முன்னணியின் பின்னணிகள் – 14 சாமர்செட் மாம்

This entry is part 36 of 38 in the series 20 நவம்பர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

ஒரு வழியாக இந்தப் பள்ளிக்காலமும் முடிவுக்கு வந்தது. பிளாக்ஸ்டேபிள் நிலையத்தில் இறங்கும் போதே மனம் சிறகடித்துப் பறக்கிறது.¢ இக்கிணி உசரங் கொடுத்திருந்தேன் இப்போது. தெர்கன்பரியில் நீல செர்ஜ் புது சூட் தைத்திருந்தேன். புது டை தனியே வாங்கி வைத்திருக்கிறேன். ரெண்டும் அணிந்து டக் டக்கென்று நடந்து போகப் பிரியப்பட்டேன். சரக்குவண்டியில் என் பெட்டி தனியே வந்தது. சரியான நேரத்திற்கு அது என் பெட்டியைக் கெண்டு சேர்த்துவிடும்.
வந்து தேநீர் சட்டுப்புட்டென்று குடித்த ஜோரில் திரிஃபீல்ட் தம்பதியரைப் பார்க்க ஓடோடிப் போக வேண்டுமான பரபரப்பு. அந்தப் புத்தாடையில் இன்னும் பெரிச மனுசனாய்த் தோற்றம் தருவேன் என்றிருந்தது. ராத்திரிக்கு ராத்திரி தினப்படி மேல் உதட்டில் வாசலின் தடவி… விரைவில் எனக்கு மீசை முளைத்துவிடும் என்கிற பரபரப்புடன் காத்திருந்தேன். ரயிலிறங்கி ஊருக்குள் வருகிறபோது திரிஃபீல்ட் தம்பதி வசிக்கிற தெருவைத் தாண்… ஒரு நோட்டம் பார்த்தேன். கண்ணில் ஒருவேளை அவர்கள் தட்டுப்படுவார்களா?
வீட்டுக்கே போய் ‘எப்பிடி சௌகர்யம்லாம்?’ என்றுகூட கேட்கலாமாய் இருந்தது. ஆனால் என்ன, எனக்குத் தெரியும்… திரிஃபீல்ட் காலை வேளைகளில்தான் எழுதுவார். அவர் மனைவி அந்த அதிகாலையில் பார்க்கிற லெட்சணத்தில் இருக்க மாட்டாள்… ஆனால் அவர்களிடம் பேசிப் பரிமாற எனக்கு எத்தனையோ சுவாரஸ்யமான விஷயங்கள் இருந்தன. ஒரு பரிசு – வெப்பமேற்றும் கருவி – நூறு மீட்டர் ஓட்டத்தில் நான் வென்றிருந்தேன். தடையோட்டத்தில் கூட ரெண்டாம் பரிசு. இந்தக் கோடைப் பள்ளிப்பருவத்தில் வரலாறு பாடத்தில் ஒரு பரிசு கிடைக்கப் போகிறது. பரிட்சை நன்றாகச் செய்திருந்தேன். ஆங்கில இலக்கிய வரலாற்றில் தான் புறந்தள்ளப்பட்டு இந்த விடுமுறையில் அதைத் தேற்றிக்கொள்ள வேண்டும்.
கீழக்காத்து மெல்ல வீசியவாறிருந்தது. ஆனாலும் வானில் மேகமில்லாத தூய நீலம். வசந்தத்தின் வருகையை முன்னறிவிக்கிற சூழல். மேட்டுத் தெருவில் வண்ணங்கள் காற்றில் கரைந்து பளீரென்ற சூரிய வெளிச்சம். மேடு பள்ளங்களும் ஓரங்களும் எடுப்பாய் புதுப்பேனா எடுத்து வரைந்தாப் போல துலக்கமாய் இருந்தன. சாமுவேல் ஸ்காட் வரைந்த ஓவியமாய்க் கிடந்தது தெரு. இதமான சுகமான அமைதி. இப்போது யோசிக்கையில் அது வெறும் பிளாக்ஸ்டேபிளின் மேட்டுத் தெரு, அவ்வளவே. அன்றைக்கு எனக்குள் என்னவோ புத்துணர்ச்சியை அது கிளர்த்துவதாய் இருந்தது. ரயில்வே பாலம் தாண்டுகையில் பார்த்தேன், ரெண்டு மூணு புதிய வீடுகள் எழும்பிக் கொண்டிருந்தன.
”அட ஜோவ்,” என நான் கூவினேன். ”அதோ ஜார்ஜ் பிரபு உள்ளே போகிறான்…” (ஜோவ் – வியப்பாக ரோமர்களின் கடவுள் பெயரைக் கூறுகிறான்.)
தூரத்து வயல்வெளிகளில் குறும்பாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. எல்ம் மரங்களில் இலைகள் துளிர்க்க ஆரம்பித்திருந்தன. பக்கக் கதவு வழியாக எங்கள் இல்லத்துக்குள் நுழைந்தவண்ணம், ”அத்தே!” என்று சத்தமெடுத்தேன். மாமன் தமது கைவைத்த நாற்காலியில் அமர்ந்தபடி ‘தி டைம்ஸ்’ வாசித்துக்கொண்டிருந்தார்.
அத்தை மாடியிறங்கி வந்தாள். சப்பிய கன்னத்தின் இருபுறமுமாக என்னைப் பார்த்த பரபரப்பில் மெல்லிய குழி மென்சிவப்பாய்த் தெரிந்தது. மெலிந்த வயோதிகக் கரங்களால் என் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். அடுத்து மிகச் சரியாக எனக்குப் பிடித்தமான விஷயங்கள் பேசினாள்.
”ஏய் அய்யா என்னமா வளர்ந்துட்«… அட ஆண்டவருக்கு நன்றி. டேய் கூடிய சீக்கிரம் உனக்கு மீசை வெச்சிரும் போலுக்கே.”
வழுக்கைத் தலையின் முன்பக்கமாக மாமனுக்கு முத்தம் ஈந்தேன். இருந்த குளிருக்கு நேரே கணப்பு பக்கம் போய் காலை விலக்கி வைத்துக்கொண்டு முதுகை மாத்திரம் காட்டி நின்றேன். அத்தை பேசி உசுப்பேற்றியிருந்ததில் பெரிய பையன்போலவே அமெரிக்கையாய் நடந்துகொண்டேன்.
மாடியேறினேன். எமிலி எப்படி இருக்கிறாள் விசாரிக்க வேண்டும். அப்படியே மேரி ஆனைப் பார்த்து கை குலுக்க வேண்டும். பிறகு வெளியே வந்து எங்கள் தோட்டக்காரனையும் நலம் விசாரிக்க வேண்டும்.
நல்ல பசியுடன் சாப்பிட உட்கார்ந்தேன். மாமன் கையில் எடுத்த இறைச்சித் துண்டின் காலை கடித்துச் சாப்பிட்டு முடித்தார். நான் அத்தையிடம் மெல்லக் கேட்டேன். ”சொல்லுங்க அத்தை, நான் கிளம்பிப்போன பின்னால் இங்கத்திய சமாச்சாரம் எதும் உண்டா?”
”பெரிசா ஒண்ணும் நடக்கல்ல. திருமதி கிரீன்கோர்ட் மென்தோன் வரை போயி ஒரு ஆறுவாரம் இருந்தாள். அவளும் திரும்பி வந்து ஒண்ணு ரெண்டு நாள் ஆச்சி. ம்… நம்ம மேஜருக்கு தான் கொஞ்சம் கீல் வாதம்.”
”அத்தோட, உன் சேக்காளிங்க திரிஃபீல்ட் தம்பதிகள்.. அவங்களுக்கு ஆப்பு.”
”என்ன விஷயம்? அவங்க என்ன பண்ணினாங்க?” என் குரல் பதறியது.
”சரி ஆப்பு அப்பு… பெட்டி படுக்கையத் தூக்கிட்டு ராவோட ராவா காலிபண்ணிக்கிட்டு லண்டன் ஓடிட்டாங்க. ஊரெங்கும் கடன் பாக்கி. வாடகையே குடுக்கல்ல. கட்டில் நாற்காலி எல்லாமே தவணை, எதும் பைசல் பண்ணல்ல. இருக்கறதுலயே அந்த கசாப்புக்காரன் ஹாரிஸ், அவனுக்குதான் செமத்தியான நாமம்… முப்பது பவுணடு கடன்…”
”ஐயோ!”
”கண்றாவிக் கூத்துதான்…” என்றாள் அத்தை. ”வீட்டுல வேலைக்காரி இருந்தாளில்ல, அவளுக்கே மூணு மாச சம்பளமே தரல்லியாமே.”
ஹாவென்றிருந்தது. லேசாய் ஜுரம் வந்தாப்போல அசதி.
”அடேய், இனி வர்ற காலத்திலயாவது கொஞ்சம் புத்திசாலித்தனமாய் காரியம் பண்ணப்பாரு…” என்றார் மாமன். ”நானும் உங்கத்தையும் சொல்றதைக் கேட்டு நடக்கப்பாரு. நாங்க வேணான்ற ஆள்கிட்ட அப்பிடி ஒட்டி உரசிப் பழக வேண்டாம், கேட்டுக்கிட்டியாடா?”
”அவங்க ஊர்பூராத்தையுமே ஏமாத்தி வாழ்ந்தவங்கடா, அவங்களுக்காக வருத்தம் கிருத்தம் பட வேண்டாம்,” என்றாள் அத்தை.
”அவங்களுக்கு அதான் முடிவு” என்றார் மாமன். ”அப்படியாளுங்களைப் பார்த்து இவனுக்கு என்னவோ மயக்கம். வெறுங்கையால முழம் போடறவங்கடா அவங்க. அதை சாதனையின்னு கொண்டாட உன்னை மாதிரி ஆட்கள்…”
”அவங்க இங்க வந்து தங்கினது, அதுவே எனக்கு ஏன்னு புரியல…”
”இங்க வந்து பந்தா பண்ணப் பார்த்தாங்க. முன்பே இருந்து பழகிய தெரிஞ்ச ஊர் இது… கைமாத்து கேட்டால் கிடைக்கும்னு ஒரு கணக்குதான்.”
இவங்க பேசறது அத்தனை சரியாகப் படவில்லை. ஆனால் இப்ப நான் எதும் பேச முடியாது. பிறாண்டிருவாங்கள்.
காத்திருந்து சரியான நேரம் பார்த்து மேரி ஆனிடம் விஷயங் கேட்டேன். அவளுக்கு நடந்தது எதுவரை தெரியுமோ சொல்லட்டும். எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால் மாமனையும் அத்தையும் மாதிரியல்ல அவள் நடந்த விஷயங்களை எடுத்துக்கொண்டது… மென்மையாய்ப் புன்னகைத்தாள் ஆன்.
”ஆனால் நல்ல அந்தஸ்து மரியாதையோடதான் எல்லார்கிட்டயும் அவங்க பழகிட்டிருந்தாங்க” என்றாள் அவள். ”அவங்களுக்கு பணமும் ஒண்ணும் திண்டாட்டங் கிடையாது. பார்க்கறவங்களும் அவங்களுக்குப் பணக் கஷ்டம் மாதிரி நினைக்கவில்லை. கசாப்புக் கடையிலும் நல்ல சரக்காதான் வாங்கி வருவார்கள். நல்ல சதைக்கதுப்பா பார்த்துதான் எடை எடுப்பார்கள். மத்தவர்கள் எடுத்துக்கிட்ட மீதி அல்ல… வீட்ல வாங்கிப்போட்ட அஸ்பாரகஸ் என்ன திராட்சை என்ன, எனக்கே அத்தனை விதம் தெரியாதுன்னு வெய்யி… ஆனாலும் எல்லாக் கடையிலும் ஊருக்குள்ள பாக்கி நிக்குதுன்றாங்க. ஊர்ல அத்தனை பேருமா ஒரே மாதிரி ஏமாளிக் கூட்டமா இருப்பான், தெர்ல.”
கவனித்துப் பார்த்தால், மேரி ஆன் அந்த வியாபாரிகளைப் பத்திதான் பேசுகிறாள்… முட்டாள்கள் என்று, திரிஃபீல்ட் தம்பதி பற்றி அல்ல.
”யாருக்குமே தெரியாமல் எப்படி ராத்திரியோட ராத்திரியா கம்பி நீட்ட முடிஞ்சது அவங்களால?” என்நு கேட்டேன்.
”எல்லாருக்கும் அதே கேள்விதான். அந்த ஜார்ஜ் பிரபு எதும் உதவி செஞ்சிருப்பான்னு ஊர்ல பேசிக்கறாங்க. பெட்டி படுக்கையெல்லாம் ரயில் நிலையம் வரை கொண்டுபோக வேண்டாமா இவனே? அவன்தான் வந்து தன் வண்டில ஏத்திட்டுப்போய்க் கொண்டுவிட்ருக்கணும், இல்லியா?”
”அவன் என்ன சொல்றான்?”
”அவன் என்னவோ கடல்தாண்டி இருந்தாப்போல, அப்பிடியா?… எனக்கு எதும் தெரியாதேன்றான். அவங்க ஓடிப்போனதில், மொத்த ஊருக்குமே செய்ய எதுவும் இயலாமப் போச்சு. அதான் வேடிக்கை. அட அவங்க கஷ்ட ஜீவனத்தில் இருந்ததே எனக்குத் தெரியாதுன்றான் ஜார்ஜ் பிரபு. அவங்களைப் பத்தி உனக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவே எனக்கும் தெரியும்ன்றான். அவனுக்கே அவங்க காலிபண்ணிப் போனது ஆச்சர்யம்தானாம். என்னைப் பொறுத்தவரை அதுல ஒரு வார்த்தை கூட உண்மை கிடையாது. பசப்பறான் நாய். அட ரோசியும் அவனும், அவ கல்யாணங் கட்டுமுன்னாடியே அடிச்ச கொட்டம்லாம் எங்க எல்லாருக்குமே, தெரியாதா என்ன? உனக்கும் எனக்கும் கூட அதுவிவரம் தெரியும்… அன்னிக்கு வாசல்ல அவன் காத்திருந்தானே? அப்படியே அவளை வீட்டுக்குக் கூட்டிட்டுப்போயி விட்டிருப்பனாக்கும்?… போன கோடையில் அவனும் அவளுமா வயல்வெளிப் பக்கமா நடந்து போனதை கொள்ளைப் பேர் பார்த்திருக்காங்க. தினப்படி அவங்க வீட்டுக்கு அவன் போய் வந்திட்டுதான் இருந்தான். இல்லியா?”
”அவங்க ஓடிப்போயிட்டாங்கன்னு சனங்க எப்பிடிக் கண்டுபிடிச்சாங்க?”
”அதுவா? அவங்க வீட்ல வேலைக்கு ஒரு பொண்ணு இருந்தாளே, ராத்திரி நீ வீட்டுக்குப் போயி உன் அம்மாகூட இருக்கலாம்னு அவளை அனுப்பிட்டாங்க. காலைல ஒரு எட்டு மணிப்போல வந்தாப் போதும்னு வேற சொல்லியனுப்பியிருக்காங்க. அவ காலைல கதவைத் தட்டிப் பார்த்திருக்காள். மணி அடிச்சிப் பார்த்தாள். உள்ளயிருந்து பதிலே இல்லை. பக்கத்து வீட்டுக்குப் போயி அந்தவீட்டு அம்மாளிடம் என்ன ஏது, நான் என்ன செய்யன்னு கேட்டிருக்கிறாள். போ, போயி போலிஸ் நிலையத்தில் பிராது குடு போன்னிருக்கா அந்த அம்மாள். சார்ஜன்டு கூட வந்திருக்கான். அவனும் கதவைத் தட்டி, மணியடிச்சி எல்லாம் பார்த்தான். அவனுக்கும் பதில் இல்லை. கதவும் திறக்கவில்லை. ஏம்மா உனக்கு வரவேண்டிய சம்பளம் தந்துட்டாங்களா? ஒரு மூணு மாசமா நிலுவைல இருக்குன்றா. அப்பன்னா புரிஞ்சிக்க பெண்ணே, அவங்க கம்பி நீட்டியாச். அப்பறமா வந்து கதவை உடைச்சித் திறந்து பார்த்தார்கள். அவங்க துணி ஒரு துணி விடாமல் எடுத்திட்டுப் போயிருக்கிறார்கள். புத்தகமும் ஒண்ணு விடவில்லை. அவர்கிட்ட பல அபூர்வமான புத்தகங்கள், நிறைய வெச்சிருந்தார்னு சொல்றாங்க. அவங்களோட முக்கியமான வஸ்து எதையும் அவங்க விடவில்லை. முழுசா வாரி எடுத்திட்டுப் போயிட்டாங்க.”
”அதுக்கப்பறம் அவங்களைப் பத்தி எதும் தாக்கலே இல்லியா?”
”அவங்க போன ஒரு வாரத்தில் லண்டன்லேர்ந்து அந்த பணிப்பெண்ணுக்கு ஒரு தபால் உறையைப் பிரித்ததும், உள்ளே கடிதம் கிடிதம் எதுவும் இல்லை. ஒரு போஸ்டல் ஆர்டர்… அவளுக்கான சம்பளப் பணம் அது. என்னைக் கேட்டால் அவங்க செஞ்சது சரியான காரியம்… பாவம் ஒரு அபலைப்பெண்ணை வயித்ல அடிச்ச பாவம் அவங்க பண்ணல்ல.”
இதில் மேரி ஆனைவிட எனக்குதான் அதிர்ச்சி அதிகம் இருந்தது. நான் ஒரு மகா கௌரவப்பட்ட வாலிபன். என் வர்க்கத்தின் சமூக ஒழுங்கை இயற்கையின் பாற்பட்ட நியதி எனவே நான் காண்கிறேன். வாராக்கடன் என்று பெரிய தொகையை ஒராள் லபக்கி விட்டு ஓடுவது சுவாரஸ்யமான விஷயம்தான். ஈட்டிக்காரர்கள் பணத்தைக் கேட்டு அரித்தெடுப்பதும் நான் அடிக்கடி பார்த்தது தான். என்றாலும் பற்று வைத்து விட்டு ஏமாற்றுவது கேவலமான, துர் செயல்தான்.
என் முன்னால் திரிஃபீல்ட் தம்பதியர் பற்றி சனங்கள் பேசிக்கொள்கையில் நான் சிறு குழப்பத்துடனே அவற்றை கவனித்தேன். சட்டென அவர்கள் என் பக்கம் திரும்பி, அவங்க இவனுக்கு சிநேகிதங்கப்பா, என்னும்போது, ”அப்டில்லாம் சொல்ல வேண்டாம். எனக்கு அவங்களைத் தெரியும், அவ்ளதான்.” என்பேன். ”அட அவங்க கூட எப்பிடிப் பழகினே சொல்லு? அவங்க நம்ம தரத்துக்கு மகா மட்டம் இல்லியா?” என்று கேட்பார்கள் அடுத்து. ”அட அவங்க அப்பிடியா காட்டிக்கிட்டாங்க?” என்பேன் பதிலுக்கு.
இதில் நம்ம கல்லோவே, பாவம், அவர்தான் ஆடிப்போனார்.
”ச், அவங்க ஒண்ணும் பணக்காரங்க இல்லை, அது தெரியும் எனக்கு” என்றார் என்னிடம். ”எப்பிடியும் அவங்க வண்டி சுலபமா ஓடிர்ற அளவுக்கு வசதி அவங்க கிட்ட இருந்ததாத்தான் நினைச்சிட்டிருந்தேன் நான். அவங்க வீட்ல மேசை நாற்காலிக்குக் குறைவு இல்லை. அந்த பியானோ, புதுசு தான்…. ஆனால் இதொண்ணுத்துக்கும் சல்லிக்காசு அவங்க தரலைன்றது எனக்குத் தெரியாது. அவங்ககிட்ட ஒரு நொடிச்ச பாவனை, கடைசிவரை இல்லை. அவங்க காட்டிக்கவே இல்லியே. அவங்க செஞ்ச ஏமாத்து அதானப்பா வேதனை. அவங்களோட காலங்காலமாப் பழகியிருக்கேன், என்னை அவங்க நேசிச்சாப்லதான் இருந்தது. எல்லார்கிட்டயும் அவங்க நல்ல நேசத்தோட தான் கலந்து பழகினாங்க. உன்னால நம்ப கூட முடியாது. கடைசியா நான் அவங்களைப் பார்த்தேனா, திருமதி திரிஃபீல்ட் மறுநாள் என்னை வரச்சொன்னாள். அப்போது திரிஃபீல்ட், ”நாளைக்கு தேநீர் கூட, மஃபின் கேக்!” என்றுகூடச் சொன்னார். (மஃபின் – காகிதத்தில் சுற்றிய கிண்ணவடிவ ரொட்டி கேக்.) அந்த நேரத்தில் மாடியறையில் எல்லா சாமானும் கட்டி தயாரா இருந்திருக்கணும். அன்றைக்கு ராத்திரியே அவங்க லண்டன் போற கடைசி ரயிலில் ஊரெல்லையைத் தாண்டிப் போயாச்சி…”
”ஜார்ஜ் பிரபு என்ன அபிப்ராயப்படறாரு?”
”நிசத்தைச் சொல்லணும்னா, இப்பல்லாம் நானா அவனைப் போயிப் பார்க்கறதையே விட்டுட்டேன். பட்டதே போதும், நல்ல மாட்டுக்கு ஒரு சூடும்பாங்க.”
எனக்கும் ஜார்ஜ் பிரபுவோடு இனி சங்காத்தமே வெச்சிக்க வேண்டாம் என்றுதான் பட்டது. லேசாக வெடவெடத்தது. அவன்பாட்டுக்கு வர்றாள் போறாள்ட்டல்லாம், நம்ம மாஸ்டர் வில்லி, போன கிறிஸ்துமஸ் பூராவும் தினப்படி அங்கதான் பழியாக் கெடப்பான். என வளவளக்க, அது மாமன் காது வரை எட்டித் தொடக்கூடும். அப்புறமான நிகழ்ச்சிகளை என் மனம் பாயாய் விரித்தது. ஆ இந்த வில்லிக்கொரு வில்லன்!
மாமன் பிலுபிலுவென்று பிடித்துக் கொள்வார். கயவாளித்தனம். தகவலை மறைத்தது. சொல்லுக்கு அடங்க மாட்டேங்கறானே இவன், என அவர் புலம்பல் மனசெங்கும் எதிரொலிக்க ஆரம்பித்தது. ”ஏண்டா, ஒரு பெரிய மனுசன் மாதிரியா, பெரிய வீட்டுப் பிள்ளை மாதிரியாடா நீ நடந்துக்கறே?…” நான் என்னத்தை பதில் சொல்ல முடியும் அப்ப?
மாமன் எப்பிடின்னால், மேய்ச்சமா கொம்பைப் போட்டமான்னு போற சாதி இல்லை. சும்மா திருப்பித் திருப்பி அதை நோண்டிக்கிட்டே இருப்பார். வருஷ வருஷத்துக்கும் அது கெடந்து எனக்கு உள்ளே உறுத்திக்கிட்டே கிடக்கணும் என்பது அவரது உக்கிர அவா.
இத்தனையும் தேவையா?… ஜார்ஜைப் போய்ப் பார்க்காமல் வாளா விருப்பதே சாலச் சிறந்தது. என்றாலும் அது முடிந்ததா என்னால்? ஒருநாள் மேலத்தெருவில்… நேரே எதிர் எதிராக என் முன்னால் அவன்!
”ஏ பையா!” என்று கத்தினான் ஜார்ஜ். எப்பிடி என்னை அழைத்தால் பிடிக்காதோ அப்படியே அழைத்ததில் முகம் சுளிக்க நேர்ந்தது.
”என்ன விடுமுறையின்னு வந்திருக்கியாக்கும்?”
”ரொம்ப சரி” என்றேன் மெலிதான குத்தல் தொனியுடன்.
ஆனால் பாவி அதற்கும் இரைச்சலாய்ச் சிரிக்கிறான்.
”அத்தனை குத்தல் வேணாம்டா. கத்திய திருப்பிப¢ பிடிச்சாப்ல உன்னையே கிழிச்சிறரும் அது…” ஆனால் அவன் குரலில் கோபம் இல்லை. ”ம். இனி உன் விஸ்ட் ஆட்டம் அவ்ளதான்னு தோணுது. எனக்குந்தான்னு வெய்யி. பாத்தியாடா, வாழ்க்கைல விதின்னு ஒண்ணு எப்பிடியெல்லாம் உன் அனுமானத்தையும் மீறி சுத்தி வளைச்சி இறுக்குது… உங்களுக்கெல்லாம் நான் சொல்றது என்னன்னா, ஒரு பவுண்டு வெச்சிருக்கேன்னு வெய்யி, அதுல 19, ஆறு செலவழிச்சாலும் நீ செல்வந்தன்தான் போ. ஆனால் 20 ஷில்லிங் ஆறு பென்ஸ் அதைச் செலவழிச்சால் ஓட்டாண்டியா ஆயிருவே. சில்லரைத் துட்டுன்னு அலட்சியம் கூடாது பையா, சில்லரையை நீ கவனம் வெச்சிக்கிட்டா ருவ்வாத் தாள் தாங்களே தங்களை கவனிச்சுக்கும்டா.”
இந்த த்வனியில் அவன் பொன்மொழிகளை உதிர்த்துக் கொண்டிருந்தாலும், தப்பைச் சுட்டிக் காட்டுகிறமாதிரி இல்லாமல், மெலிதான புன்னகை தேக்கியே பேசினான்
”அவங்க தலைமறைவாக நீதான் உதவி செஞ்சதா சனங்க பேசிக்கறாங்களே?” என்று நான் கேட்டேன்.
”நானா?” அவன் முகத்தில் ஒரு மகா ஆச்சர்யம். அந்தக் கண்கள் அப்போதும் குறும்பாய் மிளிர்ந்தன.
”என்னாண்ட வந்து இந்த மாதிரி சமாச்சாரம், ராவோட ராவா திரிஃபீல்ட் தம்பதி ஏறக்கட்டிட்டாங்கன்னு சொன்னப்ப, அதிர்ச்சில அப்பிடியே தள்ளாடிட்டேன். எனக்கே கரிக்கு 4 பவுண்டு, 17 ஷில்லிங், 6 பென்ஸ் பாக்கி. நாங்க எல்லாருமே அவங்ககிட்ட காசு விட்டிருக்கம். பாவம் அந்த கல்லோவே, அவருக்கு அடுத்த தேநீருக்கு மஃபின், (கப்பு கேக்) கிடைக்காமலே போச்சு!”
அத்தனை வெளிப்படையா அவன் பேசி நான் கேட்டதே இல்லை. கடைசியா பொட்ல அடிச்சாப்ல அவனுக்கு எதாவது சொல்ல வேகம் வந்தது. சட்டென வார்த்தை என் மனசில் உருவாகி வரவில்லை. அதற்கெல்லாம் இன்னும் எனக்கு வயசு போகவேண்டும் போல. சரி நான் போறேன், என வெடுக்கென வெட்டிக்கொண்டேன்.

தொடரும்
storysankar@gmail.com

Series Navigationநானும் பிரபஞ்சனும் கட்டுரை குறித்து சில கருத்துகள்:மியன்மார் பாரம்பரிய இசை
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *