்கு நான் சைக்கிள் ஓட்ட கற்றுத் தந்தேன்.”

திரும்ப அந்த பரந்த மஞ்சள் ரோல்ஸ் வாகனத்துள் அடங்கினோம். வண்டி கிளம்பியது.

”தங்கமான மனுசன்…” என்றாள் பெருமாட்டி. ”நாம சந்திச்சது எனக்கு ரொம்ப சந்தோஷமாச்சு.”

”நல்லா விகல்பமில்லாமல் பழகறாரு… இல்லையா?” என்றாள் ஹோட்மார்ஷ்.

”பட்டாணியை முள்கரண்டி கத்தின்னு குடுத்து நாம அவரைச் சாப்பிடச் சொல்ல வேணாம்னு நினைச்சீங்க இல்லையா?” என நான் லேடியைக் கேட்டேன்.

”ஏன்? கரண்டியால் அவர் சாப்பிடுவது… பார்க்க நன்றாகத்தான் இருந்திருக்கும்…” என்றான் ஸ்காலியன்.

”அவர் சாப்பிட ரொம்பத் திண்டாடியிருப்பார்…” என்றாள் பெருமாட்டி. ”நான் எத்தனையோ தரம் நானே முயற்சி பண்ணியிருக்கேன். கரண்டியால என்னால பட்டாணியைச் சாப்பிட முடிஞ்சதே இல்லை…”

”குத்தி எடுக்கணும்….”.

”ஐய அது நல்லா இருக்காது…” இது பெருமாட்டி.  ”அதை கத்தில எடுத்தாலே அப்படியே நிற்க வைக்க படாத பாடு படணும். இங்கயும் அங்கயுமா ஓடும் சனியன்.”

”திருமதி திரிஃபீல்ட் பத்தி என்ன நினைக்கறீங்க?” என்று கேட்டாள் ஹோட்மார்ஷ்.

”அவ சரியா ஜாடிக்கு மூடி…” என்றாள் பெருமாட்டி.

”அந்தாளுக்கு வயசாயிட்டது. சூதுவாதற்ற எளிய மனுசன். யாராவது அவரைப் பாத்துக்க வேண்டியிருக்கு. தெரியுமா? அவள் ஒரு மருத்துவமனை தாதியாக்கும்…”

”அப்டியா அது…” என்றாள் பெருமாட்டி. ”நான் நினைச்சேன்… அவரோட உதவியாள், அல்லது தட்டச்சுக்காரி… இப்டி எதாவதா இருப்பாள்னு நினைச்சிருந்தேன்.”

”நல்ல பெண் அவள்…” என்றாள் ஹோட்மார்ஷ். சிநேகிதியின் பரிவு அது.

”ஆமாமா.”

”ஒரு இருபது வர்ஷம் முன்னால அவர் ரொம்ப படுத்திட்டார். அப்ப அவதான் அவரோட தாதியா இருந்தா. அவர் உடம்பு தேறியதும் அவளையே கல்யாணம் கட்டிக்கிட்டார்.”

”இந்த ஆம்பிளைங்க செய்யிறதே வேடிக்கையா இருக்கு. அவருக்கு அவள் ரொம்ப வருஷம் இளையவள். அவ வயசு என்ன, ஒரு 40? 45?”

”ம்ஹும். கூட. 47. அவருக்காக அவள் எவ்வளவோ செஞ்சிருக்கான்னு கேள்வி. அதாவது, அவரை ஒரு மனுசனா ஆளாக்கி விட்ருக்கா அவ. அல்ராய் கியர் என்னிடம் சொன்னார்… இவளைப் பார்க்குமுன்னாடி அவர் ரொம்ப காமாசோமாவா இருந்தாராம்.”

”எழுத்தாளர்களின் பெண்டாட்டிகள் எல்லாரும் ஒரேதரம்…”

”ரொம்ப அறுவைக்கேசுங்க அவள்கள்… இல்லியா?”

”எப்பவும் அடுத்தாளை ஒருமாத்து குறைச்சே நினைக்கிறது… தங்களைப் பத்தி அப்டி நினைக்கிறார்கள் இல்லை.”

”பாதகத்திகள்… ரொம்ப சுவாரஸ்யமானவர்களா அவர்களை மத்தவங்க நினைக்கிறதா இவங்களுக்குதான் எத்தனை பிரமை” என நான் மெல்ல முணுமுணுத்தேன்.

தெர்கன்பரியை அடைந்திருந்தோம். பேருந்து நிலையத்தில் பெருமாட்டி இறங்கிக்கொண்டாள். கார் தொடர்ந்து ஓடியது.

 

தொடரும்

storysankar@gmail.com

 

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்பேசும் படங்கள்::: பஸ்ஸ்டாண்டில் சாரயக்கடை வருமா…?
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *