தமிழில் எஸ்.ஷங்கரநாராயணன்
சட்டென சீதோஷ்ணநிலை உருமாறி விட்டது. திடீரென குளிராய் இருந்தது. சடசடவென கனமான மழை பெய்ய ஆரம்பித்தது. நாங்கள் பொதுவாக சைகிளில் சற்றித் திரிகிற பயணம் தடைப்பட்டுப் போனது. எனினும் எனக்கு அதில் வருத்தம் ஒன்றுமில்லை. அந்த ஜார்ஜ் கெம்ப்போடு அவளை ஒண்ணாப் பார்த்துத் தொலைத்தபிறகு, இப்ப திருமதி திரிஃபீல்ட் முகத்தை எப்பிடி நேருக்கு நேர் சந்திப்பது, என்னால் முடியுமா அது?
அந்தக் காட்சி என்னைக் கலவரப்படுத்தியது, ஆனால் அதிர்ச்சிப் படுத்தவில்லை தான். ஒரு பெரியாம்பளை தருகிறான் முத்தம், அதை எப்பிடி அவள் விரும்பினாளோ, அதே தெரியவில்லை. கல்யாணங் கட்டி அவனுக்கு குழந்தைகள் வேறு இருக்கின்றன. இதெப்படி சாத்தியம், என நான் மூளையைப் பிறாண்டினேன். ஆ, நான் படித்த நாவல்களின் விவரணைப்படி… அந்த ஜார்ஜ் கெம்ப், அவனிடம் எதோ ரகசிய சக்தி இருக்கிறது. தன் வித்தையால் அவளை அடிமைப்படுத்தி, வசியம் பண்ணி தன் பிடிக்குள் அவளை இறுக்கி வைத்துக் கொண்டிருக்கிறான். ஒரு பிசாசுத்தனமான மயக்க நிலையில் ஆழ்த்தி, அவளைக் கட்டிப் பிடிக்கிறான். மந்திர தந்திரக் கதைகளை நான் மனசுக்குள் கற்பனையாய் விரித்துப் பறக்க ஆரம்பித்தேன். கள்ளக் காதல், கொலை, மோசடி!…
நாவல்களில் வருகிற இரக்கம் சுரக்க வைக்கிற பெண் கதாபாத்திரங்கள், இந்த வில்லன்களை ஏமாற்றி அவர்கள் குற்றத்தை சந்திக்குக் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார்கள். ஒருவேளை நம்ம திருமதி திரிஃபீல்ட் துட்டுக்காக இப்படி இணங்கிப் போயிருப்பாளாய் இ,ருக்கும்… ஆனால் அதன் தாத்பரியம் எனக்கு அத்தனை தெளிவாக விளங்கவில்லை. துட்டருமை தெரியா என் பருவம் அது. எது எப்படியிருப்பினும் இதன் விளைவுகள் விபரீதமானவை.
அவளது நெடிய இரவுகள். உறக்கம் பிடிக்காமல் ஜன்னல் பக்கமாய் அமர்ந்திருக்கிறாள். தலைவிரி கோலம். கடும் இருளைப் பார்த்தபடி பெருமூச்சுடன் விடியலுக்குக் காத்திருக்கிறாள்… இப்படியாய் அவளது கவலைக்கோலத்தையிட்டு என் மனதில் சித்திரம்.
ஆ இப்போது என்னைப் பற்றி… வெறும் பதினைந்து வயசுப் பையன் அல்ல, ஆறு பென்ஸ் கைச்செலவுத் துட்டுக்காரன், அல்ல நான். நல்ல உசரம் நான் இப்போது. பளபளவென்று பொலியும் மீசை. வஜ்ரம் பாய்ந்த ஆஜானுபாகு. பளிச்சென்ற மாலை உடை… உற்சாகமும் துள்ளலும் பராக்கிரமங்களுமான நபர் நான் இப்போது. ஆ அவளை ஒருத்தன் எதோ ரகசியத்தை வைத்துக்கொண்டு மிரட்டிப் பணிய வைத்துக்கொண்டிருக்கிறான்… அந்த முரடனிடம் இருந்து நான் அவளை மீட்பேன். டிஷ்யூம். டிஷ்யூம்…
ஆனால் அதேசமயம், அவள் தன் விருப்பப்படியே தான் அந்த ஜார்ஜ் பிரபுவின் அணைப்புக்கு அடங்கி, இணங்கிப் போனாள் என்றும் பட்டது. இப்போது கூட அவளது அந்த சிணுங்கல் சிரிப்பு என் காதில் கேட்கிறது. அந்தச் சிரிப்பின் உணர்ச்சிகள், த்வனி அதுவரை நான் அறியாதது. குபீரென்று ஒரு திணறல் ஏற்பட்டது அதைக் கேட்டபோது.
விடுப்பு நாட்களின் மீதிப் பகுதியில் திரிஃபீல்ட் தம்பதியரை நான் ஒரே ஒருமுறை தான் பார்த்தேன். ஊருக்குள் தற்செயலாக அவர்களை நான் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் நின்று என்னுடன் பேசினார்கள். அவர்களைப் பார்த்ததும் கூச்சம் என்னைப் பிடுங்கித் தின்றது. அதுவும் திருமதி திரிஃபீல்டைப் பார்க்கிறபோது என் முகம் சிவந்துவிட்டது. அவளிடமோ குற்ற உணர்வோ, ரகசிய பாவனையோ அறவே இல்லை. அதே மென்மையான நீல நயனங்கள். அதே குழந்தைப்பாங்கன குறும்புப் பார்வை. அடிக்கடி அவள் தன் வாயை வியப்புபோல் சற்றே திறப்பாள். இப்போது சிரித்துவிடுவாள் என்றிருக்கும். பெரிய சிவந்த அதரங்கள். அந்த முகம் மாசு மருவற்று, வெளிப்படையாய், வெள்ளந்தி முகமாகவே இருந்தது. ரொம்ப மனப்பூர்வமான வெளிப்படையான முகம். எதையும் அது மறைப்பதாகத் தெரியவில்லை. அப்போது அதை விளக்கத் தெரிந்திராது எனக்கு, என்றாலும் அந்த பரிசுத்த எளிமையை நான் அப்போது நிதரிசனமாய் உணர்ந்தேன். அப்ப அதைப் பற்றிக் கேட்டால் என்ன சொல்லியிருப்பேன்?… எத்தனை நெஞ்சு நிமிர்த்திய நேர்கொண்ட பார்வை அது. அப்படியொருத்தி ஜார்ஜ் பிரபுவோட எதும் ‘வில்லங்கம்’ வைத்திருப்பாளா, மாட்டுவாளா… மாட்டவே மாட்டாள். அதற்கு வேறெதோ விளக்கம் தேவைப்படுகிறது. என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை…
நான் பள்ளிக்கூடத்துக்குத் திரும்ப வேண்டிய நாள் வந்தது. மாட்டுவண்டிக்காரன் வந்து என் உடைமைகளை எடுத்துப்போனான். ரயில் நிலையம் வரை நான் நடந்தே போனேன். என்னை வழியனுப்ப அத்தை வருவதாய்ச் சொன்னாள். வேணாம் என்றுவிட்டேன். ஆமாமாம், பெரியாட்கள் தனியேதான் கிளம்பிப் போகிறார்கள்.
என்றாலும் தனியே தெருவில் நடப்பது என்னவோ போல்தான் இருந்தது. தெர்கன்பரியை நோக்கிப் போகிற சின்னச் சந்து வழி அது. ரயில் நிலையம் ஊரின் மறுகோடி, கடற்கரைக்குக் கிட்டத்தில். பயணச்சீட்டெடுத்து வண்டியின் ஒரு மூன்றாம் வகுப்பு மூலையில் போய் அக்கடா என்று உட்கார்ந்துகொண்டேன். திடுதிப்பென்று ஒரு குரல்! ”தோ அங்கருக்கான்!” திரு திருமதி திரிஃபீல்ட்… உற்சாகமாய் வருகிறார்கள்.
”உன்னை வந்து வழியனுப்பலாம்னு பாத்தம்டா…” என்றாள் அவள். ”என்ன ஊருக்குப் போறமேன்னு ரொம்ப இதுவா இருக்கா?”
”ம்ஹும். அதெல்லா இல்லையே.”
”அது நல்ல விஷயந்தான்… இன்னாலும் பிரிவு ரொம்பக் காலத்துக்கு இல்ல. நீ கிறிஸ்துமஸ்சுக்கு வந்தியானா நேரம் போறதே தெரியாமல் நாம களிக்கலாம். ஏய் உனக்கு ஸ்கேட்டிங் தெரியுமா? கால்ல சக்கரம் கட்டிட்டு ஸ்வைங்னு போறது…”
”தெரியாது.”
”எனக்குத் தெரியும். நான் சொல்லித் தருவேன் உனக்கு.”
அவளது அந்த உல்லாச பாவனை எனக்குத் தொற்றிக் கொண்டது. அதேசமயம் இப்படி ஊரறிய அவர்கள் ரெண்டு பேருமாய் என்னை நிலையம் வரை வந்து சீராட்டியது கப்பென்று தொண்டைக்குள் அடைத்தது. ஐயோ என் உள்சுருட்டலை முகம் காட்டிக் கொடுத்துவிடுமோ என்று பதறியது எனக்கு.
”இந்தத் தடவை அதிகம் ரக்கர் விளையாடுவேன்னு நினைக்கிறேன்…” என்றேன் நான். ”ரெண்டாவது பதினைந்துக்குள்ளாகவாவது நான் தேறியாவணும்…” (ரக்கர் – நீள்வட்ட வடிவ பந்துகொண்டு விளையாடும் ஒருவித கால்பந்தாட்டம்.)
என்ன இதமான, மினுமினுக்கிற கண்கள். சிவந்த பெரிய அதரங்களால் விரிந்த புன்னகை பூத்தாள் அவள். அந்தப் புன்னகையில் என்னைக் கவரும் எதோ வசிகரம் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் அவளது குரலில் எப்பவுமே சிரிப்பதோ அழுவதோ மாதிரியான ஒரு கமறல் இருக்கும். ஐயோ இருந்த நெகிழ்ச்சியில் எனக்கு முத்தங் கித்தந் தந்துவிடுவாளோ என்று கிலி பிடித்தாட்டியது என்னை. அவளே தொடர்ந்து பேசினாள். ஓரளவு குரல் ஜாலக்காரி தான். பள்ளிப் பிள்ளைகளிடம் பெரியாட்கள் காட்டும் நக்கல் அவளிடம் உண்டு. திரிஃபீல்ட் எதுவும் பேசாமல் நிற்கிறார். கண்ணில் சிரிப்புடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார் அவர். கை தன்னைப்போல தாடியை வருடுகிறது. கார்டு ஒரு உடைசல் கீச்சிடலில் விசில் ஊதினார். கொடியசைத்தார். திருமதி திரிஃபீல்ட் என் கையை வாங்கிக் குலுக்கினாள். திரிஃபீல்ட் ஓரடி முன்னால் வந்தார்.
”நல்வாழ்த்துக்கள்…” என்றார். ”இந்தா வெச்சிக்க…”
என் கைக்குள் சின்னப் பொட்டலத்தை வைத்து அழுத்தினார். ரயில் புகைவிட்டுக் கிளம்பியது. நான் பொதிவைப் பிரித்தேன். சல்லா காகிதத்தில் சுற்றி ரெண்டு நாணயங்கள். குப்னு ஆகிவிட்டது. அதிகப்படி அஞ்சு ஷில்லிங் கிடைத்தது சந்தோஷமாய் இருந்தது. ஆனால் பாரு டெட் திரிஃபீல்ட்… அவரு எனக்கு டிப்ஸ் தர்றதா? அடிபட்டாப் போல ஆத்திரம் வந்தது எனக்கு. அவராண்ட நான் எதையும் கேட்டிருக்கவும் மாட்டேன். அவர் தந்து வாங்கியிருக்கவும் மாட்டேன். அந்தாள் கூட நான் சைகிளில் சவாரி போயிருக்கலாம். கடல் பயணம் மேற்கொண்டிருக்கலாம்… ஆனால் அவர் ஒண்ணும் சாகிபு அல்ல. (சாகிபு என்கிற மரியாதையான வார்த்தையை மேஜர் கிரீன் கோர்ட்டிடம் நான் தெரிந்துகொண்டேன்..) எனக்கு அஞ்சு ஷில்லிங், அதும் அவர் தருவது கேவலமான விஷயம் தான்.
முதலில், ஒருவார்த்தை பேசாமல் அப்படியே திருப்பிவிடலாம் என்றிருந்தது. அவரது கீழ்த்தரமான இந்த நடவடிக்கையால் நான் எத்தனை சீற்றத்துக்கு ஆளாகிவிட்டேன்… என்று சொல்லாமல் சொல்வது. அடுத்து மனசுக்குள் அவருக்கு ஒரு மடல் எழுதினேன். கௌரவப்பட்ட, ஆனால் பொட்டில் அடித்தாற் போன்ற கறார் வார்த்தைகள்…. ‘உங்க தாராள மனுசுக்கு நன்றி. என்றாலும் முன்னப் பின்னத் தெரியாத நீங்க எனக்குத் துட்டு தர்றதும், நான் அதை வாங்கிக்கறதும் சரி கிடையாது. என்னால் அதை வாங்கிக்க முடியாது. இப்படிக்கு’ –
இந்த நினைப்பிலேயே ரெண்டுநாள் மூணுநாள் ஓடியது. ஆனால் ஒவ்வொரு நாளும் அந்த அஞ்சு ஷில்லிங் மதிப்புள்ள ரெண்டு நாணயங்களைப் பிரிவது தான் கஷ்டமாய் இருந்தது…. திரிஃபீல்ட் பாவம் நல்ல மனுசன் தான். வசதி கிசதின்னு சொல்ல இயலாது. காசு பணத்தின் அருமையே கூடத் தெரியாத ஆளாய் இருக்கிறார். ஐய இதைத் திருப்பி அனுப்பினால், அட படுவான்னு, பாவம் வருத்தப் படுவார்… என்று அப்புறம் நான் அந்தப் பணத்தைச் செலவழித்து விட்டேன். கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைன்றாப் போல, எனது கோபத்தை நான் வெளிப்படுத்தி விட்டேன். எப்படி? அவருக்கு நன்றி சொல்லி ஒரு கடிதம் நான் போடல்லியே!
கிறிஸ்துமஸ் வந்தது. விடுமுறை என்று நான் பிளாக்ஸ்டேபிளுக்குப் போனேன். வருகிறபோது நான் திரிஃபீல்ட் தம்பதிகளைப் பார்க்கிற உந்துதலோடு தான் வந்திறங்கினேன். சின்ன குண்டுசட்டி அந்த கிராமம். அந்த கிராமத்தில் ªளியுலகத்தோடு கொஞ்ச நஞ்சமாவது சம்பந்தம் உள்ளவர்கள் என்றால் அவர்கள்தான். பரந்து விரிந்து கிடக்கிற உலகத்தை கண்விரிய நான் பார்க்க ஆரம்பித்திருந்தேன். என்றாலும் எனக்கு அவர்களைப் பார்க்க லஜ்ஜையாய் இருந்தது. நானே அவர்கள் வீடுவரை போய், அவர்களை பார்த்துப் பேசி… என்னால் அது முடியவில்லை.
நகரத்தில் தான் எங்காவது அவர்களைச் சந்திக்க வேண்டும். ஆனால் வெளியே ஊய் ஊய்யென்று காற்று தெருவெங்கும் புழுதிவாரித் தூற்றியபடி அலைந்தது. எலும்புக்குள் ஊடுருவும் காற்று. தெருவில் நடக்கிற ஆளின் உடையை அப்படியே அலாக்காகத் தூக்கியது. கொந்தளிக்கும் கடலில் மீன்பிடி படகுகள் எகிறுவது போலிருந்தது அந்தக் காட்சி. திடீர் திடீரென்று குளிரான மழை. கோடைகாலத்தில் இந்தப் பிரதேசமே எத்தனை ரம்மியமாய் இருந்தது. இப்போது அத்தனையும் பாழாகி விட்டது.
அவர்களை அகஸ்மாத்தாகக் கூட சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதோ ஒரு உள் நம்பிக்கை என்னில். கடைசியில் மனசை உலுக்கி யெழுப்பிக்கொண்டு ஒருநாள் மெல்ல வீட்டைவிட்டு வெளியே நழுவினேன். ரயில் நிலையம் வரை சாலை கும்மிருட்டாய்க் கிடந்தது. ஆனால் தெரு விளக்குகள் தள்ளித் தள்ளி மங்கலாய் ஒளிர்ந்து கொண்டுதான் இருந்தன. நடைமேடையில் அந்த வெளிச்சத்தில் உத்தேசமாய் நடக்க முடிந்தது. ஒரு கிளைத்தெருவின் ரெட்டை அடுக்கு வீட்டில் திரிஃபீல்ட் தம்பதியர் கூடியிருந்தார்கள். ஒரு மாதிரி மஞ்சள் செங்கல் கட்டடம். புருவம் வடித்த சன்னல்.
கதவைத் தட்டிவிட்டுக் காத்திருந்தேன். ஒரு சின்ன பணிப்பெண் வந்து கதவைத் திறந்தாள். திருமதி திரிஃபீல்ட் இருக்காங்களா? ஒரு புதிரான பார்வை என்னைப் பார்த்தாள் அவள். ”போய்ப் பார்க்கிறேன்…” என்று மேலும் புதிராய்ச் சொன்னாள். அவள் திரும்ப வரும்வரை நான் அப்படியே நடைவழியில் நிற்கவேண்டி வந்தது. அடுத்த அறையில் இருந்து பேச்சுக் குரல்கள்.பணிப்பெண் கதவைத் திறந்து உள்நுழைந்த அந்தக்கணம் சட்டென ஒரு மௌனம். கதவு பின்னால் சாத்தப்படும் டக்.
மாமனின் சிநேகித வட்டத்து வீடுகளுக்குப் போயிருக்கிறேன்… அங்கெல்லாம் லேசாய் ஒரு துக்கம் வந்து கவிந்திருந்தாற் போல ஒரு ‘உம்’ இருக்கும். கணப்பு இருக்காது. நமக்கு வழிகாட்ட வேண்டியாயினும் கேஸ் எரித்து வெளிச்சப்படுத்துவார்கள்.
இந்த வீடு அத்தனை இருட்டுக் கசமாய் இல்லை. கதவு திறக்க திரிஃபீல்ட் வெளியே வந்தார். நடைவழியிலோவெனில் கசிகிற சிறு வெளிச்சம் மாத்திரமே இருந்தது. அவருக்கு சட்டென யார் வந்திருக்கிறார்கள் என்பதே அடையாளம் தெரியவில்லை. ஆனால் சுரீரென்று கண்டுபிடித்து விட்டார்.
”அட ஏ நீயா? உன்னை எப்ப பார்க்கப்போறம்னு நினைச்சிட்டிருந்தம்டா…” திடுமென குரலை உயர்த்தினார். ”ரோசி, யார் வந்திருக்கா பாரு… நம்ப தம்பி ஆஷெந்தன்.”
கீச்சென சத்தம். கத்தி வீச்சைப்போல திருமதி திரிஃபீல்ட் வெளியே பாய்ந்துவந்து என் கைகளைப் பற்றிக் குலுக்கினாள்.
”ஏய் வா வா. கோட்டை கழட்டு. வெளிய பருவம் ரொம்ப மோசம், இல்லை? செத்துச் சுண்ணாம்பாயிட்டியா?”
என் ¢மேல்கோட்டை கழற்றிக்கொள்ள உதவிசெய்தாள். கழுத்து மஃப்ளரை உருவியெடுத்தாள். என் கையில் இருந்து தொப்பியை வெடுக்கெனப் பிடுங்கினாள். அதே அவசரத்துடன் உள்ளறைக்கு இழுத்துப்போனாள். உள்ளறை காற்றிறுக்கத்துடன் சூடாக இருந்தது. நாற்காலியும் சாமானுமான ரொம்பச் சின்ன அறை. ஒருபக்கம் கணப்பு எரிகிறது. கேஸ் இணைப்பு இருந்தது அங்கே. எங்கள் விகாரேஜிலேயே எங்களுக்கு கேஸ் இணைப்பு இல்லை. மூணு கோள வடிவங்களில் எரியும் நெருப்பு அந்த அறையை ஒரு கடும் வெளிச்சத்துடன் நிறைத்தது. சிகெரட் புகையில் அந்தக் காத்தே சாம்பல்பூத்து நெடியடித்தது.
ஒரு தடுமாற்றத்துடன் நுழைந்திருந்தேன். அவளது தடபுடலான வரவேற்பில் மேலும் நிலைகுலைந்தேன். இந்த வெலவெலப்பில் உள்ளிருந்த ரெண்டு மனிதர்கள்… அவர்கள் என்னைப் பார்த்ததும் எழுந்துகொண்டார்கள்… அவர்கள் யார் என்றே என் மனம் உள்வாங்கிக் கொள்ளவில்லை. மெல்ல விவரங்கள் என் மூளையில் ஏறின. ஒருத்தர் எங்கள் கியுரேட் திரு கல்லோவே. மத்தாள் பிரபு ஜார்ஜ் கெம்ப். என்னை அங்கே எதிர்பார்க்காததில் கியுரேட்டுக்கு என்னுடன் கைகுலுக்குவதில் சிறு லஜ்ஜை இருந்தது.
”எப்பிடி சௌகர்யம்லாம்? திரு திரிஃபீல்ட்டாண்ட சில புத்தகங்கள் வாங்கிப் போயிருந்தேன். திருப்பித் தரலாம்னு வந்தேன். அவர்தான் ஒரு டீ சாப்பிட்டுப் போங்கன்னாரு.”
இதைக் கேட்டு திரு திரிஃபீல்ட் சிறிது புருவம் உயர்த்தியதையும் நான் கவனித்தேன். அவர் எதோ தேவ வசனம் எடுத்துக்காட்டிப் பேசினார். அதன் அர்த்தம் சட்டென எனக்குப் பிடிபடவில்லை. ஆனால் கல்லலோவே சிரிக்கிறார். அதுவும் ஏன் தெரியவில்லை.
திரிஃபீல்ட் சொன்னார். ”அட அது தெரியாதே எனக்கு… பின் பொதுச்சொத்து பராமரிக்கிறவனும், பாவிகளும் எப்படி நற்கதியாவார்கள்?”
சரி குத்தல், என்றுதான் பட்டது. என்றாலும் சட்டென நான் ஜார்ஜ் கெம்ப் பக்கம் திரும்பினேன். அங்கே வந்ததில் அவனிடம் சங்கடம் எதுவும் இல்லை.
”ஆ பையா, அவுத்து விட்டாச்சா? அட என்னமா நீ வளர்ந்துட்டு வர்றே?”
ஒரு இறுக்கத்துடன் நான் அவன் கையை ¢பற்றிக் குலுக்கினேன். இங்க வந்திருக்க வேணாமோ என்று உள்ளூற குரல்…
”ஒரு ஸ்ட்ராங்க் டீ தர்றேன் இவனே…” என்றாள் திருமதி திரிஃபீல்ட்.
”இல்ல. இப்பதான் ஆச்சு.”
”இருக்கட்டும்… இன்னோரு வாட்டி சாப்பிடு…” என்றான் ஜார்ஜ் பிரபு, என்னவோ அவன்தான் அந்த வீட்டுச் சொந்தக்காரன் மாதிரி. அப்போதுதான் நிஜமாகவே பிரபுவாகப் பேசினாப் போலிருந்தது. ”நல்ல வளந்த பயல், எப்பவும் இன்னோரு துண்டு ரொட்டியும் வெண்ணெயும் ஜாமும் அடைக்க இடம் இருக்கும்… திருமதி டி. உனக்காக தனது அழகான கரத்தால் இன்னொரு துண்டு ரொட்டி வெட்டித் தருவாள்.”
டீ சாமான்கள் அப்படியே மேசையில் இருந்தன. அதைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். எனக்காக ஒரு நாற்காலியும் கொண்டுவந்து போட்டார்கள். திருமதி திரிஃபீல்ட் என்னிடம் ஒரு துண்டு கேக் நீட்டினாள்.
”நாங்க டெட் கிட்ட ஒரு பாட்டு எடுத்துவிடச் சொல்லிச் சொல்லிட்டிருந்தம்… பாடுங்க டெட்.”
”ஆல் த்ரு ஸ்டிக்கிங் டு எ சோல்ஜர் – அதைப் பாடுங்க டெட். எனக்கு அந்தப் பாட்டு பிடிக்கும்” என்றாள் திருமதி திரிஃபீல்ட். (நாம் ராணுவ விரனின் பாதுகாப்பில் வாழ்கிறோம், என்ற பாடல்.)
”அது வேணா. ஃபர்ஸ்ட் வி மாப்டு தி ஃப்ளோர் வித் ஹிம் – அதைப் பாடுங்க.” (முதலில் அவனைத் தரையோடு தேய்த்தோம். கேளிக்கைப் பாட்டு)
”நீங்க பொறுத்துக்கிட்டால் ரெண்டுமே பாடிட்டாப் போச்சு…” என்றார் திரிஃபீல்ட்.
இல்லத்துப் பியானோ மேலே இருந்தது ஒரு பேன்ஜோ. (கிதார் போன்றதோர் இசைக்கருவி.) அதை எடுத்து வாசிக்கத் தோது பண்ணிக்கொண்டு… பாட ஆரம்பித்தார். கீழ்ஸ்தாயியில் நன்றாக சரளப்பட்ட சாரீரம் அவருடையது. பாடுகிற நிறையப் பேரை எனக்குப் பழக்கம் உண்டு. எங்கள் விகாரேஜில் தேநீர் விருந்து என்றால், யாராவது டாக்டரின், மேஜரின் இல்லத்துக்கு நான் போனால், அவர்கள் எல்லாருமே உற்சாகம் வந்தால் பாட ஆரம்பித்து விடுகிறார்கள்.
தங்கள் கூடவே இசைக்கருவிகளை, பாட்டுக் குறிப்புகளை வைத்திருக்கிறார்கள் அவர்கள். உள்ளே வருகையில் அவற்றை வெளியே விட்டுவிட்டு உள்ளே வருகிறார்கள். யாரும் அவர்களை கருவியோடு பார்த்தால் வாசிக்க, பாடச் சொல்லிவிடுவார்கள் என்று பயந்தா மாதிரி. ஆனால் தேநீர் உபசாரம் முடிகிற தறுவாயில் வீட்டுக்காரி அவர்களிடம் இசைக்கருவி கொணர்ந்தீர்களா என்று கேட்கிறாள். கொஞ்சம் கூச்சப்பட்டாப்போல தலையாட்ட வேண்டியிருக்கிறது. அது எங்கள் இல்லமானால் மாமன் தவறாமல் என் பக்கம் திரும்புவார். ஏய் போய் எடுத்து வா!
அப்போதுங் கூட சில சமயம் யாராவது இளம் பெண், இப்பல்லாம் நான் வாசிக்கறதை விட்டுட்டேன், கைல எதும் எடுத்திட்டு வரவில்லை, என்று சொல்லக் கூடும். சட்டென, ஏய் ரொம்ப அலட்டாதடி, நீ கொண்டுவந்து வெளில வெச்சிருக்கியே… என அம்மாக்காரி அவள் மூக்கை உடைப்பதும கூடும்.
ஆனால் அவர்கள் பாடினால், சந்தோஷமான வேடிக்கையான பாடல்கள் பாடார். ஐ’ல் சிங் தீ… சாங்ஸ் ஆஃப் ஆரபி – அல்லது, குட் நைட், பிலவட் – அல்லது க்வீன் ஆஃப் மை ஹார்ட்…. இப்படி, சாமி பாட்டு, தாலாட்டு, அல்லது மெல்லிசை வழங்குவர். நற்செய்திக் கூடத்தில் வருட வைபவத்தின்போது ஒருமுறை என்னாயிற்று என்றால், ஸ்மித்சான் என்கிற ஒரு தையல்காரன், நல்ல வேடிக்கைப்பாடல் ஒன்றைப் பாடினான். சபையின் பின்வரிசையில் இருந்து பலத்த கரகோஷம். ஆனால் கூட்டத்தை கட்டுப்படுத்திய நெறியாளருக்கு அதில் சிரிக்க ஏதும் இல்லை. ஒருவேளை அது சரியோ என்னவோ.
அடுத்த கச்சேரியின்போது முன்கூட்டியே அந்தத் தையல்காரனிடம் ”ஏய் பாத்து, கவனமா பாட்டைத் தேர்வு செய்யணும் பாத்துக்க. சபைன்னா பொம்பளையாட்கள் இருக்காங்கன்னு கவனிச்சிப் பாடறதில்லையா?” என அவன் உற்சாகத்தையே தரைதட்டி மேடையேத்தினால் என்ன செய்வான்? தி டெத் ஆஃப் நெல்சன் – பாட்டைப் பாடிவிட்டு உட்கார்ந்தான். (செத்தாண்டா நெல்சன்.)
அடுத்து திரிஃபீல்ட் பாடிய ஒரு சின்னப் பாடல், எல்லாரும் சேர்ந்து பாடுகிறதாய் அமைந்திருந்தது. நம்ம கியுரேட்டும், பிரபுவும் பெருங்குரலில் சேர்ந்துகொண்டார்கள். பிற்பாடு அதே பாடலை நான் பல சந்தர்ப்பங்களில் கேட்டேன். என்றாலும் ஒரு நாலுவரி, அவ்வளவே என் நினைவில் இருக்கிறது.
முதலில் அவனைத் தரையோடு தேய்த்தோம்
படிகளில் மேலும் கீழுமாய் புரட்டி
அறை முழுக்க அவனை உருட்டி
மேசையடியிலும்… நாற்காலிக்கு மேலுமாய்…
பாட்டு ஓய்ந்தது. அடுத்து இந்த சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற நாகரிகம் எனக்குத் தெரியும்… திருமதி திரிஃபீல்ட் பார்க்கத் திரும்பிச் சொன்னேன்.
”நீங்க பாடுவீங்களா?”
”ம்… ஆனால் நான் பாடினால் இந்த சூழலே அபத்தமாகிப் போகும்… டெட் பொதுவா அதைப் பாராட்டறது இல்லை.”
திரிஃபீல்ட் பேன்ஜோவை வைத்துவிட்டு புகைக்குழாயைப் பற்றவைத்துக் கொண்டார்.
”ம். டெட்,,, ஒரு புத்தகம் எழுத ஆரம்பிச்சிங்களே, எவ்வளவு வந்திருக்கு?” என்று அனுசரணையாய்க் கேட்டான் ஜாரிஜ்.
”அது போயிட்டிருக்கு… அதுலதான் இப்ப நான் முழு வேலையா இருக்கேன்.”
”நம்ம டெட்டும் அந்தாள் புத்தகங்களும்…” என்று ஜார்ஜ் சிரித்தான். ”எதாவது துட்டும் பேரும், உமக்குப் பேரும் வர்றாப்ல செய்யப்டாதா நீங்க? என் அலுவலகம் வாங்க, நானே வேலைபோட்டுத் தர்றேன்.”
”இதுவே எனக்குப் பிடிச்சிருக்கு” என்றார் டெட்.
”அவருக்கு எப்பிடி இருக்கப் பிடிக்குதோ இருந்துட்டுப் போறார்” என்றாள் திருமதி திரிஃபீல்ட். ”அவருக்கு எழுதப் பிடிக்குது… நான் என்ன சொல்றேன்னா, அவருக்கு அதுல சந்தோஷம்னா மகராசனா செய்யட்டுமேன்றேன்.”
”அது சரிதான். புத்தகங்களைப் பத்தி எனக்கு ரொம்பத் தெரியும்னு நான் மெச்சிக்க முடியாது” என்று ஆரம்பித்தான் ஜார்ஜ் கெம்ப்.
”பின்ன எதுக்கு அதைப்பத்தி பேசிக்கிட்டு…” என்று புன்னகை செய்தார் திரிஃபீல்ட்.
”ஃபேர்ஹேவன் புத்தகத்தை எழுதியதற்கு எதற்கு வெட்கப்பட வேண்டும்…” என்றார் திரு கல்லோவே. ”அதைப் பத்தி எந்த விமரிசகன் என்ன சொன்னாலும் எனக்குக் கவலை கிடையாது.” (ஹேவன் – கடல்கரை சரக்குத் தளவாடம்.)
”சரி… டெட், எனக்கு உங்களைச் சின்ன வயசில் இருந்தே தெரியும். என்னால உங்க எழுத்தை வாசிக்க முடியல்ல. நான் முயற்சி பண்ணிப் பார்த்தேன்.”
”விடுங்க. நாம புத்தகங்களைப் பத்திப் பேச ஆரம்பிக்க வேணாம்…” என்றாள் திருமதி திரிஃபீல்ட். ”இன்னொரு பாட்டு பாடுங்க டெட்.”
தொடரும்
storysankar@gmail.com
- வெண்வெளியில் ஒரு திருவாலங்காடு(ALAN GUTH’S INFLATION THEORY)
- வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! அணுமின் உலை எதிர்ப்பாளிகள்! அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்!
- கதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…
- தமிழ் மகனின் வெட்டுப்புலி- திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 14
- அக்கறை/ரையை யாசிப்பவள்
- முடியாத் தொலைவு
- காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!
- இரவுதோறும் கரும்பாறை வளர்கிறது
- தான் (EGO)
- ‘மூங்கில் மூச்சு’ சுகாவின் “தாயார் சன்னதி” கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை
- ”மாறிப் போன மாரி”
- தாலாட்டு
- ராசிப் பிரசவங்கள்
- நேர்மையின் காத்திருப்பு
- விலகா நினைவு
- நம்பிக்கையெனும் கச்சாப்பொருள்
- தீபாவளி நினைவுகள்
- நிரந்தரமாய்…
- என் பாட்டி
- சிலர்
- மீண்டும் முத்தத்திலிருந்து
- நீவிய பாதை
- தமிழ் ஸ்டுடியோவின் மூன்றாவது ஊர் சுற்றலாம் வாங்க.
- புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 .
- இதம் தரும் இனிய வங்கக்கதைகள்
- பழமொழிப் பதிகம்
- நிலத்தடி நெருடல்கள்
- இயலாமை
- நெகட்டிவ்கள் சேமிக்கப்படும்
- உறக்கமற்ற இரவு
- நானும் நம்பிராஜனும்
- அணையும் விளக்கு
- மூளையும் நாவும்
- குளம்
- தோற்றுப் போனவர்களின் பாடல்
- இதுவும் அதுவும் உதுவும் -3
- சரவணனும் மீன் குஞ்சுகளும்
- சனநாயகம்:
- அழகிய உலகம் – ஜப்பானிய நாடோடிக்கதை
- சற்றே நீடிக்கட்டும் இந்த இடைவேளை
- பிறவிக்குணம்
- நன்றி சொல்லும் நேரம்…
- மூன்று தேங்காய்கள்
- பெருநதிப் பயணம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -3)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -5)
- இந்தியா – குறைந்த விலை பூகோளம்
- பஞ்சதந்திரம் தொடர் 16 ஏமாந்துபோன ஒட்டகம்
- முன்னணியின் பின்னணிகள் – 12 சாமர்செட் மாம்
- நம்பிக்கை
- பூபேன் ஹசாரிகா –
- தொலைந்து கொண்டிருக்கும் அடையாளங்கள்