முன்னணியின் பின்னணிகள் – 13 சாமர்செட் மாம்

This entry is part 26 of 41 in the series 13 நவம்பர் 2011


தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

”நேராச்சி… நான் கிளம்பணும்” என்றார் கியுரேட். என் பக்கமாய்த் திரும்பினார். ”நாம ஒண்ணா நடந்துறலாமா. எனக்கு எதுவும் வாசிக்கத் தர்றிங்களா திரிஃபீல்ட்?”
திரிஃபீல்ட் அறைமூலை மேசைமேல் குவிந்துகிடந்த புதிய புத்தகங்களின் குவியலைக் காட்டினார்.
”பாத்து எடுத்துக்கலாம்.”
”என்ன அற்புதம், இத்தனை புத்தகமா?” என அவற்றை ஆசையாய்ப் பார்த்தார் கல்லோவே.
”ச். எல்லாம் குப்பை. திறனாய்வுக்குன்னு அனுப்பிருக்காங்க.”
”இதை வெச்சிக்கிட்டு நீங்க என்ன செய்விங்க?”
”எல்லாத்தையும் தெர்கன்பரி எடுத்திட்டுப்போயி எடைக்குப் போட்டால் நாலு காசு கிடைக்கும். வீட்டுச் செலவுக்காச்சி.”
நானும் கியுரேட்டும் கிளம்பினோம். கைநிறைய புத்தகங்களை அள்ளிக்கொண்டிருந்தார் அவர். என்னைப் பார்த்துக் கேட்டார்.
”திரிஃபீல்ட் தம்பதியரைப் பார்க்க வர்றதா நீ மாமன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்தியா?”
”இல்ல. சும்மா வெளிய காலாற நடக்கலாம்னு வந்தேன். அப்பிடியே என்னவோ தோணிச்சி, சரி இவரைப் பார்க்கலாம்னு வந்தேன்.”
கொஞ்சம் கயிறு திரித்தாப் போலத்தான். முழு உண்மை கிடையாது இது. கல்லோவேவிடம் அப்படியே பேச முடியாது. நான் இப்ப வளர்ந்த பிள்ளைதான். என்றாலும் மாமனுக்கு இன்னும் அவருக்குப் பிடிக்காத இடத்துக்கு என்னை அனுப்ப முடியாது என்று அடித்துச் சொல்கிற வல்லமை இருக்கிறது. அவர் காதுவரை விஷயம் பரவ வேணாமாய் இருந்தது எனக்கு.
”நீ சொல்ற வரை நானும் வாயைத் திறக்கப் போறதில்லை. அவங்க ரெண்டு பேரும் தங்கமான மனுசங்க. என்ன உங்க மாமனுக்கு தான் அவங்களைக் கண்டாலே முகச்சுளிப்பு.”
”ஆமாமா” என்றேன் நான். ”அதெல்லாம் சரி கிடையாது…”
”அவங்க ரொம்ப சராசரிங்க தான்… ஆனால் அவர் எழுத்து அத்தனைக்கு மோசம் இல்லைன்றேன். அவர் பிறந்த சூழலை வெச்சிப் பார், அவர் எழுத வந்ததே அற்புதமான விஷயம் பாத்துக்க.”
அவரை நான் புரிந்துகொண்டேன். அதாவது, திரிஃபீல்ட் தம்பதி கூட இவர் பழகறதை என் மாமன் அறிய வேண்டாம் என நினைக்கிறார். இவர் என்னைப் பத்தி மாமனிடம் வைக்க மாட்டார் வத்தி… அந்தளவுக்கு ஆபத்தில்லை எனக்கு.
விக்டோரியாவின் பிற்கால பெரும் நாவலாசிரியர்களில் ஒருவராய் இப்போது விளங்குகிற ஒரு பெரும் எழுத்தாளரைப் பற்றி எங்கள் கியுரேட், ஆள் பரவாயில்லப்பா, என்கிற உபசார வார்த்தைகள் சொன்னதையிட்டு இதை வாசிக்கிறபோது புன்னகை வரலாம். என்றாலும் அன்றைக்கு மொத்த பிளாக்ஸ்டேபிளிலுமே இதேபோலத்தான் அவரைப் பற்றி பேச்சு இருந்தது. திருமதி கிரீன்கோர்ட் இல்லத்தில் தேநீர் என்று நாங்கள் போயிருந்தோம். அவள் ஒரு ஒன்றுவிட்ட சகோதரியுடன் தங்கியிருந்தாள்… ஒரு ஆக்ஸ்ஃபோர்டு விரிவுரையாளர் பெண்டாட்டி அவள்… ரொம்ப மாண்பமை சீமாட்டி என்று கேள்வி. பெயர் திருமதி என்கோம்ப். சுறுசுறுப்பான, சுருக்கம் நிறைந்த முகம். நரைத்த முடியை கத்தரித்து விட்டிருந்தது எங்கள் முதல் ஆச்சர்யம். சதுரவெட்டு காலணிகளில் வழிய வழிய ஒரு கருப்பு செர்ஜ் ஸ்கர்ட்.
அந்த பிளாக்ஸ்டேபிளுக்கே நவீனச் சாயல் அல்லது சாயம் கொணர்ந்த முதல் பெண்மணி அவள்தான். அவளது மோஸ்தரைப் பார்த்த மாத்திரத்தில் உள்ளூர்வாசிகளான எங்களுக்கு சிறு வெறிப்பு. சட்டென ஜகா வாங்கினோம். அவளைப் பார்க்க அறிவுக்களை இருந்தது. அதைக் காணவே எங்களுக்கு நாக்கு உள்ளிழுக்கிறது….
(ஹா ஹா, பின்னாட்களில் நாங்கள் அவளை மோதி துவம்சம் பண்ணிவிட்டோம். மாமன் அத்தையிடம் சொன்னார் இப்படி – ”ஏ புண்ணியவதி நல்லவேளை நான் தப்பிச்சேன். நீ புத்திசாலியா இல்லே. கடவுள் அந்தக் கருணையை எனக்கு அருளிவிட்டார்.” அதற்கு அத்தை செய்த காரியம் அதைவிட வேடிக்கை. கணப்பு பக்கம் மாமனின் செருப்புகள் காய்ந்துகொண்டிருந்தன. தனது பூட்ஸ்களுக்கு மேலே அவற்றை மாட்டிக்கொண்டபடி அத்தை சொன்னாள்… ”நாந்தான் இப்ப அந்த நவீனப் பெண்மணி.” அதைப் பார்த்துவிட்டு நாங்கள் எல்லாருமே சொன்னோம். ”திருமதி கிரீன்கோர்ட் வேடிக்கையான ஆள. அடுத்து அவ என்ன செய்வான்னே யூகிக்க இயலாது. ஆனால் அவ ஒண்ணும் சும்மாவும் இருக்கிறாளில்லை.” அவர்கள் பூர்விகம் கூட மறக்க முடியவில்லை எங்களுக்கு. அவங்கய்யா பீங்கான் சாமான்செய்தார். தாத்தாவோ தொழிலாளி.)
அது ஒரு பக்கம்… திருமதி என்கோம்ப் தானறிந்த மனிதர்களைப் பற்றிப் பேசுவது எங்களுக்கு சுவாரஸ்யமாய் இருந்தது. மாமன் ஆக்ஸ்ஃபோர்டில் இருந்தவர்தான். ஆனால் அவர் விசாரித்த நபர் எல்லாருமே இப்போது உயிரோடு இருக்கிறாப்போல இல்லை. அவளுக்கு எழுத்தாளர் திருமதி ஹம்ஃப்ரி வார்டைத் தெரிந்தது. ராபர்ட் எல்ஸ்மியரை அவள் போற்றினாள். மாமனுக்குத் தெரிந்தவர் யார் பற்றியும் தகவல் கிடைக்காததில் அந்தப் பேச்சே அவருக்கு வம்பாகப் பட்டது. மதப் பிடிப்பு இல்லாவிட்டாலும் தான் கிறிஸ்துவன் என்று மாத்திரம் சொல்லிக்கொள்கிற திரு கிளாட்ஸ்டோன், அவர்தான் இப்படிப் பேச்சுகளை வம்பு மடம் என்று பேர்சொன்னது… சரிதான் என்று தோன்றியது மாமனுக்கு.
அதைப்பற்றி அவர்கள் பேசவும் செய்தார்கள். இப்ப இவள் பேசுகிறது ஏற்கனவே ஒரு நபரைப் பற்றி நாம வைத்திருக்கிற அபிப்ராயங்களை மாற்றிவிடும் என நினைத்தார் மாமன். அவள் சொல்லாத பல விஷயங்களை தன்னைப்போல நாம கற்பனை செய்ய அது வழிவகுத்துவிடும், என நினைத்தார். அதற்கு திருமதி என்கோம்ப் பதில் சொன்னாள். இப்ப உங்களுக்கு திருமதி ஹம்ஃப்ரி வார்ட் பத்தி லவலேசமும் தெரியாத பட்சம், என்ன யூகம் பண்ண முடியும் சொல்லுங்க, என்று கேட்டாள் அவள். குணத்தில் சொக்கத் தங்கம், மிகத் தரமான பெண்மணி, திரு மேத்யு ஆர்னால்டின் ஒண்ணுவிட்ட சகோதரி அவள், அவளது புத்தகம் பத்தி நீங்க என்ன வேணா நினைக்கலாம்… (புத்தகத்தின் அந்த வாழ்க்கைச் சம்பவங்களை தவிர்த்திருக்கலாம் என்பதே திருமதி என்கோம்பின் அபிப்ராயமாய் இருந்தது.) அவளுக்கு, திருமதி ஹம்ஃப்ரி வார்டுக்கு துர் சிந்தனை எதுவுங் கிடையாது. மிக உசத்தியான தரத்திலேயே அவை எழுதப்பட்டன.
திருமதி என்கோம்புக்கு மிஸ் பிரௌட்டனையும் தெரிந்திருந்தது. நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவளாக்கும் அவள், என்றாள். ஆனால் அவ எழுத்தைப் பார்க்க, அவளுக்கும் எழுத்துக்கும் சம்பந்தமே இல்லை என்றுதான் படுகிறது.
”அட அந்தப் புத்தகத்தில் என்ன இருக்கு குறை சொல்ல?” என்றாள் திருமதி ஹேஃபோர்த், மருத்துவரின் பெண்டாட்டி. ”எனக்கு அவ எழுத்து பிடிச்சிருக்கு. குறிப்பா ‘ரெட் அஸ் எ ரோஸ் இஸ் ஷி – புத்தகம்.” (சிவப்பான ரோஜா அவள்.)
”அதையெல்லாம் உங்க பொண்ணுகளுக்குப் படிக்கக் குடுப்பீங்களாக்கும்?” என்று கேட்டாள் திருமதி என்கோம்ப்.
”இப்ப… இந்த வயசுக்கு முடியாது, ஒருவேளை…” என்றாள் திருமதி ஹேஃபோர்த். ”அவங்களுக்குக் கல்யாணம் ஆயிட்டா படிக்கலாம்… தப்பு கிடையாது.”
”அப்பன்னா உங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான தகவல் சொல்றேன்…” என்றாள் திருமதி என்கோம்ப். ”போன ஈஸ்டருக்கு ஃபிளாரன்சில் இருந்தேன். அப்ப நான் எழுத்தாளர் குய்தாவைப் பார்த்தேன்!”
”அது வேற சமாச்சாரம்…” என மறுத்தாள் திருமதி ஹேஃபோர்த். ”ஐயய்ய எந்தப் பொம்பளையாலும் குய்தா எழுதின புத்தகத்தை வாசிக்க முடியாது.”
”அட என்ன இருக்கு அதுலன்னு தெரிஞ்சிக்கணும்னு ஒரேயொரு புத்தகம் வாசித்துப் பார்த்தேன்…” என்றாள் திருமதி என்கோம்ப். ”ஒரு இங்கிலாந்து பெருமாட்டியிடம் என்பதை விட ஒரு பிரஞ்சுக்காரனிடம் தான் அப்படியொரு எழுத்தை நாம எதிர்பார்க்க முடியும்”
”ஓ… நான் அறிந்தபடி அவள் இங்கிலாந்துக்காரி இல்லை. அவ நிஜப்பேர் மேட்மோசில்லி டி லா ராமீ…”
… இந்த சந்தர்ப்பத்தில்தான் திரு கல்லோவே எட்வர்ட் திரிஃபீல்ட் பற்றி இடையில் வார்த்தை விட்டார்.
”இங்க நம்மட்டயே ஒரு எழுத்தாளர் இருக்கிறார், தெரியுங்களா?”
”ச், அவன் ஒண்ணும் பெரிய ஆளில்லப்பா…” என்றார் மேஜர். ”பெரியம்மா மிஸ் உல்ஃபின் கோர்ட் குமாஸ்தாவின் மகன். அந்தாள் ஒரு மதுவிடுதிப் பணிப்பெண்ணைக் கல்யாணம் கட்டிருக்கார்.”
”அவருக்கு எழுத வருதா?” என்று கேட்டாள் திருமதி என்கோம்ப்.
”அவரைப் பார்த்தவுடனே அவர் ஒண்ணும் மேன்மையானவர் இல்லன்னு சொல்லிருவீங்க” என்றார் கியுரேட். ”ஆனால் அவர் கிடந்துழன்ற சூழல், தாண்டி வந்த தடைகள், விலக்கி வந்த சிக்கல்கள் எல்லாம் வெச்சிப் பார்த்தால், இந்தளவுக்கு அவர் எழுதறதே பெரிய காரியம். ”
”நம்ம வில்லியோட கூட்டுக்காரர்தான் அவர்…” என்றார் மாமன்.
திடீரென்று அவர்கள் ஒட்டுமொத்தமாக என்னைப் பார்க்கத் திரும்ப, எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.
”போன கோடைகாலத்தில் அவங்க ஒண்ணா சைகிள்ல ஊர்சுத்தினாங்க. இவன் திரும்ப பள்ளிக்குப் போனதும்… சரி இந்தாள் என்னதான் எழுதறார் பார்க்கலாம்னு நூலகத்தில் இருந்து அவரோட புத்தகம் ஒண்ணை எடுத்துவந்தேன். முதல் தொகுதியை வாசித்ததுமே திருப்பி அனுப்பிட்டேன். கூடவே நூலகருக்கு ஒரு கடுமையான கடிதம் எழுதினேன். உடனே பரவால்ல, அந்தப் புத்தகத்தை வெளிய குடுக்கறதை அவர் நிறுத்திட்டாரு. அது என் சொந்தப் புத்தகமா இருந்ததுன்னு வைங்க, அடுப்பிலேயே போட்டுக் கொளுத்தியிருப்பேன் அதை.”
”நானும் அவரோட ஒரு புத்தகத்தை வாசித்துப் பார்த்தேன்” என்றார் மருத்துவர். ”எனக்கு அதுல குறிப்பிட்ட ஊர்… நம்பூர்ங்கறதால பரவாயில்லையேன்னு இருந்தது. அதன் சில பாத்திரங்களைக் கூட எனக்கு அடையாளம் புரிஞ்சது. ஆனால் அந்தப் புத்தகம் எனக்குப் பிடிச்சதுன்னு சொல்ல முடியாது. அவரது நடையே தேவையற்ற கரடுமுரடான நடை.”
”அதை நான் அவராண்டயே சொல்ட்டேன்”என்றார் திரு கல்லோவே. ”அதுக்கு அவர சொல்றாரு… நியு கேசில் கூலிகளும், மீனவர்களும், விவசாயிகளும் படிச்ச பெரிய மனுசங்க பாஷையாவே பேச முடியும்?-ங்கறார்.”
”அதுங்களையெல்லாம் எழுதி என்னாவப் போவுது?” என்று கேட்டார் மாமன்.
”அதான் நானும் கேட்கறேன்…” என்றாள் திருமதி ஹேஃபோர்த். ”நமக்குத் தெரியாதா என்ன, லோகத்தில் எத்தனையோ முரடர்கள், பம்மாத்துக்காரர்கள், விஷஜீவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பத்தி எழுதி நாட்டுக்கு என்ன பயன், அதான் தெரியல்ல?”
”அவருக்கு நான் ஒத்தூறதா நினைக்க வேண்டாம்” என்றார் திரு கல்லோவே. ”அவர் என்ன பதில் சொன்னார், அதை உங்ககிட்ட சொன்னேன், அவ்ளதான். சொல்லப்போனால், நம்ம டிக்கன்ஸ் பாணி அவரது…”
”டிக்கன்ஸ், அவர் எங்க, இவர் எங்க?” என்றார் மாமன். ”பிக்விக் பேப்பர்ஸ் – அதை யாராவது குறைசொல்ல முடியுமா என்ன?”
”ஒவ்வொருத்தர் ரசனை, ருசியைப் பொறுத்தது அது” என்றாள் என் அத்தை. ”எனக்கு டிக்கன்ஸ் நடையே கரடுமுரடாத்தான் இருக்கு. நாய்க்கு எலும்புத் துண்டு போடறாப்ல எழுதறது எனக்கு ஒத்து வரதில்லை. இப்ப வெளிய பருவம் சரியா இல்லாதது நல்லதாச்சி. திரிஃபீல்ட் கூட நம்ம வில்லி ஊர்சுத்த முடியாது. அவனுக்கு இப்படிப் பழக்கம்லாம் தேவையே இல்லன்னுதான் நான் நினைக்கிறேன்…”
சட்டென நான் தலை குனிந்துகொண்டேன். திரு கல்லோவேயும் தான்!

>>>
கிறிஸ்துமஸ் என ஒரு திருவிழாத்தன்மை வந்திருந்தது காற்றில். காங்கிரிகேஷனல் சேப்பலுக்குப் பக்கத்திலேயே திரிஃபீல்ட் இல்லம் என்பதால், அடிக்கடி நான் அவர்களது சிறிய இல்லத்துக்குப் போய்வருகிறதில் சிரமம் எதுவும் இல்லை. எப்பவுமே அங்கே ஜார்ஜ் பிரபுவையோ, திரு கல்லோவேயையோ சந்தித்தேன். நாங்கள் மூவருமே, ஒரு ‘உம்’ என்ற இறுக்கம் வைத்திருந்தோம். அதனாலேயே நாங்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாகி விட்டோம்.
ஆக விகாரேஜிலோ, மற்ற சபை வளாகங்களிலோ எதிர்ப்படும்போது, ஒரு விறைப்புடன் நடந்துகொண்டோம். அப்போது எங்கள் ரகசியங்களைப் பரிமாறிக்கொள்வதை கவனமாய்த் தவிர்த்தோம். என்றாலும் எங்களுக்குள் ஊறிக்கிடந்த அந்த ரகசியம் எங்களை விகசிக்க வைத்தது. அட எங்க மாமனைப் பைத்தாரனாக்குகிறோம் என்பதில் எங்கள் மூவருக்குமே சொல்லொணாத் திருப்தி.
எப்பவும் எனக்குள் ஒரு உதறல் – இந்த ஜார்ஜ் கெம்ப் மேம்போக்கான ஆசாமி. எப்பவாவது வழியில் மாமனைப் பார்க்கையில், உங்க புள்ளாண்டன் வில்லி, அவனை அடிக்கடி திரிஃபீல்ட் வீட்டாண்ட பாக்கறேனே-ன்னு வார்த்தை விடக் கூடும், என்றிருந்தது.
”இந்த ஜார்ஜ் பிரபு…? அவனை நம்பலாமா?” என்று நான் திரு கல்லோவேயிடம் கேட்டுவைத்தேன்.
”ஆ, அவனை நான் சரிகட்டிட்டேன்.”
சிரித்துக்கொண்டோம் நாங்கள். பய பரவால்லப்பா, என்று இப்போது எனக்கு ஜார்ஜ் பிரபுவிடம் ஒரு இளக்கம். முதலில் எல்லாம்அவனிடம் நான் கலக்கவே இல்லை, ஆமையாய் என்னுள் அடங்கி இருந்தேன், ஆனால் அவனுக்கு, எனக்கும் அவனுக்கும் இடையிலான இந்த சமுதாய ஏற்றத் தாழ்வு பற்றி – நான் ஏற்றம் அவன் தாழ்வு – லட்சியமே இல்லை, நான் விலகிப்போனதைக் கூட அவன் சட்டைபண்ணவில்லை. காலாவட்டத்தில் நான் அவனை மேலும் ஒதுக்கமுடியாமல் போனது.
அன்பான உற்சாகமான மனிதன். ஒரே இரைச்சலும் ஆர்ப்பாட்டமுமான ஆள். தன் வழிக்கு என்னையும் அவன் உள்ளிழுத்துக் கொண்டான். எனது பள்ளிப்பருவ தெனாவெட்டுடன் நானும் அவனோடு ஊடாடினேன். எங்களுடன் கூட இருந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தார்கள். அதனால் நான் மேலும் அவனோடு இணக்கமானேன்.
அவன் மனசின் பெரிய பெரிய திட்டங்களைப் பற்றி ரொம்ப அலட்டலுடன் பேசுவான். ஆனால் நான் அவனைக் கேலியடிக்கையில் பெருந்தன்மையுடன் அவற்றை அவன் ரசித்தான். சகித்துக் கொண்டான். பிளாக்ஸ்டேபிளின் பெருந்தனக்காரர்களைப் பற்றி, மகா முட்டாள்கள் என்று பார்த்தாலே தெரியும், என்று கேலியாடினான். சில சமயம் அவர்களைப் போல நடித்துக் காட்டியபோது எனக்கானால் சிரிப்பு பீரிட்டது.
அவன் பேச்சு மட்டையடி, ஆபாசப் பேச்சு. அத்தோடு அவன் உடைகள், அவை எனக்கு அபத்தமாய்ப் பட்டது. (புதுச்சந்தையில் குதிரைகளைப் பழக்குகிறவன் இப்படித்தான் இருப்பான் என நினைத்தேன். அப்படியொரு ஆளை இதுவரை பார்த்ததும் இல்லை, சந்தைப் பக்கம் நான் தலை வைத்ததும் இல்லை, என்றாலும் அவன் அப்படித்தான் பட்டான் எனக்கு.) அட சிந்தாமல் சிதறாமல் அழகாச் சாப்பிடக்கூடத் தெரியாதவன். ஆனால் இதெல்லாம் காலாவட்டத்தில் எனக்குப் பழகிவிட்டது… ‘பிங்க் ஃபன்’ வாரா வாரம் வருகிற ஆபாசப் புத்தகம். அதை எனக்குத் தந்தான் அவன். மேல்கோட்டின் பெரிய பைக்குள் பொதித்து கவனமாக நான் அதை வீட்டுக்கு எடுத்துப்போய் படுக்கையறையில் கதவைச் சார்த்திக்கொண்டு வாசித்தேன்.
விகாரேஜ் இல்லத்தில் தேநீர் ஆன பிற்பாடு தான் அநேகமாக நான் திரிஃபீல்ட் வீட்டுக்குப் போகிறேன். அங்கே போனால் ரெண்டாவது தடவை தேநீர் அருந்தினேன். பின் டெட் திரிஃபீல்ட் வேடிக்கைப் பாடல்கள் பாடுவார். கூட சில சமயம் பேன்ஜோ, சில சமயம் பியானோ. பார்வைக்குறை கொண்ட கண்களால் உற்று இசைக்குறிப்பு நோட்டை வாசித்தபடி பாடுவார் அவர். ஒருசேர ஒரு ஒருமணி நேரம் பாடுவார். அந்த உதடுகளே புன்னகையுடன் நெளியும். நாங்கள் எல்லாரும் அதன் கூட்டுக்குரலிசையில் சேர்ந்துகொள்வதை அவர் விரும்பினார்.
நாங்கள் சீட்டுக்கட்டில் ‘விஸ்ட்’ விளையாடுவோம். அந்த ஆட்டத்தை சின்ன வயசிலேயே நான் கற்றுக் கொண்டிருந்தேன். குளிர்காலத்தின் நீண்ட மாலைகளில் நானும் மாமனும் அத்தையும் சீட்டாடி பொழுது போக்குவோம். எப்படியும் டம்மியும் சேர்த்து ரெண்டாள் ஆட்டத்தை ஒரே ஆளாக மாமன் ஆடுவார். வேடிக்கையாட்டம் தான் என்றாலும் நானோ, அத்தையோ தோற்றுப் போனால் ஆட்டத்தில் இருந்து விலகிக்கொண்டு, நான் தாள மாட்டாது அழுதுவிடுவேன்.
டெட் திரிஃபீல்ட் சீட்டு ஆடுவதில்லை. அது என்னவோ எனக்குப் பிடிபடிவே இல்லை, என்றார். நாங்கள் சீட்டாட ஆரம்பித்தால், அவர் கணப்பு பக்கம் போய் உட்கார்ந்து கொள்வார். கையில் பென்சில். லண்டனில் இருந்து நூல் விமர்சனம் வேண்டி வந்திருக்கும் புத்தகங்களில் ஒன்றை எடுத்து வாசிக்க ஆரம்பிப்பார். அதற்கு முன் நான் மூணு பேருடன் விளையாடியதே இல்லை. எனக்கு அத்தனை விருத்தியாய் சீட்டாடவும் தெரியாது.
ஆனால் திருமதி திரிஃபீல்டுக்கு சீட்டு கைவந்த கலை. சாதாரணமாகவே நடை பாவனைகளில் ஜாலங்கள் செய்கிறாள் என்றாலும், சீட்டு விளையாடுகையில் அவளது வேகமும் கவனமும் அபாரமாய் இருந்தன. அவளது சூட்சுமக் கணக்குளில் எங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆடும்போது பொதுவாக அவள் அதிகம் பேசுவது இல்லை. ஒரு சுற்று ஆட்டம் தாண்டியதும் ஆட்டத்தில் இறுக்கம் வருகையில் மெல்லிய புன்னகையுடன் நான் பண்ணிய தவறைச் சுட்டிக்காட்டினாள். (நீ த்ரி கிளாவர் இறக்கினது தப்புடா.) நிஷ்களங்கமாக சட்டென வெளிப்படையாய்ப் பேசுகிறவளாக இருந்தாள் அவள்.
ஜார்ஜ் பிரபு எல்லாரையும் தூக்கிப் பந்தாடுவதைப் போலவே அவளையும் நக்கலடித்தான். அதற்கெல்லாம் அதிராமல் மென்மையாய் அவள் புன்னகை காட்டினாள். எப்பவுமே அவள் வாய்திறந்து சிரித்தது இல்லை. அவளும் கெம்ப்பும் காதலர்களைப் போல நடந்துகொள்ளவில்லை. இனிய சிநேகிதர்களைப் போலத்தான் தெரிந்தார்கள். அவர்களைப் பற்றி நான் காதில் கேட்டதெல்லாம் அந்த தேநீர் சந்திப்புகளில் மறந்தாற் போலாயிற்று.
நான் பார்த்ததில், சில சந்தர்ப்பங்களில் அவர்களுக்குள்ளே கண்ணால் ஒரு பரிபாஷை இருந்ததை கவனித்து விட்டதில் எனக்கு சிறு சங்கடம் ஏற்பட்டது. அவள் கண்கள் அவன்மேல் அப்படியே நிதானமாய்ப் பதிந்தன. அவன் ஒரு மனிதனாக அல்ல, ஒரு மேசை போலவே நாற்காலி போலவே உணர்ந்தாப் போன்ற, சலனமற்ற பார்வைப் பதிவு அது. அதனூடே அந்த குழந்தைமையான குறும்பும் இல்லாமல் இல்லை. அப்படியே நான் கெம்ப்பைப் பார்த்தேன். சட்டென அவன் முகம் ஒரு விகாசம் கண்டது. உட்கார்ந்த நிலையில் அவன் சிறிது நெளிந்தான். நான் இப்போது கியுரேட்டை கவனித்தேன். அவளிடம் எதையாவது சமிக்ஞையை அவர் கண்டுவிடுவாரோ என்று படபடத்து, கையில் பிடித்த சீட்டில் கவனத்தைப் பதித்தாப் போல பாவனை செய்தார். அல்லது வேறெங்கோ பார்த்தபடி புகைக்குழாயைப் பற்ற வைத்துக் கொண்டார்.
புகை மண்டிய, மகா உஷ்ணம் மண்டிய சிறு அறை. அதில் ஒருமணி ரெண்டுமணி நேரம் நான் கழித்தாலும் அங்கே நேரம் மின்னல் போல பறந்தாப் போலிருந்தது. விடுமுறை நாட்கள் முடியப் போகிற நேரம் நெருங்கி வந்தது. இனி அடுத்த மூணு மாதங்கள் பள்ளியில் எனக்கு எப்படிப் பொழுதை நகர்த்த என்பதே பிரச்னையாய்ப் பட்டது.
”ஏய் இவன் இல்லாமல் நாம என்ன பண்ணப் போறம்னே புரியல்ல” என்றாள் திருமதி திரிஃபீல்ட். ”டம்மியாட்டம்தான் ஆடணும் நாங்க.”
நான் போனபின் சீட்டு விளையாட்டு இருக்காது என்பதில் எனக்கு ஒரு திருப்தி. அட அங்க நான் உட்கார்ந்து மாங்கு மாங்கென்று பரிட்சைக்குத் தயார் செய்துகொண்டிருக்கிறேன், இதுங்க எல்லாரும் ஹாயா, நான் ஒருத்தன் இந்த லோகத்திலேயே இல்லைன்றாப்ல மறந்துவிட்டு சீட்டாடறதா?
”ஈஸ்டர் சமயத்தில் எத்தன்னாள் விடுப்பு தருவாங்கடா?” என்று கேட்டார் திரு கல்லோவே.
”ஒரு மூணுவாரம் போல…”
”பரவால்ல, அப்ப நாம இப்பிடி ஒண்ணா கலந்து கொண்டாடலாம்” என்றாள் திருமதி திரிஃபீல்ட். ”அப்ப வெளிய சீதோஷ்ண நிலை இதேமாதிரி படுத்தாமல் இருக்கணும். காலைல சைகிள். சாயந்தரமானால் தேநீர் முடிந்ததும் விஸ்ட். ஏ நீ பரவால்ல, எவ்வளவோ தேறிட்ட. நீ ஈஸ்டருக்கு வர்றபோது வாரத்தில் மூணு நாலு தடவை ஆடினம்னு வெய்யி, நீ யார் கூட வேணாலும் தைரியமா ஒரு கை உட்காரலாம்டா.”

(தொடரும்)
storysankar@gmail.com

Series Navigationஅமீதாம்மாள்ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 15
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *